தியானம்? நமக்கு இது ஒன்று தான் விட்டுபோயாச்சி சரி அதையும் கற்றுக்கொள்ளலாம் என்று வேளைச்சேரி' யில் தியானம் சொல்லி கொடுக்கும் இடங்களை தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது என் கணவர் விஜயநகர் பக்கத்தில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார், அங்கு தியானம் சொல்லி தருவதாக நினைக்கிறேன் சென்று பார், பணம் எதுவும் வாங்குவதாக தெரியவில்லை என்றார்.அட இந்த காலத்தில் இலவசமாகவா?

அந்த இடத்தை தேடி பிடித்து சென்றுவிட்டேன். ஒரு அம்மா வெள்ளை ஆடையுடன், ஒரு உயரமான இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அவரின் பேச்சை கவனித்தவாறு பலர் உட்கார்ந்து இருந்தனர்.

"என்னை பார்த்ததும், கிளாஸ்'ஸாமா? " என்றார்.

"ஆமாம், தியானம் படிக்கனும்" என்றேன்

உள்ளே இருக்கும் யாரையோ அழைத்து எனக்கு அறிமுக வகுப்பு எடுக்க சொன்னார். நான் காத்திருந்தேன். சற்று நேரம் கழித்து ஒரு 22-25 வயதுக்குள் இருக்கும் ஒரு இளைஞர் வந்தார். தலைகலைந்து, மிக சாதாரணமாக இருந்தார். அதாவது தன் தோற்றத்திற்கோ, தன் உடைக்கோ அவர் முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. அவரை பார்த்தவுடன் எனக்கு சட்டென்று மனதில் தோன்றியது. எதற்கு இந்த வயதில் இவருக்கு இந்த வேலை? சாமியாரா இருக்க வேண்டிய வயதா இது? அதுவும் எனக்கு இவர் தியானம் சொல்லி கொடுப்பதா? விளங்குமா? நம் குணத்திற்கு இவரை அமைதியாக தியானம் சொல்லி கொடுக்க விடுமா? சீண்டி பார்க்காமல் இருப்போமா? என் மனத்தில் இது போன்ற கேள்விகள் எழுந்தவாரே இருக்க.. அவர் என் எதிரில் வந்து அமர்ந்தார். என்னை பற்றி விசாரித்தார். அப்படி ஒரு சாந்தமான முகத்தை நான் பார்த்ததில்லை.

அவர் என் கண்ணை ஆழ்ந்து கவனித்தார். சுத்தம்!! விதி வலியது அந்த பிள்ளையிடம் என் ரூபத்தில் விளையாட ஆரம்பித்துவிட்டது என்று உள்ளே மனது சத்தம் போட்டது.

"தியானம் கற்றுக்கொள்ள வந்தேன். அதைப்பற்றி சொல்ல முடியுமா?

புன்முறவல் .. ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே சற்றே இடைவெளி, அமைதி.. எனக்கு இது எரிச்சலை தந்தது. எதற்கு இத்தனை நேரம் பதில் சொல்ல எடுத்துக்கொள்கிறார் இவர்?

"ம்ம்.அதற்கு முன் சில பாடங்கள் படிக்கவேண்டும்"

"என்ன பாடம் ..தியானத்தை பற்றியா? ஏன் படிக்க வேண்டும்?, எனக்கு நேரம் குறைவு நேராக தியானம் சொல்லித்தாருங்களேன்"

திரும்பவும் ஒரு புன்முறுவல், ஒரு ஆழ்ந்த அமைதி, இது எல்லாமே என் கண்களை நேருக்கு நேர் பார்த்தவாறு.... , நானும் அப்படி இப்படி பார்க்காமல் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

"தியானம் பழக சில விஷயங்களை தெரிந்துக்கொள்ள வேண்டும் அது சம்பந்தப்பட்ட பாடம்.. 7 நாட்கள் தான்.. முடித்துவிடலாம்".. ஒரு புன்முறுவல்..

எனக்கு சிரிக்க தோன்றவில்லை.. "சரி இன்றைக்கு ஆரம்பித்துவிடுங்கள்"

"நேராக உட்கார்ந்து என்னையே கவனியுங்கள்.... "

"ம்ம்.."

"உடம்பு, ஆத்மா என்றால் என்ன"

கடவுளே ஆரம்பிச்சிட்டாங்கய்யா!! இதுக்கு தான் முன்னமே யோசிச்சேன்.. இவருக்கு நேரம் சரியில்லை. .சரி.. புலி வாயில தலைய கொடுத்துட்டார் இனி எடுப்பது அவரின் செயல்.

