கனவுகளை கட்டுப்படுத்துதல் என்பது சாதாரண விஷயமா என்றால் இல்லை என்றே சொல்லுவேன். அதிக மனக்கட்டுபாடு தேவை. இது தான் இப்படித்தான் என்ற முடிவுகள் தேவை. மேலும், அட.. கனவு, அதுவும் என் கனவு, இது எனக்கு மட்டுமே தெரியும், பிறர்/வெளியாள் அறிய வாய்பில்லை என்ற எண்ணம் என்னிடம் இருந்ததில்லை. அது எனக்கு சொந்தமானதாக இருந்தாலும், வந்த கனவு சரியா. .வரலாமா? கனவு என்பது அடிமனதின் ஆசையா?  என் அடி மனதில் அப்படி ஒரு ஆசை/ தேவை/தேடல்/பயம் இருக்கிறதா? அந்த ஆசை/தேவை/தேடல்/பயம் சரியா?  என்று என்னை நானே கேள்வி கேட்கும் போது, தேவை என்றால், வந்தால் வரட்டும் என்றும், தேவையில்லை என்றால் அது கனவாக வராமல் இருக்க, என் மனதை சரிபடுத்திக்கொள்ளவும், இரண்டுக்கும் நடுவில் "தெரியாத" விடையாக இருந்தால், தெரியும் வரை அதை விடாமல் துரத்துவதும் வேலையாக கொள்ளுவேன். முடிவு தெரிந்த பிறகே அதை விடுவதை பழக்கமாக்கி க்கொண்டுள்ளேன் அல்லது அப்படி ஒரு குணமுடன் பிறந்துவிட்டேன் னு சொல்லலாம். 

தேவையில்லை அல்லது அப்படி ஒரு கனவு நமக்கு வரக்கூடாது என்று நினைக்கும் நேரங்களில் வந்தால், அது தொடராமல் இருக்க வேண்டி, என் அறிவு என்னை இத்துடன் நிறுத்து என்று எழுப்பி விடுவது, ஒரு விஷயத்தை எந்த அளவு உள்நோக்கி சென்று கவனித்து, என் மூளையை அதற்காக பழக்கப்படுத்தி வைத்திருக்கிறேன் என்பது தெரிகிறது. எனக்கு பல சமயங்களில் கனவுகள் சந்தோஷம் கொடுத்தாலும், வேண்டாமென தொடராமல் நிறுத்திவிடுவது பிடித்திருக்கிறது.

ஆனால் இந்த கட்டுப்படுத்துதல் ஒருவித அழுத்தத்தைக்கொடுக்கிறது என்பது உண்மை. இதையும் நானே உணர்ந்திருக்கிறேன். அதாவது பிடித்த கனவுகளை கட்டுப்படுத்தாமல், அதனுடன் நான் பயணிக்கும் போதும், அதை தூங்கி எழுந்தவுடன் நினைவில் கொள்ளும் போதும், வெளியில் சொல்லும் போதும் என் மனம் லேசாக பறப்பதை போன்ற உணர்வை பெருவேன்.  அதே சமயம் கட்டுப்படுத்தும் போது, ஒரு வித இறுக்கும் பரவி அது நாளுக்கு நாள் வளர்ந்து வருவதும் உணர முடிகிறது. 

நிற்க, இதுவரையில், மூளையின் எந்த பகுதி கனவு வருவதற்கான காரணம் என்று கண்டுபிடிக்கபடவில்லை ஆனால், எந்த நேரத்தில் கனவு வருகிறது என்பதை ஆராய்ந்து கண்டுப்பிடுத்து இருக்கிறார்கள். நாம் தூங்கும் போது இரு வேறு நிலைகளில் தூங்குகிறோம். ஒன்று ஆழந்த சாதாரண தூக்கம், மற்றொன்று rapid eye movement (REM) sleep, இது ஒரு இரவில் 4-5 முறை வேவ்வேறு நேரங்களில் ஏற்படுகிறது, நம் தூக்கத்தின் 20-25% பகுதியை இது எடுத்துக்கொள்கிறது. அதாவது ஒரு இரவில் நம் தூக்கத்தில் 90-120 நிமிடங்கள் இது எடுத்துக்கொள்கிறது.  REM sleep ல், நம் மூளை நாம் விழித்திருக்கும் போது செயல்படுவது போன்றே செயல் படுகின்றது. இது வரையில் நம் மனம் அல்லது உடம்பு  எது சம்பந்தப்பட்டு கனவுகள் வருகிறது என்று இன்னும் கண்டுபிடிக்க ப்படவில்லை.  Parietal Lobe என்ற மூளையின் பகுதி பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு கனவுகளே வருவதில்லை என்றும் கண்டுப்பிடித்துள்ளார்கள்.

