காதலிக்க வயது வரம்பு இருக்கிறதா என்ன.. ? காதல் என்ற வார்த்தை ஒரு ஆணிடம்/பெண்ணிடம் உடல், மனம் சார்ந்த ஒன்றாக மட்டும் பார்க்காமல் கேட்கப்படும் கேள்வியாக இருந்தாலுமே, வயது வரம்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படித்தான் வரலாறுகள், நடைமுறை கதைகளும் சொல்கின்றன.

காதல், காதலிக்கும் வயதில் பலமுறை என்னை நெருங்கி வந்து, அதை கடக்கவிட்டு ஒதுங்கி இருக்கிறேன். எனக்குத்தான் என்னவோ காதலிக்க நேரமில்லை.

நேரமில்லை என்பதை இப்படியும் மாற்றி சொல்லாம்.. வயிற்றில் பசி, எதிர்காலத்தைப் பற்றிய பதில் தெரியாத ஆயிரம் கேள்விகள் நிறைந்த வாழ்க்கை பயணம், வளர்ப்பவர்களின் மேல் இருந்த அதீத காதல் இவற்றை எல்லாம் தாண்டி எனக்கு காதல் வரவேயில்லை. 

எந்த ஆணும் என்னை ஈர்க்கவேயில்லை. இந்த பக்கம், என்னிடம் காதல் சொல்லி வந்தவர்களை பார்த்து, அறிவே இல்லாதவர்கள் என்ற எண்ணமே வந்தது. இப்படி வரக்கூடிய வயதல்லவே, இருந்தாலும் வந்தது, அப்போதே வாழ்க்கை கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த பாடம்  "காதல்" என்ற வார்த்தைக்கும் எனக்கும் எப்போதும் சம்பந்தம் இல்லை என்பதை உணர்த்தியது.  காதலிக்க தகுதியில்லாத ஒரு பெண்ணாக என்னை நானே பார்த்தேன் அல்லது அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிடிவாதம் எனக்கு இருந்தது. அழகு என்பது இதற்கு ஒரு தடையாக இருப்பதாக நினைக்கவில்லை. 

எத்திராஜ் கல்லூரியில் முதலாமாண்டு, சென்ரல் ஸ்டேஷனில், ரயிலுக்கு தினமும் மாலை ஓடி வந்து அமருவேன், அந்த ரயிலை விட்டிவிட்டால், இன்னமும் 40 நிமிடங்கள் அடுத்த ரயிலுக்கு நிற்கவேண்டும், காலையில் சாப்பிட்டு இருக்கமாட்டேன், அதிகாலையில் நான் கிளம்பும் நேரத்தில் சித்தப்பாவீட்டில் சாப்பாடு ரெடியாகி இருக்காது. காப்பி குடித்த வயிற்றோடு கிளம்பி இருப்பேன். காலேஜ்'  ஜில் ஆன்ட்டியின் முயற்சியில், கேண்டீனில், மதியம் இலவச சாப்பாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இலவச சாப்பாடு வாங்கி சாப்பிடுவதால், கேண்டீனில் வேலையாட்கள், எங்களை ஒரு பொறுட்டாக மதிக்க மாட்டார்கள், பசியோடு வெகு நேரம் ஓரமாக நிற்க வேண்டும், பணம் கொடுத்து வாங்குபவர்கள் அத்தனை பேரும் வாங்கி சென்றவுடன் தான் கொடுப்பார்கள், அப்படி காத்திருக்கும் பல சமயங்களில், உணவு தீர்ந்து போயி இருக்கும். ஏதோ கிடைப்பதை வாங்கி வந்து, தோழிகள் பிடிங்கியது போக சாப்பிட்டாலும், வயிறு காது கிழியும் படி சத்தம் எழுப்பும். வயதுக்கே ஏற்ற கெளரவம் நிறைய இருக்கும், பசி என்று யாரிடமும் சொல்லக்கூடாது, தோழிகளிடமும் காட்டிக்கொள்ள பிடிக்காது.  வெளியில் காட்டிக்கொள்ளாத திருட்டு சிரிப்பை அந்த கெளரவம் வரவழைக்கும்.  கொஞ்ச நாளில் இரண்டு வேளை  "பசி" பழகிப்போனது. 

