ஆன்சைட்’க்கு ஒரு மாசமோ,  இரண்டு மாசமோ  இல்ல ஒரு வருசம்னே வச்சிக்கோங்களேன், அமெரிக்கா போவாங்க. ஆனா வந்தப்பிறகு இவங்க பண்ற அலும்பு இருக்கே. இதுல அங்கவே செட்டில் ஆகிற நம்ம மக்கள் போடற சீன் இருக்கே ஸ்ஸ்யப்பா முடியாது.

* ஏதோ 3-4 வருஷத்துக்கு ஒரு தரம் வாராங்களே, நம்ம சொந்தமாச்சே, நமக்கு இருக்க வேலைகளுக்கு நடுவில்  இப்ப பார்க்காட்டா  இதுக்கு அப்புறம் எப்ப பார்க்க முடியுமோன்னு, இவங்களை அதுவும் சென்னை ட்ராஃபிக்ல அடி உதை குத்து எல்லாம் வாங்கி பார்க்கப்போனால்.. என்னமோ இவங்கக்கிட்ட நாம் ஒன்னுமே இல்லாம பிச்ச எடுக்க வந்த ரேஞ்சிக்கு பேச ஆரம்பிப்பாங்க... ”கவிதா , வரும் போது நிறைய க்கொண்டு வந்தேன்.. ஆனா பாரு நீ வரத்துக்குள்ள எல்லாம் காலியா போச்சி, அடுத்த முறை வரும் போது எடுத்துக்கிட்டு வரேன்”

இல்ல நாங்க கேட்டோமா? கேக்காமயே ஏன் இந்த பில்டப்பூ?   என்னமோ இவங்க கொண்டு வந்து கொடுக்கற 4 ரூ சோப்பும், 10 ரூ செண்டும் இல்லாம நம்ம வாழ்க்கையை ஓட்டவே முடியாதுப்பாரு...?!  தெரியாமத்தான் கேக்கறேன்.. நீங்க எல்லாம் அமெரிக்கா போயிட்டா இந்தியாவே பிச்சை எடுக்குதுன்னு நினைச்சிக்குவீங்களா?

* அமெரிக்கா போயிட்டு வந்தாவே பீட்டரே தனி பீட்டர்த்தான்.. . இங்க இருக்கவரைக்கும் தெருவை ரோடு ந்னு சொல்றவங்க அங்கப்போயிட்டு வந்தா பார்க்கனுமே.. “லேன்” ந்னு சொல்லுவாங்க..இந்த ஊர்ல எங்க "லேன்" இருக்கு?  இது பரவாயில்லை,   வார்த்தைக்கு வார்த்த பிரிஃபிக்ஸ் ஆக "ஆசம்...ஆசம்" ன்னு சேர்த்துக்கிட்டு படம் காட்டுவாங்கு... பாருங்க..

அவங்க "ஆசம்" ன்னு சொல்லும் போது.. "ச்சீ.... நீங்க ரொம்ப "மோசம்" ன்னு   காது "சோசம்" ஆகிற அளவு விளாசனும் போல இருக்கும்......... 

* அடுத்து, பார்க்கும் எல்லாத்தையும் அமெரிக்காவோட ஒப்பிட்டு பேசுவாங்க.. பாருங்க. .அப்படியே கொமட்டுலேயே குத்தனும் போல இருக்கும். ! அங்க எல்லாம் இப்படி இல்ல.. ஏன் இந்தியா இன்னும் அப்படியே இருக்கு... .நான் போனப்ப இருந்ததை விட ரொம்ப மோசமா இருக்கு.. ஏன் இப்படி எச்சி த்துப்பறாங்க.. ஏன் இப்படி குப்பை கொட்டறாங்க.. ஹோ...... நோ பவர்.....அங்க எல்லாம் சான்ஸே இல்லத்தெரியுமா........ கொசு கடிச்சி ப்பாரு. முகமெல்லாம் எபப்டி இருக்குன்னு ?! யூநோ.. .அங்கெல்லாம் இன்ஸெக்ட்ஸே ஃப்ரீ... ந்னு கொடுக்கற பில்டப் இருக்கே..

