பொது இடங்களில் பெண்கள்..

கொல்கத்தாவில், லேக் மார்கெட் பகுதியில் நம்மூர் கடைகள் இருக்கும், நல்லெண்ணெய், புளி, சம்பா கோதுமை, கேழ்வரகு மாவு, நம்ம ஊர் சிப்ஸ் எல்லாம் இங்க'தான் கிடைக்கும். இதுக்காக இவ்விடத்தை தேடி போவது வழக்கம், தமிழர்கள் அல்லது தென்னிந்திய மக்கள் அதிகம் வரும் இடம் என்பதாலோ என்னவோ 'பனானா லீஃவ்', னு ஒரு தென்னிந்திய உணவகமும் அங்க இருக்கு. உள்ளே போய் உட்கார்ந்தவுடன் கவனித்தேன் சரியாக பத்து பெண்கள் 45-50, 50-60+ வயது இருக்கலாம், அநேகமாக எல்லோர் பிள்ளைகளுக்கும் திருமணம் நடந்து பேரக்குழந்தைகளும் இருக்கலாம், அவர்களும் அம்பிரிக்கா ஆப்ரிக்கானு என்ஆர்ஐ 'கள் என்று இவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. பிள்ளைகளுடன் தங்கிவிட்டு வந்த கதைகளும் காதில் விழுந்தது. அலுவலக கதைகளும் ஓடின.

வயதிற்கு மீறிய உடைகள், தலையலங்காரம். அனைவரும் வட இந்தியப்பெண்கள், கையில்லாத டாப்ஸ், ரவிக்கை,சல்வார், பளீச்ச்ச்ச் லிப்ஸ்டிக், லூஸ் ஹேர், காதில் லோலாக்குகள்..என.....

ஒரு வயதிற்கு மேல் மேக்கப் க்கு கொடுக்கும் முன்னுரிமையை உடல் பயிற்சிக்கும் இப்பெண்கள் கொடுக்கலாம்னு தோணிச்சி. ஸ்லீவ்லஸ் ரவிக்கை & சல்வாரில் சதை தொங்கும் கைகள், சாதாரணமாக எழுந்து நடக்க முடியாத மூட்டு, இடுப்பு வலிகள், , நரைத்த முடிக்கு ஒன்றும் பாதியுமாக கலர் செய்து ஆங்காங்கே வெளியில் தெரியும் வெள்ளைகள் என கொஞ்சம் பாவமாக தான் இருந்தது.

தனிமை, கடமைகள் முடிந்துவிட்டன, வீட்டில் அதிகம் பொறுப்புகள் இல்லை, நேரத்தை எப்படித்தான் கடத்துவார்கள். எல்லோரும் திட்டமிட்டு தன்னை அழகாக்கிக்கொண்டு ????? ஹோட்டலுக்கு வந்திருந்தனர்.
யாரோ ஒருவர் பேச, மற்றவர்கள் அதை கவனித்து சிரித்து பதிலளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே திடீரென சத்தம் அதிகமானது.

என்னடா மேட்டர் என்று திரும்பிப்பார்த்தேன். ஓஓஓஓஓஒ பில் வந்துவிட்டதால் வந்த சலசலப்பு அது!. சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை. பெண்களின் இயற்கை குணத்தை எந்த வகையிலும் மாற்ற இயலாது. இணையத்தில் பெண்களை நக்கல் அடித்து வரும் ஜோக்குகள் படங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து எனக்கு தன்னால் சிரிப்பு வர ஆரம்பித்தது.
ஒன்னுமில்ல.. மொத்த பில் தொகை 3400 ரூ. ஒருத்தருக்கு 340 ரூ. யாரோ ஒருவர் பில்தொகையை கட்டிட்டார்.  அதன் பிறகு அந்த 340 ஐ ஒவ்வொருவரும் கொடுக்கும் போது தான் அம்புட்டு சத்தம்.

=>ஒருவருக்கொருவர் சில்லறை மாற்றுதல்,  
=> எல்லோரும் கைப்பை திறந்து வைத்து, கையில் 100, 500 ரூ நோட்டுகள்
=>கணக்கை அங்கேயே முடித்துவிடும் அவசரம் மற்றும்
=>தன் கணக்கில் 5 பைசா அதிகம் போயிடக்கூடாது

போன்ற உள்ளுணர்வுகளால், அவர்களுக்குள் ஏற்படும் பதட்டமே அத்தனை சத்ததிற்கும் காரணம். அத்தனைப்பேரும் அதை முடித்தப்பிறகே வெளியில் சென்றனர். அதற்குள் அந்த இடத்தில் அவர்கள் ஏற்படுத்திய சத்தம் ஏழு ஊரை கூட்டியதை அவர்கள் அறியவில்லை.

இதே இடத்தில் ஆண்கள் இருந்திருந்தால்.......  :)

இப்பவும் எப்பவும் எனக்குத்தோன்றுவது -  பெண்கள் எதை ஆண்களோடு ஓப்பீடு செய்யனுமோ அதை மட்டும் செய்து தங்களை மேம்படுத்த முயற்சி செய்யலாம். மேற்சொன்ன பெண்கள் வேலைப்ப்பார்த்தவர்கள், பார்ப்பவர்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அதாவது அதன் முதிர்ச்சியும் அவர்களிடம் தெரியவில்லை.

அணில் குட்டி : "ஏண்டி நாகரீகம் இல்லாமல் அங்கவே வேடிக்கைப்பார்த்துட்டு இருக்கன்னு வூட்டுக்கார்கிட்ட திட்டு வாங்கினதை அம்மணி சொன்னாங்களா பாத்தீங்களா?  இப்படி வேடிக்கை பாக்கறதும் பெண்ணின் பழக்கம் தானே அம்மணீஈஈஈ ?!!  அட்வைஸ் எல்லாம் அடுத்தவங்களுக்கு மட்டும்.. ..:)

பீட்டர் தாத்ஸ் : The beauty myth is always actually prescribing behaviour and not appearance.” ― Naomi Wolf

பாகுபலி' யாக இருக்க வேண்டியதில்லை....

சொந்த ஊர் போக எனக்கு கிடைக்கும்/கொடுக்கப்படும் நேரம் எப்போதும் ஒரு நாள் தான்.  தனியாக போவேன். விடியற்காலை சென்னையில் கிளம்பி 11 மணிக்குள் ஊரில் இருப்பேன். திரும்ப 4-5 மணிக்கு ஊரிலிருந்து கிளம்பி, இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் வேளச்சேரி வந்துடுவேன்.

ஆனால், அன்று ரயிலில் அனுப்பி வைக்கிறேன், வேகமா போயிடும்னு விழுப்புரத்தில் ரயில் கிளம்பும் போதே மாலை மணி 6.45. தாம்பரம் வந்து பஸ்ஸில் நேரம் பார்க்கும் போது 10.30 கடந்திருந்தது. இரவு, தனியாக பயணம் என்றாலே அதீத கவனம் இருக்கும். தலை முழுக்க காதுகள் முளைத்து, சின்ன சத்தத்தைக்கூட தலை திருப்பாமல் உணரும் கவனம் வந்துடும். வளையலை ரயிலேயே யாருமறியாமல் கழட்டி உள்ளே வைத்துவிட்டேன். துப்பாட்டாவை கழுத்தோடு சுற்றிக்கொண்டேன். செயின் அறுத்துட்டு போயிடுவாங்க என்ற முன்னேச்சறிக்கை.. இதை தவிர என் பாதுகாப்புக்கு தான்  காதுகள் கழுதை காதுகளாக மாறிவிடுவது. யாராவது தொடருகிறார்கள்னு தெரிந்தால் அதற்கு தகுந்தார் போல என்ன செய்யலாம்னு யோசிப்பேன். தனி பயணங்களில் எப்பவும் ஒருவித பய உணர்ச்சி இருக்கும். பொது இடங்களில் அநாவசியமாக பேசாமல் இருப்பது, யாரையும் பார்த்து சிரிக்காமல் இருப்பது குறிப்பாக ஆண்களை என பல ரூல்ஸ்ஸை ஃபோலோ செய்வேன்.

முன்கதவுக்கு பக்கத்தில் உள்ள லேடீஸ் சீட்டில் இரண்டாவதில் கம்பியொட்டி அமர்ந்திருக்கிறேன்.. பெண்கள் அதிகமில்லை, பெண்கள் இருக்கையிலும் ஆண்களே உட்கார்ந்திருந்தனர். பள்ளிக்கரணை தாண்டி பேருந்து வந்தபோது , திடீரென டிரைவர் சீட்டுக்கு பின்னால் இருந்து இருவர் எழுந்து பஸ்ஸின் வேகத்தில் தடால்னு முன்னால் ஓடிவந்து மிக சரியாக எனக்கு முன்னால் இருந்த சீட்டின் கம்பி்யை விழும் முன் பிடித்துக்கொண்டு, எனக்கு பின்னால் இ்ருந்த யாரிடமோ.. எழுந்திருங்கடா போலாம்.. " னு சொல்லும் போதே.. நல்லா தண்ணி அடிச்சிட்டு வந்திருக்காங்கன்னு தெரிஞ்சிது...

என் பின் சீட்டிலிருந்து எழுந்தவர்களும் தண்ணி.. இருவரும் நின்றபடியே ஏதேதோ பேச.. நடுவில் நானும் என் பக்கத்தில் ஜன்னலோர சீட் பெண்ணும்.. தவித்தோம்.  ஏனென்றால், முன்னே கம்பியை பிடித்து நின்றவர்களுக்கும் நிதானமில்லை.. பின்னால் எழுந்து நிற்பவர்களுக்கும் நிதானமில்லை.. இவங்க எப்ப வேணாலூம் என் மேல் விழலாம்.. இல்லாவிட்டால் வாந்தி எச்சில்னு எதாது கருமம் என் மேல் விழலாம்னு ஒருவித படப்படப்பு இருந்தது..

நடத்துனர் கவனித்து, "யோவ் வேளச்சேரி வர நேரம் இருக்கு, போய் உக்காருங்கய்யா" ன்னு சொல்ல, நாங்கள் இருவரும் உடலை சுருக்கி, குனிந்தபடி இருப்பதைப்பார்த்து, மற்ற பயணிகளும் அவர்களை உட்கார சொல்லி சத்தம் போட அவரவர் இருக்கையில் உட்கார்ந்தனர்.

இவர்களை கவனம் வைத்து வேளச்சேரி வரும் முன்னரே எழுந்து நின்றுவிடலாம்னு நான் எழுந்த அதே சமயம், முன் சீட்டில் இருந்த குடிகாரர்களும் முன்னைப்போலவே வேகமாக எழுந்து ஒரே பாய்ச்சலில் கதவு கம்பியை பிடித்து முன்னால் விழும் போது.. அநேகமாக என் மேல் விழவேண்டியது... சட்டெனறு ஒரு கை கம்பியை பிடித்து, அவர்களை என் மேல் விழாமல் தடுத்தது. கைக்கு சொந்தக்காரர் கதவுக்கு நேர் எதிரில் நின்றிருந்தார்.

நெற்றியில் சின்ன திருநீர் கீற்று (அந்த நேரத்தில்???) மெல்லிய வெள்ளை கதர் சட்டை, பாக்கெட்டில் இருக்கும் பணம் மொபைல் எல்லாம் வெளியில் தெரிந்தது. கருப்பு நிற பேன்ட், 30-35 வயதிருக்கலாம், கோதுமை நிறம், கலையான அமைதியான முகம்.

கையை கம்பியில் பிடித்ததோடு இல்லாமல் லேசாக தள்ள..அவர்கள்
பின்னோக்கி போனார்கள்.அவர்களை பார்த்து எனக்கு பின்னால் இருந்தவர்களும் எழுந்து வெளியில் வந்து என் பின்னால் விழும்படி நிற்க.....ஒன்றும் புரியாமல் கைக்கு சொந்தமானவரை நான் பார்க்க...அதை புரிந்து, வேகமாக... கண்களால் "அவருக்கு பின்னால் வரும்படி" செய்கை செய்தார். அடுத்தவினாடி அவரின் முதுகுக்கு பின்னால் நான் ஒளிய, இரண்டு கைகளையும் விரித்து குடிகார்கள் நால்வரும் என் பக்கம் வராமல் தடுத்ததோடு இல்லாமல் நான் இறங்கும் வரை பஸ்ஸின் ஆட்டத்திலும் அதே போஸ்'ஸில் நின்றிருந்தார். கதவருகில், ஒருசேர, நான்கு குடிகாரர்களின் ஆட்டத்தையும் பேச்சையும் தாங்குவது சாதாரண விசயமாக தெரியவில்லை. விஜய்நகர் வந்ததும் அவர் ஒரு கையை இறக்க.. வேகமாக இறங்கி ஓடினேன்.

பொதுவாக சின்ன விசயத்திற்கு கூட நன்றி சொல்லும் நான், அவருக்கு நன்றி சொல்லல.. இறங்கியவுடன் திரும்பிப்பார்த்து ஒரு புன்னகைக்கூட செய்யல...நேரம் அதிகமாகிவிட்டதால், வீட்டுக்கு செல்வதில் மட்டுமே என் கவனம் இருந்தது. ஏன் நன்றி சொல்ல எனக்கு தோணலன்னு இப்ப வரைக்கும் தெரியல.. ஆனால்.. அவரின் சமயோஜிதமான கண் அசைவு, கைகளை கொண்டு 3-5 நிமிடங்கள் என்றாலும் தொடர்ந்து தாய் குழந்தையை அடை காப்பது போல காத்தது..சில ஆண்டுகள் சென்றுவிட்ட பொழுதும்....இன்றும் நினைவில் இருக்கு....

