பள்ளிக்கூடத்தில் எழுதிய தமிழ். தமிழில் "Assignment/Project " என்றாலே பாரதியார் பாடல்கள் அல்லது காந்தி தாத்தா பற்றிய ஏதாவது ஒன்றைதான் செய்திருக்கிறேன். முண்டாசோடு பாரதியாரை வரைந்து அவருடைய கவிதையை பெரிய சார்ட் பேப்பரில் எழுதிச்சென்றது நினைவிருக்கிறது.

பள்ளிக்கு பிறகு தமிழில் எழுதும் பழக்கமே இல்லாமல் போனது, 2003-04 சென்னை வானொலி நிலையத்தில் தற்காலிக அறிவாப்பாளராக இருந்தபோது, என் நிகழ்ச்சிகளுக்கு நானே எழுதிக்கொண்டு போகவேண்டிய கட்டாயம். 15-20 நிமிடம் வரக்கூடிய கவிதைகள் கூட எழுதவேண்டிய நிர்பந்தம். கட்டாயம் வரும் போது, எழுத்தும் தானாக வந்ததென்னவோ உண்மை. A4 தாளில் 6-7 பக்கத்திற்கு கவிதை எழுதிச்சென்றிருக்கிறேன். அதுவுமே பத்தாமல், நேரத்தை சரிக்கட்ட ஒரு பத்தியை இரண்டு முறை படிக்கவேண்டி வந்தது.
 
நிற்க, தமிழ் எழுதுவது இத்தோடு நின்றது. இணையத்தில் எழுதுவது இல்லை டைப்புவது மட்டுமே. ஆக எழுத்துப்பழக்கம் அறவே நின்று போனது. நவீனுக்கு பள்ளியில் செய்துக்கொடுத்த, வரைந்துக்கொடுத்த "Assignment/Project " எல்லாமே ஆங்கிலம். அவர் பொறியியல் படிக்கும் போதுக்கூட "Practical " நோட்டுப்புத்தகத்தில் வரைந்து கொடுப்பது என் வேலையாகவே இருந்தது. ஆனால் என்ன, பள்ளிக்காலத்தில் கடமை, கல்லூரி காலத்தில் ஒரு படத்திற்கு இவ்வளவு என பேரம் பேசி காசு வாங்கிடுவேன். (ஹி ஹி.ஹி.....). கொடுக்கற காசை எப்படியாச்சும் நாமளே ஆட்டயப்போடனும்னு செய்யற சதி தான் வேற ஒன்னுமில்ல. :)

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ஒரு "Project". பாட்டு டீச்சர் இதை சொல்லும் போதே, கிரியேட்டிவாக செய்யனும்னு சொல்லிட்டாங்க. சொன்னவுடனேயே "வாத்தும்,மீனுமே" என் நினைவுக்கு வந்தது. அங்கேயே நோட்டில் குறித்துக்கொண்டு வந்தேன். பிறகு இரண்டு நாட்களுக்கு ரொம்பவே ப்ளாக்' காக இருந்தேன்.  இதுல என் போட்டியாளர்கள் எல்லாம் 3.5 வயது குழந்தையிலிருந்து 10 வயது வரையிலான குழந்தைகள். போட்டியிலிருந்து விலகிடலாமான்னு யோசிச்சேன்."ச்சே.. கூடாது. இதுங்கள எப்படியும் ஜெயிக்கனும்னு" முடிவுக்கு வந்து, இரண்டு நாட்கள் கழித்து, கூகுள் ஆண்டவர் ஏதிரில் வந்தமர்ந்து வாத்தை அன்னமாக மாற்றி "அன்னம், மீன்" படங்களை தேடி எடுத்தேன். அதை தேடப்போக பட் பட்டென்று மற்றவை செய்யவும் ஐடியா வந்துக்கொண்டே இருந்தது.

