சில பாடல்கள்.....

1. தோல்வி நிலையென நினைத்தால்...



2. ஒவ்வொரு பூக்களுமே....




3. கடவுள் தந்த அழகிய வாழ்வு ....




4. கடவுள் உள்ளமே...



5. வெற்றி நிச்சயம் இது ....



6. வெற்றி கொடி கட்டு..

க்ளைமாக்ஸ் காட்சிகள் !!

ஒரு திரைபடத்தில் க்ளைமாக்ஸ் காட்சிகள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது இந்த பதிவை எழுதும் வரை வந்து இருக்கிறதே, இது தான் இயக்குனரின் வெற்றி, பார்க்கும் பார்வையாளர்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த தாக்கம் எதிர்மறையாகும் போது சில நேரங்களில் படம் தோல்வி அடைந்தும் விடுகிறது. தோல்விக்கு க்ளைமாக்ஸ் மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. அதுவும் ஒரு காரணம்.

க்ளைமாக்ஸ் ..

1. காட்சி அமைப்புகள் நாம் நினைத்தவாறே அமைந்திருந்தாலும் ஒரு தாக்கம் இருக்கும்
2. காட்சி அமைப்பு இப்படி இருந்திருக்கலாமே என்ற எண்ணத்தை நமக்கு உண்டாக்கியும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.

பூ : தான் விரும்பியவனின் வாழ்க்கை நன்றாக அமையவில்லை என்று தெரிந்ததும், மனம் நொந்து, அடக்கமுடியாமல் "ஓ வென்று அழும் காட்சி....... " அந்த கடைசி சில நிமிடங்களில் அந்த பெண்ணை போலவே, அவன் திருமணத்திற்கு பின் சுகமாக இருக்கிறான் என்ற நம்மின் எதிர்பார்ப்பு பொய்யாகிறது. இந்த பெண்ணும் இனி நிம்மதியாக இருக்க மாட்டாளே ! என்ற தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.......

ஆனந்த தாண்டவம் : அந்த கடைசி கெஞ்சலில் அந்த பெண்ணிற்கு அவன் வாழ்வளித்திருந்தால், அவள் இறந்திருக்க மாட்டாள், கடைசியாக அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க ஏன் எல்லோரும் மறந்து போனார்கள் என்று தொக்கி நிற்கும் கேள்வி...... ஏன் இப்படி அனைவரும் சுயநலமாக இருந்து ஒரு உயிரின் இழப்பிற்கு காரணமானார்கள்......... அதுவும் அந்த பெண்ணை விரும்பியவன்.." சாரி" சொல்லி சென்றது... .....ம்ம்ம்ம்...:((((( இது தான் தாக்கம்...

சேது : இவ்வளவு சோகம், வலி வேண்டாமே என்று இன்றும் நினைக்கவைத்த படம்

பிதாமகன் : இதுவும் அப்படியே, சூர்யாவை சாக அடித்து இருக்க வேண்டாம் ..ஒருவரின் பாசத்தைக்காட்ட மற்றொருவரை சாகத்தான் அடிக்க வேண்டுமா என்ற கேள்வியோடு...

அன்பே சிவம் ; தனி மனிதனின் தியாகமும் அவனின் ஆசாபாசங்கள் அத்தனையும் மறுக்கப்பட்ட, அவனாலேயே மறைக்கப்பட்ட தொடர்கதை... தியாகிகள் எப்போதும் இப்படித்தான் தங்களின் வாழ்க்கையை தொடரவேண்டுமா என்ற கேள்வியோடு...

நந்தா : பாலா;வின் திரைப்படங்களில் மற்றொருமொரு சோகமான க்ளைமாக்ஸ்... ஏன் பாலாவிற்கு யாரும் சந்தோஷமாக வாழ்ந்தால் பிடிக்காதா என்ற கேள்வியுடன் ....

கல்கி : பாலச்சந்தர் அவர்களின் படங்களில் மிகவும் பிடிக்காத படங்களில் ஒன்று இது. என்ன ஒரு மோசமான கதை... க்ளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ள முடியாததற்கு காரணம் நம் கலாசாரம் அல்ல, ஒருவரை இப்படித்தான் தண்டிக்க வேண்டும் என்று எடுத்த முடிவு முட்டாள்தனமானது... அப்படி ஒரு ஆணிடம் இருந்து தான் குழந்தை பெற்று... அவனால் வாழ்க்கையை இழந்த குழந்தை இல்லாத இன்னொரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டுமா? இந்த படத்தில் க்ளைமாக்ஸ் மட்டும் இல்லை எதுவுமே ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லாததால் ஏற்பட்ட தாக்கம்...

உதிரிப்பூக்கள் : இப்பவும் எப்பவும் மிகவும் பிடித்த க்ளைமாக்ஸ், தன்னை உணர்ந்து, விஜயன் கதாபாத்திரம் தானே தன் முடிவை தேடிக்கொள்வது. அதை ஊர் சனம் அத்தனையும் நின்று வேடிக்கை பார்ப்பது. இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு ஒரு சல்யூட். "நான் ஒருவன் கெட்டவனாக இருந்ததால் நல்லவர்களான உங்களை எல்லோரையும் இன்று கெட்டவர்களாக்கிவிட்டேன் " என்ற *வசனம் எனக்கு இதில் மிகவும் பிடித்தது. (*வார்த்தைகளில் தவறிருக்கலாம் எப்பவோ பார்த்தப்படம்)

சிந்துபைரவி : குழந்தை இல்லா பெண்ணிற்கு இன்னொரு பெண் தியாகியாகி குழந்தை பெற்றுத்தரும் இயந்திரமாக (மட்டும்) ஆக்கப்பட்ட மற்றுமொருப்படம். இந்த தியாகி என்ற பெண்ணிற்கு ஆசைகள், எதிர்பார்ப்புகள், எதிர்கால வாழ்க்கை என்று ஒன்றுமே இல்லையா?...இல்லை இருக்காதா..?. என்னவோ.. புதுமை படைக்கிறேன் என்ற இவரின் படங்களில் பல எரிச்சல்களை எற்படுத்தியவை. இதிலும் அப்படி ஒரு க்ளைமாக்ஸ் ..மேல் சொன்ன கேள்விகளுடன்...

காஞ்சிபுரம் : க்ளைமாக்ஸ்'ஸில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரமும் இறந்துபோவார் என்று நினைத்தேன்.... இப்பவும் அவர் ஏன் இறக்கவில்லை என்ற கேள்வி தொக்கி நிற்கிறது, மகளை கொன்றுவிட்ட பிறகு, மகள் மட்டுமே வாழ்க்கை என்ற அவருக்கு ஏது (அ) எது இனி வாழ்க்கை? இயக்குனர், அதை ஏன் யோசிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துக்கொண்டே இருக்கிறது. இப்படி பைத்தியம் ஆக்கி படத்தை முடிக்க வேண்டுமா?

சிறைச்சாலை : பொய்யான காத்திருப்பு... சுத்தமாக பிடிக்கவில்லை..ஏன் இப்படி? பொய்யான காத்திருப்புகளுக்கு முடிவு இல்லையா... ? ஒருவர் மேல் வைத்திருக்கும் ஆழமான அன்பு நம்மை சிந்திக்க வைக்காமல் செய்துவிடுகிறதா? சிந்திக்க முடியாமல், பைத்தியம் போல் ஆக்கி கொண்டால் மனிதனின் அறிவுக்கு வேலை இல்லாமல் போகுமே... :((. என்னவோ இந்த க்ளைமாக்ஸும் ஏன் இப்படி என்ற கேள்வியோடு நிற்கிறது...

மின்சாரக்கனவு : நிஜமாகவே எதிர்பார்க்காத முடிவு, அரவிந்த்சாமி கதாபாத்திரம் சாமியார் ஆனது.. :)))))))) வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதற்கு உதாரணம் ... ஏன் காதல் தோல்வி இப்படித்தான் முடியவேண்டுமா என்ற கேள்வியோடு...

நான் கடவுள் : படம் இன்னமும் பார்க்கவில்லை.. பார்த்திருந்தால் நிறைய எழுத இருக்குமென்று நினைக்கிறேன்... பாலாவின் படமாயிற்றே.... . ?! :)

பதிவின் க்ளைமாக்ஸ் : இன்னமும் நிறைய நிறைய படங்கள் இருக்கின்றன... நினைவில் என்றும் இருப்பவை போல எழுதும் போது நினைவில் வந்தவை இவை மட்டுமே...

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்..... .அம்மணி க்கு மட்டும் க்ளைமாக்ஸ்'ஸே வர மாட்டேங்குது.... நானும் எதிர் பாத்து எதிர் பாத்து ஏமாந்து போறேன்.... :(((

பீட்டர் தாத்ஸ் :“It was a great movie, but I didn't think it was going to end like that,”

எது சுதந்திரம்....

பெண் - என்று தனியாக எடுத்துக்கொண்டால்,

1. அதிக சுதந்திரம்
2. சரியாக அறியப்பட்டு, புரியப்பட்டு நடைமுறை படுத்திக்கொள்ளும் சுதந்திரம்
3. சுதந்திரம் - அப்படீன்னா?

இந்தியாவை பொறுத்தவரை இந்த மூன்றும் எல்லா காலக்கட்டங்களிலும் இருப்பதாக தெரிகிறது. அதிக சுதந்திரம் எடுத்துக்கொண்டு அழிந்து போன பெண்கள் உண்டு, இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் சுதந்திரம் அவளை சுற்றியுள்ள அத்தனை பேரையும் பாதிக்கிறது என்பது அறியப்பட்ட ஒற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. எங்கேயோ படித்த நினைவு-

பெண்களை ஆண்கள் காவல் புரிவதால்
பெண்மை தாழ்ந்ததன்று.
வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது.
தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா?
- வாரியார்

"அவள் அப்படித்தான்" படத்தில் நடிகை சரிதா வை (என்ற கதாபாத்திரத்தை) திருமணம் செய்து கொண்டுவரும் கலைஞானி 'யின் முன்னாள் காதலியான ஸ்ரீபிரியா (என்ற கதாப்பாத்திரம்), கேட்பார் "பெண் சுதந்திரத்தை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க? " அதற்கு சரிதா மிகவும் யதார்த்தமாக கேட்பார் "அப்படின்னா?"

ரொம்பவும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்,

தேவைகள் என்பது அவரவரை பொறுத்தது, சுதந்திரம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, (இதிலும் சிக்கல் உள்ளது, எது சுதந்திரம் என்ற புரிதலோடு் சிலரும், புரிதல் இல்லாமல் பலரும்) அது பெரிய விஷயமாகவும் போராடி பெற்று நிலை நிறுத்தி வெற்றியை கொண்டாட வேண்டிய விஷயமாக இருக்கிறது

அது என்னவென்றே தெரியாமல், வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக அனுபவிப்பவர்களும் உண்டு. அதற்காக அந்த பெண் முட்டாள் அறியாமையில் உழல்பவள் அவளுக்கு உலகம் தெரியவில்லை என்று நினைக்கவேண்டியதில்லை, அப்படி நினைத்தால் அது வெளியிலிருந்து பார்ப்பவர்களின் மனப்பிதற்றல்கள் எனலாம்.

எல்லாம் தெரிந்தும், இது தான் என் வாழ்க்கை நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வட்டத்துக்குள் இருப்பவர்களுக்கும் சுதந்திரம் என்பது அந்த வட்டத்துக்குள் ஆரம்பித்தும், தொடர்ந்தும், முடிந்தும் விடுகிறது.

ஆக சுதந்திரத்தை எப்படி எடுத்துக்கொள்கிறோம் எப்படி பார்க்கிறோம், தனி நபர் நடைமுறை வாழ்க்கையில் அது எவ்வளவு எப்படி தேவைப்படுகிறது என்பது அவரவரை பொறுத்தது. வெளியில் நின்றுக்கொண்டு வீர ஆவேசமாக இது தான் "பெண் சுதந்திரம்" என்று கூச்சலிடவும், அறிவுறத்தவும், கோபப்பட்டு பொங்கி எழுதலும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒற்றுவராது.

"நீ நல்லா இருக்கியா ..சந்தோஷம்.. .நான் நல்லா இருக்கேனா... சந்தோஷம்...!! " இது தான் தாங்க வாழ்க்கை.... இதுல சுதந்திரம் எங்க இருக்கு எப்படி இருக்குன்னு நீங்களே தெரிஞ்சிகோங்க... புரிஞ்சிக்கோங்க... ... :)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


விகடனுக்காக எழுதியது -
http://youthful.vikatan.com/youth/india63/index.asp
http://youthful.vikatan.com/youth/india63/kavitha15082009.asp

நன்றி -சிபி
நன்றி - விகடன்


!!! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் !!!!


.

கிருஷ்ணர் ரொம்பவே பாவம் தான்... :) கேட்டுத்தான் ஆகனும்..!!

இன்று கிருஷ்ண ஜெயந்தி... .. கிருஷ்ணனின் கவனத்தை என் பக்கம் திருப்ப இதை விட நல்ல ஐடியா எனக்கு கிடைக்கவில்லை :))))))))..அவர் ரொம்ப பாவம் தான் ஆனாலும் அதை எல்லாம் பார்த்தால் நடக்குமா?

பார்வைகள் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கர்நாடக சங்கீத பாடல் பதிவிடுகிறேன். என்ன சொல்ல வரேன்னா....

நான் முறையாக சங்கீதம் பயிலவில்லை.. .., முயற்சி செய்தும்.. உருப்படியாக பாட்டு கத்துக்கல... ஸ்வர வரிசை தாண்டியது இல்லை... அது என்னவோ என்ன மாயமோ...தெரியல.... பாட்டு ஆரம்பிக்கறதுக்குள்ள நான் வகுப்புக்கு போவதை நிறுத்திவிடுவேன் :))

இசையின் அரசி பாடிய இந்த பாடலை அடிக்கடி கேட்கும் பழக்கம் எனக்குண்டு, கேட்டு கேட்டு மண்டையில் ஏற்றி ஏதோ பாடி இருக்கேன்.

குறை ஒன்றும் இல்லை !!



