மெகா 'பல்பு'

பல்பு வாங்கறது ஒன்னும் நமக்கு புதுசில்ல..நவீன் ஏகத்துக்கும் பல்பு கொடுத்து.. கொடுத்து..பழகிப்போச்சி...... அவனிடம் 'பல்பு" வாங்கவே அவனுக்கு அம்மா'வா ஆண்டவன் என்னை படைத்திருக்கிறான்.

அதே சமயம் வெளியாட்களிடம் அப்படியல்ல.... சென்ற மாதத்தில் ஒருநாள் யார்னே தெரியாதவர்களிடம் அநியாயத்திற்கு 'பல்பு' வாங்கினேன். ......அப்படியே கொஞ்சம் மேல பாருங்க....... (கொசுவத்தி..)

*******

"மொட்டு.. விஜய் நகர் பஸ் ஸ்டாண்டில், இன்னைக்கு ஒரு தாத்தா, பாட்டிய பாத்தேன்.  ஜோடியா பிச்சை எடுத்துட்டு  இருந்தாங்க. ரொம்ப பாவமா இருந்திச்சிடா.. "

"ம்ம்ம்..."

"அந்த பாட்டி தலையில் பூ வெல்லாம் வச்சியிருந்துச்சி.. கையில தடி.. கூன் வேற, ஆனா தாத்தா கைய இருக்கமா பிடிச்சி ஜாக்கறதையா அவர பாத்துக்குது. அவரு கொஞ்சம் நல்லாதான் இருக்காரு.. கையில் கட்டப்பை, புதுசா இருந்துச்சி.".

"ம்ம்ம்.."

"அந்த பாட்டி பிச்சைக்கேக்கறது ரொம்ப பாவமா இருக்குடா.. வீட்டில் கோச்சிக்கிட்டு வந்துட்டு இருப்பாங்க.. இல்லைன்னா விரட்டி விட்ருப்பாங்க போல... அவங்கள பாத்தா சாதாரணமா பிச்சை எடுக்கறவங்க..மாதிரி தெரியலடா.... நல்ல குடும்பத்தை சேர்ந்தவங்க போல.."

"நல்ல குடும்பத்தை சேர்ந்தவங்க பிச்சை எடுக்க மாட்டாங்க..."

"ம்ம்..ஆமால்ல.. ஆனா.. இவங்கள பாத்தா..பிச்சைக்காரங்க மாதிரி இல்லடா..."

"ம்ம்ம்..""

"அவங்கள பாத்துட்டு வந்ததிலிருந்து.. அவங்கள ஏன் ஒரு ஹோம்ல சேர்த்துவிடக்கூடாதுன்னு யோசிக்கிறேன்.. கூகுள் செய்து சில ஹோம்ஸ் அட்ரஸ் எடுத்து வச்சியிருக்கேன். விஜய் நகர்ல இன்னொரு தரம் அவங்களை பாத்தா.. பேசி, கூட்டிட்டு போகப்போறேன்..."

"அவங்க ஹோம்க்கு எல்லாம் வரமாட்டாங்க..".

"ஏன்..ஏன் வரமாட்டாங்க?"

'வர மாட்டாங்கம்மா... சொன்னா புரிஞ்சிக்கோ... போய் கேட்டுக்கிட்டு இருக்காத..."

"ஏன் னு காரணம் சொல்லு அப்பதான் எனக்கு புரியும்..

"ஹோம் கு போறவங்க பிச்சை எடுக்க மாட்டாங்க... உனக்கு சொன்னா புரியாது..சும்மா கேள்வி தான் கேக்க தெரியும்.. அவங்க வரமாட்டாங்க..விட்ரு."..

"ம்ம்ம்...."

என் குழந்தை சொன்னா சரியாதான் இருக்கும்..

அத்தோடு அந்தப்பேச்சு முடிந்து போனது. ஆனால், நான் ஹொம் அட்ரஸ் எடுத்து என் கைப்பையில் வச்சிக்கிட்டேன். வேற யாருக்காச்சும் பயன்படுமே..

**********

அடுத்தநாள் மதிய வேளை, மருந்தகம் செல்ல தரமணி சாலைக்கு சென்றேன். போகிற வழியில், மூடியிருந்த கடை வாசலில், அதே முதியவர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தனர். பக்கத்து கடையிலிருந்து ஒரு பையன் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துட்டு ப்போனான்.

நவீன் சொன்னதை ஒரு பக்கமாக தூக்கி வச்சிட்டு, அவர்களிடம் சென்றேன்..

"பாட்டி, இப்ப இங்க சாப்படறீங்க.. ராத்திரி எங்க தூங்குவீங்க?"

"எங்க பொண்ணு வீட்ல.."

(ஞே!!.. பொண்ணு வீடா? ,அப்பவும் என் அறிவுக்கு எட்டல.. பொண்ணு வீடுங்கறதால , தங்க முடியல போலன்னு நினைச்சி..)

"சரி.. என் கூட வரீங்களா..?  வயசானவங்க தங்கற ஹோம்ல சேர்த்து விடறேன், காசு எல்லாம் கொடுக்க வேணாம், செளகரியமா இருக்கலாம்.."

சொல்லி முடிக்கல... கிழவி முகத்த ப்பார்க்கனுமே.. அந்த பாவமான முகம்
அப்படியே மாறி...ஆங்கிலப்படத்தில் வரும்"விட்ச்" போலானது. சன்னமான, கெஞ்சும் குரல் காணாமல் போயி.. சத்தம் அதிகமான அதிகார  குரல் வெளிவந்தது..

"அங்கெல்லாம் நாங்க வரல..எங்களுக்கு சரிப்படாது.."

"இல்ல பாட்டி, நல்லாயிருக்க்....."

"அட வரமாட்டோம்னு சொல்றேன் இல்ல..?  எங்க பொண்ணு வீடு பள்ளிக்கரணையில் இருக்கு..அது பகலில் வீட்டு வேலைக்கு போகும், நாங்க இங்க வந்துடுவோம்.. ராவுக்கு பொண்ணு வீட்டுக்கு போயிடுவோம்...எங்களுக்கு எதுக்கும்மா ஹோம்மூ... போம்மா இங்கிருந்து.. ..காசு இருந்தா குடு..... இல்லன்னா போயிட்டே இரு... சாப்படவுடாம வந்து நின்னுக்கிட்டு....ஓமு..கீமூன்னு....."

அவ்வ்வ்வ்வ்..... அந்த பாவமான மூஞ்சியா இது? அந்த மூஞ்சிய நம்பி 10,10 ரூபாயா இல்ல எல்லாரும் எடுத்துக்கொடுக்கறாங்க..

அடப்பாவி கிழவி..... என்னா கேடித்தனம்?!!

அன்னைக்கும் தலையில் பூ இருந்தது.. ..(சென்னையில் ஒரு முழம் பூ 20 ரூ)
************

இரவு நவீன் வந்ததும் நடந்ததை சொன்னேன்.. ரொம்ப பெருசா ரியாக்ட் பண்ணாட்டியும், "ம்ம்ம்...அதான் தெரியுமே.. நீ தெரிஞ்சிக்கிட்டல்ல.." ன்னு முடிச்சிட்டான்..

மெனக்கெட்டு வீட்டுக்கார் கிட்டவும் ஃபோன் செய்து சொன்னேன்....ஃபோன் காசு போனாலும் பரவாயில்லன்னு............ஒரு 15 நிமிஷம்........ .ம்ஹூம்....இதுவும் பழகிப்போச்சி....

**********

*Image courtesy Google : Thanks ! 

அந்த திகில் நிறைந்த நிமிடங்கள்...

அதிகமாக குளிரூட்டப்பட்ட அந்த அறையில், கைப்பிடித்து மெதுவாக அழைத்துச் செல்லப்பட்டேன். அறை வெளிச்சம் குறைவாக இருட்டாக இருந்தது. "நகையெல்லாம் கழட்டி கொடுத்திட்டியா? " வெற்றாக இருக்கும் என்னை இன்னும் ஒருமுறை சரிப்பார்த்துக்கொண்டாள் அவள் ..!!

உள்ளே ஒரே ஒருவர் இருந்தார், வேக வேகமாக பெரிய பெரிய ட்ரே போல் எதையோ எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.  ஏன் இத்தனை அவசரமாக இந்த வேலையை செய்யவேண்டும்? தெரியவில்லை...

என்னை சற்றே உயரமான ஒரு படுக்கையில் படுக்க வைத்தார்கள். என் கைகளை உடலோடு வைத்து கட்டிப்போட்டார்கள். திமிரவோ கத்தவோ முடியவில்லை. அவர்கள் அறியாமல் அசைந்து பார்த்தேன்..ம்ஹூம்.. ஒன்றும் நடக்கவில்லை.  மிக அழுத்தமாக கட்டப்பட்டிருக்கிறேன், நம் வேலை இங்கு பலிக்காதுன்னு தெரிந்துக்கொண்டேன்.

வேகமாக அந்த இளைஞன்  பெங்காலியில் ஆரம்பித்து, நான் முழிப்பதை கவனித்து..அதே வேகத்தில்.... "அச்சா" என்று ஹிந்தியில் மாற்றி ஏதோ சொல்லிக்கொண்டே போனான். என்னை கட்டிப்போட்டுவிட்டு "பேச்சப்பாரு பேச்சை"ன்னு அவன் சொல்வதை சரியா கவனிக்கல..... இன்னும் என்னை என்ன செய்யப்போறாங்களோ? தனியா வந்து இதுங்கக்கிட்ட இப்படி சிக்குவேன்னு நினைச்சிக்கூட பாக்கலையே...ன்னு சிந்தனை வேறெங்கோ இருந்தது.

ஹிந்தியில் சொல்லி முடிக்கும் போது, என் இடது கையில், எதையோ திணித்தான்.. ரப்பர் பந்து போல உணர்ந்தேன். இப்போது திறந்திருந்த என் கண்களை மூட சொன்னார்கள். "கண்ண திறக்கக்கூடாது சரியா...." என ஹிந்தியில் பயமுறத்தப்பட்டேன்.  தலையில் ஹெல்மெட் போல ஏதோ ஒன்றை மாட்டி அப்படி இப்படி என் தலையை திருப்ப முடியாமல் லாக் செய்தனர்..லாக் செய்யும் முன்னர் காதுகளும் அடைக்கப்பட்டன. அடேய் அப்பரெண்டீஸுகளா..." மூக்கும், வாயும், இன்னும் பாக்கி இருக்குடா..அதிலும் எதையாச்சும் வச்சி அடச்சிட்டா.." வேல சீக்கிரம் முடிஞ்சிடும், காசையும் வாங்கிட்டு, வீட்டுக்கும் நல்ல தகவலை சொல்லிடலாம் நீங்க" ன்னு .....ஹிஹி.. சொல்லல. .நினைச்சிக்கிட்டேன்.

இதுவரை நடப்பதைப்பார்த்தேன். இப்போது உணர ஆரம்பிக்கிறேன்.

என்னை ஏதோ ஒரு குகைக்குள் தள்ளுகிறார்கள்...  உடல், தலை இரண்டையுமே அசைக்க முடியல..ஆர்வத்தில் டகால்னு கண்ணைத்திறந்து பார்த்து மூடிக்கொண்டேன். குகைக்குள் வெளிச்சம் இருந்தது. ஆனால் இதுல என்னத்த தெரிஞ்சிக்க முடியும்? ,,,நடப்பது நடக்கட்டும்னு அமைதியாக படுத்துக்கிடந்தேன். வேற வழியும் இல்லை என்பதே உண்மை.

நான் இருந்த படுக்கை..குகைக்குள் செல்ல ஆரம்பித்தது.. "செத்துப்போயிட்டா.. உடலை இப்படி தள்ளி த்தான் எரிப்பாங்க போல" ன்னு நினைக்கும் போதே..."அடடே..நாம இன்னும் சாகலையே" ன்னும் தோணியது.

ட்ர்ர்ர்ர்ட்டக்க் ட்ர்ர்ர்ர்ட்டக்க்.....ன்னு சென்று நின்றுவிட்டது. மயான அமைதி.. லேசாக கண்ணைத்திறக்க முயற்சி செய்தேன். பயமாகவும் இருந்தது. முகத்துக்கு நேரே எதாச்சும் வந்து நின்னு..அதைப்பார்த்து பயந்து..ஹார்ட் அட்டாக் வந்துட்டா? இதுவே பெரிய தண்டனையா இருக்கு.. இதுக்கும் மேல நாமே  எதையும் இழுத்து விட்டுக்க வேணாம்னு , ரொம்ப முயற்சி செய்து கண்ணை த்திறக்காமல் கட்டுப்படுத்திக்கிட்டேன்.

அப்போது தான், என் வலது கை எதன் மேலோ உரசுவதை உணர்ந்தேன். அட அப்ரண்டீஸூகளா? கை தோல் உறிஞ்சிட போகுது..கட்டிப்போட்டீங்களே.. கைய ஒழுங்கா வச்சி கட்டலையான்னு....."... எனக்குள் நானே கேட்டுக்கிட்டு..கை உரசாதவாறு என் உடலோடு, அதாது..படுத்தபடி ஒரு கை மட்டும் சற்றே உயர தூக்கி க்கொண்டேன். சிறுது நேரத்தில் எந்த பிடிமானமும் இல்லாததால் கை வலிக்க ஆரம்பித்தது. கட்டப்பட்ட நிலையில் இதற்கு மேல் என்னால் கையை மேலே கொண்டு வர முடியவில்லை. கீழே கொண்டு சென்றால் எதன் மீதோ உரசி பயமுறுத்தியது.. ஆக வலியைப்பொறுத்துக்கொண்டேன்...

நான் சற்றும் எதிர்பாராத விதமாக... பலவிதமான அளவுகளினால் ஆன சுத்தியல்' கொண்டு, மாற்றி மாற்றி என் தலையில் அடிக்க ஆரம்பித்தார்கள். மூளை பிய்த்துக்கொண்டு வெளியில் வந்து, எதால் அடிக்கிறார்கள் எனப்பார்த்துவிடும் போல இருந்தது. சத்தம் தாங்காமல் காது கிழிந்துவிடும் போல இருந்தது..ஆனால் அடி என்னவோ....என் தலையில் படுவதாக தெரியவில்லை.

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்டக்...ட்டாக்டக் ட்டாக்டக் ...ட்ர்ர்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்ர் ட்டாக்டக்க் ட்டாக்க்க்டக்...ஜட்ட்ட்ட்ட்ஜட்ட் ஜட்ட்ட் ஜட்ட்ட்.. வீவ்வ்வ்வ்ர்ர்ர்ர்ர்ர் வீவ்வ்வ்ர்ர்ர்...ட்டாக்டக் ட்டாக்டக்..டர்ர்ர்ர்ர்ர்ட்ஷ்ஷ்.. டார்ர்ர்ஷ்ஷ்...

இப்படியான தொடர் ஒலிகள்...இடைவிடாது மிக சத்தமாக கேட்க ஆரம்பித்தது...நிற்காமல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது..

