பயணக்குறிப்புகள் - ஸ்ரீநகர்/குல்மார்க்/சோனாமார்க்

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரின் கோடை காலத்தலைநகர். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தென்னிந்திய நதிகளுடன் ஒப்பிடும் போது, அதிக நீர்வரத்தோடு, அகலம் குறைவாகவே எனக்குப்பட்டது, நாங்கள் பார்த்த இடம் அப்படி இருந்ததோ என்னவோ.

சென்னையிலிருந்து தில்லிக்கு, தில்லியிலிருந்து  ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் சென்றோம். 24*7 ராணுவம் மற்றும் CRPF கண்காணிப்பில் ஸ்ரீநகர் இரண்டு கட்ட பாதுக்காப்பின் கீழ் இருப்பதாக விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்டது. அதை அங்கிருந்த திரும்பும் வரையில் கவனித்தோம்.  கடைத்தெரு, சுற்றுலாப் பயணிகள் குவியும்  இடங்கள், அரசு அலுவலகங்கள் என எங்கும் பாதுகாப்பு தெரிந்தது.

ஸ்ரீநகர் செல்ல ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் சிறந்த நேரம். . 

ஸ்ரீநகரில் பார்க்க வேண்டிய இடங்கள் -

மிக முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்களில் "தால் ஏரி" முதலிடத்தை பிடிக்கிறது. ஏரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்கு படகு வீடுகளில்


வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரைக்கு வந்து செல்ல சிகாரா எனப்படும் படகுகளை பயன்படுத்துகிறார்கள். நமக்கு இந்த படகுகள் ரூ.600/- லிருந்து கிடைக்கும். திறமையிருந்தால் இன்னும் குறைத்துக்கூட பேசலாம். டீ, காபி, காஷ்மீர் காவா எனும் டீ போன்றவை படகில் வந்து விற்பனை செய்கிறார்கள். எதுவாகினும் பேரம் பேசி விலை குறைத்து  வாங்குவது நல்லது. உதாரணத்திற்கு 100 ரூ மதிக்கத்தக்க பொருளை ரூ.500/- என்கிறார்கள்.

முகலாய தோட்டங்கள் -முகலாயர்களின் காலத்தில் கட்டப்பட்டவை. உள்ளே கட்டிடங்களின் வடிவமைப்புகள் இதனை உணர்த்துகின்றன. முக்கியமாக ஷாலிமார் கார்டன்ஸ், நிஷாத் பாக் தோட்டங்களுக்கு சென்றோம். 

தங்கியிருந்த விடுதியிலிருந்து 100 ரூ கொடுத்து தால் ஏரிக்கும், அங்கிருந்து ஷாலிமார் பார்க்கிற்கு 250 ரூ, திரும்ப அங்கிருந்து நிஹாத் பார்க்கிற்கு 100 ரூ யும் ஆட்டோவிற்கு கொடுத்தோம். 500 ரூ வரை கேட்டார்கள், பேரம் பேசி பிரயாணம் செய்தோம்.
 
Jamia Masjid - ஒரே நேரத்தில் 33,333 பேர் தொழுகை செய்யக்கூடியளவு பெரிய மஸ்ஜீத். உள்ளே அனுமதி உண்டு.சுற்றி கடைத்தெரு இருக்கிறது, தேவைப்படுபவை வாங்கலாம்.

காஷ்மீரில் இருந்து சால்வைகள் மற்றும் கம்பளிகளை வாங்கலாம். தவிர காஷ்மீர் டிசைன் சல்வார் வகைகள்  வாங்கலாம். காட்டன் என்று சொல்கிறார்கள், ஆனால் காட்டன் இல்லை. துணியும் அப்படி ஒன்றும் நன்றாகயில்லை.மரத்தால் ஆன கைவினை பொருட்கள் அதிகம், படகு ஒன்று நினைவுக்காக வாங்கிவந்தேன். 

நூடுல்ஸ் லிருந்து, தோசை, சப்பாத்தி,பூரி வகையறாக்கல், அசைவ உணவுகள், பிரியாணி என எல்லாம் கிடைக்கிறது. சாப்பாட்டுக்கு குறைவில்லை. 

குல்மார்க் ;

இது ஸ்ரீநகரிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் 2,690 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. ஒரு நாள் பயணமாக டாக்ஸி அமர்த்திக்கொண்டு கிளம்பினோம். போகிறவழி நெடும்பயணமாக மலைகளின் கிராமங்களின் ஊடே சென்றது.  குல்மார்க் கில் பனிமலைக்கு செல்ல முன்கூட்டியே இங்கிருந்தே


ஆன்லைன்லில் பதியவேண்டும், எங்களுக்கு தெரியவில்லை. அங்குபோய் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. குதிரை மூலம் மேலே சென்று வரலாம் என்றனர். அதிக பணம். கீழே மட்டும் சுற்றிவர ஒரு குதிரைக்கு 3000 ரூ என பேசினர். ரொம்பவும் பேசி ஒருவருக்கு 1000 ரூ என பேசி மலையேறாமல் கீழே இருந்த இடங்களை மட்டும் சுற்றினோம். ஒரு கட்டத்திற்கு மேல் என் எல்-5 எலும்பு வலி பிரச்சனையால் குதிரைமேல் உட்கார்முடியால இறங்கி 1 கிமி தொலைவு நடந்தே வந்தேன். இடுப்பு வலி இருப்பவர்களுக்கு வெகுதொலைவு, மலை ஏற்ற இறக்க குதிரை சவாரி சரிவராது.குதிரை சவாரிக்கு தனியாக ஒரு ஷூ வாடகைக்கு வாங்கவேண்டும். அதுவும் பேரம் தான். சாமர்த்தியமிருந்தால் அதிக நஷ்ட ப்படாமல் இருக்கலாம்.

மகாராஜா மாளிகை, சிறு குன்று என ஒரு சில இடங்களே காண்பிக்கப்பட்டது. குதிரை மேய்ப்பவர் அலேக்காக லாகவமாக என்னைத்தூக்கி ஒவ்வொரு முறையும் ஏற்றியது ஆச்சரியபடும்படி இருந்தது. ஆனால் இடுப்பு வலிதான்..இப்ப நினைத்தாலும் குதிரை சவாரி பயமாகவேயுள்ளது. மகாராஜா அரண்மனை இப்பவும் ஏதாது விழாக்களுக்களின் விருந்துக்கு பயன்படுத்த படுகிறது என தெரிந்தது. முகலாய அரசர்களின் கோடை வாசஸ்தலமாக இவ்விடம் அமைக்கப்பட்டுள்ளதாக அரண்மனை குறிப்புகள் சொல்கின்றன.

குதிரையில் 2-3 மணி நேரத்தில் சுற்றி வந்துவிடலாம். குதிரையிலிருந்து இறங்கியபிறகு ராணி கோயில் ஒரு குன்றின் மேல் இருக்கிறது. அதை நாமே சென்று பார்த்துவிட்டு வரலாம். 