வெளியிடங்களில் நேரத்தை பயன்படுத்தி உரசிவிட்டு செல்லும் ஆண்களுக்கு மத்தியில். சமயத்திற்கு ஒரு பெண்ணை காக்கும் இதுபோன்றவர்கள் தான் "ரியல் ஹீரோஸ்"..  பாகுபலி போல வீரம் தேவையில்ல...(தலைப்பை டச் பண்ணிட்டேனா? :) ) இப்படி கொஞ்சமாவது பொறுப்போடு இருந்தால் போதும்....

அணில் குட்டி : எப்பவோஓஓ நடந்தது...... வேல வெட்டி இல்லைன்னா இப்படித்தான்.. எதையாச்சும் .....

பீட்டர் தாத்ஸ் : Courage is contagious. When a brave man takes a stand, the spines of others are often stiffened. -Billy Graham

பேலியோ உணவு முறை - சொரியாஸிஸ் நோய்

ஒரு நாட்டின், இடத்தின் உணவு என்பது அங்கு அமையும் விவசாயத்தை பொறுத்தது. விவசாயம் அவ்விடத்தின் தட்பவெப்ப சூழ்நிலையை சார்ந்து அமைகிறது, தவிர மண் மற்றும் நீரின் தன்மை, வளத்தையும் பொறுத்தது,

ஆதிமனிதன் காலத்தில் இருந்த உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கனும்னு சொன்னால் ?!! அதே மண் வளமும் நீர் வளமும் இப்பவும் நம்மிடம் இருக்கா? காய்கறி முதலில் இயற்கையானதாக கிடைக்கிறதா?  அவன் பல கிமீ நடந்தான், மரங்களில் ஏறினான், தாவினான், மலைகளில் ஏறினான், நீந்தினான், அவனின்  உடல் உழைப்பு நமக்கு இருக்கிறதா? முதலில் நீங்க காலையில் சாப்பிட சொல்ற கிலோ கணக்கு பாதாம் பெற, அவன் பாதாம் மரங்களை வளர்த்தானான்னு எனக்கு மண்டை காய்ச்சலாக இருக்கு....

குஜராத்தில் விளையும் உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கியை ஒரு போதும் தமிழ்நாட்டில் உள்ள அதே காய்கறியோடு ஒப்பிடவே முடியாது. இங்கு பச்சைமிளகாய் இரண்டை நீட்டு வாட்டில் நறுக்கி உப்புமாவிற்கு சேர்ப்பேன், ஆனால் குஜராத்தில் 5 மிளகாய் போட்டால் கூட காரம் இருக்காது. பச்சையாக நம்மூர் முள்ளங்கியை சாப்பிட முடியாது...அதன் சுவை அப்படி. சற்றே காரமும் இருக்கும். அதுவே குஜராத்தில் முள்ளங்கியை நறுக்கி வெள்ளரிக்காய் போல் சாப்பிடமுடியும்.நீர்வடிந்து, லேசான தித்திப்போடு சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கு இல்லாமல் இவர்களின் சப்ஜி இருக்காது, ஆனால் நம்மூர் உருளைக்கிழங்கை இப்படிதொடர்ந்து நம்மால் சாப்பிட முடியாது.

இடத்திற்கு இடம் காய்கறியின் தன்மை, நிலம், நீர், மண், வெப்பம், மழை சார்ந்து மாறுகிறது. குளிர் பிரதேசதங்களில் செரிமானம் சார்ந்தும் உணவு பழக்கம் அமைகிறது. இதில் கோதுமையை பற்றியும் அதை தொடர்ந்து  சாப்பிடுவதால் சொரியாஸிஸ் வியாதி வருவதாகவும் படித்தபோது.. நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது. பஞ்சாப்'பில். கோதுமை தவிர வேறு விளைச்சல் ஆதாரம் இல்லை, என்ன சாப்பிடுவார்கள்? நூற்றாண்டுகளாக வீரம் & வலிமை மிக்க மக்கள். நீங்கள் சொல்லும் தோல் வியாதி சாத்தியமெனில், காலங்காலமாக கோதுமை சாப்பிட்டு வரும் பஞ்சாப் மற்றும் வட மாநிலத்தவர் அத்துனைப்பேரும் சொரியாஸிஸ் அல்லது வேறு தோல் வியாதியால் அவதிப்படுவது வெளிவந்திருக்குமே.. ?!

வெளிநாடுகளில் ஆய் துடைக்க பேப்பர் பயன் படுத்துகின்றனர். தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நம்நாட்டில் ஏன் இப்பவும் நாம் தண்ணீர் பயன்படுத்துகிறோம்?. உணவு பழக்கமே காரணம், பேப்பரால் துடைத்து போடும் அளவுக்கு தான் அவர்கள் உண்கிறார்கள். அப்படி அவர்கள் உண்ண அந்த நாட்டின் புவியியல், தட்பவெப்பநிலை மட்டுமே காரணம். பிரான்ஸ்'ஸில் மாட்டையும், பன்றியையும் முதன்மை உணவாக எடுக்கின்றனர். அத்துடன் பேக் செய்யப்பட்ட ரொட்டி வகைகள், பச்சை காய்கறி.  மாடு, பன்றியை அவர்கள் அதிகமாக சாப்பிடக்காரணம் உடல் உஷ்ணத்திற்காக..  உடல் உஷ்ணம் அந்நாட்டின் காலநிலைக்கு தேவை, இல்லாவிடல் அன்றாட வாழ்க்கை சாதாரணமாக அமையாது.

இங்கு நமக்கு இருக்கும் சூட்டிற்கு தொடர்ந்து கோழியையும், அசைவ உணவுகளையும் எப்படி சாப்பிட முடியும்?! அதற்கு சமமாக நெய்யை கிலோ கணக்கில் சாப்பிட சொல்லலாம். எதை ஒன்றையுமே முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக வேறு ஒன்றை தொடர்ந்து சாப்பிடுவது சரியான முறையாக எப்படியாகும்?

நாம் உடுத்தும் உடைக்கூட மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. கேரளத்தின் மழைக்கு துணிகள் காயாது, கனமான துணிகள் காயாமல் துர்நாற்றம் வீசும்.அதனாலேயே அவர்கள் ஆண் பெண் வித்தியாசம் இன்றி வேட்டியை உடுத்துக்கின்றனர்.. வெயிலும் அங்கு அதிகம். ஆக இரண்டு பருவத்திற்கும் ஏற்றது அந்த ஆடை. அப்படியே உச்சிக்கு போனால் கம்பளிஆடை, வயிற்றில் நெருப்பு கட்டிக்கொண்டு வாழும் காஷ்மீர், ஹிமாச்சலபிரதேச மக்கள். எப்படி நமக்கு ஒரே மாதிரி உணவும், உடையும் சாத்தியப்படும்? மாநிலத்திற்கு மாநிலம் இடத்திற்கு தகுந்தார் போன்று மாறுபடும் தானே?

ஐயா, இப்போது நமக்கு கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் , தானியவகைகள், பால், முட்டை,தயிர் எதாது ஒன்று இயற்கையாக கிடைக்கிறதா? பால் தரும் மாடு பேப்பர்களை தின்று வளர்கிறது.?!??! ஆதிமனிதன் காலத்தில் இப்படிதான் மாடுகள் இருந்தனவா?  இன்றையக்கால கட்டத்தில் கோழிகள் எப்படி வளர்க்கப்படுகின்றன??? ஊசி மூலம் வளர்கின்றன. நீங்கள் பரிந்துரைக்கும் சிக்கன் நாட்டு கோழி மட்டுமா? அப்படியென்றால், அவை என்ன சாப்பிட்டு உடலை வளர்க்கின்றன? கடலிலிருந்து கிடைக்கும் மீன்கள் சுத்தமானது தான் என்று உங்களால் சொல்லமுடியுமா? பிடித்தவுடன் அதை 1-2 நாளாவது ஐஸ்பெட்டியில் வைத்து தான் நமக்கு வந்து சேர்கிறது. அதைத்தான் சாப்பிடுகிறோம். உரம், பூச்சி மருந்து இல்லாமல் காய்கறிகள், பழங்கள் உள்ளனவா?

முருங்கக்கீ்ரை எடுத்துக்கோங்க..தினம் வீட்டு தோட்டத்திலிருந்து உடைத்து, ஆய்ந்து கழுவாமல் சமையல் செய்வாங்க. அதே வீட்டுத்தோட்டத்தில் அந்த கீரையை இப்போது எடுத்து கழுவாமல் செய்யமுடிவதில்லை.காரணம் அதில் காற்றில் கலந்து வந்து படியும் தூசியும் பெட்ரோல் புகையும்.... கழுவினால்..அதிலிருக்கும் விட்டமின் சக்தி தண்ணீரோடு சென்றுவிடும் என்பதே அந்தக்கீரையை கழுவாமல் செய்யக்காரணம், இப்போது கழுவாமலும் சாப்பிடமுடியாது, கிடைக்கும் வரை சக்தி கிடைக்கிட்டும் என்றே செய்கிறோம். அப்படிதான் நமக்கு கிடைக்கும் எல்லா காய்கறி, தானிய, பழ வகைகளும்.

கேரளாக்கு போனால் அவர்களின் தண்ணீர் பழக்கத்திலிருந்து எல்லாமே வேறு, சீரகம் சேர்ந்து காய்ச்சிய தண்ணீர்தான்  குடிப்பாங்க. காரணம் அவங்களுக்கு அவர்களின் தண்ணீரின் தன்மை தெரியும். ஏன் இங்கே கொல்கத்தாவில் ஒரு டம்ளரில் தண்ணீர் பிடித்து ஒருநாள் வைத்திருந்தால் போதும், கருப்பு நிறத்தில் மிக மெல்லிய வண்டல் படியும் , அதில் ஏகப்பட்ட நச்சுத்தன்மை மிகுந்த Arsenic Elements இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு அநேக வயதானோர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், பல ஆண்டுகளாக தொடர்ந்து அதையே அருந்திவருவதால், இதை தவிர வேறு நோய்களும் தாக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

இப்போது உங்களின் பேலியோ டயட்டில்  குடிக்கும் தண்ணீருக்கு என்ன மாற்று நீரை பரிந்துரை செய்வீர்கள்.?

இஸ்லாமியர்களை எடுத்துக்கோங்க, பிரியாணி செய்யும் போது புதி்னா சட்னி ஒன்னு செய்வாங்க, தயிரோடு பச்சையாக அரைத்து சேர்க்கப்பட்ட புதினா... (முழு சமையல் குறிப்பு தெரியாது) இது செரிமானத்திற்காக. குஜராத்தில் காலையில் டிபனுக்கு ஒரு தட்டு நிறைய ஜிலேபி வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் பச்சையாக வெங்காயம், முள்ளங்கி, எலுமிச்சை, பச்சைமிளகாய் ஒரு கிண்ணம் வைத்தும் சாப்பிடுவார்கள்.

ஒவ்வொரு இடத்திலும் நம் உணவுமுறை மிக சரியாகதான் அமையப்பெற்றிருக்கிறது. அளவைத்தாண்டி நாம் அதிகாக உண்ணும் போதும், உடல் உழைப்பு இல்லாத போதும் அது நமக்கு பிரச்சனையாகிறது. எத்தனைப்பேர் இங்கே ஜிம் போறீங்க? ஒர்க் அவுட் செய்யும் முன் எடையை பாருங்கள், செய்து முடித்தப்பின் எடையை பாருங்க. 1 லிருந்து 1.5 கிலோ குறைந்திருக்கும். நாம் அன்றாடும் உண்ணும் உணவிற்கு தகுந்தார் போன்று தகுந்த உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தாலே கொழுப்பு , சர்க்கரை கூடாமல் இருக்கும்.

ஃபாஸ்ட் ஃபுட் கூடாது, எண்ணெய் உணவுகள் கூடாது, பேக்கரி ஐட்டம்ஸ் கூடாது, பெப்ஸி, கோலா போன்ற செயற்கை பானங்கள் கூடாது..... இதுப்போல நிஜமாகவே உடலுக்கு கேடு விளைவிக்கும் பழக்கங்களை வேண்டாம் என்று சொல்லுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல விசயமே.. அதே சமயம்....

கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காக கோதுமை, தானியங்கள், அரிசி , சில காய்கறிகள் ஒவ்வாது என்று சொன்னாலும் பரவாயில்லை...சொரியாஸிஸ் வரும்..என்று சொல்வது எல்லாம் ரொம்பவே அதிகமாக தெரிகிறது.  எனக்குத்தெரிந்து என் முன்னோர்கள் அரிசி உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தவர்கள், யாருமே தோல் வியாதியால் அவர்கள் சாகும் வரை அவதிபடவில்லை என்று உறுதியாக சொல்லமுடியும். நெல் பயிர் வேரிலிருந்து அதன் உமி வரை நம் உடலுக்கு பல விதத்திலும் பயன் தரக்கூடியது. நம் நாட்டு வைத்தியத்தில் இதன் நற்பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முடிவாக : 
1. உடல் இளைக்க வேண்டி தற்காலிகமாக பேலியோ உணவை எடுத்துக்கொண்டால் சரி...