ஒலி நிற்கும் போது குகைக்குள் மேலும் கீழுமாக நான் தள்ளப்பட்டேன்.

கட்டை அவிழ்த்துக்கொண்டு எகிறி குதித்து தெறிச்சி ஓட வேண்டும் போல இருந்தது. ஆனால்....அப்போது தான் உணர்கிறேன்..... மூச்சுக்கூட என்னால் சரியாக விட முடியவில்லை...

அதீத சத்தத்தை கிரகிக்க முடியாமல், அதிலிருந்து தப்பிக்க முடியாமல், கத்தவும் முடியாமல்.. தொண்டை வரண்டு, இரும ஆரம்பித்தேன். ஆனால் மூச்சே சரியாக விடமுடியாமல் இருந்த எனக்கு இ்ருமவும் முடியவில்லை, எச்சில் கூட முழுங்க முடியவில்லை... மூச்சு விட கடினமாக....ஆக....என் பயம் அதிகமானது.

என்னை நானே அசுவாசப்படுத்த முயன்றேன். சத்தத்தினை கவனிக்காமல் என் மூச்சை கவனித்து மெதுவாக மூச்சை இழுத்து விட ஆரம்பித்தேன். இருமவும் முயற்சி செய்து உடல் தலை கட்டியிருப்பதால் முடியாமல் லேசாக வாய்த்திறக்காமல் இருமினேன்.

கையில் கொடுத்த ரப்பரை அழுத்தலாமான்னு நினைத்து, வேண்டாம்.... என்ன தான் நடக்கிறது பார்ப்போம், எவ்வளவு தான் என்னால் சமாளிக்க முடிகிறது என, திரும்பவும் சத்தத்தினை கவனிக்க ஆரம்பித்தேன்...

வரும் சத்தம் அதிகமாக இருந்தாலும் அதைக் கோர்வையாக்கி.. ஒரு கோரசாக மாற்றி இசையாக்க முயற்சி செய்தேன்... பிடிப்பட்டது... 2-3 வினாடிகளுக்கு ஒரு முறை இந்த கோரஸ்ஸில் நான் உருவாக்கி பாட ஆரம்பித்த வார்த்தைகள் மாறிக்கொண்டே இருந்தன....

"வீடு வீடு வீடு........./ஜெயா ஜெயா ஜெயா..../வீட்ர்ரு போதும்..விட்ரு போதும்.. / வீடு வீடு வீடு..../டாண்ன்னா டாண்ன்னா டாண்ன்னா டாண்ன்னா /கிர்னீஈஈப் கிர்னீஈஈப்.../வீடு வீடு வீடு.... ஜெயா ஜெயா ஜெயா...வீட்ர்ரு போதும்..விட்ரு போதும்........"..  இன்னும் எதேதோ அர்த்தமற்ற வார்த்தைகள்......

வீடு'ன்னா அது தொடர்ந்து 2-3 வினாடிகளுக்கு அல்லது மேலாக ஒலிக்கும்.... பிறகு ஒலி்யின் தன்மை வேறாக மாறும்..  ஜெயா'ன்னு எனக்கு ஒரு தோழி இருக்காங்க , அதனால் ஜெயா சொல்லும் போது தோழியை நினைத்தபடியே சொல்லிக்கொண்டு இருந்தேன்..."விட்ரு போதும்" சத்தம் கோர்வையாக வரும் போதெல்லாம்... இங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தோடே சொல்லிக்கொண்டிருந்தேன். ..

ஆக... ஏதேதோ தமிழில் புதுப்புது வார்த்தைகளை அர்த்தத்தோடும், ஹாரிஸ் பாடல்கள் போல அர்த்தமற்ற ஆரம்பமாகவும் , சத்தத்திற்கு ஏற்றவாறு  உருவாக்கி இசையாக்கிக்கொண்டிருந்தேன்....

மல்லக்க ஒரே நிலையில் படுத்து, இறுக்க கட்டப்பட்டு இருந்ததால்.. நடு இடுப்பில் இனம் புரியாத வலி, வலது கை தூக்கியபடி வைத்திருந்த வலி ஒரு பக்கம்....இதில்.. கன்னா பின்னா கடும் சத்தம் ஒரு பக்கம் என..இதைவிட ஒரு பெரிய தண்டனையை இது வரையில் நான் வாழ்க்கையில் அனுவித்தது இல்லை....


சரியாக 45 நிமிடம்.. ?!!!! ஹய்யோ..45 நிமிடம்.?????. நல்ல நினைவோடு, ஒரே இடத்தில் , கட்டிப்போடப்பட்டு, ஏதும் செய்ய முடியாமல் , அசையாமல் என் வாழ்க்கையில் நான் அமைதியாக இருந்த முதல் மறக்க முடியாத திகில் அனுபவம் !!

எவண்டாது இந்த MRI SCAN ஐ கண்டுப்பிடிச்சது...?!! அவன் மட்டும் என் கையில் கிடைச்சான்.. .....

*******

படுக்கை வெளியில் வந்தது.... கட்டுகள் அவிழ்த்து, தலை கவசம் கழட்டப்பட்டது.  எழ சொன்னார்கள்... நானும் அவர்கள் சொல்லும் முன் முயற்சி செய்தேன்..."ஹைய்யா.... முடியலையே.. ?!!" அப்படியும் இப்படியுமாக.. இருவர் அலேக்காக என்னைத்தூக்கி உட்கார வைத்தனர்.

இளைஞர் ஹிந்தியில் ஆரம்பித்தார்..."ஆப்கா நாம் க்யாஹே...?" .....
"ஏ கித்தனா? ."

"அடேய்......உடம்பு சரியில்லாத மனுசங்கள, இவ்ளாம் பெரிய மெஷின்குள்ள, இவ்ளோ சவுண்டுல, உசுரோட உள்ள விட்டு எடுத்துட்டு.. .மூள  கலங்கி லூசாகி இருப்போம்னு தானே டெஸ்ட் பண்றீங்க..?!"

"டேய் டேய்...நாங்கெல்லாம் மெஷினியே லூசாக்கறவங்க டா....எங்கக்கிட்டவேவா?".. 

*********
பீட்டர் தாத்ஸ் : You can create a music in any circumstances,  depends on your interest.

கிராமத்தில் ஒரு நாள்...


சாலைகளின் ஊடே கிராமங்களை கடந்திருக்கிறேன்.  கிராமம் என்றால் " பச்சென்று இருக்கும், ரசிக்கலாம், குளிர்ச்சியாக நிழலாக இருக்கும்,நீர் நிலைகள், ஆறு, குளம், குட்டை என ஏதாது ஒன்று கண்ணில் படும்.  நகரத்தார் கடந்தால், அப்பாவியாக சிரிக்கும் மக்கள் இவற்றை தவிர மக்களில் வாழ்வு நிலை, பழக்கவழக்கங்கள் என எதும் தெரியாது.

சொந்தபந்தம் என்று ஒருவரும் கிராமத்தில் வசிக்கவில்லை. திருக்கோயிலூர் - விழுப்புரம் சாலையில் அத்தையின் கொள்ளை இருந்தது. பள்ளிக்காலங்களில், விடுமுறைக்கு சென்று கிணற்றில், ஆற்றில் குளிப்பது, கரும்பு வயல்களில் கரும்பை இஷ்டத்திற்கு வெட்டி சாப்பிடுவது,, வாய்க்காலுக்கு நடுவில் கயிற்றுக்கட்டிலை போட்டு அதில் ஆட்டம் போடுவது, பம்பு செட் தொட்டியில் குதித்து நேரம் போவதே தெரியாமல் விளையாடுவது என  அத்தை வீட்டு வயல், அதை ஒட்டி நெடுக கண்ணுக்கு எட்டிய தூரம் வயல் வெளிகள் மட்டுமே இருக்கும். அங்கும் கிராமத்துத் தெருக்கள், வீடுகள் என எதும் இல்லை.

முதன் முறையாக ஒரு கிராமம், இப்படியும் அப்படியுமாக மூன்றே மூன்று தெருக்கள், நடுவே பெரிய சிவன் கோயில், சிமெண்டு ரோடுகளாக இருந்தன, அதில் ஒரு தெருவில் முதலியார்கள், மற்றொரு தெருவில் சைவ முதலியார்கள், கடைசியாக ஒரு தெருவில் இடையர்கள்.

ஆக, ஒரு தெரு முழுக்க ஒரு சாதியினர்... ?!! ஏன் இப்படி, நகரத்து வாழ்க்கை இப்படியில்லையே. எல்லோரும் கலந்துகட்டி தானே இருக்கோம். சாதி மற்றும் அல்ல மதமும் பார்ப்பதில்லையே? இதென்ன இப்படி..? ன்னு எனக்கு கேள்வி ஆனால் அதற்கு பதில் சொல்ல அங்கு யாரமில்லை. 

பெரிய கோயில், அந்த காலத்து ராஜா யாரோ கட்டிவைத்தது , அதிக பராமரிப்பு இல்லை. இப்போது தான் சீரமைத்து வருகின்றனர். அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, (வருமானம் வரும் கோயில்கள் தான் அரசு கவனம் செலுத்துமா?)  ஊர் மக்களே பணம் போட்டு புதுப்பித்து வருகின்றனர். கோயிலில் மூன்று கால் சிவன் சிலையை பார்த்தேன், அதற்கான வரலாறும் தெரியவில்லை.

பெரிய வன்னி மரம், அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இம்மரத்தை கட்டி அணைத்து  வேண்டிக்கொண்டால், உடல் பிரச்சனைகள், வாழ்க்கைப்பிரச்சனைகள் தீரும் என்று சொல்ல, நவீனுக்கு வேண்டி நான் கட்டிக்கொண்டேன்.

நிற்க, கிராமங்களில் வெளியூர்காரர்கள் அத்தனை சுலபமாக விவசாயம் செய்ய முடியாது என கண்கூடாகத் தெரிந்தது. எல்லாவற்றி்லும்
வெளியூர்காரர்களுக்கு தனி ரேட், அதுவும் சென்னைக்காரங்கன்னா கோடீஸ்வரர்கள் என்று நினைத்துக்கொள்கின்றனர். வேலையும் வேண்டுமென்றே நிறுத்தி நிதானமாக செய்து நாட்களை இழுத்து அடிக்கின்றனர்.

விவசாயம் அத்தனை எளிதல்ல, அதும் சுற்றி யாரும் சுமுகமாக, நட்பாகவும், உதவக்கூடிய மனப்பான்மையோடும் இல்லாதபோது அது மிகுந்த மன அழத்தத்தை தான் கொடுக்கிறது. படித்த பட்டதாரிகள், ஆர்வத்தில் விவசாயம் பார்க்க செல்வது என்பது அத்தனை சுலபமான காரியமில்லை. உள்ளூர்க்காரர்களின் தயவை நம்பியும், அவர்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டும், போட்ட முதல் கிட்டாமல் நட்டப்பட வேண்டியும் இருக்கிறது.

போன இடத்தில், புதிதாக விதைத்த நிலத்தில், வாய்க்கால் வரப்புக்கட்டி,  நீர்பாய்ச்சுதலை கற்றுக்கொண்டேன். வயலில் இறங்கி (செருப்பு காலோடு சென்று , அங்கு வேலை செய்பவர்கள் யாரும் செருப்பு காலோடு இல்லாததைப்பார்த்து செருப்பை கையில் எடுத்துக்கொண்டு நடந்தேன், பிறகு ஓரமாக விட்டுவிட்டு நிலத்தில் இறங்கினேன் :) ), கொஞ்சம் மடை திறப்புகளை அடைத்து தண்ணீர் பாய்ச்ச கற்றுக்கொண்டேன். தொப்பியோடு சென்றதால் வெயிலில் தலைவலி வரவில்லை. ஆனால் மண்ணில் இறங்கி வேலை செய்ததில் பாதம் கைகள் அநியாயத்திற்கு வரண்டு, இரவு மாய்ச்சரைசராக ஆலிவ் எண்ணெய் பூசிக்க்கொண்டு  தூங்கும்படி ஆனது. ஒன்றும் கடினமான வேலையாக தெரியவில்லை, ஆனால் இரவு தொடை, கால், கை எல்லாம் ஏதோ ஒரு உள்வலி இருந்துக்கொண்டே இருந்தது.

இன்னும், விவசாயம் சார்ந்த மற்ற வேலைகளைப்பார்த்தால் உடம்பு என்னவாகும் என்று நினைக்கும் போதே "பக்" னு இருந்தது.

விளைந்த பொருட்களை அரசு மண்டியில் அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு வியாபாரிகளுக்கு விற்று, பணத்தை அரசே கொடுத்துவிடுகிறது. அதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன. அங்கும் திருடு, ஏமாற்று வேலைகள் இருக்கத்தான் செய்கிறது. கடக்கவேண்டும்.. இணையம், தகவல்கள், புகார்கள் என்று எதுவுமே அங்கு வேலைக்கு ஆகாது. அது ஒரு உலகம். !  இவை எதும் அறியாத மக்கள் !

மூட்டைத்தூக்குபவர்களின் உடல் கட்டைப்பார்த்து பொறாமையாய் இருந்தது. ஜிம்' க்கு எவ்ளோ காசு அழுவறோம், டய்ட்'ன்னு ஒவ்வொன்னையும் பாத்து பாத்து சாப்பிடறோம்.. ஆனாலும் உடம்பு நம்ம சொன்னப்பேச்சு கேக்கவே மாட்டேங்குது. ஆனா இவங்க. தொப்பையில்லாம ஸ்லிம்மா இருக்காங்க..  பொறாமையில் பொங்கி அங்கிருந்து வரும் வரை, தலைமுழுக்க இதுவே ஆக்கிரமித்து கடுப்பேற்றியது !!

சரி, விசயத்துக்கு வருவோம், நிலம் நம்மளுது இல்லீங்க.. அத்தை மகன் IBM  இல், Team Head   ஆ இருக்காரு....Software Engineer, அவரு நிலம் வாங்கி விவசாயம் செய்யறாரு, அவரோட நிலத்தை ஓசியில் போய் பார்த்துட்டு வந்துதான்  இம்புட்டு கதை... :)

விவசாயம் செய்யனும்னு ரொம்ப ஆசை, சரி பார்த்தால் கஷ்டம் நஷ்டம் தெரியும்னு நினைச்சேன். இரண்டும் நல்லாவே தெரிந்தது.. அத்தோடு, விவசாயம் அறியாதோர் , கிராமங்களில் சென்று , அந்த மக்களோடு இணங்கி, அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி கட்டுப்பட்டு விவசாயம் செய்வது என்பது மிகப்பெரிய சவால்.

