கல்யாணி, மேற்கு வங்காளத்தில், "நாடியா"  மாவட்டத்தில் அமைந்த மிகச்சிறிய நகரம். கொல்கத்தாவிலிருந்து 50 கிமி தொலைவில் அமைந்துள்ள இந்த நகர் உருவான வரலாறு 65 ஆண்டுகளுக்கு முந்தயதாக இருக்கிறது.  இங்கிருக்கும் வானுயர்ந்த மரங்களே இந்த நகரின் வரலாற்றை பறைச்சாற்றுகின்றன. கொல்கத்தா & கல்யாணி இரண்டையும் இரட்டை தலைநகரங்களாக உருவாக்கவே அன்றைய அரசு இந்த நகரை அமைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்கா தன் விமானத்தளத்தினை இங்கு ரூஸ்வெல்ட் டவுன் (அ)  ரூஸ்வெல்ட் நகர் என்ற பெயரில் அமைத்திருந்தது. அதன் பிறகு, 1950ல் மேற்கு வங்காளத்தில் இரண்டாவது முதல் அமைச்சரான Bidhan Chandra Roy -அவர்கள் இந்திய தேசிய காங்கரஸின் கூட்டங்களை நடத்தவும், கொல்கத்தாவில் பெருகிவரும் மக்கள் தொகையையும் கருத்தில் கொண்டு,  மக்கள் இங்கு குடியேற வசதியாக முன்கூட்டியே உள் கட்டமைப்புகளை திட்டமிட்டு உருவாக்கினார். / (Kalyani, West Bengal Aerial view).

1. பாதாள கழிவுநீர் அமைப்பு
2. செவ்வக கட்டங்கள் உருவாக்கும் சாலைகள்
3. ஒரு பக்கம் வரிசையாக மரங்கள் அமைக்கப்பட்ட நிழற்சாலைகள்
4. மற்றொரு பக்கம் மின்சார கம்பங்கள்
5. சமூக பூங்காக்கள்

என 1950 ல் இந்தியாவில் இவ்வகையான வசதிகளோடு உருவாக்கப்பட்ட முதல் நகரம் கல்யாணி' , கடந்த 65 ஆண்டுகளாக அதிக மாற்றங்கள் ஏதுமில்லாமல் இயற்கை சூழ்ந்த பழைய நகரமாகவே இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்களும் இந்நகரின் இயற்கை வளம் குறையாமல் இருக்க உறுதுணையாக இருக்கின்றனர்.


இங்கு மக்கள் வசிக்க மட்டுமே அனுமதி,அதனால் அதிகளவு மாசு சேர்க்கை இல்லாமல் சுத்தமாகவும் மண் வளம் மிக்கதாகவும் நகரம் விளங்குகிறது. தொழிற்சாலைகள், வியாபார வணிக ஸ்தலங்கள் & கேளிக்கை சார்ந்தவைகளுக்கான இடங்களுக்கு அரசு அனுமதிக் கொடுப்பதில்லை.
அன்றாட தேவைக்கான பொருட்கள், காய்கறிகள் என எல்லாமே கிடைக்கின்றன. இரண்டு- மூன்று சிறிய சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. தவிர, சாதாரண உணவு விடுதிகளும் இருக்கின்றன. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் உணவு விடுதிகள், சூப்பர் மார்க்கெட்டுகள் எதுவும் பெரிய அளவில் இல்லை. 4 கிமி தொலைவில் "காஞ்சரப்பாரா" என்ற இடத்தில் பெரிய கடைகளும், உணவு விடுதிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவில் வீட்டுத்தேவைக்கானப் பொருட்கள் வாங்க வேண்டுமானால் அடுத்த ஊருக்குத்தான் செல்ல வேண்டும், அதையும் விட்டால், கொல்கத்தா செல்லலாம்.  