குல்மார்க்கில் வேறொன்றுமில்லை. திரும்ப இரவுக்குள் ஶ்ரீநகர் திரும்ப வந்துவிட்டோம். 

சோனாமார்க்;

ஸ்ரீநகரின் வடகிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சிந்துநதி வழி நெடுக பார்க்கமுடிந்தது. குழாங்கற்கலில் வெள்ள வெளேரென தண்ணீர் உருண்டு 
ஒரு சலசலப்பு சத்தத்தோடு ஓடுகிறது. கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி.இங்கேயும்
குதிரை சவாரி. ஒரு வேன் பிடித்து சில சுற்றுளா இடங்களுக்கு சென்றோம். இங்கேயும் 
பேரம் பேசவில்லையெனில் நஷ்டம் தான். ஒருவருக்கு 100 ரூ அதிகமே. ஆனால் 5000 ரூ 
வரை கேட்கிறார்கள்.இருவருக்கும் சேர்த்து 800 ரூ கொடுத்தோம்.

இங்கேயும் எல்லா உணவு வகைகளும் கிடைக்கும். சின்னதாக ஒரு குளம், ஒரு ஆறு,  போய் 
வருகின்ற பாதையில் உள்ள மலைகள் என ஒன்றும் சுற்றிப்பார்க்க அதிகமில்லை. இரவுக்குள் ஶ்ரீநகர் வந்துவிட்டோம்.

பேரம் பேச தெரிந்தால், பாக்கெட் காலி ஆகாமல் வீடு திரும்பலாம் என்பதே இப்பயணத்தில் கற்றுக்கொண்டது.

 Picture courtesy : Thankyou Google. 

பொன்னியின் செல்வன் -2 PS-2 -Review

படம் சாதாரணமாக இருக்கு. ஏன் ஆஹா ஒஹோ ன்னு எழுதறாங்கன்னு தெரியல. அதிலும் சிலர் பாகுபலி யை மிஞ்சிவிட்டதாக எழுதுவது சத்தியமா ஏன்னு புரியல. பாகுபலி பிரம்மாண்டம். இதில் அப்படி ஒன்றும் பிரம்மாண்டமில்லை.

நடிகர் கார்த்தியை தவிர எல்லா நடிகர்களின் முகத்திலும் மணிரத்னத்தின் முகத்தை ஒட்டிவிட்டு படத்தைப் பார்த்தால் தெரியும், ஒரே மாதிரியான வசன உச்சரிப்புகள், எந்த உணர்ச்சியானாலும் அதே முகபாவனை.. பாவனைன்னு க்கூட சொல்லமுடியாது.

ஐஸ்வர்யாராய் விக்ரம் வரும் கடைசி காட்சிகளை அதிகமாக பாராட்டுகிறார்கள். அந்தம்மா என்னவோ எங்கேயோ பார்த்தபடி/முழித்தபடி/வெறித்தபடி முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வசனம் பேசுகிறார். விக்ரம் பதிலுக்கு அதே மாதிரியான முழித்த பார்வையோடு அல்லது அதற்கான முயற்சியோடு கொஞ்சம் நெற்றியை சுருக்கி பேசுகிறார். என்னத்த சூப்பரான நடிப்பு இதில் இருக்குன்னு தெரியல.. Over hyped scene by public.

சுந்தரசோழர் எங்கேயுமே சுந்தரசோழராக தெரியாமல் ' ஹாய் செல்லம்' னே சொல்றமாதிரி இருந்தது எனக்கு. தலையை எப்பவும் போல ஒரு பக்கமாக திருப்பிக்கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். 

வானதி , பூங்குழலி & மணிமேகலை கதாப்பாத்திரங்கள் புத்தங்கத்தில் வேற லெவலில் இருக்கும். படத்தில் அவர்களும் மணிரத்னத்தின் முகத்தை மாட்டிக்கொண்டு வருகிறார்கள், btw மணிமேகலை படத்தில் இல்லவே இல்லை. 

சின்ன வயது நந்தினி, கரிகாலன் நடிப்பும் அதே. முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் வசனத்தை பேசுவது, நடப்பது, ஓடுவது.. தளபதி'யில் ஆரம்பித்து துக்கம்/கோவம் னு வந்தால்.. ஆஆ..... ஓ ன்னு ஆகாயத்தைப் பார்த்து தொண்டக்கிழிய கத்துவது தான் மணிரத்னத்தின் ஸ்டைல். இதை விக்ரம் பிரபு 2-3 இடங்களில் செய்யும் போது கடுப்பாகிறது. ஏன் கத்தறாரு.. அழத்தானே செய்யனும்னு தோணிச்சி. 

குந்தவை வந்தியத்தேவன் காதல் காட்சியும் Over hyped scene by public.ரொம்ப சாதாரணமா இருக்கு. படகை ஓட்டிவந்த படகோட்டிகள் நட்ட நடு ஏரியில் எங்கே காணாப்போனார்கள் என்று தெரியவில்லை. குந்தவையின் குரலை வந்தியத்தேவனால் கண்டுபிடிக்க முடியலங்கறதே இந்த காட்சியின் உட்சக்கட்ட தவறு/தோல்வி. திரிஷாவின் வயது முகத்திலும் உடலிலும்.தெரிகிறது,

விக்ரம்பிரபு விக்ரமை சந்தித்து பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கி இறந்துபோனார் என்று சொல்லும் காட்சியில் விக்ரம் தலைமுடி காதை தாண்டியுள்ளது. அதற்கு அடுத்து விக்ரம் வரும் காட்சிகளில் எல்லாம் தலைமுடி தோளைத்தாண்டி வளர்ந்து தொங்குகிறது. 

சோழ சாம்ராஞ்சியத்தில் நாட்டின் உள் கட்டமைப்பு, கோட்டை, அதன் பாதுகாப்பு, கட்டிட அமைப்பு, பாதாள வழிகள் எல்லாம் எத்தனை பாதுகாப்போடு அமைக்கப்பட்டவை என்பதும்,  சோழர்களின் நிர்வாகத்திறமை வாய்பிளக்க வைத்த வரலாற்று சான்றுகளாக இன்னும் இருக்கின்றன.. இதில் பாதாள வழியில் உள்ள ஒரு சின்ன ஓட்டை வழியாக சுந்தர சோழரின் அறை தெரிய, அங்கிருந்து அவரை தாக்கி கொல்ல பாண்டியர்கள் முயற்சி செய்கிறார்கள். நம்ப முடியல. அதே சமயம், சுந்தர சோழர் அறையிலிருந்து அந்த துவாரம் தெரியவில்லை. எப்படி இது சாத்தியம். ஒரு அரசரின் அறைக்கு இவ்வளவு தான் பாதுகாப்பா? இதைக்கூடவா இத்தனைப்பெரிய படத்திற்கு home work செய்யல?. 

