திருவாரூர் = திரு+ஆரூர். இது சப்தவிடங்க தலங்களின்
தலைமையிடமாகும். சப்தவிடங்கத்தலங்கள் என்பது சிவபெருமானின் பல்வேறு நடனங்களை அடிப்படையாகக்கொண்டு அமைந்த வழிப்பாட்டு தலங்கள். திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் - இக்கோயில்களைப்பற்றி தனியாக எழுதுகிறேன்) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.

 திருவாரூர் வந்ததிலிருந்து அன்றாட வாழ்க்கை முறையில் நிறையவே மாற்றங்கள். பெரும்பாலும் நகரத்திலேயே அமைந்துவிட்ட வாழ்க்கையில், பழக்க வழக்கங்களும் அப்படியே தொடர்ந்தும் விட்டது.. இங்கு கிராமத்தோடு ஒட்டிய வாழ்க்கை பல விசயங்களைக் கற்றுத்தருகின்றது. பல நேரங்களில் பிடிக்காமல், என்னடா  வாழ்க்கை இது ன்னு எரிச்சலும் ஏற்படுகிறது, ஆனால் இதுதான் சந்தர்ப்பம், சுற்றிலும் கோயில் நிறைந்த ஊர்கள், எல்லாவற்றையும் பார்த்துவிட வேண்டும் என்ற அவாவில், காலம் ஓடுகிறது..

திருவாரூர் கோயில் பற்றி எழுதி மாளாது, அதனால், அதற்கான சுட்டிகளை முடிந்தமட்டும் சேகரித்து பகிர்ந்திருக்கிறேன், தவிர தகவல்கள் சரிதானா என்பதும் தெரியாதது, தெரிந்துக்கொள்ள நேரம் இல்லாதது கூடுதல் காரணங்கள்.  கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள் என்பது முக்கிய குறிப்பு.

எப்படியானலும், திருவாரூர் தேரைப்பற்றி எழுதியே ஆகவேண்டும். ஆசியாவிலேயே மிக பெரியத்தேர் என்று சொல்லப்படுகிறது, ஆனால் இதற்கு அடுத்து வேறெங்கும் தேர் இருக்கிறதா என்றால் இல்லை, தென்னிந்தியாவில் மட்டுமே தேரோட்டம் நடைபெறுகிறது.  இந்த ஆழித்தேர், திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு கையாளப்படுகிறது.  இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும். கலைஞர் , சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்க ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆழித்தேர் திருவிழாவில், தேரை வடம் பிடித்து இழுத்த போது, அது ஆடி ஆடி அசைந்து வந்த அழகை, அந்நேரத்தில் எப்படி உணர்ந்தேன் என்பதை பதிந்தே ஆகவேண்டும்.

தேர் வேலைகள் கிட்டத்தட்ட 2 மாதம் முன்பாகவே ஆரம்பித்தது, தேர் நிறுத்தப்பட்டிருக்கும் சாலையில் செல்லும் போது, வேலைபாடுகளைப் பார்த்தவாரே சென்று வருவோம். கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த வேலை முடியும் போது தேரின் உயரம் 96 அடியாகவும், 360 டன் எடை உடையதாகவும் மாறியிருந்தது. இதற்கான செலவு ஆண்டுதோரும் ரூ 2 கோடியை தாண்டியே செல்லும், இந்த ஆண்டும் அப்படியே. தேரைப்பற்றிய மிக விளக்கமான பதிவு   இதைப் படிக்கவும், இத்தனை விசயம் அடங்கியிருக்கான்னு ஆச்சரியப்படுவீர்கள்.

தேர் திருவிழாவை, ஆண்டுதோரும் நிகழும் ஒரு நிகழ்வாக என்னால் பார்க்கமுடியவில்லை. நுட்பமான பல விசயங்கள் இதில் அடங்கியுள்ளதை வரிசைப்படுத்துகிறேன்.