தாளம், ....ம்ம்.. ..ராகம்.. ம்ம்.. எல்லாமே கேட்டு கேட்டு பாடியது தான்... சங்கீதம் பயின்றவர்கள் போன்று பாடி இருக்க வாய்பில்லை. ஏதோ முயற்சி செய்து இருக்கிறேன். சங்கீதம் பயின்றவர்கள் குறையை சுட்டி க்காட்டினால் திருத்திக்கொள்ளகிறேன்.

அணில்குட்டிஅனிதா :................... திருத்தி??!!!! என்ன செய்ய போறீங்க.. திருப்பி பாட போறீங்களா கவி... ?!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !! மக்கா....... உங்களுக்கு எல்லாம் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் கேட்டுக்கோங்க..அம்மணி கேட்டாங்களேன்னு யாராச்சும் குறை இருக்கு..... தாளம் இங்க நொல்ல அங்க நொட்ட ன்னு சொல்லி... அம்மணிய உசுப்பேத்தி இன்னொரு முறை பாட வச்சிங்க... நான் ச்சும்மா இருக்க மாட்டேன்..சொல்லிட்டேன்...... ... நான் என்ன செய்வேன்ன்னு எனக்கே தெரியாது சொல்லிட்டேன் ஆம்ம்மா.......... என்னைய டென்ஜன் ஆக்கிடாதிங்க.. :((

பீட்டர் தாத்ஸ் : “Music is enough for a lifetime, but a lifetime is not enough for music”

ப்ளாகர் சிலரை பற்றிய கவிதைகள்...

என்னால் முடிந்த, எனக்கு தெரிந்த, புரிந்ததை எழுதி இருக்கிறேன்.... தப்பு எவ்வளவு இருக்கோ அவ்வளவு போக மீதமுள்ள பொற்காசுகளை எனக்கு எல்லாரும் தனித்தனியா கொடுங்க... நோ குரூப்பிசம் என்டர்டயிண்டு..ஹியர்..!!

அப்புறம்... அந்த ஆட்டோ ஆட்டோ ன்னு சொல்றாங்களே..அதை பத்தி எல்லாம் உங்க யாருக்கும் இது வரைக்கும் தெரியாதுன்னு கேள்விப்பட்டேன்.. :) நிஜமா உங்களுக்கு எல்லாம் தெரியாது தானே ?!! ம்ம்ம் அது..!! அப்படியே மெயின்டெயின் செய்துக்கோங்க.... சரியா ..:)))

சந்தோஷத்துடன் சந்தோஷ்' லிருந்து ஆரம்பிக்கிறேன்..

அமைதிக்கு
மறுபெயர்
சாந்தி..சாந்தி சாந்தி... (சே...!!).
சந்தோஷ்...சந்தோஷ்...சந்தோஷ்.... !!
ஆனால்
நீ
பொங்கிவிட்டால்
பூமி
இல்லை...
நாங்களும்
நடுங்கிபோகிறோம் ...!!

**********
தலை கனத்தோடு
உன்
பக்கம் வந்தால்
தலைதெறிக்க
ஓட வைக்கிறாய்
உன்
ந(க்கல்)கைச்சுவை
எழுத்துக்களால்......!!

@@@@@@@@@@@@@@@@@@@@

முல்ஸ்

பப்பு
இல்லையென்றால்
உன்
பதிவுகள் இல்லை !!

பப்பு
நீ
எப்போது விழிக்க போகிறாய் ?
நாங்கள்
எப்போது
தப்பிக்க போகிறோம்... ?

****
எப்போதும்
உன்
கைகளில்
துண்டு காகிதம், கத்திரி,கலர்கள், கேமரா
ம்ம்ம்.ம்ம்ம்ம்..............
நீ
எதை
வேண்டுமானாலும்
வச்சி'க்கோ......ஆச்சி......
ஆனால்
எங்களையும்
பப்புவையும்
பத்தி
கொஞ்சமா
யோசிச்சிக்கோ..மச்சி....!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சிபி
ஸ்ஸ்ஸ்ஸ்.........
உன்
எதிர்கவிதைகளால்
என்
கவிதைகள்
பிரபலம் ..
ஹை........
நானும் பிரபலமாயிட்டேன்....

***
உன்
கலாய்த்தல்
பின்னூட்டம்
இல்லாத
என் பதிவுகள்
ஏதோ
ஒன்றை இழந்தது
போல..............!!

***
என்ன
பேசினாலும்
எப்படி
பேசினாலும்
சிரிக்கவைக்கிறாய்..

நீ
சுவாசிப்பது
என்ன
* N2O வா?

*N2O= Nitrous oxide, happy gas/laughing gas

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஜமால்


யூ த ஃப்ஸ்டூ !!

முடிவுகளை
பற்றி
உனக்கு
கவலையில்லை
எப்போதும்
நீ
ஆரம்பம்.... :)

@@@@@@@@@@@@@@@@@@@@

ஹே ராம்

டீச்சர்
வணக்கம்
டீச்சர்..!

குட்மார்னிங் டீச்சர் !!
குட் ஆஃப்டர்னூன் டீச்சர் !!
குட் ஈவினிங் டீச்சர் !!
குட் நைட்..டீச்சர் !!

டீச்சர்.ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............

அவ்வ்வ்வ்வ்வ்......இதுக்கு மேல எழுத வரல.....டீச்சர்'ஐ பாத்தாவே ஒரே பயம் பயம்மாஆஆஆ இருக்கு....!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சாக்லேட்

அன்பினால்
கட்டி
போடுபவன்
அது
எதுவரை
என்பதை புரிந்தவன்
அதுவரையில்
அதை
நிறுத்தியும் வைப்பவன் :)

இசைஞானி' க்கும்
இவனுக்கும்
என்ன
சம்பந்தம் ??

இதுவரை
எனக்கு
தெரியவில்லை..
உங்களுக்கு
தெரியுமா?

@@@@@@@@@@@@@@@@@@@@@

ரவி

இணையத்தின்
இம்சை !!

இளகிய
மனதோடு
எல்லோர்
இதயத்திலும்
ஒரு
ஓரத்தில்
இடம்
பிடித்தவன்... :)

@@@@@@@@@@@@@@@@@@@@@@

கிருஷ்ணா - லக்கி

உள்ளிருக்கும்
அவனில்
நீங்காத
நல்லவன்
இருக்கிறான்

சில
எழுத்துக்களில்
ஏனோ
எகத்தாளம்
தூக்கல்.!!

ஏனென்று
விடைக்கான
அவனால்
மட்டுமே முடியும்..

அன்பான
ராட்சஷன்.. !!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குசும்பன்

உன்
பதிவுகளில்
பெயர்
மாற்றங்கள்
அருமை....

குசும்பன்' ஐ
கூட
பசும் பொன் !!!
என்று
சொல்லலாமோ?!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பிரபா - தெக்கிக்காட்டான்

நீ
பேசாதவரை
நாங்கள்
தப்பித்தோம்

நீ
பேச ஆரம்பித்தாலே............
கடவுள்
பஞ்சியை
கொடுத்ததின்
நோக்கம்
விளங்கிவிடும்... !!

(ஹி ஹி..நீ பேச ஆரம்பித்தாலே நாங்கள் பஞ்சியை காதில் அடைத்துவிடுவோமே.... )

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

முத்துலெட்சுமி

முத்தான
உன் பேச்சை
கேட்டபிறகு
ஏனோ
உன் எழுத்துக்களில்
முத்தில்லாதது
போன்ற
உணர்வு...........

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

புனிதா

நீ
பிழியும் சோக கவிதை
கண்டு
நிறுத்திவிட்டேன்
என்
சோகத்தை
பிழிய....

@@@@@@@@@@@@@@@@@@@@@

உண்மை தமிழன்

ரிப்பன்.........
பட்டத்து வால்............
ஜெட்' விட்டு சென்ற புகை...........
மாநகர இரண்டு கோச் பேரூந்து.........
மெரினா கடற்கரை.........

இப்படி
நீளமாக எதை பார்த்தாலும்
உன் பதிவுகள்
நினைவுக்கு வருகிறதே முருகா !!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சிவா

"ஏதோ சொல்கிறேன்"
என்று...
எதையாவது
சொல்லாமல்
இது' தான்
என்று
சொல்பவன்..!!

(மன)
ஆழத்தை கடக்க
அசரும்
போதெல்லாம்...
இரண்டொரு வார்த்தையில்
எளிதாக
கடக்க வைப்பவன்..

எதையும்
"இல்லை" யென
சொல்லாத
உன் புன்னகை'யும்
உன் நட்பும்..

நான் பெற்றது
கடவுள்
எனக்களித்த
ஒரு வரம் ..!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அணில் குட்டி அனிதா : பொற்காசு கலக்ட் பண்ண இப்படி ஒரு வழியா.. அம்மணி சோத்துக்கு சிங்கி அடிக்கறாங்களோ....??? இப்படி டீசன்ட் பிச்ச ஆரம்பிச்சிட்டாங்க.... ஏதோ பாத்து போடுங்கப்பா தட்டுல... :)))))

பீட்டர் தாத்ஸ் : Know yourself, master yourself, conquest of self is most gratifying.”

வீட்டை விட்டு.........

வந்தாகிவிட்டது.. எத்தனை வருட கனவு.. இத்தனை வருடங்கள் கழித்து நிறைவேறும் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால் நடந்துவிட்டது. சுதந்திரக்காற்றை சுவாசிக்கலாம், சுதந்திரமாக சிந்திக்கலாம், பேசலாம், சிரிக்கலாம், அழலாம், மனம் சொல்வதை மட்டும் கேட்கலாம்... இந்த சுதந்திரக்காற்று எத்தனை சுகமாக இருக்கிறது.... ஒரு முறை அடிவயிற்றுவரை காற்றை உள்ளிழுத்து சுவாசி்க்கிறாள் சுவாதி. அவள் கையை ஒரு முறை கிள்ளி பார்த்துக்கொள்கிறாள் ..உண்மைதான்....வந்தாகிவிட்டாது.

ஆயிற்று, ஏழு மணிக்கு ரயில், 6.45 க்கு வந்திவிட்டேன். லோயர் பர்த், 2ஆவது ஏசி கோச், லக்கேஜ் அரேன்ஜ் செய்துவிட்டு, டிக்கெட்''டை ஒரு முறை செக் செய்துவிட்டு, செக்கர் வந்தால் டிக்கெட் டை எடுக்க வசதியாக கைப்பையின் சைட் சிப்'பில் வைத்துக்கொண்டேன். கொஞ்சம் ரிலேக்ஸாக பின்னால் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடி... நடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பி பார்க்கிறேன். என்னவோ சொல்ல முடியாத ஒரு பயம் கவ்வுகிறது..... அய்யோ.....ஏன் இது? வேண்டாமே.....கண்விழித்து நேராக உட்காருகிறேன். இல்லை...இனி எதையும் திரும்பி பார்க்கக்கூடாது. இந்த நிமிடம் எனக்கு சொந்தம், இதை மட்டும் யோசிக்கவேண்டும். இதை மட்டும் ரசிக்க வேண்டும்.

என்னவோ என் முகம் ரொம்பவும் இறுக்கமாக இருந்தது. இப்படி ஆகி, ஆக்கப்பட்டு பல வருடங்கள் ஆயிற்று. சிரிக்க வேண்டுமென நினைக்கும் போது எல்லாம் சுற்றி இருப்பவர்களின் வார்த்தைகள் முகத்தை சிரிக்க விடாமல் இறுக்கிவிடும். எங்கே சென்றது என் புன்னகை ? எப்போதும் யாரை பார்த்தாலும் அப்பழுக்கின்றி சிரிக்கும் என் முகம் எங்கே போயிற்று? என் சிரிப்பு அத்தனையும் சுரண்டி எடுத்துவிட்டு, என் முகத்தை மட்டுமல்ல என் மனதையும் இப்படி ஆக்கியது யார்? வெளியில் இருப்பவர்களா இல்லை எனக்குள் இருக்கும் நானா?

இமைகள் உயர்த்தி யார் தன்னுடன் பிரயாணம் செய்கிறார்கள் என்று பார்க்க தோன்றவில்லை. பார்த்து என்ன செய்ய போகிறேன். அவர்கள் ஓவ்வொருவரின் புன்னகையிலும் ஏதோ ஒரு பொய் ஒட்டிக்கொண்டு இருக்கும். உதட்டோர சிரிப்போடு, எங்கே போகிறேன் என்று இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டால் மட்டும் என்ன செய்ய போகிறார்கள்?. இத்தனை வருடங்களாக நான் இழந்தவிட்டதை திருப்பி கொடுத்துவிடுவார்களா? இல்லை நீ போகாதே உனக்கு தேவையானதை நாங்கள் செய்கிறோம் என்று சொல்ல போகிறார்களா? அப்படி சொல்லத்தான் இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இல்லை அல்லவா? அப்படி இருக்க ஏன் இவர்களிடம் என்னைப்பற்றி சொல்ல வேண்டும். ஒருவரையும் பார்க்க பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட எத்தனையோ பேர் என்னின் இந்த முடிவிற்கு காரணம். சக மனிதர்களின் போலி சிரிப்பில் இனியும் என்னை ஏமாற்றிக்கொள்ள நான் தயாராக இல்லை. போதும் ..போதும் என்கிற அளவு இந்த பொய்யான பேச்சையும் சிரிப்பையும் புன்னகையையும் பார்த்தாகிவிட்டது.

போதுமான பணம் பேங்கில் இருக்கிறது, ப்ளான் செய்த படி எல்லாம் சரியாக நடக்கிறது. எப்படியும் இரண்டு நாட்களில் போய் சேர்ந்துவிடுவேன். ம்ம்..... எதிர்பார்த்த என் வாழ்க்கையின் ஒரே ஒரு ஆசை இது... ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் ஆசைப்பட்டது முதல் முறையாக நடக்கிறது. இதோ ரயில் புறப்பட்டு விட்டது. இனி யாரும் என்னை தடுக்க முடியாது. என் ஆசை நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில், இறுக்குமான என் முகம் லேசாக தளர்ந்தது. அங்கேயும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? மீண்டும் முகம் இறுகியது. மீண்டும் அப்படிப்பட்ட மனிதர்களை தான் சந்திக்க போகிறேனா? எங்கே சென்றாலும் இவர்கள் நிழலை போன்று துரத்திக்கொண்டு தான் வருவார்களோ?.

