பெங்களூர் பயணம் -சில நினைவுகளும் .....என் தோழனும்..... ........

அலுவலக வேலையாக பெங்களூர் செல்ல வேண்டி இருந்தது. என் நெருங்கிய நண்பர் அங்கு தான் இருக்கிறார். இருவரும் சந்தித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டுன. போகும் முன் எங்கு இறங்க வேண்டும், எங்கு என்ன சாப்பிடவேண்டும், ஆட்டோவிற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் அவரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். லேப்பியை பத்திரிமாக எடுத்துவாங்க, ரயிலில் திருடி விடுவார்கள் என்றார், இது மட்டுமே அன்றைய பயணத்தின் போது இரவு முழுவதும் தூக்கம் வராமல் போனது, கழிவறை செல்ல கூட பயந்து எப்படியோ போய் சேர்ந்தேன்.

இதில் ரயில் ஏறியவுடன் எனக்கு ஒரு மிஸ் கால் கொடுங்க, இறங்கியவுடன் எனக்கு ஒரு மிஸ் கால் கொடுங்க.. நடுராத்தியில் போன் செய்து ரயில் எங்கு வந்துகொண்டு இருக்கிறது? பத்திரமாக இருக்கீங்களா? தூங்கறீங்களா?.. அய்யோ ஜனா.. ??? வந்து விடுகிறேன்..உங்களிடம் நான் பெங்களூர் வருகிறேன் என்று சொன்னது தப்பாகிவிட்டதா..? இது தான் என் தோழன்..:))) அன்பை பொழிந்து போதும் ..!! போதும் என்று சொல்லும் அளவுக்கு ஆக்கிவிடுவார்.

காலையில் அங்கு சேர்ந்துவிட்ட என்னை விமானத்தில் வந்து சேர்ந்த என் முதலாளி காருடன் வந்து அழைத்து சென்றார். நேராக அவரின் சொந்தகாரர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கே எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. 85 வயதான அவரின் ஆன்ட்டி ஒருவர் தனியாக ஒரு வீட்டில் (big bazaar பக்கத்தில் மிக அற்புதமான மிக அழகாக வடிவமைக்கப்பட்ட, உள் அலங்காரம் செய்யப்பட்ட வீடு) அமைதியான இடத்தில் அமைந்த வீடு. என் முதலாளியை பார்த்தவுடன் அவரை கட்டி அணைத்து முத்தமிட்டார். பின்னால் சென்ற என்னை அறிமுகம் செய்தவுடன் என்னையும் அணைத்துக்கொள்ள கையை நீட்டினார். அவரை போலவே நானும் அவரை அணைத்தேன், எனக்கும் முத்தமிட்டார். என் முதலாளி "Kavitha, u just talk to her I ll be back" என்று கூறுவிட்டு மாடிப்படி ஏறி எங்கோ சென்று விட்டார். புதுவீடு, தெரியாத மனிதர்கள் என்று எந்த பிரச்சனையும் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. ஆச்சரியத்தை விட்டுவிட்டேனே.. அந்த 85 வயது மூதாட்டி கலக்ட்ராக இருந்து ஓய்வு பெற்றவர், ஆங்கிலம் நுனி நாக்கில் தாண்டவம் ஆடுகிறது, நல்ல நிறம், கேரளாவை சேர்ந்த அவர் வேலையாளிடம் சொல்லி தேநீர் கொடுக்க சொல்லிவிட்டு என்னிடம் பேசியவாரே ஒரு 5 நிமிடம் சமையல் அறை உள்ளே சென்றார் வந்துவிட்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை தனியாக இருக்கிறார், நானும் அவரை ஏன் என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் " அந்த காலத்திலேயே அதிகம் படித்துவிட்டேன், மிகவும் அழகாக இருந்தேன்.. அதற்கு தகுந்தார் அல்லது என்னை விட எல்லாவற்றிலும் சிறந்த ஒரு ஆணை எதிர்பார்த்தேன், மணக்க நினைத்தேன் ஆனால் கிடைக்கவில்லை" சொல்லிவிட்டு வெடி சிரிப்பு சிரித்தார். வாழ்க்கை தனியாக உங்களுக்கு போர் அடிக்கவில்லையா என்றேன். இல்லை மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.. இப்படி பேசிமுடிப்பதற்குள் அவல்'லில் செய்த புட்டை எங்களுக்கு பரிமாறினார். இதைதான் ஆச்சரியம் என்றேன். எப்படி இவ்வளவு எளிதாக வேகமாக 5 நிமிடத்தில் அவரால் இந்த வயதில் உணவை தயாரிக்க முடிந்தது?. சாப்பிட்டவுடன் இருவரும் கிளம்பினோம்.

திரும்பவும் முதலாளி அவரை கட்டியணைத்தார். நான் புன்னகையுடன் தள்ளி நின்றேன் விடவில்லை என்னையும் கைநீட்டி அழைத்தார், நானும் கட்டியணைத்தேன். என்னை கட்டி அணைக்கும் போது "என்னை மேடம் என்று அழைக்காதே" என்றார். சரி ஆன்ட்டி என்றேன்..!! சந்தோஷப்பட்டு திரும்பவும் நடக்க ஆரம்பித்த என்னை கூப்பிட்டு இறுக அணைத்துக்கொண்டார். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, அடிக்கடி வா என்றார். even if your boss doesnt visit, you please visit, I love you..I wait for you, next time you stay with me ok.." என்றார். பிரியாவிடை! கொஞ்சம் நடந்து திரும்பி பார்த்தேன். திரும்பவும் என்னை பார்த்து கையை நீட்டினார், நானும் சிரித்துக்கொண்டே சென்று அணைத்துக்கொண்டேன்... "I too miss you aunty, next time sure, I ll stay with you , I cook for you ..I ll give you company, we ll chat lot ok...." என்றேன். சின்ன குழந்தையை போன்று கைக்காட்டி வழியனுப்பி வைத்தார். சந்தோஷமாக இருக்கிறேன் என்று அவர் சொன்னது வார்த்தையில் மட்டுமே என்று புரிந்தது.

சிலரின் அன்பு ஏன் என்றே புரியவில்லை இப்படி எனக்கு நிறைய அனுபவங்கள் இருந்தாலும் இது கொஞ்சம் புதிது. இப்படி உறவினர்கள் இடையே கட்டியணைப்பது எல்லாம் நம்முடைய கலாசாரத்தில் இல்லை. கொஞ்சம் புதுமையான அனுபவம்.

காலையில் இந்த அவல் மட்டுமே உணவு.. ஒரு மணி நேரம் தாங்கவில்லை பசிக்க ஆரம்பித்தது. முதலாளிக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் மதியம் சாப்பிட எங்கேயும் அழைத்து செல்லவில்லை. கிளையன்ட் அலுவலகத்தில் உட்கார்ந்து அவர்கள் வர நேரம் எடுக்க காரில் எனக்கு பெங்களூரை சுற்றி காட்டினார். நடுவே ஒரு ஹோட்டலில் டீ வாங்கிக்கொடுத்தார். வாழ்க்கையை பற்றி நிறைய தத்துவங்கள் அவரின் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார். பொறுமையாக அவரின் பேச்சை கவனித்துக்கொண்டு இருந்தேன். புத்தி என்னவோ கிளையன்ட்டை எப்படி எதிர்கொள்வது என்றே வேலைசெய்து கொண்டு இருந்தது. பசி வேறு கேட்கவும் முடியவில்லை அவரை பார்த்தாலும் பாவமாக இருந்தது. ஒரு வழியாக கிளையன்ட்ஐ பார்க்க முடிந்தது.

3.5 மணி நேரம் இடைவெளி இல்லாத பேச்சு. நான் பேச கிளையன்ட் பேச என்னுடைய முதலாளி ஒரு 10 நிமிடங்கள் எனக்கு துணையாக பேசிவிட்டு நாற்காலியை பின்னால் நகர்த்தி கைக்கட்டி சாய்ந்து உட்கார்ந்தவர் தான் என்ன ஏதுவென்று கேட்கவில்லை. சில சமயம் மிகவும் எரிச்சல் அடைந்து "Kavitha go with his rates, dont argue more let us fix this rate, he is also correct in his views.. !!" , " Yes Sir!, I do agree but..we dont get margin, no use of fixing this rate with this low margin, "It is ok, you better stop argue with him and go with his rate". முதலாளிகள் சொல்லுவதை நாம் கேட்டுத்தானே ஆக வேண்டும். அவ்வபோது லேப்பியில் நம்பர்களை அவருக்கு சைகை மூலம் காட்டி ஒப்புதல் பெற்று கிளைன்ட்; இடம் பிராஜக்ட் 'ஐ கையெழுத்திட ஏற்பாடு செய்தாகிவிட்டது. வந்த வேலை என்னவோ நல்ல படியாக முடிந்தது பசி தான் தாங்கமுடியவில்லை. மணி மாலை 6.15, முதலாளிக்கு விமானத்திற்கு நேரம் ஆக வண்டி பறந்தது. அவரை விமானநிலையத்தில் இறக்கிவிட்டு, ஸ்ஸ்..ப்பா... போன் முதலில்.ஜனாவிற்கு தான். "ஜனா ரொம்ப பசிக்குது எங்க சாப்பிடட்டும் சொல்லுங்க.. ஊர் உலகத்தை எல்லாம் தாண்டி எங்கையோ இருக்கேன்." ஜனாவிற்கு நான் பேசுவது கேட்கிறது எனக்கு கேட்கவில்லை. நான் பசியில் இருப்பதை புரிந்து கொண்ட டிரைவர் மேடம் அர்ச்சனா ஹோட்டல் இருக்கு சாப்பாடு நல்லா இருக்கும் போய் சாப்பிட்டுவாங்க என்று நிறுத்தினார். எப்படி போய் தனியாக சாப்பிடுவது. சரி பார்சல் வாங்கி வந்துவிடலாம் என்று போனேன். பசியில் மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. கூட்டம் இல்லை 2 தோசை ஆர்டர் ஒன்று பார்சல் வாங்கிக்கொண்டு, ஒன்று சாப்பிட்டேன்.

ரயில் நிலையத்திற்கு வந்து உட்கார்ந்து நேரம் பார்த்தால் 8.30 , எனக்கு ரயில் இரவு 11.45. ஜனா என்னை பார்க்க ரயில் நிலையம் வருவதாக சொன்னதால் வெளியிலேயே காத்திருந்தேன். 9.00 இருக்கும் வந்தார்கள், வந்தும் வராமல் "வாங்க பசிக்குதுன்னு சொன்னீங்க இல்ல ஹோட்டல் போலாம்". மிக கேவலமாக பார்த்து சிரித்தேன்.. "அப்போ பசிக்குது சொன்னா இப்ப வந்து நிக்கறீங்க.? .சரி வேலையைவிட்டு நேராக வரூவீங்கன்னு உங்களுக்கு நான் தோசை வாங்கி வந்து இருக்கேன். சாப்பிடுங்க." என்றேன். அதற்குள் எஸ்.எம்.எஸ்;ல் என் தோழி, ஜனாவை வீட்டுக்கு போய் சாப்பிட சொல்லு, நீயே அந்த தோசையையும் சாப்பிடு ஒரு தோசை உனக்கு பத்தாது என்று அனுப்பி இருந்தாள். அதை ஜனாவிடம் காட்ட... "யார் அவ, புது பிரண்டா...எவ்வளவு நாளா பிரண்டு.. என்ன பண்றா எங்க இருக்கா..??? " ஜனா "வாயை மூடிட்டு சாப்பிடுங்க.. " என்றேன். சாப்பிட்டு முடித்தவுடன் மீதம் இருந்த..சாம்பார், சட்னியை கட்டி அந்த ரெஸ்ட் ரூம் டேபிள் மேல் வைத்தார். ஜனா மணி 9.30 ஆக போகுது இதற்கு மேல் இதை யாரும் சாப்பிட மாட்டார்கள் குப்பை தொட்டியில் போடுங்கள் என்றேன். இல்லை சாப்பிடுவாங்க வேஸ்ட் பண்ண வேண்டாம்..என்றார்.

ஜனா..சொல்லிக்கிட்டே இருக்கேன்.. அது கெட்டு போய் நாற்றம் அடிக்கும், ஏன் இப்படி இருக்கீங்க.. ? குப்பை தொட்டியில் போடுங்க..ன்னு சொல்றேன் இல்ல...

நான் உங்க ஃபிரண்டு கவிதா.. உங்களின் மிரர்... உங்கள மாதிரித்தான் இருப்பேன்... ... வீணா போவது யாராவது பசிக்கறவங்க சாப்பிடுவாங்க இல்லையா...? எவ்வளவு பேரு இது இல்லாம கஷ்டப்படறாங்க.. என்னை திட்டினா உங்களை திட்டறமாதிரி அதனால திட்டாதீங்க.. சரியா.. :)))

இருவரும் ஒன்றாக சிரித்தோம்...

நேரம் ஆகிவிட்டது wife காத்திருப்பாங்க.. பத்திரமாக போங்க என்று சொல்லிவிட்டு சென்ற அந்த தோழன் என் தோழன் என்று சொல்லிக்கொள்வதில் எத்தனை பெறுமை எனக்கு......

அணில் குட்டி அனிதா: ம்ஹிம்... கவிதா மாதிரி கதை அளக்க யாராலும் முடியாதுடி.. சரி நீங்க இரண்டு பேரும் கர்ணனும், துரியோதனனும் மாதிரி சொல்லுங்க.. ஆனா நீங்க லேடி யாச்சே... வேற எப்படி சொல்லலாம்... வேற 2 பேரு இருக்காங்க சொல்லவா...? சொன்னா கோச்சீபீங்க வேணாம் உடுங்க...

பீட்டர் தாத்ஸ்: Who finds a faithful friend, finds a treasure. -- Jewish Saying

அழகே அழகு தேவதை..............................

அழகு !! அழகு என்றாலே பெண்ணுக்கு தான் முதல் முக்கியத்துவம். பெண்களில் இரண்டு வகை. ஒன்று அழகாக இருப்பவர்கள், இரண்டாவது அழகாக இருக்கிறோம் என்று தன்னை நினைத்துக்கொள்பவர்கள்.

அதில் முதல் வகை- இவர்களுக்கு அழகாக இருக்கிறோம் என்ற கர்வம், எல்லோரும் தன்னை கவனிக்கிறார்கள் என்ற கர்வம் இருக்கும், அதுவும் எல்லா அழகான பெண்களுக்கும் இருக்குமா என்றால், இல்லை என்றே சொல்லுவேன். பலர் அழகை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்வார்கள். பொதுவாக அது அவர்களுக்கு பழகிவிடும்.

இதில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் தான் பிரச்சனையே... தான் அழகு என்று நினைத்து இவர்கள் அணியும் ஆடையும், செய்துக்கொள்ளும் அலங்காரமும் அல்லது இவை எதுவுமே இல்லாமல் ஏதோ ஒரு விதத்தில் அடுத்தவர்களை பயமுறுத்துவதுமே வாடிக்கை. நிறைய பெண்கள் தங்களுக்கு பொருந்தாத நிறத்தில் உதட்டு சாயம், முகத்தில் மேக்கப், பொருத்தமில்லா நகைகள், பொருத்தமில்லா நிற உடைகள் என்று தன்னை அழுகு செய்துக்கொள்ள வேண்டும், அவர்களை அடுத்தவர்கள் பார்த்து பேசவேண்டும் பழகவேண்டும் என்ற தீவிர எண்ணத்தில் அடுத்தவர்கள் அவர்கள் பக்கமே வர பயப்படும்படி செய்து விடுவார்கள். அவர்களை பார்க்க பாவமாகத்தான் இருக்கும்.

இதில் இன்னொரு வகையும் உண்டு. தன்னை ஆடை மற்றும் நகைகளால் அலங்காரம் செய்து கொண்டு தன் குடும்ப கெளரவத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று தீவிரமாக இருப்பார்கள். ஒரு முறை எங்கள் வீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து இருந்தேன். அந்த பெண் அவள் அணியும் நகை மற்றும் ஆடைகள் தான் வெளி இடங்களுக்கு/விஷேஷங்களுக்கு செல்லும் போது தன் கெளவரவத்தை நிலைநிறுத்துவதாக கூறினாள். நான் அவளுக்கு புதியவள். அவள் பேச பேச அவளின் அடிப்படை குணம் என்ன என்று தெரிந்தது. தான் எப்போதுமே சரவணா, சென்னைசில்க்ஸ், போத்தீஸ் போன்ற கூட்டம் நிறைந்த சாதாரண கடைகளில் சென்று உடைகள் எடுப்பதில்லை என்றும், ஆர்.ம்.கேவி, கோலபஸ், நாயுடுஹால் போன்ற கூட்டமில்லாத உயர்தர, தரமான கடைகளில் சென்று எடுப்பேன் என்றாள். நானாக எதுவுமே கேட்காமலேயே தான் அணிந்துள்ள ஆடையின் விலை ரூ 2000 என்று சொன்னவுடன் தான் நானும் அந்த பெண் அணிந்திருந்த ஆடையை மேலும் கீழுமாக கவனித்தேன். :)))) (பேச்சுக்கே இடம் இல்லை விடுங்கள்). அதில் குறிப்பிட்டு சொல்ல என்ன இருக்கிறது என்றால் அவளின் அழகு. ???? !! :))) இரண்டாம் ரகத்து பெண் என்று புரிந்தது. இப்படி பெண்கள் பேசுவதும் கூட அழகை அடிப்படையாக கொண்டே. 2000 என்ன 10000 ரூபாய்க்கு ஆடை அணிந்தாலுமே அது அவர்களுக்கு எடுப்பாக இருக்கிறதா? தனக்கும் தன் நிறத்திற்கு, தோற்றதிற்கும் பொருத்தமாக இருக்கிறதா? என்று தெரியாமல் இருக்கிறார்களே என்று தோன்றும்.

எல்லோருக்குமே நாம் அழகாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கம். அழகு என்ற எண்ணமும் கூட இருக்கும் ஆனால் தன்னை தானே கண்டிப்பாக ஒரு மதிப்பீடு இருப்பது எப்போதும் நமக்கு நல்லது. கருப்பாக இருக்கும் ஒருவரை பார்த்தால் அடையாள்ம் சொல்ல அவருடைய கலரை தான் எல்லோரும் முதலில் உபயோகப்படுத்துவார்கள் இல்லையா?. கருப்பாகவும், சாதாரண தோற்ற பொலிவு கூட இல்லாத ஒருவரை அவர் மனது கஷ்டப்படும் என்று வெளியில் சொல்லாவிட்டாலும் மனதில் கண்டிப்பாக நாம் எல்லோருமே அவரின் தோற்றத்தைப்பற்றி நினைத்துக்கொள்ளாமல் இருப்பதில்லை. யாரையுமே முதலில் கவருவது அவரின் தோற்றமே. அதன் பின் அவரின் உடல் மொழி, சிரிப்பு, பணிவு போன்ற சில அடிப்படையில் அமைந்த மனிதர்களை எளிதில் பிடித்துவிடும். இதுவும் அவர்களின் அழகு என்றே சொல்லலாம். கடைசியாக அவரிடம் பழக பழகத்தான் நமக்கு அவரின் குணம் தெரிய ஆரம்பிக்கும். சிலரை பார்க்கும் போதே பிடிக்காமல் போகும் அதற்கு காரணங்கள் கூட நமக்கு தெரிவதில்லை.

இதில் என்னை பொறுத்தவரை "அழகு" என்பது அவரவரின் பார்வையிலும், மன முதிர்ச்சியையும் பொறுத்துதான் இருக்கும். முதிர்ச்சி அடைந்த யாருக்கும் அழகு ஒரு பெரிய விஷயம் இல்லை. அறிவும், மனதும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை எந்த அசந்து போக வைக்கும் அழகியோ, அழகனோ நம்மை கவரமுடியாது, அதே போல் எவ்வளவு மோசமான தோற்றத்தில் இருந்தாலும் நம்மால் அவர்களை வெறுக்க முடியாது. சில சமயங்களில் முதிர்ச்சி அடைந்தவர்கள் ரசனை அற்றுபோகிறார்களா என்று கூட நான் நினைப்பதுண்டு. என் நண்பர் ஒரு உதாரணம் , அவர் காதலித்த பெண் தோற்றத்தில் மிக மிக சுமார் ஆனால் அவருக்கு பிடித்து இருந்தது... எனக்கு இன்னமும் அவரின் ரசனை மேல் சந்தேகம் இருக்கிறது. உடல் அழகக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று என் அறிவுக்கு எட்டினாலும், இன்னமும் அந்த கேள்வி இருந்துக்கொண்டே இருக்கிறது. அவரிடம் ஒருமுறை உங்களுக்கு பெண்களை ரசிக்க தெரியுமா? என்று கூட கேட்டுவிட்டேன்... அவரிடம் இருந்து பதில் இல்லை என்றாலும் என்னுடைய அதிகபிரசங்கி தனமான கேள்விக்கு அவரின் ரசனையை நாம் தவறாக நினைத்துவிட்டோமோ என்று அவரிடமே மன்னிப்பும் கேட்டேன்.

என்னுடைய சிந்தனையை ஒத்த, எதிர்பார்ப்புகள்,விருப்பங்கள், சாப்பிடும் உணவுகள், விருப்பமான கலர் என்று எல்லாவற்றலும் என்னை ஒத்த ஒருத்தர், அவருக்கு பிடித்த (தோற்றத்தில்) ஒரு பெண்ணை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. (தோற்றத்தில் தான்). ஏன் அவருக்கு பிடித்தது, எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு இன்னமும் எனக்கு விடை தெரியவில்லை. அவர் மனம் வேதனைப்பட்டு விடுமோ என்று அவரிடம் இன்னமும் கேட்கவில்லை.

