டுடோரியல் நடத்தி வந்த வாத்தியார்,  பல மாணவர்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்றி வைத்தவர், அவரின் மாணவர்கள், அவரைப்பற்றி கொடுத்த நற்சான்றிதழ்களை நம்பி, பாடம் சொல்லித்தர முடியுமான்னு கேட்டு, நானும் ஒரு நாள் அவரிடம் பாடம் கற்றுக்கொள்ள உட்கார்ந்தேன். அவர், இது சொன்னப்பேச்சு கேக்காத ஆள் ஆச்சே, சரிவரும்மானு ரொம்ப யோசிச்சித்தான் பாடம் சொல்லித்தர ஒப்புக்கொண்டார்.

புத்தகம் கையுமாக அவர் அமர, அவர் பக்கத்தில் நான். ரொம்ப ஆர்வமாக பாடம் நடத்த ஆரம்பித்தார், மாணவி கவனிக்கிறாளா இல்லையான்னு பார்க்கும் சமர்த்து அவரிடம் இல்லை, பாடம் நடத்துவதிலேயே கவனமாக இருந்தார். கையை இரண்டையும் ஆட்டி ஆட்டி பாடம் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார், ஆனா பாருங்க, யாருக்குன்னு தான் தெரியல. எனக்கு  சில நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க  முடியவில்லை. போதும்னு சொன்னால், வாத்தியார் கோவப்படுவார்னு, ரொம்ப கஷ்டப்பட்டு வாயை மூடிட்டு பேசாமல் இருந்தேன். ஆனா நேரம் செல்ல செல்ல தூக்கம் கண்களை செருக........ தூங்கி..... நானும், அவரும் எதிர்ப்பார்க்காத ஒரு தருணத்தில், அவர் மடியில் தொப்பென்று விழுந்தேன்.

......................................... அவ்ளோ தான்..  நான் தூங்கி விழுந்த அவமானம் தாங்கமுடியாத வாத்தியார், புத்தகத்தையும் என்னையும் "நியெல்லாம் படிச்சீஈஈ.." ன்னு. தூக்கிப்போட்டவர் தான். இனி எனக்கு மட்டும் பாடம் சொல்லித்தருவதில்லை என முடிவெடுத்து, அதை கன்னாப்பின்னான்னு கடைப்பிடிக்கவும் செய்தார். நானும் அதற்கு பிறகு வாத்தியாரிடம் சத்தியமாக இனி தூங்க மாட்டேன், எப்படியும் முழுச்சிக்கிட்டு இருக்க முயற்சி பண்றேன், தயவு செய்து பாடம் சொல்லித்தாங்கன்னு கேட்டு பார்த்தேன், ம்ஹூம்..  ஒரு முறை பட்ட அவமானம் போதும். இனி அந்த தப்பை மட்டும் செய்யவே மாட்டேன்னு சொல்லிட்டார்.

பல வருடங்கள் கழித்து, எம்.பி.ஏ பரிட்சையின் போது, திரும்பவும் வாத்தியாரின் உதவி தேவைப்பட்டது. வாத்தியார் அக்கவுன்ட்ஸ்'ஸில் கில்லாடி. எனக்கு ஒரே ஒரு பேப்பர் அக்கவண்ட்ஸ், அப்படின்னா என்னான்னே தெரியாத, பூச்சியமாக இருந்தேன். இந்த ஒரு பரிட்சைக்கு மட்டும் வாத்தியார் சொல்லிக்கொடுத்தால் போதும் பாஸாகிவிடுவேன், வாத்தியாரிடம் சென்று கெஞ்ச ஆரம்பித்தேன்.  அக்கவுண்ட்ஸ் கணக்கு மாதிரி, தூங்கிவிழ சாத்தியமே இல்லை, நிச்சயம் தூங்கமாட்டேன், தயவு செய்து சொல்லித்தாங்க, என் எதிர்காலமே உங்க கையில் தான் இருக்கு, உங்களை விட்டால் எனக்கு யார் உதவி செய்வா? அப்படி இப்படின்னு ஓவர் பில்டப் கொடுத்து, நீலிக்கண்ணீர் வடித்தேன். அவர் என்னை  1% கூட நம்ப சான்ஸ் இல்லையென்றாலும், போனாப்போகுதுன்னு திரும்பவும் பாடம் சொல்லிக்கொடுக்க ஒப்புக்கொண்டார். ஆனா நிறைய கண்டிஷன்.

1. அவர் பக்கத்தில் உட்காரக்கூடாது. (பார்ரா? என்னா புத்திசாலி,  தூங்கினாலும் அவர் மேல விழாமல் இருப்பேனாம்)
2. எதிர்த்து நடுநடுவில் பேசப்பிடாது, (யார் கிட்ட? )
3. முக்கியமாக மிரட்டக்கூடாது (அந்த பயம்..வேணுமில்ல)

நானும் என் பங்குக்கு கன்டிஷன் போட்டேன்.

1. தூங்கி விழந்து மண்டை உடையும் படி பாடம் நடத்தக்கூடாது
2. லக்சர் கொடுத்து சாக அடிக்கக்கூடாது
3. எருமை மாதிரி பொறுமையாக சொல்லித்தரக்கூடாது

ம்ம்.... அதே அதே தான்....என் கன்டிஷனையெல்லாம் கேட்டதும், சத்தியமாக உனக்கு பாடம் சொல்லித்தர முடியாது, நீ ஒரு மட்டு மரியாதை இல்லாதவள், வாத்தியார் ஆச்சேன்னு கூட மதிக்க மாட்ட, ஓவர் திமிர் பிடிச்சவ, உனக்கெல்லாம் பாடம் சொல்லியே தரமுடியாது, நீயே படிச்சிக்கோன்னு சொல்லிட்டாரு.

