கோதுமை அல்வா ; திருமணம் ஆனப்பிறகு ஒரு நாள் செய்தேன்.. நெய் போதுல போல, 5 நிமிஷத்தில் உதிரி உதிரியா வந்து, சொந்த பந்தமெல்லாம் கைக்கொட்டி சிரிச்சி...ரொம்ப அசிங்கமா, அவமானமாப்போச்சி. அப்ப விட்டது தான்.. அல்வா செய்ய எப்பவும் எந்த முயற்சியையும் செய்யலை. சென்ற வாரத்தில் திடீர்னு ஒரு ரோஷம் வந்து அல்வா வீடியோ நிறைய பார்த்து எல்லாத்தையும் மனதில் வாங்கி, நம்ம வழியில் நாம செய்வோம்னு செய்தேன்.. அட நல்லா வந்துடுத்து.. ரொம்ப எளிமையாவும் இருந்தது.
இந்த முயற்சிக்கு முதல் நன்றி கொரோனா வைரஸ் க்கு சொல்லனும், வீட்டுக்கார் தொடர்ந்து வீட்டில் இருக்க, தினம் என்ன செய்யறதுன்னு யோசிச்சி யோசிச்சி, அல்வா'வும் பலகார பட்டியலில் சேர்ந்துக்கொண்டது.
சரி, கதை போதும் அல்வா'வை செய்வோம்..
தேவையானப் பொருட்கள் ;
கோதுமை ; 1/2 கப்
நெய் : 1/2 கப்
சர்க்கரை ; 1 கப்
ஏலக்காய் ; 1-2
முந்திரி ; 7-8
கலர் ; உங்களின் விருப்பப்படி, நான் கலர் சேர்க்கல.
செய்முறை :
ஒரு அடுப்பில், அடி கணமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி சூடாக்கி, அதில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதே நெய்யில் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கைவிடாமல் கட்டி முட்டி இல்லாமல் கிளரிக்கிட்டே இருக்கvum.. இது செய்யும் போதே,
இன்னொரு அடிப்பில் சர்க்கரையுடன் 3 மடங்கு தண்ணீர்வைத்து சர்க்கரை கரைந்து தண்ணீர் நன்கு கொதிக்கனும், அதுவே பதம். கெட்டியாக ஆகக்கூடாது.
கிளரிக்கொண்டிருக்கும் கோதுமை மாவு பொன்னிறமாக ஆகும் போது , கொதிக்கும் சர்க்கரை தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிளரிக்கிட்டே இருக்கனும். மாவு தண்ணீரை உறிஞ்சி, கெட்டியாகி திரண்டு வரும். மாவிலிருந்து நெய் தனியே பிரிந்து வரும் வரை கிளரிட்டே இருக்கனும். நெய் தனியே பிரிந்து வருவது தான் பதம், அப்போது தோல் எடுத்து இடித்து வைத்த ஏலக்காய், வறுத்த முந்திரிப்பருப்பை கொட்டி நன்றாக கலந்து இறக்கிவிடலாம்.
கவனிக்க வேண்டியவை ; கோதுமை 5 நிமிடத்திலேயே பொன்னிறமாக மாறிடும், நெய்யோடு சேர்ந்து கிளரும் போது கொஞ்சம் தோசை மாவு பதத்திற்கு தான் இருக்கும். கெட்டியாகாது. ரொம்ப நேரம் கிளரக்கூடாது, மாவு நெய்யில் கருகிடும்.
===========
ரவை பக்கோடா: இதுவும் ஏதோ ஒரு மாலை வேலையில் திரும்ப திரும்ப செய்யற பலகாரமே செய்ய வேண்டியிருக்கே புதுசா ஏதாச்சும் செய்யலாம்னு செய்ய ஆரம்பிச்சது. இது எப்பவோ டிவியில் பார்த்த, காரைக்குடி ஸ்பேஷலான தோசைமாவில் செய்யும் பக்கோடா நினைவில் வர, அதை அப்படியே காப்பி செய்து ரவைக்கு தகுந்தார் போல கொஞ்சம் மாற்றி செய்தேன், நன்றாகவே இருந்தது.
தேவையான பொருட்கள்:
ரவை ; 3/4 கப்
தயிர் ; 1/4 கப்
வெங்காயம் ; 1
பச்சைமிளகாய்; 1
இஞ்சி ; சின்னத்துண்டு
ஆப்பசோடா ; ஒரு சிட்டிகை
சீரகம் ; 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் ; சிட்டிகை
உப்பு ; தேவைக்கேற்ப
கொத்துமல்லி, கருவேப்பிலை சிறிது.
பொரிக்க எண்ணெய் ; தேவையானளவு.
செய்முறை:
ரவை, தயிர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லியுடன் மேற்சொன்ன பொருட்கள் எல்லாவற்றையும் கலந்து பிசைந்து தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊரவைக்கவும்.
எண்ணெய் காயவைத்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வடை பொரிப்பது போல கொஞ்சம் லேசாக சிவக்க எடுக்கலாம்.
=============
வெள்ளரிப்பழம் ஜூஸ்;
பள்ளி பருவத்தில் சாப்பிட்டது, கூடையில் வைத்து எடுத்துட்டு வருவாங்க. ஒரு பழம் நாலனா எட்டனா ன்னு ஆயா பேரம் பேசி வாங்குவாங்க. பழத்தை உதிர்த்து பெரிய பாத்திரத்தில் கொட்டி, கட்டிமுட்டி இல்லாம பிசைந்து , சர்க்கரை சேர்த்து கலந்து, பாத்திரத்தின் வாயில் ஒரு துணியைக்கட்டி வெயிலில் வைத்து, சில மணி நேரம் கழித்து எடுத்து கொடுப்பாங்க. அந்த ருசிக்கு ஈடு கிடையாது. வருஷம் ஆக ஆக இந்த பழம் கண்ணில் படவேயில்ல.
