மொத்தம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த Louvre மியூசியத்தில், முதலில் எதனைப்பார்க்கலாமென, டிக்கட்டோடு அவர்கள் கொடுத்திருந்த லீஃப்லெட்களை வைத்து தேர்வு செய்து, உள்ளே சென்றார், பின்னால் நானும். முதல் தளத்தில் ஆரம்பித்தது, சிலைகளையும், ஓவியங்களையும் பார்த்தபடி வந்துக்கொண்டிருந்தேன். பெண்களின் சிலைகள் அநேகமாக அரை/முழு நிர்வாணத்தோடே இருந்தன. ஆண் சிலைகளில் முழு நிர்வாண சிலைகள் இல்லவே இல்லை என்பது குறிப்பிட வேண்டியது, ஏன்னு எனக்கு தெரியல. பெண்களின் முழுநிர்வாணத்தை ரசிப்பதைப்போன்று ஆண்களை ரசிக்க முடியாது என்பதாலா? தெரியல. அவற்றை வடித்த சிற்பிகள் தான் விளக்கம் சொல்லனும் !
நடக்க நடக்க சீனத்து சுவர் போல நீண்டுக்கொண்டே சென்றது கூடவே கால் வலியும், சில அறைகளின் உள்ளே செல்லாமல் வெளியில் இருந்தே வேடிக்கைப்பார்த்துவிட்டு வந்தேன். அப்படி ஒரு அறையில் உள்ளே நுழையாமல் கடந்தபோது, என் கணவர் "இந்த அறையை மட்டும் உள்ளே சென்று பார்த்துவிடலாம் வா'னு அழைக்க.. "போங்கப்பா முடியல.. இன்னும் இரண்டு கட்டிடம் மிச்சமிருக்கு, நேரமும் இல்லை, நடக்கவும் முடியல..அதெல்லாம் எப்ப பார்க்கறது வாங்கன்னு" நான் அவரை இழுக்க..
"இல்லல்ல.. இதைமட்டும் உள்ள வந்து பாரு.. முக்கியமான அறை" னு சொல்ல, களைப்போடு உள்ளே போனேன்.
                 .................. ........... .............. .............. ...............
வியப்பில் விரிந்த கண்களோடு, பேச்சற்று, கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத அதிர்ச்சியில், வாய் லேசாக பிளக்க, முகம் இறுகி, அழுகை வந்துவிடுவேன் என என்னை அழுத்த.. பலவித உணர்ச்சிகளுக்கு ஆளாகி... தன்னிலை மறந்து நின்றேன். சற்று நேரம் கழித்து அவரை திரும்பிப்பார்க்கிறேன், "புருவம் உயர்த்தி, எப்பூடீ? ங்கற மாதிரி புன்னகை செய்ய..” நெகிழ்ந்துப்போனேன்.
ஆம்..அங்கே நான் பார்த்தது.. புகழ் பெற்ற ஓவியர் இலியானார்டோ தாவின்சியி வரைந்த மோனாலிசாவின் அசல் புகைப்படம். கூட்ட நெரிசலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னே நகர்ந்து அருகே சென்றேன். இன்னமும் என்னால் நம்பவேமுடியவில்லை.. எப்படி நான் இங்கே? எப்படி இது சாத்தியம்? என் கண் எதிரில், நான் பார்ப்பது உண்மைதானா? இல்லை கனவா? என ஒன்றுமே எனக்கு புரியல..மோனாலிசா புகைப்படத்திலிருந்து என் கண்கள் நகரவேவில்லை, ஐக்கியமானேன்.
இவ்வளவு உணர்ச்சிவசப்பட காரணம்.... ??!!!
**********
திருமணம் ஆனவுடன், எனக்கு என்ன வேண்டும் எனக்கேட்ட என் கணவரிடம், ரொம்பவெல்லாம் யோசிக்காமல் "மோனாலிசா ஓவியம்" என்றேன். ஆனால் இத்தனை வருடங்கள் ஆகியும் அவர் வாங்கித்தரவில்லை. எப்போது கேட்டாலும் ஒரிஜினல் கிடைக்கலன்னு சொல்லி எஸ் ஆகிடுவார். நானும் எங்களுக்குள், எப்ப எதற்கு சண்டை வந்தாலும், சம்பந்தமேயில்லாமல் "முதல் முதலா கேட்ட கிஃப்ட் ஐ வாங்கித்தர முடியல..உங்களுக்கெல்லாம் ஒரு கல்யாணம்..” னு ஆரம்பிச்சி கழுவி ஊத்துவது தான் வழக்கம். ஆனால் எவ்வளவு கழுவி ஊத்தியும், ரோஷப்பட்டு அந்தப்படத்தை வாங்கித்தந்ததில்ல..