ம்ம்ம் அப்புறம் ???!  உங்க பரம்பரையே அமெரிக்கா அதிபராவே இருந்தவங்களா... ? சொல்லவே இல்ல? !


* ஆண்களை விடுங்க..இந்த பொண்ணுங்க போனால், தலை அலங்காரம் முதல்ல மாறும். பின்னலோ, குதிரைவாலோ போயி எப்பவும் ஃப்ரி ஹேர் தான். அப்புறம் உடைகள் மேல கொஞ்சம் குறையும், கீழக்கொஞ்சம் ஏறும். கேட்டா எங்க பரம்பரையில் இப்படித்தான் நாங்க ட்ரஸ் செய்வோம்னு ரேஞ்சுக்கு சீன் போடுவாங்க.

இங்க முகத்தில் எண்ணெய் வடிய அருக்காணி சடைப்போட்டுக்கிட்டு மூக்கு ஒழிகினது எல்லாம் மறந்தே போச்சா அம்மணிங்களா?.

* அடுத்து கடன், ஒரு வேள வெளிநாட்டில் இருந்து வரவங்கள குறிவைத்தே எல்லோரும் பணம் கேட்பாங்களானு தெரியல..நாம சாதாரணமாக பேசிக்கிட்டு இருக்கும் போதே அவங்களோட சொத்துக்கணக்கு எல்லாம் சொல்லுவாங்க. அமெரிக்காவில் இருந்தாலும் நான் பிச்சைக்காரன் ரேஞ்சிக்கு சொல்லி, நாம அவங்கக்கிட்ட பணம் கேட்காத அளவு நம்மை மனதளவில் தயார்படுத்துவாங்க..  எல்லா பில்டப் பும் முடிஞ்சி, "உனக்கு எதாது ஹெல்ப் வேணும்னா என்னைய கேளூஊஊ கண்டிப்பா செய்வேன்னு "  சொல்லி முடிப்பாங்க.

அது எப்படிங்க? இதெல்லாம் அமெரிக்கா போனா தானா வருமா.?. இல்ல அங்க ஏதாச்சும் இதுக்குன்னு தனியா க்ளாஸ் நடத்தறாங்களா??


*அடுத்து புள்ளைங்கக்கிட்ட தமிழ்ல பேசவே மாட்டாங்க. நம்மக்கிட்ட தமிழ்ல பேசுவாங்க..நடுவுல புள்ளைங்க வந்தா அவங்கக்கிட்ட ஒரே பீட்டர் தான். ஏன்ப்பா தமிழ் சொல்லி த்தரலியான்னு கேட்டா.. கொன்ச் கொன்ச் த்ரியும்.. ஆனா இங்கிலீஷ் நா ஈசியா புரிஞ்சிக்குவாங்க..அதனால் இங்கிலீஷ்லியே பேசிடுவோம் நு சொல்லுவாங்க. புள்ளைங்க நம்ம என்னவோ வேற்று கிரகத்து ஆட்களை பார்ப்பது போல மேலும் கீழும் பார்க்கும். சரி நாமும் குழந்தைங்கக்கிட்ட பேசி வைப்போம்னு.. அதான் தமிழ் தெரியாதே... Hai I am your Chitthi / Athai.... means..your mom;s younger sister/ your dad's younger sister" னு சொன்னாப்போதும்.. ஒரு மாதிரி வினோதமாக ”ஹாய்...சித்தி../அத்த....  இட்ஸ் கிரேட்.. டு சி யூ.. ஹே.. யூ கேரியான்.. மீத் யூ லேத்தர்.. ” ந்னு நாலு வார்த்தைக்கு மேல பேசமுடியாமல் ஓடி போயிடுவாங்க.  

சொந்தக்காரங்க வருவாங்க. .எல்லாம் பக்கி பனாதிங்க.. .அதுங்க க்கிட்ட நின்னு பேசாத ன்னு சொல்லியே கூட்டுட்டு வருவாங்களோ?