அத்தை மகன் நிலம் வாங்கி 2 வருடம் ஆச்சி, ஒரு தரம் அறுவடை செய்தாங்க, இப்ப திரும்ப விதச்சிருக்காங்க. ஆனால் லாபம் பார்க்க இன்னும் 3-5 ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறார். காரணம், சுற்றி இருக்கும் மக்கள், அவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகள், பயிர் வளர்ப்பு, பராமரிப்பு பற்றிய ஆழ்ந்த அறிவு, அது குறித்தான பாதுகாப்பு காரணிகள் என.. ஏகப்பட்டவை பின்னால் இருக்கிறது. 'சிறு விவசாயி'களுக்கு அரசு "அடையாள அட்டை" கொடுக்கறாங்க, அதை வாங்கிட்டா, விதைகள், உரம், என எல்லாமே குறைந்த விலையில் சலுகையில் கிடைக்குமாம்.

பொட்டித்தட்டறது அவருக்கு எளிது என்றாலும், ஆர்வத்தில், பல இடையூறுகளுக்கு மத்தியில் அவர் செய்யும் இந்த முயற்சிக்கு குடும்பத்தில் அத்தனைப்பேரும் ஒரு சேர வாழ்த்துகள் சொல்லி, அவரை ஊக்குவித்தவாரே இருக்கிறோம்.

பீட்டர் தாத்ஸ் : “The ultimate goal of farming is not the growing of crops, but the cultivation and perfection of human beings.”
― Masanobu Fukuoka,
The One-Straw Revolution

நிழல் வெளிச்சங்கள்

மருத்துவரைப்பார்க்க காத்திருந்தேன். இன்னமும் நான்கு பேர் போகவேண்டியிருந்தது. எப்படியும் இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். மற்ற மருத்துவமனைகள் போல அல்லாது குண்டூசி கிழே விழுந்தாலும் கேட்கும் அளவில் அமைதி நிலவும். பல சமயம் அந்த அமைதியில் என் முறை வருவதற்குள் தூங்கியும் இருக்கிறேன். 

இரண்டு  வயது இருக்கும்  குழந்தையும் அவனின் அம்மாவும் வந்தனர்.
அந்த சின்னக்குழந்தை கண்ணாடி அணிந்திருந்தது என் கவனத்தை முழுதும் அவன் பக்கம் திருப்பியது. பிங்க் நிற ப்ளாஸ்டிக் ஃப்ரேம் கண்ணாடிக்கு நடுவில் அவன் முட்டை விழிகளில் மட்டும் அதீத வேகமும், ஆர்வமும், பளப்பளப்பும் துடிப்பும் தெரிந்தது. ஒரு வேளை கண் பெரியதாக இருப்பதால் இப்பவே கண்ணாடி போட்டுட்டாங்களோ? என பல்வேறு விதங்களில் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். விடைதான் தெரியவில்லை.  ஆனால் 2-3 வயது குழந்தைக்கு கண்ணாடி என்பது அதிகமே !!

உள்ளே நுழைந்ததும், அம்மா மடியில் உட்கார்ந்துக்கொண்டு ஃபேன் இருக்கும் பக்கமாக திரும்பி, "அந்த ஃபேன் ரொம்ப மெதுவா சுத்துது" ன்னு சத்தமாக பேச ஆரம்பித்தான். சுரத்தில் இருந்த ஒருவர் அவன் வருவதற்கு முன் தான் வேகத்தை குறைத்திருந்தார். "அடடே.. பையன் செம உசாரா இருக்கானே" ன்னு நினைச்சேன், அவங்க அம்மாவை பாத்து சிரிச்சேன்.

அடுத்து, "வெளியில ஏதோ பூச்சி வருது, பாரும்மா' ன்னு சொன்னான். அவங்க அம்மாவும் பாத்துட்டு, "ஒன்னுமில்லையே" னாங்க. அடுத்து உள் அறையில்
மருந்து நிரப்பிக்கொண்டிருந்த சத்தம் கேட்டு "உள்ள ஏம்மா டொங்கு டொங்குன்னு சத்தம் கேட்டுட்டே இருக்குன்னு" கேட்டான். அம்மா அவனுக்கு பொறுமையாக விளக்கம் கொடுத்து, நாங்கள் அனைவரும் அவன் கேள்விகளை க்கண்டு சிரிப்பதை பார்த்து ஒவ்வொரு முறையும் அவங்களும் எங்களைப்பார்த்து சிரிச்சாங்க. ஆனா எப்பவும் அவனை கோவிச்சிக்கல.

என்னமோ ஒரு வித்தியாசம் அந்த குழந்தையிடம் தெரிந்தாலும், என்னவென்று என்னால் ஊகிக்க முடியல.. ஆனால் அவன் கண்ணில் ஏதோ பிரச்சனைன்னு மட்டும் புரிந்தது. பக்கத்தில் இருந்த என் கணவரிடம் ரகசியமாக " அந்த குழந்தையை கவனிச்சீங்களா? கண்ணு தெரியலன்னு நினைக்கிறேன்.. பாவமா இருக்கு" ன்னு சொல்லி முடிப்பதற்குள். அவன் "அம்மா நான் மருந்து ஆண்ட்டி ரூமுக்கு போறேன்" ன்னு அம்மா மடியில் இருந்து இறங்கி நேராக நடந்தவன், கொஞ்சம் முன்னே சென்றதும் கொஞ்சம் தட்டு தடுமாறி அந்த அறை வாசலில் அவனுக்கு இடது கைப்பக்கம் இருந்த நாற்காலியை தொட்டு ஏறி உட்கார்ந்து அறைப்பக்கம் திரும்பி "ஆண்ட்டி எனக்கு மாத்திரை தாங்க" என்றான்.  சர்க்கரை உருண்டைகள் சிலவற்றை ஒரு கவரில் போட்டு அவனுக்கு எதிராக நீட்டுகிறார் அந்த மருந்தக அம்மா....

கை நீட்டி வாங்காமல் அறைப்பக்கமே பார்க்கிறான். இவனின் அம்மா "ஆண்ட்டி தராங்க பாரு.. வாங்கிக்கோ" ன்னு அடுத்த செகண்ட், கை நீட்டி தடவி வாங்கிக்கொண்டு அதே வேகத்தில் அம்மாவை நோக்கி வந்த வந்துவிடுகிறான்.

இதைப்பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு, கண் தெரியவில்லை என்பது உறுதியானாலும், எந்த தயக்கமும் பயமும் இல்லாமல் டக்குனு இறங்கி நடக்கும் அவன் இயல்பு எனக்கு விசித்திரமாக இருந்தது. அதாது கண் தெரியுதா தெரியலையா? குழப்பமாக இருந்தது. அம்மாவிடம் சரியாக வந்து சேர்ந்துவிட்டான், அந்த அறைக்கும் ரொம்ப சிரமம் இல்லாமல் போனான். நடுவே ஒரு குழந்தையின் சத்தம் கேட்டு கை நீட்டி தேடி செல்லாமல் மெதுவாக அக்குழந்தையிடம் சென்று கொஞ்சிவிட்டும் வந்தான்..

அவன் அம்மாவிடம் குழந்தைக்கு வயசென்ன என்று விசாரித்தேன். 4 முடிஞ்சிடுத்துனாங்க. நம்பமுடியல. வளர்ச்சி கம்மியாக தான் இருந்தது. ஆனால் ரொம்பவே சுட்டியாக, எந்த சத்தம் கேட்டாலும் அது என்ன? என்ற கேள்வியால் அம்மாவை துளைத்துக்கொண்டிருந்தான்.

அப்படி இப்படியென... சிறிது நேரத்தில் நானும் அவனும் ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம். அவன் கொண்டு வந்திருந்த லைட் வைத்த பந்தை தூக்கிப்போட்டு பிடிக்கும் விளையாட்டு விளையாட ஆரம்பித்தோம்.

அவனைக்கூர்ந்து கவனித்துவாரே விளையாடினேன். யாருடைய உதவியும் இல்லாமல் பந்தைப்பி்டித்தான். அதாது, பந்தை கீழே அடித்தால் அது  ஒளியை எழுப்பும், அந்த ஒளியை வைத்து அவனருகில் அது செல்லும் போது பிடித்து விடுகிறான். ஒருவேளை ஒளி எழாவிட்டால் அவன் மேல் விழுந்தால் தடவி எடுக்கிறான்.

ஆக, சுத்தமான இருட்டாக இல்லாமல் நிழலாக அவனுக்கு வெளிச்சங்கள் தெரிகிறது.  அதை வைத்து அனுமானித்து பேசுகிறான் நடந்துக்கொள்கிறான். அவனின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் மிக துள்ளியமாக, அதி வேகமாக அவன் மூளை வேலை செய்கிறது. அது நிச்சயம் அசாதாரணம். சாதாரண குழந்தைகள் இப்படி இருக்காது

பெற்றோர் அவனின் குறையை பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளாமல், அவன் ஆற்றலை புரிந்து, பெரிய அளவில் கொண்டு வர முடியும்.

என் கண்ணுக்குள் நின்றுவிட்ட அந்த குழந்தைக்கு பார்வை என்பது நிழலான சில வெளிச்சங்களே....

அணில்குட்டி : எல்லாரும் அமைதியா இருக்க, அந்த குழந்தையோட இவிங்களும் ஆய் ஊய்னு கத்தி சத்தம் போட்டு பந்து விளையாடி வூட்டுக்கார் கிட்ட எப்படி திட்டு வாங்கினாங்கன்னு எழுதினாங்களா ? அதான.. அம்மணி கமுக்கமா அதையெல்லாம் தொடச்சி விட்டுக்குவாங்களே...

பீட்டர் தாத்ஸ் : His dark world was bright because of his sparkling attitude!”
― Archana Chaurasia Kapoor

இரு நிகழ்வுகள்..

நிகழ்வு 1 : சென்னை

சென்னையில் எல்லா வீடுகளுக்கும் புது மின்னளவி (Electric Meter) மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். இது சென்னை புயலுக்கு முன்னிருந்தே ஆரம்பித்த ஒரு வேளை. முதல் மழைக்குப்பிறகு சென்னை சென்ற போது (அந்த மழைக்கே சென்னை மூழ்கியிருந்தது), நண்பர் வீட்டில் புது மீட்டர் மாற்றியிருப்பதைப்பார்த்து, "மழையின் காரணமாக மாற்றினார்களா" என்றேன். "இல்லை, இது எல்லோருக்கும் மாற்றுகிறார்கள் "என்று சொன்னார்.

புயலுக்குப்பிறகு என் கவனம் முழுக்க எங்கள் வீட்டு மீட்டர் மேலேயே இருந்தது. ஏனென்றால், எங்கள் குடியிருப்பில் எங்களது மீட்டரே கீழ் வரிசையில் இருக்கும், கண்டிப்பாக மழைநீர் தேங்கியதில் மூழ்கியிருக்கும் என்ற எண்ணத்தில், குடியிருப்போரை அழைத்து குறிப்பாக இதைப்பற்றி விசாரித்தேன். ஒரு பிரச்சனையும் இல்லை நன்றாக இருக்கிறது, மின்சாரப்பிரச்சனையும் இல்லை என்று சொன்னார்கள். வெள்ளத்திற்கு பிறகு சென்னை சென்றபோது, மீட்டர் பாக்ஸ் இருக்குமிடத்தில் உட்கார்ந்து, மீட்டரின் நிலையை கவனித்துவிட்டே மேலே சென்றேன் (வீடு முதல் தளம்).

இப்படியிருக்க, ஒரு நாள், மின்சாரத்துறையிலிருந்து ஆள் வந்திருப்பதாகவும், மீட்டர் உடைந்துவிட்டதாகவும் எங்களுடன் பேச வேண்டுமென, வீட்டில் குடியிருப்போர் தொலைபேசியில் அழைத்தனர். கணவர் உடனேயே அவர்களின் நம்பர் வாங்கி பேசினார்.

சார் புது மீட்டர் எல்லாருக்கும் மாத்தறோம்...உங்க மீட்டர் உடைந்து இருக்கு... நீங்க 3500 ரூ கட்ட வேண்டி இருக்கும். அலுவலகத்துக்கு தெரியாமல் எங்களுக்கு 1700 ரு கொடுத்தீங்கன்னா.. நாங்களே மாத்தி கொடுத்திடறோம், ஆனா நாங்க இப்படி கேட்டதை ஆபிஸில் சொல்லிடாதீங்கன்னு" சொன்னாங்க.

சாதாரணமாக பணம் கேட்டாலே நமக்கு ஏறிடும்.. இதுல.. இப்படி கேட்டா..?? அதுவும்..குறிப்பாக மீட்டர் விசயத்தில் எனக்கு மண்டை குடைச்சல் இருந்து, தெளிவானதால், மீட்டர் உடைந்திருக்குன்னு சொன்ன தகவல் கோவத்தையே ஏற்படுத்தியது.

காசுப்பார்க்க, மீட்டர் மாற்றுவதற்கு முன், குறிப்பாக ஓனர் ஊரில் இல்லை என்ற விபரம் தெரிந்து வேண்டுமென்றே மீட்டரை அவர்களாகவே உடைத்துவிட்டு, பணம் கேட்கிறார்கள் என்று புரிய நேரம் ஆகவில்லை.

கணவரும், எடுத்தவுடனேயே.. "ஏ ஈ எனக்கு தெரிந்தவர் நான் நேரா பேசிக்கிறேன், ஆன்லைன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து 3500 ரூ கட்டிக்கிறேன், நீங்க செய்ய வேணாம்னு" சொல்லிட்டார்.

பணம் வாங்க, குடியிருப்போரிடமும் எங்களிடமும் தொடர்ந்து முயற்சி செய்து தொந்தரவு செய்தனர். ஆனால் மீட்டர் நல்லபடியாக இருந்தது தெரியும் என்பதால், பணம் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. குடியிருப்போரிடமும் பணம் தரவேண்டாம்னு சொல்லிட்டோம். ஒரு வாரம் இழுத்தடித்தனர் , ஒன்றும் நடக்கல. புது மீட்டர் தானாகவே மாற்றிவிட்டு சென்றுவிட்டனர். !! :)

நிகழ்வு 2 : கொல்கத்தா

முந்தின இரவு 9 மணி இருக்கும், திடீரென மின்சாரம் நின்றுபோனது. வெளியில் சென்றுப்பார்த்தேன், எதிர் வீடுகளில் மின்சாரம் இருந்தது. அதனால் சந்தேகப்பட்டு வீட்டு ஓனரிடம் சென்று கேட்டேன். அவர்கள் முதல் தளம், நாங்கள் இரண்டாவது தளம். அவர்கள் வீட்டிலும் பிரச்சனையில்லை, ஓனர் பையன் "இருங்க பார்க்கிறேன்"னு போய் பார்த்தான். ஃபியூஸ் எதும் போகல. இவர் வீட்டில் இல்லை, அவன் வேகமாக சென்று ஆள் அழைத்துவந்தான். அதற்குள் இவர் வந்துவிட்டார், வீட்டில் எதும் பிரச்சனையில்லை என தெரிந்தது. எங்கள் வீட்டிற்கு மட்டும் மெயின் லைனில் இருந்தே மின்சாரம் வரவில்லை. இதற்குள் இரவு மணி 10க்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் தொலைப்பேசியில் அழைத்து புகார் கொடுத்தோம். அடுத்த 10 நிமிடங்களில் மின்சாரம் வந்தது மட்டுமல்லாது, ஒரு ஆளும் வந்து, என் கணவரிடத்தில் கையெழுத்து வாங்கி சென்றார்.