ஊமைஅரசி - இந்தம்மா தான் பொன்னியின் செல்வனின் hidden queen. இவரை பின்பக்கத்திலிருந்து சில காட்சிகளில் காட்டிவிட்டு, முகத்தை காட்டும் போது கொன்றுவிடுகிறார்கள்.

ஜெயம்ரவி தான் கதாநாயகன், ஆனால் பொம்மை போல எப்பவும் ஒரு புன்முறுவலோடு, மணிரத்னத்தின் நாயகனாக வளம் வருகிறார்.

ஜெயசித்ரா - பாவமா இருக்காங்க. அதே மணிரத்னத்தின் முகமூடி. பிரபு ஒரு காட்சியில் நன்றாக நடித்துள்ளார், முகமூடியில்லை. சரத்குமார், பார்த்திபன் எல்லாம் சுமார். ஒரு வேளை நன்றாக நடிக்கக்கூடியவர்களாக இருந்தாலும், மணிரத்னம் அவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை கொடுக்க வாய்பில்லை.

நாகை புத்தபீடம்  பிரம்மாண்டம், இதனை கடல் அடித்துசெல்லும் காட்சி ஒன்று புத்தகத்தில் இருக்கும், அது படத்திலில்லை. ஏமாற்றம்.  

கடைசியில் போர் தேவையில்லாத ஆணி. 

இசைப்புயலின் இசை படத்திற்கு +. BGM ரொம்பவே நல்லாயிருக்கு.

மூலக்கதை" பொன்னியின் செல்வன்" னு டைட்டிலில் வருகிறது. அதனால்.. அதிலிருந்து இது எடுக்கப்பட்டதுன்னு நினைச்சிக்கிலாம். யாரும் எடுக்கவே முடியாதுன்னு விட்டுவிட்டுதை, மணிரத்னம் எடுத்து இயக்கி வெளியிட்டிருப்பதற்கு பாராட்டுகள். A Manirathnam movie. Historical movie in his view & stand. 

எல்லாவற்றையும் விட இன்ட்டலெக்சுவல் சுஹாசினியை படத்திலும் எழுத்திலும் பேச்சிலும் எங்கும் கொண்டுவராமல் இருந்ததற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி & பாராட்டுகள். 

எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி படத்தை கண்டிப்பாக குடும்பத்தோடு ஒரு முறை பார்க்கலாம். 

 #ponniyinselvan2 #ponniyinselvan2review #ponniyinselva2_review 

 Pictures courtesy : Thankyou google.

கள்ளி (Cactus) செடிகள் கதை

வீட்டு பால்கனி தோட்டத்தில், நான் அதிகம் விரும்பி வளர்க்கும் தாவரம் காக்டஸ். இதில் கற்றாழையில் ஆரம்பித்து பலவிதமான கள்ளி செடிகளை வளர்த்து வருகிறேன். பொதுவாக காக்டஸ் க்கு பாட்டில் மூடியில் தண்ணீர் ஊற்றினால் போதும். என்னிடம் குட்டி குட்டி காக்டஸ் நிறைய உள்ளது. அதில் குட்டியா உருண்டையா இருக்க காக்டஸ் லேசா கைப்பட்டா போதும் கையோடு வந்துடும். 

சென்னையிலிருந்து திருவாரூர் சென்றபோது, எல்லாவற்றையும் கொண்டு வந்துட்டேன். பின் பக்கம் வராண்டா போன்ற இடத்தில், மழை கொட்டாத இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தேன். 

 போன வாரத்தில், பக்கத்தில் எங்கேயோ நாய் குட்டிபோட, அதை தேடிக்கொண்டு தோட்டத்தின் பின் பக்கத்தில் வந்து தேடிய 3-4 பசங்க கண்ணில் இந்த காக்டஸ் பட்டுவிட்டது. 

ஆசையை அடக்கமுடியாமல், நேர்மையாக முன் பக்கம் கேட்டில் வந்து நின்று, ' ஆண்ட்டி, அந்த காக்டஸ் எங்களுக்கு கொடுக்கறீங்களா?' ன்னு கேட்டானுன்க.. உங்களுக்கு ஏன்டா நான் தரனும்னு மைன்ட் வாய்ஸ்ல நினைச்சிக்கிட்டு, 'ஸாரிப்பா, அது சென்னையிலிருந்து கொண்டு வந்து வச்சியிருக்கேன், கொடுக்கற ஐடியா இல்ல" ன்னு சொல்லிட்டேன். முகமெல்லாம் வாடிப்போய்.. 'ஓக்கே'ன்னு போயிட்டானுங்க. 

ஒரு ஓசி நாய் குட்டிங்களயே ஒரு வாராம வீடு வீடா தேடறானுங்க.. இதை விட்டு வைப்பானுங்கன்னு எனக்கு தோணல. உடனே வூட்டுக்காருக்கிட்ட '.ப்பா கண்டிப்பா நாளைக்கு வந்து இத திருடுடிட்டு போயிடுவானுங்க.. நாம வேற இடத்தில் மாத்தி வச்சிடுவோம்னு' சொல்ல.. 

எப்பவும் போல,' சின்ன பசங்க எவ்ளோ டீசன்ட்டா வந்து கேட்டுட்டு போறானுங்க.. அவனுங்கள போய் சந்தேகப்படறியே' ன்னு திட்டு விழுந்தது. எனக்கு என்னவோ, அவனுங்கள நம்ப முடியல.... நானே மாடியில் உள்ள போர்ட்டிகோவிற்கு மாத்திட்டேன். அதில் அந்த குட்டி ரவுண்டு, தொட்டா கையோட வரும்னு சொன்னேனே, அதில் இரண்டு பிச்சுக்கிட்டு வந்தத, குட்டி கப்பில் நட்டு வச்சிருந்தேன். அது வளராமல் காய்ந்து போய் இருந்தது, நானும் மனம் தளராமல் தண்ணீர் விட்டுக்கிட்டு இருந்தேன். அதையும், கற்றாழையும் மட்டும் அங்கேயே வைத்துவிட்டேன். 

அடுத்தநாள் மாலை, சமையலறையில் வேலையாக இருக்க, இவனுங்க சத்தம் கேட்டது. தோட்டத்தின் பின்பக்கம் செல்வதும் தெரிந்தது. குடுகுடுன்னு ஓடி பின்னாடி ரூம் ஜன்னல் வழியாக கவனித்தேன். 'எங்கடா காணோம்'னு கிட்ட வந்தவனுங்க, அந்த காய்ந்த காக்டஸ் சில் ஒன்னை நைசா கிள்ளி எடுத்து, எடுத்ததே தெரியாத மாதிரி உள்ளங்கைய வச்சிக்கிட்டு போயிட்டானுங்க. 


