கொரோனா 2019 - 2



வீட்டை & சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய விசயங்களில் இன்னொரு விசயம் , கிரகன நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் வெளியில் செல்லாமல், கிரகனம் முடியும் வரை எதும் சாப்பிடாமல், கிரகனம் முடிந்தவுடன் வீட்டை அக்குவேராக கழுவி துடைத்து, தலைக்கு குளித்து சுத்தமானப்பிறகு தான் ஒரு வாய் தண்ணீயே குடிக்க விடுவாங்க.

அலுவலகம் போகும் இந்த காலத்தில் இதெல்லாம் எங்க சாத்தியப்படுது..?. எங்க வீட்டில் ஆயா சொல் பேச்சுக்கேட்டு செய்ததோடு சரி, திருமணத்திற்கு பின் என் குடும்பம்னு ஆனப்பிறகு ஒருதரம் கூட கிரகனத்துக்கு வீட்டை கழுவி விட்ட நினைவில்லை, செய்திருந்தாலும், நிச்சயமா அதை தொடர்ந்து செய்ய என் வேலை எனக்கு சாத்தியப்படுத்தி கொடுக்கல. இப்ப, திரும்பவும் இதையெல்லாம் தொடர்ந்து கடைப்பிடிக்கனும்னு தோணுது.  

அடுத்து, இறப்பு. நம் வீட்டில் இறப்புன்னா, அடுப்பு பத்த வைக்க மாட்டோம், உடல் எடுத்தப்பிறகு, இறந்தவர் பயன்படுத்திய படுக்கை முதற்கொண்டு குப்பையில் கொண்டுப்போய் விட்டு இடுகாட்டிற்கு சென்றவர்கள் வீடு திரும்பும் முன், வீட்டை கழுவி, எல்லோரும் குளித்து சுத்தமானப்பிறகே அடுத்தவேலை. இடுகாட்டிலிருந்து வரவங்களுக்கு துணி எடுத்துக்கொடுத்து, அவர்கள் குளித்தப்பிறகே வீட்டினுள் அனுமதிப்பாங்க. வேறு வீட்டில் இறப்புன்னா, போவதற்கு முன்னமே மாற்று துணியை குளியலறையில் எடுத்து வைத்துவிட்டு சென்று வந்தவுடன் எதையும் யாரையும் தொடாமல் குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு தான் வீட்டினுள் வரமுடியும்.  அத்தனை சுத்தம், கிருமி தொற்றுக் குறித்த பிரஞ்ஞை இருந்தது.  

இப்ப, சாவு வீட்டுக்கு சென்று பேரூந்தில், ரயிலில், காரில் பிரயாணம் செய்து வீட்டுக்கு திரும்பி, வீடு தொலைவாக இருந்தால், நடுவில் இறங்கி சாப்பிட்டுன்னு வாழ்க்கைமுறை நிறையவே மாறிவிட்டது. இதற்கு இயந்திரத்தனமான வாழ்க்கையே காரணம். யாருக்கும் எதற்கும் அதிக நேரமில்லை.

கொரோனா ஆரம்பித்து உலகமே ஸ்தம்பித்து இருக்கும் இந்த வேலையில், குறிப்பாக உலகம் முழுவதும் வாகனங்கள் ஓடாமல், காற்றில் ஒட்டுமொத்தமாக நச்சும் மாசுவும் கலப்பது நின்றுவிட்டது. சுத்தமான காற்று வீசுவதால், வீட்டில் எப்போதும் படியும் மெல்லிய அழுக்கு படிவதில்லை. எனக்கு எப்போதும் வீட்டு வேலைக்கு ஆளில்லை. நானே வீட்டை துடைத்து வருவதால், இந்த வித்தியாசத்தை முழுஅடைப்பின் முதல் வாரத்திலேயே உணர்ந்தேன்.  நம்ப மாட்டீங்க. வீட்டைத்துடைத்தால், பக்கெட் தண்ணீர் சேற்று நிறத்தில் மாறிடும், இரண்டு முறை துடைத்தால் தான் ஓரளவு சுத்தமாக இருக்கும். இப்ப முதல் முறையே தண்ணீர் நிறம் மாறல, வெள்ளையாகவே இருக்கு. இத்தனைக்கும் திருவாரூரில் கிராமங்களுக்கு நடுவில் ஒரு ரிமோட் ஏரியாவில் இருக்கோம். இங்கவே இந்தக்கதை'ன்னா சென்னைப்போன்ற நகரங்களில் காற்றின் மாசுத்தன்மை எத்தனை குறைந்திருக்கும்.