அழகு ....கூகுலில் தேடி பிடித்த அழகு பற்றிய சில குறிப்புகள்..
1. எதை அழகு என்கிறோம்.? தனிப்பட்ட கருத்தாக பார்க்காமல் பொதுவாக பார்த்தால், பெண்ணின் அழகை மிக தெளிவாக இங்கே குறிப்பிட்டு உள்ளார்கள்.

2. நாம் எல்லோருமே வெளிதோற்றத்தை தான் சட்டென்று கவனித்து ஒருவர் அழகாக இருக்கிறார்கள் என்கிறோம். ஆனால் வெளிதோற்றம் + உள் தோற்றம் (குணம்) இரண்டும் சேர்ந்ததுதான் அழகு. இதில் முதலில் பிறரை கவர்வது வெளிதோற்றம், சிரிப்பு, பேச்சு. மிக அற்புதமாக அழகு இங்கே விளக்கப்பட்டுள்ளது.

அணில்குட்டிஅனிதா:- கவி கேக்கறனேன்னு தப்பா நெனக்கப்பிடாது... இந்த அழகு பதிவுக்கும் உங்களுக்கும் என்னா சம்பந்தம்... தரண் அண்ணாச்சி.. அம்மணிய கொஞ்சம் கவனிங்க.. ... இது எல்லாம் நானும் நீங்களும் மட்டுமே பேசக்கூடிய ஒரு சேப்டரு...இல்லையா??

பீட்டர் தாத்ஸ் :- Beauty comes as much from the mind as from the eye. ~Grey Livingston

I I T - Coaching புத்தகங்கள் வாங்கமுடியாத மாணவர்கள் கவனத்திற்கு...

பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி கோச்சிங் புத்தங்கங்கள் தேவைப்படலாம். இந்த புத்தகங்களை வாங்க வசதியில்லாத மாணவ, மாணவிகள் யாராவது இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். இணைய நண்பர்களும் உங்களுக்கு தெரிந்த, புத்தகங்கள் வாங்க வசதி இல்லாத மாணவர்களுக்காக இந்த உதவியை செய்யவும். இரண்டு வருட "டைம்'ஸ்" இன் ஐ.ஐ.டி கோச்சிங் புத்தகங்கள் உள்ளன.

கண்டிப்பாக புத்தகங்கள் வாங்க வசதி இல்லாத மாணவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.

என்னுடைய ஈமெயில் :gkavith@gmail.com

அணில் குட்டி அனிதா:- ம்ஹீம்... எனக்கு அமெரிக்க இங்லீஸ் படிக்கணும்..யாராச்சும்..ஓசியல டியூஷன் எடுப்பீங்களா.. ...? ஒரு டீச்சர் எனக்கு பாடம் எடுத்தாங்க.. சடன்னா.. ஹே..அணிலு... நீ நான் வர வரைக்கும் 1, 2, 3 கவுண்ட் பண்ணுன்னு சொல்லிட்டு போனாங்க ஆளயே காணோங்க.. நானும்.. ஹே 1 னு.., ஹே 2 வூ..ஹே 3 ஈஈ..ன்னு எண்ணிக்கிட்டே இருக்கேன்.... !! :(((

பீட்டர் தாத்ஸ்.: Education is a progressive discovery of our own ignorance.- Will Durant

Double Game எப்படி விளையாடுவது????

அணில் குட்டி அனிதா:- கவிதா வை ரொம்ப நல்லவங்க.. வல்லவங்க.. நியாமானவங்க.. அப்படின்னு ஊரு உலகத்துல பேசிக்கறாங்கன்னா... அதான் இல்லீங்கோ... சமீபத்தில் தெரிஞ்சவங்க ஒருத்தங்க அவிங்க எப்படி எல்லாம் டபுள் கேம் விளையாடாறாங்கன்னு அவங்களுக்கு புரிய வச்சாங்க பாருங்க.. அசந்து போன கவிதா, கண்டுபிடிச்சவங்க அறிவையும், புத்திசாலித்தனத்தையும் கண்டுக்குனு இன்னமும் டைலி ஒரே பாராட்டு மழத்தான் போங்க.. சரி எனக்கு தெரிஞ்சி இவிங்க ஆடின டபுள் கேம் ஐ இப்ப பாக்கலாம்..

HEL(L)met ஆல் வரும் பிரச்சனைகள்' னு நடுவுல ஒரு பதிவப்போட்டு எல்லார் உயிரையும் எடுத்தாங்க இல்ல.. அதுக்கு அப்புறமும் HEL(L)met போடாமத்தான் வண்டி ஓட்டனும்னு முடிவு பண்ணி அப்ப்டியே போய்கிட்டு இருந்தாங்க.. ஒரு நாளு ஹால்டா சிக்னல் கிட்ட நம்ம போலிஸ் மாமாங்க.. கவிதாவை வளச்சி புடிச்சாங்க... கவிதாக்கு ஒன்னும் பிரியல.. ஓ..லேடீஸ்'ஐ கூட இப்ப எல்லாம் விடறது இல்லையா.ன்னு மனசுல நெனச்சிக்கிட்டு....

கவி :- என்ன சார்...

போலிஸ் மாமா:- ஹெல்மெட் எங்கம்மா?

கவி :- வீட்டுல இருக்கு சார் (புத்திசாலித்தனமா பதில சொல்றாங்களாமா...)

போலிஸ் மாமா:- ஓ வீட்டுல வச்சிட்டு நீ ஏம்மா வந்த?? ரூல்ஸ் தெரியாதாம்மா..? சிரியல் பாப்பியே நீயூஸ் பாக்கறது இல்லையோ..? அங்க கொஞ்சம் திரும்பி பாரும்மா உன் ஃபிரண்டு ஒன்னமாதிரியே வந்து பணம் கட்டது..

(என்னா இவரு டூ மச்சா பேசறாரு?? (கவி'க்கு அவங்க மட்டும்தானே பேசனும்,அடுத்தவங்க பேசினா எப்பவும் டூ மச்..!! ) .யாரது என் ஃபிரண்டு..?? ஒன்னியும் பிரியாமல் கவி வேகமா திரும்பி பாத்தாங்க, அங்க ஒரு பொண்ணு இன்னொரு போலிஸ் மாமாவிடம் மொய் எழுதிக்கிட்டு இருந்துச்சி... அதை பாத்தவுடனே..ஆஹா பணம் பாக்காம விடமாட்டங்க போல... சரி அவரு ஒரு முடிவுல இருந்தா நாமலும் ஒரு முடிவுல இருக்கலாம்னு.. டயலாக் டெலிவரி பண்ண ஆரம்பிச்சாங்க..)

கவி : :((((.... ...சார்...சார்... HEL(L)met போட்டா எனக்கு காது கேக்கல சார்ர்ர்ர்.......(மொகத்த ரெம்ப பாவமா வச்சிக்கிட்டு இருந்தாங்க.., நீங்க யாராச்சும் அந்த மூஞ்சிய பாத்திங்க. அய்யோ கவிதா ன்னு அழ ஆரம்பிச்சி இருப்பீங்கன்னா பாருங்களேன்...)...

போலிஸ் மாமா: எ..எ.....என்னது..? (அவருக்கு இப்ப காது கேக்காம போச்சி..)..காது கேக்கலையா.. இது என்னா புது மேட்டரா இருக்கு...??? எந்த காதுமா.?

கவி:- (ஓ இவரு டூ இன் ஒன் போல.. டாக்டர் +போலிஸ் ஸோ..?? ) இரண்டு காதுமே கேக்கல சார்ர்ர்...(நோட் அதே பாவமான மூஞ்சி) HEL(L)met போட்டா பின்னாடி வர வண்டி ஹாரன் அடிச்சா கேக்கல.. முன்னாடி போற வண்டி நிக்கும் போது பிரேக் போட்டா சத்தம் கேக்கல.. போய் போய் இடிச்சி அடிக்கடி ஆக்ஸிடன்ட் ஆகுது சார்.. .அதுக்கு பயந்துதான் HEL(L)met போடறதில்ல சார்ர்ர்....

போலிஸ் மாமா:- தலையை வேகமாக சொறிந்தார்.... (பொடுகு நிறைய இருக்கும் போல) என்னப்பா இது புது கேஸ்'ஸா இருக்கு..ன்னு தூரத்துல இருந்த இன்னொரு மாமாவை கூப்பிட்டாரு.... இங்கப்பாருப்பா.. இவங்களுக்கு HEL(L)met போட்டா காது கேக்கலையாம்.. போட்டும் ட்ரை பண்ணாங்களாம்.. ஆக்சிடன்ட் ஆச்சாம்.. என்ன பண்ணலாம் சொல்லு..

கவி :- முகத்தை இன்னும் கொஞ்சம் பாவமா வச்சிக்கிட்டு... ஆமா சார் நெஜம்தான் சார்.. நெஜமாவே காது கேக்கல சார்...

போலிஸ் மாமா 2 :- ஏம்மா HEL(L)met போடாட்டி கேக்குதா?

கவி:- (ஆஹா கொக்கி போடாறாங்கப்பா..).. ஏதோ கேக்கும் சார்.. ரோடுல வண்டி ஓட்டற அளவுக்கு கேக்கும் சார்..ஆனா..HEL(L)met போட்ட சுத்தமா கேக்கல சார்...

(ரெண்டு பேரும் கொஞ்சம் தள்ளிப்போய் ஏதோ பேசினார்கள்... கவி'யும் காதை நல்லா தூக்கி என்ன பேசறாங்கன்னு கவனிக்க ஆரம்பிச்சாங்க... மாமா 1 :- யோவ் பாவம்யா காதுகேக்காத பொண்ணுபோல விட்டுடலாம்.. ..மாமா 2 :- சரி சரி வுடு.. இதுக்கிட்ட டைம் வேஸ்ட் பண்ணாம அடுத்த ஆள கவனி...)

போலிஸ் மாமா 1 :- சரிம்மா.. நீ கிளம்பு நல்ல டாக்டரா பாரும்மா..HEL(L)met அ போட்டு எங்கையும் ஆக்சிடன்ட் பண்ணிடாதம்மா...

கவி :- சரிங்க சார்ர்ர்ர்...ரொம்ப தாங்ஸ் சார்... (சேம் ஃபேஸ் மெயிண்டனிங்கு....!! ) தூரத்தில் இருந்த போலிஸ் மாமா-2 வை திரும்பி பாத்து சிரிச்சி...(தேவையா???) ரொம்ப தாங்ஸ் சார்...

அடுத்த வினாடி அங்க வண்டி நிக்கல.. கிளம்பினவங்க தான்..வீட்டுல வந்து நின்னு..ஸ் ஸ் ஸ்யப்பா.... ஒரு வழியா காசு கொடுக்காம தப்பிச்சோம்..ன்னு பெருமூச்சி விட்டாங்க..

வீட்டில் :- தன்னுடைய சாமார்த்தியத்தை புள்ளக்கிட்ட சொல்ல.. புள்ள என்ன சொன்னான்னு கேட்டுட்டு நீங்களும் கவி'ய அதே கேள்விய கேட்டுட்டு போங்க..ஓகே..

புள்ள :- அம்மா.. இனிமே..நீ...... இவன் ரூல்ஸ் ஃபோலோ பண்ணல..அவன் ரோட்ல குப்பைக்கொட்டறான்.. இவன் லஞ்சம் வாங்கறான்.. அவன் சாக்கடைய ஒழுங்கா கட்டல.. இவன் மரத்தை வெட்டிட்டான்னு , அவன் ஒழுங்கா சினிமா எடுக்கல..ன்னு வந்து நியாயம் பேசனைன்னு வை...... .. இல்ல இனிமே நீ பேசித்தான்..பாறேன்..!!!

கவி :- டேய்..!! நிஜமாவே எனக்கு காது கேக்கலடா...

புள்ள :- ஹும்...என்கிட்டயேவா... சரி வா டாக்டர் கிட்ட போய் கேக்காத அந்த நொல்ல காதை நோண்டி எடுத்துடலாம்... உனக்கு அது இருந்தா என்ன இல்லன்னா என்ன...??

கவி : (தி எஸ்கேப்பு...........!)

பீட்டர் தாத்ஸ் :- For every beauty there is an eye somewhere to see it. For every truth there is an ear somewhere to hear it. For every love there is a heart somewhere to receive it.”

மயலாப்பூரில் மாட்டிக்கிட்டேன்....

நேற்று அலுவல் வேலையாக மயலாப்பூர் செல்ல நேரிட்டது.. ஏன் போனோம் என்றாகிவிட்டது. டிரைவரோ' மேடம் 2 நாட்களாக இந்த பகுதியில் கோயிலை சுற்றியுள்ள சாலைகள் அடைக்கப்பட்டு விட்டன. உள்ளே செல்ல முடியாது, வண்டியை இங்கேயே நிறுத்திவிடுகிறேன், நீங்கள் வேலையை முடித்துவிட்டு ஃபோன் செய்யுங்கள் வருகிறேன் என்றார்.

என்ன கொடுமைப்பா இது, சென்னையில் இருந்தாலும் எல்லா இடங்களும் பழக்கப்படாத நிலையில் அதுவும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போலிஸ், போலிஸ், போலிஸ்.. மக்கள் வண்டிகளுடன் வேறு வேறு பாதைகளுக்கு சென்று முயன்றாலும் போலிசாரால் தடுக்கப்பட்டு திருப்பி விடப்பட்டவாறே இருந்தனர். இப்படி ஒரு கூட்ட நெரிசலான இடத்தில் என்னத்தான் நடக்கிறது இங்கே..என்றுப்பார்த்தால்.. கட்சிக்கூட்டம்.. :))

மக்கள் நடமாட்டம் குறைந்த இடத்தில் அரசு கட்சிக்கூட்டங்களை வைக்கக்கூடாதா? ஒரு வழி, ஒரு வழி என்று வளைந்து வளைந்து வீடு வருவதற்குள்.... நடுராத்திரி ஆகிப்போனது.. இதில் போக்குவரத்து நெரிசலில் பொறுமை இழந்து ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு கொண்டதும் பார்க்கமுடிந்தது.

இன்றைய நாட்களில் தினமும் வேலைக்கு சென்று திரும்புவதே சிரமமாக இருக்கும் போது, இப்படி மக்கள் அதிகமாக புழங்கும் இடத்தில் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு.. மயிலாப்பூர் மக்கள் எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை.

நிஜமாகவே மயலாப்பூர் ஏரியா எனக்கு புதிது என்பதால் வழித்தெரியாமல் திக்குமுக்காடி போனேன். கோயிலை தவிர எங்குமே சென்றதில்லை. தோழிக்காக ஒருமுறை முண்டக்கண்ணி அம்மன் கோயில் சென்றேன்.. கேட்டு கேட்டு கண்டுப்பிடித்து போனேனே தவிர இன்னொரு முறை போகச்சொன்னால் திரும்பவும் கேட்டு கேட்டுத்தான் செல்லவேண்டும், அப்படி நெருக்கமான தெருக்கள்..மக்கள் கூட்டம். வாகனங்களில் சாதாரணமான நாட்களில் செல்வதே கடினம். ஒரு நோக்கத்தோடு சென்றதால் அப்போது என்னவோ சிரமம் தெரியவில்லைதான், ஆனால் நேற்று வேண்டாம்ப்பா மயிலாப்பூர்....!!!

அணில் குட்டி அனிதா:- ஆமாண்டா.. அடுத்த "அம்மா" இவிங்கத்தான் இவிங்க எங்க போறாங்கன்னு பாத்து ஊறடங்கு உத்தரவு போட்டு பட்டு விரிப்பு வரவேற்ப்பு வைங்கப்பா... நாட்டுல அவன் அவன் நடக்க இடம் கிடைச்சுதே அதுவே போதும்னு நெனச்சி சந்தோஷப்படறான்.. இவிங்க என்னான்னா...

பீட்டர் தாத்ஸ் :- Before the beginning of great brilliance, there must be chaos. Before a brilliant person begins something great, they must look foolish in the crowd

பொன்ஸ் : தோழியா, உடன் பிறந்தவளா..யாரடி நீ பெண்ணே..???

பொன்ஸ் எல்லோரும் அறிந்த ஒரு பதிவர், இவரை கண்டாலே எனக்கு எப்போதும் பிடிக்காது... :))) அல்லது என்னை கண்டாலே அவருக்கு பிடிக்காது.. :)) இதில் எதில் உண்மை என்று எங்களுக்கே தெரியவில்லை. அவருக்கு பரிந்து என்னை திட்டி எழுதிய சில பதிவுகளை நான் படித்திருக்கிறேன். இருவருமே பெண்களுக்காக அதிகமாக பேசும் பதிவர்கள் என்றாலுமே எனக்கும் அவருக்கும் எண்ணங்களில், கருத்துக்களில் நிறைய வேறுபாடுகள் உண்டு. நிறைய நிறைய உண்டு.

பொன்ஸ்' சில மலரும் நினைவுகள். முதல் முதலில் நான் இந்த ப்ளாக் உலகத்திற்கு வந்தபோது பதிவர் பாலா (பாரதி) அவர்கள் பொன்ஸ்' ஐ எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். பொன்ஸ் என்னிடம் முதலில் கேட்ட கேள்வி நான் உங்களுக்கு எப்படி உதவமுடியும் என்று நினைக்கிறீர்கள்?. பெயரை பார்த்து அவர் ஒரு ஆண் என்றே நினைத்தேன். :)) அப்போது எல்லாம் ப்ளாகில் அவர் பெயர் இல்லாத இடமே இருக்காது. எல்லோரும் "பொன்ஸ் அக்கா" என்றுதான் அழைப்பார்கள். எனக்கோ பொறாமையாக இருக்கும் என்ன ஒருவரும் நமக்கு மரியாதை கொடுக்க மாட்டேன் என்கிறார்களே. .எல்லாவற்றிக்கும் இந்த அணிலு தான் காரணம் என்று நினைப்பேன். அதையும் பாலாவிடம் சொல்லி அவர் அக்காவென்று அழைக்க ஆரம்பித்தார்.

பொன்ஸ்' ஸுடன் ஜி-டாக்கில் அதிகமாக பேசியிருக்கிறேன். என்னின் தனிப்பட்ட எண்ணங்களை புரிந்துகொண்டு இருக்கிறார், தனிமனித நேயம் அவரிடம் அதிகம் பார்த்திருக்கிறேன், என் ஆதாங்கங்களை புரிந்து பதில் சொல்லுவார். ஒரு பெண்ணாக என்னால் உங்களை புரிந்து கொள்ள முடிகிறது கவிதா என்பார். ஒரு பிரச்சனை வநத போது "கவிதா நீங்கள் எல்லோரையும் எளிதாக நம்பி விடுகிறீர்கள்", எளிதாக உங்களை ஏமாற்றலாம் !! , அதனால் ஜாக்கரதையாக இருங்கள் என்றார். இது எந்த அளவு உண்மை என்பதை அடிக்கடி இப்போதும் உணருவேன். ஏமாற்றுபவர்கள் இன்னும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், நானும் ஏமாந்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

பொன்ஸ்'க்கு பிரச்சனை என்ற போது நான் என்ன செய்தேன்..என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. அமெரிக்காவிலிருந்து என்னுடன் பேசினார், மிக தைரியமாக இருந்தார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் அந்த சூழ்நிலையில் என்ன செய்து இருப்பேன் என்று தெரியாது ஓவர் ரீயாக்ட் செய்து எல்லோரையும் பயமுறித்து ஒருவழி ஆக்கியிருப்பேன்.

அவரிடம் பிடித்ததை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன்.. எனக்கு பிடிக்காத விஷயங்கள் உண்டு அவையும் கருத்துக்களுடன், எண்ணங்களுடன் மட்டுமே நிற்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் பிரச்சனை என்று பலர் நினைத்து வருகிறார்கள் அதனை விளக்கவே இந்த பதிவும். ஒரு பதிவர் சொல்லுவார், "உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உங்கள் உடன் பிறவா சகோதரி ஓடோடி வருகிறார்களே? எவ்வளவு பாசம் அவர்களுக்கு? எங்களை கண்டுக்கொள்ள ஆள் இல்லை" என்பார்.

பலருக்கு பல விஷயங்கள் எளிதில் புரிந்துவிடுவதில்லை.. இப்படி சொல்லி புரியவைத்தால் மட்டுமே உண்டு... on the paper..!! in Black & white....:)))))))))

அவர் இப்போது எங்கு எப்படி இருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை... ஆனால் அவரைப்பற்றி பல சமயங்களில் நான் நினைவுகூறுகிறேன் என்பது மட்டும் நிஜம்...இன்னும் பொன்ஸ்' ஐ போன்று என் நெஞ்சத்தில் சில நண்பர்கள் வந்து போய் கொண்டுத்தான் இருக்கிறார்கள்..... :))

அணில் குட்டி அனிதா:- சரி இப்ப என்னா மேட்டர்...எதுக்கு இப்ப பொன்ஸு அக்காக்கு இத்தன ஐஸ் பொட்டி...???? எனக்கு பிரியல ..மக்கா உங்களுக்கு பிரியுதா? .. பொன்ஸ் யக்கா உனக்காது பிரியுதா பாருக்கா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ப்பா..முடியல இந்த அம்மணியோட ...!!