இத்தனை பசியோடு மாலை ரயிலில் உட்கார்ந்து இருக்கும் போது, எதிரில் வந்து அமரும் "அரசு" என்ற இளைஞர் மூன்றாம் ஆண்டு பிரசிடன்ஸி கல்லூரி மாணவர், என்னை காதலிப்பதாக சொன்னபோது, சிரிப்பு தான் வந்தது. என்னை தினமும் ஒரு 35 நிமிட பயண நேரத்தில்  சில வாரங்களாக பார்த்திருக்கிறார், பேசி இருக்கிறார்.  அவருக்கு காதல் வந்துவிட்டது. என்னைப்பற்றி எதுவும் அவருக்கு தெரியாது, என் படிப்பு, காலேஜ் தவிர.  எனக்கு? எனக்கு அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வமே இல்லை. என்ன காரணம் அவர் என்னை காதலிக்க? ஒரு மண்ணும் இருப்பதாக எனக்கு அப்போது தோன்றவில்லை.  யாரென்று தெரியாத, ஒரு சீனியர் மாணவர் என்ற பயமின்றி, அவர் ஒரு ஆண் என்ற தயக்கமின்றி, எதை எதையோ பேசிக்கொண்டு வந்தது காரணமாக இருக்கலாம். இருந்த பசியிலும் அவன் வேற்கடலை வாங்கி சாப்பிட்டு எனக்கு கொடுத்த போது, வேண்டாவே வேண்டாம் என்று தடுத்துவிட்டது காரணமாக இருக்கலாம். அவர் கண்ணுக்கு நான் அழகாக தெரிந்திருக்கலாம்.

அழகு என்பதை தாண்டி வாழ்க்கையில் பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தேன். என்னையும் சேர்த்து யாருடைய அழகும் எனக்கு ஆர்வமளிக்கவில்லை, அவரின் காதல், மனிதர்கள் எத்தனை முதர்ச்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்ற அதிருப்தியை தந்தது. ரயிலை மாற்றினேன்,  என்னை த்தேடி சுற்றி வர முயற்சி செய்தாரா என்றால், ஒரே முறை, வழிமறைத்து பேசியதாக நினைவு. வழியையும் மாற்றிக்கொண்டேன். யாரையும் நீ மாறி விடு என்று சொல்வதை விடவும், என்னை மாற்றிக்கொள்வதை அப்போதே வழக்கமாக்கி கொண்டிருப்பதை இப்போது நினைவு கொள்கிறேன்.

காதல் என்பதே பிடிக்காமல் போனது, வித்தியாசம் இல்லாமல் பேசும் பழக்கமே சிலருக்கு என் மேல் காதல் வர காரணமாக எனக்கு தோன்ற ஆரம்பித்தது. அது சரியா இல்லையா என்று அந்த சிலரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டேன், அதுவும் சரி என்ற பதிலில் எனக்கு திருப்தி. பேசுவதை மாற்றிக்கொள்ளவில்லை, காதலுடன் வந்து நிற்பவர்களை மட்டும் மாற்றிக்கொண்டே வந்தேன். பழகுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆண்கள் என்றாலே தள்ளி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக என்னை ஆட்க்கொள்ள ஆரம்பித்து, செயற்படுத்தியும் வந்தேன், வருகிறேன்.

காதல் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணமும் எப்போதும் இருந்தது. காதலிக்க தகுதியில்லாத ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லுபவர்களை என்னவென்று சொல்வது?!  இதை தான் கண் மூடித்தனமான காதல் என்பார்கள், புரிந்துக்கொண்டு காதலிக்க முடியாதளவு முரண்பாடனவளாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும்.புரிந்தவர்கள் என்னை விட்டு விலகி தான் செல்வார்கள் என்பார்கள் என்பதும் எனக்கு தெரிந்திருந்தது. அதனால் புரிந்ததாக நினைத்துக்கொண்டு, புரியாமல் காதலிப்பவர்களை எனக்கு பிடிக்காமல் போனது. எனக்கு பிடித்தவர்கள் யாரையும் காதல் என்ற வரைமுறைக்குள் கொண்டுவரவில்லை அல்லது என்னுடைய பிடித்தம் காதலாக இருக்க வாய்பில்லாமல் இருந்தது அல்லது அதையும் தாண்டி ஏதோ ஒன்றாக இருந்தது.  எல்லாவற்றையும் கடந்து வரும் போது அல்லது சில பல காலம் அதிலேயே தொக்கி நிற்கும் போது,  அனுபவம் கிடைக்கிறது. அனுபவம் மட்டுமே நம் அறிவை கொஞ்சமாக வளர்க்க உதவுகிறது. அதையும் பலமுறை தவறவிடுவது எனக்கு பழக்கமாகி இருந்தது.  

