அண்ணன் சொன்னான், "எந்த தாய்க்கும் தன் குழந்தை தான் முதல், பிறகு தான் மற்றவர்கள். நீ அதிலும் மீறிவிட்டாய், வியக்கிறேன், நீ நல்லவள்".  வெற்றுப் பார்வையும், விரக்தி சிரிப்பையும் உதிர்த்துவிட்டு மெளனமாய் என் வேலையை தொடர்ந்தேன்.  முன்னதாக என் குழந்தை சொல்லிவை மட்டுமே என்னுள் ரீங்காரமிட்டுக்கொண்டு இருந்தது.  "நீ பெற்ற குழந்தையிடம் கூட, மற்றவர்களுக்காக சண்டையிடுகிறாய், நீ வித்தியாசமானவள் ! " .

எதை எடுக்க எதை விடுக்க. :) என் குழந்தையை மிஞ்சும் அன்பு அண்ணன் மேல்  இருக்கிறதா என்றால், இல்லை, என்னை சுற்றியுள்ள அத்தனை பேரின் மேலும் அன்பு இருக்கிறது. "பகையாளி" யாரென கேட்டால், இதுவரையிலும் அப்படி யாருமில்லை என்றே  சொல்லுவேன். அதிகமாக மனிதர்களை நேசிக்கும் அளவிற்கு, அவர்களை விட்டு விலகியும் வந்துவிடுவதுண்டு. வெறுப்பு என்று சொல்வதை விட, எல்லோரையும் போல என்னால் தாமரை இலை தண்ணீர் போல இருக்க முடியாமல் போவது முதல் காரணம். அடுத்து "கடவுளின் படைப்பில் இப்படியும் ஒரு பிறவி"   இதற்கு மேல் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. கொடுப்பது என் வேலை.  பல சமயங்களில் இவை வலியே. 

எங்கிருந்தோ கூவும் குயில், 2, 3 முறை அதன் குரலை கேட்டப்பிறகு, தொடர்ந்து நானும் குரல் கொடுப்பேன்.. அது...."கூஊஊஊ....  "... நான் "கூஊஊஊ..." பின்னால் வந்து நின்று என் குடும்பத்தினர் வினோதமாக பார்ப்பார்கள், திரும்பி பார்த்தால் அவர்களின் உதடுகள் சத்தமில்லாமல் சொல்லும்."லூசு..".. அவர்களையும் நான் வினோதமாக பார்ப்பேன், என் உதடுகள் சொல்லும் "ரசனையற்ற ஜந்தூஸ்".

என்னைப்போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை, இருப்பினும் எப்படி தங்களை சுற்றி நடப்பவற்றை எந்த பிரஞ்ஞையும் இல்லாமல் எளிதாக கடக்கிறார்கள், சாத்தியப்படுகிறது என்ற வியப்பு இருக்கிறது. பாதையோரம் கிடக்கும் மனிதனை கடக்க நேர்ந்தால், என் பார்வையும் மனமும் கட்டுக்கடங்காமல் அந்த மனிதனை சுற்றும். அவன் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும்?அவனுக்கு என்னால் அல்லது என் மூலமாக ஏதேனும் செய்துவிட முடியுமா என மூளை திட்டங்கள் வகுக்கும். பக்கத்தில் வரும் என் கணவர் அதைப்பற்றி என்ன, அந்த பக்கம் கூட திரும்ப மாட்டார். நானே குறிப்பிட்டாலும்... ம்ம்ம்.. என்ற வார்த்தையை தவிர வேறேதும் வராது.