கிர்ணி பழம், முலாம் பழம் கிடைத்தாலும், வெள்ளரிப்பழத்திற்கு ஈடாகாது. திருவாரூர் வந்து இரண்டு வருசம் ஆகியிருந்தாலும், சமீபத்தில் திடீர்னு கொரோனா லாக்டவுன் நாளில் ஒருநாள் பொருட்கள் வாங்க சென்ற போது தெருவோரம் கண்ணில் பட, ஓடிப்போய் வாங்கிட்டு வந்து, ஆயா எப்படி செய்தாங்களோ அப்படியே செய்தேன். ஆனால் வெயிலில் வைக்கல. ஏன் வெயிலில் வைத்து எடுத்தாங்கன்னு எனக்கு காரணமும் தெரியாது.
பல வருடம் கழித்து கிடைத்ததால், இதை பதிந்து வைக்கனும்னு எழுதுகிறேன். தனியா செய்முறைன்னு ஒன்னுமில்ல, மேல சொன்னதுதான், பழத்தை உதிர்த்து, கட்டிமுட்டி இல்லாம பிசைந்து, சர்க்கரை சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிடலாம்.
==========
கருணைக்கிழங்கு மசாலா வருவல் ;
காரைக்குடி சென்ற போது ஒரு உணவு விடுதியில் இந்த மசாலா வருவலை வைத்தார்கள். எப்படி செய்யனும்னு தெரியாட்டியும் சுவையை வைத்து, செய்துப்பார்த்தேன். சாப்பிடும் போது காய் இன்னும் கொஞ்சம் வெந்திருக்கலாம்னு வூட்டுக்கார் சொல்ல, அடுத்தமுறை அப்படியே செய்தேன். நன்றாகவே வந்தது.
கருணைக்கிழங்கு ; 1/4 கி
மிளகாய்த்தூள் ; 1.5 ஸ்பூன்
மஞ்சத்தூள் - தேவைக்கேற்ப
வெங்காயம் ; 1
பூண்டு பல் 4-5 பல்
இஞ்சி ; சிறிய துண்டு
சோம்பு ; 3/4 ஸ்பூன்
லவங்கம் ; 2 +1
பட்டை ; சிறிது
பட்டை இலை ; சிறிது
உப்பு ; தேவைக்கேற்ப
எண்ணெய் ; தேவைக்கேற்ப.
செய்முறை; கருணைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி மசிக்குமளவு வேகவைத்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சோம்பு, லவங்கம், பட்டை சேர்த்து நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும். வாணல் வைத்து தாளிக்க எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை இலை, துளி சோம்பு, பட்டை, லவங்கம் 1 சேர்த்து சிவந்தவுடன், இஞ்சி பூண்டு விழுதைக்கொட்டி வதக்கவும், அதே மிக்ஸி ஜாடியில் வெங்காயத்தை ஒரு சுற்று சுற்றி, வதக்கிய விழுதோடு சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின்பு ஒன்றும் பாதியுமாக மசித்த கருணைக்கிழங்கை கொட்டி நன்கு கலந்து மிக்ஸி ஜாடியில் லேசாக தண்ணீர் ஊற்றி, அதை இந்த கலவையில் தெளித்து மூடிப்போட்டு சிறு தீயில் மிளகாய் வாசம் போகும் வரை வைக்க வேண்டும், நடு நடுவில் கலக்கி விடவும். அடிப்பிடிக்காமல் தேவைப்பட்டால் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து, கடைசியில் கொஞ்சம் கருவேப்பிலை கிள்ளிப்போட்டு நன்கு வதக்கி இறக்கவும்.
இது அசைவ ருசியைக்கொடுக்கும் ஒரு சைவ வறுவல். காரைக்குடியில் செய்வாங்க போல. எங்களுக்கு ரொம்ப பிடிச்சிப்போனதில்,செய்ய ஆரம்பிச்சிட்டோம்.
குறிப்பு; என் சமையல் எல்லாவற்றிலும் காரம் குறைவாக இருக்கும். உங்களின் ருசிக்கு தகுந்தார் போல காரத்தை நீங்க அதிகப்படுத்திக்கலாம்.
அணில் குட்டி ; அம்மணி ஏன் திடீர்னு ஒரே பதிவில் இத்தனை சமையல் குறிப்பு எழுதறாங்கன்னு தெரியுமா.. ரொம்ப ஞாபகமறதி, வயசாகுதுள்ள..ஹிஹி... நாளைக்கு இதுவும் ஞாபகம் இருக்குமோ என்னவோன்னு அவங்களுக்கே டவுட்டு, அதான்.. அவங்களுக்காக அவங்களே எழதி வைச்சிக்கற குறிப்புகள்.. வந்தவேல முடிஞ்சிது.. கெளம்பறேன்......
பீட்டர் தாத்ஸ் ; One cannot think well, love well, sleep well, if one has not dined well.
கருணைக்கிழங்கு படம் கூகுலிலிருந்து எடுத்தது ; நன்றி.
2 - பார்வையிட்டவர்கள்:
சுவையான குறிப்புகள். கோதுமை ஹல்வா கவர்கிறது. வெள்ளரி இங்கே கிடைக்க வாய்ப்பில்லை.
நன்றி. தொடர்ந்து என் பதிவுகளை படித்து, அதற்கு பதிலும் சொல்றீங்க. :). ஆச்சரியமாக இருக்கு. நன்றிங்க. _/\_
Post a Comment