"உடம்பு சரீரம் என் உயிரை தாங்கி இருக்கும் இடம், ஆத்மா.. ஐ திங்க் உயிர்"

"உங்கள் உயிர் இந்த உடலுக்கு சொந்தமானதா"

"எஸ் ஐ கெஸ்"

"இல்லை உடம்பு என்பது நிரந்தரமில்லாதது, உயிர் மட்டுமே நிரந்தரம், இன்று இது கவிதா என்ற பெயருடைய இந்த உடலில் இருக்கிறது, நாளை வேறு உடலை சென்று அடையும், அது போல் நேற்று இது வேறு உடலில் இருந்து உங்கள் உடலுக்கு வந்தது.., உடல் என்பது ஆசை,அழியக்கூடியது, அது நிரந்தரம் இல்லை உயிர் என்பது தான் நிரந்தரம், இது உடல் விட்டு உடல் மாறி மாறி சென்று கொண்டே இருக்கும், அதனால் அழியக்கூடிய எதிலும் நம் கவனத்தை செலுத்தாமல், அழியாத உயிர் என்கிற ஆத்மாவின் மீது மட்டும் நம் கவனம் இருக்க வேண்டும், அதற்காக நான் தியானம் பழகவேண்டும்..."

ஓ..அதான் நீங்க இப்படி தலை விரி கோலமாக உடலுக்கு (தோற்றத்திற்கு)முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறீர்களா? என்னால் அதற்கு மேல் சும்மா இருக்க முடியவில்லை. அவரை இன்னமும் கூர்ந்து கவனித்தேன்,நிஜமாக அவர் வாழ்க்கையின் ஆசைகளாக துறந்தவரா என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆசை வந்தது. கண்களை இப்படி அப்படி எடுக்கவில்லை. என் பார்வையை அவரால் சந்திக்க முடியவில்லை என்பதை என்னால் உணரமுடிந்தது. ஆனால் நான் விடுவதாக இல்லை, உடலையும், உயிரையும், தோற்றத்தையும் பேசுகிற வயது உனக்கு இல்லை. எதற்கு இந்த வெளி நடிப்பு என்று என் உள் மனது சத்தம் போட்டது. அதனால் என் பார்வையின் ஆழம் அதிகமானது.

"அப்படி என்றால் இது எனக்கு சொந்தமான உயிர் இல்லை.. யாருடையதோ எனக்கு வந்துள்ளது, பின் யாரிடமோ சென்றுவிடும்."

புன்னகையுடன்..."ஆமாம்....ரொம்ப சரி......உயிர் என்பது எங்கிருக்கிறது...?

"ஹார்ட் ஆர் ஹார்ட் பீட் ஆக இருக்கும் என்று சொல்ல நினைத்தேன் என்றாலும் இவர் உயிர் நம்முடையது இல்லை என்கிறாரே, அப்போது எப்படி இதை சொல்லுவது என்று யோசித்து, பின் பட்டென்று இரு புருவங்களுக்கும் நடுவே ஒரு விரலால் சுட்டி காட்டி "புருவ மத்தி" என்றேன்...

என் மன ஓட்டம் அவருக்கு புரிந்ததா என்று தெரியவில்லை.."ம்ம் ரொம்ப சரி புருவ மத்தித்தான்... " என்று சொல்லிவிட்டு ஒரு புன்முறவல், ஒரு இடைவெளி..."உயிர் எப்படி இருக்கும்? "

"................"

"நிங்கள் கவிதா உங்களுக்கு இந்த உருவம் அடையாளம்.. எனக்கு இந்த உருவம் ஒரு அடையாளம் இல்லையா அது போல் உயிர் என்பது எப்படி இருக்கும் அதன் அடையாளம் என்ன?"

கொஞ்சம் யோசித்தேன்.. என்னவாக இருக்கும்.. எனக்கு என் தாத்தா நினைவுக்கு வர, ராமலிங்கசுவாமி நினைவுக்கு வர, "ப்ராப்பளி ஜோதி வடிவமாக.. ஆரன்ஞ் இன் கலர்?"

என்னுடைய பதில்கள் அவருக்கு திருப்தியாக இருப்பதாக உணர்ந்தேன். என் கண்களை அவரிடமிருந்து எங்கும் செல்லாமல் முழு கவனுத்துடன் பார்த்துக்கொண்டேன்.

திரும்பவும் விடுவதாக தெரியவில்லை அடுத்து லேசான புன்னகையுடன்..."கடவுள் என்பது யார்"

"கடவுள் என்பது எனக்கு மேல் ஒரு சக்தி, எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. (நான் நேரில் பார்த்ததில்லை), பல விஷயங்களில் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்கிறேன். அதை கடவுள் என்று சொல்லிக்கொள்ளலாம்..ஐம் சாரி..ஐ டோட் ஹாவ் க்ளூ"

கொஞ்சம் சிரிப்பு அவருக்கு அதிகமானது. "கடவுள் என்று யாரை சொல்லுவீர்கள்"..

"ப்ராப்பளி "சிவன்" அவர் தான் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருகிறார்..ஆனால் அது சரியா என்பது எனக்கு தெரியாது, காரணம் நம் கவனம் சிதறிவிடாமல் இருக்க உருவ வழிப்பாட்டு முறை இருக்கிறது என்பதாக என் புரிதல். எனக்கு சிவன், மற்ற மதத்தினரும் கடவுள் என்று ஒருவரை வழிபடுகிறார்கள். அதனால் என்னால் கடவுள் என்பவர் சிவன் மட்டுமே என்று அழுத்தமாக சொல்லமுடியாது, அப்படி சொல்லுவது சரியும் இல்லை. அதற்கு தான் மனிதனை தாண்டிய உணரக்கூடிய அல்லது உணராத ஒரு சக்தி என்று முன்னமே சொன்னேன்" என்றேன்.