பீட்டர் தாத்ஸ் :- "The most I can do for my friend is simply to be his friend." -- Henry David Thoreau

எங்க வீட்டு சமையல் : கேழ்வரகு உணவுகள்


கேழ்வரகு என்றாலே தமிழர்களின் உணவு, என்னுடைய ஆயா கேழ்வரகு மாவில் கஞ்சி, கூழ், களி, அடை, புட்டு செய்வார்கள், திருமணம் ஆனப்பிறகு
தோசையும், இட்லியும் செய்ய நானேக்கற்றுக்கொண்டேன். very very delicious healthy food!!

கேழ்வரகு மாவு தயாரிக்கும் முறை :  கேழ்வரகு வாங்கி தண்ணீரில் ஊறவைத்து, 10-15 முறையாவது கழுவவேண்டும், பின்பு சில காசுகளை (1 ரூ, 50 பைசா நாணயங்கள்) போட்டு அதில் கலந்துள்ள கல்நீக்க அரிக்கவேண்டும். இந்த காசுகள் கேழ்வரகில் கலந்து இருக்கும் கற்கலை தனியாக எளிதில் பிரிக்க உதவும். நன்கு தண்ணீரை வடிக்கட்டி வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்

கேழ்வரகு அடை:-

தேவையான பொருட்கள் :-

கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: 2
முருங்கைகீரை : 1 கப் (ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்)
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்:- தேவைக்கேற்ப

செய்முறை:- வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நடுவே பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும் கடைசியாக கீரையை போட்டு கரண்டியை திருப்பி பிடித்து கரண்டிக்காம்பால் கீரையை வதக்கவும். இதனால் கீரை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் எளிதாக வதக்கவரும்.

வதங்கியவுடன் இதை அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரத்துணியை நன்கு பிழிந்து போட்டு இந்த மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டவும். தட்டிய அடைகளை அப்படியே தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும். சூடான சூப்பர் கேப்பம் அடை ரெடி..!!

கேழ்வரகு தோசை & இட்லி : 

தேவையானப்பொருட்கள் : 
கேழ்வரகு மாவு 2 கப்
உளுந்து : 1/2 கப்
வெந்தயம் : 1/4 ஸ்பூன்
உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை : உளுந்தை வெந்தயம் சேர்த்து 2-3 மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுப்போல கிரைண்டரில் அரைத்து, அத்துடன் அடைமாவு பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டிமுட்டி இல்லாமல் கேழ்வரகை கரைத்து ஊற்றி உப்புப்போட்டு கரைத்து வைத்துவிடவும். அடுத்தநாள் காலையில் சாதாரண தோசை, இட்லி  செய்முறையில் செய்யலாம். தோசைக்கு தண்ணீர் கொஞ்சம் கூடுதலாக ஊற்றி கரைத்து ஊற்றலாம்.
இதற்கு தொட்டுக்குள்ள பொட்டுக்கடலை சட்னி, தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.

கேழ்வரகு புட்டு:-

தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு மாவு:-
உப்பு: 3 சிட்டிகை
சர்க்கரை :- தேவையான அளவு
தேங்காய் துருவல் :- தேவையான அளவு

செய்முறை:- இது கொஞ்சம் சிரமம் நேரம் பிடிக்கும். கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும். இட்லி தட்டில் துணிப்போட்டு, பின் சல்லடையை அதன்மேல் பிடித்து இந்த மாவை அதில் வைத்து தேய்க்கவேண்டும். மாவு கட்டி கட்டியாக ஆகாமல் மெல்லியதாக விழும். அதை அப்படியே இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்து தட்டில் கொட்டி, தேங்காய் துறுவல், சர்க்கரை போட்டு கலக்கி பரிமாறவும்.

இதில் சலிப்பது கொஞ்சம் நேரம் பிடிக்கும், அப்படி செய்யாமல் நேராக தண்ணீர் விட்டு பிசைந்து வேகவைத்தல் கட்டி கட்டியாக புட்டு நன்றாக வராது. 

அணில் குட்டி அனிதா:- ம்ம்க்கும்!!.. யாரும் இவிங்க வீட்டை காண்டாக்ட் பண்ண மாட்டீங்கன்னு, தைரியம்.. ஒரே ஒரு தரம் வூட்டுக்கு ஃபோன போட்டு அம்மணி புள்ளக்கிட்ட இந்த கேப்ப அடையை பத்திகேட்டுப் பாருங்க.. அவரு நீங்க இதப்பத்தி கேட்டதுக்கே உங்களுக்கு ஊதுவாரு சங்கு...!! .கவி பாவம்..ஒரு வாட்டிக்கூட புள்ள சாப்பிடாத அடைய முக்கி முக்கி முடியாம இவிங்களே சாப்பிடுவாங்க... !!

பீட்டர் தாத்ஸ் :- Make [food] simple and let things taste of what they are.

அனுராதா அம்மாவின் பிடிவாதமும், மறைவும்....

அனுராதா அம்மாவின் பதிவுகள் சிலவற்றை எப்போதோ படிக்க நேர்ந்தது.. அப்போதே எனக்கு அவரின் மேல் கோபம், சரி உடல் நிலை சரியில்லாதவர்கள் அவர்களிடம் போய் எதுவும் பேசவேண்டாம் என்று இருந்துவிட்டேன்.

அவர்கள் மறைவுக்கு பிறகு அவர் உயிருடன் இருக்கும் போதே என் கோபத்தை காட்டி இருக்கலாமே என்று தோன்றியது. கோபம் அவர் மேல் இருந்ததை விட அவர் உறவினர்கள் மேல் தான் அதிகமாக இருந்தது.

காரணம், சென்னையில் உள்ள கான்சர் மருத்துவமனைக்கு பல வருடங்களுக்கு முன் செல்ல நேரிட்டது, அங்கு நான் பார்த்த பலர் எல்லாவற்றையுமே அந்த நோயால் இழந்து இருந்ததது அவர்கள் முகத்திலும் உடல் நிலையிலும் தெரியவந்தது. கடவுளே இப்படிப்பட்ட கொடுமையான நோயை எனக்கு கொடுத்துவிடாதே என்று அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் வேண்டிக்கொண்டேன். நோயாளிகளுக்கு லேசர் முறையில் தரப்பட்ட சிகிச்சையால் அவர்கள் முகங்களில் கருப்பு அல்லது கரு நீல கலர்களில் கோடுகள். குறிப்பாக வெற்றிலை பாக்கு போடுவதால் வரும் கான்சர் அதிகமானதாக இருந்தது, அதுவும் நான் அங்கு பார்த்தவரையில் ஆந்திராவினை சேர்ந்த அல்லது தெலுங்கு பேசும் மக்கள் அதிகமாக இருந்தார்கள். தலையில் முடி எல்லாம் கொட்டிபோய் மொட்டைத்தலையாகவும், உடல் மெலிந்து ஒற்றை நாடி உருவமாகவும் நிறைய பெண்களை பார்க்க நேரிட்டது.

இப்படி 2-3 நாள் தொடர்ந்து நான் அங்கு சென்றதற்கே அந்த நோயின் பாதிப்பும் அதனால் அவர்கள் படும் அவஸ்த்தையையும் தெரிந்துக்கொண்டேன். ஆனால் அனுராதா அம்மாவின் உடன் இருந்த குடும்பத்தினர் எப்படி அவர் படும் அவஸ்த்தையைப் பார்த்துக்கொண்டு அவரின் பிடிவாததிற்கு துணை போனார்கள்? கடைசி வரை அவர் பிடிவாதத்துடன் இருந்தாரா என தெரியவில்லை. ஆனால் அவரின் பிடிவாதத்தை அவர் உறவினர்கள் நினைத்திருந்தால் பாசத்தால் கண்டிப்பாக கரைத்திருக்கலாம்.

இதற்கு முன்னர் கூட மார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல் என்ற பதிவில் பெண்கள் மார்பகங்களை இழந்தால் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று எழுதியிருந்தேன். ஆனால் அனுராதா அம்மா ஒன்றும் திருமணம் ஆகாத அல்லது திருமணம் ஆகி வாழ்க்கையை அனுபவிக்காதவர்கள் இல்லை. தன் வாழ்க்க்கையில் எல்லா கடமைகளையும் முடித்தவர்கள். அவரின் கணவர் மட்டுமே போதும் அவரின் மனதை மாற்றி அறுவை சிகிச்சைக்கு அவரை சம்மதிக்க வைத்திருக்கலாம்.

12- 15 வயது நிரம்பிய, 2 குழந்தைகளை பெற்ற தாய் தன் கற்பப்பையை கூட பிரச்சனை என்றால் எடுத்துவிடலாம் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். மார்பகங்கள் என்பது மிக சாதாரணமான பெண்மையின் அடையாளம் என்றே நான் சொல்லுவேன். குழந்தைக்கு பாலூட்டமட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் பெண்ணிற்க்கு தேவையில்லாத ஒரு உறுப்பு, ஆணுக்கு மட்டும் ஆசையை தீர்க்கும் உறுப்பு. மேலும் என்னுடைய பழைய பதிவில் சொன்னது போன்று செயற்க்கை முறையில் மார்பகங்கள் இருப்பதாக பெண்கள் காட்டிக்கொள்ளலாம். அதற்கான நிறைய உள்ளாடைகள் இப்போது வந்துவிட்டன. ஏன் சினிமா நடிகைகளும், டிவி காம்பயர்களும் சாதாரணமாக அவற்றை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அழகுக்கும் பெண்மைக்கும் சம்மந்தம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அசிங்கமான உடம்பில் எந்த அழுகுமே இல்லாத ஒரு பெண் குழந்தைகள் பெற்றவளாகவும், சிறந்த மனைவியாகவும், சிறந்த தாயாகவும் இருக்கமுடியும், இருக்கிறார்கள். எத்தனை அழகான பெண்கள் (இந்தகாலக்கட்டதில்) தான் பெற்ற குழந்தைக்கு உயிர்பால் கொடுக்கிறார்கள்?.. எனக்கு தெரிந்து இப்போது பெண்களுக்கு அதற்குக்கூட மருந்து மாத்திரை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுமே தாய்பாலா? வரவில்லையே! என்று சொல்லுபவர்கள் சதவிகிதம் அதிகமே. அவர்களே கொடுக்க ஆசைப்பட்டாலும் தாய்ப்பால் கிடைக்காமல் பிறந்த 1, 2 நாள் ஆன குழந்தைகள் புட்டி பால் குடிக்கும் மோசமான/கொடுமையான நிலைமைத்தான் இருக்கிறது. இதனுடைய காரணங்களைக்கூட தனிபதிவிடலாம்.

இப்படி இருக்க, அனுராதா அம்மாவோ எல்லா கடமைகளையும் முடித்த வயது முதிர்ந்த ஒரு பெண், அவர்களை கட்டாயப்படுத்தியாவது முதலிலேயே அறுவைசிகிச்சை செய்து இருக்கலாம். எப்படியும் இறப்பு ஆனால் எதற்கு இப்படி கஷ்டப்பட்டு வருத்திக்கொண்டு இறக்கவேண்டும்?. எல்லாம் விதி என்று நினைத்து விட்டுவிடமுடியாமல்... அனுராதா அம்மாவிற்காக இந்த பதிவு...

அணில் குட்டி அனிதா:- கவி நீங்க ஏன் கேன்சர் ஆஸ்பித்திரி போனீங்கன்னு சொல்லவே இல்ல........எதுக்கு யாருக்காவது அட்வைஸ் பண்ண போய் இருப்பீங்க. .சரி சரி எனக்கு தெரியாதா? நீங்க கொடுத்த அட்வைஸ் ல அவங்க கேன்சர் எவ்ளோ பெட்டர்னு நெனச்சி இருப்பாங்க... :(((

பீட்டர் தாத்ஸ் :-Cancer is a word, not a sentence. ~John Diamond

100 ஆஆஆஆஆஆ?

இது 100 ஆவது பதிவு.. இது வரைக்கும் என்ன எழுதியும் சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை.

இங்கு எழுத ஆரம்பித்து நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள், சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். 100 ஆவது பதிவை எழுதும் போது எனக்கு தோன்றியது இனி நிறைய எழுதவேண்டும், நடுவே எதற்காகவோ யாருக்காகவோ எழுதுவதில் தடைகள் இருந்தன.. ஒரு முறை இல்லை மூன்று முறை இனிமேல் எழுதவே கூடாது என்று நினைத்தேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தைக்கு எப்போதும் என்னுடைய எழுத்துக்கள் என்னுடைய நினைவுகளாக இருக்க வேண்டும் என்று நினைத்து தொடர்ந்து எழுத வேண்டும் என்று முடிவுடன் வந்துள்ளேன்.

100 என்றவுடன் சட்டென்று/பட்டேன்று நினைவுக்கு வந்த சில -

1. சச்சின் :))))))
2. போலிஸ்
3. 100 ரூபாய் அதில் காந்தி தாத்தாவின் சிரிப்பு
4. ரஜினிகாந்த் நடித்த ராகவேந்திரா..
5. கமல்ஹாசனின் ராஜபார்வை
6. பிளாகர்கள் எழுதும் அவர்களின் 100 ஆவது பதிவு....
7. 100 ஆவது நாள் - திரைப்படம்
8. எல்.கெ.ஜி யில் முழு ஆண்டு தேர்வில் ஆங்கிலோ இந்தியன் டீச்சரிடம் 100/100 என்று என்னுடைய சிலேட்டில் வாங்கிய மதிப்பெண். அதை அழிக்காமல் வீடு வரை கொண்டு வந்து காட்டி எல்லோரிடமும் முத்தம் பெற்றது.
9. பத்தாம் வகுப்பில் கணிதத்தில் 100 வாங்க முயற்சி செய்து 99 வாங்கி 1 மதிப்பெண்' ணில் 100 ஐ இழந்தது.
10. நமக்காக, நாட்டுக்காக உயிர் விட்ட ராணுவ வீரர்கள் பற்றிய பதிவர் சந்தோஷ்' சின் 100 ஆவது பதிவு.

உங்களுக்கு இந்த 100 என்ற எண்ணை பார்த்தவுடன் நினைவுக்கு வருவதை எழுதுங்களேன்...

அணில் குட்டி அனிதா : இந்த அநியாயத்த கேக்க ஆள் இல்லையா? எப்படிங்க இது அம்மணிக்கு 100 ஆவது பதிவாகும். கொஞ்சூண்டு லெப்ட் சைட் பாருங்க.. லேபல்ஸ் ல பாருங்க.. 17 பதிவு நான் எழுதி இருக்கேன். .இவிங்க என்னானா... 100 ஆவது பதிவுன்னு போடறாங்க... இதுல கணக்கல 99 மார்க் ன்னு வேற பீத்தல்... .. கவி.. இதை என்னால ஒத்துக்க முடியாது...... பதிவ மாத்தி எழுந்துங்க...

பீட்டர் தாத்ஸ்:- We cannot adopt the way of living that was satisfactory a hundred years ago. The world in which we live has changed, and we must change with it.

எங்க வீட்டு சமையல் : சோளா பட்டூரா

நம்மில் நிறைய பேர் ஹோட்டலுக்கு சென்றால் விரும்பி சாப்பிடுவது சோளா பட்டூரா... அதை வீட்டிலேயே செய்து பார்க்கலாமே...

சன்னாமசாலா செய்ய தேவையான பொருட்கள்:-

வெள்ளை கடலை - 1 கப்
வெங்காயம் : 2
தக்காளி -4
பச்சைமிளகாய் : 1
மிளகாய் + தனியா தூள் - 1.5 ஸ்பூன்
மஞ்சள் பொடி: 1/2 சிட்டிகை
கேசரிப்பொடி (சிகப்பு) - 1/2 சிட்டிகை
பூண்டு : 5 பல்
இஞ்சி - சிறு துண்டு
பட்டை, லவங்கம் : 2, 2
சோம்பு : சின்ன ஸ்பூன்
பட்டை இலை - சிறிய துண்டு
எண்ணெய் : தேவைக்கேற்ப
கொத்தமல்லி : சிறிது

செய்முறை:- கடலையை முதல் நாளே ஊறவைத்து விடவேண்டும். மாலையில் செய்ய காலையில் ஊறவைத்துக்கொள்ளலாம். இஞ்சி,பூண்டு, பட்டை 1, லவங்கம் 1, சோம்பு சேர்த்து அரைத்துவைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியையும் தனித்தனியே அரைத்து வைத்துக்கொள்ளவும். வாணல் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை இலை, ஒரு பட்டை, ஒரு லவங்கம் போட்டு சிவந்தவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு அடிப்பிடிக்காமல் வதக்கவும், நன்கு வதங்கியவுடன் வெங்காய விழுதை போட்டு வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.


இவை நன்கு வதங்கியவுடன் வேகவைத்த கடலையை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி இந்த கலவையில் போட்டு மிளகாஉ, மல்லித்தூள், மஞ்சள் பொடி உப்பு சேர்த்து கிளரி சிறு தீயில் கொதிக்கவிடவும். இதில் தண்ணீர் சேர்க்க கூடாது. தக்காளி வெங்காயத்தில் உள்ள தண்ணீரே போதுமானது. மிளகாய் தூள் வாசனை போகும் அளவிற்கு கொதித்தவுடன் நிறுத்திவிடவும்.
மேல் அலங்காரத்திற்கு கொத்தமல்லியை சின்ன சின்னதாக வெட்டி மேலே தூவி விடலாம்.

பூரிசெய்ய தேவையான பொருட்கள் :

மைதாமாவு : 3 கப்
நெய் : 3 ஸ்பூன்
 தயிர் : 1/4 கப்
பால் : 1/4 கப்
ஆப்பசோடா : 3-4 சிட்டிகை
எண்ணெய் :- தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை : மைதாமாவுடன் நெய், ஆப்பசோடா, உப்பு சேர்த்து கலந்துக்கொண்டு அதில், தயிர், பால் சேர்த்து பிசையவும். தேவைப்படுமாயின், தண்ணீர் ஊற்றி பூரிமாவு பதத்திற்கு பிசைந்து, 3-4 மணி நேரம் ஊறவைக்கவும். பூரியை விட பெரிய உருண்டைகளாக்கி,  சற்றே கனமான பூரிகளாக  திரட்டி, எண்ணெய் காய்ந்தவுடன் போட்டு, நன்கு வெந்தவுடன், சன்னாவுடன் பரிமாறவும். .

அணில் குட்டி அனிதா:- பத்மா பாட்டி ஒருவழியா போய் சேந்துட்டாங்க.. இந்த அம்மணி அவங்க பேர்ல சமையல் சொல்லித்தரேன் னு நம்ம எல்லாரையும் சாக அடிக்க போறங்கன்னு நினைக்கிறேன்.. மக்கா எதுக்கும் உஷாரா இருங்க.. சமையல செய்து பாத்தாலும் உங்களுக்கு பிடிக்காதவங்க யார் கிட்டயாவது முதல்ல டேஸ்ட் பண்ண சொல்லி அப்புறம் நீங்க சாப்பிடுங்க..

பீட்டர் தாத்ஸ் :- A will finds a way

திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு…..

உங்களுடைய தசாவதாரம் பார்த்தப்பிறகு, மனதில் தோன்றிய சில எண்ணங்களை இங்கே எழுதுகிறேன். நிறைகளை பாராட்டியும் குறைகளை சொல்லி விமர்சனம் செய்வதும் மிக மிக மிக எளிது…. அதை உணர்வேன்.. அதனாலேயே திரை விமர்சினங்களை நான் எழுதுவதில்லை. அதனால் இந்த கடிதத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

அந்த படத்தில் நீங்கள் எடுத்து க்கொண்ட உழைப்பையும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தேவையான மேக்கப் செய்து கொள்ள நீங்கள் எடுத்துக்கொண்ட நேரமும், சிரமமும், பொறுமையையும் கண்டிப்பாக பாராட்டாமல் இருக்கவே முடியாது….. உங்களின் உழைப்பிற்கு HATS OFF.

அதே சமயம் உங்களுடைய சில படங்களையும் அதில் உங்களின் மேக்கப்பையும் நினைவு கூறவேண்டும் என்று தோன்றுகிறது. உங்கள் நடிப்பை விடவும் உங்களின் மேக்கப்பில் அசந்துபோன சில படங்கள்.

“எனக்குள் ஒருவன்” – இந்த படத்தில் இரண்டாவது கதாபாத்திரத்தில் செய்து இருந்த மேக்கப்பில் உங்களை அடையாளமே தெரியவில்லை. அதில் உங்கள் முகத்தில் இந்தியன் தாத்தாவை போன்றோ, தசாவதார கதாப்பாத்திரங்களை போன்றோ முகத்தில் ஒரு செயற்க்கைதனம் தெரியவில்லை.

கல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன், சலங்கை ஒலி வயதான பாத்திரம், அன்பே சிவம் விபத்து பிறகு காண்பிக்கப்பட்ட முகம், ஹே ராம், மகாநதி படங்களில் காலத்திற்கு ஏற்றாற்போன்று நீங்கள் போட்டுக்கொண்ட கதாபாத்திரம் – இவை அனைத்துமே மிக மிக யதார்த்தமாக இருந்தன.

இன்னும் இதைப்போன்ற உங்களின் பல கதாப்பாத்திரங்களை பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.