வூட்டுக்கார் ஆபிஸ் விட்டு வந்ததும் சொன்னேன். ஆயிரம் வேலையில் என்னோட புலம்பலெல்லாம் அவர் காதில் எப்ப விழுந்திருக்கு... இல்ல எப்ப நாம சொல்றதை மதிச்சி கேட்டு இருக்காங்க..' ஓ..'னு ஒரு பதில் சொல்லிட்டு அவர் வேலைய பாக்க போயிட்டாரு.. காய்ந்ததை எடுத்தாலும் எனக்கு மனசு கேட்கல.. அதையும் தூக்கிட்டு வந்து உள்ள வச்சிட்டேன். திருட்டு பயபுள்ளைங்க... கம்ளைன்ட் செய்லாம்னு நினைச்சி.. பின்ன நாம மாங்கா அடிச்சது.. ன்னு நம்மோட சின்ன வயசு கேவலங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வர.. சரி தொலையட்டும்னு விட்டுட்டேன்.  

பீட்டர் தாத்ஸ்:“I think that the best thing we can do for our children is to allow them to do things for themselves, allow them to be strong, allow them to experience life on their own terms, allow them to take the subway... let them be better people, let them believe more in themselves.” ― C. JoyBell C. 

Picture courtesy - Thank-you Google.

மயக்கம்..

மயக்கம்' என்னுடனேயே பலவருடங்களாக தொடர்ந்து பயணம் செய்து வருகிறது. எல்லாவிதமான மயக்கமும் அத்துபடி. முதல் மயக்கமே எனக்கு பசி மயக்கமாக இருந்ததால் இன்றளவும் அதை மறக்க முடியவில்லை. சென்னை பல்கலைகழகம் அருகில் நடை பாதையில் நடந்து கொண்டு இருக்கும் போது விழுந்தேன்.தொடர்ந்து சாப்பிடாமல் இருந்தால் மயக்கம் வரும் என்பதை அறிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்ததுன்னு நினைச்சிக்கலாம். :)

பிறகு இதே போன்று ஒரு முறை திநகர் ரங்கநாதன் தெருவில் மயக்கம் வர, விழுந்து மானம் போகாமலிருக்க, ஓடிச்சென்று ஒரு கடை வாசலில் உட்கார்ந்துக்கொண்டேன். எப்போது தெளிந்ததோ, நானாகவே எழுந்து வந்துவிட்டேன். மயக்கம்'  இரண்டாவது முறையே பழகிவிட்டது..

அடுத்து, உடல் சார்ந்த மயக்கங்கள். மாதாந்திர தேதிகளில் முதல் இரண்டு நாளில் ஏதோ ஒரு நாளில் கண்டிப்பாக மயக்கம் அடித்து விழுவேன். இரத்த சோகையே இதற்குப்பெரிய காரணம். இது தெரிந்ததால், பலவாறு என்னை பாதுக்காப்பாக வைத்துக்கொள்வேன் என்றாலும், சில நேரம் விழுந்து விடுவது உண்டு. அதிகமான மன உளைச்சலோடு அலுவலகம் சென்று, எனையறியாமல் மயக்கம் அடித்து விழுந்து, கூட்டம் கூடி,அது அலுவலக முதல்வர் வரை சென்று பெரிய விஷயமானது. அலுவலகத்தில் விழுந்த இடம் அப்படி !


இது தவிர்த்து, மருத்துவமனை மயக்க மருந்து கொடுக்கும் போது வரும் மயக்கம். கை நரம்பில் ஊசிப்போடும் போது, 1, 2 சொல்ல சொல்லுவார்கள். 4-5 வரை எண்ணியிருந்தால் அதுவே அதிகம் என்று நினைக்கிறேன். அவ்வளவு தான் தெரியும், சுற்றி இருப்பது எதும் தெரியாது,  ஏதோ சத்தங்கள் மட்டும் மிக லேசாக கேட்கும், மிக அடர்த்தியான அடர் ஆரஞ்சு நிறம் நிரம்பிய ஒரு பெரிய குழாய் அல்லது அது போன்ற ஏதோ ஒன்றில் அதி வேகமாக நுழைந்து 300-400கிமீ வேகத்தில் சென்றுக்கொண்டே இருப்பது போல இருக்கும்.. எவ்வளவு நேரம் என்று தெரியாது, ஆரஞ்சு நிறம் தெரியும் வரை பார்த்துக்கொண்டிருப்பேன், வேகமாக செல்வதை உணர்வேன்..பிறகு அதும் காணாமல் போய் ஆழ்ந்த நித்திரைக்கு செல்வேன் என்று நினைக்கிறேன். ..அப்படி ஒரு நாளில்.......

******

ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து அறைக்கு வந்துவிட்டதாக நினைவு. படிக்கையில் கிடத்துகிறார்கள். போர்வையால் என் உடல் தெரியாமல் போர்த்தி விடுகிறார்கள். யாரெனத்தெரியவில்லை. நேரம் செல்கிறது... (செல்வதாக நினைத்துக்கொள்கிறேன்).
 
"கவிதா காலை தூக்கி வைங்க..." செய்தேனா என்று தெரியவில்லை. அவர்களாக என் காலை தூக்குகிறார்கள், என் கால்கள் தான் ஆனால் எனக்கு ஏதும் தெரியவில்லை. கால்களை நீட்டிவிடுகிறார்கள்... என்ன செய்தார்கள் என தெரியவில்லை. கண்ணை திறக்கமுடியவில்லை. வயிற்றை தடவ முயற்சித்து கையை தூக்குகிறேன்.. கை என் சொல் பேச்சிக்கேளாமல் 'தொப்'பென்று கீழே விழுகிறது.

"ச்சும்மா இரும்மா.. கைய எல்லாம் தூக்காத என்ன வேணும் உனக்கு....

" ............. ட்ரஸ்.........."

"போட்டுத்தான் இருக்கு........ பேசாம தூங்கு...." போர்வை சரிசெய்கிறார்....

 கண் விழிக்க முயற்சித்துத் தோற்கிறேன். நினைவுகளிலும் தெளிவில்லை.

"தண்ணி....." நடப்பவற்றை உணர்ந்துக்கொள்கிறேன். பாட்டிலில் நேராக என் வாயில் ஊற்ற முயன்று... எடுத்துவிடுகிறார். . சற்று இடைவெளி.......... இப்போது பாட்டில் மூடி என் உதட்டை தொடுகிறது. வாயைத்திறக்க முயற்சி செய்கிறேன். வாயில் பழச்சாறு ஊற்றப்படுகிறது. இரண்டு முறை வாயை திறந்திருப்பேன்..

"போ.....து...... ..........எ..... குழந்த....."

"வந்துடுவான்...சொல்லி இருக்கேன்...." வாயின் ஓரத்தில் வழிந்த பழச்சாறு துடைக்கப்பட்டது. அதற்கு மேல் நினைவில்லை... ... திரும்ப எவ்வளவு நேரத்தில் எனக்கு நினைவு திரும்பியது என்று தெரியவில்லை. உடனேவாகக்கூட இருக்கலாம்.. நினைவு வரும்போதும், வெளி சத்தம் கேட்கிறது, என்னால் கண்களை திறக்க முடியவில்லை.....

 "என் குழந்த ........"

".. ..வந்துட்டே இருக்கான்... ." ...