2. இல்லை இதுவே தான் நம் உணவு, இது பல நற்பயன்களை தருகிறது, பல நோய்களை மருத்துவம் இன்றி தானாகவே குணப்படுத்துவது நிரூபிக்கப்பட்டு வருகிறது, அதனால் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது என்று சொன்னால் -

2. குறைந்தபட்சம்,  7-8 தலைமுறையாவது ஆணும் பெண்ணும் பேலியோ  உணவை மட்டுமே எடுத்து வந்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பிறந்த நாள் முதல் பேலியோ உணவை மட்டுமே கொடுத்து வளர்த்து, குழந்தைகளின் அறிவு, உடல் வளர்ச்சி, இத்தியாதிகள் எல்லாவற்றையும் அறிவியல் மருத்துவ ரீதியாக ஆய்ந்து, பிரச்சனைகள் இல்லை என்றால் மட்டுமே இதனை அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை யோசிக்கவே முடியும்

அதற்கு முன் -

பேலியோ டயட்டில் இருப்பவர்கள், தாராளமாக இருங்கள், ஆரோக்கயமாகவும்,, உடல் மெளிந்து என்றும் 16 ஆகவும் இருங்கள்., உங்கள் உணவின் தன்மை காரணமாக ஏன் உங்களுக்கு இறப்புக்கூட இல்லாமல் இருக்கலாம். ...தொடருங்கள், மனமார்ந்த வாழ்த்துகள்.. பிரச்சனையேயில்லை..

ஆனால், தயவுசெய்து, டயிட்டில் இல்லாதவர்களுக்கு இல்லாது பொல்லாதை சொல்லி ஒரு வாய் சாப்பிட பயப்படும்படி செய்யாதீர்..

அணில் குட்டி : ஒன்னுமில்ல... அம்மணி  இடதுகாலில் லைட்டா சொரிஞ்சாங்க.... அந்த சமயம் பாத்து சொரியாஸிஸ் பதிவு கண்ணுலப்பட... ஒருவேள கோதுமை சாப்பிடறதால அவங்களுக்கும் சொரியாஸிஸ் வந்துடுத்தோன்னூ பக்' ன்னு ஆகி.. இவ்ளாம் பெர்ரிய போஸ்ட்....

பீட்டர் தாத்ஸ் : Nothing burns more calories than dancing in 5-inch heels... try it! -Ariana Grande
(G+ ல் பகிர்ந்தது)

எங்க வீட்டு சமையல் - சிற்றுண்டி வகைகள்

சம்பா கோதுமை ரவை அடை:
சம்பா கோதுமை ரவை - 2 கப்
அரிசி மாவு : 1/4 கப்
உப்பு
வெங்காயம் பெரியது - 1
காய்ந்தமிளகாய் 3-4
லவங்கம் - 1
சோம்பு : 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை

சம்பா கோதுமை ரவையை 1-2 மணி நேரம் ஊறவைத்து , காய்ந்தமிளகாய், லவங்கம், சோம்பு கொஞ்சம் ஊறிய ரவை சேர்த்து மைய அரைத்துக்கொண்டு, மிச்சமுள்ள ரவை சேர்த்து ஒன்னும் பாதியுமாக அரைத்து அத்துடன் உப்பு, பொடியாக நறுக்கி வதக்கிய வெங்காயம், கருவேப்பிலை, அரிசிமாவு சேர்த்து அடை மாவு பதத்திற்கு கரைத்து, அடை சுடவும்..

இன்னொரு முறை : அரிசி மாவு இல்லாமல் , துவரம் பருப்பு 1 கப், சோயா ச்சங்க்ஸ் (ஊறவைத்தது 10), கொண்டகடலை (ஊறவைத்தது)2 கை சேர்த்து அரைத்து செய்யலாம். காரம் இதற்கு தகுந்தார் போல மாற்றிக்கொள்ளவும்
தேங்காய் சின்னத்துண்டுகள் சேர்த்துக்கொள்ளலாம். 
 
***********
 
ராஜ்மா வடை:

ஊறவைத்த ராஜ்மா - ஒரு கப்
4 ஸ்பூன் பச்சரிசி மாவு
காய்ந்தமிளகாய் -2
2 வெங்காயம்
5-6 பல் பூண்டு
இஞ்சி - சின்னத்துண்டு
கருவேப்பிலை
சோம்பு 1/2 ஸ்பூன், லவங்கம் -2
உப்பு

இஞ்சி, பூண்டு , சோம்பு, லவங்கம், காய்ந்தமிளகாய் நல்லா அரைச்சிட்டு, ராஜ்மாவை பாதி நைசாகவும், மிச்சம் பாதியை ஒன்னும் பாதியுமாக அரைச்சிக்கனும், வெங்காயம் மிக்ஸியில் ஒருமுறை அடிச்சிட்டு, உப்பு, அரிசிமாவு கருவேப்பிலை போட்டு நல்லா கலந்து. .வடையாக தட்டி எடுக்கனும்
 
*********** 

சோயா + கேழ்வரகு மாவு பஜ்ஜி :

கடலைமாவு 1/2 கப்
சோயாமாவு 1/2 கப்
கேழ்வரகு மாவு 1/2 கப்
அரிசி  மாவு 1/4 கப்
மிளகாய் தூள் : 2 ஸ்பூன்
நெய் : 1 1/2 ஸ்பூன்
சமையல் சோடா 2 சிட்டிகை
கேசரி பவுடர் 2 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு
எண்ணெய்
 
காய்கறி : வெங்காயம் & கருணைக்கிழங்கில் செய்தேன்.  உருளை, வாழைக்காயிலும் செய்யலாம்,

மாவு எல்லாவற்றையும் கொட்டி, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், உப்பு , சோடா, கேசரி பவுடர், நெய் ஊற்றி நன்கு கலக்கிக்கொண்டு,கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து க்கொள்ளவும். கருணைக்கிழங்கை காய்கறி சீவலில் வைத்து சிப்ஸ் போல சீவிக்கொண்டு, பஜ்ஜி மாவில் நனைத்து, காய்ந்த எண்ணெய்யில் போட்டு , நன்கு வெந்தவுடன் எடுக்கவும். கருணைக்கிழங்கு சிப்ஸ் மாதிரி சீவினாலும் சில சமயம் உடையும். அதனால் பரவாயில்லை, வந்தவரை செய்யலாம். 

இதே மாவில் வெங்காயம், உருளை, வாழைக்காயை கொண்டும் செய்யலாம்.

பீட்டர் தாத்ஸ் : When a man's stomach is full it makes no difference whether he is rich or poor.- Euripides

தெரு நாய்


தெருநாய்களை தெருவில் மட்டுமே பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த வீட்டுக்கு குடிவந்தப்பிறகு தெரு நாய்கள் வீட்டிற்குள்ளும் இருக்கும் என்று தெரியவந்தது அவற்றின் தொல்லையும் தாங்கமுடியவில்லை.

பொதுவாகவே நம்ம யாருக்குமே தெரு நாய்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் பழக்கமில்லை. சாப்பாடு வைத்தாலும் கூட, காம்பவுண்டு சுவரை தாண்டி உள்ளே வராமல் பார்த்துக்கொள்வோம். கடித்துவிடும் என்ற பயமே முதல் காரணமாக இருக்கும். இங்கு காம்பவுண்டு சுவர் கதவு என்னவோ மூடிதான் இருக்கும், ஆனால் இதுங்க, சுவரேறி குதித்து, உள்ளே கூட்டமாக வந்து உட்கார்ந்துக்கிட்டு, குரைச்சிக்கிட்டு, ஊளையிட்டுக்கிட்டு எப்பவும் ஒரே சத்தம். இரவு நேரங்களில் ரொம்பவே மோசம்..ஏன் குரைக்குதுங்க..எதுக்கு குரைக்குதுங்கன்னே தெரியாது... தூக்கம் களைந்து போகுமளவிற்கு சத்தமிருக்கும்..

மொத்தமாக ஒரு 4-5 நாய்கள் இந்த வீட்டை குத்தகைக்கு எடுத்திருந்தன.
நாங்கள் இருப்பதென்னவோ இரண்டாம் தளம், இவை படிக்கட்டில் சொகுசாக காலை நீட்டிப்படுத்து தூங்கிட்டு இருக்கும். எங்களின் நடை சத்தம் கேட்டதும், திரும்பி பாத்துட்டு, கொஞ்சம் கூட மதிக்காம திரும்பவும் அதேமாதிரி படுத்துக்கும். இதுவே வீட்டு ஓனர் வீட்டிலிருந்து யாராவது இறங்கினால், உடனே எழுந்து வழிவிடும்.

எங்கள பாத்தாவே இளச்சிவாய்ன்னு அதுங்களுக்கு தெரிஞ்சிப்போச்சி போல.  இதுங்கல மிதிக்காம இறங்கிப்போக சில தாண்டவங்களை நாங்க பழக வேண்டி வந்தது. இரண்டு மூன்று மாதங்களிலேயே, அதுங்களை மிதிக்காமல் தாண்டி, குதித்து கீழ் படிக்கு செல்ல ‘ஹைஐ லாங் ஜம்ப்” ஐ  நல்லாவே பழகிட்டோம்.  
வெளியூர் சென்று, திரும்ப நடு இரவாகிவிடும் என்ற ஒருநாளில்,  வீட்டு ஓனரிடம் வெளி கேட்’ சாவி கேட்க சென்றோம். அவங்களோ..

“வெளிக்கதவை நாங்க பூட்டறதே இல்லையே.. ஆனா.. இருட்டில் ஜாக்கறதையாக வாங்க.. இந்த தெருநாய்கள் அங்க இங்கன்னு படுத்துக்கிட்டு இருக்கும்.. அதுங்கள மிதிக்காம வந்தாவே நாம பிழைச்சோம். அதுங்களைத்தவிர இங்க வேற எந்த பயமும் இல்லை” ன்னாங்க..

“ஏன் துரத்தி விடலாமே” என்றோம்.

“ ம்ஹூம், எவ்ளோ முயற்சி செய்துட்டோம்.. எதுக்கும் கட்டுப்படல,  நீங்களே பார்த்திருப்பீங்களே....எல்லாப்பக்கத்திலும், சுவர் ஏறி குதிச்சி வருது.. என்னதான் செய்வோம்.. இப்ப அதுங்க ராஜ்யம் தான்..” என்று சோகத்தோடு சொல்லி முடித்தனர்.


பகலும் இரவும், நாய்களின் சத்தத்தோடு ஓரளவு பழகிவிட்டது. அப்பறம் கவனிக்கும் போது தான் தெரிந்தது, அக்கம் பக்கம் எதிர்வீடு என யார் வீட்டுக்கும் இந்த நாய்கள் போவதே இல்லை. அட..?! இது எப்படி சாத்தியம், அங்கவும் சுவர் ஏறி குதித்து செல்லலாமே ஏன் போக மாட்டேங்குதுங்க..? ன்னு எனக்கு மண்டை காய ஆரம்பிச்சிது.

பயாஸ்கோப் கண்களோடு காரணத்தை அறிய அவற்றை கவனிக்க ஆரம்பித்தேன்.  ஒரே ஒரு நாய் உள்ளே சென்றாலும் கூட, அதை அடித்து விரட்டாமல் அடுத்த வேலைக்கு யாரும் போவதில்லை. ஆனால் எங்க வீட்டில் நேர் மாறாக நடந்துக்கொண்டிருந்தது.

கீழ் வீட்டில் , கல்லூரிக்கு செல்லும் பெண் ஒருத்தி இருக்கிறாள். சாக்கடையிலும், தெருவில் கண்டதை சாப்பிட்டு, தோலில் சிரங்கு வியாதியோடு திரியும் இந்த நாய்களை, கையால் தொட்டு தடவி, அதுங்களை செல்லம் செல்லமாக கொஞ்சி, பிஸ்கெட், சாப்பாடு எனப்போட்டு... .....

எப்படி அதுங்க இங்க வராம இருக்கும் ?!!

அவளுக்கு அந்த நாய்கள் மேல் உள்ள பிரியம் ஆச்சரியமாக இருந்தது. இன்றுப் பார்க்கிறேன். ஒரு நாய்க்கு, ப்ளாஸ்ட்டிக் குடுவையில் தண்ணீர் கொண்டு வைத்து... வா வந்து குடின்னு கெஞ்சிக்கிட்டு இருக்கா... “
அது குடிக்காமல் இங்கவும் அங்கவும் போகுது... ஓடிப்போய் நெற்றியில் ஒரு முத்தமிட்டு, அது போகிற இடத்துக்கெல்லாம் தண்ணியை பின்னாடியே எடுத்துட்டு போறா...

நடுநடுவில் அவளின் முத்தங்களை நெற்றியில் வாங்கிக்கொண்டு.. முறுக்கிக்கொண்டு இவளுக்கு போக்குக்காட்டி, அங்குமிங்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறது அந்த தெருநாய்..!! 

Images courtesy Google : Thanks 

ஜல புஷ்பம்

"அது ஒரு மீன் மார்க்கெட் ஆச்சே..?!" 

இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்களின் கொல்கத்தா வேலை மாற்றம் பற்றி ரொம்பவே சீக்கிரம் அறிந்துக்கொண்ட தோழி ஒருவர் அடித்த கமெண்ட் தான் அது. மறுப்பேச்சே இல்லாமல்.. ஆமாம் என்று ஆமோதிக்கும் அளவிற்கு மீனுக்கும் மேற்கு வங்கத்திற்கும் சம்பந்தம் இருக்கத்தான் செய்கிறது.  

பொதுவாக நம்மூரில், சாமி, கோயில் சம்பந்தப்பட்ட விசயங்களில் அசைவ உணவுகள் இடம் வகிப்பதில்லை. தமிழர்களின் திருநாளான "தைப்பொங்கல்' அன்று நாம் இயற்கைக்கு (சைவம்) படையல் வைத்து வழிபடுவது முதல் மற்ற பண்டிகைகளிலும் அசைவம் கலக்காத உணவுகள் சமைத்தே பழக்கம். ஒருசிலர் தீபாவளி, காதுக்குத்தல் போன்றவற்றில் "கடா வெட்டுதல்" னு சொல்லுவாங்க. அப்படியான பழக்கம் கூட அனைவருக்கும் இல்லை.

இங்கு நேர்மாறாக... மீன் இல்லாத நாளே இல்லை. பிராமணர்களும் மீனை "ஜல புஷ்பம்" என்று சொல்லி சாப்பிடுகிறார்கள். எந்த விஷேஷ நாட்களிலும், காளி துர்கா பூஜை நாட்களிலும், பூஜை ஒருபக்கம் நடக்க, மீன் சேர்த்து செய்யும் சமையல் ஒரு பக்கம் நடக்கத்தான் செய்கிறது.
இவர்களின் அன்றாட உணவு , விருந்துகள், விழாக்களில்  எல்லாவற்றிலும் மீன்" ஒரு சிறப்பு அம்சமாக இருக்கிறது, அப்படி மீன்'ஐ தினம் சாப்பிட்டுமே, விருந்துகளில் மீன் பரிமாறும் போது, அன்றுதான் முதல் முதலாக மீனை பார்ப்பது போல ஆர்வத்தோடு ஆசையாக பலமுறை வாங்கி சாப்பிடுகின்றனர்.
இவர்களின் விருந்து : முதல் தரம் சாப்பிடும் போது எனக்கும் சற்று வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இரண்டாவது முறையே அலுத்துப்போனது.. காரணம் சீரியோ டைப் உணவு.. பரிமாறும் முறை..அதன் ருசி என எல்லாமே...ஒரு வித அயற்சியையும், உணவை சாப்பிடும் ஆர்வத்தையும் குறைத்தன.

தட்டில் ஒரு உணவு பரிமாறிவிட்டு, பரிமாறுபவர் மற்ற விருந்தினர்களுக்கு அந்த உணவை பரிமாறிவிட்டு வருவதற்குள், நாம் இதை சாப்பிட்டிருப்போம். பிறகு அடுத்தது வரும். இப்படியாகவே தான் ஒன்றன் பின் ஒன்றாக உணவு பரிமாறப்படுகிறது. தவிர, ஒன்றாக பரிமாற தட்டிலும் இடம் இருக்காது என்பதும் இன்னொரு காரணம். பீங்கான் தட்டு, மீடியம் சைஸ்.

Food Served in order one by one :

1. Brinjal Bajji/Fish Cutlet
2. Potato Kuchi Chips/ mixed with peanut,
3. Basmati Plain Rice,
4. Dhal (contains carrot, potato, peas - to me its alike Kurma) ,
5. Potato Peas Varuval (Added Pappad)
6. Fish, Fish Kuzhambu (Without Tamarind)/Prawn+ Raw Jackfruit Kozhambu
7. Ghee Rice /Veg Fried Rice with all nuts
8. Chicken/Mutton 
9. Tomato + Mango Pachadi (added salt n Jaggery) ,
10. Pappad,
11. Rasagulla / + One more Milkbase Sweet
12. Payasam/Ice Cream
 & Finally
13. Digestion Masala (contains Omam + Jeera +Salt)/Beeda

இது தான் நிரந்தர மெனு. திருமணம், குழந்தை பிறந்தநாள், காதுக்குத்தல், சாவு, வாழ்வுன்னு எதுவென்றாலும் இதே தான்.

இதில் வசதிக்கேற்றவாறு சிக்கன் இருக்கும் இடத்தில் மட்டன், அல்லது பெரிய இறால் வகையாறாக்கள் இருக்கும். 4,5- போன்றவை சற்றே வேறு விதமாக சமைக்கப் பட்டிருக்கலாம், 12- பாயசத்திற்கு பதிலாக சிலர் ஐஸ்க்ரீம் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த பரிமாறும் முறை, உணவுகளில் எந்தவித மாற்றமும் இல்லை.

ஒரு உணவை முடித்தப்பிறகே அடுத்தது வருவதால், யாருமே உணவை மீதமாக்கி தூக்கிப்போடுவது இல்லை. வேண்டாமென்றால், பரிமாறும் போதே
சொல்லிவிடுகின்றனர். அதனால் நம்மூர் போல இலையோடு சாப்பிட்டும் சாப்பிடாலும் உணவு வீணாக்கப்படுவதில்லை.
நான்கு நான்கு பேராக உட்கார்ந்து சாப்பிடும்படி மேஜை + நாற்காலி போடப்படுகின்றது.  ஒவ்வொரு மேஜைக்கு நடுவில் ஒரு ப்ளாஸ்டிக் குடுவை வைக்கப்படுகிறது. சாப்பிடும் போது, மீன் , இறால், மட்டன், சிக்கன் கழிவுகளை, நால்வரும் அதில் போட்டுவிட்டு தட்டை சுத்தமாக வைத்திருக்கலாம். (இல்லையேல், அடுத்த உணவு வைக்க  தட்டில் இடம் இருக்காது)

கடைசியாக செரிமானத்திற்கு கொடுக்கப்படும் மசாலாவும் வசதி சார்ந்து மாறுகிறது. சின்னதாக ரெடிமேட் பாக்கேட் கொடுப்பவர்கள் மிடில் க்ளாஸ் மாதவன்'கள்.. அதையே வெற்றிலையில் எல்லா வயிற்று செரிமான
மருந்துகளையும் நிரப்பி லவங்கத்தை செருகிக்கொடுத்தால் வசதியானவர்கள். நம்மூர் பீடான்னு ஆர்வத்தில் வாங்கி வாயில் போட்டு..அது மெல்லும் போதே ஏகப்பட்ட ரியாக்ஷன்ஸ் கொடுக்க.. வெளியில் ஓடிவந்து துப்பினேன்.  மருந்தெல்லாம் பச்சையாக மென்று சாப்பிட ஒரு பக்குவம் வேணுமே..அது நமக்கு இன்னும் வரல.. :(
உணவில், எது மாறினாலும், இரண்டு வித மீன்" கண்டிப்பாக எல்லா விஷேஷங்களிலும் பரிமாறப்படுகின்றன. கல்யாணி'யின் சாப்பாடு கதை இது என்றாலும், கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் திருமணம் + அதன் உணவு முறைகள் எப்படியென தெரியவில்லை.

இதில் கொடுமை என்னென்னா, "சவுத் இண்டியன்ஸ்" - மொத்தமும் சைவர்கள் என்ற ஒரு பொது அறிவை கண்மூடித்தனமாக வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஹோட்டல்களில் காசுக்கொடுத்து நாங்களே அசைவம் ஆர்டர் செய்தாலும், எங்களை பார்த்தவுடனே, சைவம் தான் கேட்டிருப்போம், தவறாக/கவனமில்லாம ஆர்டர் எடுத்துவிட்டோம் என அவர்களாக நினைத்துக்கொண்டு, சைவ உணவை தயார் செய்துக்கொண்டு வந்து தருகின்றனர். ஞே!!!!

விசேஷங்களுக்கு செல்லும் போது, எங்களை அழைத்தவர்கள் குடும்பமாக தயக்கத்தோடு வந்து... "சைவம் இங்க கொஞ்சம் கஷ்டம்.. உங்களுக்காக சைவம் பரிமாற முயற்சி செய்யறோம்னு" சொல்றாங்க..

"அடேய்.. சவுத் இண்டியன்ஸ் எல்லாரும் சைவம்னு உங்கக்கிட்ட வந்து சொன்னோமா..? இப்படியொரு பொய்யான வதந்திய கிளப்பிவிட்டது எவன்டா?  அது ஏண்டா.. எங்களை பாத்தாவே சைவம்னு முடிவு செய்யறீங்க? 

நாங்க...அசைவம்.. அசைவம் அசைவமேதான்... எங்களுக்கும் அசைவமே கொடுத்துத்தொலைங்க.." ன்னு ஒவ்வொரு இடத்திலும் கத்தி கதறி அழுது கெஞ்சி கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டுத் தொலைக்க வேண்டியிருக்கு.... !

பெங்காலிகளுக்கு "பொது அறிவு பொக்கீஷங்கள்'னு பெயர் வைக்கலாம் அம்புட்டு அறிவு அவங்களுக்குள்ள பொதஞ்சி கிடக்கு... ..

"நீங்கெல்லாம் இட்லி சாப்பிடறதால தான் உங்கள் (பெண்கள்) உடல் வடிவமாக இருக்கா? " இப்படி கேள்விக்கேட்டு என்னை "ஞேஏஏஏ" ன்னு முழிக்க வைத்ததுப்பற்றி.....அடுத்த பதிவில்....


படங்கள் : நன்றி கூகுள் & Collage taken here.

பீட்டர் தாத்ஸ் : A nation's culture resides in the hearts and in the soul of its people. -Mahatma Gandhi

ஆனை ஆனை அழகர் ஆனை

நான் காணும் கனவுகளை, அவரிடம் சொல்லும் போது, அதை ரெக்கார்ட் செய்ய சொல்லுவார். நேற்றைய கனவை சொல்ல ஆர்ம்பித்த கொஞ்ச நேரத்தில்..

 "ரெக்கார்ட் பண்ண சொன்னேனே செய்யறியா? "

"அட கேளுங்கப்பா முதல்ல.. எல்லாம் எழுதி வைக்கிறேன்ப்பா"

 "எங்க எழுதி வைக்கிற? " . "

 என் ப்ளாகில் எழுதி வைக்கிறேன்பா.. நடுவில் பேசாம கேளுங்க..அப்புறம் மறந்துப்போவேனில்ல" ன்னு விடாம கனவை முழுக்க சொல்லிட்டு தான் மறுவேலை.

ஆனா பாருங்க, சில பல மாதங்களாகவே என் வூட்டுக்காரே கனவிலும் வந்து தொலைக்கறாரு... தூங்கி எழுந்தவுடன் கனவு நினைவில் வரும் போது என்னை நானே..எகொக இது?! ன்னு கேட்டுக்க வேண்டியிருக்கு.... ஒரு மனுசனோட குடும்பம் நடத்தறதே பெரிய விசயம்..இதுல கனவிலும் விடாம துரத்தினா.. ?!

 விடாது கருப்பு ....இதோ...

*******************
எங்கோ பெரிய மலை பகுதிக்கு அழைச்சிக்கிட்டு போயிருக்கார். மலையில் ஏறுகிறோம்.

இரவில் மழை பெய்து ஓய்ந்த ஒரு காலை பொழுது, வைக்கின்ற ஒவ்வொரு காலடியும் ஈர மண்ணில் நிற்காமல் வழுக்குது..களிமண்ணாக இருக்குமோன்னு யோசனையோடு ஒவ்வொரு காலாய் எடுத்து வைக்கிறேன்.. முடியல.. கையையும் துணைக்கு வச்சிக்கிட்டு மேலே ஊன்றி ஏற முயற்சி செய்கிறேன். கை, கால்னு ஒரே சேறு பூசிக்குது.. இவர் வருகிறாரான்னு பின்னால் திரும்பிப்பார்க்க, பேலன்ஸ் போயி சொய்ன்னு வழுக்கிடுது... வழுக்கிக்கிட்டே கத்தறேன்..

"எங்கப்பா போனீங்க..இங்க தனியா நான் ஏற முடியாம கஷ்டப்படறேனே..வந்து தொலைக்கக்கூடாதா?"

ஒன்னும் பதில் வராம..நானே தவ்வி தவ்வி மேலே எப்படியோ பேலன்ஸ் செய்து ஏறுகிறேன். ..

 எங்க வெளியில் போனாலும் என்னை இப்படி தனியா விட்டுட்டு அவர் வேலைய தனியா பார்க்கறது வழக்கம் தான்..எனக்கும் இப்படி கத்தி அவரை கூப்பிடறது வழக்கம் என்பதால்..நிஜத்தில் வரும் தலைவலி கனவிலும்....

ஒருவழியாக உச்சிக்கு வந்துடுறேன்.. வந்துவிட்டோம்..இனி, "மேல நின்னு, இயற்கையை ரசிக்கனும்னு" நினைத்துக்கொண்டே அடுத்த அடி வைத்து கையையும் மலை உச்சியில் வளைத்து பிடிக்கிறேன்...சில்லென்ற தண்ணீர் கையில் பட , வைத்த வேகத்தில் கையை எடுத்து ..ஏது தண்ணீன்னு எட்டிப்பார்க்கிறேன்...
அலைவந்து அடிக்க... கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிரம்பி தளும்பும் கங்கை...அது அங்கே ஏதோ ஒரு பக்கத்தில் அருவியாக கொட்டுகிறது ... "ஓஓஓவென...." பேய் சத்தம்..... எதிர்ப்பார்க்காத தண்ணீர்... அலை.. தண்ணீரின் ஆழம்....அதன் சத்தம்.. பயந்துப்போய்..