சாலைகளில் வைக்கப்பட்ட மரங்களின் சிறப்பு அம்சம் என்னவென்றால், வேப்பமரம் என்றால், அந்த சாலை முழுக்க வேப்பமரம் மட்டுமே, அசோகமரம் என்றால்..சாலை முழுதும் அசோகமரங்கள் மட்டுமே. இவையும் நிழற்சாலைகளின் அழகை அழகை அதிகப்படுத்துக்கின்றன.  இந்த மரங்களை வெட்ட யாருக்கும் அனுமதியில்லை. அளவுக்கு மீறி, போக்குவரத்துக்கு, மக்களுக்கு, வீடுகளுக்கு பிரச்சனையாக வளரும் கிளைகளை மாநகராட்சி ஆட்கள் வந்து வெட்டுகின்றனர். கிளைகள் வெட்டப்பட்டு,  இலை வேறு, கிளை வேறாகப் பிரிக்கப்பட்டு, கிளைகளை மட்டும் கட்டுகளாக கட்டி எடுத்துச்செல்கின்றனர். இலைகளும் அப்புறப்படுத்தப்படுகின்றன, அவை உரமாக்க பயன்படுத்தப்படும் என்று ஊகித்தேன்.

குப்பையை தெருவில் கொட்டவும் அனுமதியில்லை அல்லது மக்கள் அப்படியொரு பழக்கத்தை வைத்திருக்கவில்லை. தினம் காலையில் மாநகராட்சி ஆட்கள் வண்டியில் வீடுவீடாக வந்து, ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் அதற்காக அமைத்து வைத்த இடத்திலிருந்து எடுத்துச்செல்கின்றனர். இந்த இரண்டு மாதங்களில், ஒரு நாள் கூட இவர்கள்  குப்பைகளை எடுக்காமல் இருந்ததில்லை. வெளியில் சென்றுவந்த செருப்போடு வீட்டிலும் நடக்கலாம், அப்படியோரு சுத்தமான சாலைகள். கடைகளில் ப்ளாஸ்டிக் பையகளை விட பேப்பர்களில் கட்டியே பொருட்களை கொடுக்கின்றனர். இது மாநகராட்சியின் உத்தரவு என்று அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து தெரிந்தது.
ஆக, நகரம் சுத்தமாக இருக்க மக்களும் சில நடைமுறைகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றுகின்ற்னர். சுத்தம் மட்டுமல்ல சத்தமும் இங்கில்லை. "Sleeping Town" என்று இங்கு வசிப்போர் இந்நகரை அழைக்கின்றனர்.

ஒவ்வொரு பேரூந்து நிறுத்தத்திலும் தானியங்கி  குடி தண்ணீர் சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அவற்றில் தண்ணீர் வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள் எண்ணிவிடும் அளவிற்கு இருந்தாலும், அவைக்கட்ட அரசின் அனுமதி கிடைப்பது மிகவும் கடினமான விசயமாக இங்கிருப்பதால், யாரும் அடுக்குமாடி கட்டிடடத்தை விரும்புவதில்லை.

அடுக்குமாடிக்கட்ட முதல் நிபந்தனை, மனையின் அளவு சாதாரண மனையை விட இரண்டு மடங்கு அதிகமானதாக இருக்கவேண்டும். இங்கு சாதாரண மனையின் அளவு 5000 சதுரடி. ஒவ்வொரு வீடும் 5000 சதுரடி மனையில் கட்டப்பட்ட பெரிய பெரிய பங்களாக்கள். வீடுப்போக, பெரிய தோட்டங்கள், பூங்காக்கள் வைக்கும் அளவு இடம் வசதியாக உள்ளது. மேலும், இங்கு யாருமே சொந்தவீட்டுக்காரர்கள் இல்லை, அரசு "Lease" அடிப்படையில் 999 வருடங்களுக்கு மனையை வீட்டுக்காரர்களுக்கு கொடுத்திருக்கிறது. அதாவது, மனையில் வீடுக்கட்டி தங்கிக்கொள்ளலாம்..ஆனால் அது மனைதாரருக்கு சொந்தமில்லை. கடைகள் இருக்கும் பகுதிகளில், கடைகளின் பின்புறம் இருக்கும் வீடுகள் மட்டுமே நம்மூர் வீடுகள் போன்று சிறிய வீடுகளை பார்க்க முடிகிறது.