அவர் சில வினாடிகள் பேசவில்லை..சிரிக்கவில்லை.. என்னையே பார்த்துக்கொண்டு இருந்தார். பின் லேசாக சிரித்தார். "சரி அந்த சிவன் எங்கிருக்கிறார் தெரியுமா"

திரும்பவும் வேகமாக "ஐ கெஸ் ஹி மஸ்ட் பீ இன் "புருவ மத்தி" .!!

மீண்டும் புன்முறுவல் "ம்ம்...கடவுள் என்பவர் நம் உடலில் உயிராக புருவ மத்தியில் இருக்கிறார். அவரை உணர வேண்டும் என்றால் நம் ஆசைகளை கொஞ்சம் கொஞ்சமாக துரந்து அவரை தியானத்தின் மூலம் பார்க்க நம்மை பழக்கிக்கொள்ள வேண்டும். எப்போது நாம் ஆசைகளை நம் கட்டுப்பாட்டில் வைக்கிறோமோ..அப்போது நாம் கடவுளை காணமுடியும்.. "

என் பொறுமை பறந்தது. "தியானம் எப்போது சொல்லி தருவீர்கள்"

ஒரு புன்முறுவல் "இன்னும் 6 நாட்கள் வகுப்புக்கு வாருங்கள்"

"இப்படி த்தான் வகுப்பு இருக்குமா? அதான் நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் சரியாக பதில் சொல்லிவிட்டேனே நேராக தியானம் போலாமே?"

என்னை நிதானமாக பார்த்தார்....."நாளை வாருங்கள் இதே நேரம் அடுத்த வகுப்பு, இப்போது அந்த ரூமில் சென்று அமைதியாக 10 நிமிடம் அமர்ந்து தியானம் செய்யுங்கள்"

"நீங்கள் எனக்கு தியானம் சொல்லி தரவில்லை எப்படி செய்வது?"

"பரவாயில்லை பேசாமால் வேற்று சிந்தனை இல்லாமல் கண்ணை மூடி 10 நிமிடம் உட்கார்ந்து விட்டு போங்கள்"

"அது என்னால் முடிந்தால் வீட்டிலேயே செய்வேனே.. இங்கு ஏன் வரவேண்டும்? "

"..................இப்படித்தான் ஆரம்பித்தில் இருக்கும் பிறகு எங்களை போல நீங்களும் நன்றாக பழகி விடுவீர்கள்"

"சரி.... " நானும் சென்று அந்த ரூமில் உட்கார்ந்து கண்ணை மூடினேன். .கொசுக்கடி ஆரம்பமானது.. ம்ம் அப்புறம் என் கவனம் முழுதும் கொசுவை அடிக்கவே சரியாக இருந்தது.

* * * * * * * * * * * * *

அடுத்த நாள்....

நான் சென்று அமர்ந்தேன்..

அவர் என்னை பார்த்தவுடன் எழுந்து வேக வேகமாக பின்புறம் சென்றார். ஏன் இப்படி ஓடுகிறார் என்று நினைத்து காத்திருந்தேன்..திரும்பி வந்தார்...

:)

முகம் கழுவி, பவுடர் போட்டு, தலைவாரி....... புது பொலிவுடன், அழகாக வந்து அமர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தார். ....:)

நேற்று அவர் சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது...

"கடவுள் என்பவர் நம் உடலில் உயிராக புருவ மத்தியில் இருக்கிறார். அவரை உணர வேண்டும் என்றால் நம் ஆசைகளை கொஞ்சம் கொஞ்சமாக துரந்து அவரை தியானத்தின் மூலம் பார்க்க நம்மை பழக்கிக்கொள்ள வேண்டும். எப்போது நாம் ஆசைகளை நம் கட்டுப்பாட்டில் வைக்கிறோமோ..அப்போது நாம் கடவுளை காணமுடியும்.. "


இவ்வளவு தெளிவாக நேற்று வரை இருந்தவர் அழிய கூடிய உடலுக்கும் தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறாரே....

அடுத்த நாளிலிருந்து அங்கு நான் செல்லவில்லை... :)

அணில்குட்டி அனிதா:- எங்க போனாலும் ஏதாவது செய்துட்டு வந்துட வேண்டியது.. இதை படிச்ச பிறகாச்சும் அம்மணிக்கிட்ட ஜாக்கறதையா இருங்க மக்கா... எத்தனையோ வாட்டி நானும் சொல்லிக்கிட்டே தான் இருக்கேன்.. ஆனா எங்க.....?!! :(

பீட்டர் தாத்ஸ் :-“Empty your mind, be formless, shapeless - like water. Now you put water into a cup, it becomes the cup, you put water into a bottle, it becomes the bottle, you put it in a teapot, it becomes the teapot. Now water can flow or it can crash. Be water, my friend.”