ஒருப்பக்கம், கொரோனாவில் ஏற்படும் இறப்பு,  வியாபாரமில்லாமல் பணவரத்து இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டாலும், வாகனப்புகை, மக்கள் நெருக்குமில்லாமல் பொது இடங்கள் சுத்தமாக இருப்பது நல்ல விசயமே. ஊரடங்கு முடிவுக்கு வந்தப்பிறகும், வாகங்களை அதிகம் பயன்படுத்தாமல், வீட்டில் அதிகம் சமைத்து உண்டு, சுத்தபத்தமாக ஓரளவு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை தொடர்ந்தால், சந்ததிகளுக்கு நல்லது.

கொரோனா கற்றுக்கொடுக்கும் பாடம் இதுவே..... 

எங்க வீட்டு சமையல் - கொஞ்சம் இனிப்பு கொஞ்சம் காரம்


கோதுமை அல்வா ; திருமணம் ஆனப்பிறகு ஒரு நாள் செய்தேன்.. நெய் போதுல போல, 5 நிமிஷத்தில் உதிரி உதிரியா வந்து, சொந்த பந்தமெல்லாம் கைக்கொட்டி சிரிச்சி...ரொம்ப அசிங்கமா, அவமானமாப்போச்சி. அப்ப விட்டது தான்.. அல்வா செய்ய எப்பவும் எந்த முயற்சியையும் செய்யலை.  சென்ற வாரத்தில் திடீர்னு ஒரு ரோஷம் வந்து அல்வா வீடியோ நிறைய பார்த்து எல்லாத்தையும் மனதில் வாங்கி, நம்ம வழியில் நாம செய்வோம்னு செய்தேன்..  அட நல்லா வந்துடுத்து.. ரொம்ப எளிமையாவும் இருந்தது.

இந்த முயற்சிக்கு முதல் நன்றி கொரோனா வைரஸ் க்கு சொல்லனும், வீட்டுக்கார் தொடர்ந்து வீட்டில் இருக்க, தினம் என்ன செய்யறதுன்னு யோசிச்சி யோசிச்சி, அல்வா'வும் பலகார பட்டியலில் சேர்ந்துக்கொண்டது.

சரி, கதை போதும் அல்வா'வை செய்வோம்..


தேவையானப் பொருட்கள் ;

கோதுமை ; 1/2 கப்
நெய் : 1/2 கப்
சர்க்கரை ; 1 கப்
ஏலக்காய் ; 1-2
முந்திரி ; 7-8
கலர் ; உங்களின் விருப்பப்படி, நான் கலர் சேர்க்கல.

செய்முறை :

ஒரு அடுப்பில், அடி கணமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி சூடாக்கி, அதில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதே நெய்யில் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கைவிடாமல் கட்டி முட்டி இல்லாமல் கிளரிக்கிட்டே இருக்கvum.. இது செய்யும் போதே,

இன்னொரு அடிப்பில் சர்க்கரையுடன் 3 மடங்கு தண்ணீர்வைத்து சர்க்கரை கரைந்து தண்ணீர் நன்கு கொதிக்கனும், அதுவே பதம். கெட்டியாக ஆகக்கூடாது.    

கிளரிக்கொண்டிருக்கும் கோதுமை மாவு பொன்னிறமாக ஆகும் போது , கொதிக்கும் சர்க்கரை தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிளரிக்கிட்டே இருக்கனும். மாவு தண்ணீரை உறிஞ்சி, கெட்டியாகி திரண்டு வரும். மாவிலிருந்து நெய் தனியே பிரிந்து வரும் வரை கிளரிட்டே இருக்கனும்.  நெய் தனியே பிரிந்து வருவது தான் பதம், அப்போது தோல் எடுத்து இடித்து வைத்த ஏலக்காய், வறுத்த முந்திரிப்பருப்பை கொட்டி நன்றாக கலந்து இறக்கிவிடலாம்.