வீடுகள் அந்தக்காலத்து முறைப்படி கட்டப்பட்டவையாக இருக்கின்றன. பெரிய பெரிய அறைகள் அவற்றிற்கு 2-3 கதவுகள் இருக்கின்றன. "ப்ரைவெட் ரூம்" என்பது இங்கில்லை. கூட்டுக்குடும்ப அமைப்பினால் இந்த மாதிரி கட்டிட அமைப்பு இருந்திருக்கும் என்று உகிக்கிறேன்.  வராண்டா, முகப்பு அறை, சாப்பிடும் அறை, படுக்கை அறை என எல்லாவற்றிற்கும் எந்தப்பக்கதிலிருந்தும் நுழையும் படியாக கதவுகள். பெரிய பெரிய ஜன்னல்கள். குரங்குகள், பறவைகள், மற்ற இயற்கை வாழ் ஜீவன்கள் இருப்பதாலோ என்னவோ, எல்லா வீடுகளிலும் பாதுகாப்பு கருதி சன்னல்களில் வெளிப்பக்கம் ஒரு அடி அளவில் கிரில் அமைக்கப்பட்டுள்ளது.
தவிர, பங்களாதேஷ்'லிருந்து அங்கீகாரம் இல்லாத ஊடுருவல் காரணமாக, திருட்டு பயம் அதிகமாக உள்ளது. அதன் காரணமாகவே இங்கு பெண்கள் நகைகள் அணிவதில்லை, மேலும் இரண்டு சக்கர வாகனங்கள், சைக்கிள் திருட்டும் அதிகம். நம் எல்லை பாதுகாப்பு மிகவும் கடுமையானதாக இருந்தாலுமே, நீர் வழியாக இந்த ஊடுருவல்கள் நடப்பதாக சொல்லப்படுகிறது. பாதுகாவலர்கள் எதிரிலேயே கண் இமைக்கும் நேரத்தில் இக்கறையிலிருந்து அக்கறைக்கு நகைகளை கட்டி தூக்கிப்போட்டு நீரில் குதித்து தப்பிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்களாக இந்த ஊடுறுவாளர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால், கல்யாணி' வாழ் மக்கள் எந்நேரமும் மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. பங்களாதேஷ் ஷிலிருந்து வந்து, சினிமா பார்த்துவிட்டு, தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு அல்லது திருடிக்கொண்டு இவர்கள் திரும்ப சென்றுவிடுவதாக சொல்லப்படுகிறது.

கேரளாவைப்போன்றே இருக்கும் இந்த நகரில் எங்குப்பார்த்தாலும், தேக்கு, மா, பலா, வாழை, பாக்கு மரங்களும், வெற்றிலை, மிளகு போன்றவை ஊடுபயிராகவும்,  வானுயர்ந்த மரங்களும், மரங்களில் வித விதமாக சத்தம் எழுப்பும் பறவைகளில் வாசமும், பூக்கள் பூத்துக்குலுங்கும் செடிகளும் மரங்களும் நிறைந்து மிகுந்த ரம்யமான, பச்சை பசேலென்ற இயற்கை சூழ்ந்த இடமாக இருக்கிறது.

எங்கள் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கங்கை ஆறு, கேரளாவைப்போன்றே பேய் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் மண்ணுக்குள் சென்றுவிடுகிறது. கேரளாவில் மண் சிறு சிறு செம்மண் உருண்டைகளாக இருக்கும், தண்ணீரை எளிதாக உறிஞ்சிவிடும் தன்மைக்கொண்டவை மேலும் கேரளாவின் பூமி அமைப்பே கடலை நோக்கி லேசாக சரிந்தவாறு இருப்பதால், தண்ணீர் தேங்காமல் வழிந்தோடுவது இயற்கை. கல்யாணியின் மண் தன்மை வேறுவிதமாக இருந்தாலும், இங்கும் மழை நீர் தேங்காதளவு மண் வளம் மட்டுமல்லாது, ஊரின் உள் கட்டமைப்பும் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவு என்று எடுத்துக்கொண்டால்............பதிவு ரொம்ப பெரிசா ஆகிடுச்சி..சோத்து மூட்டையை அடுத்த பதிவில் திறப்போம்...

அணில் குட்டி : அம்மணி .... பெங்காலியில் உங்க பேரின் உச்சரிப்பு ரெம்ப அழ்க்கா ..இருக்கு... ஹான்.. !! .

பீட்டர் தாத்ஸ் : “Travel and change of place impart new vigor to the mind.” – Seneca