"டீ..டீ டீ....காப்பி.காப்பி......." ஒருவர் விற்றுக்கொண்டு சென்றார்...

எங்கேயோ சுற்றிக்கொண்டிருந்த என் மனம் சுற்றுவதை நிறுத்தி, சற்றே இந்த சத்தத்தினை கவனிக்க ஆரம்பித்தது.

பின்னாலேயே...."டின்னர் ஆர்டர் ப்ளீஸ்".மற்றொருவர் சின்ன நோட்டோடு வந்தார்.

"என்ன இருக்கு" ...... நான்

"சப்பாத்தி, ரோட்டி & மீல்ஸ் மேடம், வெஜ் ஆர் நாந்வெஜ்?"

அங்கே போனால் கண்டிப்பாக வெஜ் தான்... ஏன் இப்ப நாந்வெஜ் சாப்பிட்டால் என்ன? ........... ஒன் நாந்வெஜ் மீல்ஸ் ...ப்ளீஸ்! சீட் நம்பர் 32"

எழுதிவிட்டு கடந்து சென்றுவிட்டான்.

படிக்க நிறைய புத்தகங்கள் எடுத்துவந்தேன். அவற்றில் சில வாழ்க்கையின் தத்துவங்கள், தன்னம்பிக்கையை அள்ளித்தரும் புத்தகங்கள். வாழ்க்கையின் தத்துவங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை எடுத்தேன்... என்னவோ அந்த புத்தகத்தை எடுத்தவுடன், எனக்குள் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது. சிரிக்க முடியவில்லை, எல்லோரும் என்னை திரும்பி பார்ப்பார்கள், பைத்தியக்காரி என்று பட்டம் சூட்டுவார்கள். அவரவர் வேலையை தவிர அடுத்தவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதே பலருக்கு இங்கே வேலை. இவர்களுக்கு மத்தியில் எல்லோரையும் போல் நானும் நடிக்க வேண்டும். ஆனால் என் சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. மனதுக்குள் சத்தம் போட்டு சிரித்தேன். என் வாழ்க்கையை கொண்டு இப்படி ஓராயிரம் தத்தவ புத்தகங்கள் என்னால் கூட எழுத முடியும். ம்ம்ம்.... எழுதத்தான் போகிறேன். அவற்றை எல்லாம் விற்று பெரிய பணக்காரி ஆகப்போகிறேன். என் சிரிப்பை என்னால் இன்னமும் அடக்க முடியவில்லை. சிரித்துக்கொண்டே இருந்தேன். கண்களில் லேசாக தண்ணீர் வர ஆரம்பித்தது. யாரும் அறியாமல் துடைத்து, சுவாதி போதுமே சிரித்தது..எனக்குள் நானே சொல்லிக்கொண்டு சிரிப்பை அடக்கினேன்.

மனம் எதை எதையோ யோசித்தது. கண்ணை மூடி மனம் சொல்லுவதையும், அது போகின்ற வழியையும் கவனமாக கவனிக்க ஆயத்தமானேன். வேகமாக பறந்தது.....ஏழு கடல் ஏழு மலை தாண்டி..சென்றது.... இதோ...ஆப்பிரிக்க காடுகள்......வந்துவிட்டன..... காடுகளுக்குள் என்னை அழைத்து சென்றது. பச்சை பசேலென்ற அந்த காட்டில், பூக்களை, இலைகளை உரசிவரும் காற்றில் ஏதோ ஒரு சொல்ல முடியாத ஆனால் சுகமான வாசனை என்னை தழுவி சென்றது. லேசாக வழுக்கும் குறுகிய பாதையில் மழை ஓய்ந்த அந்த காலை நேரத்தில் ஈர இலைகள் என் உடலை நனைக்க நான் மட்டும் தனியாக சென்று கொண்டே இருந்தேன்....

நத்தை ஒன்று என் காலடி ஓசையில் பயந்து உடம்பை உள்ளே இழுத்துக்கொண்டது. எனக்கும் இப்படி ஒரு ஷெல் இருந்தால்?, என் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.... ....ஷெல் இருந்தால்.....??!!!! , பிரச்சனை வரும் போது எல்லாம் உள்ளே போயி புகுந்து க்கொண்டு என்னை காப்பாற்றிக்கொள்ளலாம். அதற்கு நான் நத்தையாக இருந்து இருக்கலாம், சுவாதி'யாக இருந்து இருக்க வேண்டாமே.... ...

பாம்பு ஒன்று வேகமாக கடந்து சென்றது...பயமொன்றும் எனக்கில்லை. என்னை பார்த்து பாம்பிற்கும் கண்டிப்பாக பயம் இருக்கும், நான் ஏன் அதைப்பார்த்து பயப்படவேண்டும்.? .....

எங்கே செல்கிறேன் என்று தெரியாத ஒரு நீண்ட பயணம்... அந்த ஒற்றையடி பாதை போயிக்கொண்டே இருக்கிறது. மரங்கள் கடந்து வெறும் பூக்கள் மட்டுமே உள்ள பூமி வருகிறது.."மேலே வானம் !! கீழே பூக்கள். !!" வேறு ஒன்றுமே அங்கு இல்லை. ஆஹா எத்தனை அழகு.!! என் கண்களை கடவுள் இதற்காக தான் படைத்தானோ.... அப்படியே சிலையாக நின்று கண்ணுக்கு எட்டிய அளவு பூக்கக்களின் வண்ணங்களையும், வாசனையும் ரசிக்கிறேன். இந்த பூக்கள் அத்தனையும் இந்த நொடி எனக்கு மட்டுமே சொந்தம்... நினைக்கும் போதே பொங்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை....என் முகமும் அந்த பூக்ககளை போல் மலர்ந்து சிரிக்கிறது.

படப்படவென பறந்து வந்து அமரும் வண்ணத்துப்பூச்சி... ..........பட்டாம்பூச்சி' யா? வண்ணத்துப்பூச்சி'யா?........................... பட்டாம்பூச்சி .................... பட்டாம்பூச்சி........... பட்டாம்பூச்சி' யை பார்த்தவுடன்.. நினைவலைகள் எங்கோ ரிவைண்டு செய்த டேப் ரிக்கார்டர் போல பின்னுக்கு இழுத்து செல்கிறது.. ...... போகாதே...! அங்கே போகாதே... !! இங்கேயே இரு..!! இது தான் சுகம்..சந்தோஷம்.... அங்கே போகாதே.. !! அது வேண்டாம்.. !! ... .அதனிடம் போகாதே..!! உன் கண் எதிரில் இருக்கும் வண்ணத்துப்பூச்சியை பார்த்து ரசி.... ! பார்.. உன் கண் முன்னே எத்தனை வண்ணத்து பூச்சிகள்..?? இவை எல்லாமே அதே போல் தான்... எல்லா வண்ணங்களும் இருக்கிறது... பூவீன் மீது அமர்ந்து அழகாக தேனை உறுஞ்சிகிறது..................

நான் சொல்லுவதை மனம் கேட்கவில்லை........மீண்டும் ஓடுகிறது............... வேகமாக பின்னால் நானும் ஓடுகிறேன்.. ...அய்யோ........ நில் செல்லாதே !! ............... .! ... .இங்கேயே நில்....செல்லாதே....... !! இழுத்து பிடிக்கிறேன் மனதை.. மீண்டும் இறுகி போகிறது என் முகம்... ஏன் இப்படி ? சந்தோஷமாக சில நிமிடங்கள் கூட இந்த மனம் விட மறுக்கிறதே ..... ஏன் இப்படி இல்லாத ஒன்றை தேடி ஓடுகிறது. .எதிரில் இருக்கின்ற ஓராயிரம் மலர்களும், அதனை மொய்க்கும் வண்ணத்துப்பூச்சிகளும்.......

"மேடம்.... டின்னர்.... 45 ரூபீஸ்..சேன்ஞ் ப்ளீஸ்....'

சத்தம் என் காதுகளை தொட, ஆப்பிரிக்க காடுகளிலிருந்து ....இதோ இங்கு வந்து குதித்து விட்டேன்.

தட்டை வாங்கிக்கொள்கிறேன்.பணத்தை கொடுக்கும் போது, பசிக்கு நேரத்திற்கு உணவளிக்கும் அவருடைய கண்களை நேராக பார்த்து, புன்னகையோடு.. "தாங்ஸ்...!!"

அவரும் புன்னகைக்கிறார், சென்றுவிட்டார்.

என் சிந்தனை திரும்ப எங்கேயோ செல்லும் முன் சாப்பிட்டுவிடலாம். சாப்பிட ஆரம்பிக்கிறேன். சிக்கன்... கிரேவி..., சிக்கன் கிரேவி....... என் குழந்தைக்கு சிக்கன் பிடிக்குமே... அவனுக்கு கொடுக்காமல் தனியே சாப்பிடுகிறேனே....? எங்கே என் குழந்தை? அவனில்லாம் எப்படி நான் தனியே இருக்கிறேன்? தனியே சாப்பிடுகிறேன்? அவனை விட்டுவிட்டு எப்படி நான் தனியே இங்கே.? அவன் எங்கே? அவனுக்கு சாப்பாடு யார் கொடுப்பார்கள்.?

ரயில் ஏன் இத்தனை வேகமாக போகிறது,... என்னை சுற்றியுள்ளவர்கள் அத்தனை பேரையும் பார்க்கிறேன். எல்லோரும் ருசித்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

எல்லோரையும் பார்த்து, "யாராவது ரயிலை நிறுத்துங்கள், என் குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.... நான் போகவேண்டும். ..நான் திரும்ப போக வேண்டும்...ரயிலை நிறுத்துங்கள்.........." கத்துகிறேன்.... யாரும் நான் கத்துவதை பொருட்படுத்தவில்லை. என்னை கவனிக்க கூட இல்லை. நான் தனியே கத்திக்கொண்டே இருக்கிறேன். "நான் கத்துவது உங்கள் காதில் விழவில்லையா?" ஒரு வேளை நான் கத்துவது அவர்கள் யார் காதிலும் விழவில்லையோ? ஏன் விழவில்லை.? தொண்டையை ஒரு முறை அழுத்தி பார்க்கிறேன். கணைத்துப்பார்க்கிறேன். திரும்பவும் கத்துகிறேன்...

"தயவுசெய்து யாராவது ரயிலை நிறுத்துங்கள்...... என் குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டேன்... ரயிலை நிறுத்துங்கள்...நான் திரும்ப செல்லவேண்டும்...நிறுத்துங்க...ப்ளீஸ்....நிறுத்துங்க.............".எழுந்து ரயிலை நிறுத்தும் சங்கிலியை இழுத்துப்பிடிக்க எட்டுகிறேன்.........அது உயரமாய் இருக்கிறது, எனக்கு எட்டவில்லை......

" நிறுத்துங்க ப்ளீஸ்...யாராவது ரயிலை நிறுத்துங்க.... ப்ளீஸ்..." அழ ஆரம்பிக்கிறேன்...... "

*******************


வெற்றுத்திண்ணை......

தூசிகள் படர்ந்த
வெற்றுத்திண்ணை
சற்றே வேகமாக
கடந்திருக்குமோ வாகனங்கள்


http://iruppu.blogspot.com/2009/07/blog-post_13.html

இராவணன் எழுதிய இந்த கவிதை படித்த போது எனக்கு தோன்றிய சில வரிகள்...... நன்றி இராவணன்.

***************************************
தூசிகள்
படர்ந்த
வெற்றுத்திண்ணையில்
உன் பெயர்
எழுதி...
ரசித்தேன்..!!!


**********************
வாகனங்கள்
கடந்தபின்
தூசிகளை
சுத்தம்
செய்துவிட்டேன்....


**********************
அடுத்த
வாகனம்
எப்போது வருமென
காத்திருக்கிறேன்.........
தூசிகள்
திரும்பவும்
படருமே....!!

***********************
வாகனங்கள்
கடந்து செல்லாமல்
இருக்காது

தூசிகள்
படராமலும்
இருக்காது...

வெற்றுத்திண்ணையாய்
இருப்பது
என் தவறோ.......??!!

****************************

உங்களுக்கு தோன்றுவதையும் சொல்லிவிட்டு செல்லுங்கள்... :)

நவீன் vs கவிதா

கவி : நவீன் என் நீயூ ஃபிரண்டு பாருடா வா...வா.. இங்க.... (பப்புவும் நானும் இருக்கும் போட்டோவை அவனுக்கு காட்டுகிறேன்)

நவீன் :
..............................
................................ (போட்டோவை பார்த்துவிட்டு.. என்னையும் ஒரு மாதிரி பார்த்துவிட்டு திரும்ப சென்று டிவி பார்க்க ஆரம்பித்தான்..)

கவி :
ஏன்ன்டா... மெனக்கேட்டு உன்னை கூப்பிட்டு என் நியூ ஃபிரண்டை காட்டினேன் ஒன்னுமே சொல்லாம போற.... பொறாமை புடிச்சவனே.. !!


நவீன் :
.... ம்ம்ம்ம் .. அவக்கூட இன்னும் கொஞ்ச நாள் ல உன்னை விட வளந்துடுவாம்மா............!!!!

கவி :........... :((((((

************************************************

கவி : (ராத்திரி தூங்க வரும் நவீனை பாத்து )- எனக்கு ஒரு கேள்விடா...

நவீன்... : (நிறைய மொக்கை கேள்விகளை கேட்டு கேட்டு பழக்கமாகி நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பதாலும் வேண்டானாலும் விடாமல் நான் கேட்டே தீருவேன் என்பதாலும் பதில் ஏதும் சொல்லாமல் என் கேள்வி யை மிக கடுப்பாக எதிர் பார்த்துக்கொண்டே படுக்கையை விரித்துக்கொண்டு இருந்தான்...)

கவி : எனக்கு ஒரு பெரிய டவுட்டுடா... இந்த எறும்பு எல்லாம் நைட் ல தூங்குமா? தூங்காதா?...