நமக்கு முகத்தில் ஏற்படும் அத்தனை உணர்வுகளையும் காண்பிப்பது முகத்தில் உள்ள தசைகள் தானே? அந்த தசைகளை மூடிமறைத்து சமீபகாலமாக நீங்கள் போட்டுக்கொள்ளும் மேக்கப்பால் கதாபாத்திரங்களின் முகங்களை உணர்ச்சிகள் அற்ற பொம்மைகளை பார்ப்பது போன்று உள்ளதே தவிர.. யதார்த்த உணர்வுகளையும் முகத்தில் ஏற்படும் பல உணர்ச்சிகளை குறிப்பாக முகச்சுளிப்பு, புருவத்தை சுருக்குதல், கண்கள் அசையும் போது முகத்தில் ஏற்படும் மாற்றங்கள், கோபம், சிரிப்பு என்று எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை. முடியவில்லை என்பதை விட அவை இல்லவே இல்லை எனலாம். மாபெரும் நடிகனான உங்களுக்கு இதைப்பற்றி சொல்ல தேவையில்லை இருப்பினும் இதை நீங்கள் உணர்ந்தீர்களா என்று தான் தெரியவில்லை.

இந்தியன் தாத்தாவில் கூட உங்களின் உழைப்பை போன்று நடிகை சுகன்யாவிற்கு இருந்ததா என்றால் இல்லை. என்னவோ பொம்மை முகம் இங்கே அங்கே போவதும் வருவதுமாக இருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி’ யில் இப்படி அதிகமான மேக்கப் என்று எதுவுமே இல்லாமல் கதாப்பாத்திரங்களில் வித்தியாசம் காட்டி இருந்தார். ஒருவருடன் ஒருவரை ஒப்பிடுவது சரியில்லை என்றாலும், இதற்கு முன் அவர் 9 கதாபாத்திரங்கள் செய்து இருக்கும் போது ஏனோ அப்படத்தின் கதாப்பாத்திரங்களையும் அவற்றின் யாதார்த்தையும் நினைவு கூற நேரிடுகிறது.

இனி வரும் படங்களில் முகத்தில் உள்ள உணர்ச்சிளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களின் மேக்கப் இருக்கும் என்று நம்புகிறேன்….

கடும் முயற்சி செய்து அற்புதமான படம் அளித்த உங்களுக்கு நன்றி…..

உங்களின் சிறப்பான படங்களை பார்த்து ரசித்த, ரசிக்கும் ஒரு ரசிகை....

அணில் குட்டி அனிதா:- ஐயோ..!! கவி.. இது நியாயமா? உலக நாயகன் கே அறிவுரையா? இது உங்களுக்கு ரொம்ப ஓவரா தெரியலையா? அது எப்படி கவி.... கைப்பூ மாதிரி எவ்வளவு அசிங்க பாட்டாலும், அடிப்பட்டாலும் எதையுமே வெளியில தெரியாதமாதிரி திருப்பி திருப்பி ...உங்களாள இருக்கமுடியுது....??? நிசமாவே நீங்க ரெம்பபபபப..... நல்லவங்க கவி...... !! :((((((((

பீட்டர் தாத்ஸ்:- You can never get enough of the things you don't need, because the things you don't need can never satisfy.

பெப்சி, க்ரீம் கோக்...குங்கோ...!!

அணில் குட்டி அனிதா:- நம்ம கவிதா க்கு ஒரு புள்ள இருக்குதுன்னு ஊரு உலகத்துக்கு நல்ல தெரியும்.. அந்த புள்ள எப்பவும் எல்லாருக்கும் தான் தெரியுமே சொன்ன பேச்சி கேக்காது..!! :))) அடங்காத புள்ள.. மேட்டர் என்னான்னா அந்த புள்ள போன மாசம் நம்ம ஊர்ல விக்கற பெப்சிய வாங்கி குடிச்சி குடிகாரப்பயலா இருக்கான்ங்க வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல... டெய்லி ஒன்னு இரண்டுன்னு உள்ள தள்ளி ..என்னா ஆச்சின்னு கேக்கறீங்களா.. ஒரு வாரம் தம்பி படுக்கைக்கு போற மாதிரி ஆயுடுத்து...

டாக்டர் கிட்ட போயி ஓவரா பேசினாரு எதப்பத்தின்னு நீங்க கேக்கனும்... அதாங்க.. அவர் குடிச்ச பெப்சிய பத்தியும் அதோட பராக்கிறமத்தியும் அதுமட்டுமில்லாம அதானால அவருக்கு கிடைக்கற சக்திய பத்தியம் பேசினாரு..பேசினாரு.. பேசினாரு..கவியோட புள்ள இல்ல பேச்சுக்கு சம்பந்தம் இல்லாம இருக்குமா? சரி என்னாச்சுன்னு கேளுங்க...

டாக்டர்.. சீ..வாயமூடுன்னு சொல்லவரைக்கும் பேசினாரு.. அப்புறம்.. டாக்டர் இப்ப பேச ஆரம்பிச்சாரு.. சொன்னாரு பாருங்க..சூப்பரா... தம்பி உங்க வீட்டுல டாய்லட் இருக்கு இல்லப்பா.. அதுல பெப்சிய சுத்தி கொஞ்சம் ஊத்தி 3 மணி நேரம் கழிச்சி கழுவி பாரு.. டாய்லட் பளிச்சின்னு ஆயிடும்னு... ஆஹாஹாக ஆஹா... தம்பி மொகத்த பாக்கனுமே... எனக்கு சந்தோச்சமா இருந்துச்சி...

இதுல ஹைலைட் என்னான்னா நம்ம கவி இல்ல... அதிசயமா.. அவங்க இரண்டு பேரும் பேசறத கேட்டுட்டு ரெம்பத்தான்..அமைதியா இருந்தாங்க... ஏன் ன்னு நீங்க ரெம்பவும் யோசிக்காதீங்க.... பெத்த தாய் இல்லையா புள்ளைக்கு உடம்புக்கு முடியலன்னா சந்தோச்சப்பட முடியுமா? அதான் அந்த அமைதி சோகம் etc எல்லாம்...

சரி இப்ப இன்னொரு விஷயம் அமெரிக்காகாரன் நல்ல பெப்சிய அவன் வச்சிக்கிட்டு கெட்ட டாய்லட் கீளினர நமக்கு கொடுத்துட்டான்...அதனலா.. கவிதா புள்ளக்கைக்கு நல்ல பெப்சி எப்படி இருக்கும்னு காட்ட நான் ஆசப்படரேன்.. சோ... யாராவது அமெரிக்கக்காரன் கிட்ட இருந்து ஒரு சேம்பல் பெப்சி டின்' னும், ஒரு கோக் கீரும்...எப்படி வாங்கி இங்க எடுத்துட்டு வரதுன்னு சொன்னீங்கன்னா... கவிதாக்கிட்ட... நானு கொஞ்சம் காசு பாப்பேன்.. யாராச்சும் உதவி பண்ணுங்கப்பா....அயோ.. அம்மாவா விட்டுட்டேன்.. பண்ணுங்கம்மா...


பீட்டர் தாத்ஸ் : Wise saying often fall on barren ground; but a kind word is never thrown away.

சத்தம்……..

சத்தம் – அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கம், ஏதோ ஒரு சத்தம் எப்போதும் நம் காதுகளில் விழுந்துக்கொண்டே தான் இருக்கின்றன… சில சத்தங்கள் சங்கீதமாக சுகமாக இருக்கும்…... சில சத்தங்களின் பாதிப்புகளும் அதிகம்……

காலையில் எழுந்திருக்கும் போது, விடியலுக்கு என்று ஒரு சத்தம் இருக்கும்…எங்கோ தூரத்தில் சில வண்டிகளின் ஹாரன் சத்தம், படுக்கை அறையில் ஓடும் fan சத்தம்…. ஜன்னல் வழியே பக்கத்துவீட்டில் வாட்டர் டேங்க் தண்ணீர் நிரம்பி கொட்டும் சத்தம்……. எங்கேயோ…கத்தும் காக்கை…இப்படி.. சின்ன சின்ன சத்தங்களுடன் எழுந்துவந்தால்…..

சமையல் அறையில்….சமைக்க ஆரம்பித்தால்..எல்லாமே சத்தம்..தான், குக்கர், ஓவனில் ஏதோ சமைக்க வைத்தால் நேரம் முடிந்தவுடம் அது கொடுக்கும் அலாரம், மேலே அட்டை பெட்டியில் தூங்கி எழுந்த என் அணில்குட்டி கீச் கீச் என்று கத்திக்கொண்டு எகிரி குதித்து வெளியில் ஓடும், நடுவில் ரேடியோ, டிவி நிகழ்ச்சிகள்…. கதவிற்கு வெளியே படிகளை பெருக்கும் போது வரும் சத்தம்…. கைபேசி அழைக்கும்… பக்கத்து வீட்டில் துணி துவைக்கும் சத்தம்…. குழந்தைகளை அம்மாக்கள் அதட்டும் சத்தம்… கண்டுக்கொள்ளாமல் அவர்கள் கத்திக்கொண்டு மொட்டை மாடியில் ஓடி விளையாடும் சத்தம்… இதில் வீட்டில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டால்…அதில் வரும் சத்தத்திற்கு அளவே இல்லை……..

சில நேரங்களில் வெறும் தரையில் படுத்தால்…மிக மெலிதாக கீழ்தளத்தில் fan ஓடும் சத்தம், சில நேரங்களில் அவர்கள் வீட்டு ஊஞ்சல் ஆடும் சத்தமும் இங்கே கேட்கும்….பக்கத்துவீட்டில் ஒவ்வொருத்தர் செருப்பை தேய்த்து நடக்கும் சத்தத்தை வைத்து யார் அவர் என்று அனுமானித்து விடலாம்… எட்டி பார்க்கவேண்டி இருக்காது… என் கணவர் சவரம் செய்யும் போது மெலிதாக சர் சர் என்று ஒரு சத்தம்….

வீட்டை சுற்றியே இப்படி என்றால்…அலுவலகம் பற்றி சொல்லவே வேண்டாம்… எல்லோருக்குமே என்னுடைய சத்தம் பெரிய தொல்லையாக இருக்கும் என்றாலும், ஒரு ஒரு அலுவலக பிரிவிலிருந்து வரும் சத்தமும் பல விஷயங்களையும், அனுபவத்தையும் நமக்கு கொடுக்கும்…. நாம் மட்டுமே வேலை செய்கிறோம், நமக்கு மட்டுமே வேலையால் மன அழுத்தம் அதிகம் என்று நினைத்து சோர்வு அடைந்தால் மற்ற பிரிவுகளிலிருந்து வரும் சத்தங்களிலிருந்து நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றும்..

எத்தனை எத்தனை சத்தம்…….. எதை கேட்பது எதை விடுவது…..??....

கேட்கும் அத்தனை சத்தத்திலும் ஏதோ ஒன்று இருக்கிறது…… உணர்ந்து ரசிக்க பல சமயங்களில் நமக்கு நேரம் இருப்பதில்லை.. அல்லது அப்படி ஒரு சத்தம் வருகிறது என்று நாம் உணராமல் கூட வேறு வேலையில் லயித்து இருப்போம்… ஆனால் இதற்காக உட்கார்ந்து பார்த்தால் ஒரே நேரத்தில் எத்தனை சத்தங்களை நாம் உள்வாங்குகிறோம்.. அதற்கு பதில் அளிக்கிறோம்..அல்லது அதனை கண்டுக்கொள்ளாமல் நம் வேலையை செய்கிறோம் என்று உணர்வோம்….

இதை எல்லாசத்தத்தை விட…….. மனத்திற்க்குள் நாம் நமக்குள்ளேயே பேசும் சத்தம்…. ரொம்ப பெரிய சத்தம்……….. வெளியில் தெரியாத சத்தம்…..

அணில் குட்டி அனிதா :- ம்ஹிம்…..சத்தத்த பத்தி இன்னொரு சத்தம் பேசுது.. .என்னத்த சொல்ல… இவங்கள சுத்தி இருக்கறவங்க எல்லாருமே சொல்லிட்டாங்க… பெத்த அம்மாவிலிருந்து பெத்து போட்ட புள்ள வரைக்கும் “சவுண்ட குறை..”னு.. எங்க…. இவிங்க சவுண்டு இன்னமும் குறையலப்பா…!!! … வாசுகி மேடம் க்கு துணையா பீட்டர் தாத்ஸ் யை கூட்டிட்டு வந்தாச்சி……

மிஸஸ் வாசுகி:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு

பீட்டர் தாத்ஸ் :- Whatever thing, of whatsoever kind it be, Ii is wisdoms part in each the very thing to see.

கடவுள் – சில கேள்விகள் பதிலகள்

பல காரணங்களுக்காக, திரை விமர்சனம் எந்த படத்திற்கும் எழுதுவதில்லை என்று இருக்கிறேன். ஆனால் இதை எழுதியே தீர வேண்டும் என தோன்றியது..."அறை எண் 305-கடவுள்" – படம் இன்னும் பார்க்கவில்லை, தொலைக்காட்சியில் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது.. பார்க்கும் போது எல்லாம் எரிச்சல் தரக்கூடிய வசனங்கள்….படத்தின் இயக்குனர் தான் வசனகர்த்தாவா என்று தெரியவில்லை, கூகுள்'உதவவில்லை.. எவ்வளவு தேடியும் கிடைத்ததகவல் இயக்குனர் சிம்புதேவன் மட்டுமே. சரி எரிச்சல் தரும் விஷயத்திற்கு வருவோம் –

பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் கடவுள் – டெல்லிகணேஷ் என்ற கதாபாத்திரத்தை பார்த்து கேட்கும் கேள்விகள் –

1.நீங்கள் ஆள் இல்லாத மலை உச்சிக்கு ஒத்தைஅடி பாதையில் நடந்து போயிருக்கிறீர்களா?
2. நடுகடல் வரை படகு பயணம் செய்து இருக்கிறாயா?
3. ஏழை 10 பேருக்கு சாப்பாடு போட்டு இருக்கிறாயா?

கேட்பது மட்டும் இல்லை இது எல்லாம் செய்யாமல் எப்படி உங்கள் வாழ்க்கை நிறைவடைந்தது என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்வி நிறைவு வேறு????

தனிமனிதனின் விருப்பம் என்பது வேறு..ஒருத்தருக்கு பிடித்த ஒரு விஷயம் நிம்மதி, சந்தோஷம், நிறைவு எல்லாம் எப்படி மற்றவருக்கு நிறைவை தரும். எனக்கு பச்சை நிறம் பிடிக்கும், அதனால் பிடிக்காத அல்லது பச்சை நிறம் பற்றி தெரியாத ஒருவரை பார்த்து உனக்கு பச்சை நிறம் பிடிக்கவில்லை (அ) தெரியவில்லை அதனால் உன் வாழ்க்கையில் நீ நிறைவடையவில்லை என்று சொல்ல முடியுமா?... முட்டாள் தனமான ஒரு சிந்தனை என்றே சொல்லலாம்.

மேல் உள்ள மூன்று விஷயங்களுமே செய்யாமல் எத்தனையோ பேர் நிம்மதியோடும், மிக பெரிய சாதனைகள் செய்தும் , சந்தோஷத்துடனும் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
சில உதாரணங்கள் :-

1. குடும்பம், குழந்தை , கணவன், சமையல் அறை, உறவுகள், டிவி சீரியல்கள், மதிய நேர தூக்கம், கண்ணில் வைக்கும் மை, தினமும் செய்யும் பூஜை, பக்கத்துவீட்டு கதை, புதிதாய் வந்த புடவை டிசைன் மட்டுமே உலகம் சந்தோஷம் என்ற நிறைவுடன் இருக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது போதும்…இதற்கு மேல் தேவையில்லை… இதை முழுமையாக அவர்கள் பெற்றாலே அவர்களின் சந்தோஷத்தை முகத்தில் பார்க்கமுடியும்…..

2. என் நண்பர் ஒருவர் உதவி கேட்கும் போது ரூ.1500/- கொடுத்தார் ஆனால் அவரே கேளிக்கைக்கு ரூ.5000/- மும் அதற்கு மேலும் செலவு செய்யவும் தயாராக இருந்திருக்கிறார், இருக்கிறார். அவரிடம் கேட்பதற்கு முன் நானே என்னை கேட்டு கொண்டு கேள்விகள். அவரின் சம்பாத்தியம் ,அவருக்கு அதை எப்படி செலவு செய்யவேண்டும் என்ற உரிமை உள்ளது…அவரின் சந்தோஷம் – ஏழைக்கு உதவும் போது இருப்பதை விட கேளிக்கைகளில் ஈடுபடும்போது இருக்கிறது.

3. சமீபத்தில் நீயா நானா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருந்த போது ஒரு பெண் தனக்கு ஹை ஹீல்ஸ் அணிவது மிகவும் பிடிக்கும், அதை அணியவிடக்கூடிய, அணிந்தபிறகும் தன்னைவிட உயரம் அதிகம் உள்ள ஒருவரை மணக்க வேண்டும் என்று சொன்னார். மிக சாதாரணமான அல்லது ஆண்களை பொருத்தவரை கேலிக்குறிய, நக்கல் செய்யக்கூடிய ஒரு விஷயமாக இது இருக்கலாம் ஆனால் அந்த பெண்ணை பொருத்தவரை அது தான் சந்தோஷம், நிம்மதி மனதளவில் நிறைவு.

மனநிறைவை தரக்கூடிய எந்த செயலும் அவரவரை பொருத்தவரை வாழ்க்கையின் சாதனையே… வாழ்க்கையின் நிறைவும் கூட….. ஆசைகள், கனவுகள், கற்பனைகள் அத்தனையுமே ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனித்தனி…….அதையும் தாண்டி ஒருவரை ஏதோ விஷயத்திற்காக பிரகாஷ்ராஜை (கடவுள் கதாபாத்திரம்) போன்று- இதை செய்தால் நீ நிம்மதியாக இருப்பாய், சாதனை புரிவாய், சந்தோஷமாக இருப்பாய், வாழ்க்கையில் நிறைவை பெருவாய் என்று உணர்த்துவாரானால். உணர்த்துபவரின் பங்கு அதில் என்ன என்பதை பார்க்கவேண்டும்…

கேள்விகள் மிக எளிதாக கேட்கமுடியும்…..ஆனால் பதில்………….

அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….ஆரம்பிச்சிட்டாங்கய்யா 'தருமி சீவி…ஹோ'..சாரி…டங் ஸ்லிப்ட்… அறிவு ஜீவி…. சரி கவி மேட்டர விடுங்க.. நம்ம பீட்டர் தாத்ஸ் கவி இம்சை தாங்க முடியாம ஓடிட்டாரு.. சோ…நான் கொஞ்சம் தீவிரமா யோசிச்சி…மிஸஸ்.வாசுகி ய இண்ட்ரோ கொடுக்கிறேன் யாருன்னு பாக்கரீங்களா… அதாங்க நம்ம திருவள்ளூஸ்’ ஒயிஃப் வாசுகி இல்ல அவிங்கதான்… …வூட்டுக்காரு எழுதினத உங்களுக்கு தினம் ஒன்னு சொல்லபோறாங்க.. வாசுகி மேடம் யூ ஸ்டார்ட்… ஆல் தி வெரி பெஸ்டூஊஉ…

மிஸஸ். வாசுகி:-
அன்போடு இயந்த வழக்கென்ப ஆருயிருக்கு
என்போடு இயந்த தொடர்பு


அன்பு-பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் பண்பை நல்கும். அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்ற அளவுகடந்த சிறப்பையும் தரும்.

-Of precious soul with bodys flesh and bone, The union yields one fruit, the life of love alone.

வேலையினூடே ஒரு நாள் (A Day at Work)

கைப்புள்ள அறிவித்துள்ள புகைப்பட போட்டிக்காக -

1. சுற்றலா பயணிகளுக்காக உணவு தயாரித்து விற்கும் பெண் -

Photobucket

2. டார்ஜிலிங் மலையில் - சுற்றுலா பயணிகளுக்காக தேநீர் கடை நடத்தும் பெண் -

Photobucket

செய்வினை, பில்லி சூனியம்……..???? உண்மையா???

இது மிகவும் புதியதகவல், சினிமாவிலும், செய்திகளிலும் மட்டுமே பார்த்தும் படித்தும் வந்த எனக்கு, நேரடியாக செய்வினை’யால் பாதிக்கபடுகின்றேன் ?? என்று சொன்ன ஒரு பெண்ணெய் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. மூடநம்பிக்கைக்கு அளவில்லாமல் போய் விட்டதாகவே கருதுகிறேன். அவள் இப்படி சொல்லும் போது எல்லாம் அவளின் தன்னம்பிக்கையை மட்டுமே எண்ணிப்பார்க்க முடிந்தது. தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் எல்லோருமே பிரச்சனைக்கு காரணமாக மற்றவர்களை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

எனக்கு மிகவும் தெரிந்த ஒரு பெண், நன்கு படித்தவள், வேலைக்கும் செல்கிறாள், அவளுடைய குடும்பத்திலும் எல்லோரும் படித்து இருக்கிறார்கள். அவளுக்கும் மாமியாருக்கும் எப்போதும் ஓயாத பிரச்சனை, புலம்பிக்கொண்டே இருப்பாள். ஆனால் அதிகபட்சமாக “என் மாமியார் எனக்கு செய்வினை வைத்து விட்டார்கள்,என் இரண்டு கையையும் தூக்கமுடியாத அளவு வலி, வீங்கி வேறு போய் விடுகிறது, எந்த உடல் உபாதைகளும் இல்லாமல் எனக்கு அடிக்கடி இப்படி ஆகிறது” என்று ஓரே அழுகை, அதற்கு காரணம் மாமியாரின் செய்வினையே என்று ஆணித்தரமாக நம்புகிறாள்

எனக்கு அழுவதா சிரிப்பதா தெரியவில்லை, செய்வினையில் நம்பிக்கை சுத்தமாக இல்லாததால், அவளிடம் டாக்டரிடம் சென்றாயா? என்றேன். அவளோ இல்லை சாமியாரிடம் சென்றேன் அவர் என்ன சொல்கிறாரோ அப்படி நடந்து க்கொள்கிறேன் என்றாள். படித்தவர்களே இப்படி மூடநம்பிக்கையுடன், செய்வினை சாமியார், செய்வினை எடுக்கும் நல்ல சாமியார் என்று நம்பி நேரத்தையும், நிம்மதியையும், பொருளையும் இழக்கிறார்கள். மிச்சமாவது என்னவொ மன உளைச்சல் மட்டுமே.