அடுத்தநாள் காலை 9 மணிக்கு திரும்பவும் மின்சாரம் இல்லை. இவர் மீண்டும் புகார் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டார், கரண்ட்டு இல்லை என்ற விபரத்தை, இரவே தொந்தரவு செய்தோமேன்னு, வீட்டு ஓனரிடம் சொல்லவில்லை.

மதியம் 12.30 இருக்கும் மின்சாரம் இல்லை..ஒரு வேளையும் வீட்டில் ஆகவில்லை, கணவருக்கு மெசேஜ் அனுப்பினேன். அவரும் மற்றொரு முறை அழைத்து சொல்லியிருக்கிறார். மாலை வரை கரண்ட்டு வரவில்லை. எனக்கு வெளியில் போகும் வேலையிருந்ததால், 5.30 மணியிருக்கும், திரும்பவும் கணவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு சென்றுவிட்டேன். அவர் அலுவலகம் விட்டு வரும் வரை (இரவு 7 மணி) கரண்ட்டு வரவில்லை.

அலுவலகத்தில் வந்தவர் கடுப்பாகி, தொலைப்பேசியில் அழைத்து, கம்ப்ளைன்ட் நம்பர் சொல்லி, சத்தம் போட ஆரம்பித்தார். திரும்ப அவர்களும் சத்தம் போட ஆரம்பித்தனர். காரணம், மதியமே வந்திருக்கின்றனர். வீட்டு ஓனர் இரவு அழைத்ததற்கு தான் வந்திருக்கிறார்கள் என நினைத்து திரும்ப அனுப்பிவிட்டனர். மீண்டும் 5 மணிக்கு மேல் ஒரு தரம் வந்திருக்கின்றனர், அப்பவும் அதே கதை. பிறகு என் கணவர் வீட்டு ஓனர் வீடு வேறு , நாங்கள் இரண்டாம் தளம் என சொல்லி வரசொன்னார். 7 பேராக, வேணில் பெரிய ஏணியோடு வந்து சேரும் போது 9 மணிக்கு மேல் ஆகியது. ஏணி இறக்கிவைக்கவே 4 ஆட்கள் தேவைப்பட்டனர். பிரச்சனை என்னவென சோதித்து சரி செய்து கிளம்பும் போது இரவு 10 மணி இருக்கும்.

வீட்டு ஓனரிடம், என் கணவர், "எவ்வளவு பணம் கொடுக்கலாங்க" என கேட்க... நீங்க ஏன் தரணும்? காசெல்லாம் தரவேணாம், அவங்க வேலை அது, "ன்னு சொல்லவும் எனக்கும் அவருக்கும் வியப்பாக இருந்தது.

வந்தவர்களும் ஒரு டீ'க்கு கூட காசுக்கேட்கல. மொத்தம் 7 பேர்... அதன் பிறகு எதிரில் இருந்த கடையில் எல்லோருமாக அவர்கள் காசில் டீ குடித்துவிட்டு தான் கிளம்பினர். :)

நம்மூராக இருந்தால்.. இரவு நேரத்தில் வந்ததற்கும், பகலில் இரண்டுமுறை வந்து திரும்ப சென்றதற்குமாக சேர்த்து 1000 ரூ அல்லது குறைந்தபட்சம் ஆளுக்கு 100 என 700 ரூபாய் ஆவது வாங்கிட்டு தான் போயிருப்பாங்க..

பீட்டர் தாத்ஸ்: Dealing with the government does not mean you have to give a bribe
ng with the government does not mean you have to give a bribe
Read more at: http://www.brainyquote.com/quotes/keywords/bribe.html
Dealing with the government does not mean you have to give a bribe
Read more at: http://www.brainyquote.com/quotes/keywords/bribe.html

சிம்புவின் 'பீப்' பாடலும் என் தெளிவும்

 சிம்பு'வின் பீப் பாடலை கேட்டவுடன்.. பக்'கென்றது என்னவோ உண்மை...ஓரே காரணம் நம் வீட்டு குழந்தைகள் தான். ஒரு வருசம் கூட ஆகாத குழந்தைகள்  சினிமா பாடல்களைப் பாட ஆரம்பித்துவிட்ட காலத்தில் இருக்கிறோம்..


வீட்டில் குழந்தைகள் இந்த பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டால்.. தயவு செய்து இதைப்படிப்போர் அவங்கவங்க வீட்டில் உள்ள குழந்தைகள் இந்த பாடலை பாடி ஆடுவதைப்போல கற்பனை செய்து பாருங்கள்.... ....... எப்படியிருக்கு????

அடுத்து சூப்பர் சிங்கரில் இந்த பாடலை குழந்தைகள் பாட.. அதற்கு நடுவர்கள்... அந்த' வார்த்தையில் ண்' க்கு சரியாக அழுத்தம் கொடுக்கல.. இன்னும் சரியா பாடனும்.. னு சொன்னால் எப்படி இருக்கும்?

இதே பாடலை நடன நிகழ்ச்சிகளில் ஆடும் போது "அந்த வார்த்தைக்கு எப்படியான அங்க அசைவுகளை செய்வார்கள்?....

இப்படியாக  பாட்டைக்கேட்ட மாத்திரத்தில் வேக வேகமாக என் கற்பனை எங்கோ போய்க்கொண்டிருந்தது.....

இதெல்லாம் கூட பரவாயில்லை போல... அந்த வார்த்தைக்கு நம்ம பதிவுலக எழுத்தாளர்கள் கொடுக்கும் தமிழ், வரலாற்று, இலக்கிய, பிற நாட்டு மொழிகளில் அர்த்தங்களை விவரமாக விளக்கி எழுதியுள்ள பதிவுகளை படிக்கும் போது தலைசுற்றி மயக்கமே வருகிறது..

என்னமா தனித்தனியா எழுத்துக்களை பி்ரித்து, ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்றாங்க..முடியலப்பா சாமிகளா...சிலதெல்லாம் சத்தியமா என் அறிவுக்கு எட்டவேயில்ல...

குஜராத்தில் இருந்து போது சில தமிழ் கெட்ட வார்த்தைகளை என்னிடம் சொல்லி, "பெகன்..இந்த வார்த்தை உங்க ஊர்ல கெட்ட வார்த்தை தானே?ன்னு" கேட்டு சிரிப்பாங்க... எனக்கு வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கும். தமிழில் எத்தனையோ நல்ல வார்த்தைகள் இருக்க..அதெல்லாம் சொல்ல வராத இவர்களுக்கு கெட்ட வார்த்தைகள் மட்டும் மாநிலங்கள் தாண்டி வந்திருக்கிறதே.. எளிதாக கற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறதே என்று ஆயாசப்படுவேன்..

மேற்கு வங்கம் வந்த புதிதில், ஒரு முறை வாடகை காரில் பயணம் செய்த போது பெங்காலி பாடல்கள் ஒலித்து வந்ததற்கு நடுவே திடீரென "நாக்கு முக்க" பாடல் ஒலித்தது. சற்றே யோசியுங்கள், ஹிந்தி தவிர்த்து வேற்று மொழி பாடல்களை நம்மூரில் எங்காவது  கேட்க முடியுமா? அதும் இதுப்போன்ற மக்களிடம்?  அந்த ஓட்டுனரிடம்..."தம்பி இந்தப்பாட்டு எங்க நாட்டு பாட்டு, எப்படி உங்களிடம்??" ... "ஓ இது உங்க பாட்டா? (அவருக்கு என்ன மொழின்னு கூட தெரியல) இந்தப்பக்கம் வர லாரி டிரைவர்களிடமிருந்து பரவிடுத்து"...என்றார்...      

சிம்பு பாட்டு வந்தவுடன் இந்த நிகழ்வும் நினைவுக்கு வந்து.. ஆகா.. பீப் பாடலும் மிக எளிதாக இந்தியா முழுக்க அர்த்தம் தெரியாவிட்டாலும் பரவிவிடுமே...

அடுத்து இங்கு பல கடைகளில் நம்மோட கெட்ட வார்த்தை ஒன்றை பெயர் பலகையில் பார்க்க முடிந்தது. குபுக்' னு சிரிப்பு வரும்.. ஆனால் என் வூட்டுக்கார் சீரியஸாக திட்டி, "அவங்களுக்கு ஏதாது புனிதமான அர்த்தமாக இருக்கும். ஏன் சிரிக்கற?" ன்னு எரிந்து விழவும்.. வந்ததும் வராததுமாக கூகுள் ஆண்டவரிடம் அர்த்தம் கேட்க  ' Business centre' என்று வந்தது..

நம் மொழியின் கெட்ட வார்த்தைக்கு பெங்காலியில் இப்படியும் ஒரு அர்த்தமான்னு விழிகள் விரிந்தது.

அதைவிட இப்போது பீப் பாடல் குறித்து "அர்த்தம் பாராட்டி" வரும் பதிவுகள், நம் பதிவர்கள் இயக்குனர்களுக்கே தெரியாத கோணத்தில் எழுதும் வித விதமான திரை விமர்சனர்களை விடவும்......சத்தியமா முடியல...

இங்கு இருக்கும் அறிவாளிகளையும் சிந்தனையாளர்களையும், யதார்த்தவாதிகளையும், இலக்கியவாதிகளையும், கடைசியாக பெண்ணியவாதிகளையும், அவர்களைப்பார்த்து பொங்கும் & பாராட்டும் சந்தர்ப்பவாதிகளையும் பார்க்கும் போது...

நானெல்லாம் இந்த ஒலகத்தில் என்னத்த பொறந்து, என்னத்த வளந்து.. என்னத்தத்தான் செய்யறேன்னு ரொம்ப லைட்டா புரிய ஆரம்பிச்சிருக்கு !!

பீட்டர்  தாத்ஸ் : “Only on the Internet can a person be lonely and popular at the same time.” ― Allison Burnett

Image Courtesy : Thx Google 

உங்கள கடிச்சது பாம்பா?

கல்யாணி நகரம் (மேற்குவங்கம்), கேரளாவைப்போல இருக்குமென்று 
எழுதியிருந்தேன். ஊர் முழுக்க பச்சை பசேரென்று தான் இருக்கும், வானுயர்ந்த மரங்கள், விதவிதமான வண்ண வண்ண பூச்செடிகள், கொடிகள், செடிகள் என வீடுகள் முழுக்க பாக்கு, தேக்கு, தென்னை, பலா, வாழை, மா என மரங்களும் பூச்செடிகளும் கொடிகளுமாகவே இருக்கும்.
குளிர் காலங்களில் ஆரஞ்சு நிறத்தில் பூக்கள் பூத்துக்குலுங்கும் ஒரு கொடி வீட்டு முகப்பிலும் , அதே கொடி இரண்டாவது மாடி வரையிலும் வரவழைத்து விட்டாச்சி..

தினமும் மாலையில், பக்கத்திலிருக்கும் மைதானத்திற்கு நடக்க செல்வேன். அப்படி செல்கையில் ஒருநாள், தெரு முக்கை தாண்டுவதற்குள் இடது கையில் வளையல் போடும் இடத்தில் அரித்தது. லேசாக சொறிந்தபடி, நவீனிடம் .."திடீர்னு அரிக்குதுடா'னு சொன்னேன். எப்பவும் போல.." கொசு கடிச்சி இருக்கும்.. என்னைக்கூட தான் கடிக்குது.. உன்ன மாதிரி சொல்லிட்டா இருக்கேன்.. சும்மா வாம்மா" என்றான்.

"கொசுக்கடிக்கறது எல்லாம் நமக்கு புதுசா? கொசுக்கடிச்சா இப்படி அரிக்காதுடா... சரி வா.." ன்னு நானும் பெருசா ஒன்னும் கண்டுக்கல... ஆனால்.. நேரம் ஆக ஆக கை..மற்றொரு கை, கழுத்து, காது..இடுப்பு , தொடைன்னு, முதுகுனு அரிப்பு பரவிக்கொண்டே வந்தது. முகத்தில் மட்டும் நானே கை வைக்கல..மற்றபடி எல்லா இடத்திலும் தாங்கமுடியாமல் சொறிந்து கொண்டிருந்தேன்.. இருட்டு ஒன்றும் தெரியவில்லை.

வீட்டிற்கு வந்தப்பிறகு தான் கவனித்தேன்., அல்மோஸ்ட் 40% ஐ படம் விக்ரம் போல ஆகியிருந்தேன். பெருசு பெருசா தண்டு தண்டாக வீங்கி கை, கால் முகம்னு பாரமட்சமின்றி வீங்கி இருந்தது. நவீனும் அவரும் பார்த்து பயந்துட்டாங்க..
நான் கம்பளி பூச்சியாக இருக்குமென்று நினைத்து, உடனே சுடுதண்ணீர் வைத்து குளித்தேன். 10 நிமிடம் அரிப்பு இல்லை,, ஆனால் திரும்பவும் ஆரம்பித்தது. சுடுதண்ணீரில் குளித்தவுடன் வீக்கம் லேசாக குறைந்து சிகப்பு திட்டு திட்டுகளாக உடல் முழுக்கத்தெரிய ஆரம்பித்தது. ஆனால் அதன் மேல் வீக்கமும் ஆரம்பித்தது. 

நமக்கு தான் உணவே மருந்தாச்சே? ஆயா சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வர, 15 மிளகை எடுத்து வாயில் போட்டு, அடிநாக்கில் பட்டுவிடாமல் மென்று,  காரம் நாக்கை தொடுவதற்குள் தண்ணீர் குடித்து விழுங்கினேன்..
நேரம் சென்றதே ஒழிய அரிப்பும், வீக்கமும் குறையவேயில்லை. சரி இரவானால் டாக்டர் கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது, என மருத்துமனை சென்று விடலாம்னு கிளம்பினோம். மருத்துவமனையில் மருத்துவர், தைரியம் சொல்லி ஊசிப்போட்டுக்கொள்ள பரிந்துரைத்தார். நர்சம்மா வந்து ஒரே சமயத்தில் இரண்டு இடுப்பிலும் இரண்டு ஊசிப்போட்டாங்க.

பெரிய லிஸ்ட் டாக மருந்து சீட்டு கொடுக்கப்பட்டது. ஏன் இப்படி? ன்னு கேட்டால், விஷப்பூச்சி ஏதோ கடிச்சியிருக்கு, விஷம் இரத்தத்தில் பரவி, உடல் முழுக்க இப்படி ஆகிவிட்டது, இரத்தத்தில் கலந்த விஷத்தை முற்றிலும் எடுக்கனும். அதற்கு குறைந்தது 15 நாளாவது 3 வேலை மாத்திரை சாப்பிடனும்னு சொல்லிட்டார்.