1. மிகப்பெரியத் தொகை இதற்காக செலவிடப்படுகிறது. 
 • பொதுமக்கள் நன்கொடை
 • மதவேறுபாடின்றி நிதி வசூல்
 • பெரிய/சிறிய நிறுவனங்களின் உதவி / நன்கொடை
2. மிகப்பெரியளவில் வியாபாரம் நடக்கிறது.
 • பூ / பழவகைகள் /பூசைக்கு தேவையானப் பொருட்கள்
 • அலங்காரப்பொருட்கள்
 • மரவேலைபாடுகள் 
 • மூங்கில், சவுக்கு
 • அலங்கரிக்கும் துணிகள்
 • கயறு
 • இரும்பு பொருட்கள், மரக்கட்டைகள்
 • அலங்காரப்பொருட்கள்
 • பெயின்ட், வார்னிஷ், பெட்ரோல், டீசல்
 • அலங்கார விளக்குகள்
 •  DG set
 •  புல்டோசர்கள் / ட்ரேக்டர்கள்
 •  அஜபா நடனத்திற்கான இசை க்குழு
 •  உணவு, தண்ணீர், கழிப்பறை வசதிகள்
 •  மருத்துவக்குழு, ஆம்புலன்ஸ்
 •  தீயணைப்பு வண்டி
 •  பாதுகாப்பிற்காக, எண்ணில் அடங்கா காவலர்கள் 
 • திருவிழாக்காலங்களில் முதலீடு செய்து சம்பாதிக்கும், சிறிய/பெரிய தெருக்கடைகள், சைக்கில், 3 சக்கர வண்டிக்கடைகள் என பேரூந்து நிறுத்ததிலிருந்து, கோயில் வரையிலும், கோயிலின் உட்புற, வெளிப்புர பிரகாரங்கள், சாலைகள் என வீட்டு உபயோகப்பொருட்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், பெண்களை கவரும் அழகுப்பொருட்கள், உணவங்கங்கள், சிற்றூண்டி கடைகள்  என எல்லாவித கடைகளிலும் வியாபாரம் நடக்கிறது.
3. தேர் சம்பந்தப்பட்ட வேலைகள் செய்ய, தேர்ந்த கலைஞர்கள், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள்,வேலையாட்கள், அதற்கான கூலி/சம்பளம்
4. இதை வழிநடத்தி/எடுத்துசெய்ய, நன்கு தேர்ந்த நிர்வாகக்குழு, குழுவினை ஒருங்கிணைத்து நடத்தத்தேவையான தலைமை, உறுப்பினர்கள்,  பணம், இடவசதி
5. வேலைசெய்பவர்களுக்கான உணவு (கிட்டத்தட்ட 3 மாதம்)
6. தேர் செல்ல, கோயிலின் நான்கு புறமும் மிக அகன்ற பாதை போடப்பட்டு,ஆக்கரமிப்பு ஏதிமின்றி ஆண்டாண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் உயரமான மரங்கள் ஏதுமின்றி, வளர்ந்தவிட்டசில மரங்களை தேர் திருவிழாவிற்கு முதல் நாள் வெட்டி, தேர் செல்ல தடையாக ஏதும் இல்லாதவாறு, தயார் நிலையில் வைக்கப்படுகிறது.

தியாகராஜர், ஆழித்தேருக்கு 3 நாட்கள் முன்பாகவே வந்துவிட்டார், அவரை தேருக்குள் சென்று வழிபட, இரவு பகலாக மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்றிருந்தனர். ஆழித்தேர் திருவிழா அன்று, தேரை வடம் பிடித்து இழக்கவேண்டி விடியற்காலையில் 5.30 மணிக்கெல்லாம் கிளம்பி சென்றோம். பேரூந்து நிலைத்திலிருந்தே வாகனங்கள் அனுமதியில்லை. அதனால் அங்கிருந்தே நடந்து வந்தோம். தேரை நெருங்க நெருங்க, பெண்கள்  வரிசையாக அழகழகான கோலங்களைப் போட்டுக்கொண்டு இருந்தனர்.

மக்கள் வடம் பிடிக்க வரிசையில் காத்திருந்தனர். இரண்டு கைகளால் தூக்கிப்பிடித்தாலும், முழுமையாக வடக்கயிரைப்பிடிக்க முடியாது. அத்தனை பெரியது. ஒருப்பக்கத்துக்கு இரண்டு என, மொத்தம் நான்கு கயிறுகள்.
ஆயிரக்கணக்கான மக்களை ஒருமுகப்படுத்தி, தேரை இழுக்க செய்வதென்பது, மிகப்பெரிய சவால். அந்த சவாலை தொடர்ந்து வருடா வருடம், திருவாரூர் கோயில் நிர்வாகம் இதை செய்து வருவது பாராட்டுக்குறியது.

