வீட்டை & சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய விசயங்களில் இன்னொரு விசயம் , கிரகன நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் வெளியில் செல்லாமல், கிரகனம் முடியும் வரை எதும் சாப்பிடாமல், கிரகனம் முடிந்தவுடன் வீட்டை அக்குவேராக கழுவி துடைத்து, தலைக்கு குளித்து சுத்தமானப்பிறகு தான் ஒரு வாய் தண்ணீயே குடிக்க விடுவாங்க.
அலுவலகம் போகும் இந்த காலத்தில் இதெல்லாம் எங்க சாத்தியப்படுது..?. எங்க வீட்டில் ஆயா சொல் பேச்சுக்கேட்டு செய்ததோடு சரி, திருமணத்திற்கு பின் என் குடும்பம்னு ஆனப்பிறகு ஒருதரம் கூட கிரகனத்துக்கு வீட்டை கழுவி விட்ட நினைவில்லை, செய்திருந்தாலும், நிச்சயமா அதை தொடர்ந்து செய்ய என் வேலை எனக்கு சாத்தியப்படுத்தி கொடுக்கல. இப்ப, திரும்பவும் இதையெல்லாம் தொடர்ந்து கடைப்பிடிக்கனும்னு தோணுது.
அடுத்து, இறப்பு. நம் வீட்டில் இறப்புன்னா, அடுப்பு பத்த வைக்க மாட்டோம், உடல் எடுத்தப்பிறகு, இறந்தவர் பயன்படுத்திய படுக்கை முதற்கொண்டு குப்பையில் கொண்டுப்போய் விட்டு இடுகாட்டிற்கு சென்றவர்கள் வீடு திரும்பும் முன், வீட்டை கழுவி, எல்லோரும் குளித்து சுத்தமானப்பிறகே அடுத்தவேலை. இடுகாட்டிலிருந்து வரவங்களுக்கு துணி எடுத்துக்கொடுத்து, அவர்கள் குளித்தப்பிறகே வீட்டினுள் அனுமதிப்பாங்க. வேறு வீட்டில் இறப்புன்னா, போவதற்கு முன்னமே மாற்று துணியை குளியலறையில் எடுத்து வைத்துவிட்டு சென்று வந்தவுடன் எதையும் யாரையும் தொடாமல் குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு தான் வீட்டினுள் வரமுடியும். அத்தனை சுத்தம், கிருமி தொற்றுக் குறித்த பிரஞ்ஞை இருந்தது.
இப்ப, சாவு வீட்டுக்கு சென்று பேரூந்தில், ரயிலில், காரில் பிரயாணம் செய்து வீட்டுக்கு திரும்பி, வீடு தொலைவாக இருந்தால், நடுவில் இறங்கி சாப்பிட்டுன்னு வாழ்க்கைமுறை நிறையவே மாறிவிட்டது. இதற்கு இயந்திரத்தனமான வாழ்க்கையே காரணம். யாருக்கும் எதற்கும் அதிக நேரமில்லை.
கொரோனா ஆரம்பித்து உலகமே ஸ்தம்பித்து இருக்கும் இந்த வேலையில், குறிப்பாக உலகம் முழுவதும் வாகனங்கள் ஓடாமல், காற்றில் ஒட்டுமொத்தமாக நச்சும் மாசுவும் கலப்பது நின்றுவிட்டது. சுத்தமான காற்று வீசுவதால், வீட்டில் எப்போதும் படியும் மெல்லிய அழுக்கு படிவதில்லை. எனக்கு எப்போதும் வீட்டு வேலைக்கு ஆளில்லை. நானே வீட்டை துடைத்து வருவதால், இந்த வித்தியாசத்தை முழுஅடைப்பின் முதல் வாரத்திலேயே உணர்ந்தேன். நம்ப மாட்டீங்க. வீட்டைத்துடைத்தால், பக்கெட் தண்ணீர் சேற்று நிறத்தில் மாறிடும், இரண்டு முறை துடைத்தால் தான் ஓரளவு சுத்தமாக இருக்கும். இப்ப முதல் முறையே தண்ணீர் நிறம் மாறல, வெள்ளையாகவே இருக்கு. இத்தனைக்கும் திருவாரூரில் கிராமங்களுக்கு நடுவில் ஒரு ரிமோட் ஏரியாவில் இருக்கோம். இங்கவே இந்தக்கதை'ன்னா சென்னைப்போன்ற நகரங்களில் காற்றின் மாசுத்தன்மை எத்தனை குறைந்திருக்கும்.
ஒருப்பக்கம், கொரோனாவில் ஏற்படும் இறப்பு, வியாபாரமில்லாமல் பணவரத்து இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டாலும், வாகனப்புகை, மக்கள் நெருக்குமில்லாமல் பொது இடங்கள் சுத்தமாக இருப்பது நல்ல விசயமே. ஊரடங்கு முடிவுக்கு வந்தப்பிறகும், வாகங்களை அதிகம் பயன்படுத்தாமல், வீட்டில் அதிகம் சமைத்து உண்டு, சுத்தபத்தமாக ஓரளவு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை தொடர்ந்தால், சந்ததிகளுக்கு நல்லது.
கொரோனா கற்றுக்கொடுக்கும் பாடம் இதுவே.....
0 - பார்வையிட்டவர்கள்:
Post a Comment