என்ன கொடுமை இது.. மாத்திரை மருந்துன்னாவே தெறிச்சி ஓடுவேன்.. எனக்கு 15 நாள், ஒரு பிடி மாத்திரை அதும் 3 வேலையும்.... நினைக்கும் போதே கண்ணைக்கட்டியது. ஆனால்.. வீக்கத்தையும், சிகப்பு திட்டுகளையும் பார்க்கும் போது.. மாத்திரை எவ்ளோ பரவாயில்லை என்றே தோன்றியது.

தூக்கத்திற்கு மிக வீரிய தூக்கமாத்திரை எழுதித்தரப்பட்டது. அதும் ஒன்றல்ல..இரண்டு. மருந்துக்கடைக்காரர், என் மேல் பரிதாபப்பட்டு, "அந்தம்மா தூங்காட்டியும் பரவாயில்ல.. இந்த மாத்திரை உடலுக்கு நல்லதல்ல...நீங்க இதை அவங்களுக்கு கொடுக்க வேணாம்,, அதனால் வாங்கிக்கவும் வேணாம்னு" சொல்லி கொடுக்கவேயில்லை. கெட்டதிலும் ஒரு நல்லது.

விடியற்காலை பெங்களூர் பயணம். கையும் காலும் இப்படி வீங்கி இருந்தால் நிச்சயம் விமானத்தில் அனுமதிக்க மாட்டாங்க, இது இரவுக்குள் சரியாகனும்னு படுத்தேன். ஊசி , மாத்திரைகள் மயக்கத்தை த்தாண்டி ஏதோ உடல் உபாதை சரியாக தூங்கல.. 3 மணிக்கு எழுந்தாச்சி. குளிக்கும் போது கையில் ஓரிடத்தில் எரிந்தது.  லேசாக கறுத்து, பெரிய கடுகு அளவில், பூச்சிக்கடித்த வடு ரணம் மாறாமல் தெரிந்தது. 
நவீனிடமும் அவரிடமும் காட்டினேன். "இவ்ளாம் பெருசா ஏதோ கடிச்சியிருக்கு, இப்பவரைக்கும் அது என்ன ஏதுன்னு உனக்கு தெரியலன்னு" திட்டு விழுந்தது.  இத்தனை மாத்திரை மருந்துன்னு சாப்பிட்டும் அந்த பூச்சிக்கடித்த இடத்தில் ரணம் போக மூன்று நாட்கள் ஆகின. நச்சு  அதிகமுள்ள பூச்சின்னு புரிந்தது.

மாத்திரையை 15 நாளும் சாப்பிட்டு தொலைக்க வேண்டியிருந்தது. வீட்டு ஓனரிடம் 2 நாள் முந்திதான் இதைப்பற்றி சொன்னேன். அதிர்ச்சியாகி,, நம்மையும் கடித்துவிட்டால் என்னா செய்வதுன்னு, தோட்டக்காரனிடம் சொல்லி, கொடியை எடுக்க சொல்றேன்னு சொன்னாங்க. நான் மறுத்து, "குளிர் காலம் இப்பதானே ஆரம்பிக்குது, அது பூத்து முடித்தவுடன் எடுத்துக்கலாம், மருந்து மட்டும் அடிக்க சொல்லுங்கன்னு""  சொன்னேன். மெதுவா...கேக்கறாங்க..."உங்கள கடிச்சது பாம்பா??"

"ஞே" 

அடப்பாவிகளா,,,பாம்பா??? ..பாம்புக்கூட கடிக்குமா இங்க? ன்னு மனசுல நினைச்சிக்கிட்டு, "பாம்பு கடிச்சா கடிச்ச இடத்தில் இரண்டு மார்க் இருக்கும் (அறிவு?? இந்த அறிவுக்கு காரணம் ..நம்மோட தமிழ் சினிமாக்கள்) ஆனா எனக்கு ஓரு மார்க் தான் இருந்துச்சி.. பாம்பு மாதிரி ஏதோ ஒன்னு தான் கடிச்சியி்ருக்கு...ஆனா அது பாம்பு இல்லைன்னு" சொன்னேன்.

இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு.. கேரளாவில் வேறு விதமான அனுபவங்கள் கிடைத்தது.. இங்கே இப்படி....

மொத்தத்தில்.. நம் உடலில் விஷப்பூச்சி கடிச்சாலும் சாகாமல் இருக்குமளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று ஒரு நிம்மதி.

இன்று தோட்டக்காரர் வந்து என்னை பெங்காலியில் விசாரித்துவிட்டு, "இதுல அந்தமாதிரி பூச்சியெல்லாம் இருக்காதும்மா"ன்னு ,முக வாட்டத்தோடு, கொடி, செடின்னு எல்லாவற்றிலும் பூச்சி மருந்து அடிச்சிட்டு போனார்.

பீட்டர் தாத்ஸ்: Everyone can identify with a fragrant garden, with beauty of sunset, with the quiet of nature, with a warm and cozy cottage.

கேத்தகோம்ப் - பாரிஸ் பயணக்குறிப்புகள் #5

Catacombs of Paris :  கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட மனிதர்களின் ஆயிரக்கணக்கான மண்டை ஓடுகளும், எலும்புகளும் பூமிக்கு அடியில் பாதாளாத்தில் மிக அழகாக கொலு பொம்மைகள் போன்று அடுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.  ஒரே இடத்தில்
அமைக்கப்பட்ட 200 வளைவு படிக்கட்டுகளில் ல் இறங்கி உள்ளேப்போனால், நீண்ட இருண்ட குகை... நடக்க நடக்க சில கிமி வளைந்து வளைந்து செல்லும் நடைப்பயணம். கடைசியில் இந்த எலும்புக்கூடுகள் பகுதிக்கு செல்கிறது. இதுவும் சில கிமி இருக்கும்.. இத்தனை மனிதர்கள் கொல்லப்பட்டனரா?  என்ற ஆதங்கம் வருகிறது.  ஆனால் இவற்றைப்பார்த்து பயமே வரவில்லை. குழந்தைகள், இதயம் பலகீனமானவர்கள் அனுமதியில்லை. ஏதோ ஒரு இடத்தில் நுழைந்தோம்.. வெளியில் வர அதே 200 வளைவு படிக்கட்டுகள், வெளியில் வந்தால்.. நுழைந்த இடத்திலிருந்து 1 கிமி தூரம் தள்ளி வெளிவாசல் இருந்தது.

கூகுளில் தேடியதில், இவங்க தெளிவாக இதைப்பற்றி எழுதி இருந்தாங்க.. காப்பி செய்தாச்சி..

Content courtesy Cakes Altrincham, United Kingdom : Thank you!

//“Walls of Skulls & Bones!”
Reviewed 8 November 2006
We visited the Catacombs on a Saturday morning at about 11am. They had opened at 10am and there was already a queue as they only allow 200 visitors in the catacombs at any one time. You'll need to be fairly fit to visit as there are over 100 steps down into the tunnels and around 80 deep spiraled steps to get back to the surface - and no resting point! Once in the tunnels there are a few rooms featuring boards telling the history of the catacombs and then a very very long walk through a narrow tunnel with a low ceiling until you reach the bones. I wasn't sure what to expect, maybe a few skeletons arranged into body shapes. What I found were literally millions of peoples bones lining metre after metre of walls both sides of the tunnels, neatly stacked and arranged in patterns with femur ends and skulls making up most of the walls. The number of bones were amazing, stretching as far as the eye could see.


The catacombs are one of the strangest places I have ever visited. Certainly not suitable for children! It was a very spooky place with low lighting but I didn't find it as emotional as I thought I might. There is no tragic story to the bones, some came from a mass grave of people killed by an epidemic of some sorts, but most were just taken there from other graveyards. I think if they were all from the war or some other disaster I might have been able to empathize a little more. Nevertheless, its a very interesting place to visit. I certainly don't envy the people who had to arrange all the bones, it must have taken years.

Other things to mention are; wear sensible shoes. The ground is potholed and its a little wet and muddy in some places, plus there are a lot of tunnels to walk through. It wasn't particularly cold down there but the temperature difference may be noticed in the summer heat, so take a jumper. Don't take luggage -
they can't store it, and the entrance is streets away from the exit. Also, they will check any handbags for bones when you exit. Yes, people really do try to take them. There was a skull sitting on top of the counter that they had found in someone's bag the day before. Unbelievable.//
மேல் தரப்பட்டுள்ள தகவல்கள் , இவ்விடம் செல்ல போதுமானதாக இருக்குமென நினைக்கிறேன். நவீனோடு வெக சில இடங்களே செல்ல நேரம் இருந்தது, அதில் இதுவும் ஒன்று. இதற்கான வரிசையில் நிற்கும் போதே நவீனுக்கும் எனக்கும் ஏகப்பட்ட வாக்குவாதங்கள். அநேகமாக அது உணவைப்பற்றியும், ஃப்ரான்ஸ் நகரின் சுத்தம் மற்றும் மக்களின் பழக்கவழக்கங்கள், பொது இடங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றியதுமாக இருந்தது.

எப்போதும் இந்தியாவை விட்டுக்கொடுக்காமல் பேசிய நானும், ப்ளடி இந்தியன் என என் பழக்க வழக்கங்களை திட்டியபடியே அவனும் இருந்தான். அதாது, பொது இடத்தில் சத்தமில்லாமல் பேசவும், கேமராவை வைத்துக்கொண்டு ஃபோட்டோ எடுத்தபடியே இருந்ததால், எதை எடுக்கனும் யாரை எடுக்கக்கூடாது, எடுத்தால் குற்றம் என்றும், ரயில் நிலைய படிக்கட்டுகளில் எந்தப்பக்கம் நிற்கவேண்டும், ரயிலில் எப்படி நிற்க வேண்டும், உட்காரவேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்தான். வேகமாக நடக்கவேண்டுமென நான் கத்த கத்த சின்னப்புள்ளையை இழுத்துக்கிட்டு போறாப்ல என்னை இழுத்துக்கொண்டும் ஓடினான்.

உணவு'ன்னு வரும் போது, கோவத்தின் உச்சிக்கு போனான். ஆம், வெளியில் சென்றால்,அந்த நாட்டு உணவு எனக்குப்பிடிக்கவில்லை என வெறும் பன் ' ஐ சாப்பிட்டும் , திரவ உணவுகளை சாப்பிட்டும் காலம் கடத்திவந்தேன். நவீனோடு சென்ற போதும், அவர்கள் உணவை சாப்பிடமாட்டேன் என அடம் பிடிக்க, விடாமல் ஏதோ உணவை வாங்கிவந்து ," எனக்கு ஃபிரன்ச் தெரியும், இது சிக்கன், சாப்பிடு" என்று கட்டாயப்படுத்தி கொடுத்தான். பாதி சாப்பிட்டு முடித்தவுடன்,அது 'பன்றிக்கறி' எனக்கூற.... குமட்டிக்கொண்டு வந்தது. பாதியை அப்படியே அவரிடம் கொடுத்துவிட்டு, கோவமும் அழுகையுமாய்.."என்னை பன்னி சாப்பிட வச்சிட்ட இல்ல நீனு"ன்னு நவீனோடு சண்டையிட... அவனோ.. "இவ்ளோநேரம் நல்லா ருசிச்சி ருசிச்சி சாப்பிட்ட இல்ல..அது பன்னியா கோழியான்னு கூட உனக்கு வித்தியாசம் தெரியல இல்ல..?..அப்புறம் என்ன ?. சாப்பிட்டு பழகு" னு திரும்ப பதில் சொல்ல.. .. இருவருக்கும் லடாய் அதிகமாகி, "இனிமே கொலப்பட்னி இருந்தாலும் இருப்பேன், நீங்க இரண்டுப்பேரும் எது வாங்கிக்கொடுத்தாலும் நான் சாப்பிடமாட்டேன்" என சவால் விட..

வூட்டுக்கார் நடுவில் வந்து... அவனை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு, என்னிடம் "நீ சாப்பிட்டது சிக்கன் தான்.. அவன் உன்னை சும்மா கிண்டல் செய்து வெறுப்பேத்தறான்... அதையும் நீ நம்பி.. வம்பு பண்ற?.. இந்தா சாப்பிடு இது சிக்கன் தான்".னு கொடுத்தார்..

சிக்கனா இருந்தாலும் எனக்கு வேணாம்னு தண்ணிய குடிச்சிட்டு ..அதன் பிறகு அவர்கள் என்ன கொடுத்தாலும் வாங்கி சாப்பிடாமல், வீட்டுக்கு வந்து நான் சமைத்ததை மட்டுமே சாப்பிட்டேன்..

இத்தனையும் இந்த காத்தேகோம்ப்ஸ் பார்க்க வரிசையில் நிற்கும் போது நடந்தவை.. மிக மிக மெதுவாக நகர்ந்த வரிசையில், டிக்கெட் வாங்கவே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வேண்டியிருந்தது.

பயணக்குறிப்பு - 4

தொடரும்....

Images courtesy Google : Thx

ஐஃபில் டவரில் புளிசாதம் - பாரிஸ் பயணக்குறிப்புகள் #4

முந்தைய பதிவுகள் :
1. பாரிஸ் பயணத்துவக்கம்
2. நவீன் விடுதி அறை
3. டிஸ்னி பார்க் - பாரிஸ்

நவீனுக்கு பிடித்த காய்கறிகளை, பக்கத்திலிருந்த இலங்கை தமிழர் கடையில் முந்தின இரவே வாங்கி வைத்திருந்தேன். காலை சிற்றூண்டியோடு, சமையலும் முடித்து, முந்தின நாள் வெளியில் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டத்தில், கொஞ்சம் புளிக்காய்ச்சல் செய்து எங்களுக்கு சாப்பாடும் கட்டிக்கொண்டேன்.  புளிசாதம் தொட்டுக்கொள்ள உருளை வறுவல். !!

இன்று, நாங்கள் போக திட்டமிட்ட இடம் "Eiffel Tower"  

நவீன் இருக்குமிடத்திலிருந்து ரயிலில், இரண்டு இடங்கள் இறங்கி , ரயில் மாற வேண்டும். இதெல்லாம் தெரியாது தான், ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கும் போதே, எங்களுக்கு ஒரு Metro & RER Map ஐ கொடுத்து, மொழி தெரியாததால், செய்கையாலேயே எங்கு இறங்கி ரயில் மாறனும்னு பொறுமையாக விளக்கம் சொல்லி டிக்கெட் கொடுத்தார் அந்த ஃப்ரான்ஸ் பெண்.