நவீன் : (இவ்வளவு கேவலமான கேள்விய எதிர்பார்க்காத அவன்... வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்)...ஏம்ம்மா ..ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்.?? ஏன் இப்பூடீஈஈ.?

கவி : டூ யூ திங்க் மை குவஸ்ஸின் ஈஸ் நாட் வேலிட்..........?

நவீன்..: ம்ம்ம்மா.. ராத்திரி மணி 12.20 ஆகுது, இப்படி கேள்வி கேக்கறீயே உனக்கு மனசாட்சியே இல்லையா? என்னை விட்டுடு நான் தூங்கனும்..!!

கவி : :(((((

*****************************************************

கவி : இங்க பாருடா..... வெளி நாடு எல்லாம் போனா அதுவும் பர்டிக்குலரா அமெரிக்கா போனா... அமெரிக்காக்காரிய தயவு செய்து லவ் பண்ணி தொலச்சிடாதடா..........

நவீன் : :)))))))) ஹி ஹி..ஏன் ஒன்ன்னால அந்த அளவு பீட்டர்ல பேச முடியாதுன்னு பயப்படறீயா...

கவி: :((((((((((((((((

**************************************************

கவி : நவீன் ப்ளிஸ்.... எனக்கு wma to mp3 conversion tool எது நல்லதுன்னு கொஞ்சம் ரெஃபர் செய்யேன்..

நவீன் : ஏன் உன்னோட இன்டர்நேஷனல் வெட்டி ப்ளாகர்ஸ் நிறைய பேர் இருப்பாங்களே அவங்களை கேளூ.... நீங்க எல்லாம் இன்டர்நேஷனல் அறிவாளிகளாச்சே....!! ...

கவி : (ஏன் இப்புடி.. ஒரு வேளை என்னைக்காச்சும் ப்ளாகர் எல்லாத்துக்கும் சேத்து வச்சி சப்போர்ட்டி இருப்பேனோ...இவ்வளவு கடுப்பா இருக்கான்...).... ஏண்டா.. உன்னால முடியலன்னா முடியாதுன்னு சொல்லு அதுக்கு எதுக்குடா.. ப்ளாகர்ஸ் எல்லாரையும் திட்டற..

நவீன் : பின்ன நீ வெட்டியா செய்யற வேலைக்கு ஏன் என் உயிரை வாங்கற...!!

**************************************************

கவி : நாங்க எல்லாம் சில்ட்ரன்ஸ் பார்க் போறோமே...

நவீன் : யாரு எல்லாம்?

கவி: நானும் என்னோட ப்ளாகர் பிரண்ட்ஸ்'சும்

நவீன் : ஹி ஹி... ஆல் வெட்டிஸ்' போறோம்னு சொல்லேன்.. ரொம்ப டீஸன்ட்டா ப்ளாகர்ஸ் னு சொல்றே.......

கவி : :((((((((((((((((((((((((((

******************************************************

கவி : நவீன் இன்னும் கொஞ்சம் வளந்துடுடா... இன்னும் ஒரு 2 இன்ச் ஹைட் போதும்.. ...

நவீன் : ம்மா .. நீயும் அப்பாவும் ரொம்ப ஹைட் ன்னு நினைப்பா? உங்க கூட பாக்கும் போது, இவ்வளவு ஹைட் டா நான் வளந்ததே பெரிய விஷயம் இது போதும், அமைதியா இரு..!!

கவி: ப்ளீஸ் டா ரொம்ப இல்ல...இன்னும் 2 இன்ச் போதும்....அதுக்கு தான் இன்னும் உனக்கு நான் காம்ப்ளான் எல்லாம் கொடுக்கறேன்...!!

நவீன் : ஓ..என்னை டீ, காப்பி குடிக்கக்கூடாதுன்னு இம்சை பண்றதுக்கு பின்னால இப்படி ஒரு சதி இருக்கா...? ஏன் என்னை எக்ஸிபிஷன் ல கொண்டு போயீ நிக்க வைச்சி சம்பாதிக்க போறியா?

கவி: :(((((((((((((((

******************************************************

கவி : நவீன் குட்டி உனக்கு என்ன டிபன் வேனும்டீ ?!

நவீன் : என்ன முடியூதோ செய்யிமா..

கவி: இல்ல நீ கேளு நீ என்ன கேக்கறயோ செய்து தரேன்...

நவீன்; சரி உன்னால என்ன செய்து தரமுடியும் மெனு சொல்லு?

கவி :ம்ம்ம்ம்ம்ம்... இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பூரி, சப்பாத்தி, இடியாப்பம்.. பிரட் ஆம்லெட், பிரட் ப்ரென்ச் ப்ரை... நீர் உருண்டை, நூடுல்ஸ், இதை எல்லாம் செய்யமுடியும்..ஆனா ஐ வான்ட் யூ டூ பிரிஃபர் ஒன்லி சம்பா கோதுமை கஞ்சி......

நவீன் : அதானே..அதுக்கு தான் முன்னமே உன்னால என்ன முடியுமோ செய்து தான் னு சொன்னேன்.. உன்னை பத்தி தான் எனக்கு நல்லா தெரியுமே... கிளம்பு கிளம்பு ....ஏரியாவை காலிப்பன்ணு...!!

கவி: :((((((((((((
*************************************************

கவி : டேய் ஜிம் ல "வரலா" (வரலட்சுமி) உன்னை "எருமைமாடு " ன்னு சொன்னாடா... எல்லாரும் சிரிச்சாங்கடா.... :)))) ஹி ஹி .....

நவீன் : நீயெல்லாம் ஒரு தாயா? பெத்த புள்ளைய 'எருமைமாடு' ன்னு சொல்லி இருக்காங்க.... கொஞ்சம் கூட ரோஷப்படாம அவங்க கூட சேந்து நீயூம் சிரிச்சது இல்லாம என்கிட்ட வேற வந்து சொல்ற.. உனக்கு வெக்காமா இல்ல..?

கவி : அட..ஆமா இல்ல... நான் உன்னை பெத்த தாய் ஆச்சே...நான் மறப்பேனா.. அதனால் தான் அவக்கிட்ட சொன்னேன்... "வேணாம் வரலா' நீ எருமைமாடு னு மட்டும் தான் திட்டுவ.... .ஆனா என் புள்ள கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவான்.. அசிங்கம்மா உன்னை திட்டிடுவான்.." ன்னு சொன்னேன் டா.. அதுக்கு அவ.... "ஓ அசிங்கமா வேற திட்டுவானா... அவன் மூஞ்சியில நான் காரி....த்த்தூஊஊஊன்னு துப்பனேன்னு சொல்லுங்க.... இப்படி ஒரு நல்ல தங்கமான அம்மாவுக்கு இவ்வளவு கேவலமான புள்ளையா ன்னு நான் கேட்டேன்னு சொல்லுங்க ன்னு" சொன்னா டா...................

நவீன் :......ம்ம்மா.... இது மட்டும் என்னமோ அவங்க என்னை திட்டினமாதிரி தெரியலையே......... :(((

கவி : :))))))))))) ஹி ஹி......ஹி ஹி....

*************************************************

அணில் குட்டி அனிதா : ............ அம்மணி இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எவ்வளவு அடிப்பட்டாலும்...மாற போறது இல்ல.... இது தேறாத கேஸூ...... :(((

பீட்டர் தாத்ஸ் : “For a mother the project of raising a boy is the most fulfilling project she can hope for. She can watch him, as a child, play the games she was not allowed to play; she can invest in him her ideas, aspirations, ambitions, and values -- or whatever she has left of them; she can watch her son, who came from her flesh and whose life was sustained by her work and devotion, embody her in the world. So while the project of raising a boy is fraught with ambivalence and leads inevitably to bitterness, it is the only project that allows a woman to be -- to be through her son, to live through her son.”

மகளிர் சுய உதவி குழுக்கள்– பாராட்டு, தில்லுமுல்லு, பரிந்துரைகள்

தற்போதைய* ஆட்சியில் மிக அற்புதமான ஒரு திட்டம் இந்த மகளிர் சுய உதவி குழுக்கள். இதனால் பயன்பட்டோர், படுவோர் பல்லாயிரம் பேர். அவர்களில் மகளிர் மட்டும் இல்லை அவர்களை சார்ந்த குடும்பங்களும்.

மகளிர் திட்டத்தில் ஒவ்வொரு குழுவிலும் 20 பேர் அங்க உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு குழுவை நடத்த ஒரு தலைவி, அதற்கு அடுத்து ஒரு பொருளாலர் என்று இருக்கிறார்கள், வாரம் ஒரு முறை குழுக்களில் உள்ள மகளிர் ஒன்று சேர்ந்து கூட்டம் நடத்துகின்றனர், அதில் ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு தலைப்பில் அதை துறை சார்ந்த ஒருவர் பேசுகிறார், அதிலிருந்து விவாதங்கள், பிரச்சனைகளுக்கு வடிகால்கள் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கின்றன.

குறைந்த பட்சம் ரூ.20000/- முதல் அதிக பட்சம் ரூ.1.00.000/- வரை கடன் உதவி கிடைக்கிறது. இது கிராமம் மற்றும் நகராட்சி என தனித்தனி திட்டங்களாக இருக்கின்றன். கிராமங்களுக்கு அதிகபட்ச நல திட்டங்கள் உள்ளன. இந்த கடன்கள் மாத தவணை முறையில் திருப்பி அடைக்க வேண்டும். இதில் உள்ள 20 பேரும் தனித்தனியே தலா ரூ.20000/- கடன் பெற்று உள்ளனர், காரணங்கள் வரவு செலவு நோட்டு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அதை ஒரு முறை அடைத்துவிட்டால், திரும்ப இன்னொரு முறை சுழற்சியாக கடன் வசதி பெறலாம். இதில் கடன் தள்ளுபடி சலுகைகளும் குழுக்கள் வாரியாக அவ்வப்பொழுது அரசு வழங்குகிறது. அதாவது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர் குழுக்கள் சலுகைகள், தள்ளுபடிகள் அதிகம் பெருகின்றன.

இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய பாராட்ட வேண்டிய ஒரு அம்சம், குழந்தைகள் பள்ளிக்கு சென்றதும், கணவன் அலுவலகம் அல்லது வியாபாரம் பார்க்க சென்றதும், ஒன்று கூடி திண்ணையில் அமர்ந்து வெட்டி நியாயமும், ஊர் கதையும், வம்பும் பேசிக்கொண்டிருந்த நம் கிராமத்து, நகரத்து பெண்கள் இப்போது இந்த மகளிர் குழுக்களின் மூலம் தங்களின் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் ஓர் ஒற்றுமை மற்றும் ஒழுங்கை பார்க்க முடிகிறது. (ம்ம்.. ஆனால் நாம் இணையத்தில் அந்த வெட்டி நியாயம் பேசும் வேலையை விடாமல் அழகாக செய்து வருகிறோம்:( )

அனைவரும் ஒன்று போல் சீருடை அணிந்து, மகளிர் குழுவின் மேம்பாடு பற்றி பேசுவதும், வங்கி கணக்கு வழக்குகள்மற்றும், தங்கள் வரவு செலவு , கடன் கணக்குகளை பற்றி பேசுவதும், அதை சரியான முறையில் நீ தான் நான் தான் என்று இல்லாமல் அவரவரும் பொறுப்புடன் கணக்கு வழக்கு நோட்டுகளை அன்றாடம் எழுதி நிரப்பிவிடுவதும், குடும்ப வளர்ச்சிக்கு, குறிப்பாக குழந்தைகளின் கல்வி, வியாபார வளர்ச்சி, அல்லது முதல் முதலீடு, தொழில் சார்ந்த தேவைகள், வீட்டு விஷேஷங்கள், வீடு கட்டுதல் போன்றவற்றிக்கு மகளிர் குழுக்களின் மூலம் கிடைக்கும் வட்டி குறைந்த கடன்களை நல்ல முறையில் பயன்படுத்துதல் போன்றவை நடக்கின்றன.

ஒரு மகளிர் குழுவின் தலைவியை சந்தித்து, அவர்கள் செயற்படுத்தும் திட்டங்கள் பற்றி தெரிந்துகொண்டேன். அதன் பலன்கள், படித்தவர், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லோரும் சரி சமமாக ஒன்று சேர்ந்து, இக்குழுக்களை திறம்பட நடத்திவருவது மிகவும் போற்ற க்கூடிய பெருமைப்படகூடிய ஒன்று. மிக சாதாரணமாக தினமும் அனைவரும் வங்கிக்கு சென்று வருவதும், அது சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் தயக்கமின்றி பேசுவதும், தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதும் எனக்கு சாதாரண விஷயமாக தோன்றவில்லை. நாம் நகரத்து பெண்களுடன் கிராமத்து பெண்களை ஒப்பிட்டு பார்க்கமுடியாது. வீடு, வயக்கால், வயல், சமையல், வெட்டி பேச்சு என்றே காலம் கழித்த இவர்களின் முன்னேற்றம் பார்த்து பிரம்மிக்கும் படியாக உள்ளது.

குறிப்பாக நான் இதற்கு முன் சந்தித்திருந்த பெண்களுக்கும், இப்போது மகளிர் குழுவில் சேர்ந்து தன்னை தானே மேம்படுத்திக்கொண்ட பெண்களுக்கும் வித்தியாசத்தை கண்கூடாக பார்க்க முடிந்தது, வியப்புடன் ரசித்தேன், அவர்களிடமிருந்த அந்த அறியாமை குறைந்துவிட்டதாக எனக்குப்பட்டது, தன்னால் தனியாக எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களின் பேச்சில், செயலில், நடத்தையில் பார்க்க முடிந்தது. இதில் வேலைக்கு போகும் பெண்கள் போன்று ஒரு இயந்திர வாழ்க்கையில் தன்னை புகுத்திக்கொள்ளாமல், சுதந்திரமாக முன்னேறி வருவதாக எனக்குப்பட்டது.

தில்லுமுல்லுகள் :-

1. இதிலும் சிலர் சரியான காரணங்கள் குறிப்பிட்டு கடன்கள் பெறுவதில்லை. இதற்கு வங்கி அதிகாரிகள் முதல் நடு தரகர்கள், குழுவில் இருக்கும் பெண்களும் உடைந்தையாக கூட்டாக செயல் படுகின்றனர்.