* அடுத்து டைம் ஸோன் பிரச்சனை. வந்து ஒரு 1 வாரத்திலிருந்து 10 நாளாவது, இவங்க அர்த்த ராத்திரியில் எழுந்து நடமாடுவாங்க. டிவி ய வச்சிக்கிட்டு பார்க்கிறது... கண்ட நேரத்தில் சாப்பிடறதுன்னு ஒரு மார்க்கமாவே இருப்பாங்க... .தனியா இருக்காங்களேன்னு பாவம் பார்த்து நாமும் கூட சேர்ந்து முழிச்சிக்கிட்டு உட்கார்ந்து இருந்தா............ சரி செய்யறோமேன்னு இல்லாம.. அமெரிக்கா மொக்கைய ஆரம்பிச்சி ... ராத்திரி பொழுதையும் நிம்மதியா விட்டுவைக்க மாட்டாங்க..

இங்க இருக்க கொசுத்தொல்லை இல்லாம அமெரிக்காவிலிருந்த வந்த கொசு ..இங்க இருக்கறதையாச்சும். அடிச்சே கொல்லலாம்..ஆனா இதுங்கல... ?! 

* கடைசியா இந்த ஆசம் அமெரிக்க மாப்பிள்ளைகள். ஒரு வீட்டுல நாலு மாப்பிள்ளை இருந்தாலும், அதுல ஒரே ஒருத்தர் அமெரிக்காவில் இருந்துட்டா போதும்.. அடடடா டாஆ.... முடியாதுடா சாமி.. ! :) இவரு தான் அந்த குடும்பத்தையே அமெரிக்கா போயி உசத்திட்டத்தா நினைச்சிக்குவாரு.. அதிகம் பேசமாட்டாரு.... அடுத்தவங்க எது பேசினாலும். .ஒரு கிரேட் ஸ்மைல் பண்ணுவாரு.... என்ன சொன்னாலும் டவுன் டு எர்த் ஆ இருப்பாரு.....எல்லா இடத்திலும் முக்காப்பேண்ட்ஐ போட்டுக்கிட்டு சுத்துவாரு, . ரொம்ப ரொம்ப சிம்பிள் ஆ காமிச்சிக்குவாரு...  நம்ம மக்களோ இங்க இருக்க உள்நாட்டு மூணு மாப்பிள்ளைய மாட்டைவிட கேவலமா மதிப்பாங்க.. ஆனா இவரை விழுந்து விழுந்து கவனிப்பாங்க...

பேசாமயே ...கிரேட் ஸமைலியோடயே..வந்த வேலைய முடிச்சிட்டு அமெரிக்கா பேரைச்சொல்லி எவ்ளோ கறக்க முடியுமோ கறந்துட்டு  கிளம்பிடுவாரு.... :)) இவரு தான் இருக்கறதிலேயே ரெம்ப நல்லவரு...

===========

இளா எழுதிய  NRI கொசுத்தொல்லைகள் பதிவை அச்சு அசலாக காப்பி செய்து எழுதியது. :). அவரிடம் ப்ர்மிஷன் கேட்டு (ஒரு வருசம் முடிஞ்சி இருக்குமோ?) மெயில் அனுப்பிய போது.. .எவ்ளோ திட்டிக்கனுமோ திட்டிக்கோங்கன்னு பெரிய மனசோட பர்மிஷன் கொடுத்தாரு. நன்றி இளா.

அணில் குட்டி : எச்சூச்சுமி கவி.. உங்க புள்ள  ஜிஆர்ஈ..எழுதிட்டாரு.. ட்டோஃபல் எழுதப்போறாரு...  .... இதெல்லாம் எதுக்கு ?! ...ச்ச்சும்மா ஒரு இன்ஃபோ க்கு கேட்டேன்.. ...  அப்புறம் இன்னொரு மேட்டரு கேக்கனும்.. சத்தமா கேட்டா உங்கள எல்லாரும் கல்லால அடிப்பாங்க. .காதக்கொடுங்க. .ரகசியமா கேக்கறேன்.. "உங்க புள்ளைக்கு தமிழ் படிக்கத்தெரியுமா? "   (மக்கா நீங்களும் கவிதா காதை  இழுத்து இதே கேள்வி ய கேட்டுட்டு போவீங்களாம்)

பீட்டர் தாத்ஸ் :  Patience when teased is often transformed into rage