பொதுவாக லைன்' கள் 
A, B,C,D, E என இருக்கின்றன, அவைக்கு தனித்தனியான வண்ணங்கள். இப்ப A லிருந்து D க்கு போகவேண்டுமென்றால், எந்த ரயில் நிலையிலிருந்து D க்கு கனெக்ஷன் ரயில்கள் இருக்கின்றன என்பதை புரிந்துக்கொண்டால் போதும். திரும்ப வரும்போது அபப்டியே வந்துவிடலாம்.
இதில் இன்னொன்று, மாறவேண்டிய ரயில்
நிலையில் இறங்கினாலும், அந்த ரயில் நிலையத்தில் D போக ரயில் எங்கு நிற்கும் என்பதை தேடிக்கண்டுபிடித்து, அந்த ரயில் நிலையத்திற்கு போகவேண்டி இருக்கும். இப்படி மாறவேண்டிய ரயில் நிலையங்கள் எல்லாமே கீழ்,மேல் என பல தளங்களை கொண்டும், பல்வேறு திசைகளிலும் மிக பெரிய நிலையங்களாக இருந்தன.
இதில் திசைமாறி சென்றால்..வேற என்ன குழப்பம் தான்.
  
மேப்'ஐயும், ரயிலின் உள்ளே எங்கே இறங்கவேண்டும் என்பதையும் இருவரும் கவனமாக பார்த்துக்கொண்டு, ஒருவழியாக டவர் இருக்கும் நிலையத்தை
அடைந்தோம். அங்கிருந்து 1-5 கிமி மேல் நடக்க வேண்டியிருந்தது. ஆனால், ரயில் நிலைத்திலிருந்தே டவர் தெரிந்ததாலும், மக்கள் கூட்டம் அலைமோதியதால், அவர்களையும் பார்த்தவாறு போய் சேர்ந்தோம்.
ஐஃபில் டவர் -பிரம்மாண்டம். அதே சமயம் தாஜ்மகால் பார்க்கும் போது "ஒரு அதிசயத்தை பார்க்கின்ற" உணர்வு எனக்கு இதைப்பார்க்கும் போது வரவில்லை. இரும்பு, அதன் நிறம் போன்றவை காரணமாக இருக்கலாம். இரவில் வண்ணவிளக்குகளின் அலங்காரத்தில் ஐஃபில் டவர் மிக அற்புதமாக இருக்குமென்று ஊகிக்கிறேன், இரவில் போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

டவரின் அடித்தளத்தில், நான்கு புறத்தில் ஒன்றை தவிர்த்து மிச்சம் மூன்று இடத்திலும் மக்கள் வரிசைகள் தென்பட்டன. எதில் கூட்டம் குறைவாக இருந்ததோ அதில் சென்று நின்றுக்கொண்டோம். டிக்கெட் " லிஃப்ட்"" என்று தான் கேட்டு வாங்கினார். ஆனால் எங்க, அவங்க பாஷை நமக்கு புரியல..டிக்கெட்டில் எழுதி இருப்பதும் நமக்கு புரியல.. உள்ளே போனால் படிக்கட்டுகள்..

சரி.. இதோ வந்துடும் லிஃப்ட்'னு.. முதல் தளம் 57 மீ உயரம், மொத்தம் 328 படிக்கட்டுகள் ஏறியாச்சி. ஒன்னும் முடியல எனக்கு.. யப்பா போதும்டா சாமின்னு மேலேயிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுவிட்டேன்.

கொஞ்ச நேரம் ரெஸ்ட் கொடுத்த என் வீட்டுக்காரர், "வா.. மேல போகலாம்னு கூப்பிட்டாரு.. "

"என்னாது மேலேயா? முடியவே முடியாது.. எனக்கு கால் வலிக்குதுன்னு " சொல்லிட்டேன்..

முதல் தளத்தில் ரெஸ்ட்டாரன்ட் முதற்கொண்டு எல்லா வசதிகளும் இருந்தன. எல்லாப்பக்கங்களும் சுற்றி பார்த்தோம். திரும்பவும், "வா..இவ்ளோ தூரம் வந்துட்டோம், இரண்டாவது தளம் வரைக்கும் போயிடலாம்.. அப்புறம் லிஃப்ட் தான்.. மெதுவா ஏறலாம் வா" ன்னு விடல என்னை..அவர் என்னை விட்டுட்டு தனியாக போகமாட்டார்.. சரி மெதுவாக போகலாம்னு இரண்டாவது தளம்  ஏற ஆரம்பித்தோம். 115 மீ, 340 படிக்கட்டுகள்.. ஒருவழியாக ஏறிட்டோம்.

எப்பவுமே முடியலன்னு சொல்வேனே ஒழிய ,  ஆரம்பிச்சிட்டா நடுவில்
நிற்கும் பழக்கம் எனக்கில்ல. மூச்சு வாங்கினாலும், முட்டி வலித்தாலும் ..ம்ஹும்..நிற்கவோ உட்காரவோ மாட்டேன். இங்கவே திருப்பதி மலைஏறும் போது அப்படிதான். அங்கவும் அப்படியே நிற்காமல் ஏறி முடிச்சாச்சி.

இரண்டாவது தளத்தில் குழப்பம் ஆரம்பித்தது. அதாது எங்களின் டிக்கெட்டிற்கு மேல் தளத்திற்கு போக முடியுமா என்பது தான். காரணம் , மக்கள் வரிசைகளில் மேல் தளம் போக டிக்கெட் வாங்க நின்றிருந்தனர்.  டிக்கெட் வாங்கி போகனும்னா "வரவே மாட்டேன்" நானுன்னு பிடிவாதமாக சொல்லிட்டேன். ஆனா, இவரோ.. லிஃப்ட் 'னு கேட்டேன், மேல் தளம் வரைன்னு கேட்டு தான் வாங்கினேன்.. னு விசாரிக்க சென்றார். ஏறி வந்ததில் உடல் சோர்ந்து போனது ஒரு பக்கம், பசி ஒரு பக்கம்.

எடறா அந்த புளி சாத மூட்டைன்னு... ஐஃபில் டவர் இரண்டாவது தளத்தில் புளி சாதத்தை பிரிச்சாச்சி..
இந்தியர்களால் மட்டுமே இப்படியான வேலையை செய்யமுடியும் என்று நிச்சயம் சொல்லமுடியும். அங்கு வந்த வேறு எந்த அயல் நாட்டவரும் சாப்பாடு மூட்டை கட்டிட்டு வரல. அதுவும் சாதம் எடுத்துட்டு வர சான்ஸே இல்லை ..
இருவரும் புளிசாதம் சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வுவெடுத்துவிட்டு, அதே டிக்கெட்டில் , மேல் தளம் போகலாம் என்று தெரிந்தவுடன், அதற்கான வரிசையில் சென்று நின்றோம். 

இந்த முறை ஏமாற்றமில்லாமல் லிஃப்ட் தான். மேல் தளத்திற்கு மொத்தம் 4 லிஃப்ட்கள் இயக்கப்படுகின்றன. அதில் ஒன்று அடித்தளத்திலிருந்து நேரடியாக மேல் தளம் வருகிறது என்று புரிந்தது. அதற்கான கட்டனம் அதிகம். மிச்சம் இருக்கும் 3 லிஃப்ட்களும் இரண்டாவது தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
பொதுவாக, பாரிஸிலிருந்து திரும்பும் வரை, எந்த செக்யூரிட்டி செக்கிங்கிலும் நானோ அவரோ தீவரமாக கண்காணிக்க படல.. ஐஃப்பில் டவர் உட்பட, பல இடங்களில் எங்களின் பையை கூட அவங்க பரிசோதனை செய்யல. அதே சமயம்..  எங்களுடன் வந்த அதே நாட்டவர், மற்ற நாட்டுக்காரர்களை அக்கு வேறு ஆணி வேறாக பரிசோதித்தே அனுப்பினர். 
இருவரின் முகமும் அம்புட்டு அழகாவும், பால் வடியும் குழந்தை தனத்தோடும், மிக மிக நல்லவங்களாகவும் காட்டியிருக்குன்னு இதை படிக்கறவங்க புரிஞ்சிக்கனும் !

லிஃப்ட்டில் மேல் தளம் சென்றாகிவிட்டது.  உலக அதிசயம் ஒன்றின் உச்சியில் நிற்கிறோம் என்ற எண்ணம் அங்கிருந்து வரும் வரை இருந்தது, மேலிருந்து கீழே இருப்பவற்றை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருந்தது. மேல் நிமிர்ந்து ஐஃபில் டவரின் அந்த உச்சியை பார்த்தேன்.... மட்டற்ற மகிழ்ச்சி, இனம்புரியாத ஏதோ ஒரு உணர்வு அங்கு நிற்கும் வரை இருந்துக்கொண்டே இருந்தது..

மேல் தளத்திலும் லிக்கர் ஷாப் இருந்தது.. காதலர்களும், தம்பதிகளும் மெல்லிய கோப்பைகளில் தங்களுக்கு பிடித்த மது வகைகளை ஆர்வமாக வாங்கி அருந்தி, ஐஃப்பில் டவரின் மேல் தளத்திற்கு வந்ததை கொண்டாடினர். நமக்கு அந்த பழக்கம் இல்லாததால் அவர்களை எல்லாம் வேடிக்கைப்பார்த்தவாறு சுற்றிவந்தோம்.

திரும்ப, இறங்கும் போது..சோய்ய்ய்ய்ன்னு..நேராக கீழ் தளத்திற்கே கொண்டுவந்து விட்டதும் எதிர்ப்பார்க்காதது. அப்போது தான் யோசித்தேன்.. ஏறி வரும் போது எங்குமே எதிராக யாரும் இறங்கிவரவில்லை. மேல் தளத்திற்கு செல்லும் அனைவரும் நேரடியாக கீழ் தளத்திற்கு தான் வரமுடியும், அப்படியான வசதியை தான் செய்திருக்கிறார். திரும்பவும் படிகளில் இறங்கி வரவேண்டியதில்லை.

கீழே, பல்வேறு நாட்டுக்காரர்களையும் அவர்கள் மொழி, உடைகள், குழந்தைகள் , பெண்கள் என வேடிக்கைப்பார்த்தவாரே.. ஒரு கோன் ஐஸ்க்ரீம் 3 ஈரோன்னு கொடுத்து வாங்கி சாப்பிட்டுக்கொண்டே டவரின் கீழே ஒரு இடத்தில் இருந்த கூட்டத்திற்கு சென்று எட்டிப்பார்த்தோம். 4 இளைஞர்கள் விதவிதமான நடனம் ஆடி, பார்வையாளர்களை அசத்திக்கொண்டிருந்தனர். அதை சிறிது நேரம் வேடிக்கைப்பார்த்தோம்.

கறுப்பின இளைஞர்கள் ஐஃப்பில் டவர் மாடல் பொம்மைகளை கற்றையாக கைகளில் மாட்டிக்கொண்ட்டு விற்றுக்கொண்டிருந்தனர். திடீரென சத்தம் எழுப்பி தெறித்து தப்பித்து இங்கும் அங்குமாக ஓடினர்.. ஏன் இப்படின்னு பார்த்தால்,  அனுமதியில்லாமல் அவர்கள் அதை விற்பதால் போலிஸ் துரத்தி பிடிக்க..அவர்களிடமி்ருந்தே தப்பித்தனர்.

ஐஃபில் டவர் பார்த்தாச்சி... :) திரும்பி வரும் வழியெல்லாம் இந்த கறுப்பின இளைஞர்கள் நம்மூர் ரோடுகடையில் நின்று விற்போர் போன்று ஐஃபில் டவர் மாடல்களை விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களிடம் வாங்குவோர் மிகவும் குறைவாகவே இருந்தனர்.. விரல் விட்டு எண்ணும் அளவில்..  அரசு கடைகளில் வாங்குவோரே அதிகமாக இருந்தனர்.

தொடரும் ..

படங்கள் : கூகுளுக்கு நன்றி

பொது இடங்களில் பெண்கள்..

கொல்கத்தாவில், லேக் மார்கெட் பகுதியில் நம்மூர் கடைகள் இருக்கும், நல்லெண்ணெய், புளி, சம்பா கோதுமை, கேழ்வரகு மாவு, நம்ம ஊர் சிப்ஸ் எல்லாம் இங்க'தான் கிடைக்கும். இதுக்காக இவ்விடத்தை தேடி போவது வழக்கம், தமிழர்கள் அல்லது தென்னிந்திய மக்கள் அதிகம் வரும் இடம் என்பதாலோ என்னவோ 'பனானா லீஃவ்', னு ஒரு தென்னிந்திய உணவகமும் அங்க இருக்கு. உள்ளே போய் உட்கார்ந்தவுடன் கவனித்தேன் சரியாக பத்து பெண்கள் 45-50, 50-60+ வயது இருக்கலாம், அநேகமாக எல்லோர் பிள்ளைகளுக்கும் திருமணம் நடந்து பேரக்குழந்தைகளும் இருக்கலாம், அவர்களும் அம்பிரிக்கா ஆப்ரிக்கானு என்ஆர்ஐ 'கள் என்று இவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. பிள்ளைகளுடன் தங்கிவிட்டு வந்த கதைகளும் காதில் விழுந்தது. அலுவலக கதைகளும் ஓடின.

வயதிற்கு மீறிய உடைகள், தலையலங்காரம். அனைவரும் வட இந்தியப்பெண்கள், கையில்லாத டாப்ஸ், ரவிக்கை,சல்வார், பளீச்ச்ச்ச் லிப்ஸ்டிக், லூஸ் ஹேர், காதில் லோலாக்குகள்..என.....

ஒரு வயதிற்கு மேல் மேக்கப் க்கு கொடுக்கும் முன்னுரிமையை உடல் பயிற்சிக்கும் இப்பெண்கள் கொடுக்கலாம்னு தோணிச்சி. ஸ்லீவ்லஸ் ரவிக்கை & சல்வாரில் சதை தொங்கும் கைகள், சாதாரணமாக எழுந்து நடக்க முடியாத மூட்டு, இடுப்பு வலிகள், , நரைத்த முடிக்கு ஒன்றும் பாதியுமாக கலர் செய்து ஆங்காங்கே வெளியில் தெரியும் வெள்ளைகள் என கொஞ்சம் பாவமாக தான் இருந்தது.

தனிமை, கடமைகள் முடிந்துவிட்டன, வீட்டில் அதிகம் பொறுப்புகள் இல்லை, நேரத்தை எப்படித்தான் கடத்துவார்கள். எல்லோரும் திட்டமிட்டு தன்னை அழகாக்கிக்கொண்டு ????? ஹோட்டலுக்கு வந்திருந்தனர்.
யாரோ ஒருவர் பேச, மற்றவர்கள் அதை கவனித்து சிரித்து பதிலளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே திடீரென சத்தம் அதிகமானது.

என்னடா மேட்டர் என்று திரும்பிப்பார்த்தேன். ஓஓஓஓஓஒ பில் வந்துவிட்டதால் வந்த சலசலப்பு அது!. சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை. பெண்களின் இயற்கை குணத்தை எந்த வகையிலும் மாற்ற இயலாது. இணையத்தில் பெண்களை நக்கல் அடித்து வரும் ஜோக்குகள் படங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து எனக்கு தன்னால் சிரிப்பு வர ஆரம்பித்தது.
ஒன்னுமில்ல.. மொத்த பில் தொகை 3400 ரூ. ஒருத்தருக்கு 340 ரூ. யாரோ ஒருவர் பில்தொகையை கட்டிட்டார்.  அதன் பிறகு அந்த 340 ஐ ஒவ்வொருவரும் கொடுக்கும் போது தான் அம்புட்டு சத்தம்.