மிதப்பது போன்ற உணர்வு..... வாய் மட்டும் பேசுவதை நிறுத்தவில்லை, கண் விழிக்காமாலேயே.............. "சாப்...டீங்க.......ளா..?

"இன்னும் இல்ல.."

"அவன் வந்தா........................................... வாங்கித்தர............................................ சொல்லுங்.......................................................... .என்ன தனியா விடாதீங்க............................ .."

 ".. போகலம்மா... தூங்கு...முடியாம பேசாத.." ..

.இன்னமும் கண்ணை திறக்க முடியவில்லை, மறுபடியும்... ஆழ்ந்த உறக்கம்... நேரம் செல்கிறது....நினைவு வரும் போது, நேரம் சென்றதாக நினைக்கிறேன்... என் குழந்தையின் குரல் கேட்கிறது... கண் திறந்து பார்க்க முடியவில்லை....ஆனால் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன்..

 "ம்ம்மா....." ..................................அம்ம்மாஆ............" ...............................

 "ஏன்ப்பா கண்ணைத்தொறக்க மாட்டறாங்க... ? ............ கூப்டாங்கன்னு சொன்னீங்க... ?" "

அவளுக்கு மயக்கம் இன்னும் தெளியலடா..... நடுநடுவுல முழிக்கிறா.. உன்னைத்தான் கேக்கறா........"

அம்ம்மாஆ............"

அம்ம்ம்மாஆ............................."

"ஏய்..............." .................................... "

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....நோயாளி... ...................... "

முயன்றும் கண்களை திறக்க முடியவில்லை......................"..ம்ம்......... சாப்டியா...?" நான் பதில் சொன்னது அவனுக்கு கேட்கவில்லை.

 "அப்பா நான் கிளம்பறேன்.. கண்ணைக்கூட தொறக்க முடியாம கிடக்கறாங்க..ஏன்ப்பா ..???


 "மயக்க ஊசிப்போட்டு இருக்காங்கடா.. மயக்கம் இன்னும் தெளியல... "

"வலி சரியாப்போச்சாப்பா.. .. இனிமே அழமாட்டாங்க இல்லப்பா..."


."ஆமா. ... வலி இனிமே இருக்காதுன்னு தான் நினைக்கிறேன்.. . .கண்ணு முழிச்சி அவளே சொன்னாத்தான் உண்டு.... .."

********

 விழிக்கிறேன்.. இன்னமும் மயக்கம் முழுமையாக தெளியவில்லை. தள்ளாட்டம் இருந்தது.

"சாப்பிட்டீங்களா?"

"மணி 4.30 ஆச்சிடி.. சாப்பிடாம இருப்பேனா? உன்னை மாதிரி நினைச்சியா என்னை? டாக்டரை கூப்பிடவா.. நடப்பியா... போலாமா? நீ எழுந்துட்டா போலாம்னு சொன்னாங்க...

"பாத்ரூம் போகனும்ப்பா... . ."

"வா.... "

"நீங்க வேணாம் சிஸ்டர் கூப்பிடுங்களேன்.. "

"வா வா நானே வரேன்.. " கைத்தாங்களாக நடக்கிறேன்.. பாத்ரூம் சென்று...

"நானே போறேன்.. நீங்க வேணாம்.. "

"தள்ளாடற விழுந்துடுவ.. நான் வரேன்.."

"ம்ம்ம்..இல்ல வேணாம்ப்பா..... விழமாட்டேன்.. பிடிச்சிக்கிறேன்"

"கதவை மூடாத.." "சரி.. " திரும்ப வெளியில் வரும் வரை கதவோரம் நிற்கிறார்.

"போலாம்ப்பா.. இங்க வேணாம்.. ! வலிக்குதுப்பா... .நவீனை பாக்கனும் ! "

"ஏண்டி உனக்கே ஓவரா இல்ல. .காலையில தானே வந்தே. .அதுக்குள்ள என்ன ஆயிரம் வாட்டி அவனை பாக்கனும் சொல்ற... "

 "போலாம்ப்பா.. இங்க வேணாம்.. ! "

 "சரி சரி.. போலாம். .இரு டாக்டரை பார்த்துட்டு வரேன்.. "

தனியே பேசியபடி செல்கிறார். "மயக்கமா இருந்தாலும் விடாம பேசறா.. முழிச்சாலும் பேசிக்கிட்டே இருக்கா..... எப்பத்தான் வாய மூடுவாளோ தெரியல.... :( "

 (அவ்ளோவா பேசிட்டேன்.. ????! )
 
Picture Courtesy : Thx Google.

அணில் குட்டி அனிதா :
எல்லாஞ்சரி.. இது எப்ப நடந்தது.. இப்ப பதிவிடறீங்க? 
 
பீட்டர் தாத்ஸ் : When I faint, I feel guilty & Shy.   But my husband besides always to give his hand.

பயணக்குறிப்புகள் - ஜெய்சல்மேர் & ஜோத்பூர்

ராஜஸ்தான் மாநில தார் பாலைவனத்தில் அமைந்த ஜெய்சல்மேர் , ஜோத்பூர் நகரங்களைக்காண சென்றிருந்தோம். தனிப்பட்ட சூழ்நிலை காரணமாக உடனுக்குடன் இந்த பயணத்தைப்பற்றி எழுத இயலவில்லை. 

குறைந்தபட்சம் 4-5 நாட்கள் இல்லாமல் இரண்டு இடங்களையும் பார்க்க முடியாது.  இதில் 2 நாட்கள் இங்கிருந்துசென்று வர சரியாகயிருக்கும். ஜோத்பூருக்கு அநேகமாக எல்லா நகரங்களிலிருந்தும் விமானம், பேரூந்து, ரயில் சேவை உள்ளது. ஆனால் ஜெய்சல்மேர்'க்கு ஜோத்பூர் சென்று தான் செல்ல வேண்டியிருக்கும். நேரடியாக போக்குவரத்து வசதி குறைவே. 

ஜெய்சல்மேர் முழுவதும் மணல் பாலைநிலமாக உள்ளது.  ராஜஸ்தானின் "தங்க நகரம்" (Golden City) என்று அழைக்கப்படும் இந்நகரத்து வீடுகள், கட்டிடங்கள், கோட்டை, அரண்மனை என எல்லாமே அங்கு கிடைக்கும் மஞ்சள் நிற மணற்கற்கலால் கட்டப்பட்டு, நகரமே மஞ்சள் நிறமாக காட்சி அளிப்பதால் இப்பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. நவம்பரில் சென்றதால் பகலில் அதிக வெயிலும், இரவும் அதிக குளிருமாக இருந்தது. ஆண்டு முழுவதும் வறண்ட வானிலை கொண்ட இடமாகவே இருக்கிறது. இங்கு கம்பு, சோளம், வரகு, பார்லி போன்ற சிறுதாணியங்களைப் பயிரிடுகின்றனர். உணவு பழக்கமும் இவை சார்ந்தே உள்ளது. சோளம், வரகு , கம்பு சப்பாத்திகள் கிடைத்தன. கோதுமை சாப்பாத்தியும் கிடைக்கிறது. தவிர ராஜஸ்தானின் தாலி கிடைக்கிறது. இதில் பாஸ்மதி அரிசி சாதம், இரண்டு வகை காய்கறிகள், ஒரு பருப்பு குழம்பு, அப்பளம், சப்பாத்தி மற்றும் ராஜ்மா பயறு வகையில் செய்த ஒரு குழம்பு, ஒரு இனிப்பு, ஊறுகாய் என ராஜஸ்தான் மதிய உணவு பிரமாதம்.