கவனிக்க வேண்டியவை ; கோதுமை 5 நிமிடத்திலேயே பொன்னிறமாக மாறிடும், நெய்யோடு சேர்ந்து கிளரும் போது கொஞ்சம் தோசை மாவு பதத்திற்கு தான் இருக்கும். கெட்டியாகாது. ரொம்ப நேரம் கிளரக்கூடாது, மாவு நெய்யில் கருகிடும்.

===========

ரவை பக்கோடா: இதுவும் ஏதோ ஒரு மாலை வேலையில் திரும்ப திரும்ப செய்யற பலகாரமே செய்ய வேண்டியிருக்கே புதுசா ஏதாச்சும் செய்யலாம்னு செய்ய ஆரம்பிச்சது. இது எப்பவோ டிவியில் பார்த்த, காரைக்குடி ஸ்பேஷலான  தோசைமாவில் செய்யும் பக்கோடா நினைவில் வர, அதை அப்படியே காப்பி செய்து ரவைக்கு தகுந்தார் போல கொஞ்சம் மாற்றி செய்தேன், நன்றாகவே இருந்தது.

தேவையான பொருட்கள்:


ரவை ; 3/4 கப்
தயிர் ; 1/4 கப்
வெங்காயம் ; 1
பச்சைமிளகாய்; 1
இஞ்சி ; சின்னத்துண்டு
ஆப்பசோடா ; ஒரு சிட்டிகை
சீரகம் ; 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் ; சிட்டிகை
உப்பு ; தேவைக்கேற்ப  
கொத்துமல்லி, கருவேப்பிலை சிறிது.
பொரிக்க எண்ணெய் ; தேவையானளவு.

செய்முறை:

ரவை, தயிர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லியுடன் மேற்சொன்ன பொருட்கள் எல்லாவற்றையும் கலந்து பிசைந்து தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊரவைக்கவும்.

எண்ணெய் காயவைத்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வடை பொரிப்பது போல கொஞ்சம் லேசாக சிவக்க எடுக்கலாம்.
 =============

வெள்ளரிப்பழம் ஜூஸ்;

பள்ளி பருவத்தில் சாப்பிட்டது, கூடையில் வைத்து எடுத்துட்டு வருவாங்க. ஒரு பழம் நாலனா எட்டனா ன்னு ஆயா பேரம் பேசி வாங்குவாங்க. பழத்தை உதிர்த்து பெரிய பாத்திரத்தில் கொட்டி, கட்டிமுட்டி இல்லாம பிசைந்து , சர்க்கரை சேர்த்து கலந்து, பாத்திரத்தின் வாயில் ஒரு துணியைக்கட்டி வெயிலில் வைத்து, சில மணி நேரம் கழித்து எடுத்து கொடுப்பாங்க.  அந்த ருசிக்கு ஈடு கிடையாது. வருஷம் ஆக ஆக இந்த பழம் கண்ணில் படவேயில்ல.

கிர்ணி பழம், முலாம் பழம் கிடைத்தாலும், வெள்ளரிப்பழத்திற்கு ஈடாகாது. திருவாரூர் வந்து இரண்டு வருசம் ஆகியிருந்தாலும், சமீபத்தில் திடீர்னு கொரோனா லாக்டவுன் நாளில் ஒருநாள் பொருட்கள் வாங்க சென்ற போது தெருவோரம் கண்ணில் பட, ஓடிப்போய் வாங்கிட்டு வந்து, ஆயா எப்படி செய்தாங்களோ அப்படியே செய்தேன். ஆனால் வெயிலில் வைக்கல. ஏன் வெயிலில் வைத்து எடுத்தாங்கன்னு எனக்கு காரணமும் தெரியாது.  
 
பல வருடம் கழித்து கிடைத்ததால், இதை பதிந்து வைக்கனும்னு எழுதுகிறேன். தனியா செய்முறைன்னு ஒன்னுமில்ல, மேல சொன்னதுதான், பழத்தை உதிர்த்து, கட்டிமுட்டி இல்லாம பிசைந்து, சர்க்கரை சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிடலாம்.
========== 

கருணைக்கிழங்கு மசாலா வருவல் ;

காரைக்குடி சென்ற போது ஒரு உணவு விடுதியில் இந்த மசாலா வருவலை வைத்தார்கள். எப்படி செய்யனும்னு தெரியாட்டியும் சுவையை வைத்து, செய்துப்பார்த்தேன்.  சாப்பிடும் போது காய் இன்னும் கொஞ்சம் வெந்திருக்கலாம்னு வூட்டுக்கார் சொல்ல, அடுத்தமுறை அப்படியே செய்தேன். நன்றாகவே வந்தது.