2. மேல் சொன்ன தில்லு முல்லுவில் முதலில் இருப்பது, மகளிர் குழு திட்டத்தின் கீழ் வாங்கிய கடனை அதிக வட்டிக்கு வெளியில் கொடுத்து வட்டி தொழில் செய்கிறார்கள். இதற்கு மேற்சொன்னவர்கள் எல்லோருமே காரணம்.

3. பெண்களுக்கே உரிய ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்கின்றனர், அதாவது, இந்த கடன்களை கொண்டு, நகைகள், உடைகள் என பகட்டுக்கும் பயன்படுத்துகின்றனர்.

4. கடன் வசதி வேண்டி வரும் கிராமத்து பெண்களை தகாத முறையில் நடத்த அரசு அதிகாரிகளும், வங்கி அதிகாரிகள் மற்றும் உடன் பெண்களுமே உடந்தையாக இருக்கிறார்கள். இது பெரும்பாலும் கிராமப்புறங்களிலிருந்து வரும் குற்றச்சாட்டுகள்.

இப்படிப்பட்ட செயல்கள் இங்கொன்று அங்கொன்றுமாக இல்லாமல் அடியோடு அழிக்கப்படவேண்டியவை. ஆனால் பெண்களே அதற்கு உடந்தையாக இருக்கும் போது வாயடைந்து நிற்கவேண்டி உள்ளதை மறுக்க முடியாது.

பரிந்துரைகள் :

1. வங்கி கடன்கள் அளிக்கப்படும் போது, சொல்லப்பட்ட காரணத்திற்காகத்தான் பயன்படுத்தப்பட்டதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அரசு சார்ந்த விஷயமாக இருப்பதால் இது நடக்கிறதா என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

2. மகளிர் குழுக்களில் வரும் பணத்திற்காக, மகளிரை கொண்டு பின்னால் இருந்து குடும்பத்தார் தேவையற்ற செலவுகளுக்காக மகளிரை கட்டாயப்படுத்தி, கொடுமைப்படுத்தி பணத்தை பெறுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். அதற்காகத்தான் மேற்சொன்ன கண்காணிப்பு முறையை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படவேண்டும்

3. மகளிர் குழுக்களில் அன்றாட தேவைகளுக்கு கடன் வழங்குவதை நிறுத்திவிட்டு, அவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க நல த்திட்டங்களை அரசு கொண்டு வந்து அதை அமல் படுத்த அவர்களுக்கு கடன் உதவி செய்தால் நலம். இதனால் தொடர்ந்து ஒரு சுழற்சியாக ஒருவரை அடுத்து ஒருவர் என்ற வழக்கமான கடன் முறை மாறி, ஒரு கட்டத்தில் தங்கள் வருமானத்திலேயே அவர்கள் தங்களையும் தன் குடும்பத்தையும் கவனிக்கும் திறனை பெறுவார்கள். அதனால் ஒரு காலக்கட்டத்திற்கு மேல் அரசுக்கும் இதில் முதலீடு செய்ய தேவை இருக்காது, அல்லது அதிகமான அளவு குறைந்து போகும்.

4. சிறுத்தொழில், கல்வி போன்றவற்றிற்கு முன்னுறிமை கொடுத்து கடன் தொகையை அதிகப்படுத்தலாம். சிறுதொழிலுக்கு தேவையான திட்டங்களை /வசதிகளை அரசு/தனியார் துறைகளின் உதவியோடு குழுக்களுக்கு பரிந்துரை செய்யலாம். (இது வரை அப்படி எதுவும் அரசு செய்யவில்லை. பணம் கொடுப்பதை மட்டும் செய்துவருகிறது)

5. தனிப்பட்ட நபர் கடன் எந்த காரணமாக இருந்தாலும் கொடுக்கும் படி செய்யலாம். அதற்கு காரணம் நான் பார்த்தவரை, ஏதோ காரணங்கள் சொல்லி கடன்கள் வாங்கப்பட்டு உள்ளன. சில காரணங்கள் என்னுடைய பார்வையில் இப்படி க்கூட தேவைகள் இருக்குமா என்ற எண்ணத்தை உண்டாக்கியது. அப்போது அந்த காரணங்கள் கடன் வாங்கவே சொல்லப்பட்டவையாக எனக்கு தெரிந்தன. சில சமயங்களில் உண்மையான காரணங்கள் சொன்னால் கடன் இல்லாமல் போகக்கூடும் என்பதால் பொய்யான காரணங்களை கொடுத்து கடன் பெறுகிறார்கள் என்பது மட்டும் இல்லை, ஒரு பொய்யான காரணம் கூறும் போது அதற்கு தேவையான சப்போர்ட் டாகுமென் டுகளும் பொய்யாக தயார் செய்யும் நிர்பந்தத்திற்கு அவர்கள் உட்படுத்தப்படுகின்றனர். அதனால், தனிநபர் கடன் களுக்கான காரணங்களை எதுவாக இருந்தாலும் பரிசீலனை செய்து அரசு கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டும். இதனால் தேவையற்ற ஊழல் குறையும்.

6. குழுக்குளின் தலைமை பொறுப்பை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் மாற்ற வேண்டும். தலைமை மாறும் போது, அந்த தனிப்பட்ட பெண்ணின் தலைமையை பொறுத்து நல்ல பல விஷயங்கள் நடைமுறை படுத்த வாய்ப்பிருக்கிறது. அதற்கான வாய்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்தித்தரவேண்டும்

7. ஒரே ஊரை சார்ந்த மகளிர் குழுக்களுக்கு இடையே போட்டிகள் வைத்து பரிசுகள் கொடுத்து அவர்களை இன்னமும் திறமையாக செயல்பட வைக்க ஊக்கம் கொடுக்கலாம்.

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்.... உருப்படியா ஏதோ மேட்டர்.. அதனால நான் ஒன்னியம் சொல்லாமா இருக்கறது எனக்கு நல்லது...


பீட்டர் தாத்ஸ் : “Ask not what the government can do for you. Ask why it doesn't.”

நான் ஒரு முட்டாளுங்க..

நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்ல படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க

ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
எல்லாம் தெரிஞ்சிருந்து புத்தி சொல்ல வந்தேங்க
நான் ஒரு முட்டாளுங்க


கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய கைதேனு சொன்னாங்க

ஏ..ஏ...ஏ.. கைதே ...டாய்..
கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய கைதேனு சொன்னாங்க

முன்னாலே நின்னாக்க மூஞ்சி மேலே அடிச்சாங்க

பேசாத என்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க

பீச் பீசா கீசாங்க பேஜாரா பூட்டுங்க..

நான் ஒரு முட்டாளுங்க


கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது

பால் கொண்டு போறதெல்லம் ஆல்ரௌண்டா ஓடுது

மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லம் நடக்குது

ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது

நான் ஒரு முட்டாளுங்க


நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க

நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க

ஆன வரை சொன்னெங்க அடிக்க தானே வந்தாங்க

அத்தனையும் சொன்ன என்னை இளிச்ச வாயன் என்னாங்க.

நான் ஒரு முட்டாளுங்க...

பாடல்: நான் ஒரு முட்டாளுங்க..
படம்: சகோதரி.
பாடியவர்: சந்திரபாபு.

இந்த பாடலோடு... ஆரம்பிக்கிறேன்... முட்டாள் என்று உணர்வதும் அதை ஒற்றுக்கொள்ளவும் கூட நம் மனம் பக்குவப்பட்டு இருக்க வேண்டும். அந்த பக்குவத்தை பெற நான் எந்த முயற்சியையும் எடுத்தேனா என்பதை விடவும், என்னை பக்குவப்படவைக்க என்னை சுற்றி நிறைய அறிவாளிகள், சாமர்த்திய சாலிகள், முகம் ஒன்று பேசி புறம் ஒன்று பேசுபவர்கள், வெளியே புன்னகையும் உள்ளே பொறாமை கொண்டவர்களும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள் என்ற நம்பிக்கை 100% இருக்கிறது. :) இவர்களுக்கு மத்தியில் நிச்சயம் நான் ஒரு முட்டாளுங்க.. :)

தெரிந்தும் தெரியாமலும் புரிந்தும் புரியாமலும், இல்லை எல்லாமே புரிந்தும் சாமர்த்தியமாக பல் இளிக்க தெரியாத முட்டாளாகவே என்றும் இருப்பதில் பெருமையே அன்றி சிறுமை இல்லை என்று என்னை அவ்வப்போது பக்குவப்பட வைக்கும் அனைத்து அறிவாளி திலகங்களுக்கும் வந்தனம்..!! வணக்கம்..!! நமஸ்கார்... !!..என்று சொல்லி ஆட்டத்தை ஆரம்பிக்கிறேன்.


அபி' யின் வேலை குறித்து அவளின் அப்பா எழுதிய பதிவை படித்தலிருந்து... என்னவோ மனதில் சொல்ல முடியாத பாரம் அழுத்திக்கொண்டே இருக்கிறது. ஐயா நல்லவர்களே நாலும் தெரிந்தவர்களே, பெண்ணின காவலர்களே பேராற்றல் மிக்க பெருந்தகைகளே.... திருமணம் ஆகும் வரையாவது பெண் குழந்தைகள் சந்தோஷமாக, உடல் வலி மன வலி எதுவும் இன்றி, நேரம் காலம் இன்றி தூங்கி, நன்றாக சாப்பிட்டு,குழந்தை குழந்தையாக சந்தோஷமாக இருக்கட்டுமே.

குழந்தைக்கு உழைப்பின் அருமை தெரியவேண்டும், அவர்களின் உடல் வாகிற்காகவும், நலினத்திற்காகவும்
பெண் குழந்தைகள் கண்டிப்பாக சில வேலைகள் செய்யத்தான் வேண்டும். ஆனால் அப்படி எல்லாம் செய்து எந்த பலனும் இல்லை என்று என் அனுபவம் கூறுகிறது. என் குழந்தை வயிற்றில் இருந்த போது காலை 4-லிருந்து இரவு 9.30 வரை நின்ற கால் நிலை காலாக சுக பிரசவம் ஆக வேண்டும் என்று வேலை வாங்கினார்கள். ஆனால் எனக்கு சுக பிரசவம் ஆகவில்லை. என்னை பிழிந்து எடுத்து வேலை வாங்கியது மட்டுமே மிச்சம். சென்ற நாட்கள் மீண்டும் வாரா.

பொங்கல் தீபாவளிக்கு இரவு விழித்து மேல் தளத்திலிருந்து கீழ் தளம் வரை கூட்டி பெருக்கி கழுவி சுத்தம் செய்து,
பெரிய பெரிய மாக்கோலங்கள் போடுவதும், பொது சேவை செய்கிறாயா என்று வீட்டில் உள்ளவர்கள் திட்ட திட்ட, பழக்கிவிட்ட ஆயாவை திட்டிக்கொண்டே நானும் செய்வதை நிறுத்தாமல் செய்தும் பலனொன்றும் காணேன்.. கதவடைக்கப்பட்ட மற்ற வீடுகளில் பெண்கள் சூரியன் பின்னங்கால்களில் அடித்த பிறகு, பொறுமையாக எழுந்து எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் திபாவளியை கொண்டாடத்தான் செய்கிறார்கள், கோலம் போட்ட என்னை பாரட்டவும் செய்வார்கள். அவர்கள் எல்லாம் என்னைவிடவும் சந்தோஷமாக எளிமையாக நாட்களை நகர்த்துகிறார்கள் என்பதில் சந்தேகம் எதுவம் இல்லை. தன் குடும்பம் தன் வீடு என்று வந்தால் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற பக்குவம் பெற்றவர்களாக தான் இருக்கிறார்கள்.

வேலையும், உழைப்பும், பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தத்துவ பேச்சுகளுடன் கொட்டி கொட்டி வளர்க்கப்பட்ட எனக்கு அப்படி இல்லாத மற்றவர்களை பார்க்கும் போது வெறுத்து போனது வாழ்க்கை தான் அன்றி, வேறில்லை. ஒரு வேளை எனக்கு பொறமையோ..??, பொறாமை பட்டு இருந்தால் அவர்களை போல் என் வாழ்க்கை தரத்தை மாற்றி இருப்பேனே... மாறாக இன்னமும் எப்போதும் வேலை வேலை வேலை...... ஏனென்றால் நான் ஒரு பெண்....இரத்தத்தில் ஊட்டி வளர்த்து இருக்கிறார்கள் நல்லவர்கள். :)

சுகாதாரம், சுத்தம் என்பதே என்ன என்று தெரியாத சோம்பேறிகளும், வெட்டி நியாயம் பேசிக்கொண்டு சிரித்து கும்மாளமிட்டு கொண்டு, அடுக்கடுக்காக பொய்கள் பேசியும் புறம் பேசியும் பொறாமை பட்டும், புது புடவை நகைகள், பொழுது போக்குகள், போதுமான பிடித்த சாப்பாடு என்ற ஊரில் இருக்கும் அத்தனை உணவகங்களிலும் உட்கார்ந்து ஒய்யாரமாக சாப்பிட்டு உடம்பை வளர்த்தும், பணம் பத்தும் செய்யும் என்று பகட்டாக காட்டி, பகல் இரவு பார்க்காமல் ஊர் சுற்றியும், எகத்தால பேச்சும்,ஏளன பேச்சும், எடுந்தெரிந்த வார்த்தைகளும், நடத்தையும் என்று இப்படி இருப்பவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட செயல் படுத்திக்கொள்ள முடியாத பாடம் ஏராளம்....

சந்தோஷமாகத்தானே இருக்கிறார்கள்... இப்படியே இருந்துவிட்டு போகட்டும்... யாருக்கு நஷ்டம்... அவர்களுக்கா இல்லை இந்த நாட்டிற்கா? Bull Shit !! கொடிப்பிடித்தவனும், இன்னமும் கொடிப்பிடிப்பவனும் முட்டாள்கள்... :) முன்னேற வழி தெரியாத மூடர்கள் தான்... :)

ம்ம்....தயவு செய்து குழந்தைகளுக்கு எப்படி சாமர்த்தியமாக இருக்க வேண்டும் என்று மட்டும் கற்றுக்கொடுங்கள். வேறு ஒன்றுமே தேவையில்லை... பிழைத்துக்கொள்வார்கள். நம் சமூகம் அப்படித்தான் வளர்ந்து கொண்டு இருக்கிறது....