ஜெய்சல்மேரில் முக்கியமாக பார்க்கவேண்டியது கோட்டை. மஞ்சள் நிற மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோட்டை, பகல் நேரத்தில் சூரியக் கதிர்களால் தங்கம் போல் ஜொலிக்கிறது. இதனால் 'தங்கக் கோட்டை' என்றும் சொல்லப்படுகிறது. இங்கு இப்போதும் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோட்டைக்குள் சென்று வந்தது போல இல்லாமல் ஒரு நகரத்தினுள் சென்று வந்தது போல இருந்தது. அன்றாட வேலைக்காக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள், தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருக்கும் வியாபாரி, சீருடை அணிந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வெளிநாட்டுப் பயணிகள், தெரு ஓர டீக்கடைகள், பிரெஞ்சு, இத்தாலிய,ராஜஸ்தான் உணவகங்கள், கார், சைக்கில், இரு சக்கர வாகனங்கள், வண்டி கடைகள், பால்/தயிர் விற்பவர்கள் என மன்னர்கள் காலத்தில் இங்கே வாழ்ந்த மக்களின் வம்சாவளிகள் இன்று வரை இடம் பெயராமல் வாழ்கிறார்கள். மக்கள் தொகை காரணமாக, கோட்டையை விட்டு வெளியேறி,  சுற்றியுள்ள இடங்களில் குடியேறி இருக்கிறார்கள்.

கோட்டைக்கு உள்ளே அழகான சிற்ப ஓவிய வேலைபாடுகள் நிறைந்த 7 ஜெயின் கோவில்கள் மற்றும் பல அரசகுடும்ப அரண்மனைகள் உள்ளன. வியாபாரிகள் கட்டி வசித்து வந்த வீடுகளை ஹவேலிகள் என்று அழைக்கிறார்கள். ஹவேலிகள் அவர்களின் வாழ்க்கை முறையையும், மேட்டிமைத் தனத்தையும், அன்றாட பழக்க வழக்கங்களையும் நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.  ஒவ்வொரு மாடியிலிருக்கும் ஜன்னல்கள் வழியாக ஜெய்சல்மேர் நகரத்தின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.இந்த கோட்டையை முழுமையாக சுற்றிப்பார்க்க 5-6 மணி நேரம் ஆகும். 

தவிர, இங்கு 28 கிலோ மீட்டர் தொலைவு வரை மட்டுமே பாயக்கூடிய கக்னி (Kakni) என்ற ஆறும், ஓர்ச்சில்/புஜ்-ஜில் எனும் ஏரியும் உள்ளது. இந்திய-பாகிஸ்தான் நாட்டு சர்வதேச எல்லை இங்கு உள்ளது.  அரசு அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது, கூட்டமேயில்லை. ஆர்வம்/நேரம் இருப்பவர்கள் சென்று பார்க்கலாம்.

ஜெய்சல்மேர் சென்றால் ஒரு நாள் இரவு பாலைவனத்தில் அமைக்கப்பட்ட ஏதோ ஒரு விடுதியில் (உங்களின் பட்ஜெட் க்கு தகுந்தார் போல) தங்கி, மாலையில் பாலைவனத்தில் ஒட்டக சவாரி, ஜீப் சவாரி, இரவு அவர்களின் பாரம்பரிய நடனத்துடன் சேர்ந்து அளிக்கப்படும் பாரம்பரிய உணவு போன்றவற்றை கண்டும் உண்டும் களிக்கலாம். காலையில் கோட்டை & மற்ற இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு , இரயில் பயணமாக ஜோத்பூருக்கு வரலாம். 

 ஜோத்பூர் பயணம் -

ஒரு முக்கியமான கலாச்சார மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரமான ஜோத்பூர் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். இந்நகரம் 'நீல நிற' நகரம் Blue City என்றும் 'சூரிய நகரம்' என்றும் பெருமையாக அழைக்கப்படுகிறது. இங்கு வீடுகளுக்கும், கட்டிடங்களுக்கும் நீல நிறத்தில் வண்ணம் பூசுகிறார்கள்.

ஜோத்பூரிலும் மிகப்பெரிய கோட்டை உள்ளது, இங்கு மக்கள் வசிக்கவில்லை ஆனால் 'Royal Marriages' நடைபெறுகின்றன. நாங்கள் சென்ற இரவு, ஒரு திருமணத்திற்காக 'கத்ரீனா கைஃப்' பின் நடனம் இருப்பதாக பேசிக்கொண்டனர். அநேக ஹாலிவுட் நடிகை, நடிகர்களின் திருமணங்கள் இங்கு தான் நடக்கின்றன. 

நான்  வேலை செய்யும் அமெரிக்க கம்பெனி முதலாளியின் சொந்த ஊர் ஜோத்பூர், அதிர்ஷடவசமாக அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கும் சமயம் நாங்களும் அங்கு சென்றதால், அவரின் ஆலோசனை மற்றும் ஏற்பாட்டின் படி ஜோத்பூரின் கோட்டை மற்றும் பிற இடங்களை சுற்றிப்பார்த்து வந்தோம். 2 நாட்கள் அவரின் உபசாரத்தில் தலைசுற்றி போனோம். எங்களை கண்ணும் கருத்துமாக கவனித்துகொண்டார். ஜோத்பூர் கோட்டை மிக பிரம்மாண்டம். சுவரோவியங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், அரச குடும்பங்கள் பயன்படுத்திய அரிய பழங்கால பொருட்கள் மற்றும் சேகரிப்புகளை கண்டு வியக்கலாம்.. குழந்தைகளான விதவிதமான தொட்டில் ஒரு அறை முழுக்க வைக்கப் பட்டிருந்தன. கால்கள் வலி எடுத்து நடக்க முடியாமல் எப்போது உட்காருவோம்னு ஆகிவிட்டது.

ஜோத்பூரில் மேலும் பார்க்கவேண்டிய இடங்கள் -

தூர்ஜியின் படி கிணறு - Step well. படி படியாக இறங்கிக்கொண்டே போகிறது. இரவு நேரங்களில் ஒவ்வொரு படியிலும் விளக்கேற்றி வைத்து அழகு படுத்துக்கிறார்கள். 

