பொதுவாக பெற்றோரின் பழக்க வழக்கங்கள் பிள்ளைகளை வெகுவாக பாதிக்கும், அப்படியான ஒரு பாதிப்பாக செடிகள் வளர்ப்பு என்னிடமிருந்து நவீனுக்கு தொடர்கிறது. 

அவனுக்கென்ற வீடு வாங்கியவுடன், முதல் வேலையாக 8 தொட்டி செடிகளை வைத்துக்கொடுத்து, பரமாரிக்க சொல்லியிருந்தேன். ஆரம்பித்தில் ஆர்வமாக செய்தவன், வேலை பளூ, வெளியூர் பயணம் போன்றவற்றால் சரியாக கவனிக்காமல், சில செடிகள் செத்தும் போயின.

நானும் அவனோட தங்க ஆரம்பித்தவுடன், திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பித்து நிறைய புதிய செடிகளும், தப்பிப் பிழைத்த செடிகளையும் கவனிக்க, அவை பச்சென்று வளர்வதை பார்த்து, நவீன் அவனாகவே புதிய செடிகள் வாங்கி வைக்க ஆரம்பித்தான். நான் அவற்றை கவனித்தது போக, அவனாகவே தனியாகவும் கவனிக்க ஆரம்பித்தான்.


தினம் காலையில் எழுந்தவுடன், செடிகளை நோட்டம் விடுவதை முதல் வேலையாக வைத்திருந்தான். தவிர, பூச்சி வருவதைப்பார்த்து, ஆர்கானிக் பூச்சி மருந்து வாங்கி வைத்து அதை எப்படி பயன்படுத்தனும்னு எனக்கு பாடம் எடுத்தான். நான் கேட்டுக்கொண்டேனே ஒழிய, அதை இதுவரை பயன்படுத்தல, அதையும் அவனையே செய்யவைக்க வேண்டும் என்பதே என்னோட திட்டம்.

ஆர்கானிக் உரம், பூச்சிமருந்து என அவனே பயன்படுத்தினான். பெரிய தோட்டம் ஒன்னுமில்ல, 10-12 தொட்டிசெடி, அதை கவனமாக பார்த்துக்கொள்வதில் அவனின் பங்கும் அதிகரித்து வருகிறது.


சமீபத்தில் கொடைக்கானல் சென்றபோது,  ரோஜா செடி ஒன்றை வாங்கிவந்தான். வந்ததிலிருந்து 1008 conditions, அது இன்னும் வேர் விடல, அதை வேற தொட்டியில் வைக்கக்கூடாது, வெயில்ல தான் வைக்கனும், அதுமேல நிறைய வெயில் படனும்னு நய் நய் னு தினம் அது பின்னாடியே இருப்பான். நான் ஒரு இடத்தில் தொட்டிய வைத்தால், வெயில் படும் இடமாக தள்ளி வைப்பான், அது நடுக் கூடமாக இருந்தாலும் அவனுக்கு கவலையில்லை. செடியின் மேல் வெயில் படனும், அது மட்டுமே அவனோட குறிக்கோள்.  வாங்கிட்டு வந்த கருப்பு ப்ளாசிட்க் கவரிலேயே செடி இருந்தது, கொஞ்சம் இலைகள் விட்டு வளர ஆரம்பித்தவுடன், வேறு தொட்டியில் மாற்றிவைக்க கேட்டுக்கிட்டே இருந்தேன். லேசில் சரின்னு சொல்லல, அப்புறம் வேர்விட இடம் வேணும்டா, பெரிய தொட்டியில் வைக்கனும்னு கெஞ்சி கூத்தாடி தொட்டியில் மாற்றி வைத்து பரமாறிக்க ஆரம்பித்தோம்.

ஒருநாள், இரவு 8-9 மணி இருக்கும், செடி இருக்குமிடத்தில் வெளிச்சமில்லை. நான் வேலையில் மூழ்கியிருக்க, அவன் செடிகள் இருக்குமிடத்தில் என்னமொ செய்துக்கொண்டு இருந்தான்.. இருட்டில் என்ன செய்கிறான் எனப்பார்த்தால், மொபைல் டார்ச்சை அடித்து ரோஜா செடியை குனிந்து கவனிச்சிட்டு இருந்தான். 

'அடேய்ய்ய்ய்... என்னடா செய்யற...வய் இவ்ளோ ஆர்வம்...காலையில பாரு.. உன் செடி நல்லாதான் இருக்கு'..னு சொல்லி, ரோஜா செடி மேல் அவனுக்கிருந்த ஆர்வத்தைப்பார்த்து வியந்துப்போனேன். அவனோட ரோஜா செடியில், முதல் மொக்கு & பூ வந்திருக்கிறது, this is very special to me. இதை பதிவு செய்து வைக்கவேண்டும் என்பதற்கே இந்த பதிவு.

ரோஜா செடி தவிர, Indoor plants தொடர்ந்து வாங்கிவர ஆரம்பித்திருக்கிறான்.
ரோஜா செடிக்கு நேர் மாறாக இவற்றிற்கு சூரிய வெளிச்சமே தேவையில்லை, தண்ணீரும் தேவையில்லை. அதையும் கவனமாகப் பார்த்துக்கொள்கிறான். ஒரு செடி வளரவேயில்லை என கவலைப்பட்ட போது, அதை இடம் மாற்றி வைத்து, தண்ணீ ஊத்தி அதை கொல்லாதே ன்னு கோவப்பட்டு இடத்தை மாற்றி வைத்து இப்போது அந்த செடி துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது.

ஆக, என்னைவிடவும் இப்போது அவன் செடிகள் விசயத்தில் அதிக ஆர்வத்துடனும் அவற்றைப்பற்றி நன்கு அறிந்தவனாகவும் இருப்பது எனக்கு பெருமையாகவே இருக்கிறது.

என்னைத்தொடர்ந்து ...என் கணவரும், மகனும் செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் காண்பிப்பது மிகுந்த மனத்திருப்தியை கொடுக்கிறது.

அணில் குட்டி : ஒத்த ரோசா க்கு  எவ்ளோ சீன்னு.....

பீட்டர் தாதஸ் : Like people, plants respond to extra attention - H. Peter Loewer