ரொம்ப யோசிக்க வைத்தது "தாளங்கள்". தாளங்களுக்கு நான் முதலில் தேர்வு செய்தது "பியோனா". பியோனாவின் கருப்புக்கட்டைகளை "லகு" த்ருதம்" மாக மாற்ற உத்தேசித்திருந்தேன்.ஆனால் அதை செயற்படுத்தும் போது தான் சிக்கல் தெரிந்தது. ஆன் தி ஸ்பாட் "குழல்" கண் முன் வர, குழலுக்கு தாவினேன். அடுத்து ஆரோஹணம், அவரோஹணம்" . புத்தகத்தில் படிக்கட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தன. எப்படி மாற்றலாம்னு யோசிக்கும் போது ஸ்ட்ரைக் ஆனது "சறுக்கு மரம்". ஆனால் ஏணி சரியாகவும் சறுக்கு ஓவராக சறுக்குமே தப்பாகிடுமோன்னு நினைச்சி, அப்புறம் சறுக்கிலும் தேவையான இடத்தில் கால்களை பக்க சுவர்களில் ஊன்றி நம்மை சறுக்காமல் நிறுத்திக்கொள்ள முடியும்னு நினைத்து அதையே எடுத்துக்கொண்டேன்.

எழுத கஷ்டப்பட்ட தமிழ்/ வடமொழி எழுத்துகள். (தயவு செய்து யாரும் துப்பாமல் படிக்கவும்) பலவருடங்களாக தமிழ் எழுதாமல் இருந்ததில் கிடைத்த பலன் இதுன்னு சொல்லனும். "ற" இதை றா என்று அந்தகாலத்தில் வளைத்து எழுதுவாங்க இல்லையா அது எழுதவே வரல. :). பிறகு கால் சேர்த்து "றா" என்றே எழுதினேன். ஏன் வரலன்னு கேட்கக்கூடாது. எழுதிப்பாருங்க தெரியும். அடுத்து இ,ஜ,க்ஷ், ஹ, ஸ போன்ற எழுத்துக்களும் சிலமுறை தனியாக எழுதிப்பார்த்து பழகியப் பின்பே சார்ட்டில் எழுதினேன். எகொகஇ!!  இதனால் சொல்லவருவது என்னவென்றால், கீபோர்ட்டில் தமிழில் டைப்பினால் மட்டுமே போதாது, அவ்வப்போது தமிழை நோட்டுப்புத்தகத்திலும் எழுதிப்பழகனும்.

ஹான்.. சொல்லமறந்துட்டேனே... என்னுடைய "Project" ஐ தான் Display க்கு தேர்ந்தெடுத்திருக்காங்க. :). குட்டீஸ் எல்லாத்தையும் பின்னுக்கு தள்ளியாச்சி.. ஸ்ஸ்ப்ப்பா.... எத்தனைமுறை நான் பாடுவதைப்பார்த்து நக்கல் சிரிப்பு சிரிச்சி இருக்குங்க இதுங்க.. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி பழிக்கு பழி, ரத்தத்திற்கு ரத்தம்.. !

அணில் குட்டி : நானும் எத்தனைதரம் தான் இந்தம்மாவை கழுவி கழுவி ஊத்தறது??!. சின்ன ....சின்னக்கூட இல்ல.... இப்பதான் நடக்க ஆரம்பிச்ச நண்டு சிண்டுக்கூடவெல்லாம் போட்டிப்போட்டு அதையும் ஜெயிச்சிட்டேன்னு தம்பட்டம் அடிச்சிக்கறாங்களே.... துப்பக்கூட எச்சியில்ல வாயில அவ்ளோ துப்பியாச்சி...ச்சே..!

அதிருக்கட்டும்..இவ்ளோ நேரம் எருமையா படிச்சீங்களே.... ஹி ஹி..டங் ஸ்லிப்டு, பொறுமையா படிச்சீங்களே தலைப்புக்கும் பதிவுக்கும் என்னா சம்பந்தம்னு யோசிச்சீங்களா...?!  பாட்டு வகுப்பில், இவிங்க சொன்ன அந்த 3.5 -10 வயசு குழந்தைகள்  சும்மா கணீர்னு பாடும்.. நம்ம அம்மணி குரல் தான் தெரியுமே ..என்னாட்டுமே.. கீச் கீச். டீச்சர் தனியா அம்மணிய பாட சொல்லும் போது, அம்மணி வாய் அசையும் ஆனா வார்த்தைக்கு பதிலா "கீச் கீச் கீச் னு சத்தம் மட்டும் வரும். எல்லா குட்டீஸும் வாயில் கைய வச்சி மூடிக்கிட்டு, ரகசியமா சிரிக்குங்க... ..அம்மணி முகத்தை அப்ப பாக்கனுமே...  :))))))))))))

பீட்டர் தாத்ஸ் : Education is what remains after one has forgotten what one has learned in school.
.