உமைத் பவன் அரண்மனை அருங்காட்சியகம்;; உமைத் பவன் தற்போது ஒரு ஹோட்டலாக உள்ளது. இருப்பினும், ஹோட்டலின் ஒரு பகுதி பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது, அரச குடும்பங்களின் சில அரிய பழங்கால பொருட்கள் மற்றும் சேகரிப்புகளை கண்டு களிக்கலாம்.

ஜஸ்வந்த் தடா - மகாராஜா சர்தார் சிங்கிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கல்லறை 1899 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கொஞ்சம் தாஜ்மகலை நினைவு கூர்கிறது.

கடிகார கோபுரம்- ஆங்கிலேயர் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட கடிகாரம்.

மேலும் கடிகாரம் பார்க்க போகும் வழியில் இருக்கும் பெரிய கடைத்தெரு, துணிக்கடைகள், உணவு விடுதிகள், இனிப்பு பலகார கடைகள் என கடைசியாக இவற்றையும் சுற்றிப்பார்த்து விட்டு வரலாம். 

என் கம்பெனி முதலாளி'யின் குடும்பத்தினர் நடத்திவரும் மிகப்பெரிய சாயி கோயிலுக்கு (Sai Mandir, Motiba Nagar, Pal Road, Jodhpur) சென்று பிராத்தனை செய்து வந்தோம். 

இக்கோயில், அவர்களின் சொந்த செலவில் மிக அருமையாக பராமரிக்கப்பட்டு , தினப்படி ஆரத்தி, பூஜை, வியாழக்கிழமை தோரும் பொது மக்களுக்கு அன்னதானம் என எல்லாமும் செய்யப்பட்டு வருகிறது. தவிர, தங்கும் அறைகள், விநாயகர், நவகிரகங்கள், சிவன் சக்தி, லக்‌ஷ்மி தேவி என தனித்தனியாக எல்லா தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன.

முதலாளி குடும்பத்தினரும் ஜோத்பூர் நகரத்தின் நடுவில் ஒரு ஹவேலியில் வசித்து வந்தவர்களே. இப்போது சாயி கோயில் அமைந்திருக்கும் மோதிபா நகரில் சாய் கோயில் அருகில் வசித்து வருகின்றனர்.

ஜெய்பூரும் அருகில் தான் உள்ளது, பல ஆண்டுகள் முன்னமே இங்கு சென்று வந்துவிட்டதால், ஜோத்பூர் & ஜெய்சல்மேர் மட்டும் சுற்றிப் பார்த்து வந்தோம்.

Pictures courtesy : Thankyou Google.

பீட்டர் தாத்ஸ் : Travel isn’t always pretty. It isn’t always comfortable. Sometimes it hurts, it even breaks your heart. But that’s okay. The journey changes you; it should change you. It leaves marks on your memory, on your consciousness, on your heart, and on your body. You take something with you. Hopefully, you leave something good behind.” – Anthony Bourdain



எங்கவீட்டு சமையல் - சுறா புட்டு

இன்று எங்க விட்டு சமையலில் சுறா புட்டு செய்வதை பார்ககலாம்..

தேவையான பொருட்கள் : 

சுறா - 1 

மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1.5 ஸ்பூன்

மிளகு பொடி - 1 ஸ்பூன்

வடவம் : 1/2 ஸ்பூன் - தாளிக்க வடவம் இல்லயென்றால் கடுகு, உளந்து, சீரகம், வெந்தயம்.

வெங்காயம் : 2 

பூண்டு - 10-12 பல்
 

உப்பு - தேவைக்கு

நல்லெண்ணெய் - 1 கரண்டி

கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை ; மற்ற மீன்கள் மாதிரி இல்லாமல் சுறா சுத்தம் செய்வது, தோல் நீக்கி வேகவைப்பது எல்லாமே வித்தியாசம். சுறா மீன் வாங்கும் போதே தோல் நீக்கி , கட் செய்து வாங்கி வந்துவிடுவது நல்லது. 

மீனை சட்டியிலோ, கோடுகள் டிசைன் நிறைந்த பாத்திரத்திலோ கொட்டி உப்பு கொஞ்சம் சேர்த்து மீனை நன்கு கழுவி, பின்னர் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் போட்டு நன்கு கலக்கி நன்கு கழவவும். மெல்லிய மண் இந்த மீனில் அங்கங்கே இருக்கும். அதனால் நன்றாக கழுவி வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மீன் நன்கு மூழ்கும் அளவிற்கு தேவையான தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்கவைத்து, அதை மீனில் ஊற்றி 10 -12 நிமிடம் மூடிவைக்கவும்.

12 நிமிடம் கழித்து, தண்ணீரை வடிகட்டி, அதில் 1 ஸ்பூன் மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய் பொடி சேர்த்து மீனை பொடியாக உதிர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும்.

வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், வடவம் தாளித்து, கருவேப்பிலை, நசுக்கிய பூண்டு போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கொட்டி நன்கு வதக்கவும். பொன்னிறமாக ஆகும் போது உதிர்த்து வைத்த மீனை கொட்டி, மிளகாய் தூள் வாசம் போக நன்கு வதக்கி,
இரக்கும் போது மிளகு பொடி போட்டு கலக்கிவிட்டு  எடுத்தால் சுறா புட்டு ரெடி. 

சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும், தொட்டுக்கவும் செய்யலாம்.

பீட்டர் தாத்ஸ் : Featuring & realsing the flavors of the ocean.

ஏதோ ஒரு சினிமா படப்படிப்பு

 சோழிங்கநல்லூர்,  TNHB சிமெண்டு சாலையில் , மாலை 4 மணி வாக்கில் ஒரு காரும், 2, 3 இருசக்கர வாகனங்களும் வந்து நின்றன. அதில் வந்தவர்கள் ஒன்று கூடி பேசியும், தனித்தனி குழுக்களாக பிரிந்தும் பேசினர், சாலையில் அமர்ந்து ஏதோ வரைப்படைத்தை சரிசெய்வது போல தெரிந்தது. சிமெண்டு சாலை அத்தனை சுத்தமாக இருக்கும். 

இதற்கு பிறகு வந்தவற்றை fast forward ல் சினிமா காட்சிகளில் பார்ப்பதுப்போல கோர்வையாக்கி பார்த்துக்கொள்ளுங்கள்.இவை அத்தனையும் அவ்வப்போது போர்ட்டிக்கோவிற்கு வரும் போதும், சமையல் அறை சன்னல் வழியாகவும் கவனித்தவை ; -

1. 2-3 கார்கள் வந்தன. ஆங்காங்கே பார்க் செய்யப்பட்டு, இட நெருக்கடி காரணமாக திரும்ப எடுத்து வேறு இடங்களிலும் பார்க் செய்யப்பட்டன.

2. ஒரு சின்ன தண்ணீர் லாரி வந்தது ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது.

3. ஆட்டோக்கள் 2-3 வந்தன, அதிலிருந்தோர்  இறங்க, அவையும் இடம் பார்த்து பார்க் செய்யப்பட்டன.

4. இரண்டு கேரவன் வந்து, எங்களது போர்ட்டிக்கோவிற்கு நேரெதிரில் நிறுத்தப்பட்டன.