அவளின் செய்வினையை சரி என்று இன்னொரு நண்பரும் உதாரணம் சொன்னார். ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் அந்த பையனின் வீட்டில் , அந்த பெண்ணுக்கு செய்வினை வைத்ததால் அவள் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டும், பின்பு மனநிலை பாதிக்கப்பட்டும் போனாள், அந்த பெண்ணின் கணவர் எல்லா நல்ல ஆஸ்பித்திரிகளிலும் மனைவியை அழைத்துசென்றும், நோயை குணப்படுத்தமுடியவில்லை என்றும், அதற்கு காரணமும் செய்வினையே என்றார்.

சரி செய்வினை என்றால் என்ன ? என்று அவர்கள் சொன்னதிலிருந்து நான் புரிந்து கொண்டது. செய்வினை செய்யும் சாமியார்கள் கொடுக்கும் மருந்தை நமக்கு பிடிக்காதவர்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அது எந்த மருத்துவரிடம் சென்றாலும் குணமாகாது???? அதை வெளி எடுக்க நாம் மற்றொரு செய்வினையை எடுக்கும் நல்ல சாமியாரின் உதவியை நாடவேண்டும்.

கதை என்னவோ நன்றாக தான் இருக்கிறது. நான் அந்த பெண்ணிடம் கேட்ட சில கேள்விகள்.

1. மாமியார் ஏதோ சாப்பாட்டில் கலந்து கொடுக்கிறார்கள் என்றால், ஏன் அவர்கள் சமைத்து கொடுக்கும் உணவை சாப்பிடுகிறாய்?
2. மாமியார் இல்லாமல் தனிவீட்டில் உன் வாழ்க்கையை துவக்கலாமே.
3. உன்னுடைய நல்ல சாமியார் அவ்வளவு நல்லவராக, நடப்பதை சொல்பவராக இருந்தால், அவரே மாமியார் செய்வினை வைக்கபோகிறார்கள் இல்லை இனிமேலும் வைப்பார்கள் என்பதை ஏன் சொல்லவில்லை. அல்லது.. தெரிந்தும் ஏன் அதை அவரால் தடுக்க முடியவில்லை.
4. அந்த நல்ல சாமியாருக்கு நீ அடிமையாகிவிட்டாய் என்பதை ஏன் உணராமல் இருக்கிறாய்?
5. அவரால் தான் உனக்கு வாழ்க்கையில் நிம்மதி என்றால், உனக்கு வேறு யாருமே வேண்டாமே?
6. உனக்கு என்று சுயபுத்தி இல்லையா? சுயமாக எது உண்மை எது பொய் என்று யோசிக்க மாட்டாயா.. ஏன் இப்படி நடக்கிறது, அதற்கு நீ என்ன செய்யவேண்டும் யோசித்து செயல் படமாட்டாயா?.. அதைவிட்டு ஏன் இப்படி செய்வினை, சாமியார் என்று அலைந்து கொண்டு இருக்கிறாய்?

எதற்குமே அவளிடம் சரியான பதில் இல்லை என்றாலும், சாமியாரிடம் செல்வதை மட்டும் குறைத்துக்கொள்ளவில்லை. அதில் அதிகபட்சமாக, சாமியார் என்னிடம் எப்படி பேச வேண்டும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று கூட சொல்லிக்கொடுத்து உள்ளார்.

இப்படி படித்தவர்கள், நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட இப்படி சாமியார்களிடம், செய்வினை செயல்பாட்டுவினை, பில்லி சூனியம் என்று பழிகிடந்தால்… என்னவாவது…???

அணில் குட்டி அனிதா:- ஆஹா… கவி..நீங்களே ஒரு சூனியக்காரி ரேஞ்சுக்கு எல்லாம் செய்வீங்கன்னு அந்த அக்காவுக்கு தெரியாம இல்ல போச்சி… உங்க கிட்டேயே..எப்படி பேசனும்னு சாமியார் சொன்னாராமா…? முடியலப்பா !! உங்கள பத்தி தெரியாம அவரு சொல்லிட்டாரு…....சரி வுடுங்க..…நீங்க ஒரு ஹாஃ ஹவர் அந்த சாமியாரை பாத்து பேசுங்க..போதும் !! சாமியார் துண்ட காணோம் துணியக்கானோம்னு ஓடிடுவாரு……. ம்ஹீம்….!! எல்லாரும் என்னைய மாதிரியே இருந்துருவாங்களா,,…கவீஈஈஈஈ…………….


பீட்டர் தாத்ஸ் :- In the middle of the every difficulty lies an opportunity

ஏரிக்குள்ளேயே வாய்க்கால் வெட்டி……..

வேளிச்சேரி்..!!! மிக குறுகிய காலத்தில், மிக வேகமான வளர்ச்சியை எல்லாவிதங்களிலும் பெற்றுவிட்ட ஒரு இடமாகிவிட்டது.. நாங்கள் கடந்த 1991 ஆம் ஆண்டில் வேளச்சேரியில் குடியேறியபோது அக்கம் பக்கம் இருக்கும் காலி இடங்களில் எப்போதும், (ஆண்டு முழுதும்) தண்ணீர் தேங்கி இருக்கும், மதிய நேரங்களில் சூரியன் உச்சத்தில் இருக்கும் போது அந்த ஒளியில், தண்ணீரில் நீந்தும் பெரிய பெரிய மீன்’களையும், பாம்பு களையும் எங்கள் வீட்டு சன்னல் வழியாக நின்று கவனிப்பேன். தினம் எனக்கு இது தான் பொழுதுபோக்காக இருந்தது.

ஆனால் இப்போது, வேளச்சேரியில் காலி இடங்கள் கிடைப்பதே அறிதாகிவிட்டது, கிடைத்தாலும், விலையைப்பற்றி பேசி நம் இரத்த அழுத்ததை அதிகபடுத்திக்கொள்ள வேண்டாமே.

இப்படி, ஏரிக்குள்ளேயே நாம் குடியேறி எல்லா இடங்களையும் ஆக்கரமித்து விட்டோம். அதனால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் வேளச்சேரி தான் தண்ணீரில் மூழ்கும் இடங்களில் முதல் இடத்தில் இருக்கும். தண்ணீர் இனிமேல் தேங்காமல் இருக்க., போன வருடத்தில் இருந்து அரசாங்கம் ஒரு புது திட்டத்தை அறிமுகப்படுத்தி செயற்படுத்தியும் வருகிறது. அதாவது, வேளச்சேரி தண்ணீர் அதிகம் நிற்கும் இடங்களிலில் , தெருக்கலின் ஒரு ஓரமாக வாய்க்கால் வெட்டி, அதனை தெற்கு வேளச்சேரியில் உள்ள ஒரு ஏரிக்கு கொண்டு செல்கிறார்கள். 5 x 5 ஆழமும் அகலமும் இருக்கும் இந்த வாய்க்கால் எனக்கு தெரிந்து வேளச்சேரி பைப்பாஸ் ரோட்டில் உள்ள ஏரி இருக்கும் இடத்தில் இருந்து ஆரம்பித்து தெற்கு நோக்கி வருகிறது.

பிரச்சனை என்ன?.. முன்னேமே நாம் இருப்பது ஏரி பள்ளத்தில், இதில் எப்படி இந்த வாய்க்கால் நமக்கு தண்ணீரை தேக்காமல் ஏரிக்கு எடுத்துச்செல்லும், அதற்காக சரியான முறையில் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை தண்ணிர் தேங்காதவாறு வாய்க்கால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. காண்ட்ராக்டில் விடப்பட்ட இந்த வேலை, வாய்க்காலை முடிக்கும் தீவிரத்தில் செயல் படுகின்றனவே தவிர, சரியான முறையில் சரிவான மட்டத்தை கடைப்பிடிக்கப்படவில்லை.

அதனால் தெருவில் தேங்கும் தண்ணீரை தவிர இனி, இந்த வாய்க்கால்களிலும் தண்ணீர் தேங்கும். தெருவில் தேங்கும் தண்ணீராவது 2, 3 நாளிலில் இரங்கிவிடும்..ஆனால் இந்த வாய்க்கால்களில் தேங்கும் தண்ணீரால், கொசு அண்ணன்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. நன்றாக இருந்த எங்களில் ஏரியாவெல்லாம் இப்போது கொசுக்கள் சொகுசாக வளரும் இடமாக ஆகிவிட்டது.

2, 3 நாள் தண்ணீர் நிற்பதே பரவாயில்லை, இந்த வாய்க்கால்களால் ஆண்டுமுழுதும் தொல்லை. அதுமட்டுமல்ல, நம்முடைய நகராட்சி தெருக்கள் எல்லாம் அகலமான தெருக்கள் இல்லை, இதில் இந்த வாய்க்கால்கள் ஒரு பகுதியில் கட்டிவிடுகின்றனர். அதன் வடிவமைப்பு அதன் மேல் வண்டிகள்,பாதச்சாரிகள் செல்ல இயலாதவாறு மேடும் பள்ளமுமாக கட்டப்படுகின்றன. அதனால் வாய்க்கால் இல்லாத மீதமுள்ள குறுகிய ரோட்டை தான் பாதச்சாரிகள், வண்டிகள் உபயோகிக்க வேண்டியுள்ளது.

இதில் கொசுவின் தொல்லை தாங்காமல், நிறைய வீட்டுக்காரர்கள் தெருவிற்கும், வாய்க்காலுக்கும் இடையே தண்ணீர் செல்ல அமைக்கப்பட்டிருக்கும் வழிகளை மண்ணைக்கொண்டு மூடிவிடுகின்றனர். நிச்சயம் அவர்கள் மேல் எந்த தப்புமும் இல்லை, இந்த கொசுக்களால் அவர்களுக்கு வரும் பிரச்சனையை விட இது ஒன்றும் பெரிய தவறாகவும் தெரியவில்லை. இப்போதே மழை இல்லாத இத்தனை வெயிலிலும் இந்த வாய்க்கால்களில் தண்ணீர் தேங்கிகிடப்பது… வாய்க்கால் வடிவமைப்பின் லட்சனத்தை எடுத்துறைக்கிறது….!!

அணில் குட்டி அனிதா:- கவி..நீங்க அந்த காண்ட்ராக்டரை நொய் நொய் ன்னு கேள்வி க்கேக்கும் போதே நெனச்சேன்.. பிளாக்ல எழுதப்போறீகன்னு.. எழுதிட்டீங்களா.. ப்பாத்து… காண்ட்ராக்டருக்கு கோவம் வந்து வாய்க்கல்குள்ள போட்டு மூடிட போறாங்க… ஒரே நாள்ல காலியாய்டுவீங்க…...!

பீட்டர் தாத்ஸ் :- Rather fail with honour than succeed by fraud.

இது இவங்களுக்கு தேவையா.... ஹா...ஹா..ஹா... !!

அணில் குட்டி அனிதா :- பொதுவா யாராவது ஜோக் அடிச்சா நாம சிரிப்பா சிரிப்போம்..ஆனா..நம்ம கவிதா இருக்காங்க பாருங்க..யார் கிட்டையாவது வாய கொடுத்து …அவங்க திருப்பி கவிதா’வ சுத்தி சுத்தி பேசவிடாம ஓட்டுவாங்க பாருங்க.. அப்ப…கவிதா “ஞே’ ன்னு முழிக்கறத “பாத்தா… அட போங்க… சொல்ல எல்லாம் முடியாது… உருண்டு உருண்டு சிரிக்கறமாதிரி இருக்கும்.. உங்களுக்காக சில சேம்பல்ஸ்… நீங்களும் உருளுங்க.. என்னோட சேர்ந்து…..

கவி அவங்க பிரண்டுக்கு மாட்டு பொங்கலுக்கு வாழ்த்து சொன்ன கதைய கேளுங்க..

கவி :- ஹேப்பி மாட்டு பொங்கல் ..பா….!! (சொல்லிட்டு இவங்களே ஹிஹி ஹிஹி ஹிஹி ன்னு சிரிச்சிக்காறாங்க…)

கவி பிரண்டு :- போதும் பொதும் இளிச்சது…அத “பன்னி பொங்கல்” கொண்டாடறவங்க சொல்லக்கூடாது….

கவி : (“ஞே” ன்னு முழுச்சிக்கிட்டு ) சைலன்ட்’ டா எஸ் ‘ ஆயிட்டாங்க..

ஆனா இவங்களுக்கு ஒரு டவுட்.. “பன்னி பொங்கல்” ன்னு ஒன்னு இருக்கா?.. இன்னமும் டவுட் ல தான் இருக்காங்க… யாராவது இந்த அறிவு ஜீவி க்கு விளக்கமா சொல்லுங்கப்பா…

========================================================
கவிதா ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்ட ஆரம்பிச்ச பிறகு அடிக்கடி சில்லறை பொறுக்கறாங்க…….அதுல ஒரு வாட்டி மவுண்ட் ரோடு ல சில்லறை பொறுக்கி, செம உள்காயம் பாவம்..வெளியில சொல்ல முடியாத அளவு உள்ளடி…15 -20 நாள் அம்மணிக்கு ஒழுங்கா நடக்க முடியல… அப்ப முதல் மாடியில இருக்க ஆபிஸ்க்கு லிஃட் ல போய்ட்டு வந்துக்கிட்டு இருந்தாங்க.. ஒருநாள்..ஆபிஸ் விட்டு வரும் போது லிஃட் ‘ட தொறந்து உள்ளே போய் கீழ போறத்துக்கு பட்டனை அமுத்த போக…. அம்மணி’ யோட ஒரு பிரண்டு வெளியில நின்னுக்கிட்டு,

“கவிதா…ஏன்… சிரமபடறீங்க.. நீங்க லிஃட்’ குள்ள ஏறி நின்னா போதும், அது தானா கீழ போகும்..எதுக்கு ஸ்விட்ச் எல்லாம் அமுத்துக்கிட்டு….!! “

கவி :………………………..


=============================================================
ரெம்ப டிராஃபிக் இருந்ததுன்னு எல்லாரும் புட்பாத் மேல வண்டிய ஓட்டிக்கிட்டு போக அம்மணியும்… (தேவையா???? ) அவங்க பின்னாடியே போக… புட்பாத் முடியும் போது ஒரு 2 அடி க்கு கீழ ரோடு இருக்கு… போனவங்க எல்லாம் தட்டு தடுமாறி வண்டிய எப்படியோ இரக்கி கொண்டுபோக .. .அம்மணிக்கு தெரியல.. அப்படியே நின்னுக்கிட்டு இருந்தாங்க. .போற வரவங்க யாருமே கண்டுக்கல.. எல்லாருமே.. ஏம்மா நாங்களே அவரசத்துல இருக்கோம் நீ..வேற நடுவுல நின்னுக்கிட்டு ன்னு திட்டிட்டு வேற போனங்க… யாரும் ஹெல்ப் பண்ணாத கடுப்பை ஆபிஸ்’ல வந்து அம்மணி கோவத்தோட புலம்ப…...வழக்கம் போல..

கவி பிரண்டு :- ஏதோ டீன் ஏஜ் பொண்ணுங்க நின்னுக்கிட்டு இருந்தா நாங்க எல்லாம் ஓடி போய் உதவி செய்வோம்……

ஆபிஸ்’ல எல்லாரும் கவிதா;வை பார்த்து சிரிக்க……..

கவி : வழக்கம் போல “ஞே” த்தான்………..


==============================================================
அம்மணிக்கு தான் பொய் சொன்னா பிடிக்காதே… அவிங்க பிரண்டு ஒருத்தர் பொய் சொல்றது பிடிக்காம… செம டென்ஷனா…..

கவி :- உங்க வாயில புழு தள்ள போது பாருங்க….

கவி பிரண்டு :- (செம கூல்’லா) ஹோ.. ரொம்ப தேக்ஸ் கவிதா… நான் அப்படியே சைனா போய் ஒரு பாஸ்ட் புட் கடை ஆரம்பிச்சிடுவேன்….!!

கவி :- “ஞே” த்தான்…..
அதே பிரண்டுக்கிட்ட திரும்பவும் :-

கவி:- நீங்க பொய் சொல்லாம இருக்கணும்னு, நாக்குல வேல் குத்தி போடறேன்னு சாமிக்கு வேண்டிக்கிட்டேன்……

கவி பிரண்டு :- ….. நான் கூட உங்க இம்சை தாங்க முடியலன்னு… முதுகுல டின்’ கட்றேன் ன்னு வேண்டிக்கிட்டேன்…. இரண்டு பேருமா வேண்டுதல நிவர்த்தி செய்யலாமா????

கவி:- டின்’ ஆஆஆஆஆஅ???? (வழக்கம் போல “ஞே” த்தான்…..)


==============================================================
அம்மணி எப்பவும் இவிங்கள பாத்து ஊரே பயப்படுதுன்னு நினெப்புல இருப்பபாங்க. .இவிங்க பிரண்ட்ஸ் யாருமே.. இவிங்கள மதிக்கறது இல்ல… அது தெரியாம… சில சமயம் … இவங்களுக்கு பிடிக்காம ஏதாவது செய்துட்டா மணி கணக்கா திட்டி தீப்ப்பாங்க.. ஓவர் அட்வைஸ் வேற……

ஒருவாட்டி அப்படித்தான் ரொம்ப ஆவேசமா வசனம் எல்லாம் பேசி அவிங்க பிரண்டை திட்ட.. ..

கவி:- இவ்வோ நேரம் திட்டறனே அட்லீஸ்ட் கவனிக்கறீங்களா நீங்க?? கொஞ்சமாது உங்களுக்கு பயம் இருக்கா… ?

கவி பிரண்டு :- அய்யோ…கவி….. நீங்க பேசினத தவிர வேற எதையுமே நான் கவனிக்கல… பாருங்க..பயத்துல… உடம்பு நடுங்குது….. ஹிஹிஹி….…டவுசர் கூட நனஞ்சு போச்சி……..…

கவி:- ……………………… (வேற என்னங்க.. அதே “ஞே’…தான்)


=======================================================
கவி அவங்க பிரண்டு வீட்டுக்கு போனாங்க. .இவிங்க வராங்கன்னு அவங்க பிரண்டோட அம்மா விதம்விதமா சாப்பாடு செய்து வச்சி இருந்தாங்க… அம்மணி க்கு அவங்க அம்மா படற சிரமத்தை பாக்கமுடியாம….

கவி:- ஆன்ட்டி !! நான் ரொம்ப சிரமம் கொடுக்கிறேனா…?!! (அம்மணி என்னவோ… திருப்பி அவங்க…. "இல்லமா. .நல்லா சாப்பிட்டு ரெஸ்டு எடு உன் ஒரு ஆளால எனக்கு என்னமா சிரமம் ன்னு" கேப்பாங்க ன்னு நினச்சாங்க…ஆனா…)

ஆன்ட்டி :- “ஆமா கவிதா… ரொம்ப சிரமமா இருக்கு..பேசமா.. சாப்பிடறத அப்படியே வச்சிட்டு வீட்டுக்கு கெளும்பும்மா…. “ மிச்சமீதியாவது எங்களுக்கு இருக்கட்டும் ன்னு செம சீரியஸா சொல்ல…. “

கவி:- ……………………… (வேற என்னங்க.. அதே “ஞே’…தான்)


=============================================================
அம்மணி ஆபிஸ் ல ஏதோ பிரச்சனை…. இவிங்கள யாரோ செமத்தியா திட்டிட்டாங்க… (அது எப்பவும் நடக்கறது தானே…) கவலையும் கம்பலையுமா.. .வூட்டூக்காரர் ஏதாவது உதவி செய்வாறுன்னு சொன்னாங்க..

கவி:- ப்பா…. நான் ஒன்னுமே தப்பு பண்ணாம என்னோட கிளையன்ட் என்னை “இடியட்” ன்னு திட்டிட்டான்…. . ……

கவி வூட்டுக்காரர் :- ஓ….அவனுக்கும் தெரிஞ்சிப்போச்சா……….

கவி:- …………………….

===============================================================

பீட்டர் தாத்ஸ் :- Imagination is your power house where you can shape your plans and make them a reality.

அதிசயம் ஆனால் உண்மை - இப்படியும் சிலர்..

சென்னை கிரிம்ஸ் ரோடில், ஹெச்.சி.ல் அலுவலகம் இருக்கும் சாலை மிகவும் நெருக்கமான சந்தாக இருக்கும், எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும், சமீபத்தில் ஒருநாள் அந்த சாலையில் செல்லும்போது வண்டிகள் வரிசையாக நெரிசல் காரணமாக நிற்க ஆரம்பித்தன, நானும் என்ன பிரச்சனை என்று எட்டி ப்பார்த்தேன், தொலைவில் இருந்த எனக்கு தெருவின் நடுவில் ஒரு சிறுமி குனிந்து நின்று என்னவோ செய்துக்கொண்டு இருந்தாள், அவள் ஒருத்திக்காக அத்தனை வண்டிகளும் நின்று க்கொண்டு இருந்தன, அவளை புறக்கணித்து போக முடிந்த வண்டிகள் முன்னே செல்ல, நானும் மெதுவாக முன்னே சென்றேன், என்னுடைய ஆர்வம், அந்த சிறுமி என்ன செய்து க்கொண்டு இருக்கிறாள் என்பதிலேயே இருந்தது.