 அடடா, இத்தனை வருஷம் கழிச்சி, சம்மதிக்க வைத்துவிட்டு, கடைசி நேரம், தவளை தன் வாயால் கெட்டுப்போச்சேன்னு, திரும்பவும் நீலிக்கண்ணீர் வடிச்சி, கைல கால்ல விழுந்து, மன்னிச்சிடுங்க.. உங்களைவிட்டால் அக்கவுண்ட்ஸ் சொல்லித்தர வேற யாருமே இல்ல, நிச்சயமாக மரியாதையா நடந்துக்குவேன், எதிர்த்து பேசவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சி ஒரு வழியாக சம்மதிக்க வைத்தேன்.

தேர்வுநாளைக்கு முன் நாள் தான் நமக்கு படிக்கும் வழக்கம். முழுப்புத்தகத்தையும் ஒரு இரவுக்குள்ளோ, பகலுக்குள்ளோ படிக்கும் நேரம் தான் இருக்கும்.  அக்கவுண்ட்ஸ்க்கு முதல் நாள், வாத்தியார் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். ஒரே நாளில் அ முதல் ஃ வரை அக்கவுண்ட்ஸ் படிக்க முடியாது என்பதால், ரொம்ப சுருக்கமாக முன்னுரை கொடுத்து, முக்கியமாக, இவை மட்டுமே பரிட்சைக்கு வரும் என்று அவர் தேர்வு செய்த கணக்குகளை மட்டும் சொல்லிக்கொடுத்தார்.

"முன்னுரை முடிக்குமுன்னே, கணக்குக்கு போலாம் " என்றேன்.  - "அதானே உன்னால பொறுமையா கவனிக்க முடியாதேன்னு முறைத்துவிட்டு  கணக்குக்கு" போனார்.

"கணக்கு சொல்லிக்கொடுக்கும் போது, போதும் புரிஞ்சிடுத்து நானே போட்டுக்கறேன். அடுத்த கணக்கு சொல்லிக்கொடுத்தால் போதும்னு"  சொன்னேன். - புத்தகத்தை மூடிவிட்டு கடுப்பாக சென்றுவிட்டார்.

"அடுத்த கணக்கையும் அவரை எதிர்பார்க்காமல் நானே போட ஆரம்பித்தேன், ஆர்வத்தில் வந்து பார்த்தார். - குட், போடு போடு... தப்பா வந்தால் கரெக்ட் பண்றேன் 'சொல்லிட்டு போயிட்டார்.

தவறுகள் சிலதை சரி செய்து விளக்கினார். திரும்பவும் கொஞ்சம் தியரி. சொல்லிக்கொடுக்கும் போதே நிறுத்தினேன். போதும் நானே படிச்சிக்கிறேன்.


"இந்த எழவுக்குத்தான் உனக்கு நான் பாடமே சொல்லித்தர மாட்டேன்னு சொன்னேன். ஏன் சொல்லித் தரச்சொல்லிட்டு இப்படி இம்சை கொடுக்கற.. எதையாவது முழுசா முடிக்க விடறியா, பாதியில் போதும் போதும்ங்கற.. உனக்கெல்லாம் எவன் பாடம் நடத்தறது?! "

அதான் புரிஞ்சி போச்சின்னு சொல்றேனே...  உங்களாட்டும் நான் ஒன்னும் மக்கு மந்தாரம் இல்லை.. ஒரு தரம் சொன்னா போதும் புரியும்.. அதை எல்லாத்துக்கும் அப்ளை செய்துக்குவேன். சும்மா நய் நய்ன்னு லக்சர் கொடுத்து சாவ அடிக்காதீங்க... இப்படி லக்சர் கொடுத்துதான், அன்னைக்கு தூங்கி விழுந்தேன்.. .

மனுசன் பேசுவானாடி உன்கூட...

பேசாதீங்க.. யார் உங்களை பேச சொன்னா..

படிச்சது போதுமா உனக்கு.. பாசாயிடுவியா...

பாசாகிடுவேன்.. ... மேக்ஸ்ஸோட அக்கவுண்ட்ஸ் ரொம்ப ஈசி,,... ஒன்னுமே இல்ல அதுல.. ஒன்னுமில்லாத ஒரு சப்ஜெக்ட்ஐ தெரிஞ்சி வச்சிக்கிட்டு என்னா பில்டப்பூஊஊ

..ச்சீஈஈ, உன்னைப்பத்தி தெரிஞ்சிக்கிட்டே உனக்கு பாடம் சொல்லித்தந்தேன் பாரு... என்னை சொல்லனும்.. எக்கேடாவது கெட்டு ஒழி.. என்னை விடு..

*****************
தேர்வு முடிந்து, 67% வாங்கி பாஸாகிட்டேன். அப்புறம் என்ன?!!  வாத்தியாருக்கு ஒரே சந்தோஷம், என் முதுகைத்தட்டி, என் பொண்டாட்டி மாதிரி வருமான்னு ஒரே பாராட்டு மழைதான்.

டிஸ்கி : அவர் சொல்லிக்கொடுத்த கணக்குகள் மட்டுமே தேர்வில் வந்தன (Hidden Truth) என்பது குறிப்பிடத்தக்கது.! Obviously, he is an Expert in Accounts ! 

அணில் குட்டி : ஹி ஹி... இதுக்கு அப்புறம்,  இப்ப வரைக்கும் எது சொல்லித்தரக் கேட்டாலும்... எனக்கு தெரியாதுன்னு சொல்லுவாரே தவிர, அம்மணிய அவரு மதிக்கறதே இல்லை.. ....அதை சொன்னாங்களா இவிங்க?

பீட்டர் தாத்ஸ் : “If a child can't learn the way we teach, maybe we should teach the way they learn.” -