"அப்பாஆஆ..இங்கப்பாருங்க ...இங்க.கங்கை.இருக்கு . இன்னும் ஒரு அடி எடுத்துவச்சா.. பிடிக்க எனக்கு ஏதுமில்ல..இதுக்குள்ள விழுந்துடுவேன்..ன்னு திரும்பி, அவரை. பார்த்து சொல்லும் போதே பேலன்ஸ் போய் கால் தடுமாறி...வந்த வழியே வேகமாக வழுக்கி கல்லிலும் மண்ணிலும் புரண்டு கீழே வந்து விழுகிறேன்.. .

தொலைவிலிருந்து இதெல்லாத்தையும் நிதானமாக பார்க்கிறாரே ஒழிய..பொண்டாட்டி மேலிருந்து வந்து விழறாளே..வந்து தூக்குவோம்னு சின்ன பதட்டம் கூட அவரிடம் இல்ல.. தூக்கக்கூடாதான்னு கேட்டா.. "எப்பதான் நீ இதெல்லாம் கத்துக்கறதுன்னு டயலாக் டெலிவரி செய்வாரு.. சரி..நான் இருக்கட்டும்.. ஒருவேள அவர் வழுக்கி விழறாருன்னு வச்சிக்குவோம்.. ஓடிப்போய் தூக்கப்போனா, "ஏன் விழுந்த எனக்கு எழுந்துக்க தெரியாதான்னு" டயலாக் டெலிவரி செய்வாரு...

எதுக்கு இவர்கிட்ட ?!! எதையுமே கேக்காம இருக்கலாம்னு முடிவு செய்யறேனே ஒழிய...வாய் சும்மா இருக்கா? இல்லயே.."ஏன் இப்படி என்னை தனியா விட்டுட்டு விட்டுட்டு போறீங்க..." ம்க்கும்.. எப்பவும் போல எந்த பதிலும் இல்லை..அலட்சியமாக ஒரு பார்வையோடு வேற எங்கேயோ போறார்... அவரை பின் தொடர்ந்து நானும் போறேன்...

அது ஒரு பெரிய கோயில்..மிகப்பழமை வாய்ந்த பெரிய கோயிலாக தெரிகிறது. பெரிய பெரிய சிற்பங்கள்..சிலைகள்னு அன்னாந்து பார்த்தபடி ஒவ்வொன்றாய் நின்று ரசிக்கிறேன்.. நின்றுவிட்டு நகரும் போது பார்த்தால்..எப்பவும் போல நம்மாளை காணல.. ஓடி ஓடி எந்தப்பக்கம் போகிறார்னு தேடி தொடர்கிறேன்.நடு நடுவில் சிற்பங்கள்...

அப்பதான் அந்த பெர்ர்ர்ர்ர்ரிய யானை சிலைகள் இருக்குமிடத்தைப்பார்க்கிறேன்.. நிஜ யானைகள் போலவே சிற்பங்கள். சிலது நிற்கின்றன.. சிலது உட்கார்ந்து, இரண்டு முன்னங்கால்களை தூக்கிக்கொண்டு சிலதுன்னு வெவ்வேறு வடிவங்களில் விதவிதமான சிலைகள்...

 அட...எத்தனை அழகா இருக்கு..இவ்ளாம் பெரிய யானை.. ஒன்னு செய்யறதே கஷ்டம் இந்த இடம் முழுக்க யானையாவே செய்து வச்சியிருக்காங்களேன்னு..ஒரு யானை சிலையின் அருகில் செல்கிறேன்... .டக்கென்று அது தன் தும்பிக்கையை தூக்கி பலத்த சப்தத்தோடு பிளறுகிறது.... அவ்வ்வ்... திடீர் சத்தத்தில் பயந்து நடுங்கி கத்தி அலறிக்கொண்டு ஓடுகிறேன்... ஓடி நின்ற இடம் இன்னொரு யானையின் கால்.

அந்த யானை கத்தாமல்...தும்பிக்கையால் எங்கிருந்தோ தண்ணீரை வாரி இறைக்கிறது.... மீண்டும் கத்திக்கொண்டே.. ".இந்த யானைக்கெல்லாம் உயிர் இருக்கு போல......இது என்னை பயமுறுத்துது.. சீக்கிரம் இங்க வாங்கன்னு கத்தறேன்" .. அந்தப்பக்கத்திலிருந்து ஒரு சத்தமும் வரல...

 அங்கிருக்கும் ஒவ்வொரு யானைக்கும் ஏதோ ஒரு செய்கையை செய்யும் படி..செயற்கை முறையில் செட்டப் செய்திருக்கிறார்கள் போலவே.. இதை மூன்றாவது யானை காலைத்தூக்கி இங்கும் அங்குமாக அசைக்கும் போது புரிந்துக்கொண்டு.. இதுங்க கிட்டக்க போகக்கூடாது , போனால் சென்சார் மூலம் தெரிந்து..ஆடுதுங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு தள்ளி வந்துடறேன்...


அதற்குள்ளாக இவர் வந்து, என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வேறு பக்கமாக சந்துபொந்துன்னு எங்கோ வளைந்து வளைந்து ஒரு குகை மண்டபத்திற்குள் போறாரு...கும்மிருட்டு...கருப்பு நிறத்தில் வழு வழுவென்ற பாறைகள், கருங்கள் தூண்கள்.. குகை மண்டபத்தை கடக்கும் போது ....லேசான வெளிச்சம் உள்ளே வர, அதைப்பார்க்கிறேன்...

அட.. ?!! மலை உச்சியில் சென்று பார்த்த கங்கை... நீலநிறத்தில்.... , சூரியனின் வெளிச்சத்தில் மின்னுகிறது.. இழுத்து செல்லும் கையை நிறுத்தி, அந்த காட்சியை அவருக்கு காட்டி... இதைத்தான் நான் அந்தப்பக்கம் போய் பார்த்தேன்னு, வியப்பு மேலோங்க சொல்றேன்.. கவனிக்கிறார்... அதான் தெரியுமேங்கற கணக்கா... வாயத்தொறக்காம திரும்பவும் இழுத்துக்கிட்டு நடக்கிறார்.. இவர் இழுத்த இழுப்புக்கு நடக்க முடியாமல், கால் வலி அதிகமாக ....

முழுச்சிக்கிட்டேன்....

*******************

பொதுவாக எனக்கு சோர்வாக இருக்கு, முடியலைன்னா, (இன்ஸ்டன்ட் எனர்ஜிக்கு) Candy ஸ்டாக் வச்சி கொடுப்பாரு, (சாக்லெட் எனக்கு பிடிக்காது அதனால் கேண்டி) தண்ணிக்கொடுத்து உக்காந்து ரெஸ்ட் எடுக்க சொல்லுவாரு...கண்டிப்பா எதாச்சும் சாப்பிட உடனே கொடுப்பாரு.... ஆனா நானு மதிக்கமாட்டேன்..வாங்கி எல்லாத்தையும் திண்ணுட்டு.. முடியாட்டியும் அதே வேகத்தோடு நடக்க ஆராம்பிச்சிடுவேன்.... உட்கார்ந்து ஓய்வெடுக்கும் பழக்கமே எனக்கில்லை.. எங்க போய் சேரனுமோ அந்த இடம் வந்தாத்தான் நிப்பேன். எப்படி உல்டாவா அவர் என்னை விடாமல் இழுத்துக்கிட்டு போறாப்ல கனவு வந்துச்சின்னு தான் தெரியல...

 **********************


அணில் குட்டி : அடுத்து சினிமா தான் எடுப்பாங்க போல...?!

பீட்டர் தாத்ஸ் : “I think we dream so we don’t have to be apart for so long. If we’re in each other’s dreams, we can be together all the time.” ― A.A. Milne, Winnie-the-Pooh 

படங்கள் : நன்றி கூகுள் ! 

பெட்டி

தூரத்தில்
ஒரு அட்டைப்பெட்டி
உள்ளே
எனக்குப்பிடித்த பரிசுப்பொருட்கள்.. !!
ஒவ்வொன்றாய்...
வெளியே வருகிறது

ஆச்சரியம்..!
ஆனந்தம்..!

வெளிவந்தவை
என் கைக்கு வருமுன்
காணாமல் போகிறது-

பெட்டியின் அருகில் சென்று-
எட்டிப்பார்க்கிறேன்....

காலி..!!!

அமைதியாய்
பெட்டியின்
மேல் பக்க அட்டையை
ஒவ்வொன்றாய்
மூடுகிறேன் -

தூரமாய் செல்கிறேன் -
பெட்டியை என்ன செய்வது?!

*************

நேற்றிரவு வந்தக்கனவு.. எழுந்தபோது சுத்தமாக நினைவில்லை. சமையல் செய்யும்போது..இரவு ஏதோ ஒரு கனவு வந்ததே.. ரொம்ப நல்லாயிருந்ததே..சிரிச்சேனே... ?! ன்னு மண்டையை துருவி துளாவி ..இதோ...  ஒருவழியாய் நினைவுக்கு கொண்டுவந்து எழுதிவிட்டேன்....

கனவுகளில் கூட...
தொலைந்து போகவில்லை..



பீட்டர் தாத்ஸ் : I dream my life and My Life becomes my dream

அணில் குட்டி : பீட்டரு.. அம்மணிக்கு மவுத் பீஸ் ஆகிட்டாரு போல ?!


டிஸ்னி பார்க் - பாரிஸ் பயணக்குறிப்புகள் #3

நவீன் அறையிலிருந்து "Noicy Champs " ன் ரயில் நிலையம் 5 நிமிடம் தான். நவீன் சொல்லியபடி டிக்கெட் வாங்கினோம், இங்கு டெல்லி மற்றும் கொல்கத்தாவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததால், பாரிஸ்ஸின் மெட்ரோ ரயில் ஒன்றும் பெரிய விசயமாக தெரியவில்லை. பாரிஸ் ரயில்களை விடவும் டெல்லி , கொல்கத்தா ரயில்கள் சுத்தமாக இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.

நவீன் இருந்த இடத்திலிருந்து பாரிஸின் டிஸ்னி பார்க் , ரயிலில் 16-19 நிமிடங்களில் சென்று விடலாம்.  டிஸ்னி இருக்குமிடம் "Marne-la-Vallee Chessy" அதுவே கடைசி நிறுத்தம்,  நடுவில் இருந்தாலுமே, ரயிலின் உள் உள்ள மானிட்டரிலோ, கதவின் மேல்புறத்திலோ தெரிகின்றன. அதை கவனித்து வந்தாலே சரியான இடத்தில் இறங்கிவிடலாம். 

ரயிலிலிருந்து இறங்கியவுடனே நேர் எதிரில் டிஸ்னி பார்க் தெரிந்தது, அருகில், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களும் இருந்தன. நவீனும் அவன் நண்பர்களும் இங்கு தான் சினிமா பார்க்க வருவார்களாம்.

சுற்றிப்பார்க்க நிறையவே இருந்தன. நேரம் போதவில்லை, பற்றாக்குறைக்கு கால் வலியும் கூடவே. .அத்தோடு,  இந்த Jet-Lag அப்படீன்னு ஒன்னு சொல்றாங்களே.. அதெல்லாம் எங்கப்போச்சின்னே தெரியல.. உடம்பை மிஷின் தனமாக ஓய்வின்றி வேலை செய்யவைக்கும் நிர்பந்தம் இருந்தது. தவிர,  ஏகப்பட்ட பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியாச்சி, உள்ள வந்தாச்சின்னு,  எங்கும் உட்காராமல் சுற்றிப்பார்த்துக்கொண்டே இருந்தோம். சின்னக்குழந்தை போல என் கணவர் எல்லாவற்றையும் ரசித்து, மகிழ்ந்தார்.

என்னால் தான் எதையுமே சந்தோஷத்தோடு பார்த்து ரசிக்கமுடியவில்லை. நவீன் நிலையை பார்த்தப்பிறகு, மன அழுத்தமும் இரத்த அழுத்தமும் அதிகமாகி, என் முகம், என் மனம் போலவே ஒருவித இறுக்கத்தில் இருந்தது. பாரிஸிலிருந்து திரும்பும் வரை என் முகம் அப்படியே தான் இருந்தது, அதற்காக அவ்வப்போது கணவரிடம் திட்டும் வாங்கிட்டே தான் இருந்தேன்...

டிஸ்னியில் ஒரு விசயம் புரிந்தது, அதாது, எனக்கேற்ற சாப்பாடு பாரிஸ்ஸில் எங்கும் கிடைக்காது. ரொட்டிக்கு நடிவில் பன்றி, மாடு, கோழின்னு வைத்து வெவ்வேறு பெயர்களில், flavour களில் விற்கப்படுகின்றன. தவிர நம்மூர் கோதுமை தோசை க்ரீப்' என்ற பெயரில், பல  flavour களில் விற்கப்படுகின்றன. முதல் நாள் என்பதால் எதுமே சாப்பிடப்பிடிக்காமல், ஜூஸ், காஃபி என குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டு வந்து சேர்ந்தேன். அவர் ஏதோ சாப்பிட்டார். பாரிஸ் உணவு குறித்து தனிப்பதிவு எழுதவேண்டும்.