அருகில் சென்று பார்த்தவுடன் அசந்தும், அதிசயித்தும் போனேன்…அங்கு நான் பார்த்தது இன்னமும் எனக்கு வியப்பாக உள்ளது..இப்படியும் நம்மில் சிலரா?.. எனக்கு உடம்பும் புல்லரித்து போனது. அந்த சிறுமியை போன்று நாம் ஒவ்வொருவரும் இருந்துவிட்டால்..இந்தியா எங்கோ சென்று விடும் அல்லவா?..

அப்படி அந்த சிறுமி என்னத்தான் செய்தாள்?... அவள் சாலை ஓர வண்டி கையேந்தி பவன் கடைகளில் ஏதோ ஒரு கடைக்கு சொந்தமான (அ) வேலை செய்யபவளாக இருக்கவேண்டும், அவர்கள் டீ, டிபன், சமையல் பாத்திரங்களை கழுவும் தண்ணீரை கீழே ஊற்றாமல், ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து, அது நிரம்பியவுடன், தெருவின் நடுவே இருக்கும் பாதாளசாக்கடையின் மூடியில் (மூடியையும் திறக்கவில்லை) இருக்கும் ஒரு சிறிய துவாரம் வழியாக , கையுடன் கொண்டு வந்து இருந்த ஒரு பெரிய புனலின் வசதியோடு, நிதானமாக அந்த கழிவுநீரை சாக்கடைக்குள் ஊற்றினாள்.

அவள் அதை ஊற்றிமுடிக்கும் வரை வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை, அவளும் வாகனங்கள் அவளுக்காக காத்திருக்கின்றன என்ற பதட்டம் இல்லாமல் தன் வேலையை செய்துக்கொண்டு இருந்தாள். எனக்கு என்னவோ நான் இப்படி ஒரு நிகழ்வை வாழ்க்கையின் முதன் முறையாக பார்க்கிறேன்…

எனக்கு தெரிந்து சாலையோர கையேந்தி பவன்கள் எல்லாம், கழிவுநீரை தெருவில் இறைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். இந்த சிறுமியின் செய்கையும், சமூகம் சார்ந்த பொறுப்பும் எனக்கு வியப்பை அளித்தது…இப்படியும் இருக்கிறார்களா?.

அணில் குட்டி அனிதா:- அட அம்மணி இன்னும் பிளாக்’கை விட்டு போலையா? சாவித்திரி அக்காவை சாவி ஆக்கி திருப்பி உள்ள வந்துட்டாங்க...போல...??!! ஹீம்…! அடுத்து யாராவது பெரிய அளவுல பிரச்சனை பண்ணாம அடங்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன்…..பாக்கலாம் எத்தனை நாளைக்குன்னு…. சரி.. கவி பாத்த குட்டிப்பாப்பா மாதிரி நீங்களும் யாராவது சாக்கட தண்ணியை தெருவில ஊத்தறத பாத்த… இந்த ஐடியாவை சொல்லுங்க...சூப்பர் ஐடியா ப்பா…முதல்ல கவி வீட்டுக்கிட்ட இப்படி ஏதாவது இருக்கான்னு பாத்து எல்லாருக்கும் அம்மணி செலவுல ஒரு புனல் வாங்கி தரனும். நான் ஒரு ரவுண்டு போய்ட்டு வரேன்……..


பீட்டர் தாத்ஸ் :- The highest wisdom is kindness

ஒரு தோழிக்காக, அவள் குழந்தையின் படிப்புக்காக…..

என்னுடன் பணிபுரிந்த தோழியிடமிருந்து, மனம் நொந்து ஒரு ஈமெயில் வந்து இருந்தது, அவளுக்கு போலியோ தாக்குதலினால் இரு கால்களும் நடக்க இயலாது, இருப்பினும், 3 சக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு வேலைக்கு வந்துக்கொண்டு இருந்தாள், கால்களுக்கு அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஷீ அணிந்து நடப்பாள், என்னிடம் பலமுறை அந்த ஷீ’ வை போட்டு நடப்பதால் வரும் கடும் வலியையும் , அதனால் அவள் கால்களில் ஏற்பட்ட வடுவையும் காட்டியிருக்கிறாள்.அவளின் வலியை என்னால் எப்போதும் உணரமுடிந்தது,

இருவரும் வேறு வேறு வேலைக்கு மாறி விட்டாலும் தொடர்பு இருந்து வந்தது. அவளுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை. இப்போது 6 ஆம் வகுப்பிலிருந்து 7 ஆம் வகுப்பிற்கு செல்கிறான். கணவர் என்ற பெயருடன் ஒருவர் வீட்டில் இருக்கிறார், அந்த கதையை சொல்லவோ பேசவோ எனக்கு உரிமை இல்லை என்பதால் ஒரு வரியில் முடித்துக்கொள்கிறென். அவர்களின் குடும்பம் இவளின் வருமானத்தில் மட்டுமே நடக்கிறது.

இப்போது அவளின் வயது காரணமாகவும் தொடர்ந்து வேலை செய்து கால்களில் சுத்தமாக வலுவிழந்ததினாலும் அவளால் முன்பு போல் வேலைக்கு செல்ல இயலவில்லை, மேலும் சென்னை போக்குவரத்து நெறிசல் காரணமாக அவளால் வெகு தொலைவில் கிடைக்கும் வேலையையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, நடைமுறை பிரச்சனைகள், உடல் பலவீனம், வீட்டு சுமை, குழந்தையின் கல்வி என்று அவளால் சமாளிக்க முடியவில்லை.

இப்போது வேலை இல்லாததால், LIC Agent க்கு பயிற்சி பெற்று, என்னிடம் ஒரு பாலிசி எடுக்குமாறு கேட்டாள். நானும் எடுத்து க்கொள்கிறேன் என்று சொன்னேனே தவிர, அவளின் எதிர்பார்ப்புக்கு தகுந்தமாறு என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதில் அளித்து, பாலிசியை எடுக்க முடியவில்லை. அதற்கு என் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் நானும் முன்பு போல் இல்லாமல் மாறிவிட்டேன் என்று தான் நினைக்கிறேன். யார் எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு பதில் அளித்தும், உதவிகள் செய்தும் வந்தேன், இப்போது ஏனோ அப்படி செய்ய முடியவில்லை என்பதை விட, செய்யும்படி என் மனநிலை இல்லை என்று சொல்லலாம். இந்த சுயநலத்தின் காரணமாக என் தோழியின் அழைப்பை மிக எளிதாக எடுத்துக்கொண்டு விட்டேன்.

ஆனால் அவளோ, மனம் நொந்து போய், நான் இறந்து போகலாம் என்றே நினைக்கிறேன், எல்லோரையும் போல் எனக்கும் கால்கள் இருந்தால் நான் இப்படி ஒரு துயரை சந்திதிருக்கமாட்டேன் என்று வேதனையாக எழுதியிருந்தாள். அவளின் இயலாமை அவளை இத்தனை வருடங்கள் கழித்து இப்படி யோசிக்கவைத்துவிட்டது. அதற்கு நானும் ஒரு காரணமக ஆகிவிட்டேன்.

இதை படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அவள் குழந்தையின் கல்விக்கு இந்த வருடம் ரூ. 7000/- தேவைப்படுகிறது, உங்களால் முடிந்த அளவு அவளுக்கு பண உதவி செய்து குழந்தையின் கல்விக்கு உதவுமாறு கேட்டு க்கொள்கிறேன். ஏதாவது உதவும் குழுக்குள் அந்த குழந்தையின் வருங்கால படிப்பிற்கான செலவையும் எடுத்துக்கொள்ளுமானால், அவளின் சுமை 80% குறைந்துவிடும். அவள் Data Entry வேலையும் செய்வாள், தேவைப்படுபவர்கள் அவளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இன்சூரன்ஸ் பாலிசி தேவைப்படுபவர்கள், அவளை தொடர்பு கொள்ளூங்கள், இல்லையேல், எனக்கு ஈமெயில் அனுப்பினால், நான் அவளை உங்களை தொடர்பு கொள்ள செய்வேன்.

தோழியின் பெயர் : சாவித்திரி
குழந்தையின் பெயர் : நவீன்
அவளின் தொடர்பு எண் : 9884269499
என் ஈமெயில் : gkavith@gmail.com

அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்…நிம்மதியா இருந்தேன்ங்க.. இந்த அம்மணி எழுத வரமாட்டாங்கன்னு நிம்மதியா இருந்தேன்…யாரோ தோழியாம்..சென்டிமென்ட்டா தாக்க, இவங்க நம்மள தாக்க வந்துட்டாங்கடோய்…. சரி மக்கா… பணம் அனுப்பறவங்க எல்லாம், சாவித்திரி அக்காவை நேரா கூப்பிட்டு கொடுங்க… கவிதா’ ஏதோ புது பிசினஸ், ஆரம்பிக்கறமாதிரி எனக்கு சந்தேகமாவே இருக்கு… உங்களுக்கு??????


பீட்டர் தாத்ஸ் :- It is not enough to have a good mind; the main thing is to use it well.

அடித்துக்கொண்டு சாகுங்கள் ஆணவக்காரர்களே!!

பெண் இல்லாமல்
பூமிக்கு வந்துவிட்டதாக
நினைக்கும்
ஆணவக்காரர்களே!

பெற்றத்தாயையும்
உடன் பிறந்த தமக்கையும்
உன்னை நம்பிய துணைவியும்
உனக்கு பிறந்த பெண்ணும்
உனக்காக எதையும் செய்யும் உன் தோழியும்
எப்போதும்
வேண்டும் உங்களுக்கு…

அடித்துக்கொண்டு
சாகும்போதும் கூட .......??
ஆம் வேண்டுமே….
ஆத்தா..அம்மா’ வென்று
அன்புடன் அழைக்க……………
பெண் வேண்டுமே…!!

உங்களின்
வீரத்தை(??)க்காட்ட
வீட்டு பெண்கள்
அத்தனை பேரையும்
வீதிக்கு இழுங்கள்
ஆம்
ஒருவரையும்-
விட்டு விடாதீர்கள்
அவன் வீட்டு பெண்ணை
நீ நிர்வாணமாக்கு
உன் வீட்டு பெண்ணை
அவன் நிர்வாணமாக்கட்டும்

உங்களையே
உலகமென்று நம்பும்
ஒரு பெண்ணை க்கூட
நீங்கள்
விட்டுவிடக்கூடாது -


அடித்துக்கொண்டு சாகும்
ஆணவக்காரர்களே…
உங்களின் வீரத்திற்கு ??!!
பின்னால் கூட
பெண் வேண்டுமா????…….
வெட்கமாயில்லை…………..?????????

குறிப்பு :- வீரம் அதிகமாகி என்னிடம் வந்துவிடாதீர்கள்… அய்யோ!!முடிந்தால் எந்த ஒரு பெண்ணை’யும் வீதிக்கு இழுக்காமல் சண்டையிட்டு செத்து மடிந்துத்தான் போங்களேன்….
உங்களை-
பெற்றவள் பெருமிதம் கொள்வாள்,
கட்டியவள் நிம்மதி பெருமூச்சு விடுவாள்
உடன் பிறந்தவளும் ஒழிந்தான் இன்றோடு என்று விழா எடுப்பாள்,
தோழிகள் மட்டுமே துக்கப்படுவார்கள்–(கடைசிவரை இவனை திருத்தவே முடியவில்லையே என்று)-

அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா………….நான் எஸ்கேப்பு… .. அம்மணி ரெம்ப சூடா இருக்காங்கோ………….நான் எஸ்ஸ்ஸ்ஸ் ஆயிக்கிறேன்ன்ன்ன்னுங்க….நீங்களாச்சு, அவங்களாச்சு…..

பீட்டர் தாத்ஸ்:- The scars you acquire by exercising courage will never make you feel inferior.

பத்மா’ ஸ் கிட்ச்சன்

ரொம்ப நாட்களாக சமையலையும் பதிவுல சேர்க்க வேண்டும் இருந்தேன், சமையல் இல்லாமல் நாம் இல்லை. அடிக்கடி உடல் நலமின்றி டாக்டரிடம் போவதற்கு பதில், நல்ல சாப்பாட்டை சாப்பிட்டாலே போதும் என்று என் ஆயா அடிக்கடி சொல்லுவார்கள்.

பத்மாவதி அம்மாள்’ என்னுடைய ஆயா,(அப்பாவின் அம்மா) அவர்களுடைய சமையலை சாப்பிட தவம் செய்து இருக்கவேண்டும். சமையல் மட்டுமே அல்ல, அதை மற்றவர்கள் வயிறு நிறைய சாப்பிட வைப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. மனசு நிறைய, சாப்பிடுபவர்கள் நல்ல உடல் நலத்துடன் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று பரிமாறுவார்கள். அவர்களிடம் சாப்பிட்ட உடம்பு மற்றவர்களிடம் இருந்து தனியாக நம்மை காட்டும். என் ஆயாவின் சமையலை சாப்பிடவே சொந்தக்காரர்களும், நண்பர்களும் வீட்டுக்கு வருவதுண்டு.

என்னுடைய ஆயாவிற்கு என்று தனி கைப்பக்குவம் இருந்தது, என் அத்தைகளும், நானும் அவர்களிடம் தான் சமையல் கற்றுக்கொண்டோம், ஆனால் அவர்கள் செய்வது போன்ற ருசி எங்களது சமையலில் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. சமையல் சொல்லி தரும் போது, சமையலை தவிர, உடன் என்ன வேலைகளை செய்யலாம், என்பதையும் சொல்லி தருவார்கள். கண் பார்த்து கை வேலை செய்யவேண்டும், யாரும் சொல்லிதராமேலேயே வேலை செய்ய பழக வேண்டும் என்று, கண்களால் பேசியே வேலை வாங்கும் திறமை அவர்களிடம் இருந்தது.

எனக்கு அவரின் சமையலில் பிடித்தது, அல்லது எனக்காக நான் விரும்பி சாப்பிடுவேன் என்பதற்காக அவர்கள் சமைக்கும் உணவு.

1. எல்லா வகை கீரையும்
2. வாழைக்காய் வருவல்
3. கத்திரிக்காய் பொறியல்
4. ரசம்
5. மீன் குழம்பு, (மீன் முள்’ளிற்கு பயந்து அதை சாப்பிடமாட்டேன்,ஆயா, ஆய்ந்து கொடுக்க கொடுக்க சாப்பிடுவேன். இன்னமும் எனக்கு மீன் ஆய்ந்து சாப்பிட தெரியாது, 1, 2 முறை முயற்சி செய்து தொண்டையில் மாட்டி பிரச்சனை ஆகி, அந்த பக்கமே தலைவைப்பதில்லை, சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன்)

பொதுவாக எல்லோருக்கும் அவரின் எல்லா சமையலுமே பிடிக்கும், குறிப்பாக மீன் குழம்பு, ரசம்.. சான்ஸே இல்லை, இது வரை அப்படி யாருமே ருசியாக சமைத்தது இல்லை. வெறும் ரசமும், வாழைக்காய் வறுவலும் இருந்தால் போதும் உலகமே மறந்து போகும். சாப்பாட்டின் ருசியால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்து இருந்தார்கள்.

பத்மா ஆயா எனக்கு கொடுத்த சில நல்ல குறிப்புகள் :-

1. தலைக்கு குளிக்கும் தினம், முடியை முடிந்துக்கொள்ளாமல் (முடியை விரித்து போட்டு) சமையல் அறைக்கு மட்டும் அல்ல, வீட்டிற்க்குள்ளேயும் வரக்கூடாது என்பார்கள். தலைமுடி சாப்பாட்டில் வந்துவிட கூடாது என்பதற்காக சொல்லுவார்கள். சமையல் செய்யும் போது தலைமுடி கட்டி இருக்கவேண்டும்.

2. சமையல் செய்யும் போது பேசக்கூடாது, சிலர் பேசும் போது வாயிலிருந்து எச்சில் தெறிக்கும். ஆனால் எச்சில் தெறிப்பது அவர்களுக்கே கூட தெரியாது. அது சமையல் பொருட்களில் படும், அதனால் பேசக்கூடாது என்பார்கள். சாமிக்கு படையல் வைக்கும் நாட்களிலும் எச்சில் படாமல் சமையல் செய்யவேண்டும், அதற்கும் இதே தான் –பேசக்கூடாது.

3. சமையல் செய்யும் போது நல்ல மனதுடன், நிதானுத்துடன் செய்யவேண்டும், அதாவது கோபமாக இருக்கும் போது சமைத்தால் அதன் ருசி நன்றாக இருக்காது என்பார். பிறரின் பசியை போக்கும் உணவு நல்ல மனதுடன், அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்தால் நல்ல ருசியாகவும், பக்குவமாகவும் சமைக்க முடியும் என்பார்.

4. டிவி பார்த்துக்கொண்டு, அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டும் சமைக்க கூடாது என்பார். சமையலில் பல்லி விழுந்தால் கூட நமக்கு தெரியாது சமையல் விஷமாகிவிடும், கவன குறைவால் சமையல் தீய்ந்து விடும், அல்லது அதிக நேரம் அடுப்பில் இருந்தால் அதன் ருசி மாறிவிடும் என்பார்.

5. எந்த வகை சமையல் செய்தாலும் அதற்கு தேவையான எல்லா பொருட்களும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தான் சமையலை தொடங்க வேண்டும், இல்லையென்றால், அதை வாங்கிவந்த பிறகே அந்த சமையலை செய்வார். சரி வெந்தயம் இல்லை, பரவாயில்லை என்று காரக்குழம்பு தாளிக்கவே மாட்டார்கள். ஏனென்றால் ஒவ்வொரு பொருள் சேர்ப்பதும் அது சாப்பாட்டிற்கு தனி ருசியும், சக்தியும் தரும் என்பதற்காகவே. அதனால் ஒன்று இல்லை, பரவாயில்லை என்று விட்டு விட்டு சமைக்க கூடாது என்பார்.

6. சமைத்த பாத்திரங்களுடனே பரிமாற எடுத்துசெல்லக்கூடாது. பரிமார தனிப்பாத்திரம் வைக்கவேண்டும்.

7. சாம்பார் கரண்டியை மற்ற உணவுகளில் போடக்கூடாது. கெட்டுவிடும்.

8. பால் காய்க்கும் பாத்திரங்களை வெயிலில் காயவைக்க வேண்டும். பொதுவாகவே பாத்திரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்த பிறகு தான் கவிழ்த்து வைக்கவேண்டும், இல்லையென்றால், பூச்சிகள் அண்டும் என்பார்.

9. சூட்டு உடம்புக்கார பெண்கள் இட்லி மாவை அவர்கள் கைவைத்து கரைக்க க்கூடாது. சீக்கிரம் புளித்துவிடும் என்பார்.

10. கீரை, மீன் குழம்பு போன்றவை சமைக்க தனித்தனி சட்டி வைத்து இருப்பார்கள். இதில் தனித்தனி என்றால் அசைவம், சைவம் வித்தியாசம் இல்லை. சட்டியின் டிசைன் அப்படி இருக்கும். கீரை கடையும் சட்டி உட்புறம் வரி வரியாக இருக்கும். ஆனால் மீன் குழம்பு செய்யும் சட்டி டிசைன் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும்.

11. எப்போதுமே (அவர் இருந்த வரை) முழு சமையலுக்கும் நல்லண்ணெய் மட்டுமே உபயோகித்தார். நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் தோற்றம் இளமையாக இருக்கும். அவருக்கு தலைமுடி 82 வயதிலும் நரை இல்லாமல் இருந்தது, இப்படி ஒரே எண்ணெய்யை பயன்படுத்தியது தான் அதற்கு காரணம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். அப்பளம் , வத்தல் பொறிக்க மட்டும் ரீபைன் ஆயில் உபயோகித்தார்.

எல்லாமெ எனக்கு அவர்கள் சொல்லிக்கொடுத்தது என்றாலும், 2, 3 ம் எனக்கு அவர் அடிக்கடி சொல்லும் உபதேசங்கள். நான் இருந்தாலே வீட்டில் சத்தம் அதிகமாக இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக்கொண்டே இருப்பேன், வேகமாக வேறு பேசுவேன். அவர்களுக்கு வயதாகி விட்டது அல்லவா அதனால், சில சமயம் காதை மூடிக்கொண்டு, “பாப்பா எனக்கு நீ பேசவதை ஜீரணிக்க முடியவில்லை, காது வலிக்குது, கொஞ்சம் அமைதியா இரு” நீ பேசறதனால் நிறைய சத்து உடம்பை விட்டு போய்டும், அப்புறம் வேலை எப்படி செய்வே? “ என்பார்கள். எந்த வேலை செய்தாலும் அமைதியாக செய்”என்பார்கள்.

நிறைய பதிவுகளில் சொன்னது போன்று அதிவேக கோபம், பிடிவாதம் போன்ற குணங்கள் என் சொத்தாகி போனதால், நான் சமைக்கும் போது நெடி நிறைய வந்து அனைவருக்கும் தும்மல் வருகிறது என்று, என் குணத்தை மாற்ற சொல்லுவார்கள். “நல்ல பெண்மணி இவள் நல்ல பெண்மணி “ என்ற பாட்டை அடிக்கடி பாடி என்னை வெறுப்பேற்றுவார்கள்.