நண்பர் ஒருவரிடம்,  என்னை உடல் சார்ந்து பார்க்காமல் இருக்கும், ஆண்கள் இருக்கும் இடத்தில் இருக்க விரும்புகிறேன், அப்படி ஆண்கள் உண்டா ? அல்லது அப்படி ஒரு இடம் இருக்கிறதா? என்றேன். நண்பரின் பதில், "இல்லவே இல்லை :)" உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் ஆண்கள் உண்டு, அவர்களின் எண்ணங்களினால் பெண்களின் மீதான பார்வையை உன்னால் கட்டுப்படுத்தவோ.மாற்றவோ முடியாது , அது இயற்கை" என்றார்.   காதல் என்பது உடலும் சார்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி இல்லை என்று யாரும் விவாதிக்க வேண்டியதே இல்லை. நேர விரயம்.

காதலிப்பவர்களை பார்க்கும் போது எல்லாம், இவர்களின் வயிற்றுக்கு நேரத்திற்கு சோறு கிடைக்கிறது, தேவையான பணம் கிடைக்கிறது, நாளை எப்படி இருக்கும் என்ற கேள்வியோ, பாதுகாப்பு பற்றிய பயம்மோ இல்லை.  பெற்றோர் இருக்கும் ஒரு வீட்டில், பெற்றோர் இல்லாமல் தனியான தன்னை தானே கவனித்து, மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற நம் செய்கைகளைப்பற்றிய சுய அலசல், கட்டுப்பாடு, அடுத்து எப்படி இருக்க வேண்டும் என்ற யோசனை எதுவும் இவர்களுக்கு இருப்பதில்லை, வாழ்க்கை இவர்களுக்கு மிகவும் எளிமையானதாக, கேள்விகள், பயம் உணர்வு போன்றவை இல்லாததாக இருக்கிறது,அத்தோடு பெற்றோர் சம்பாதிக்கும் பணமும், பாதுக்காப்பும், உதவியும், உடையும், உட்கார்ந்த இடத்தில் சாப்பாடும் கிடைக்கிறது.  அதனால் காதல் வருகிறது.. .அது சுகமாகவும் இருக்கிறது..

எனக்கு வரவில்லை... காதலிக்க நேரமில்லாமல் என் தலையில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன... என்னைப்பற்றி புரிந்துக்கொள்ளாமல் என்னை காதலித்தவர்கள் எல்லாம் எனக்கு இன்னமும் முட்டாள்களாவே தெரிகிறார்கள். பாவம் ஒரு வேளை அவர்களில் யாரையாவது என்னை திருமணம் செய்திருந்தால் நிம்மதியை இழந்திருப்பார்கள், வாழ்க்கையின் அத்தனை கஷ்டமும் என்னாலேயே என என்னை அடித்து, துரத்தி இருப்பார்கள்.  காதலே வேண்டாம் என்று வந்ததால், அப்படிப்பட்ட  துக்கம் எனக்கு இல்லை.

இன்னமும் என்னை நேசிப்பவர்களுக்கும், என்னால் நேசிக்கப்படுவர்களுக்கும் எப்போதும் பிரச்சனையாகவே இருக்கிறேன்...... ம்ம்ம்ம் . :( இதற்கும் மேல் என்ன சொல்ல...

அணில் குட்டி : எச்சுச்சுமீ கவி... எதுக்கு இந்த....ஃப்ளாஷ்ஷூ...பேக்கூ.. ?!! 

பீட்டர் தாத்ஸ் : One of the hardest things in life is having words in your heart that you can't utter
.