ஒன்று சேர்ந்து கும்மி அடிக்கத்தெரியாமல், தனியாக இருந்து இப்படி பதிவு போட்டு.....
அதற்கும் நேரடியாக வந்து திட்டமாட்டார்கள்.. . முதுகுக்கு பின் கூட்டம் கூடி எச்சில் தெறிக்க, இளக்காரமாய் பேசுவார்கள்...

இங்கே வந்து மட்டும் அதையே பேசட்டுமே..... கட்டாயமாக... முகம் கிழிந்து தான் போவார்கள் ............முகமூடி அணிந்தவர்கள் அத்தனை பேரும்.....

அணில் குட்டி அனிதா : அய்யய்ய.... என்னடா இது வம்பா போச்சி.. யாருப்பா அது. .அம்மணிய இப்படி கிளப்பிவிட்டது. .....நல்லா இருங்கப்பா...!!! பாரு... வரும் போதே என்னா சவுண்டு..ன்னு....... முடியல. .அப்படி ஓரமா உக்காந்துக்கிறேன்.. என்னைய கோவத்துல மிதிச்சிடபோறாங்க..

பீட்டர் தாத்ஸ் :-
Four things a woman should know: How to look like a girl, How to act like a lady, How to think like a man, And how to work like a dog”

அவசியம் தேவை - அறிவிப்பு


பார்வைகள் படித்துவரும் அனைவருக்கும் வணக்கம். கீழ் இருக்கும் பட்டியல் வருடம் தோரும் பார்வைகளில் இட்ட இடுகைகளின் எண்ணிக்கை.

2009 - 115+1
2008 - 48
2007 - 40
2006 - 48

ஆக...2009 ல் மட்டும் 115 +1 எழுதிவிட்டேன்.. இன்றைக்கு தான் கவனித்தேன்.. மற்ற வருடங்களை பார்த்தபோது இந்த வருடம் ரொம்பவே அதிகம் னு தோன்றியது...

எனக்கும் கொஞ்சம் எழுத்தில் இருந்து ஓய்வு தேவைன்னு படுது. கொஞ்ச நாட்கள் ப்ளாக் மறந்து, இண்டர்நெட், நண்பர்கள் எல்லாம் மறந்து அமைதியாக இருக்கனும்னு நினைக்கிறேன். அந்த அமைதி அவசியமானதும் கூட.

ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேர் முதல் அதிக பட்சமாக 1000 பேருக்கு மேல் பார்வைகள் பதிவுகளை படித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்களும் நன்றிகளும். எனக்கு இதுவரை ஆதரவு கொடுத்தது போலவே திரும்ப வந்து எழுதும் போதும் கொடுங்கள் !!

தலைவர் பாணியில் வருவேன் ஆனா......எப்ப வருவேன்.. எப்படி வருவேன் னு மட்டும் சொல்ல மாட்டேன்.. வர்ட்டா.... ஹா ஹா..ஹா...!! :))))

அணில் குட்டி அனிதா : அட ப்ளாக் ஒரு 7 1/2 தொல்ல கொஞ்ச நாள் உங்களுக்கு இல்லையா.. ஹை..... எனக்கு ஜாலி.. அம்மணி எழுதற கொடுமைய எல்லாம் நான் தான் முதலில் படிக்கிறேன்... அதனால் எனக்கு தான் பர்ஸ்டு ரீலிப்பூ..

சரி மக்கா இம்புட்டு சொல்லியும் கீழ இருக்கறாப்பல யாராச்சும் அம்மணிக்கு மெயில் அனுப்பனீங்க நானு டெரரு ஆயிடுவேன்... ..

1. மேடம் இருக்கீங்களா செத்துட்டீங்களா?
2. யக்கா.. உடம்புக்கு ஏதும் பிரச்சனையா?
3. கவிதா யாராவது ஏதாவது பிரச்சனை செய்தாங்களா?
4. கவி வாட்ஸ் அப் ரே..?
5. யக்கா ப்ளாக் ஆ எவனா எதாச்சும் செய்தானா சொல்லு.. உலகத்துல நான் எந்த மூலையில் இருந்தாலும் வந்து அவனை கவனிக்கிறேன்..
6. கவிதா என்ன பிரச்சனைன்னு சொன்னீங்கன்னா தீர்த்து வைக்கலாம்..
7. கவிதா என்ன தீடீர்ன்னு?
8. அணிலு ஏதாச்சும் சொல்லிடிச்சா?
9. சரி கவிதா நல்லாயிருங்க.. கீப் இன் டச் சூ..
10. ஹல்லோ டொக் டொக் டொக்..மே ஐ கம் இன்.. எனி ஒன் அட் ஹோம்.. ஆர் யூ ஸ்டில் அலைவ்வ்வ்வ்வ் ?!!

பீட்டர் தாத்ஸ் :- “Sometimes the most urgent thing you can possibly do is take a complete rest”

.

திருட்டு பசங்க திருட்டு பசங்க தான்,,!!

சென்னையில் தனியாக நபர்கள் இருப்பதை கவனித்து, அந்த வீடுகளில் கொள்ளைகள் நடப்பது சகஜமாகிவிட்டது. நாங்கள் இருக்கும் இடத்தில் தனியாக பகல் 11 மணி அளவில் நடந்து சென்ற பெண்ணின் தங்க சங்கிலி'ஐ திருடன் அறுத்து சென்றுவிட்டது, எங்கள் நகர் பெண்களுக்கு் மனதில் கிலி'யை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்ந்து அடுத்த அடுத்த நாள் ஒரே இடத்தில் இரண்டு முறை நடக்கவே... எல்லோரும் பயந்து, போலிசார் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து ரோந்தில் இருந்து வருகிறார்கள்.

இந்த மாதிரி திருடர்களை பற்றியும், வீடு புகுந்து திருடும் ஆட்களை பற்றிய பேச்சு வரும் போது, என் கணவரிடம் "நீங்கள் கவலை படாதீர்கள், எப்படிப்பட்ட திருடன் வந்தாலும்.. நான் அவனை உட்காரவைத்து, அன்பாக பேசி, சாப்பாடு எல்லாம் போட்டு நல்லவானாக்கி அனுப்பி வைக்கிறேன்" என்றேன்.

அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்படி என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படி சிரிக்கிறார் என்று முறைத்தால்.."திருட்டு பசங்க திருட்டு பசங்க தான்.. மாறவே மாட்டாங்க. .நீ உட்கார்ந்து பேசி சாப்பாடு எல்லாம் போட்டாலும், எல்லாம் முடிந்த பிறகு உன் நடு மண்டையில் நச்'ன்னு (அது ஏன் நடுமண்டை என்ற கேள்வி எழுந்தது) போட்டுட்டு, அவன் வந்த வேலையை முடிக்காமல் போக மாட்டான் "என்றார்.

"அப்படியா? "என்று நானும் ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினேன்.. ஹி ஹி..அப்படி என்ன இதுல சிந்திக்க இருக்குன்னு நீங்க நினைக்கறீங்களா.. வேற ஒன்றும் இல்லை.. நடு மண்டையில் நச்சுன்னு போட்டால், என்ன செய்வது என்று தான்.

இது வரையில் இரண்டு முறை நேரடியாக திருட்டை பார்த்து இருக்கிறேன். திருடும் போது இல்லை, திருடிக்கொண்டு சென்ற பிறகு. என்னுடைய ஆயா வெள்ளிக்கிழமை ஆனால் போதும் காலையில் 4 மணிக்கு எழுந்து, தலையில் எண்ணெய் வைத்து, வெளி அடுப்பில் சுடத்தண்ணீர் வைத்து, குளிப்பது வழக்கம். எப்போதும் 4 மணிக்கு எழுந்தாலும், வெள்ளியன்று தலைக்குளித்தல் என்பது திருடனுக்கு வசதியாக போயிற்று. ஏனென்றால் அன்று தான் அவர் கம்மல், மூக்குத்தி கழட்டி வைத்துவிட்டு குளிப்பார்.

அன்றும் அப்படித்தான், நாங்கள் எல்லாம் உறங்கிக்கொண்டு இருக்க, ஆயா கம்மல், மூக்குத்தியை கழட்டி வைத்துவிட்டு, எப்போதும் போலவே கதவையும் திறந்து வைத்துவிட்டு, அவர் வெளியில் சுடத்தண்ணீர் வைக்கும் இடத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக்கொண்டு இருக்க, தொடர்ந்து கவனித்து வந்திருந்த திருடன், வீட்டில் நுழைந்து கம்மல் மூக்குத்தியை தேடத்தொடங்கி இருக்கிறான்.

படுத்திருந்த எங்கள் அனைவரையும் தாண்டி, இரண்டு பீரோக்களை திறந்து துணி எல்லாம் இழுத்து கீழே போட்டு, மற்ற அறைகளிலும் துளிக்கூட சத்தமே இல்லாமல் தேடிவிட்டு, கடைசியில் , அடுப்பங்கறையில் ஒரு டப்பாவின் மூடி மேல் சர்வ சாதாரணமாக கழட்டி வைத்திருந்த கம்மல், மூக்குத்தியை எளிதாகவே எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

குளித்துமுடித்து வந்த ஆயா கண்ணில் பட்டது பீரோக்கள் !?? நான் தான் முதல் டார்கட்... பாப்பா எழுந்திரு... எவனோ உள்ள வந்துட்டு போயிருக்கான்...அதுக்கூட தெரியாம தூங்கறியா...?!!

".........................." (தூக்கம் கலையாமல் கடுப்பாக எழுந்த எனக்கு பீரோவை பார்த்ததும், பதட்டத்தோடு சட்டென்று எழுந்து நின்றுவிட்டேன்.)

"பாப்பா, உன்னைத்தாண்டி தானே போயிருக்கான்..காலடி சத்தம் கூட தெரியாமல் தூங்கனியா. .என்ன பொண்ணும்மா நீ.. பொண்ணு இப்படியா தூங்கறது... ?!!

ஆரம்பிச்சாட்டங்கய்யா காலையிலேயே.. பொண்ணு எப்படி இருக்கனும்னு... ம்ம்ம்.. இன்னைக்கு முழுக்க நிச்சயமாக வீட்டில் இருக்கும் அத்தனை வாயிலும் நான் தான் மாட்டுவேன். இருந்தாலும் ஆயா சொல்லுவதில் ஏதோ இருக்குமோ??? நாம் அப்படி தூங்கி இருக்கக்கூடாதோ?!! என்ற கேள்வி எழாமல் இல்லை...

எல்லாம் திறந்து இருந்தாலும் எதுவும் திருடு போகவில்லை என்று ஹாலையும், ரூம்; யையும் வைத்து முடிவு செய்த நாங்கள், ஆயாவின் கம்மலை மறந்து போனோம், ஆயாவும் தான். !!

அரைமணி நேரம் கழித்துத்தான் ஆயா சமையல் அறை சென்று பார்க்க, கம்மல் காணவில்லை என்று தெரிந்தது. அப்படியே முழங்கால் கட்டி உட்கார்ந்துவிட்டார்கள்.

*********************

இது முடிந்து பல மாதங்கள் கழித்து தாத்தா எங்களின் குடும்ப ஜாதக புத்தகத்தை எடுத்துவர சொன்னபோது, எடுத்து வந்து அவரின் பக்கத்தில் உட்கார்ந்து முதலில் ஆரம்பித்த தாத்தாவின் ஜாதகத்தில் இருந்து புரட்ட ஆரம்பித்தேன். அடுத்து ஆயா ஜாதகம் வந்தது. திருடு விஷயமாக தாத்தா குறிப்பு ஏதோ எழுதி இருப்பதை பார்த்து படிக்க ஆரம்பித்தேன்.

அதாவது திருடு நடந்த பிறகு இரவும் பகலுமாக உட்கார்ந்து ஆயாவின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய்ந்து, கணக்கிட்டு, "இந்த கிரகபலன்களினாலும், பார்வையினாலும் பத்மாவின் கம்மல் தொலைந்துபோனது - பொருள் நஷ்டம்" என்று எழுதி இருந்தார்.

அட.. தாத்தா இவ்வளவு நல்லா ஜாதகம் பார்க்கிறாரே? ஏன் இந்த கணக்கை எல்லாம் இந்த திருட்டு சம்பவம் நடக்கும் முன்னமே கணக்கிட்டு சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் இந்த திருட்டு நடக்காமல் ஆயா கவனமாக இருந்து இருக்கலாமே? நடந்து முடிந்த பிறகு கணக்கிட்டு பார்ப்பதில் என்ன பலன்? ஒரு வேளை இவரின் ஜாதகம் பார்க்கும் திறமையை வளர்த்துக்கொள்கிறாரா?

ஏன் ஜோசியர்கள் நடந்து முடிந்த விஷயத்திற்கு இவ்வளவு துள்ளியமாக காரணம் கண்டு பிடிக்கிறார்கள்? இத்தனை துள்ளியமாக ஏன் அவர்களால் எதிர்காலத்தை கணிக்க முடிவதில்லை...? அப்படிமட்டும் முடிந்துவிட்டால், எத்தனை விஷயங்களில் நாம் கவனமாக இருக்க முடியும்.

தாத்தாவிடமும் கேட்டு விட்டேன் தான்... ஆனால் பதில் ஏதும் தாத்தா சொல்லாமல் "ம்ம்ம்ம்.....பத்தா..(பத்மா) உன் பேத்தியம்மா கேள்விய பாத்தியா..?!! அம்மாடி...நீ கேட்டுட்டே. .இனிமே அப்படி கணித்து வைக்க முடியுதான்னு பார்க்கிறேன்... " என்று அப்போது சொன்ன தாத்தா அடுத்து கணித்து வைத்து இருந்தது என் அப்பாவின் மரணம் குறித்தது....