இன்று ஒரு இனிப்போடு “பத்மா’ஸ் கிட்சன் ” னில் சமையலை ஆரம்பிக்கலாம். இது என்னுடைய ஆயாவின் சமையல் இல்லை. அத்தையிடம் கற்றுக்கொண்டு, இப்போது அடிக்கடி ஓவன்’ ல் எளிதாக செய்ய கற்றுக்கொண்ட டிஷ்.

பத்மா’ஸ் கிட்சன் – 1. பீட்ரூட் ஹல்வா

பீட்ரூட் – 4 மீடியம் சைஸ் (துருவி, கப்’பில் அளந்து கொள்ளவும்)

சர்க்கரை – பீட்ரூட் அளவில், 3/4 அளவு (இனிப்பு வேண்டும் என்றால் அதிகமாக போட்டு க்கொள்ளலாம்)

ஏலக்காய் :- 1 (நுணுக்கியது)

நெய்:- 5 ஸ்பூன்

முந்திரி பருப்பு – 4-5 (சிறு துண்டுகளாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.)

1. ஓவனில் வைக்கும் கண்ணாடி/பீங்கான் பாத்திரத்தில் மைக்ரோ வேவ்’ 100 ல், 1.5 mins செட் செய்து நெய்யை ஊற்றி சூடு செய்யவும். பிறகு அதில் பொடித்த முந்திரி பருப்பை போட்டு 2-3 mins வைக்கவும்.

2. முந்திரியை நெய்யை வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யுடன் பீட்ரூட் துருவலை போட்டு – 4-5 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.

3. பீட்ரூட் நன்றாக வதங்கி இருக்கும், இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி, திரும்பவும் 6-8 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.

அவ்வளவு தான் பீட்ரூட் ஹல்வா ரெடி – ஓவனிலிருந்து எடுத்து, பரிமாற தட்டில் கொட்டி ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி பருப்பு தூவி பரிமாறவும். இதே போன்று கேரட் ஹல்வாவும் செய்யலாம். இதை சூடாகவும் சாப்பிடலாம், பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக்கியும் சாப்பிடலாம்.

அணில் குட்டி அனிதா:- ம்ஹீம்! வீட்டுல 2 பேரு கஷ்டபடறது பத்தாதுன்னு… இது வேற ஆரம்பிச்சிட்டாங்களா?.. நீங்க எல்லாம் இவங்க சமையலை படிக்கறதோட நிறுத்திக்கோங்க.. அவ்ளோத்தான் நான் சொல்லுவேன்……….அவங்க ஆயா சமைச்சத சாப்பிட்டு இவங்க என்னவோ நல்லாத்தான் இருக்காங்க. .ஆனா இவங்க செய்த சமையல சாப்பிட்டுட்டு இவிங்க வூட்டுக்காரரும், பையனும்… எப்படா விடுவு காலம் கிடைக்கும்னு ..வெயிடிங்ஸ்………..!!  ரொம்ப யோசிக்காதீங்க.. நானும்தேன்……….

பீட்டர் தாத்ஸ்:- The secret of happiness is not in doing what one likes, but in liking what one does.

6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா--Part-2

சங்கு ஊதனாங்களா...இல்லையான்னு- தொடருது............

பாவம் அம்மணிக்கு டிரிப்ஸ் ஒரு கையில ஒரு stage க்கு மேல ஏத்த முடியாம..போக......இன்னொரு கைக்கு மாத்தினாங்க. என்ன பிரச்சனைன்னு தெரியாமையே 3 நாளும் போய்ட்டு இருக்கு.. நம்ம கொசு அண்ணனால், மலேரியா வந்திருக்குமோன்னு ஒரு சந்தேகமே தவிர அதுவும் டெஸ்ட் ரிசல்ட் எதிலும் பாஸிட்டிவா இல்ல..பாஸிட்டிவா வரும்னு யூகத்திலேயே இத்தன டிரீட்மெண்டும் நடக்குது..................(ஒரு வேல சிக்குன் குனியவாக்கூட இருக்கலாம் னு நான் guess பண்னேன்..எதுவா இருந்தாலும்..அம்மணியோட இம்சை இல்லாம கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கும் எனக்கு......ஹி..ஹி...)

4வது நாள்....குடுத்த மருந்து, மாத்திரையால அம்மணி நிலைம ரொம்ப மோசமாயிடுத்து. மனசு இறங்கி, அவங்க hubby, டாக்டர் தம்பதிகளை ரொம்ப request பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. வந்த பிறகு தான் தெரியுது, over dosage ஆல், அம்மணி வயிரெல்லாம் வெந்துபோய், தண்ணி க்கூட குடிக்க முடியாம ஆயிடுத்து. ஒரு ஸ்பூன்(ஆமாங்க நெசந்தான்) ஜீஸ் குடிப்பாங்க.. அப்படியே வாந்தி எடுப்பாங்க.. எதுவுமே உள்ளே போகல.. பேசற திராணிக்கூட இல்லாம போச்சு. திருப்பி டாக்டர் கிட்ட வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.. வாந்தி எடுக்க பயந்துக்கிட்டு liquid food ஒரு ஸ்பூன், 2 ஸ்பூன் ன்னு குடிக்க யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.......சாப்பிடவே முடியாம நிலைம ரொம்ப மோசமாயிடுத்து.........

அவங்க வூட்டுக்காருக்கு..ஒரே டென்ஷன்.. .வீட்டுல வந்து படுத்துக்கிட்டு ஓவரா சீன் போட்டு இம்சை கொடுக்கறாளே என்ன செய்யறதுன்னு தெரியல...... சரி என்ன ஆனாலும் ஆஸ்பித்திரியிலேயே ஆகட்டும்னு.. அம்மணிய நைஸ்ஸா ஏத்தி விட்டாரு.. எப்படி இருந்த உன்னை இப்படி ஆக்கிட்டாங்களேமா.. வா..போய் சண்டைப்போட்டுடு வரலாம்னு.. சொன்னதுதான்.. “சண்டை” ன்ற ஒரு வார்த்தைய கேட்டவுடனே...எங்க இருந்துதான் அம்மணிக்கு வீரம் வந்துதுன்னே...தெரியல.....” ஆமாங்க..விட கூடாது வாங்க போலாம்...” வரிஞ்சிக்கட்டிகிட்டு கிளம்பிட்டாங்க........

திருப்பியும் அதே ஆஸ்பித்திரி........அதே நர்ஸ் அக்கா.......ஆனா இந்த தரம் டாக்டர் அம்மா இல்ல டாக்டர் ஐயா..பார்த்தாரு.. கவிதாவோட கேஸ் ஹிஸ்ட்ரி (3 நாள்ல சாதரண ஜுரம் ஹிஸ்ட்ரி ஆயிடுத்து) படிச்சிட்டு, பெட்ல வந்து படுங்கம்மான்னாரு.
டாக்டர் “என்னமா ஆச்சு.?.”ன்னு .

(கவிதா செம கடுப்புல இருக்காங்க..அவங்கள பாத்து இந்த மாதிரியா அவரு கேப்பாரு)..

“ ம்ம்..சங்கு ஊதல ..அது ஒன்னுதான் பாக்கினாங்க..”

.டாக்டர் காதுல சரியா விழல.. உடனே..அவரு அவங்க hubby பக்கம் திரும்பி,

மேடம் என்ன சொல்றாங்க சார்?..
மேடத்தோட படத்துக்கு மால போடற நிலைமைக்கு கொண்டுவந்ததுக்கு நன்றின்னு மனசுல சொல்லிக்கிட்டு..

“டாக்டர், நீங்க ஹிஸ்டிரிய படிச்சிங்க..அவ்வளவு drugs கொடுத்த நீங்க அசடிட்டி கன்ட்ரோல் பண்ண ஒரு மருந்து கூட கொடுக்கல..அதனால அவங்களால தண்ணி க்கூட இப்ப குடிக்க முடியாம கஷ்ட படறாங்க..”

“ஓ..is it, அசடிட்டி கன்ட்ரோல் பண்ண மருந்து கொடுக்கலையா? “ஏன் கொடுக்கல.?”.

கவிதா வீட்டுகாரரும் டென்ஷன் ஆயிட்டாரு.. ‘என்ன டாக்டர் என்ன கேட்கறீங்க?”

டாக்டர், கவிதாவின் வயிரை அவரால் முடிந்த அளவுக்கு அழுத்தி (சோதனை பண்றாராமா) பார்க்க..

கவிதா..“டாக்டர்..ப்ளிஸ்..ரொம்ப வலிக்கது..”

டாக்டர்..”எங்கமா வலிக்குது..இங்கயா..இங்கயா..” என்று வயிறை ஒரு இடம் விடாம அழுத்த...

கவிதா..”டாக்டர்ர்ர்ர்ர்ர்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..நீங்க அழுத்தறதுதான் வலிக்குது..” விட்டுடுங்க...” என்றார்கள்

டாக்டர் ”இல்லமா..உங்களுக்கு என்ன problem ன்னு தெரிய வேண்டாம..பொருத்துகோங்க...”

“ டாக்டர் நான் தான் சொன்னேனே அசடிட்டி problem“ என்றார் கவிதாவின் வீட்டுக்காரர்.

“ஓ is it soo..” சரி சரி வாங்க உட்காருங்க.. உங்களுக்கு நான் புரியரமாதிரி சொல்றேன் “ ன்னு சொல்லிட்டு, நர்ஸ் அம்மாவை கூப்பிட்டு “அந்த 106 நம்பர் ரூம் ரெடி பண்ணுங்க..மேடம் ரொம்ப சீரீயஸ்யா இருக்காங்க..அட்மிட் பண்ணனும்..”

சார், மேடம் நிலைமைய பார்த்தா ஒரு 2 days complete rest and observation ல இருக்கணும், அதுக்கு அப்புறம் தான் என்ன ப்ராப்ளம்னு சொல்லவே முடியும்.....அதனால் நான் அவங்கள அட்மிட் பண்ணிக்கிறேன்..

(கவிதா “அது எப்படி புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி பேசி, ஆளமடக்கறீங்க” ன்னு மனசுலதான் நினைச்சிக்கிட்டாங்க.. வெளியில சொல்லவா முடியும்.)

“இல்ல அட்மிட் எல்லாம் வேண்டாம் டாக்டர், அசிடிட்டிக்கு மருந்து கொடுங்க போதும், அவங்கள வீட்டுல வச்சே நாங்க பார்த்துக்கறோம் “ என்றார் கவிதா வீட்டுக்காரர்.

கொஞ்ச நேரம், டாக்டரும், கவிதா வீட்டுக்காரரும் அட்மிஷன் பற்றி விவாதத்தில் இறங்க.. கவிதா..என்னடா இது வம்பா போச்சு திருப்பியும் நம்மை அட்மிட் பண்ணிடுவாங்களோன்னு பயந்து போய்,..........

“ Excuse me டாக்டர்,” என்று சொல்லிவிட்டு.........முடியாட்டாலும்....:ஓட்டமும் நடையுமா..ஆஸ்பித்திரிய விட்டு வெளியில வந்து..........அவங்க வண்டி பக்கதுல வந்து நின்னக்கிட்டு...ஸ்.ஸ்ஸ்ஸ்… தப்பிச்சேன்..ன்னு பெருமூச்சி விட்டாங்க..!

அப்புறம் என்ன, அசடிட்டிக்கு மருந்து சாப்பிட்டு, கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆனாங்க.....இதில இன்னும் ஒரு வாரம் ஆயிடுத்து….

ஆஸ்பித்திரியிலிருந்து வந்த பிறகு அம்மணி நினைச்ச அளவுக்கு நிஜமாவே இளைச்சுதான் போய் இருந்தாங்க.. கொஞ்சம் நார்மல் ஆன பிறகு office போனவங்கள..”யாரு நீங்க” இந்த சீட்டுல வேற ஒருத்தங்க இல்ல இருந்தாங்க..நீங்க நுயூ அப்பாயின்மெண்டான்னு” கேக்கற அளவுக்கு ஆளு இளைச்சு போய் இருந்தாங்கன்னா..பாருங்களேன்... 

இதான வேணாங்கறது.. எப்படி இருந்த கவிதா இப்படி இளைச்சாங்கன்னு சொன்ன நான்..அவங்க actual weight என்னன்னு சொல்லலையேன்னு நீங்க கேட்கறது புரியுது.. அதெல்லாம் கேக்கப்பாடது........ஏன்னா சொல்லவே முடியாது.....அம்மணி இன்னமும் அடங்காம........கொசு அண்டாத ஜிம்’மா கண்டுபிடிச்சி போய்க்கிட்டு தானே இருக்காங்க.. ......

யாருக்காவது வெயிட் குறையனும்னா.. தனி மெயில் அனுப்புங்க.......... அந்த ஆஸ்பித்திரி அட்ரஸ் தரேன்.....நேரா போனீங்கன்னா..அவங்களே அட்மிட் பண்ணிடுவாங்க.. அப்புறம் வெயிட் என்ன வெயிட்..............டேரக்ட் சங்குதாண்டீஈஈஈஈஈஈஈஈ.........................

பீட்டர் தாத்ஸ்:- Everything you need for a happy life is within yourself.

6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா-ஒரு உண்மை கதை ..

அணில் குட்டி அனிதா:- கவிதா 6 நாளில் எடைகுறைத்த நிஜத்தை எழுதபோவது நான் தேன்..வேற யாரு?? அம்மணி எவ்வளவு மிரட்டியும் இந்த ரகசியத்தை உங்கக்கிட்ட சொல்லாம விடறது இல்லைன்னு கலத்துல இறங்கிட்டேன்ங்க.........அம்மணியின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாத நெஞ்சம் படைத்த அசிங்கம்..ச்சே..ச்சே........சிங்கம்” இந்த “அணில்குட்டி” ன்னு சொல்லி, இந்த கதையல்ல நிஜத்தை எழுதுகிறேன்...

கவிதாவுக்கு எப்பவும் மார்கண்டேயினி'ன்னு நெனப்பு... அவங்க பையன் குழந்தையா இருக்கும் போது.........கவிதாவ எல்லாரும் அவனுக்கு “அம்மா” ன்னு சொன்னாங்க..பையன் கொஞ்சம் பெரிசா ஆனதும், பையனுக்கு “அக்கா” ன்னு சொன்னாங்க.. அதனால இப்போ அவங்க பையனுக்கு “தங்கச்சி” ன்னு சொல்ல வைக்கனுமாம்?!!!. ம்ம் ஆசை யாரைவிட்டது..அதுவும் இது பேராசை..யாராவது ரோடுல பார்த்து..என்னங்க உங்க பையன் வளர்ந்துகிட்டே போறான்..நீங்க..இன்னும் அப்படியே இருக்கீங்கன்னு சொல்லிட்டா போதும்..அம்மணிக்கு தலக்கால் புரியாது,..அன்னைக்கு பூரா..சீனோ சீன் தான்... என்ன நவீனோட “பாப்பா” ன்னு (அவங்க சொல்லல இவங்களே சொல்லிக்குவாங்க) சொன்னாங்கன்னு, பில்டப் பண்ணி சொல்லிக்குவாங்க..(ரொம்ப over தான், பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு பாப்பா ன்னா?) என்னத்த பண்ண, எனக்கு தங்கச்சி” ன்னு சொல்லாத வரைக்கும் நான் பிழைச்சேன்.

பீப்பாவின் sorry sorry ! பாப்பாவின் எடையை குறைக்க என்ன வழின்னு யோசிச்சி, gym க்கு போலாம்னு முடிவு பண்ணாங்க. ஆனா வீட்டுல ஆத்துகாரர் சரின்னு சொல்லனுமே?! நைசா matter ஐ ஆரம்பிச்சாங்க.. அவரோ ஒரு super look விட்டுட்டு, “உனக்கு அவசியம் தானா.. சும்மா இருக்கும் போதே அங்க கொடையது, இங்க குத்துதுன்னு சொல்லுவ..gym எல்லாம் உனக்கு சரிவராது, படுத்துடுவ..ன்னு” சொல்லிட்டு விட்டா பரவாயில்லையே.. “உனக்கு என்னமா.. இப்பவும் கல்யாணம் பண்ணப்ப எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்க “ என்றார்.

ம்ம்..இதுக்கு நீ குண்டாத்தான் இருக்கேன்னு நேரடியா சொல்லியிருக்கலாம். புருஷன்காரன் சொல்லி எந்த மகராசியாவது கேட்டதா சரித்தம், பூகோளம் இருக்கா?! நம்ம கவிதாவும் அப்படிதான்.. விடறதா இல்லை, “அப்படின்னா நான் தினமும் 2 வேலைதான் சாப்பிடுவேன், ஒரு வேலை பட்னி இருப்பேன்” னாங்க. அவரோ.. “நீ 3 வேலை சாப்பிடாம இருந்தாலும் பரவாயில்ல gym க்கு போகக்கூடாது” ன்னு சொல்லிட்டாரு. அம்மணி, விடல, நச்சறிச்சு, உண்ணாவிரதம் இருந்து, கடைசியில “என்ன பிரச்சனை வந்தாலும் என்னை (அவரை) தொந்தரவு செய்ய கூடாதுன்னு”சொல்லி, பர்மிஷன் குடுத்தாரு.

முதல் நாள் போனாங்க.. exercise எப்படி செய்யனும், எவ்வளவு நேரம் செய்யனும்னு சொல்லி கொடுத்தாங்க. வேகாதி வேகமா செய்ய ஆரம்பிச்சாங்க.. அம்மணி உள்ள போனதும், fan போட்டுக்கிட்டு தான் exercise பண்ணுவாங்க. ஆனா அந்த gym ஆளுங்க fan எல்லாம் போடக்கூடாது, வியர்வை வராதுன்னு சொல்லிடாங்க. அப்புறம் தான் அம்மணிக்கு பிரச்சனை நம்ம அண்ணன் “கொசு” மூலமா வந்தது. அம்மணிக்கு கொசுன்னாவே அலர்ஜி, bus, train ல போகும் போது கூட கொசுவத்தி ஏத்தி வச்சிகிட்டு போற கேசு.. இங்க ஒன்னும் முடியில.. கொசுவ விரட்டுவாங்களா?..வேக வேகமா exercise பண்ணுவாங்களா.?? பாக்க கொஞ்சம் பாவமா இருந்தது.. போன 2 -3 நாள்ல அவங்களுக்கு நின்னுடலாம்னு ஆயிடுத்து............

ஆனா ஆத்துக்காரரும், பையனும் கிண்டல் பண்ணுவாங்களேன்னு போய் வந்துக்கிட்டு இருந்தாங்க..3 ஆவது நாள் முடிந்த நிலையில்.. இராத்திரி தூங்கும் போது “உம்” கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. “அப்பவும்..இதெல்லாம் உன் உடம்புக்கு சரிவராது..நிறுத்திடுன்னு, அவங்க வீட்டுல வூட்டுக்காரரும், பையனும் சொல்லி பாத்தாங்க…. ம்ம்.. இவங்க எங்க...!! எப்படியும் ஒரு 5 கிலோ குறைச்சிட்டு தான் நிறுத்துவேன்னு சொல்லிடாங்க.. 4வது..நாள்...இராத்திரி.. பூரா உடம்பு வலியில தூக்கம் வராம கஷ்டப்பட்டாங்க.........ஆனாலும் எங்க கவிதா யாரு? விடுவாங்களா.. .5..நாள்..உடம்பை யாரோ முறுக்கி எடுக்கிற மாதிரி வலி, அப்புறம் லேசா சுரம் வந்துவிட்டது.. இராத்திரி ஒரு 1.30 மணி இருக்கும்..அம்மணிக்கு ஜன்னியே வந்துடுத்து.. இவங்க அனத்தறது தாங்கமுடியாம, இவங்க hubby என்னாச்சுன்னு தொட்டு பார்த்தா..?!! fever எகுறுது...105 டிகிரி....... அவரு அப்ப கோவத்தை காட்டமுடியாம..அர்த்த இராத்திரியில ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போனாரு..

இவங்க வீட்டு பக்கதுல..ஒரு super டாக்டர் “தம்பதி” சகிதமா ஆஸ்பித்திரி நடத்தி ஓஹோன்னு சம்பாதிக்கறாங்க. 24 மணி நேர ஆஸ்பித்திரி என்பதால் அங்க கூட்டிட்டு போனாங்க.. எப்படா பேஷண்டு வருவாங்க அட்மிட் பண்ணலாம்னு ஒரு கும்பலே அங்க காத்துக்கிட்டு இருந்தது.. ஒரு நர்ஸ் அக்கா, அம்மணி போட்ட சீனை பார்த்துட்டு..”இவங்க ரொம்ப சீரியஸ்ஸா இருக்காங்க.!! டாக்டர எழுப்பி கூட்டிட்டு வரோம்னு போனாங்க.. ம்ம்! வந்தாங்க டாக்டர் அம்மா, அவங்கள பார்த்தவுடனே அம்மணி சுரம் இன்னும் ஒரு டிகிரி ஜாஸ்தியாயிடுத்து........பின்ன என்னங்க,..அர்த்த இராத்திரியில பூதம் மாதிரி நைட்டீன்னு ஒன்ன மாட்டிக்கிட்டு..தல நிறைய (தூங்கறதுக்கு முன்னாடி வைச்சிருப்பாங்க போல) பூ வைச்சிக்கிட்டு...நெத்தி நிறைய பெரிய ரவுண்டு ஸ்டிக்கர் பொட்ட வைச்சிக்கிட்டு வந்தா.. பாக்கறவங்களுக்கு கதி கலங்கி போகாதா..?!!