பிறப்பு, இறப்பு, சந்தோஷம் , துக்கம், சிரிப்பு, வியப்பு, வீழ்ச்சி, உடல் உபாதைகள் எல்லாமே அவரிடம் சத்தமின்றி, உணர்ச்சிகள் இன்றி ஒரே மாதிரியாக இருக்கும். எப்படி என்பதை அவரிடம் கேட்டாலும் அதற்கும் பதில் இருக்காது.   இதனை வைத்து அவர் ஒரு "ஞானி" என்று சொல்லிவிடமுடியாது. முதிர்ச்சி என்று காரணம் சொன்னாலும், இருக்கலாம் ஆனால் இப்படிப்பட்ட முதிர்ச்சி தேவையா என கேள்வி, ஏன் அப்படி நாமும் இருந்தால் என்ன? என்னை நானே கேட்டுக்கொண்டு கண்ணை மட்டும் இல்லை, என் மனம், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருந்து விட முயற்சி செய்து தோற்றுள்ளேன் அல்லது முயற்சிகளின் வெற்றிகளாக, உடல் உபாதைகள், நிம்மதியற்ற தூக்கமில்லா இரவுகளை கடந்து முகம் கண்கள் வீங்கி, அவரே என்னைப்பார்த்து. "என்னடி உனக்கு பிரச்சனை? முகம் ஏன் இப்படி இருக்கு? தலைக்குள்ள ஏதேனும் கொடஞ்சிக்கிட்டே இருக்கா? " என்று கேட்டதும் உண்டு.   திரும்பவும் ஒரு வரி இங்கே  "கடவுளின் படைப்பில் இப்படியும் ஒரு பிறவி" :).

மழை, வெயில், சாக்கடை, தாஜ்மகல், கிரிக்கெட் உலகக்கோப்பை வெற்றி, ரஜினியின் உடல்நிலை, அம்மாவின் ஆட்சி, ஜப்பான் பூகம்பம், திமுக வின் தோல்வி  எல்லாமே அவருக்கு ஒன்று தான். எதற்கும் அவரிடம் எந்த சலனமும் இருக்காது.  பூக்கள், பனித்துளி, பச்சைக்கிளியின் அழகு, தென்னங்கீற்றீன் அசைவு, அசைவின் வழியே நம்மை த்தொடும் காற்று, இசை, ஏசி யின் பின்புறம் கட்டியுள்ள அணில் குட்டியின் கூடு, அது போடும் சத்தங்கள், பக்கத்து வீட்டு தண்ணீர் தொட்டியில்  நிரம்பி வழியும் தண்ணீரின் சத்தம், சமையல் அறை கரப்பான் பூச்சி என எதுவும் அவரை கவர்ந்ததோ, தொந்தரவு படுத்தியதோ இல்லை, ஏன் இப்போது கண்ட நேரத்து மின்சார துண்டிப்புக்கூட அவரை புலம்ப வைத்தது இல்லை. இதற்காகவெல்லாம் அவர் நேரம் செலவிட்டது இல்லை.

இதைப்போலவே அவரின் அணுகுமுறை மனிதர்களிடமும் இருக்கிறது. எதுவும், யாரும் அவரை பாதித்து இல்லை. எதற்காகவும் அவர் சலனப்பட்டது இல்லை அல்லது இப்படி எது அவருக்குள் நிகழ்ந்தாலும் அதை அடுத்தவர் அறியாதவாறு மிக கவனத்தோடு பார்த்துக்கொள்கிறார்.  "சூர்யா படிப்புக்கு உதவுகிறார்" என்றால், "விஜய் செய்வது உனக்கு தெரியாது, விஷயம் தெரியாமல் சூர்யாவை ஆஹா ஓஹோ என புகழாதே" என்பார். ரஜனிஜி' க்காக கஷ்டப்பட்டால், உங்க தலைவர் ராணா ஹீரோயினை பார்த்து மொத்தமாக கவுந்துட்டாரு போல"  சொல்லிவிட்டு போகிறார். உடனே என் மூளை, அந்த ஹூரோயின் பின்னால் ஒரு நிமிடம் சென்றுவிட்டு திரும்பும். " சே..சே..ரஜினிஜி யை கவரும் அளவுக்கு அந்த பெண் இல்லை என்று தேவையில்லாத நினைவும், அதற்கான பதிலையும் அதுவே சொல்லிவிட்டு திரும்பும்"  ஏதும் பேசாமல் இருப்பதை பார்த்து. ."என்னடி யோசனை.. எப்படி கவுந்தார்ன்னு யோசிக்கிறியா?"  அவர் என்னை படித்துவிட்டது தெரிந்தும், பதில் வேறு மாதிரியாக கொடுப்பேன்."சம்பந்தமே இல்லாமல் உளராதீங்க.. அவருக்கு வேறு உடல் பிரச்சனைகள்.  யோகம் பழகி வருபவர், எப்படி அவருக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சைகள் வரும் என்று யோசிக்கிறேன்" என பதில் சொல்லுவேன்.  இதை அப்போது யோசித்திருக்காவிட்டாலும், எப்போதோ யோசித்ததை இப்போது பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன்.

