பயணங்கள் ..குறுகியவையோ, நெடுந்தூரமோ அத்தனையும் அனுபவமே. செல்லும் இடம், உணவு, சுற்றியிருக்கும் மக்கள், மொழி, தோற்றம், பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்கு, உடைகள்,வாழ்க்கை முறை ...என அத்தனையும் தெரிந்துக்கொள்ள வேண்டியவையே..........

சென்ற வாரத்தில் திருச்சி நோக்கிய பயணத்தின் போது, தமிழ்நாடு மத்தியப் பல்கலைகழகத்தில், புவியியல் பிரிவில் தலைமை பேராசிரியராக பணிபுரியும்,  டாக்டர்.சுலோசனா' வும் உடன் வந்திருந்தார். அன்று பல்கலைக்கழகத்தில் நடந்த 'திருவாரூர்' குறித்த ஒரு வினாவிடை நிகழ்ச்சியில் பங்குக்கொண்டதையும், அதில் கேட்கப்பட்ட சுவாரசியமான கேள்விகள் (விரைவில் இணைக்கிறேன்)பற்றியும் பகிர்ந்தவாரே வந்தார்.

கேள்விகள், திருவாரூர் தியாகராஜர் கோயில் சார்ந்தவைகளாகவே இருந்தன. அநேகமான கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.  எனக்கு பொது அறிவு இல்லையென்றே சொல்லலாம். ;) தெரியாத பல விசயங்களை தெரிந்துக்கொண்டேன்.

அவர் புவியியல் பேராசிரியர் என்பதால், கங்கை நதியைப் பற்றி கேட்டேன். மேற்கு வங்கம் முழுக்க, கங்கையின் கிளை நதியான ஹூங்லி நதி பாய்கிறது, இந்த நதியைப்பற்றி, பொறாமையில் பொங்கி பல பதிவுகள் எழுதியிருக்கிறேன். என் கண்ணுக்குள் நின்றுவிட்ட இந்நதியை ப்பற்றி பேச ஒருவர் கிடைத்தால் விடுவேனா?

முதலில் கேட்டது, 365 நாளும் வற்றாமல் ஓடி, கடலில் கலந்து, நீரெல்லாம் வீணாகிறதே, அதை அப்படியே வளைத்து தென்னிந்தியாவிற்கு கொண்டு வர எத்தனை ஆண்டுகள் ஆகும்.? 
...  அதற்கு அவர் சொன்ன பதிலை என்னால் நம்பவே முடியவில்லை. 'நமக்கிருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 4-5 ஆண்டுகளுக்குள் நதிகளை இணைக்கமுடியும்' என்றார். 'அட... 4-5 ஆண்டுகள் தானா?'

'ஆமாம் அவ்ளோ  தான் ஆகும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்தைக்கடக்கும் போதும் அவர்களின் அனுமதித்தவிர்த்து, அந்த மாநிலத்தின் சட்டத்திட்டங்கள் முதற்கொண்டு,நில ஆக்ரமிப்பு, அது சார்ந்த பிரச்சனைகள் என பல நிலைகளை த்தாண்ட வேண்டியுள்ளது. அதனால் காலதாமதம் ஆகத்தான் செய்யும். இதன் நடுவில் மத்திய மாநில அரசுகளின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், முதலிருந்து காய் நகர்ந்தும்படியாக ஆகிவிடும். அங்கங்கே கோப்புகளும், வேலையும் தேங்கிவிடும்,நின்று விடும் வாய்ப்புகளும் அதிகம்'', என தேவையான தொழில்நுட்ப வசதி இருந்தாலும், இந்தமாதிரியான  திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாமல் போவதற்கான பல்வேறு காரணங்களை பேசிக்கொண்டு வந்தோம்.

இந்தியாவை ப்பொறுத்த வரையில், அரசியலும், ஊழலும் ஒன்றோடு ஒன்று கைக்கோர்த்து ஆட்டமான ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் இன்றைய நிலையைப்பற்றி சொல்லவே வேண்டியதேயில்லை, இதில் நதிநீர் இணைப்பெல்லாம் நமக்கு நிரந்தரக்கனவே.. !