அதை எழுதாமல் மனதில் வைத்திருந்து..... அப்பா இறந்தபின், அவரின் இழப்பு தாங்காமல் தனியாக அமர்ந்து அப்பாவை பற்றி பேசிக்கொண்டே இருப்பார், அப்படி பேசும் போது இந்த குறிப்பையும் சொன்னார், மார்ச் 18 ஐ தாண்ட மாட்டேன்னு தெரியும்டா.. உன்னை விட்டுட்டு ஊருக்கு போகாமல் இருந்து இருக்கலாம்.. உங்க அம்மா உன் பக்கத்தில் இருந்து இருந்தா..... உன் உயிரை எப்படியும் திருப்பி கொண்டு வந்து இருப்பா...." என்றார்.

கேட்டுக்கொண்டு இருந்த நான் அப்போது நினைத்தது...."உண்மைதான் ஆயா மட்டும் இருந்து இருந்தால், கண்டிப்பாக அப்பா இறந்து இருக்கமாட்டார்."

அணில் குட்டி அனிதா : சரி என்ன சொல்ல வரீங்க..திருட்டு பசங்கள திருத்த முடியாதுன்னா? இல்ல உங்க தாத்தா நல்ல ஜோசியரா? வேஸ்டா?

பீட்டர்தாத்ஸ் : Thief : - Set a thief to catch a thief ....... :

Horoscope : - “There are many methods for predicting the future. For example, you can read horoscopes, tea leaves, tarot cards, or crystal balls. Collectively, these methods are known as "nutty methods." Or you can put well-researched facts into sophisticated computer models, more commonly referred to as "a complete waste of time.”

.

கட்டில் காட்சிகள்

அதிகமாக ஆங்கிலபடங்கள் பார்க்க 90 களில் ஆரம்பித்தது. ஆங்கில படங்களில் கடைசியாக பார்த்த Terminator Salvation 2009 வரை என்ன இல்லை? நம்மை விட அதிக அளவு சென்டிமென்ட்'ஸ், காதல், குடும்பம், குழந்தைகள், பாடல்கள், அழுகை, சிரிப்பு, பிரிவு, நடனம் என்று எல்லாமே இருக்கத்தான் செய்கிறது. எல்லாவற்றையும் விட வியக்கவைக்கும் டெக்னாலிஜி! பல வருடங்கள் முன்னோக்கி எங்கேயோ சென்று கொண்டு இருக்கும் அவர்களின் சிந்தனையும் செயலும் ஆச்சரியப்பட வைக்கிறது. நாம் இன்னும் பின்னோக்கி சென்று 70-80 கதைகளை தேடிபிடித்து எடுத்து அதை 100% வெற்றி பெறவும் செய்கிறோம். டெர்மினேடர் சீரியல் படங்களில் எல்லாம் இயந்திர மனிதனுக்கு க்கூட இதயம் இருக்கிறது போன்று அமைக்கப்பட்ட காட்சிகள் தமிழ் சினிமாக்களின் சென்ட்டிமெண்டுகளை எல்லாம் வீழ்த்திவிடுகின்றன.

தலைப்புக்கு வருவோம், காதல், முத்தம், அணைப்பு, கட்டில் காட்சிகளும் ஆங்கில படங்களில் மிகைப்படுத்தப்படாமல், அதாவது கதையோடு ஒன்றி தேவையான இடத்தில், அதுவும் நம் வாழ்க்கையில் அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்றாக சித்தரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. ஆனால் தமிழ் படங்களில்? அடடா... குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்க முடியாதவாறு நம்மை நெளிய வைக்கின்றன. முத்தம் கொடுப்பதை நேராக காட்டமாட்டார்கள், (இதில் கமல்ஜி விதிவிலக்கு) முன்னே இரண்டு பூக்கள் கேமாராவிற்கு முன் வந்து நிற்கும், இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்து நம்மவர்கள் தங்களின் கிரியேட்டிவிட்டியை காட்டுவார்கள். ஆனால் அத்தோடு விடுவதில்லை, அந்த பெண்ணின் கண்ணில் ஆரம்பித்து, உதடு, கழுத்து, மார்பு, இடுப்பு, தொப்புள் என்று கேமராவின் கண்கள் மட்டும் அல்ல அனைவரின் கண்களும் ஒன்றொன்றாக சென்றுக்கொண்டே இருக்கும். இது தேவையா? இத்தனை முக்கியத்துவம் தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணின் உடலுக்கு கொடுத்து தமிழ் படங்களில் காட்டுவதை என்று நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.

சின்ன வயதிலிருந்து, இந்த பெண்ணியம் பேசும் பேச்சாளிகளிடம் இதை பற்றி கேட்கவேண்டும் என்று நினைத்ததுண்டு, ஆ..ஊ வென்றால் பெண்களுக்கு எதிராக அது நடந்து விட்டது இது நடந்து விட்டது என்று கூப்பாடு போடும் பெண்கள், நடக்க தூண்டுதலாக நடை உடையுடனும், இப்படி கவர்ச்சியாகவும் உடம்பை காட்டி மிகவும் அசிங்கமாக நடிக்கும் பெண்களுக்கும் எதிராக என்றாவது குரல் கொடுத்தார்களா? ஒரு முறை குஷ்புவை எதிர்த்து குரல் கொடுத்தார்கள், அந்த அம்மா திருமணத்திற்கு முன்னும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள் என்று துடைப்பம் செருப்பு எல்லாம் காட்டினார்கள்.

பல வீடுகளில், குறிப்பாக பல இளைஞர்களின் அறைகளில் இப்படி அரை குறை ஆடையுடன் கூடிய நடிகையின் படங்கள் இல்லாமல் இருப்பதில்லை. அவர்களுக்கு தன் ஆசைகளை தீர்த்துக்கொள்ள இப்படிப்பட்ட படங்கள் தேவைப்படுகின்றன. அப்படிப்பட்ட படங்களை பார்க்கும் போது இது இல்லாவிட்டால் இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று யோசித்ததுண்டு.

மிகவும் விரசமான தாபத்தை ஆசைகளை தூண்டி விடக்கூடிய கட்டில் காட்சிகள் தமிழ் படங்களில் காட்டபடுகின்றன. உலக நாயகனின் பல படங்களை இதற்கு உதராணமாக சொல்லலாம். அவை தேவையில்லை, திணிக்கப்பட்ட ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது. தேவர்மகன், ரேவதி-கமல்ஜி, நாயகன் - சரண்யா- கமல்ஜி, ரோஜா - அரவிந்த்சாமி-மதுபாலா, பாம்பே - அரவிந்த்சாமி மனிஷா கொய்ராலா
பயணங்கள் முடிவதில்லை மோகன்- பூர்ணிமா ஜெயராம், வெள்ளை ரோஜா, சுரேஷ்-ராதா, அலைகள் ஓய்வதில்லை, கார்த்திக்-ராதா.. எம்.ஜி. ஆர் -லதா, மஞ்சுலா, etc இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இவை எல்லாமே அந்த இயக்குனரின் எண்ண ஓட்டத்தை, ஆர்வத்தை, விருப்பத்தை காட்டுகிறது என்றே வைத்துக்கொள்ளலாம். வேட்டையாடு விளையாடு படத்தில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வருவார்கள். நேராக மாடிக்கு போவார்கள் உடனே முதலிரவு.. அட அட அட..?!! தமிழ் சினிமாக்களில் என்ன ஒரு முக்கியத்துவம், அவசரம் அந்த முதலிரவு காட்சிகளுக்கு மட்டும்.? ஒரு திருமணத்தில் இது மட்டும் தான் ஹை லைட் செய்து காட்டவேண்டிய விஷயமா? இதை விடவும் எத்தனையோ முக்கியமான நமக்கு தேவையான சடங்குங்கள் இருக்கின்றனவே.. ஒரு வேளை நாம் அதை தான் இயக்குனர்களி்மிருந்து எதிர்பார்க்கிறோமா? அதனால் கொடுக்கிறோம் என்று அவர்கள் சொல்லுவார்களோ?

கதையின் ஓட்டத்தோடு வருகின்ற முத்தக்காட்சிகள், கட்டில் காட்சிகள் அவசியமே என்றாலும் அதை மிகவும் விரசமாக காட்டாமல், தேவை (படத்திற்கும், நமக்கும்) என்ற அளவில் காட்டினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. Sylvester Stallone - இவரின் ஒரு படத்தில் (பெயர் நினைவில்லை) இவரும் , படத்தின் கதாநாயகியும் நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் காட்டப்படும், அசிங்கமாகவோ, கவர்ச்சியாகவோ, விரசமாகவோ முகத்தை சுளிக்கும் படியாகவோ இருக்காது. காட்சிகள் எடுக்கப்பட்ட விதமும், கேமரா ஆங்கி்லும் அப்படி இருக்கும். ஏன் மிக சிறந்த படமான டைட்டானிக் படத்தில் வரும் முத்த காட்சிகளும், கட்டில் காட்சிகளும் நம்மை முகம் சுளிக்க வைத்தனவா? ரசிக்கமுடிந்ததல்லவா? அந்த படத்திலும் நிர்வாணமாக ஒரு பெண்ணை காட்டி இருக்கிறார்கள் தானே?

தமிழ் படங்களில் தவிர்க்க வேண்டிய கட்டில் காட்சிகளை வரவேற்றும், தேவையான மற்றவற்றில் கவனம் செலுத்தவும், உலக தரத்திற்கும் முன்னோக்கிய சிந்தனையோடும் படங்கள் எடுக்க மாட்டார்களா என்று எதிர்ப்பார்க்கும், கட்டில் காட்சிகளையும், படங்களில் சம்பந்தமே இல்லாமல் முதல் இரவு காட்சிகளின் அவசரத்தையும் வெறுக்கும் ஒரு ரசிகைன்னு வைத்துக்கொள்ளலாம்.

அணில் குட்டி அனிதா : ...............கவி ஆர் யூ..ஓகே?????? ஏதும் பிரச்சனையா? என்க்கிட்ட கூட சொல்லவே இல்ல?

பீட்டர் தாத்ஸ் : Life without sex might be safer but it would be unbearably dull. It is the sex instinct which makes women seem beautiful, which they are once in a blue moon, and men seem wise and brave, which they never are at all. Throttle it, denaturalize it, take it away, and human existence would be reduced to the prosaic, laborious, boresome, imbecile level of life in an anthill. ~Henry Louis Mencken

பிரவாகம் காயத்' திரி 'க்கு.....


பிரவாகம் காயத்திரி குட் மார்னிங் மெயில் அனுப்புவாங்க. அதில் ஒரு முறை இந்த இயற்கை காட்சி வந்தது. வரைந்து பார்க்கலாமே என்று முயற்சி செய்தேன். இதை வரைந்த பிறகு ஒரிஜினல் படத்தை பார்க்க எனக்கே ரொம்ப பாவமாக போச்சி.. ஏன்னு எல்லாம் கேட்கப்பிடாது.... :))))))))

* படத்தை க்ளிக்'கி பெரிதாக்கி பார்க்கவும். :)

அணில் குட்டி அனிதா :
ஆமாம்ம்மா...... ஏன்ன்னு எல்லாம் கேட்கப்பிடாது.. ஒரிஜினல் படத்தை காட்ட மட்டும் சொல்லுங்க... த்த்தூஊஊஊஊ... ன்னு துப்பிட்டு போயிடுவீங்க.. அதுக்கு தான் அம்மணி பில்டப் டு கொடுத்து இருக்காங்க.. (ஆனா மக்கா நான் சொல்றனேன்னு உணர்ச்சி வசப்பட்டு துப்பிடாதீங்க. .உங்க கம்பியூட்டர்க்கு தான் டோட்டல் டேமேஜ். .ஹி ஹி.. ... )

காயத்திரி யக்கோவ்வ்வ் ..! ஏண்டா இவிங்களுக்கு இப்படி எல்லாம் மெயில் அனுப்பினோம்னு.. !! இப்பவாச்சும் நீங்க ஒரு நிமிட் யோசிச்சி பாக்கனும்.. சொல்லிட்டேன்..!!

பீட்டர் தாத்ஸ் :- Drawing is the honesty of the art. There is no possibility of cheating. It is either good or bad.

அணில் குட்டி அனிதா : பீட்டரு....போதும் நிறுத்திக்கோ....!!! வர வர நீ டூ மச்சா கவி க்கு குவாட்(டர்) கொடுக்கற ....என்னால முடியல......நிறுத்திக்கோஒ.... :(( சொல்லிட்டேன்.. டென்ஜன் பண்ணாத என்னைய !! :(

ஆடு - புலி ஆட்டம்

ஆடு புலி ஆட்டம் இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக சொல்லப்படுகிறது. திண்ணையில் அமர்ந்து விளையாடுவார்கள்.

எங்க வீட்டில் இந்த ஆடு - புலி ஆட்டம் அடிக்கடி விளையாடுவோம். (எங்க வீடு ன்னா.. ஆயா, தாத்தா வீடு) , திருமணத்திற்கு பிறகு ஒரு முறை கூட இந்த விளையாட்டை விளையாடவில்லை. எங்கள் வீட்டில் ஆயா வை இது வரையில் இந்த ஆட்டத்தில் யாரும் வெற்றி பெற்றது இல்லை.

அப்பாவும் ஆயாவும் இந்த விளையாட்டை விளையாடி பார்த்ததில்லை. அப்பா ஒரு வேளை ஆயாவை தோற்க்கடித்து இருக்கலாம் என்றாலும் ஆயாவை போன்ற சமயோஜிதமாக யோசிக்கும் திறன் அப்பாவிற்கு உண்டா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஆயாவுடன் விபரம் தெரிந்து நான் விளையாடவில்லை என்றாலும், விளையாடிய வரை தோற்று த்தான் போயிருக்கிறேன். 16 ஆடுகளில் 12 ஐகொண்டே புலியை அடக்கிவிடுவார்கள். ஆச்சரியம்.. மீதமுள்ள 4 காய்களை எங்களின் கையில் திணித்துவிட்டு வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்.
ஆயா வை இதில் மட்டும் இல்லை, எதிலுமே வெல்வது அத்தனை சுலபமல்ல.. A great Courageous Woman !!. :) ..