கோலத்தைத்தாண்டி தேரை நெருங்க, அஜபா நடனக்குழுவின் இசை இசைத்துக்கொண்டிருந்தது. வேறெந்த சிவத்தலங்களிலும் பார்க்காத புதுவித இசைக்கருவியொன்றை இங்குப்பார்த்தேன். உலோகத்தால் செய்யப்பட்ட மிக நீளமான பீப்பி. இதை இசைக்க முறையான சுவாசப்பயிற்சி தேவையென நினைக்கிறேன். அடிவயிற்றிலிருந்து இழுத்து விடும் மூச்சில், நெஞ்சுக்கூட்டு எலும்புகள் மேலே இழுத்துப் பிடிக்க, அழுத்தம் கொடுத்து ஊதுகிறார்கள். அற்புதமான ஆளை மயக்கும் இசை, நம்மை மறந்து ஆடமுடியும்.. ஆவேசமாக அல்ல, நிறுத்தி நிதானமாக ரசித்து ஆடக்கூடிய இசை. அஜபா நடனமும் மூச்சுக்காற்றை அடிப்படையாகக்கொண்ட நடனம் என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்..

ஆழித்தேர் இழுக்கும் நேரம் நெருங்கியது. வடக்கயிற்றை மக்கள் தூக்கிப்பிடிக்க. ஒவ்வொரு கயிற்றின் உள் /வெளிப்பக்கம் மக்கள் தயார் நிலையில் நிற்க, மக்களை ஒருமுகப்படுத்த ஒருவர் பச்சைக்கொடி காட்டினால் இழுக்க வேண்டும் , சிகப்புக்கொடி காட்டினால் நிறுத்த வேண்டுமென ஒலிபெருக்கியில் அறிவித்தவாரே வந்தார். அவர் "பச்சைக்கொடி, வடம் பிடிக்கலாமென்றால்" போதும்... மக்கள் 'ஆரூரா..ஆ.. தியாகேசா..ஆ ' வென ஆராவாரம் செய்தவாரே வேக வேகமாக இழுத்தனர்.. நாங்களும் தேர் நகர்வதைப் பார்த்தவாரே இழுத்தோம்.

பிரம்மாண்டானத் தேர் கிட்டத்தட்ட 8-10 ஆயிரம் பேர் இழுக்க, லேசாக நகர ஆரம்பித்தது, உற்சாகம் தாங்க முடியவில்லை. மெது மெதுவாய் ஆடி ஆடி அசைந்து அசைந்து வர... 'பேரானந்தமாக' இருந்தது.  வேற்று சிந்தனையற்று, மெய்மறந்து இருப்பது, ஒருவித கண்கட்டு வித்தை எனலாம். என்னைப்போலவே அங்கிருந்த ஒவ்வொருவரும் அந்த ஆனந்தத்தை அனுபவித்திருப்பர். இங்கு தேர் அசைந்து வருவதைவிட... இத்தனை ஆயிரம் மக்களையும் வேற்று சிந்தனைத்துளியுமில்லாமல், ஆரூராரையும், தேரையும் மட்டுமே கவனத்தில் க்கொள்ள வைப்பதென்பது லேசுப்பட்ட காரியமல்ல.. மனிதன் மனம் சார்ந்த ஒரு விசயத்தை, மிக எளிதாக செய்யவைக்கிறது இந்த தியாகராசரின் ஆழித்தேர்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சாமார்த்தியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் 'திருடர்கள்' என்ற பெயரில்.......

ஆரூராரை தரிசனம் செய்துவிட்டு, வடம் பிடித்த மக்கள் வீடுதிரும்பி விடுவதாலும், வெயில் காராணமாக மதிய நேரத்தில் மக்கள் வரத்து குறைவதாலும், தேரை இழுக்க மக்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதால், புல்டோசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத்தில் யானைகள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்புகள் இருக்கின்றன. முடிந்தளவு தேரை எப்படி இயக்குகிறார்கள் என்பதை படம்பிடித்து காணொளியை பதிவிட்டுள்ளேன்.

ஆழித்தேர் சாலைகளில் திரும்பும் போது, பார்க்க ஓராயிரம் கண்கள் போதாது. அதே சமயம் அதற்கான வேலை மிக சிரமமானதாகவும் உள்ளது. பெரிய பெரிய தகர தட்டுகளின் மீது மசையைக்கொட்டி, வழுக்கவிட்டு திருப்புகிறார்கள். ஒரு நாள் ஆழித்தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகளும், வேலையும் அத்தனை எளிதானதல்ல.

காணக்கிடைக்காத காட்சிகள், ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்திருப்போம் போல, திருவாரூர் தேரை வடம் பிடித்து ஆரூராரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

Thq Google : Thiruvarur & Temple details  & Photo Courtesy