=>ஒருவருக்கொருவர் சில்லறை மாற்றுதல்,  
=> எல்லோரும் கைப்பை திறந்து வைத்து, கையில் 100, 500 ரூ நோட்டுகள்
=>கணக்கை அங்கேயே முடித்துவிடும் அவசரம் மற்றும்
=>தன் கணக்கில் 5 பைசா அதிகம் போயிடக்கூடாது

போன்ற உள்ளுணர்வுகளால், அவர்களுக்குள் ஏற்படும் பதட்டமே அத்தனை சத்ததிற்கும் காரணம். அத்தனைப்பேரும் அதை முடித்தப்பிறகே வெளியில் சென்றனர். அதற்குள் அந்த இடத்தில் அவர்கள் ஏற்படுத்திய சத்தம் ஏழு ஊரை கூட்டியதை அவர்கள் அறியவில்லை.

இதே இடத்தில் ஆண்கள் இருந்திருந்தால்.......  :)

இப்பவும் எப்பவும் எனக்குத்தோன்றுவது -  பெண்கள் எதை ஆண்களோடு ஓப்பீடு செய்யனுமோ அதை மட்டும் செய்து தங்களை மேம்படுத்த முயற்சி செய்யலாம். மேற்சொன்ன பெண்கள் வேலைப்ப்பார்த்தவர்கள், பார்ப்பவர்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அதாவது அதன் முதிர்ச்சியும் அவர்களிடம் தெரியவில்லை.

அணில் குட்டி : "ஏண்டி நாகரீகம் இல்லாமல் அங்கவே வேடிக்கைப்பார்த்துட்டு இருக்கன்னு வூட்டுக்கார்கிட்ட திட்டு வாங்கினதை அம்மணி சொன்னாங்களா பாத்தீங்களா?  இப்படி வேடிக்கை பாக்கறதும் பெண்ணின் பழக்கம் தானே அம்மணீஈஈஈ ?!!  அட்வைஸ் எல்லாம் அடுத்தவங்களுக்கு மட்டும்.. ..:)

பீட்டர் தாத்ஸ் : The beauty myth is always actually prescribing behaviour and not appearance.” ― Naomi Wolf

பாகுபலி' யாக இருக்க வேண்டியதில்லை....

சொந்த ஊர் போக எனக்கு கிடைக்கும்/கொடுக்கப்படும் நேரம் எப்போதும் ஒரு நாள் தான்.  தனியாக போவேன். விடியற்காலை சென்னையில் கிளம்பி 11 மணிக்குள் ஊரில் இருப்பேன். திரும்ப 4-5 மணிக்கு ஊரிலிருந்து கிளம்பி, இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் வேளச்சேரி வந்துடுவேன்.

ஆனால், அன்று ரயிலில் அனுப்பி வைக்கிறேன், வேகமா போயிடும்னு விழுப்புரத்தில் ரயில் கிளம்பும் போதே மாலை மணி 6.45. தாம்பரம் வந்து பஸ்ஸில் நேரம் பார்க்கும் போது 10.30 கடந்திருந்தது. இரவு, தனியாக பயணம் என்றாலே அதீத கவனம் இருக்கும். தலை முழுக்க காதுகள் முளைத்து, சின்ன சத்தத்தைக்கூட தலை திருப்பாமல் உணரும் கவனம் வந்துடும். வளையலை ரயிலேயே யாருமறியாமல் கழட்டி உள்ளே வைத்துவிட்டேன். துப்பாட்டாவை கழுத்தோடு சுற்றிக்கொண்டேன். செயின் அறுத்துட்டு போயிடுவாங்க என்ற முன்னேச்சறிக்கை.. இதை தவிர என் பாதுகாப்புக்கு தான்  காதுகள் கழுதை காதுகளாக மாறிவிடுவது. யாராவது தொடருகிறார்கள்னு தெரிந்தால் அதற்கு தகுந்தார் போல என்ன செய்யலாம்னு யோசிப்பேன். தனி பயணங்களில் எப்பவும் ஒருவித பய உணர்ச்சி இருக்கும். பொது இடங்களில் அநாவசியமாக பேசாமல் இருப்பது, யாரையும் பார்த்து சிரிக்காமல் இருப்பது குறிப்பாக ஆண்களை என பல ரூல்ஸ்ஸை ஃபோலோ செய்வேன்.

முன்கதவுக்கு பக்கத்தில் உள்ள லேடீஸ் சீட்டில் இரண்டாவதில் கம்பியொட்டி அமர்ந்திருக்கிறேன்.. பெண்கள் அதிகமில்லை, பெண்கள் இருக்கையிலும் ஆண்களே உட்கார்ந்திருந்தனர். பள்ளிக்கரணை தாண்டி பேருந்து வந்தபோது , திடீரென டிரைவர் சீட்டுக்கு பின்னால் இருந்து இருவர் எழுந்து பஸ்ஸின் வேகத்தில் தடால்னு முன்னால் ஓடிவந்து மிக சரியாக எனக்கு முன்னால் இருந்த சீட்டின் கம்பி்யை விழும் முன் பிடித்துக்கொண்டு, எனக்கு பின்னால் இ்ருந்த யாரிடமோ.. எழுந்திருங்கடா போலாம்.. " னு சொல்லும் போதே.. நல்லா தண்ணி அடிச்சிட்டு வந்திருக்காங்கன்னு தெரிஞ்சிது...

என் பின் சீட்டிலிருந்து எழுந்தவர்களும் தண்ணி.. இருவரும் நின்றபடியே ஏதேதோ பேச.. நடுவில் நானும் என் பக்கத்தில் ஜன்னலோர சீட் பெண்ணும்.. தவித்தோம்.  ஏனென்றால், முன்னே கம்பியை பிடித்து நின்றவர்களுக்கும் நிதானமில்லை.. பின்னால் எழுந்து நிற்பவர்களுக்கும் நிதானமில்லை.. இவங்க எப்ப வேணாலூம் என் மேல் விழலாம்.. இல்லாவிட்டால் வாந்தி எச்சில்னு எதாது கருமம் என் மேல் விழலாம்னு ஒருவித படப்படப்பு இருந்தது..

நடத்துனர் கவனித்து, "யோவ் வேளச்சேரி வர நேரம் இருக்கு, போய் உக்காருங்கய்யா" ன்னு சொல்ல, நாங்கள் இருவரும் உடலை சுருக்கி, குனிந்தபடி இருப்பதைப்பார்த்து, மற்ற பயணிகளும் அவர்களை உட்கார சொல்லி சத்தம் போட அவரவர் இருக்கையில் உட்கார்ந்தனர்.

இவர்களை கவனம் வைத்து வேளச்சேரி வரும் முன்னரே எழுந்து நின்றுவிடலாம்னு நான் எழுந்த அதே சமயம், முன் சீட்டில் இருந்த குடிகாரர்களும் முன்னைப்போலவே வேகமாக எழுந்து ஒரே பாய்ச்சலில் கதவு கம்பியை பிடித்து முன்னால் விழும் போது.. அநேகமாக என் மேல் விழவேண்டியது... சட்டெனறு ஒரு கை கம்பியை பிடித்து, அவர்களை என் மேல் விழாமல் தடுத்தது. கைக்கு சொந்தக்காரர் கதவுக்கு நேர் எதிரில் நின்றிருந்தார்.

நெற்றியில் சின்ன திருநீர் கீற்று (அந்த நேரத்தில்???) மெல்லிய வெள்ளை கதர் சட்டை, பாக்கெட்டில் இருக்கும் பணம் மொபைல் எல்லாம் வெளியில் தெரிந்தது. கருப்பு நிற பேன்ட், 30-35 வயதிருக்கலாம், கோதுமை நிறம், கலையான அமைதியான முகம்.

கையை கம்பியில் பிடித்ததோடு இல்லாமல் லேசாக தள்ள..அவர்கள்
பின்னோக்கி போனார்கள்.அவர்களை பார்த்து எனக்கு பின்னால் இருந்தவர்களும் எழுந்து வெளியில் வந்து என் பின்னால் விழும்படி நிற்க.....ஒன்றும் புரியாமல் கைக்கு சொந்தமானவரை நான் பார்க்க...அதை புரிந்து, வேகமாக... கண்களால் "அவருக்கு பின்னால் வரும்படி" செய்கை செய்தார். அடுத்தவினாடி அவரின் முதுகுக்கு பின்னால் நான் ஒளிய, இரண்டு கைகளையும் விரித்து குடிகார்கள் நால்வரும் என் பக்கம் வராமல் தடுத்ததோடு இல்லாமல் நான் இறங்கும் வரை பஸ்ஸின் ஆட்டத்திலும் அதே போஸ்'ஸில் நின்றிருந்தார். கதவருகில், ஒருசேர, நான்கு குடிகாரர்களின் ஆட்டத்தையும் பேச்சையும் தாங்குவது சாதாரண விசயமாக தெரியவில்லை. விஜய்நகர் வந்ததும் அவர் ஒரு கையை இறக்க.. வேகமாக இறங்கி ஓடினேன்.

பொதுவாக சின்ன விசயத்திற்கு கூட நன்றி சொல்லும் நான், அவருக்கு நன்றி சொல்லல.. இறங்கியவுடன் திரும்பிப்பார்த்து ஒரு புன்னகைக்கூட செய்யல...நேரம் அதிகமாகிவிட்டதால், வீட்டுக்கு செல்வதில் மட்டுமே என் கவனம் இருந்தது. ஏன் நன்றி சொல்ல எனக்கு தோணலன்னு இப்ப வரைக்கும் தெரியல.. ஆனால்.. அவரின் சமயோஜிதமான கண் அசைவு, கைகளை கொண்டு 3-5 நிமிடங்கள் என்றாலும் தொடர்ந்து தாய் குழந்தையை அடை காப்பது போல காத்தது..சில ஆண்டுகள் சென்றுவிட்ட பொழுதும்....இன்றும் நினைவில் இருக்கு....

வெளியிடங்களில் நேரத்தை பயன்படுத்தி உரசிவிட்டு செல்லும் ஆண்களுக்கு மத்தியில். சமயத்திற்கு ஒரு பெண்ணை காக்கும் இதுபோன்றவர்கள் தான் "ரியல் ஹீரோஸ்"..  பாகுபலி போல வீரம் தேவையில்ல...(தலைப்பை டச் பண்ணிட்டேனா? :) ) இப்படி கொஞ்சமாவது பொறுப்போடு இருந்தால் போதும்....

அணில் குட்டி : எப்பவோஓஓ நடந்தது...... வேல வெட்டி இல்லைன்னா இப்படித்தான்.. எதையாச்சும் .....

பீட்டர் தாத்ஸ் : Courage is contagious. When a brave man takes a stand, the spines of others are often stiffened. -Billy Graham

பேலியோ உணவு முறை - சொரியாஸிஸ் நோய்

ஒரு நாட்டின், இடத்தின் உணவு என்பது அங்கு அமையும் விவசாயத்தை பொறுத்தது. விவசாயம் அவ்விடத்தின் தட்பவெப்ப சூழ்நிலையை சார்ந்து அமைகிறது, தவிர மண் மற்றும் நீரின் தன்மை, வளத்தையும் பொறுத்தது,

ஆதிமனிதன் காலத்தில் இருந்த உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கனும்னு சொன்னால் ?!! அதே மண் வளமும் நீர் வளமும் இப்பவும் நம்மிடம் இருக்கா? காய்கறி முதலில் இயற்கையானதாக கிடைக்கிறதா?  அவன் பல கிமீ நடந்தான், மரங்களில் ஏறினான், தாவினான், மலைகளில் ஏறினான், நீந்தினான், அவனின்  உடல் உழைப்பு நமக்கு இருக்கிறதா? முதலில் நீங்க காலையில் சாப்பிட சொல்ற கிலோ கணக்கு பாதாம் பெற, அவன் பாதாம் மரங்களை வளர்த்தானான்னு எனக்கு மண்டை காய்ச்சலாக இருக்கு....

குஜராத்தில் விளையும் உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கியை ஒரு போதும் தமிழ்நாட்டில் உள்ள அதே காய்கறியோடு ஒப்பிடவே முடியாது. இங்கு பச்சைமிளகாய் இரண்டை நீட்டு வாட்டில் நறுக்கி உப்புமாவிற்கு சேர்ப்பேன், ஆனால் குஜராத்தில் 5 மிளகாய் போட்டால் கூட காரம் இருக்காது. பச்சையாக நம்மூர் முள்ளங்கியை சாப்பிட முடியாது...அதன் சுவை அப்படி. சற்றே காரமும் இருக்கும். அதுவே குஜராத்தில் முள்ளங்கியை நறுக்கி வெள்ளரிக்காய் போல் சாப்பிடமுடியும்.நீர்வடிந்து, லேசான தித்திப்போடு சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கு இல்லாமல் இவர்களின் சப்ஜி இருக்காது, ஆனால் நம்மூர் உருளைக்கிழங்கை இப்படிதொடர்ந்து நம்மால் சாப்பிட முடியாது.

இடத்திற்கு இடம் காய்கறியின் தன்மை, நிலம், நீர், மண், வெப்பம், மழை சார்ந்து மாறுகிறது. குளிர் பிரதேசதங்களில் செரிமானம் சார்ந்தும் உணவு பழக்கம் அமைகிறது. இதில் கோதுமையை பற்றியும் அதை தொடர்ந்து  சாப்பிடுவதால் சொரியாஸிஸ் வியாதி வருவதாகவும் படித்தபோது.. நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது. பஞ்சாப்'பில். கோதுமை தவிர வேறு விளைச்சல் ஆதாரம் இல்லை, என்ன சாப்பிடுவார்கள்? நூற்றாண்டுகளாக வீரம் & வலிமை மிக்க மக்கள். நீங்கள் சொல்லும் தோல் வியாதி சாத்தியமெனில், காலங்காலமாக கோதுமை சாப்பிட்டு வரும் பஞ்சாப் மற்றும் வட மாநிலத்தவர் அத்துனைப்பேரும் சொரியாஸிஸ் அல்லது வேறு தோல் வியாதியால் அவதிப்படுவது வெளிவந்திருக்குமே.. ?!