இது ரொம்பவும் இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கும். மேலுள்ள படம் தான் ஆடு - புலி ஆட்டத்தின் கட்டங்கள். தரையில் சுண்ணாம்பு கட்டி /சாக்பீஸ் கொண்டு வரைந்து கொள்ளலாம். தேர்வு எழுத பயன்படுத்தும் அட்டையின் பின்புறம் வரைந்தும் வைத்துக்கொள்ளலாம்.

இருவர் விளையாடகூடிய விளையாட்டு

புலிகள் - 3 - படத்தில் இருப்பது போன்று ஆட்டத்தை ஆரம்பிக்கும் போது வைத்துக்கொள்ள வேண்டும்

ஆடுகள் - 16 இதை புலிகள் நகராதவாறு ஆடுகளை வைத்து விளையாட வேண்டும்.

3 புலிகளையும் நகராதவாறு செய்துவிட்டால் ஆடுகள் புலிகளை அடக்கிவிட்டன. இல்லையேல் புலிகள் ஆடுகளை விழுங்கிவிட்டது. புலிகளுக்கு பக்கத்தில் ஆடுகளை வைத்தால் தாண்டி வெட்டிவிடும். அதனால் புலிகளை கட்டும் போது அது தாண்டாதவாறு பார்த்து ஆடுகளை வைக்கவேண்டும்.

சோழிகளை காய்களாக பயன்படுத்துவோம்.
புலிகளுக்கு தான் இதில் நிறைய வாய்ப்புகள் உண்டு. மிக எளிதாக ஆடுகளை விழுங்க முடியும். அதனால் ஆடுகளை தேர்ந்தெடுத்து விளையாடுபவர்களுக்கு தான் இந்த ஆட்டம் கஷ்டம். ஆடுகளாக விளையாடி பார்ப்பதில் தான் ஒரு திரில் இருக்கும்.

குறிப்பு- ஆடு-புலி ஆட்டத்தை பற்றி ஏதும் தகவல் இருக்கிறதா என்று கூகுலில் தேட, கிடைத்தது பதிவர் சிந்தாநிதி யின் இந்த இடுகை. நன்றி சிந்தாநதி.

அணில் குட்டி அனிதா : - ஓஓஓஓ்......அம்மணி .செம வெட்டியா ... ?!! அவனவன் கம்பூயூட்டர் ல உலகத்தையே சுத்திட்டு வரான்.. இப்பத்தான் இவங்க....ஆடு.. புலி ன்னு க்கிட்டு இருக்காங்க...... மக்கா பாத்து... அப்படியே கற்காலத்துக்கு போயி இது தான் கல்...இரண்டு கல்லை இப்படி தேச்சா....நெருப்பு வரும் னு சொல்லிக்கொடுக்காம பாத்துக்கோங்க............ ...... முடியலடா சாமி....!!!!

பீட்டர் தாத்ஸ் : It's not so important who starts the game but who finishes it.

.

வீடு

பாலுமகேந்திரா அவர்களின் படம் ஒன்று வந்தது. நடிகை அர்ச்சனா மட்டும் நினைவு இருக்கிறது. ஒரு வீட்டை கட்டி முடிப்பதற்குள் எத்தனை பிரச்சனை சங்கடங்கள் என்று சொல்லும் படம். இல்லம் என்ற சிவகுமார்ஜி, அமலா நடித்த படமும் வீட்டை பற்றிய கதைதான். இரண்டும் பார்க்கும் போது நம் ஒவ்வொருவருக்குள்ளும் நம் வீட்டை பற்றிய கனவுகளும் கற்பனைகளும் இல்லாமல் இல்லை என்பது புரியும். வீட்டை கட்டிப்பார், கல்யாணம் செய்து பார் என்ற பழமொழி கூட உண்டு.

வீட்டை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக இருந்தது. கட்டிடம் சார்ந்த படிப்பை படிக்கவில்லை என்றாலும்,கட்டிடம் கட்டும் போது பார்த்து கவனித்து அதை சார்ந்த படிப்பு படித்தவர்களுடன் பேசி தெரிந்துக்கொண்ட விஷயங்களை எழுதி இருக்கிறேன். தவறுகள் இருக்கலாம், கவனிப்பவர்கள் சுட்டவும்.

வீட்டுமனை வாங்குவதில் இருந்து ஆரம்பிக்கலாம். பொதுவாக மனை வாங்கும் போது திசை பார்ப்பார்கள், இப்போது இருக்கும் சூழலில் எப்படியோ ஒன்று வாங்கிவிட்டாலும், கண்டிப்பாக அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

1. வாஸ்து :
எல்லோருமே பார்க்கிறார்கள், பார்த்துவிட்டு செய்துவிட்டால் பிற்காலத்தில் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதனால் ஒரு பிரச்சனை என்று யாராவது சொல்லும் போது தேவையில்லாமல் நாம் கவலைப்பட்டு அந்த சமயத்தில் முடிந்தும் முடியாமல் எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. வாஸ்து என்ற கடவுள் அந்த நிலத்தில் எந்த நிலையில் சயனத்திருக்கிறார் என்பதை கடகால் தோண்டுவதற்கு முன்னே சொல்லிவிடுவார்கள். இதுவும் திசையை வைத்து தான் கணிக்கிறார்கள். அதைக்கொண்டு குறிப்பாக சமையல் அறை, கழிவறைகள், தண்ணீர் வரவு எந்தெந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று சரியாக வைத்துவிட்டால் போதும்.

2. காற்று சுழற்சி
இது ஒவ்வொரு காலக்கட்டதிற்கு தகுந்தார் போன்று மாறும். அதாவது உங்கள் வீடுகளிலேயே கவனித்து பார்த்தீர்கள் என்றால் வருடம் முழுதும் நமக்கு காற்று ஒரே திசையில் இருந்து வராது. மாறிக்கொண்டே இருக்கும். இந்த காற்றின் திசை சுழற்சியை கவனித்து, அதற்கு தகுந்தார் போன்று வீட்டின் கதவுகள், ஜன்னல் வைக்க நாம் கட்டிடத்தை வடிவமைக்க வேண்டும். அதை வெற்று நிலமாக இருக்கும் போது முடிவு செய்ய முடியும். காற்றின் சுழற்சி எந்த ஒரு காலகட்டத்திலும் வீட்டினுள் வாராமல் தடையாக எந்த சுவரையும் எழுப்பிவிடாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம்.இயற்கை காற்றினால் மட்டுமே நம் உடல் ஆரோக்கியம் நல்ல முறையில் பாதுகாக்கப்படும்.

3. தண்ணீர்
நிலத்தடி நீரோட்டத்தை மனை இருக்கும் இடத்திலோ, அதை சார்ந்தவர்களிடமோ தீர விசாரித்து, வாஸ்த்துவையும் மனதில் கொண்டு பிறகு தண்ணீர் எடுக்கும் இடத்தை குறிக்க வேண்டும். குத்துமதிப்பாக தோண்டினால், நிலத்தடி நீரோட்டம் இல்லாத இடமாக போனாலோ, பாறை இருந்துவிட்டாலோ பிரச்சனை.

4. முன் வாசல்
கவனித்து பார்த்தவரை தெற்கு வாசல் சிறந்தது என்று பலர் சொல்லி கேட்டு இருக்கிறேன். அப்படி இருக்கும் நிலமாக நாம் தேர்ந்தெடுத்து வாங்கலாம். இல்லாதபட்சத்தில் கிழக்கு (அ) மேற்காக முன் வாசல் இல்லாதவாறு பார்த்துக்கொள்வது நல்லது. இதற்கு காரணம் சூரிய வெளிச்சம் நேரடியாக வீட்டின் முன் விழும். அதனால் வெப்பம் அதிகமாக வீட்டுக்குள் காலையும் மாலையும் பரவும். முன் வாசல் கதவுகளில் ஆண்டு முழுதும் தொடர்ந்து சூரிய வெப்பம் தாக்குவதால் மிக குறுகிய காலத்தில் கதவு அழகிழந்தும், வெளுத்தும் போய்விடும். தெற்கு வாசல் ஏனென்று ஒரு முறை யாரையோ விசாரித்தபோது மேற்கண்ட விளக்கம் எனக்கு கொடுக்கப்பட்டது. .

5. வெளிச்சம்
காற்றுக்கு அடுத்து முக்கியத்துவம் தரவேண்டிய விஷயம் வெளிச்சம். கண்களுக்கு மட்டும் அல்ல, நல்லமுறையில் தெளிவாக நம் மூளை வேலை செய்யவும், கோபம், சிடுசிடுப்பு, எரிச்சல் போன்றவை அடிக்கடி நிகழாமல் இருக்க வெளிச்சம் நமக்கு உதவி செய்கிறது. இதற்கு நம் கட்ட விருக்கும் வீட்டை சுற்றி உள்ள வீடுகளின் அமைப்புகள் மிகவும் முக்கியம். வெளிச்சம் வராத அளவு மிக உயர்ந்த கட்டிடங்கள் நம் மனையை சுற்றி இருந்தால், சுற்றிலும் 5- 7 அடி அளவு இடம் விட்டு வீட்டை கட்டலாம். இது மழைபெய்யும் போது நம் வீட்டில் விழும் தண்ணீர் நிலத்திற்குள் செல்லவும் வழிவகுக்கும். சந்துகள் முழுசாக சிமெண்டு போட்டு மூடிவிடாமல், செடி, கொடி, மரங்கள் வைத்து பராமரித்தால் நல்லது. காரணம் நல்ல காற்றும், செடி, கொடி, பூக்களின் வாசமும் கிடைக்கும். மழைநீர் வீணாகாமால் நிலத்தடி நீராக மாறும்.

6. அஸ்திவாரம்
எந்த ஒரு விஷயத்திற்கும் அஸ்திவாரம் மிகவும் முக்கியம். எத்தனை செலவானாலும் அஸ்திவாரம் அந்த இடத்திற்கு தகுந்தார் போன்று, இன்றிலிருந்து அடுத்த 40 வருடங்களுக்கு அந்த இடம் எப்படிப்பட்ட வளர்ச்சிகளை பெரும் என்பதை கணக்கிட்டு ஆழம் மட்டும் இல்லை உயரத்தையும் அதிகப்படுத்தி போட்டு விட வேண்டும். அரசு செயற்படுத்தும் திட்டங்களின் மூலம் நம் குடியிருப்பில் இருக்கும் ரோடுகள் உயரப்படுத்தப்படும், இது 4 ஆண்டுக்கு ஒரு முறை என்று ஊகித்தாலும் 40 வருடங்களில் எத்தனை முறை ரோடு உயர்த்தப்படும் என்பதை கணக்கிடலாம். இப்படி கணக்கிடாமல் தெருவிலிருந்து ஓரளவு உயரமாக கட்டிடத்தை எழுப்பினால், நாளடைவில் வீடு உள்ளேயும் , தெரு மேலேயும் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. அதனால் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே வர வாய்பிருக்கிறது. அதனால் வீட்டின் உயரத்தை எப்போதும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.

7. கவனிக்க வேண்டியவை

  • மேல்தளம், வெப்பம் நேரடியாக வீட்டில் இறங்காமல் வெதர் ப்ரூஃப் கண்டிப்பாக போட்டுவிடவேண்டும்.
  • நம் வீட்டு மழைநீர் சுற்றி உள்ள வீடுகளில் விழாதவாறு நம் வீட்டு ஜன்னல், கதவு வெளிப்புற லாஃப்டுகள் அமைக்க வேண்டும்.
  • மேல் மாடி மழைநீர் வீணாகாமல் கிணற்றுக்குள் அல்லது ஆழ்துளைக்குக்குள் செல்லும் வசதியை செய்து விட வேண்டும்
  • வாகனங்கள் நிறுத்த வசதியாக இடம் அமைத்து க்கொள்ள வேண்டும்
  • கிட்சன் ஒர்க் ஸ்பேஸ் கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் நல்லது
  • வாஷிங்மிஷின், கேபிள், டிஷ் வைக்க தேவையான புரொவிஷன் வைத்துக்கொள்வதும் நல்லது.
  • அரசாங்கத்தின் கழிவுநீர் குழாயின் மட்டத்தை விட, அதனை சென்று அடையும் நம் வீட்டு கழிவு நீர் குழாய் குறைந்தபட்சம் 3-4 அடி உயரம் இருந்தால் நல்லது
  • எல்லாவற்றிக்கும் மேல் நாம் வீடு கட்டும் போது, ஜல்லி, செங்கல், மணல் போன்றவற்றை தெருவில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கொட்டாமல் பார்த்துக்கொள்வது ரொம்பவும் முக்கியம். தெருவில் கொட்டி வைத்தே நம் வேலையை முடிக்கிறோம். அது மற்றவர்களுக்கு எவ்வளவு இடைஞ்சலாக இருக்கிறது என்பதை நாம் என்றும் சிந்தித்து பார்த்தே இல்லை.
  • வரவேற்பு அறை மற்றும் உள்அறைகள் போன்றவற்றில் பர்னீச்சர் எப்படி போடுவோம், அல்லது எப்படிப்பட்ட பர்னீச்சர் நமக்கு போட விருப்பம் என்பதற்கு ஏற்றார் போன்று அவற்றின் அளவுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். .
-------------------------------------------------------------------------------------------

அணில் குட்டி அனிதா : அட... இம்புட்டு சொல்லி இருக்காங்க ஆனா அம்மணி இன்னும் சொந்தமா வூடு கட்டவே இல்லையே?!!! அட கடவுளே...... .கட்டாமேயே இப்படி ஒரு பதிவா? இவிங்க மட்டும் வூடு கட்டியிருந்தா.. இன்னும் செமத்தியா பதிவுல வூடு கட்டுயிருப்பாங்கப்பா .. ............ சொல்றதுக்கு இதுக்கு மேல என்ன இருக்கு??????

பீட்டர் தாத்ஸ் : - “A house is made of walls and beams; a home is built with love and dreams.”
“Home is not where you live, but where they understand you”
“Home, the spot of earth supremely blest, A dearer, sweeter spot than all the rest”

.