அடுத்து, கங்கை ஆற்றின் நீர் வரத்துப்பற்றியும், மண்ணின் தன்மைப்பற்றியும் சொன்ன போது, அது சார்ந்த தகவல்களை தந்தார்.

இமயமலையிலிருந்து தொடர்ந்து உருகும் பனியால், கங்கை ஆண்டு முழுதும் வற்றாமல் ஓடுகிறது, அதே சமயம்,நீரின் வேகம் என்பது சமவெளியை அடைந்தவுடன் மிதமாகவே இருக்கிறது. சமவெளியில், நீரின் வேகம் குறைவாக இருப்பதால், நதிநீர் இணைப்பு செய்யும் போது, தென்னிந்தியா வரை நதியைக்கொண்டு வர அதற்குத்தகுந்தார் போல ஆழமான/சரிவான பாதையை ஏற்படுத்த வேண்டியிருக்கும், மேற்கு வங்கத்தில், ஆற்றின் வேகத்தைப்பார்த்து, திருப்பி விட்டால்........ ஆவேசமாக அடித்துக்கொண்டு  வந்துவிடும்  என்று நான் நினைத்தது தவறு எனப் புரிந்தது

மண்ணின் தன்மைப்பற்றியும் அது சார்ந்த தொழில்கள் பற்றி பேசும் போது,  இமயத்திலிருந்து தொடங்கும் போது மலையிலிருந்து கற்கலாக உருண்டு வர தொடங்கி, தூரம் செல்ல செல்ல கற்கல் உடைந்து சின்ன சின்ன கூழாங்கற்கலாக மாறுவதோடு, சமவெளியில் வரும் போது மெல்லிய மணலாக மாறி, கங்கை பாயும் நிலவெளிகளிலும் நிலத்தடி மண்ணின் தன்மையும் அதற்கு தகுந்தார் போல மாறிவிட்டது. அதே சமயம் , நம்மூர் ஆறுகள் மழையை சார்ந்து இருப்பதால்,  ஆற்று மணலின் தன்மை வேறுவிதமாக உள்ளதென  வட/ தென்னிந்திய ஆற்று மணல்களின் வித்தியாசங்களை விளக்கி சொன்னார்.

ஆண்டு முழுதும் நீர்வரத்து இருக்க வாய்ப்பில்லாமலும் , தொடர் காடுகளின் அழிப்பின் காரணமாக, மழை வரத்து இல்லாமல், நம் ஆறுகள் வரண்டு, முல் செடிகள் மண்டி வளரும் அவல நிலைக்கு தள்ளப் பட்டிருக்கின்றன.

இமயம் கண்டிப்பாக இந்தியாவின் பொக்கிஷமே... காவேரி'க்காக நாம் போராடிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில்,  வடக்கிழக்கு மாநிலங்களில் வற்றாமல் ஓடி, தண்ணீருக்காக கத்தி கெஞ்சி கூச்சலிட்டு போராட்டம் செய்யும் மோசமான நிலையில் மக்களை வைக்காமல், கண்ணுக்கு எட்டியதூரம் பரந்து விரிந்து சோர்வில்லாமல் பாயும் கங்கை நதியை நினைத்துப்பார்த்து வணங்காமல் __/\__ இருக்க முடியவில்லை.....

அணில் குட்டி அனிதா ; ஒரு இடத்துக்குப் போனமா வந்தமான்னு இல்லாம... தொறந்த வாய மூடாம, அடுத்தவங்க காதுல இரத்தம் வரளவுக்கு பேசி..... வீட்டுக்கு வந்து வூட்டுக்கார்.. அந்த மூடாத வாயப்பத்தி கேட்டு கழுவி கழுவி ஊத்தினத தொடச்சிவிட்டுட்டு....  பதிவு எழுதியிருக்காங்களே..... கிர்ர்ர்ர்...இவங்கள...

பீட்டர் தாத்ஸ் ;