5. இரண்டு க்ரேன் லாரிகள், ரிங் ரோட்டின் முகப்பில் நிறுத்தப்பட்டன.

6. இரண்டு பேட்டரி வைத்த லாரிகள் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டன.

இதற்குள் மாலை மணி 5.30-5.45 ஆகியிருந்தது.

7. ஒரு சின்ன லாரி வந்தது, வேக வேகமாக இரண்டு டேபிள், நாற்காலிகள் இன்னும் இதர பொருட்கள்  இறங்கின. சாலையில் ஓரமாக ஒரு இடம் பார்த்து, மேஜைகள் போடப்பட்டு, காபி, டீ க்கான கேன்'கள் வைக்கப்பட்டு, தேவைப்பட்டவர்கள் வந்து வாங்கிக்கொண்டு சென்றனர்.

வேலை மிக வேகமாக நடப்பதே தெரியாமல் நடந்துக்கொண்டிருந்தது. அதாது நான் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 7 ஆவது மாடியிலிருந்து கவனிப்பதால் எல்லாமே ஊமைப்படமாக தெரிந்தது. அவர்களது வேலையில் எங்கேயும் ஒரு தடங்கலோ, சோர்வோ, தயக்கமோ இல்லை. வேலை சொல்லிவைத்தார் போல / திட்டமிட்டார் போல அதுப்பாட்டுக்கும் நடந்துக்கொண்டே இருந்தது.

சில பல லாரிகள் அவ்வப்போது வந்து தொழில்நுட்ப கருவிகள், நாற்காலிகள், படப்பிடிப்பிற்குத்தேவையான செட்டுகள் அமைக்க தேவையான பொருட்கள் என இறக்கி வைத்துவிட்டு தொலைவில் மக்கள் நடமாட்டமில்லா இடங்களில்  நிறுத்தி வைக்கப்பட்டன.

கேரவன் நிறுத்தியிருந்த எதிர் வீட்டுக்காரம்மா வெளியில் வந்து வண்டிக்காரர்களிடம் 'இங்கே வண்டியை நிறுத்தக்கூடாது, இங்கே கூட்டம் போடக்கூடாது' என சண்டையிட, வேன் ஓட்டுனர் உடன்பட்டு, இரண்டு வண்டியையும் அவங்க வீட்டின் எதிரிலிருந்து நகர்த்தி சற்று தள்ளி நிறுத்தினார். அந்தம்மா, அடுத்து விடாமல் அவங்க வீட்டு பக்கத்தில் காலி இடத்தில் டீ விநோயகம் நடத்தும் இடத்திற்கும் போய் சத்தம் போட, அவங்களும் சிமெண்டு ரோடுக்கு இடத்தை மாற்றினர். 

நேரம் ஓடியது, நடுவில் நான் கடைக்கு செல்ல  வெளியில் செல்லும் போது 'ஹோட்டல் சென்னை கிங்' , ஒரு மளிகைக்கடை பெயர் பலகையும் எங்கள் குடியிருப்பின் மதில் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.கடைக்கு செல்லும் வழியெங்கும் சாலையோரங்களில் கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. காரில் இருந்தோர், அங்கிருந்து தொலைவில் படப்பிடிப்பு நடக்கவிருக்கும் இடத்தை நோட்டம் விட்டவாரே கைப்பேசியை நோண்டிக்கொண்டு இருந்தனர். 

இதில் அநேகமாக இளைஞர்/இளைஞிகள் இருந்தனர்.  வழியிலிருந்த டீ கடையில் விரைவாக தொழில் நடந்துக்கொண்டிருந்தது. படப்பிடிப்புக்கு வந்தவர்வர்கள் குழுக்களாக அங்கு இருக்கும் எல்லா டீ கடை சிற்றூண்டி கடைகளை ஆக்கிரமித்து இருந்தனர், சிலரின் கைகளில் சிகிரெட். திரும்ப வரும் போது எங்கள் குடியிருப்பு செக்கியூரிட்டி, 'ராகாவா மாஸ்டர்' நடிக்கும் படம் என்றார்.

வீட்டுக்கு வந்து என் வேலையை பார்க்க ஆரம்பித்து, படப்பிடிப்பை மறந்தேவிட்டேன். 8-8.30 மணியிருக்கும், எப்படியிருந்தாலும் இங்கிருந்து ராகவா மாஸ்டரை பார்க்க முடியாது , ஆனாலும் படப்பிடிப்பு எந்த நிலையில் இருக்குன்னு பார்க்க போனால்- அங்கு நடப்பவை எனக்கு புதிதாக, பார்த்திராத ஒரு விசயமாக இருந்தது. 

இப்போது கேரவன் விளக்குகள் எரிந்தன, ஏசி ஆன் செய்யப்பட்டிருந்தது. இரண்டு கேரவன்'களுக்கும் முன் ஒரு டேபில் போட்டு அதில் ஒருவர் துணிகளுக்கு பொட்டிப்போட்டுக் கொண்டிருந்தார். 

இன்னொரு பக்கம் சாப்பாடு ஒரு வேனில் வந்து இறங்கியது, இரண்டே பெண்கள், பாத்திரம் கழுவ (அந்த தண்ணீர் லாரி இப்போது சாப்பாடு இருக்கும் இடத்திற்கு அருகில் வரவைக்கப்பட்டு அதிலிருந்து தேவையான தண்ணீரை அவ்வப்போது கொடுத்துக்கொண்டிருந்தது), வந்த உணவுகளை சிறிய பாத்திரங்களுக்கு மாற்றினர்.  ஆண்கள் இடைவெளி விட்டு 3 டேபில்களை   போட்டு, ஒவ்வொரு டேபிலின் முன்னும் அரைவட்ட வடிவில் நாற்காலிகளை அடுக்கினர். இப்போது இவ்விடத்தை நோக்கி வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் நகர்ந்தனர். சாப்பாட்டை வாங்கிக்கொண்டு, நாற்காலியில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். 

3-4 பேரில் ஆரம்பித்த இந்த படப்பிடிப்பு முன்னேற்பாடு 250-300 பேர் வரை கூடியிருந்தது. 

இன்னொரு பக்கம் கேமரா வைக்குமிடம், லைடிங் என தொழில்நுட்ப கலைஞர்கள் ஆவன செய்துக்கொண்டிருந்தனர்.

சினிமா, ஒரு நாளையில் சில மணி நேரங்களுக்கு எத்தனைப்பேருக்கு சாப்பாடு போடுகிறது, அவர்களின் வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இரவு 9-30 வரை படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை.  எப்போது ராகவா வந்தார் , எப்போது படப்படிப்பு முடிந்தது எனத்தெரியவில்லை.

காலையில் எழுந்து ப்பார்த்த போது,அந்த இடத்தில் இத்தனைக்கூட்டம் இருந்த சுவடே தெரியவில்லை.. குறிப்பாக சாலை சுத்தமாக இருந்தது.