கருணைக்கிழங்கு ; 1/4 கி
மிளகாய்த்தூள் ; 1.5 ஸ்பூன்
மஞ்சத்தூள் - தேவைக்கேற்ப
வெங்காயம் ; 1
பூண்டு பல் 4-5 பல்
இஞ்சி ; சிறிய துண்டு
சோம்பு ; 3/4 ஸ்பூன்
லவங்கம் ; 2 +1
பட்டை ; சிறிது
பட்டை இலை ; சிறிது
உப்பு ; தேவைக்கேற்ப
எண்ணெய் ; தேவைக்கேற்ப.

செய்முறை; கருணைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி மசிக்குமளவு வேகவைத்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சோம்பு, லவங்கம், பட்டை சேர்த்து நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.  வாணல் வைத்து தாளிக்க எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை இலை, துளி சோம்பு, பட்டை, லவங்கம் 1 சேர்த்து சிவந்தவுடன், இஞ்சி பூண்டு விழுதைக்கொட்டி வதக்கவும், அதே மிக்ஸி ஜாடியில் வெங்காயத்தை ஒரு சுற்று சுற்றி, வதக்கிய விழுதோடு சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின்பு ஒன்றும் பாதியுமாக மசித்த கருணைக்கிழங்கை கொட்டி நன்கு கலந்து மிக்ஸி ஜாடியில் லேசாக தண்ணீர் ஊற்றி, அதை இந்த கலவையில் தெளித்து மூடிப்போட்டு சிறு தீயில் மிளகாய் வாசம் போகும் வரை வைக்க வேண்டும், நடு நடுவில் கலக்கி விடவும். அடிப்பிடிக்காமல் தேவைப்பட்டால் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து, கடைசியில் கொஞ்சம் கருவேப்பிலை கிள்ளிப்போட்டு நன்கு வதக்கி இறக்கவும்.

இது அசைவ ருசியைக்கொடுக்கும் ஒரு சைவ வறுவல். காரைக்குடியில் செய்வாங்க போல. எங்களுக்கு ரொம்ப பிடிச்சிப்போனதில்,செய்ய ஆரம்பிச்சிட்டோம்.

குறிப்பு; என் சமையல் எல்லாவற்றிலும் காரம் குறைவாக இருக்கும். உங்களின் ருசிக்கு தகுந்தார் போல காரத்தை நீங்க அதிகப்படுத்திக்கலாம்.

அணில் குட்டி ; அம்மணி ஏன் திடீர்னு ஒரே பதிவில் இத்தனை சமையல் குறிப்பு எழுதறாங்கன்னு தெரியுமா.. ரொம்ப ஞாபகமறதி, வயசாகுதுள்ள..ஹிஹி... நாளைக்கு இதுவும் ஞாபகம் இருக்குமோ என்னவோன்னு அவங்களுக்கே டவுட்டு, அதான்.. அவங்களுக்காக அவங்களே எழதி வைச்சிக்கற குறிப்புகள்.. வந்தவேல முடிஞ்சிது.. கெளம்பறேன்...... 

பீட்டர் தாத்ஸ் ; One cannot think well, love well, sleep well, if one has not dined well.


கருணைக்கிழங்கு படம் கூகுலிலிருந்து எடுத்தது ; நன்றி.

கொரோனா -2019

நாம் வாழ்ந்த நாட்களில் இப்படியொரு வைரஸ் தாக்குதலால் எப்போதும் இல்லாதளவு, அழிக்க மருந்தில்லாமல் உலகமே தவித்தது என்பதை நாமும் எழுதி வைக்கனும்னு என்ற நினைப்ப இன்று தான் வந்தது.