ஒருவழியாக சுற்றிப்பார்த்து , அறை வந்து சேர்ந்தோம். செய்துவைத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு எங்களுக்காக காத்திருந்தான். சென்றுவந்த கதையை சொல்லி முடித்து, ரயில் நம்மூரை விட சுமாராக தான் இருக்குன்னு சொல்லி பாரீஸை முடிந்தளவு அவனிடம் கழுவி ஊத்திவிட்டு, நாங்களும் சாப்பிட்டு டகால்னு படுக்கையை விரித்து படுத்துட்டேன்.

அதிகாலை, 3 மணி மேல் இருக்கும், தூக்கத்தில் விழித்தபோது நவீன் இன்னமும் கணினியில் வேலை செய்துக்கொண்டிருந்தான். "ஏண்டி குட்டி..தூங்காம இன்னும் என்ன செய்யற?

 " ப்ராஜக்ட் சப்மிஷன், நாளைக்கு ப்ரசென்டேஷன் இருக்கு ப்ரிப்பேர் செய்துட்டு இருக்கேன்,"

"ஓ ..சரி சரி... முடிச்சிட்டு படு.."

திரும்பி படுத்து தூங்கிப்போனேன்.

***********
6 மணிக்கு எழுந்துவிட்டேன். இருவருக்கும் க்ரீன் டீ போட்டு வைத்துவிட்டு, எனக்கு சாதா டீ கலந்துக்கொண்டு, நவீனுக்கு பூரி செய்ய ஆயத்தமானேன். அவன் நல்லாத்தூங்கிட்டு இருந்தான். இவரும் எழுந்துவிட்டார். நவீனை எழுப்பலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டு அவரை கேட்டேன்.

எங்கள் பேச்சை கேட்டு, "அமைதியான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தேன்.. .... நீங்க வந்ததிலிருந்து இந்த ரூம்ல ஒரே சத்தம்... இதுல தனியா வேற என்னை நீங்க எழுப்பி விடனுமா? எழுந்து தொலைக்கறேன்.. சீக்கிரம் போகனும்.. ப்ராஜக்ட் சப்மிஷன்" ன்னு சிடு சிடுன்னு எழுந்தான்.  துவைத்த உள்ளாடைகளை அவர் அவனுக்கு எடுத்துக்கொடுத்தார். அதை கையில் வாங்கிக்கொண்டு என்னிடம் சண்டைக்கு வந்தான்.

"திருந்தவே மாட்டியாமா நீ?! எதையாது செய்யாதன்னு சொல்லிட்டு போனா செய்யக்கூடாது.. இது என்ன உன் ஊருன்னு நினைச்சியா? துணி துவைக்க தனியா வாஷிங் மிஷின் இருக்கு, அங்க தான் போய் துவைக்கனும்..ஏன் சொன்னப்பிறகும் துவைச்சிப்போட்டு இருக்க?"

"வாஷிங்மிஷின்ல துவைக்க நிறைய துணி இருக்கு..கொஞ்சம் தான் துவைச்சி இருக்கேன். சத்தம் போடாம போய் பல் வெளக்கிட்டு வா...டீ குடிச்சிட்டு, சாப்பிட்டுட்டு கிளம்புடா.. நாத்தம் புடிச்ச பயலே....."

"அப்பா...செய்ய வேணாம்னு சொல்ல சொல்ல  உங்க பொண்டாட்டி சும்மா இருக்க மாட்டறாங்க.., இம்சை தாங்கமுடியாட்டி,  ரூமை விட்டு அவங்கள வெளியில் தொறத்திடுவேன் சொல்லிட்டேன்.. "

"அவ அப்படித்தான்னு உனக்கு தெரியாதாடா...விடறா..போய் கிளம்பு..போ...."



தொடரும்...

படங்கள் : நன்றி கூகுள்

குயில் பாட்டு ஓ வந்ததென்ன ...


இது தான் செம்போத்து = செண்பகப்பறவை (Greater Coucal)  -> இத்தன வருச காலமாக இதைத்தான் குயில்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இது எப்படி சத்தம் எழுப்புதுன்னா...ஒரு மாதிரி.... வாயத்தொறக்காம  "ம்ம் ம்ம் ம்ம்க்கும்.. ம்ம் ம்ம் ம்ம் க்கும்" னு சத்தம் எழுப்புது. வாயத்தொறக்கவும் மாட்டேங்குது. அமுக்கியாட்டும் சத்தம் போடுது. தனியா வேற வீட்டில் இருக்கேனா..இந்த சத்தம் ஒருவித பயம்மா இருக்கும். 

கேரளாவில் வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்திருக்கும். குயில் காக்கா மாதிரி இருக்கும்னு சொல்லிக்கேட்டதால் இதை குயில் னு நானே கெஸ் பண்ணிக்கிட்டேன்.  இங்கவந்தும்.. தொடர்ந்துச்சி.. ஆனா இது தான் வாயத்தொறக்காம 'ம்ம் ம்ம் ம்ம் ம்க்கும்' னு சத்தம் எழுப்புதா? எனக்கு ஒரே கன்ஃபூஷன்..

முதலில் அது ஏதோ உடல்நிலை சரியில்லாம அப்படி செய்யுதுன்னு நினைச்சேன். வூட்டுக்கார கூப்பிட்டு.. அதுக்கு நான் தான் டாக்டர் மாதிரி.. "பாருங்க அந்த குயிலுக்கு உடம்பு சரியில்ல எப்படி வாயத்தொறக்க முடியாம  கஷ்டப்படுதுன்னு" பில்டப் வேற... :))
அவரும் நம்பி ஃபோட்டோவெல்லாம் எடுத்தாரு. :)

அப்பவும் இது குயில் இல்லன்னு என் அறிவுக்கு எட்டல... பெண் குயில் போலன்னு ஜஸ்ட்டிஃபை செய்துக்கிட்டேன்.  (என் ஜெனரல் நாலேஜ்ஜில் மண்ணெண்ணெய ஊத்தித்தான் கொளுத்தனும்).

சரி...அப்புறம் எப்படிதான் குயில கண்டுப்பிடிச்சேன்னா..?! ஒரு நாளில் 14 மணி நேரமாவது இங்க வீட்டை சுத்தி குயில் கூவிக்கிட்டே இருக்கு.. அடர்ந்த மரங்கள் என்பதால், கண்ணில் மட்டும் படாது. இதையே குயில்னு நினைத்ததில் கூகுள் ஆண்டவர் பக்கமே நான் போகல.  சென்ற வாரம் இலையுதிர் காலம் ஆரம்பம் ஆகி..2-3 நாள்ல பூரா மர இலையும் கொட்டிப்போச்சி...

இப்ப என்ன செய்யும் அந்த குயில்?! ஒழுங்கா மரியாதையா வெத்து கிளையில் உட்கார்ந்து கூவிக்கிட்டு இருந்துச்சி...  அட்லாஸ்ட்,  குயில் எப்படியிருக்கும்னு எனக்கு தெரிஞ்சிப்போச்சி... :)
இப்ப குயில் கதைக்கு வருவோம். எந்த குயிலுமே தனியா சும்மா கூவுவதேயில்லை. இங்க ஒரு குயில் கூவினால், எசப்பாட்டு தொலைவில் எங்கிருந்தோ கேட்கும். அதுக்கு உடனே இவரு எசப்பாட்டு இங்கிருந்து பாடுவாரு.. உடனே அங்க.. இப்படி மாறி மாறி பாடிக்கிட்டே இருக்காங்க. இவங்க பறந்து வேற இடத்துக்கு போறவரை இந்த எசப்பாட்டுகள் தொடரும்.

அணில் குட்டி : இந்த அம்மணிக்கு 7 கழுத வயசாச்சி.. குயில் எப்படியிருக்கும்னு இபப்த்தான் தெரிஞ்சிருக்கு... ஒரு புள்ளைய பெத்து, வளத்து... அதுக்கு எந்த லட்சணத்தில் படிப்பு சொல்லி தந்திருப்பாங்கன்னு இப்ப கிரஸ்ட்டல் கிளையரா தெரிஞ்சிப்போச்சி.....

பீட்டர் தாத்ஸ் : They are my Morning alarm. With a cup of coffee I started my day with them. They dont bother me, They speak, fight n play with one other,fly fast, ask me food,  I talk with them, give them food. Cukoo sings I listen n sing back. 

விடுதி அறை - பாரிஸ் பயணக்குறிப்புகள் #2

நவீன் அறையில், ஒருவர் மட்டுமே தங்கமுடியுமென்பதால், இருவருக்கு வேண்டி அனுமதி கடிதம் விடுதியின் வாயிலாக நவீனால் பெற்றுத்தர இயலவில்லை. அதனால், ஒர் இரவுக்கு விடுதிக்கு அருகில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்திருந்தோம்.  மூவரும் அங்கு சென்று தங்கிவிட்டு, விடியற்காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, ரயில் வழிப்பயணமாக நவீன் அறையை அடைந்தோம்.

பாரீஸ் சென்றதிலிருந்தே நவீனிடம் கவனித்த முதல் மாற்றம், "அதிவேக நடை". இங்கிருந்தவரை அவசரமோ, அவசரமில்லையோ வேகமாக நடப்பேன். இருவரும்.. "ம்ம் ம்ம்ம்..ஓடு ஓடு.. நாங்க மெதுவாகத்தான் வருவோம்" னு ஆடி அசைந்துதான் வருவாங்க. ஆனால், இங்கு?!! நவீன் நடைக்கு என்னால் ஈடுக்கொடுக்கவே முடியல..அத்தனை வேகம். எப்போதும் போல, நிதானமாக என் கணவர் எங்களைப் பின் தொடர்ந்தார்.

ஹட்ச் நாய்' குட்டிப்போல நவீன் பின்னால் நான் ஓடிக்கொண்டிருந்தேன். விடுதி முகப்பின், வாசற்கதவின் சாவி ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. தவிர, சாவி மறந்தோர், அதற்கான ரகசிய எண்ணை அழுத்தி கதவை திறக்க செய்யலாம். அறைக்கு இரண்டு சாவிகள் வீதம் கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு சாவியை எங்கோ தொலைத்துவிட்டு, தேடாமலேயே இருந்தான் நம்ம ஆள்.

வேக வேகமாக விடுதிக்குள் சென்றவன், இடதுப்பக்கம் இருந்த அறைக்கு சென்று அதே வேகத்தில் திரும்பி வந்து வேறு வழியில் நடக்க ஆரம்பித்தான். நான் விடுவேனா?  வேக வேகமாக அவன் சென்ற வழியே சென்றேன். ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக தபால் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன, தனக்கு கடிதம் இருக்கிறதா என்று பார்த்திருப்பான் போல, First Name , Last Name குழப்பம்.  எங்களின் பெயரிட்டு ஒரு பெட்டி இருந்தது.

விடுதி முகப்பு வாயிலிருந்தே "Motion sensor lights" பொறுத்தப்பட்டிருந்தன. இருளோவென்று இருந்த இடம், நவீன் முன்னே செல்ல ஒளி பரவி எங்களுக்கு வழியை தெளிவாக க்காட்டிக்கொடுத்தது. ஒரு corridor தாண்டி, படி இறங்கி கீழ் தளத்தில் ஒரு corridor நடந்தான், அவன் அறை வாசலில், பெயர் பலகையில் "நவீன்" என்று அவனே எழுதிய சீட்டு வைக்கப்பட்டிருந்தது.  

*********
அறையில் காலடி வைத்ததிலிருந்து -

காலணிகள் கழட்டி விடும் இடத்திலிருந்து, கழுவாத பாத்திரக்குவியல், அழுக்கான சமையல் மேடை, மடிக்காத போர்வையோடு கலைந்து கிடந்த படுக்கை, அங்கங்கே கிடந்த அழுக்குத்துணிகள், கால் வைக்க முடியாதளவு குப்பை, தலைமுடி ......  எனக்கு தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சுற்றியது. அவரும் நானும் மெளனமாக  ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

எங்களின் வருகைக்காக துளியும் அவன் எதையும் சரிசெய்து வைக்க மெனக்கெடவில்லை. சமைக்க காய்கறி  கூட ஏதுமில்லை.  வெங்காயம் நாலும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தது. என் குழந்தையை எப்படி நான் வளர்த்திருக்கிறேன் என்ற கேள்வி என்னைத்துளைக்க ஆரம்பித்தது... அவன் அவனாக எங்களுக்காக எதும் வேஷம் போடாமல் இருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதா? இல்லை, தன் இருப்பிடம் இதை (ஓரளவு) சுத்தமாக வைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பதை நினைத்து கஷ்டப்படுவதா?  கேள்விகள் என்னுள்ளே...