REM sleep ல் நம் மூளையை இயக்கத்தில் இருந்தாலும், அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் திறன் மூளைக்கு அந்த நேரம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. கட்டுப்படுத்தும் திறன் இருந்தால், கனவினை நம் இஷ்டத்திற்கு எடுத்துச்செல்லவும் முடியுமல்லவா? அப்படி ஒரு முயற்சியை நான் செய்ததில்லை. ஆனால் கனவு தொடராமல் இருக்க எழுந்து விடுவதையே இங்கு கட்டுப்படுத்துதல் என்று சொல்கிறேன். பல கனவுகளில் பயத்தில் திடுக்கிட்டு எழுந்துவிடுவது என்பது போல இல்லை இவை, வேண்டுமென்றே, தேவையில்லை என்று மூளையை கட்டுப்படுத்தி எழுந்துவிடுவது என்றே சொல்லவேண்டும்.

இதில் எனக்கு வரும் ஒரு சில கனவுகளை ரொம்பவே ரசித்து தொடருவேன். அந்த கனவுகளில் ஒரு குழந்தை வரும். அந்த குழந்தை வரும் கனவுகள் எல்லாமே நீண்ட நேரமுடையதாக 10-15-20 நிமிடங்கள் மேல் நீடிக்கும். அந்த கனவுகளில் ஒரு தொடக்கம், கதை, திரைக்கதை எல்லாமே இருக்கிறது. பகலில் அவற்றை ரீகால் செய்து, மறக்காமல் இருக்க எழுதியும் வைத்திருக்கிறேன். ஆனால் இந்த அதிக நிமிடங்களில் கனவுகள் வரும் போது, அது சந்தோஷமானதாக இருந்தாலும் கூட, எழுந்தவுடன் தலை பாரமாக இருக்கும்.

சில நிகழ்வுகள் முன்கூட்டியும் வருவதுண்டு. என் கனவில் நடந்தவை எப்போது நடக்கும் என்று தெரியாவிட்டாலும், இது நடக்கும் என்று எழுந்தவுடன் உள்மனது சொல்லும் அதை அறிவும் கூட இருந்து ஆமோதிக்கும்.  அப்படிப்பட்ட கனவுகள் நினைவில் நின்று, எப்போது அது நடக்கும் என்று காத்திருக்கும். அதே போல் அவை எல்லாமே அட்சரம் பிசுகாமல் நடக்குமென்றும் சொல்லிவிட முடியாது. சம்பந்தப்பட்டதாக, ஏதோ ஒன்று கண்டிப்பாக நடக்கும், நடந்தும் இருக்கிறது.

அப்பா இறந்து கிட்டத்தட்ட  20 வருடங்கள் ஓடிவிட்ட பிறகும், அப்பா என் கனவில் எப்போது வந்தாலும் "நான் இங்கே இருந்தேன் பாப்பா, அங்கே இருந்தேன் பாப்பா" என்று சொல்லி, ஏதோ ஒரு இடத்தை பற்றி விபரம் சொல்லி பேசுவார், அவர் அணிந்திருக்கும் சட்டை கலர், சட்டை கை மடிப்பு, தலை முடி உட்பட, எல்லாமே எழுந்தவுடன் எனக்கு நினைவில் இருக்கும். அப்பா இல்லை என்ற உண்மையை இந்த கனவுகள் மறைக்க பார்க்கும். அப்பா இப்படி என்றாவது என் முன் வந்து நிற்பார் என்றே தோன்றும்.

கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்று சொன்னாலும், அந்த கனவுகள் எப்படிப்பட்ட தாக இருக்கவேண்டும் என்பதையும் நாமே தான் முடிவு செய்கிறோம். இது டே டீரிம்ஸ் க்கு மட்டும் இல்லைங்க..  :)

அணில் குட்டி : .ச்ச்ச்சச்ச்சோஓஒ......அம்மணி ஆஸ்பித்திரிக்கு போக நேரம் வந்தாச்சி.....போலவே..... :(

பீட்டர் தாத்ஸ் : Do not spoil what you have by desiring what you have not; remember that what you now have was once among the things you only hoped for.”
  .
படம், தகவல் - நன்றி கூகுல்.