கொரோனா ஆரம்பித்தவுடனேயே வாட்சப் ஃபார்வேர்ட் பிரச்சனையும் ஆரம்பித்துவிட்டது.  கொரோனாவே தேவலைங்கற அளவிற்கு மக்கள் வாட்சப்பில் ஒரு ஆட்டம் ஆடிவிட்டனர்.

அப்படி வந்த வாட்சப் ஃபார்வேர்டுகளில் என் கவனத்தை ஈர்த்தது படத்திலுள்ள இந்த 1914 வருட மருத்துவ புத்தகமும் மருத்துவ குறிப்பும் அதில் கொரோனா என்ற பெயரும்.

உடனே நம்ம கூகுளின் உதவியை நாடினேன்..  தமிழ் வைத்தியப்புத்தகத்தில், 1914 என்று இருந்தாலும், கூகுளில் '1918 ல் கப்பல் வழியாக இந்தியா திரும்பிய ராணுவத்தினர் மும்பையில் இறங்கினார்கள். இவர்கள் வழியே இந்தியா வந்த அந்த காய்ச்சலால் 1918 ஜூன் மாதம் பலரும் பலியானார்கள். அதைத் தொடர்ந்து மீண்டும் செப்டம்பர் மாதத்தில் வேகமாகப் பரவத் தொடங்கிய

இந்தக் காய்ச்சல் தென் இந்திய கடற்கரை முழுவதும் பரவியது. இந்த காய்ச்சலால் இந்தியாவில் சுமார் 1.8 கோடி மக்கள் பலியாகினர். இந்த எண்ணிக்கை முதலாம் உலகப் போரில் உயிரிழந்த நபர்களைவிட அதிகமாகும். இந்திய மக்கள் தொகையில் 6 சதவீதம் மக்கள் உயிரிழந்தார்கள். இதில் ஆண்களை விடப் பெண்களே அதிகம் இறந்தனர்." போன்ற கொரோனாவின் வரலாறு தெரிந்தது.

என்ன பெருமைன்னா, தமிழன் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து அதை பயன்படுத்தி வந்துள்ளான் என்ற அறிய செய்திதான்.

கொரோனா - நான் புரிந்துக்கொண்ட வகையில், சளி, தலைவலி, காய்ச்சலில் ஆரம்பித்து மூச்சு திணறலில் தொடர்ந்து, ஆளை முடக்கிவிடுகிறது.இன்னும் மருந்து கண்டுப்பிடிக்கல, உலகம் முழுக்க மக்கள் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது, காற்றின் மூலமும், நோயாளிகள் தொட்ட இடங்களை மற்றவர்கள் தொடும் போதும் எளிதாக பரவுகிறது.இப்படியான நோயைப்பற்றிய குறிப்புகுள், அதைத்தொடர்ந்த செய்திகளும், செளக்கிதாரின் பெல் அடித்த, விளக்குப்பிடிச்ச டாஸ்களும் அனைவரும் அறிந்ததே.

இந்த நோயைத்தொடர்ந்து, தமிழர்களின் சில அன்றாட பழக்க வழக்கங்களை குறிப்பிட வேண்டுயுள்ளது.

தினப்படி விடியற்காலை வாசல் பெருக்கி, சாணி கரைத்து தெளித்தல். வீட்டினை சாணியால் மொழுகுதல்.  காலம் மாற மாற வாசலில் மட்டும் சாணி தெளித்தல் தொடர்ந்தது, சாணி மறைந்தாலும் இன்று வரை , அடுக்குமாடி குடியிருப்பு வாசல்கள் முதற்கொண்டு, காலையில் முதல் வேலையாக தண்ணீரால் சுத்தம் செய்து கோலம் போட்டு வருகிறோம்---இதன் அடிப்படைக்காரணம் கிருமிகளும், அசுத்தங்களையும் வீட்டினுள் வராமல் தடுத்தல்.  சுற்றுபுரத்தை சுத்தமாக வைத்திருத்தல், இதிலேயே பாதி வியாதிகளை நம்மால் தடுக்கமுடியும்.

அறிவுகாலில் மஞ்சள் பூசி, குங்குமம் வைப்பாங்க.  - மஞ்சளைத்தாண்டி எந்தக்கிருமியும் வராது, பூச்சிப்பொட்டு எதும் அண்டாது.