வெளிநாடுகளில் ஆய் துடைக்க பேப்பர் பயன் படுத்துகின்றனர். தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நம்நாட்டில் ஏன் இப்பவும் நாம் தண்ணீர் பயன்படுத்துகிறோம்?. உணவு பழக்கமே காரணம், பேப்பரால் துடைத்து போடும் அளவுக்கு தான் அவர்கள் உண்கிறார்கள். அப்படி அவர்கள் உண்ண அந்த நாட்டின் புவியியல், தட்பவெப்பநிலை மட்டுமே காரணம். பிரான்ஸ்'ஸில் மாட்டையும், பன்றியையும் முதன்மை உணவாக எடுக்கின்றனர். அத்துடன் பேக் செய்யப்பட்ட ரொட்டி வகைகள், பச்சை காய்கறி.  மாடு, பன்றியை அவர்கள் அதிகமாக சாப்பிடக்காரணம் உடல் உஷ்ணத்திற்காக..  உடல் உஷ்ணம் அந்நாட்டின் காலநிலைக்கு தேவை, இல்லாவிடல் அன்றாட வாழ்க்கை சாதாரணமாக அமையாது.

இங்கு நமக்கு இருக்கும் சூட்டிற்கு தொடர்ந்து கோழியையும், அசைவ உணவுகளையும் எப்படி சாப்பிட முடியும்?! அதற்கு சமமாக நெய்யை கிலோ கணக்கில் சாப்பிட சொல்லலாம். எதை ஒன்றையுமே முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக வேறு ஒன்றை தொடர்ந்து சாப்பிடுவது சரியான முறையாக எப்படியாகும்?

நாம் உடுத்தும் உடைக்கூட மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. கேரளத்தின் மழைக்கு துணிகள் காயாது, கனமான துணிகள் காயாமல் துர்நாற்றம் வீசும்.அதனாலேயே அவர்கள் ஆண் பெண் வித்தியாசம் இன்றி வேட்டியை உடுத்துக்கின்றனர்.. வெயிலும் அங்கு அதிகம். ஆக இரண்டு பருவத்திற்கும் ஏற்றது அந்த ஆடை. அப்படியே உச்சிக்கு போனால் கம்பளிஆடை, வயிற்றில் நெருப்பு கட்டிக்கொண்டு வாழும் காஷ்மீர், ஹிமாச்சலபிரதேச மக்கள். எப்படி நமக்கு ஒரே மாதிரி உணவும், உடையும் சாத்தியப்படும்? மாநிலத்திற்கு மாநிலம் இடத்திற்கு தகுந்தார் போன்று மாறுபடும் தானே?

ஐயா, இப்போது நமக்கு கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் , தானியவகைகள், பால், முட்டை,தயிர் எதாது ஒன்று இயற்கையாக கிடைக்கிறதா? பால் தரும் மாடு பேப்பர்களை தின்று வளர்கிறது.?!??! ஆதிமனிதன் காலத்தில் இப்படிதான் மாடுகள் இருந்தனவா?  இன்றையக்கால கட்டத்தில் கோழிகள் எப்படி வளர்க்கப்படுகின்றன??? ஊசி மூலம் வளர்கின்றன. நீங்கள் பரிந்துரைக்கும் சிக்கன் நாட்டு கோழி மட்டுமா? அப்படியென்றால், அவை என்ன சாப்பிட்டு உடலை வளர்க்கின்றன? கடலிலிருந்து கிடைக்கும் மீன்கள் சுத்தமானது தான் என்று உங்களால் சொல்லமுடியுமா? பிடித்தவுடன் அதை 1-2 நாளாவது ஐஸ்பெட்டியில் வைத்து தான் நமக்கு வந்து சேர்கிறது. அதைத்தான் சாப்பிடுகிறோம். உரம், பூச்சி மருந்து இல்லாமல் காய்கறிகள், பழங்கள் உள்ளனவா?

முருங்கக்கீ்ரை எடுத்துக்கோங்க..தினம் வீட்டு தோட்டத்திலிருந்து உடைத்து, ஆய்ந்து கழுவாமல் சமையல் செய்வாங்க. அதே வீட்டுத்தோட்டத்தில் அந்த கீரையை இப்போது எடுத்து கழுவாமல் செய்யமுடிவதில்லை.காரணம் அதில் காற்றில் கலந்து வந்து படியும் தூசியும் பெட்ரோல் புகையும்.... கழுவினால்..அதிலிருக்கும் விட்டமின் சக்தி தண்ணீரோடு சென்றுவிடும் என்பதே அந்தக்கீரையை கழுவாமல் செய்யக்காரணம், இப்போது கழுவாமலும் சாப்பிடமுடியாது, கிடைக்கும் வரை சக்தி கிடைக்கிட்டும் என்றே செய்கிறோம். அப்படிதான் நமக்கு கிடைக்கும் எல்லா காய்கறி, தானிய, பழ வகைகளும்.

கேரளாக்கு போனால் அவர்களின் தண்ணீர் பழக்கத்திலிருந்து எல்லாமே வேறு, சீரகம் சேர்ந்து காய்ச்சிய தண்ணீர்தான்  குடிப்பாங்க. காரணம் அவங்களுக்கு அவர்களின் தண்ணீரின் தன்மை தெரியும். ஏன் இங்கே கொல்கத்தாவில் ஒரு டம்ளரில் தண்ணீர் பிடித்து ஒருநாள் வைத்திருந்தால் போதும், கருப்பு நிறத்தில் மிக மெல்லிய வண்டல் படியும் , அதில் ஏகப்பட்ட நச்சுத்தன்மை மிகுந்த Arsenic Elements இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு அநேக வயதானோர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், பல ஆண்டுகளாக தொடர்ந்து அதையே அருந்திவருவதால், இதை தவிர வேறு நோய்களும் தாக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

இப்போது உங்களின் பேலியோ டயட்டில்  குடிக்கும் தண்ணீருக்கு என்ன மாற்று நீரை பரிந்துரை செய்வீர்கள்.?

இஸ்லாமியர்களை எடுத்துக்கோங்க, பிரியாணி செய்யும் போது புதி்னா சட்னி ஒன்னு செய்வாங்க, தயிரோடு பச்சையாக அரைத்து சேர்க்கப்பட்ட புதினா... (முழு சமையல் குறிப்பு தெரியாது) இது செரிமானத்திற்காக. குஜராத்தில் காலையில் டிபனுக்கு ஒரு தட்டு நிறைய ஜிலேபி வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் பச்சையாக வெங்காயம், முள்ளங்கி, எலுமிச்சை, பச்சைமிளகாய் ஒரு கிண்ணம் வைத்தும் சாப்பிடுவார்கள்.

ஒவ்வொரு இடத்திலும் நம் உணவுமுறை மிக சரியாகதான் அமையப்பெற்றிருக்கிறது. அளவைத்தாண்டி நாம் அதிகாக உண்ணும் போதும், உடல் உழைப்பு இல்லாத போதும் அது நமக்கு பிரச்சனையாகிறது. எத்தனைப்பேர் இங்கே ஜிம் போறீங்க? ஒர்க் அவுட் செய்யும் முன் எடையை பாருங்கள், செய்து முடித்தப்பின் எடையை பாருங்க. 1 லிருந்து 1.5 கிலோ குறைந்திருக்கும். நாம் அன்றாடும் உண்ணும் உணவிற்கு தகுந்தார் போன்று தகுந்த உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தாலே கொழுப்பு , சர்க்கரை கூடாமல் இருக்கும்.

ஃபாஸ்ட் ஃபுட் கூடாது, எண்ணெய் உணவுகள் கூடாது, பேக்கரி ஐட்டம்ஸ் கூடாது, பெப்ஸி, கோலா போன்ற செயற்கை பானங்கள் கூடாது..... இதுப்போல நிஜமாகவே உடலுக்கு கேடு விளைவிக்கும் பழக்கங்களை வேண்டாம் என்று சொல்லுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல விசயமே.. அதே சமயம்....

கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காக கோதுமை, தானியங்கள், அரிசி , சில காய்கறிகள் ஒவ்வாது என்று சொன்னாலும் பரவாயில்லை...சொரியாஸிஸ் வரும்..என்று சொல்வது எல்லாம் ரொம்பவே அதிகமாக தெரிகிறது.  எனக்குத்தெரிந்து என் முன்னோர்கள் அரிசி உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தவர்கள், யாருமே தோல் வியாதியால் அவர்கள் சாகும் வரை அவதிபடவில்லை என்று உறுதியாக சொல்லமுடியும். நெல் பயிர் வேரிலிருந்து அதன் உமி வரை நம் உடலுக்கு பல விதத்திலும் பயன் தரக்கூடியது. நம் நாட்டு வைத்தியத்தில் இதன் நற்பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முடிவாக : 
1. உடல் இளைக்க வேண்டி தற்காலிகமாக பேலியோ உணவை எடுத்துக்கொண்டால் சரி...

2. இல்லை இதுவே தான் நம் உணவு, இது பல நற்பயன்களை தருகிறது, பல நோய்களை மருத்துவம் இன்றி தானாகவே குணப்படுத்துவது நிரூபிக்கப்பட்டு வருகிறது, அதனால் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது என்று சொன்னால் -

2. குறைந்தபட்சம்,  7-8 தலைமுறையாவது ஆணும் பெண்ணும் பேலியோ  உணவை மட்டுமே எடுத்து வந்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பிறந்த நாள் முதல் பேலியோ உணவை மட்டுமே கொடுத்து வளர்த்து, குழந்தைகளின் அறிவு, உடல் வளர்ச்சி, இத்தியாதிகள் எல்லாவற்றையும் அறிவியல் மருத்துவ ரீதியாக ஆய்ந்து, பிரச்சனைகள் இல்லை என்றால் மட்டுமே இதனை அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை யோசிக்கவே முடியும்

அதற்கு முன் -

பேலியோ டயட்டில் இருப்பவர்கள், தாராளமாக இருங்கள், ஆரோக்கயமாகவும்,, உடல் மெளிந்து என்றும் 16 ஆகவும் இருங்கள்., உங்கள் உணவின் தன்மை காரணமாக ஏன் உங்களுக்கு இறப்புக்கூட இல்லாமல் இருக்கலாம். ...தொடருங்கள், மனமார்ந்த வாழ்த்துகள்.. பிரச்சனையேயில்லை..

ஆனால், தயவுசெய்து, டயிட்டில் இல்லாதவர்களுக்கு இல்லாது பொல்லாதை சொல்லி ஒரு வாய் சாப்பிட பயப்படும்படி செய்யாதீர்..

அணில் குட்டி : ஒன்னுமில்ல... அம்மணி  இடதுகாலில் லைட்டா சொரிஞ்சாங்க.... அந்த சமயம் பாத்து சொரியாஸிஸ் பதிவு கண்ணுலப்பட... ஒருவேள கோதுமை சாப்பிடறதால அவங்களுக்கும் சொரியாஸிஸ் வந்துடுத்தோன்னூ பக்' ன்னு ஆகி.. இவ்ளாம் பெர்ரிய போஸ்ட்....

பீட்டர் தாத்ஸ் : Nothing burns more calories than dancing in 5-inch heels... try it! -Ariana Grande
(G+ ல் பகிர்ந்தது)

எங்க வீட்டு சமையல் - சிற்றுண்டி வகைகள்

சம்பா கோதுமை ரவை அடை:
சம்பா கோதுமை ரவை - 2 கப்
அரிசி மாவு : 1/4 கப்
உப்பு
வெங்காயம் பெரியது - 1
காய்ந்தமிளகாய் 3-4
லவங்கம் - 1
சோம்பு : 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை

சம்பா கோதுமை ரவையை 1-2 மணி நேரம் ஊறவைத்து , காய்ந்தமிளகாய், லவங்கம், சோம்பு கொஞ்சம் ஊறிய ரவை சேர்த்து மைய அரைத்துக்கொண்டு, மிச்சமுள்ள ரவை சேர்த்து ஒன்னும் பாதியுமாக அரைத்து அத்துடன் உப்பு, பொடியாக நறுக்கி வதக்கிய வெங்காயம், கருவேப்பிலை, அரிசிமாவு சேர்த்து அடை மாவு பதத்திற்கு கரைத்து, அடை சுடவும்..

இன்னொரு முறை : அரிசி மாவு இல்லாமல் , துவரம் பருப்பு 1 கப், சோயா ச்சங்க்ஸ் (ஊறவைத்தது 10), கொண்டகடலை (ஊறவைத்தது)2 கை சேர்த்து அரைத்து செய்யலாம். காரம் இதற்கு தகுந்தார் போல மாற்றிக்கொள்ளவும்
தேங்காய் சின்னத்துண்டுகள் சேர்த்துக்கொள்ளலாம். 
 
***********
 
ராஜ்மா வடை:

ஊறவைத்த ராஜ்மா - ஒரு கப்
4 ஸ்பூன் பச்சரிசி மாவு
காய்ந்தமிளகாய் -2
2 வெங்காயம்
5-6 பல் பூண்டு
இஞ்சி - சின்னத்துண்டு
கருவேப்பிலை
சோம்பு 1/2 ஸ்பூன், லவங்கம் -2
உப்பு

இஞ்சி, பூண்டு , சோம்பு, லவங்கம், காய்ந்தமிளகாய் நல்லா அரைச்சிட்டு, ராஜ்மாவை பாதி நைசாகவும், மிச்சம் பாதியை ஒன்னும் பாதியுமாக அரைச்சிக்கனும், வெங்காயம் மிக்ஸியில் ஒருமுறை அடிச்சிட்டு, உப்பு, அரிசிமாவு கருவேப்பிலை போட்டு நல்லா கலந்து. .வடையாக தட்டி எடுக்கனும்
 
*********** 

சோயா + கேழ்வரகு மாவு பஜ்ஜி :

கடலைமாவு 1/2 கப்
சோயாமாவு 1/2 கப்
கேழ்வரகு மாவு 1/2 கப்
அரிசி  மாவு 1/4 கப்
மிளகாய் தூள் : 2 ஸ்பூன்
நெய் : 1 1/2 ஸ்பூன்
சமையல் சோடா 2 சிட்டிகை
கேசரி பவுடர் 2 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு
எண்ணெய்
 
காய்கறி : வெங்காயம் & கருணைக்கிழங்கில் செய்தேன்.  உருளை, வாழைக்காயிலும் செய்யலாம்,

மாவு எல்லாவற்றையும் கொட்டி, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், உப்பு , சோடா, கேசரி பவுடர், நெய் ஊற்றி நன்கு கலக்கிக்கொண்டு,கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து க்கொள்ளவும். கருணைக்கிழங்கை காய்கறி சீவலில் வைத்து சிப்ஸ் போல சீவிக்கொண்டு, பஜ்ஜி மாவில் நனைத்து, காய்ந்த எண்ணெய்யில் போட்டு , நன்கு வெந்தவுடன் எடுக்கவும். கருணைக்கிழங்கு சிப்ஸ் மாதிரி சீவினாலும் சில சமயம் உடையும். அதனால் பரவாயில்லை, வந்தவரை செய்யலாம். 

இதே மாவில் வெங்காயம், உருளை, வாழைக்காயை கொண்டும் செய்யலாம்.

பீட்டர் தாத்ஸ் : When a man's stomach is full it makes no difference whether he is rich or poor.- Euripides