வந்த டாக்டர் அம்மா, உடனே அட்மிட் பண்ணனும், டிரிப்ஸ் ஏத்தனும். ஜுரத்த குறைக்கனும்னு சொல்லி வேக வேகமா எங்க ஓடிட போறாங்களோன்னு ஒரு ரூம்ல போட்டு அடச்சி, டிரிப்ஸ் ஏத்த ஆரம்பிச்சிட்டாங்க...அடுத்த நாள் காலையில ஒரு பெரிய (மாத்திரை, ஊசி, மருந்து) லிஸ்ட் கொடுத்து வாங்கிட்டு வரசொன்னாங்க.. ஊசி மாத்திரமே ஒரு 20 இருக்குங்க.. அப்புறம் ஒரு நர்ஸ அம்மா வந்து, இரத்தம், யூரின் டெஸ்டு எடுக்க எழுதி கொடுத்தாங்க. அதுவும், அவங்க சொல்லற லேப்ல போய்த்தான் எடுக்கனுமாம். பாவம் அவங்க hubby, பெருங்குடியில், ஏதோ ஒரு சந்துல இருந்த அந்த லேப்பை கண்டுப்பிடிச்சி, கொடுத்து, ரிசல்ட் வாங்கி வர்றத்துகுள்ள நொந்து நூடுல்ஸ் ஆகி வந்தாரு,,,,,.

நம்ம கவிதா நிலைமைக்கு வருவோம், காலையில போட ஆரம்பிச்ச ஊசிங்க..நர்ஸம்மா..நிறுத்தல.. இந்த கை, அந்த கை, இந்த இடுப்பு, அந்த இடுப்புன்னு போட்டு தாக்கறாங்க...... எனக்கு சிரிப்பு அடக்க முடியல.........அம்மணிக்கோ வாய திறக்க முடியில. அந்த பக்கம் அவங்க hubby நடக்கறத எல்லாத்தையும் “மவளே வேணான்னு சொன்னேன் கேட்டியா, அனுபவி” ன்னு பார்த்து ரசிச்சிகிட்டு இருந்தாரு.. 3வது நாள் கவிதாவால பேசக்கூட முடியல..தட்டு தடுமாறி அவங்க hubby ஐ கூப்பிட்டு, “பழிவாங்கனும்னு முடிவோடதான் இருக்கீங்களா..படிச்சவரு தானே நீங்க?.. இவ்ளோ ஊசி போடறாங்க.. என்ன என்னவோ மாத்திர தராங்க என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களா?.. இன்னும் ஒரு நாள் இங்க நான் இருந்தா..எனக்கு சங்கு ஊத வேண்டியது தான்..என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க..ப்ளிஸ்..”: கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க........... அவரோ ‘’அப்போ ஒரு நாள் கழிச்சே வீட்டுக்கு போலாம்னு” கூலா சொல்லிட்டு போய்ட்டாரு.. வாழ்க்கையில அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை அவர் தவற விட தயாரா இல்ல.

சரி ..சரி.............சங்கு ஊதனாங்களா...இல்லையான்னு....அடுத்த பதிவுல பார்ப்போம்......

பீட்டர் தாத்ஸ் :- A new attitude invariably creates a new results.

அய்யோ! இந்த பக்கம் வந்துடாதீங்க!! கவிதா பாடியிருக்காங்க..

அணில் குட்டி அனிதா:- ஜன கன மன பாட சொன்னா... இங்க பாருங்க..அம்மணி அழுது தீத்துட்டாங்க..அத வேற சர்வேசன் அண்ணன் சூப்பர் ன்னு சொல்றாரு.. நிசமாத்தான் கேட்டாறா..இல்ல..அம்மணி வருத்தப்பட போறாங்கன்னு.. சொன்னாறான்னு தெரியல.. அவ்வளவு சோகமா பாடியிருக்காங்க.... அம்மணிய பாட வேண்டாம்னு நானும் எவ்வளவோ தடுத்துப்பார்த்தேன்..முடியல... நீங்களும் கூட அழணும்னா... இங்க போங்க...!!

http://neyarviruppam.blogspot.com/2007/07/12.html

சரி..அம்மணி'மட்டும் இல்ல இன்னும் நிறைய பேரு பாடி அசத்தி இருக்காங்க.. நீங்களும் சீக்கிரம் பாடி அசத்துங்க.. .பாவம் சர்வேசன் அண்ணே... கூவி கூவி அழைக்கிறாரு..நீங்க யாரும் கண்டுக்கவே மாட்டேன்ங்கறீங்க...

கொஞ்சம் அவரை கண்டுக்கோங்களேன்.........

பீட்டர் தாத்ஸ்:- Success is a journey, not a destination.

சினிமாவை பார்த்து திருந்தியவர்கள் உண்டா?

சினிமா என்பது ஒரு தனிமனிதனின் கற்பனை. நடந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அல்லது தன்னுடைய கற்பனையை கதைகளாக்கி சினிமாவை படைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஒரு தனிமனிதனின் படைப்பு அன்றி வேறு ஒன்றும் இல்லை. ஒரு படத்தின் மொத்த அம்சமும் ஒரு இயக்குனரின் தனிப்பட்ட கருத்தே. இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது.

ஒரு தனிப்பட்ட மனிதனின் கற்பனையை அவர் காசாக்குகிறார். நாமும் அவரின் கற்பனையை, திறமையை கண்டு மகிழ்ந்து, திரைப்படத்தை காசாக்கி கொடுக்கிறோம். ஒரு படத்தில் சொல்லியிருக்கிற கதையில் வரும் நல்லவை, கெட்டவை எல்லாமே அந்த தனி நபரின் முழு கற்பனை, அவருடைய பார்வையில் அவர் சொல்ல நினைப்பதை சொல்லியிருப்பார் அல்லது அவரின் இயற்கை குணத்தின் பிரதிபலிப்பாக கூட இருக்குமே அன்றி வேறு ஒன்றும் இல்லை. அப்படியிருக்க ஒரு கதையை இது சரி, இது தவறு என்று யாராலும் யாரையும் சாடமுடியாது, அதில் எந்த அர்த்தமும் இல்லை.

அப்படி நாம் விமர்சனம் செய்தால் அந்த குறிப்பிட்ட திரைப்படத்தை நம் சிந்தனையில், நம் பார்வையில் நாம் எப்படி யோசிக்கிறோம் அல்லது எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம் என்ற தனிப்பட்ட கருத்தே. பருத்திவீரன் என்ற திரைப்படத்தை அனைவரும் பாராட்ட ஒருவர் மட்டும் அது ஒரு படமா? பெண்ணிடம் பணத்தை வாங்கி, வேலை வெட்டி இல்லாமல் ஊரை ஏமாற்றி சுற்றும் ஒரு உதவாக்கரை இளைஞனின் கதை. இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று எழுதி இருந்தார். இப்படியும் சிலரால் திரைப்படங்களை அவர்களின் பார்வையில் விமர்சிக்க முடிகிறதுதான்.

இதில் சினிமாவை பார்த்து பாதிப்பு என்று சொன்னால், “காதல்” என்ற ஒரு விஷயம் மட்டுமே. காதலினால் சிந்திக்கும் தன்மையை இழந்த நம் மக்கள், சினிமாவை பார்த்து அதில் வரும், ஒரு தனிப்பட்ட மனிதனின் கற்பனையை மையமாக வைத்து சொல்லப்பட்ட காதலை, பின்பற்றும் காதலர்கள் அதிகம். “ஜில்லுன்னு ஒரு காதல் “ படம் பார்த்துவிட்டு, அதைபோன்று வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண், எந்த அளவு தன் அறிவை இழந்தவளாக இருக்கிறாள் என்பது அவளுக்கே தெரிவதில்லை. “ஏக் துஜே கேலியே “பார்த்து தற்கொலை செய்து கொண்ட காதலர்களும் உண்டு. "அலைபாயுதே" பார்த்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல் பைத்தியங்கள் உண்டு. "இதயத்தை திருடாதே" பார்த்து, எல்லோரைடமும் "ஓடி போலமா?" என்ற கேட்டவர்களும் உள்ளனர்.

சினிமாவை பின்பற்றி, அது பொழுது போக்கிற்கு மட்டுமே என்பதை மறந்து, தன் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் இவர்கள், சினிமாவில் சொன்னப்பட்ட ஒரு விஷ்யம் ஒரு தனிமனிதனின் கற்பனை, அது சினிமாவிற்கு மட்டுமே பொருந்தும், யாதர்த்த வாழ்க்கைக்கு பொருந்தாது என்பதை சிந்திக்க தவறுகிறார்கள். Start Camera, Action, and Pack up, என்பதோடு சினிமா காதலும், காதல் வசனங்களும் முடிந்து போகின்றன.

வியாபார நோக்கோடு, கவிர்ச்சிக்காக வேண்டி, பெண்கள், பாட்டு, நடனம் இத்தியாதிகள் சேர்க்கபடுகின்றன. இதில் ஒரு விஷயம் புரியவில்லை, பெண் அமைப்புகள் - பெண்களை திரையில் இழிவாக பேசிவிட்டாலோ, பாடல்கள் எழுதிவிட்டாலோ, குய்யோ, முய்யோ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் ஆனால், அவிழ்த்து போட்டுவிட்டு ஆடும் பெண் நடிகைகளை எதிர்த்து இதுவரை போர்கொடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்ததாக தெரியவில்லை.

மிகவும் சமுதாய நோக்கோடும், சிந்தனையோடும் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவது இல்லை. நாமும் அந்த படங்களை பார்த்து திருந்திவிடுவதும் இல்லை. அப்படி திருந்தி இருந்தோமானல், அப்படி படங்கள் மட்டுமே திரைக்கு இப்போது வந்திருக்கும். சினிமாவை நம்பியே வாழ்க்கை நடத்தும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அது அவர்களின் தொழில், செய்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.

அதற்கு அடிமையாகி மூடர்கள் போல திரியும் நாம், சினிமா என்பது ஒரு பொழுது போக்குக்காக மட்டுமே என்பதை உணர்ந்து அதற்கு எந்த அளவு நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவும் தரவேண்டுமோ, அவ்வளவே தரவேண்டும்.

கறுப்பு பணம் என்பதை கருவாக கொண்டு எடுத்த “சிவாஜி” படத்தில் உள்ளேயும் , வெளியேயும் எவ்வளவு கறுப்பு பணம் நடமாட்டத்தில் இருந்தது என்பதை அனைவரும் அறிவர். சமீபத்தில் தான் ஜாக்கி சேனின், “Rob B Hood “ திரைப்படம் பார்த்தேன், அதில் வருகின்ற சில முக்கிய காட்சிகள் “சிவாஜி” படத்தில் அப்பட்டமாக அப்படியே வருகின்றன. இப்படி தனிமனித கற்பனையன்றி, அடுத்தவர்களின் கற்பனையையும் திருடி படங்கள் வெளிவருகின்றன. நாமும் அதை பார்த்துவிட்டு ஆகா..ஓகோ என்று கொண்டாடுகிறோம், திரை அரங்குகளில் அடித்துக்கொள்கிறோம், பால் அபிஷேகம் செய்கிறோம்.. பாராட்டு மழையும் பொழிகிறோம்….

அணில் குட்டி அனிதா:- மக்கா… தனியா லெட்டர் அனுப்பி சினிமா விமர்சனம் எழுதி டைம் வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. …...அடடா….அம்மணி திருந்திட்டாங்க போல இருக்குன்னு நினைச்சேன்….ம்ஹீம்.. எங்க.. …. பதிவா எழுதிட்டாங்க… முடியலைங்க….!!

பீட்டர் தாத்ஸ்:- Failure is the opportunity to begin again more intelligently.

எங்கள் வீட்டு மரம்ஏறி’யும் - சட்டியில் சாப்பாடும்

எங்கள் வீட்டில் தென்னை மரம் ஏறி, தேங்காய் மற்றும் ஓலைகளை வெட்டி தருபவரை “மரம் ஏறி” என்று அழைப்போம். அவரின் பெயர் ஜெயபால். ஆயா, தாத்தா, அப்பா மட்டுமே பெயர் சொல்லி அழைப்பார்கள். மற்றவர்கள் “மரம் ஏறி” என்று தான் கூப்பிடுவோம். 3 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து அவரே வேலை இருக்கிறதா என்று கேட்பார்.

எங்களுக்கு தேவை என்றால், யாராவது அவருடைய கிராமத்திற்கு போய் தான் அழைத்து வர வேண்டும். விழுப்புரம் தாண்டிய உடனே சென்னை வரும் நெடுஞ்சாலையில் ஒரு மேம்பாலம் வரும். (இப்போதும் உள்ளது), அதனை அடுத்த சிறு கிராமம் தான் அது. பெயர் மறந்துவிட்டது. அங்கே சென்று ஜெயபால்’ என்று கூறினால் போதும், அவர் எங்கிருந்தாலும் மக்கள் நம்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள்.


இவர் வரும் போது ஒரு குடுவை (படம் #.1) எடுத்து வருவார். இந்த குடுவை முறம் செய்யும் நாரை கொண்டும், தென்னைமரத்து பாலையை கொண்டும் செய்திருப்பார்கள். மிக கடினமாகவும், அழுத்தமாகவும் இருக்கும். இந்த குடுவையை இடுப்பில் பச்சை கலர் பெல்ட்டை கொண்டு எப்படியோ முடிந்து இருப்பார். அது மரம் ஏறும் போது அவருடன் இருக்கும். அதில் தேங்காய், ஓலைகளை வெட்டும் கத்தி இரண்டு, ஒரு சிகப்பு கலர் துண்டு இருக்கும். கால்களில் விழலால் அல்லது வைக்கோலால் செய்த ஒரு பெல்ட்டை (படம் #.2) மாட்டிக்கொண்டு (படம் #.3) மரம் ஏறுவார். இந்த பெல்ட்டை அவர் தோலில் தொங்கவிட்டுக்கொண்டு வருவார்.

கூலி,தேங்காய்’களின் எண்ணிக்கை பொருத்து தான், ஒரு மரத்திற்கு ரூ.3ம், ஒரு தேங்காய்க்கு மட்டை உரித்து கொடுப்பதற்கு 10 பைசா கொடுப்பார்கள். கடைசியாக 5 ரூ & 25 பைசாவாக அவரின் கூலி உயர்ந்தது. ஓலை பின்னுவதற்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பது எனக்கு மறந்துவிட்டது. அநேகமாக ஒரு ஓலைக்கு ரூ.1 –க்குள் தான் இருக்கும். அதற்கு மேல் இருக்க வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை.

கண் சிமிட்டாமல் கவனித்தால் கூட எப்படியும் 1, 2 தேங்காய்களை அவர் எடுத்து குடுவையில் மறைத்து விடுவார். அவர் குடுவையை கழட்டி வைத்துவிட்டு அப்படி இப்படி போகும் சமயம் பார்த்து, நான் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பேன். நல்ல பழக்கம் இல்லை என்றாலும், கூலி கொடுத்த பின்னும் அவர் தேங்காய்களை மறைத்து வைப்பது வாடிக்கை என்பதால், எத்தனை எடுத்து வைத்துள்ளார் என்பதை பார்ப்பேன். அதில் அவரின் சாமர்த்தியத்தை தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அன்றி வேறொன்றும் இல்லை. அந்த தேங்காய்களை கடையிலோ, வீடுகளிலோ விற்றுவிடுவார். அதில் அவருக்கு கொஞ்சம் பணம் வரும். மேனஞ்மென்ட் படித்தவர்கள் இப்போது இவையெல்லாம் என்னையும் சேர்த்து தொழில் சாதூரியம் என்று சொல்லுவார்கள்.

இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். அதனால் அவருக்கு சாப்பாடு சட்டியில் ஓரமாக கைப்படாமல் வைப்பார்கள். அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு, கழுவி ஓரமாக கவிழ்த்துவிட்டு போவார், பிறகு அதனை நாங்கள் ஒரு முறை நன்றாக கழுவி அதற்கான இடத்தில் எடுத்து வைப்போம். நாங்கள் உபயோகிக்கும் பாத்திரங்களை அவர்கள் தொட்டதே இல்லை. ஓரமாக சந்து வழியே வந்து அப்படியே சென்று விடுவார்கள். வீட்டிற்க்குள் அவர்களாகவே வரமாட்டார்கள். வெளியில் கொடியில் தொங்கும் துணிகளை கூட தொடாமல் குனிந்து அல்லது ஒதுங்கி செல்வார்கள். வேலை நடக்கும் போது அவர்கள் தொட்டுவிடுவார்களோ என்று , ஆயா துணிகளை உள்ளே எடுத்துவந்து விடுவார்கள்.

அவர் ஓலை கழித்து , ஓலை பின்னும் வேலைக்கு வரும்போது எல்லாம், சாப்பாடு நாங்கள் தான் தருவோம். சாதம் வடித்த கஞ்சி, சாதம், புளிவிட்டு கடைந்த அரைக்கீரை தான். ஓலை பின்ன வரும் போது குடும்பத்தோடு வருவார். பெண் ஆட்களும் வேலை செய்ய வருவார்கள். ஒரு 4, 5 ஆட்கள் வேலைக்கு வருவார்கள்.

ஆயாவை நான் தான் ரொம்பவும் தொந்தரவு செய்து கேள்விகள் கேட்பேன். அவர் தொட்டு வெட்டி கொடுக்கும் தேங்காவை மட்டும் நாம தொட்டுத்தானே உள்ளே எடுத்து வைக்கிறோம், சாமிக்கும் அந்த தேங்காவை தானே உடைக்கிறோம். ஏன் இப்படி சட்டியில் சாப்பாடு கொடுக்கிறாய்?, மனுஷன் தானே அவர்? பாவமாக இருக்கிறது என்பேன். “உனக்கு அது எல்லாம் புரியாது, தெரியாது, பேசாமல் சொன்னதை மட்டும் செய், கூட கூட பேசாதே” என்று வாயை அடைத்து விடுவார்கள். எனக்கு மட்டும் இந்த பாகுபாடு பிடிக்காது. “ஏன் சுட சாதம் கொடுக்கும் போது கஞ்சி வேற கொடுக்கற?, என்று கேட்பேன். அதற்கு அவர்- “கஞ்சி அவங்களுக்கு குளுக்கோஸ் கொடுக்கற மாதிரி, வெயில்ல நிறைய வேலை செய்யறாங்க, இது தான் தாகத்தை தணிக்கும் “ என்பார்கள்.

அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கிணற்றலிருந்து இரைத்து ஊற்றவேண்டும், குனிந்து கையை குவித்து குடிப்பார்கள் அல்லது அவர்கள் கொண்டு வந்த பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ற சொல்லி வாங்கி வைத்து க்கொள்வார்கள். எனக்கு இதில் புரியாத விஷயம், அவர்கள் பின்னிய ஓலையை எண்ணும்போது நாங்களும் தொட்டு தான் வாங்கி அடுக்கி வைப்போம். ஓலைகளில் அவர்களின் கைப்படாத இடம் இருக்கவே முடியாது.

எப்படியும் மதியம், என்னை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஆயா தூங்கிவிடுவார்கள். அப்போது யாருக்கும் தெரியாமல் மரம் ஏறி குடும்பத்துடன் ஒன்றுக்குள் ஒன்றாகி ஆகிவிடுவேன். மரம் ஏறி மனைவி பக்கத்தில் உட்கார்ந்து ஓலை பின்ன கற்றுக்கொள்வேன், வித விதமான முறைகளை சொல்லிதருவார்கள். சின்ன சின்ன சொப்பு கூட நான் விளையாட ஓலையில் பின்னித்தருவார்கள். (என் தொந்தரவு தாங்காமல்) எனக்காக சில கழித்த (வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட) ஓலைகளை ஜெயபால் வெட்டி தருவார், நானும் அவர்களுடம் உட்கார்ந்து பின்னுவேன், அவர்களின் குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டு சுற்றி வருவேன், ஓடிப்பிடித்து விளையாடுவேன். ஓலையை வைத்து பாம்பு செய்து அவர்களை பயமுறித்தி விளையாடுவேன். ஓலையை மேல் நோக்கி பிடித்து வேகமாக கிழித்து ராக்கெட் விடுவேன்.

ஆயா எழுந்துவிடும் சமயம், நானும் அவர்களிடமிருந்து தள்ளி வந்து விடுவேன். நான் யாரோ அவர்கள் யாரோ என்று. கூலி வாங்கும் போது என்னன குழந்தைகளும், பெண்களும் தூர இருந்து பார்த்து லேசாக சிரிப்பார்கள்.

அணில் குட்டி அனிதா:- கதை சொல்லிட்டாங்களா? ம்ஹீம்..அப்பன்னா.. இந்த வேலை இல்லன்னா.. வீடு வீடா போயாவது ஓலைபின்னி நீங்க பொழச்சிக்குவிங்களா கவிதா?.. மக்கா உங்க வீட்டுல ஏதாவது ஓலை பின்ற வேல இருந்தா சொல்லுங்க………..அம்மணி துள்ளி குதிச்சி வந்து செஞ்சி குடுத்துடுவாங்க… as she mentioned above, you guys can pay to her.. oopppppppps….ஏழை மக்களை ஒரு குடும்பம் கூலி விஷயத்துல எப்படி ஏமாத்தி இருக்கு பாருங்க.. ??!!

பீட்டர் தாத்ஸ் :- We will not know unless we begin.

கணினி ஓவியங்கள் சில....

ஆற்றங்கரையில்.....



கண்களில் ஒரு கவிதை.....



இருளின் ஒளியில்.....