வீட்டை செவ்வாய் , வெள்ளி, அமாவாசை, கிருத்திகை, பண்டிகைகள் என தொடர்ந்து கழுவி சுத்தம் செய்தலை தொடர் பழக்கமாக இன்றுவரை அனைவரும் கடைப்பிடிக்கிறோம். ---- குஜராத், மும்பை, கொல்கத்தா, கேரளா இப்படி பல மாநிலங்களில் வேலை சம்பந்தமாக வருடக்கணக்கில் தங்கியிருக்கிறோம். யாருக்கும் இப்படியான பழக்கங்கள் இல்லை. குறிப்பாக வட இந்தியாவில் கோயில்கள்  கூட கால் வைக்க வழங்காது.

சாமி கும்பிட ஏற்றும் தீபம், சாம்ப்ரானி, மா- இலை தோரணம் இத்தியாதிகள் என அனைத்து செயல்களுக்கும் ஒரு மருத்துவக் காரணம் இருக்கவே செய்கிறது.

தமிழன், அந்த காலத்திலேயே சுகாதாரமான, சுத்தமான வாழ்க்கைமுறையை கடைப்பிடித்தது, இதுப்போன்ற நோய் தொற்றுலிருந்து தன்னை காத்துக் கொள்ளவும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவுமே என்பது தெள்ளத்தெளிவு.

இதுப்போலவே தமிழனின் உணவு பழக்கம், விரதம் இருந்தல், எந்த நேரத்தில் எதை சாப்பிடனும், எந்த உணவோடு எதை சாப்பிடக்கூடாது, எதில் எதிர்ப்பு சக்தி அதிகம், எதை அறவே ஒதுக்க வேண்டும், வாழையிலை சாப்பாடு, சாப்பாட்டிற்கு பிறகு தாம்பூலம் என சொல்லிக்கிட்டே போகலாம்.

இதில் இந்த வாசல்கால் மஞ்சள் பூசுதல் மட்டும், எனக்கு திருமணமாகி எங்களின் வீடு என வந்தப்பிறகு தேவையில்லாத ஆணி, பார்க்க நல்லாயில்லயென செய்ததேயில்லை. இனி, இதை செய்ய வேண்டுமென நினைத்திருக்கிறேன்.

கொரோன;- உலகம் முழுக்க அனைவரும் -தனித்திருத்தல், விலகியிருத்தல், முகக்கவசம் அணிதல், மொத்தமாகவே அலுவலகம் அத்தனையும் மூடப்பட்ட நிலை, வீட்டிலிருந்தபடி வேலைப்பார்ப்பது,  ரயில், பேருந்து , விமானம் என எந்த வாகனங்களும் ஓடாமல் இருப்பது என எல்லாமே புதுசு, இத்தனை ஆண்டுகளில் அனுபவப்படாதது, ஆச்சரியம் & பயம், ஆயாசம்.

தவிர, பறவைகள், விலங்குகள், மனிதனைத்தவிர மற்ற உயிர்கள் அனைத்தும் சுதந்தரமாக உலாவருகின்றன. உலகம் முழுதும் வாகனப்புகை இல்லாமல் ஓசோன் ஓட்டையே அடைய ஆரம்பித்திருக்கிறது போன்ற செய்திகள் சிரமாம சூழலில் சந்தோஷத்தை தந்ததாலும், திரும்ப மனித நடமாட்டம் வந்தவுடன், இந்த பறவைகளும், விலங்குகளும் நிலை குலைந்து போகுமே என்ற எண்ணம் மனதை பிசைகிறது.

அன்றாடம் பொருளீட்டி அதில் சாப்பிடும் மக்களின் நிலையும், ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் குழந்தைகள் முதியோரின் நிலையும் கேள்விக்கிடமாக இருப்பதும் வேதனை அளிக்கிறது.

சில பல வருடங்களாகவே மத்திய மாநில அரசுகளின்  போக்கு, இதுப்போன்ற தருணங்களில் இதுவரை மற்றவர்களுக்கு உதவியதுப்போல இப்போது உதவ தோணவில்லை.  இவ்வரசுகளின் மேலுள்ள வெறுப்பு, மேலும் இவ்வரசுகளால் நமக்கும் நாளை என்ன கதியாகுமோ.... என்ற ஒருவித பதட்டத்தோடே நாட்கள் நகருகின்றன.