எதை முதலில் சுத்தம் செய்வது என்று தெரியாமல் விழித்தேன். எதைத்தொட்டாலும் அழுக்கு, ஒன்றிலிருந்து ஓன்றாக தொடர்ந்தவாரே இருந்தது.
விடியற்காலை 6.45 க்கு கிளம்பவேண்டும் என்று புறப்பட ஆரம்பித்தான். "என்னடா எதுமே வீட்ல இல்ல..என்ன சாப்பிட்டு போகப்போற?" ன்னு ஃபிரிட்ஜை திறந்துப்பார்த்தேன்.  ஒரு கிண்ணத்தில் ஏதோ செய்து வைத்திருந்தான்.. எடுத்து முகர்ந்தேன்.. துர்நாற்றம்!!... ... என் இரத்த அழுத்தம் அதிவேகமாக ஏறத்தொடங்கியது. கொஞ்சம் சுதாரித்து, ஃபிரிட்ஜில் இருந்த ஒவ்வொன்றையும் எடுத்து தேதிப்பார்த்தேன். எல்லாமே காலாவதி ஆகிருந்தது.

"எப்படி வளத்த குழந்த... இப்படி கெட்டுப்போனதை எல்லாம் வச்சி சாப்பிடுதா? " ன்னு நினைக்க நினைக்க என் மன அழுத்தம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் குப்பையில் போட எடுத்துவைத்தேன்.

நவீனுக்கு ப்ராஜக்ட் முடியவில்லை.  எங்கள் மூச்சுக்காற்று சற்று சத்தமாக வந்தால் கூட, "ப்ராஜக்ட் முடிஞ்சவுடனே வந்திருக்கலாமில்ல.. நீங்க இரண்டுப்பேரும் எனக்கு ரொம்ப தொந்தரவா இருக்கீங்கன்னு" எரிந்துவிழுந்துக் கொண்டே இருந்தான்.  படிப்பின் கடுப்புஸ்.. ப்ராஜக்ட்  முடிச்சிக்கொடுக்கனும், எக்கச்சக்க வேலை இருந்தது. இடையில் நாங்கள்... ?! 

சாப்பிடாமலேயே கிளம்பினான்.. கேட்டதற்கு "காலையில் எனக்கு சமைக்க நேரமில்லை..நான் எதுவும் சாப்பிடுவதில்லை, பழகிவிட்டது" என்றான். காலையில் ஒருநாள் கூட அவனை பட்டினியாக நான் அனுப்பியதேயில்லை. அவன் குளித்துவிட்டு உடை மாற்றி, ஷூ மாற்றுவதற்குள் அவனோடு அங்குமிங்குமாக ஓடி ஓடி சாப்பாட்டை ஊட்டி விட்டுவிடுவேன்...

எப்படி அவனை வெறுமன அனுப்புவது.?  இங்கிருந்து அரிசி முதற்கொண்டு ஓரளவு மளிகைப்பொருட்கள் கொண்டு சென்றிருந்தேன்.  சம்பா கோதுமையை கஞ்சி காய்த்து, இருந்த பால் கேன்'களில் எது காலாவதி ஆகாமல் இருக்கிறது எனப்பார்த்து,  பால் + சர்க்கரை சேர்த்து கொடுத்தேன். "காலையில் சாப்பிட்டு வருசம் ஆச்சிம்மா..தீடீர்னு சாப்பிட சொன்னா ? பசிக்கலமா எனக்கு" ன்னு சாப்பிட அட்டகாசம்.  கெஞ்சி கூத்தாடி 2.5 டம்ளர் குடிக்க வைச்சாச்சு..
கிளம்புகிற அவசரத்திலும்,

"ஹாட் ப்ளேட்" எப்படி பயன்படுத்தனும், கழிவறையில் தண்ணீர் வெளியில் சிந்தாமல் எப்படி உபயோகிக்கனும், எங்கு நின்னு குளிக்கனும், தண்ணீர் சிந்தினால் எதைக்கொண்டு துடைக்கனும், சமைக்கும் போது பாத்திரம் கழுவும் போது சுவற்றில் அழுக்கு பட்டுவிட்டால் அதை உடனேயே எதைக்கொண்டு சுத்தம் செய்யனும், எந்த குழாயில் குளிர்ந்த தண்ணீர் &  சுடத்தண்ணீர் வரும், ஃபயர் அலார்ம் அடித்தால் எப்படி நிறுத்தனும்... ரூமை எதைக்கொண்டு பெருக்கனும், துடைக்கனும், சுத்தம் செய்ய தேவையான பொருட்கள் எங்கு இருக்கு, அக்கம் பக்கத்தில் உள்ள (இலங்கை) தமிழர்கள் கடை விபரங்கள் சொல்லி, "அங்க விலை அதிகம்.. ஃப்ரன்ச் தெரியாததால். இப்பத்திக்கு ரொம்ப அவசியமா எதாச்சும் தேவைன்னா வாங்கிக்கோங்க.. மிச்சம் நான் ஃபிரியா ஆனவுடனே கூட்டிட்டு போய் வாங்கித்தரேன்" என்றான். 

அதேப்போல வெளியில் சுற்றிப்பார்க்க,  அப்பாவிடம் தேவையான தகவல், எந்த ரயில் கட்டனம் குறைவு,  எந்த ரயிலில் போகனும், அவன் பயன்படுத்தாமல் அதிகமாக இருந்த சில ரயில் டிக்கெட்டுகள், ரயில் நிலையத்தில் எப்படி டிக்கெட் கேட்டு வாங்குவது போன்றவற்றை வேக வேக சொல்லி கொடுத்துவிட்டு கிளம்பினான்.

சமையல் மேடை சுத்தம் செய்து, பாத்திரங்களை கழுவி,அழுக்கு துணிகளை மடித்து ஓரம் கட்டி, ரூமை பெருக்கி, துடைத்து, நவீன் உள்ளாடைகளை அவன் துவைக்கக்கூடாது என சொல்லியும், நின்றவாறே தண்ணீர் வெளியில் சிந்தாமல் துவைத்து,  அவற்றை எடுத்துச்சென்ற கயிற்றை இடம் தேடிப்பிடிச்சி கட்டி காயவைத்து...சமையல் செய்து... .........இதற்குள் 1 மணிக்கு மேலாகியிருந்தது.  வூட்டுக்கார் இம்சை ஆரம்பமானது.. "இப்படியே உன் புள்ளைக்கு சேவகம் செய்துக்கிட்டு இருந்தால்....எங்கையும் வெளியில் சுற்றிப்பார்க்க முடியாது... கிளம்பு போகலாம்".

வெளியில் செல்லும் எண்ணமே எனக்கில்லை. என் குழந்தையோடு என்னை விட்டுடுங்கன்னு கத்தனும் போல இருந்தது,  மனசு ஒரு நிலையில் இல்லை. வெளியிலும் என் மன அழுத்தத்தை சொல்ல முடியாது.. சொன்னால்.. "ஒரு தாய் இவற்றையெல்லாம் எப்படி இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டும்" என்ற தலைப்பில் லெக்சர் கொடுக்க ஒருவர் தயார் நிலையில் இருக்கிறார்....
நான் வரல சொல்லித்தொலைக்கவும் முடியல... நான் கூட இருக்கும் போதே வந்த வழியை மறந்துவிட்டு நேர் எதிரான வழியில் செல்லுவார். இவரை எங்க தனியாக அனுப்ப..?! தனியாக ஊர் சுற்ற போகவும் மாட்டார்... சரி......

10 நிமிடங்களில் குளித்து கிளம்பி.சாப்பிட்டு விட்டு, நவீனுக்கு குறிப்பு எழுதிவைத்துவிட்டு, ரயில் நிலையம் சென்றோம்....
தொடரும்..

பாரிஸ் பயணம் # 1 

*படங்களில் அறை பெரியதாக தெரிந்தாலும், மொத்தமாக 200 சதுரடி தான் இருக்கும். 
படங்கள் : நன்றி கூகுள்

இந்தியாவின் மகள்' ஆவணப்படம் - புரிந்தவை

 => கோலி , பம்பரம் விளையாட்டு, பட்டம் பறக்க விடறது, தண்ணி அடிக்கறது , புகைப்பிடிக்கறது மாதிரி இதுவும் மிக மிக மிக சாதாரணமான ஒரு விசயம்..  விளையாட்டு, பொழுதுப்போக்கு & சந்தோஷம்.

=> இதையெல்லாம் ஒரு மேட்டர்னு பேசிக்கிட்டு??! என்னாச்சி இவங்களுக்கு எல்லாம்?!  இதை ஏன் இவ்ளோ பெருசாக்கி பேசறாங்கன்னு சத்தியமா எனக்கு புரியல.

=> 200 பேர்..இல்ல சரியான கணக்கில்ல, அதுக்கும் மேல இருக்கலாம்..அதனால நீங்க 200 ன்னு ரவுண்டு செய்துக்கோங்க. இதுல 12-13 ரேப் கேஸ் தான் ரெஜிஸ்ட்டர் ஆகியிருக்கு. மிச்சம் இருக்க 187 பொண்ணுங்க ...?!! வேறென்ன சைலன்ட் மோட் ல இருக்காங்க.

=> மேல சொன்ன 200 சொச்சம் பேரை ரேப் செய்துட்டு, ரொம்ப சாதாரணமா கணக்கு சொல்ற ஒருத்தன்  மாதிரிதான்.. நிர்பயா ரேப் லிஸ்ட்ல இருக்க 4 பேரும்.



யார் கூட இப்படி ரேப் செய்து விளையாடுவாங்க?!

=> இரவு நேரங்களில் வெளியில் "சுற்றும்" பெண்கள், தனியாகவோ, யாருடனோவோ.  இப்படி சுற்றும் பெண்கள் எல்லாருமே ஒழுக்கமற்றவர்கள், இவர்களை ரேப் செய்வதால் ஒரு பிரச்சனையும் இல்லை, இவங்கள கண்டிப்பா ரேப் செய்யனும். அதில் எந்த தப்புமில்லை. முக்கியமாக அவங்க இந்த ரேப் விசயத்தை வெளியில் சொல்லவே மாட்டாங்க.

=> சரி, ரேப் செய்தீங்க..அது ஏண்டா அந்தப்பொண்ணை அவ்வளவு கொடூரமாக தாக்கியிருக்கீங்க?  ...வாய்!! என்னா வாய் அந்த பொண்ணுக்கு?! ரொம்ப ஓவர் பேச்சு..முடியல.. அதுவாச்சும் பேசுச்சி.. கூடவந்தவன்.. கைவேற நீட்டிட்டான். ராத்திரியில் இப்படி சுத்தறதே தப்பு..இதுல..எதிர்த்து பேசலாமா?!

வக்கீல் வண்டுமுருகன்கள் :

=> பெண்கள் எப்படி வளர்க்கப்படனும்? யார் கூட வெளியில் போகனும். பூ, வாசம், வெங்காயம் . etc

 # ண்ணா.... எங்கூர்ல சொந்த தாத்தா, 4 வயசு பேத்திய ரேப் செய்து, கிணத்தில் தூக்கிப்போட்டு சாகடிச்சிட்டாருங்கண்ணா.. இதுக்கு உங்க கருத்து என்னங்கண்ணா?!!

=> என் வீட்டு பொண்ணு இப்படியிருந்தா..பண்ணை வீட்டில் வச்சி கொளுத்திடுவேன். !!

# ஸ்ஸ்ஸ்ஸ்.....இஞ்சி பூண்டு நசுக்கறாப்ல இந்த ஆளை நசுக்கினா என்ன? !!

மருத்துவர் :

=> இந்த குற்றவாளிகள் எல்லோருமே "நார்மல்" ஆனவர்கள். அதாது உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்படாத சாதாரண மனிதர்கள்.

அப்பாவிகள் :

=> தன் புருஷன் இப்படியான செயலை செய்யவே மாட்டான் என நம்பும், அப்பாவி மனைவி. திருதிருன்னு முழுச்சிட்டு அப்பெண்ணை சுற்றிவரும் குட்டிக்குழந்தை. "கணவனை சார்ந்து தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை.. தனியா எப்படி வாழமுடியும்? அவன் போயிட்டா நானும்.. எதுமே தெரியாத இந்த குழந்தையும் என்ன செய்வோம்?! நாங்களும் சாக வேண்டியது தான். என் வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?! " # நிர்பயாவா? இந்த பெண்ணா?!

=> ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படற மக்கள் நாங்க.... எங்க வயிறை நிறைக்க தான் வெளியில் வேலைக்கு போறான்.. எங்க புள்ள இப்படி செய்துட்டானா..... என்ன சொல்றது தெரியலன்னு அழுகின்ற தாய் தகப்பன்..

காவல்துறை :

டெல்லி : எந்த நாட்டு தலைநகரோடு ஒப்பிட்டாலும், டெல்லி ஒரு தலைசிறந்த பாதுகாப்பான தலைநகரம். அதில் மாற்று கருத்தேயில்லை !

India' daughter : (Click it to watch the Video)
1. குற்றவாளி : எந்த குற்ற உணர்வும் இல்லாமல்,அவனுடைய அன்றாட வேலைகளில் ஒன்றை செய்தது போல, நிறுத்தி, நிதானமான, நேரான பார்வையோடு பேசறான். சரியாத்தான் பேசறான்.
2. குற்றவாளியின் மனைவி : நியாயமான கேள்வி கேக்கறாங்க. .
3. குற்றவாளியின் பெற்றோர் : அப்பாவிகள்
4. காவல்துறை:  கடமையை செய்துக்கொண்டேதான் இருக்காங்க.