தேவைகள், ஆசைகள், தேடல்கள், முடிவுகள் எல்லாமே தனிமனிதன் ஒவ்வொருவரையும் பொறுத்து மாறுபடுகிறது. மற்றவரிடமிருந்து கிடைக்கும் சின்ன புன்னகைக்கூட சிலரின் நாள் நல்லபடியாக அமைய வழிவகுக்கும். ஒரு பெண்ணுக்கு, அவள் நினைத்த விலையில் நினைத்த புடவை கிடைத்து விட்டால் அன்றைய நாள் மகழ்ச்சியுடன் நகரும்.  இதை பல புடவைக்கடைகளில் பெண்களின் முகத்தில் காணலாம். ஆணுக்கு ஒரு தம் & குவாட்டர் என்று சொல்லி ஆணையும் பெண்ணையும் இங்கே சமன் படுத்திவிட்டு மேலே செல்கிறேன்.  திருமதி.கனிமொழி' க்கு இன்றைய தேவை வெளியில் வருவது. அதற்காக என்ன செய்யலாம் என அவரும் அவரை சுற்றி இருப்பவர்களும் சதா யோசித்து, அதற்காக எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் செய்துக்கொண்டு இருப்பார்கள். தேவையும் தேடல்களும் மனிதனுக்கு மனிதன் பலவாறு வேறுபடுகிறது.

இங்கே சூழ்நிலைகளும் சந்தர்பங்களும் நம் வாழ்வியல்பை பெருமளவு மாற்றி அமைக்கிறது. எல்லோருமே நம் பாதை இப்படி இருக்கவேண்டும் என்றே காலை முன் எடுத்து வைக்கிறார்கள். ஆனால் அவர்களின் பாதை அவர்கள் நினைத்தபடி இல்லாமல் மாறிக்கொண்டே செல்கிறது. அந்த மாற்றங்களை அறிவை க்கொண்டு அவ்வப்போது நேராக்கி கொள்ளவேண்டிய அவசியம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது, அவசியம், அவசியமில்லை என்பதும் ஓவ்வொருவருக்கும் அவர் எண்ணங்கள், தேவைகளுக்கு ஏற்றபடி மாறுபடும். எண்ணங்கள், தேவைகள் என்பதும் நிரந்தரமானவை அல்ல.  மாற்றங்களை தன் விருப்பப்படி சரிபடுத்தி செயற்படுத்துவது சிலர், அந்த சிலருக்கு பலவித போராட்டாங்கள் வாழ்க்கையில் கிடைப்பது தான் யதார்த்தம். போராட்டாங்கள் என்றுமே எளிமையாக, இனிமையாக அமைந்து விடுவதில்லை. போகிற வரை போகட்டும் என அதன் பின்னாலே சென்று, விதி யாரை விட்டது என விதியை நொந்தவர்கள் பலர்.

"நம் விதியை கூட மதியால் வெல்லலாம்" என்று நான் சொன்ன போது, நண்பர் "அதுவும் உன் விதியில் எழுதியிருக்கும்." என்றார். ம்ம்ம்.. அப்படியா? அது எப்படி?" என்று கேட்டாலும் அவர் சொன்னதும் சரியாக இருக்குமோ என்று நினைத்ததுண்டு.

இதற்குமுன் இப்படி புலம்பியவை :-  மனதின் ஆவேசங்கள்...மெளனப்புலம்பல்களாக... -2

அணில் குட்டி அனிதா : என் தலவிதி இந்த அம்மணிக்கிட்ட வந்து மாட்டீக்கிட்டது. !! ம்ம்ம்ம்ம்.. விதி யாரை விட்டது... எனக்கு கவிதா மூலம்.. ? உங்களுக்கு ????

பீட்டர் தாத்ஸ் : “Fate is for those too weak to determine their own destiny.”
.