வேளச்சேரிக்கு வந்த புதிதில், வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். எல்லா காலி இடங்களும் தண்ணீரால் வருடம் முழுதும் மூழ்கி இருக்கும். மழை வரும் போது, எப்படியும் ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் இடுப்பளவு அல்லது முழங்கால் அளவு தெருவில் தண்ணீர் நிற்கும், அதில் தான் நடந்து செல்ல வேண்டி வரும். அதில் எல்லா ஜீவராசிகளும் நம்முடன் ஒன்றாக கலந்துவிடும்.

பகல் இரவு பாரபட்சமின்றி தவளையின் சத்தம், மிக எளிதாக கண்ணில் படும் எல்லாவித பாம்புகளும் தெருவின் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் நீந்திசெல்லும், நத்தை, ஆமை, அட்டை, பாம்பை பிடிக்க கீரி, மீன் என்று நம்முடனே அவையும் இருக்கும். நல்ல பாம்பு கூட பார்த்து இருக்கிறேன். இது பழகிபோன ஒன்று, என்னவோ போன வருடம் தீடிரென்று தண்ணீர் தேங்காமல் இருக்க புதுதிட்டம் என்று சொல்லி, வாய்க்கால் வெட்டி ஏரிக்கு எடுத்துசெல்கிறோம், இனி வேளச்சேரியில் தண்ணீர் தேங்கவே தேங்காது என்றனர்.

வாய்க்கால் வடிவவைக்கும் போதே (எங்கள் வீட்டின் அருகில்), அதன் கான்ராக்ட்ரர், கண்காணிக்க வரும் பொறியாளர் என்று எல்லோரையும் எப்படி இது சாத்தியப்படும், நாங்கள் இருப்பதே ஏரியில் அதுவும் எதையுமே சரிப்பார்க்காமல் ஏனோ, தானோ என்று கட்டுகிறீர்களே..இதனால் எங்கள் தெருவின் அகலம் தான் குறைகிறதே தவிர ஒரு பலனும் வர வாய்பில்லையே என்று அவரிடம் கேட்டேன். ஆனால் அந்த பொறியாளர் மிக விரிவாக, தெளிவாக அந்த திட்டத்தை விளக்கினார். நானும் சரி எப்படியோ தண்ணீர் இனிமேல் நிற்காமல் இருந்தால் நல்லது,மழை வரும்போது பார்க்கலாம் என்று காத்திருந்தேன்.

இப்போது.. இந்த கொடுமையை யாரிடம் சொல்லுவது, தண்ணீர் முன்பை போலவே எந்த வித மாற்றமோ நிவாரணமோ இந்த வாய்க்கால்களால் ஏற்படவில்லை. எதற்கு இதை கட்டினார்கள் என்றே புரியவில்லை. முந்தைய பதிவில் சொன்னது போன்று கொசுக்கள் தான் அதிகம் அனுபவிக்கின்றன அவற்றால் நாங்களும் அனுபவிக்கிறோம்.

திட்டமிட்டு இது போன்ற பிராஜக்ட்டுகள் ஆரம்பிக்கும்போதே அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயமாட்டார்களா? தண்ணீர் வடியவேண்டும் என்று கட்டப்பட்ட இந்த கால்வாய்கள் குறைந்தபட்ச சிரத்தையுடன்,திட்டமிட்டு வடிவமைத்து இருந்தால் எத்தனை உபயோகமாக இருந்து இருக்கும். தனியார் காண்ட்ராக்டர்கள் இப்படி பொது மக்கள் சம்பந்தமான வேலைகளை எடுத்த் செய்யும் போது ஒரு 10% சதவிகிதமாவது மக்களுக்கு திட்டம் போய் சேரும்படியாகவும், உபயோகமாகவும் செய்தால் நன்றாக இருக்கும்..

செய்வார்களா?

அணில்குட்டி அனிதா:- செய்யமாட்டாங்க.. என்னா பண்ண போறீங்க..? நானும் போனா போகுது போனா போகுதுன்னு பாத்தா..ரொம்பத்தான்..!! என்ன செய்ய போறீங்க..சாக்கடைய இடிக்க போறீங்களா இடிச்சிக்கோங்க.. எங்கயாவது போய் சவுண்டுவிட போறீங்களா விட்டுக்கோங்க... ? உண்ணாவிரதம் இருக்க போறீங்களா? இருந்துக்கோங்க.. கவி நீங்க எழுதறது எனக்கே போர் அடிக்குது..... வந்தோம்மா.. ஆத்தாடி, அம்மாடி, செத்தாண்டி, பொழச்சாண்டி ன்னு எழுதினோம்மான்னு இல்லாம... நீங்களும் உங்க ப்ளாகும் விடுங்க! இனிமே நான் எழுதறேன்.. எனக்கு தான் உங்களவிட ரீடர்ஸ் ஜாஸ்தி. .நானாவது லைஃப என்ஜாய் பண்றேன்.. போங்க அந்தாண்ட..... என்னா மக்கா ஓகே தானே..?!!

பீட்டர் தாத்ஸ் :- “The best way to find yourself is to lose yourself in the service of others.” - Mahatma Gandhi