பொதுமக்கள் : நீங்கதான் பிரச்சனை செய்யறீங்க. கொடி தூக்காம, பொங்காம, உங்க வீட்டு பொண்ணை ஒழுக்கமா வளக்கற வழியப்பாருங்க. ! 

ஐ' படம் குறித்து, லிவிங் ஸ்மைல் வித்யா' அவர்களுக்கு,

உங்களின் ஐ' படம் பற்றிய FB பதிவைப்பார்த்தேன். உங்களை நான் அங்கு தொடரவில்லை என்றாலும் தோழி மங்கை' பகிர்ந்ததில் எனக்கு படிக்கக்கிடைத்தது.

ஐ' படத்தை பெரிதாக தலையில் தூக்கிவைத்துக்கொள்ள ஏதுமில்லை. இயக்குனர் சங்கர் அவர்களுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது, அரைத்த மாவையே அரைத்திருக்கிறார், கொச்சையான இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்து, நடுவில் குழந்தைகளின் கார்ட்டூன் பட கதையை பெரிதாக்கி பார்த்தமாதிரி இருந்தது, நடிகர் விக்ரமின் உழைப்பு வீணாக்கப்பட்டிருக்கிறது...தவிர வேறொன்றுமில்லை.  .

நிற்க, உங்களின் பிரச்சனை,ஐ' படத்தில் இயக்குனர் சங்கர் திருநங்கைகளை அசிங்கப்படுத்தியிருக்கார் என்பதே.


பொட்டை' என்ற சொல், பொட்டச்சி என்பதிலிருந்து வந்தது தானே. உங்களை தான் சுட்டுகிறது என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை. நான் எப்போதும் என்னை /பெண்களை சுட்டுவதாகவே நினைப்பேன். பல தமிழ் திரைப்படங்களில் இப்பவும் எப்பவும் வரும் சில நடைமுறை வசனங்கள்..

"நீ ஆம்பளையா இருந்தா" - இந்த வசனம் ஒரு ஆண் இன்னொரு ஆணைப்பார்த்து கேட்பதாகவே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். எந்த காரணி ஒரு ஆணை "அவன் ஒரு ஆண்" என்று நிரூபிக்கிறது. ?! குழந்தைப்பெற்றுவிட்டாலா? அப்படீன்னா.. குழந்தைப் பெற்றவனுக்கும் அந்த வசனம் கொடுக்கப்படுகிறதே? இந்த ஒரு வசனத்தைக்குறித்த என் கேள்விகளுக்கு இன்று வரை எனக்கு பதில் தெரியவில்லை.

அடுத்து, " நீ ஒருத்தனுக்கே (ஒரு அப்பனுக்கு) பிறந்திருந்தால்..." ஒருத்தனுக்கு பிறக்காம 10 பேருக்கா பிறக்கமுடியும் ?!! அறிவியல், மருத்துவ ரீதியாக இதையெல்லாம் இயக்குனர்கள் கொஞ்சம் யோசிக்கலாம்.. தவிர இங்கே "ஒரு தாய் ' அசிங்கப்படுத்தப்படுகிறாள்.

" உன் அம்மா ஒருத்தனுக்கே முந்தி ........" யோவ் போங்கய்யா... நீங்களும் உங்க வசனங்களும்னு சொல்லத்தோணுது.... இப்படியாக பெண்களை இழிவுப்படுத்தும் பல "டெம்ப்ளேட்" வசனங்கள் தமிழ் படங்களில் இருக்கின்றன, அவற்றை அநேகமான எல்லா முன்னணி கதாநாயகர்களும் பாரபட்சமின்றி பயன்படுத்தியும் உள்ளனர்.

இதெல்லாம் கூட விடுங்க.. தமிழ் திரைப்படங்களிலும், ஏன் இப்ப தொலைக்காட்சி தொடர்களில் "பெண்" எத்தனை மோசமானவளாக சித்தரிக்கப்படுகிறாள். பார்த்து பார்த்து பழகிவிட்டது.

ஒரு தொடரில், சாதாரண குடும்பத்து பெண் "சயனைடு" வாங்கிவந்து ஒருவரைக் கொல்ல திட்டம் போடுகிறாள்.. "சயனைடு அவ்ளோ சாதாரணமாக கிடைக்கிறதா?.. எங்க கிடைக்குதுன்னு தெரிந்தால் நல்லாயிருக்கும், இந்த கருமத்தையெல்லாம் பார்க்காமல், அதை வாங்கி குடிச்சிட்டு செத்துத்தொலைக்கலாம்.  தாய், மனைவி, காதலி, அக்கா, தங்கை, மாமியார், அத்தை, சித்தி,பெரியம்மா,ஓரகத்தி, பாட்டி, தோழி, சிறுமி ' ன்னு எல்லா கதாப்பாத்திரங்களும் மிகவும் வில்லித்தனமாக காட்டப்படுகின்றன.


நீங்க சொல்ற காதல் தோல்வியும் (நியாயமான, கண்ணியமான, உண்மையான காதல்) அதனால் அந்த பெண் வில்லியாக மாறுவதும் பலப்படங்களில் இங்கு பல காலமாக வந்துகொண்டிருக்கின்றன.

சமீபத்தில் தொலைக்காட்சியில் "நூற்றுக்கு நூறு" ன்னு ஒரு படம்பார்த்தேன். அம்மாடி... அதில் வரும் அத்தனை பெண்களும் ரவுண்டுக்கட்டி வில்லிகளாகி, ஒரு (நல்லவனுக்கு) ஆணுக்கு எதிராக மாறி அவன் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்குவதே கதை...


ரம்யா கிருஷ்ணன் - படையப்பா..?!! ஏன் இந்த படத்தில் இந்தம்மாவின் காதல் நியாயமானதும் புனிதமானதும் இல்லையா? இப்படியான குணமுடைய பெண்களுக்கு காதல் வரக்கூடாதா? அல்லது வந்தால் அதை ஆண் புறக்கணிக்கத்தான் வேணுமா?

ஷேரேயா ரெட்டி - திமுரு ?!! இதில் விஷால் அந்தப்பெண்ணை, நீயெல்லாம் ஒரு பொம்பளையாடி?! முதல்ல பொம்பளை மாதிரி நடந்துக்கோ" ன்னு அடிக்கடி பேசுவாரு... இந்தப்பெண்ணுக்கும் காதல் வரும்.. அது மிக கேவலமான வசனங்களால் மறுக்கப்படும்.

ரீமா சென் - வல்லவன் - ?!! என்னமாதிரியான ஒரு வில்லி?!

ராதிகா - ஜீன்ஸ் ?!! கணவர் நாசரை கீழ்த்தரமாக கேவலப்படுத்தும் எத்தனை எத்தனை வசனங்கள்?!

வடிவுக்கரசி - முதல்மரியாதை.. - ஸ்ஸ்யப்பா நினைச்சாவே கண்ணக்கட்டுது.. என்னா வாய்.. ?!!

சங்கீதா - உயிர் ?!! மிக மிக மோசமாக கொடூரமாக சித்திரக்கப்பட்ட ஒரு கதாப்பாத்திரம். காதலனை அடைய பெற்றக்குழந்தை மேல் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி காயப்படுத்தும் காட்சி அமைந்த ஒரு படம். எந்த ஒரு தாயும் செய்ய துணியாத ஒரு செயல்... இப்படியொரு கொடுமையை நிச்சயம் எதற்காகவும் எந்த தாயும் செய்யமாட்டாள், தன்னையறியாத 'மனபிறழ்வு' உடையவர்கள் கூட இப்படியான செயல்களை செய்யத்துணிய மாட்டார்கள்.

மேற்கண்டவை சில உதாரணங்கள், இதைப்படிப்பவர்களுக்கு, இதைவிட மோசமான "பெண்" கதாப்பாத்திரங்களும் வில்லிகளும் தமிழ் திரைப்படங்களில் காண்பித்துள்ளார்கள் என்பது நினைவுக்கு வரலாம்..

இப்படியே "ஆண்" வில்லன்'களும். இதற்கு எண்ணிக்கையே இல்லை. உலகத்தில் உள்ள அத்தனை கெட்ட குணங்களும், கேவலமான செயல்களும் செய்யும், கொடுரூமானவர்களாவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உதாரணங்களே தேவையில்லை. ஏன் ஐ' படத்திலும் கதாநாயகன் அத்துணூண்டு உடம்பையும் ஏகப்பட்ட பிரச்சனைகளையும் வைத்துக்கொண்டு எல்லோரையும் மிக கொடூரமான முறையில் தான் பழிவாங்குகிறார். இயக்குனர் சங்கரின் அந்நியன்' படத்திலும் மிகக்கொடூரமான தண்டனைகளைக் கொடுக்கும் கதாநாயகன் தான் வருகிறார். இந்தியன் தாத்தா; அவ்ளோ வயசாகியும் தப்பு செய்பவர்களை தண்டிக்கிறார்...

இப்படி.. யதார்த்தத்தில் நம்மால் முடியவே முடியாத, நடக்காத பல விசயங்களை சினிமாவில் காட்டிவருகிறார்கள். குறிப்பாக ஆண்/ பெண் என்ற வித்தியாசம் இன்றிதான் காண்பித்து வருகிறார்கள்.

இதில் மூன்றாவது பாலினமான நீங்கள்.... அதை யதார்த்தோடு சேர்த்துவைத்து பார்த்து கோபப்படுவது சரியா? ஆண்/பெண்/திருநங்கை எல்லாமே சமம் என்று நினைத்தால், தமிழ் திரைப்படங்களில் ஆண், பெண்ணை இழிவு படுத்தாமல் இல்லை. குறிப்பாக ஆண்களுக்குள் தகராறு என்றால் கூட வசனங்களில் "*xxxxxxxx மவனே" என்றும்.. இன்னும் தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் பெண்களை குறிப்பிடுபவை/மையப்படுத்தியே அர்த்தம் கொள்பவை என்பதை நான் உங்களுக்கு சொல்லத்தேவையில்லை.

இவற்றையெல்லாம் விட, உங்களில் ஒருவரான திருநங்கை ஓஜஸ்' முழு சம்மதத்தோடு நடித்துள்ளார், அவருக்கு மொழித்தெரியாவிட்டாலும், நடிக்கும் சாரம் கூட புரியதவாரக இருக்க வாய்ப்பேயில்லை. கதாப்பாத்திரத்தை உள்வாங்கி மிக அருமையாக உணர்ச்சிகளை தன் நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு டப்பிங் செய்துள்ள திருநங்கை "ரோஸ்" நன்கு தமிழ் அறிந்தவர், மேலும் காதல் உணர்வுகளையும், அதனால் படும் கஷ்டங்களையும் குரலில், அழுகையில் மிக தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, 'உங்களை" என்று கொள்ளாமல், எந்த பாலினரையும் எதும் காயப்படுத்தாமல் ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா? அது சாத்தியமா? ஏன் தமிழ் திரைப்படங்களில் நோய்வாய்ப்பட்டவர்களையும், வயதானவர்களையும், உடல் ஊனமுற்றவர்களையும் கிண்டல் கேலி செய்யவில்லையா? நிறைய படங்களில் செய்துள்ளனர். காமெடிக்காக என்றாலும் வயது வித்தியாசமின்றி கவுண்டரிடம் எட்டி உதைவாங்கியவர்கள் எத்தனைப்பேர். ?!

ஒருதலை காதல், காதல் தோல்வி என்பது மட்டுமல்ல... வாழ்க்கையில் எல்லா தோல்விகளும், அதனால் ஏற்படும் தாக்கங்களும் நல்லதோ கெட்டதோ எல்லா பாலினங்களுக்கும் ஒன்றே. இதில் உங்களை நீங்கள் ஏன் தனிமைப்படுத்தி, சிறுமைப்படுத்தி பார்க்கிறீர்கள்.?! நீங்களும் மற்ற இரு பாலினங்களைப்போல முன்னிலைப்படுத்தப்படுகிறீர்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்...

போராட்டம் நடத்தவேண்டுமானால்... ஆண்/பெண்/திருநங்கைகள் ஒன்றாகக்கூடி ஒவ்வொரு படத்திற்கும் போராட்டம் நடத்தவேண்டும்.

வில்லத்தனம், கேலி, கிண்டல், கோபம், சிரிப்பு, ஆற்றாமை, அழுகை, வலி,காதல், காமம் போன்ற எல்லா உணர்வுகளும் உங்களுக்கு மட்டுமல்ல இந்த மண்ணில் பிறந்த எல்லா பாலினங்களுக்கும் பொருந்தும். இதை நான் சொல்லவில்லை... நீங்கள் எனக்களித்த கேப்பங்கஞ்சி வித் கவிதா" பதிவில் சொல்லியிருக்கீங்க...

உங்களின் கஷ்ட நஷ்டங்கள், பிரச்சனைகள், வலிகள் தெரியாமல் இப்பதிவை எழுதவில்லை. எல்லாம் தங்கள் மூலமாகவே அறிந்ததால் பிற பாலினங்களுக்கு சமமாக நினைக்க, உங்களை தயார் படுத்த முயற்சி செய்யுங்கள் என்று சொல்லவே இந்த பதிவு... உங்கள் மனதை எந்தவிதத்திலாவது என் எழுத்து காயப்படுத்தியிருப்பின்... மன்னித்து விடுங்கள்...

அன்புடன்
கவிதா