இதனால் என் மனதுக்குள் எப்போதும் ஒரு நிறைவேறாத ஆசை. ஆனால்... அன்று??!! உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க, ஃப்ரான்ஸ்க்கு வருவோம், அங்கே பாரிஸை சுற்றிப்பார்ப்போம் என்று தெரியாது, பாரிஸிலும் இந்த மியூசியம் வருவோம் என்று தெரியாது, இங்கு தான் மோனாலிசாவின் அசல் படம் இருக்கிறது என்றும் எனக்குத்தெரியாது. ஏன்னா நம்மோட ஜெனரல் நாலேஜ் அப்படி!. ஆனால் அவர் காலம் பூராவும் சொல்லியபடி... என்னை ஒரிஜினல் மோனாலிசா புகைப்படம் முன்பு நிற்க வைத்த அந்த நிமிடங்களை என்னால் வாழ்நாள் முழுக்க மறக்கவேமுடியாது அங்கிருந்த நிமிடங்கள் அத்தனையும் நெகிழ்ச்சியோடு பேச்சற்ற நிமிடங்களாக கடந்தன.
மோனாலிசா படத்தோடு சேர்த்து என்னை வீடியோ எடுத்தார், விதவிதமாக ஃபோட்டோ எடுத்தார். என்ன நடக்கிறது என்பதிலிருந்து வெளிவராத நான், இன்னமும் இறுக்கமான முகத்தோடே இருந்தேன். ஃபோட்டோ என்றால் பட்டுன்னு புன்னகை செய்யும் என்னால் மோனாலிசாவோடு எடுத்த எந்தப்புகைப்படத்திலும் புன்னகைக்க முடியவில்லை என்பது இப்பவும் அந்த புகைப்படங்களையும், வீடியோவையும் பார்க்கும் போது தெரிகிறது. ஆனால் எல்லாப்புகைப்படத்திலும் எனக்கும் சேர்த்து மோனாலிசா புன்னகைத்துக்கொண்டிருந்தார்... :)
அன்றிலிருந்து மோனாலிசா படம் வாங்கித்தரவில்லை என அவரை குத்திக்காட்டுவதை அடியோடு நிறுத்திவிட்டேன்.
Sea Life : நவீனோடு சென்ற ஒன்றிரண்டு இடங்களில் இதுவும் ஒன்று. என் குழந்தையோடு வெளியில் செல்வது புள்ளப்பூச்சியோடு வெளியில் செல்வதற்கு சமம். "ஏண்டா இப்படி நச்சரிச்சி தொலையற"ன்னு கேட்டால்.. "இதை நீ கேக்கக்கூடாது, நீ அடுத்தவங்கள எவ்ளோ புடுங்கறன்னு உனக்கு தெரிய வேணாம்? அதுக்கு தான்" னு கவுண்ட்டர் கொடுப்பான்.” “அய்யோஓஓ...என்னால முடியல, வீட்டுக்கு போய் தொலைக்கலாம்" னு சொல்றளவு தொந்தரவு செய்துடுவான்.. ஒரு நொடி என்னை விட்டு அப்படி இப்படி நகரமாட்டான், கையை வளைத்து இடுக்கிப்பிடி பிடிச்சிக்குவான், எப்பவும் என்னை உரசிக்கிட்டே இருக்கனும். இங்கவே அப்படிதான். இதுல வெளியூர்ல இரண்டு வருசமா தனியா இருக்கப்ப சொல்லவேணுமா.? .
கடல் வாழ் /நீர் வாழ் உயிரினங்கள் எக்கசக்கமாக இருந்தது. அவற்றைப்பார்ப்பதை விட, அவற்றை அவர்கள் பராமரிக்கும் விதம் பிரம்மிப்பாக இருந்தது. ஒரு பெரிய வீடு அளவிற்கு கண்ணாடி அறைகள், மிக சுத்தமான தண்ணீர், உள்ளே கடல்/நீர் நிலைகளைப் போன்ற அலங்காரங்கள். அந்த கண்ணாடி அறைகளின் மேலேயும், பக்கங்களிலும் நாம் நடந்து செல்லலாம். தண்ணீருக்குள் நாமும் இருப்பதாக ஒரு தோற்றப்பிழை. பெரிய பெரிய மீன்கள் நம் அருகில் வந்து செல்வது மயிற்கூச்சரிய செய்தது. மீன்கள் தவிர்த்து, பல்வேறு விதமான கடல்/நீர் வாழ் உயிரினங்களை காணமுடிந்தது. இணைப்பில் வீடியோவும் இருக்கிறது பாருங்கள்.
River Seine பாரிஸ்'ஸை சுற்றி ஓடும் இந்த ஆற்றை தனியாக சென்று பார்க்கவில்லை. போகிற இடமெல்லாம் கொசுறாக இதனையும் பார்த்து ரசித்துவந்தோம். நவீன் அவனுடைய ட்ரீட்டாக இந்த நதியில் செல்லும் சுற்றலா படகில், ஒரு இரவுக்கு புக் செய்திருந்தான். ஆனால் அவனோடு இருக்கவே விரும்புகிறோம் என சொல்லி மறுத்துவிட்டோம். என் புள்ளைக்கு சமைச்சிப்போட்டு, அவனோடு வம்பு வளத்தி, திரும்ப திட்டு வாங்கிட்டே இருக்கும் திருப்தி இந்த படகுப்பயணம் கொடுத்துவிடுமா என்ன?
உணவு வகைகள் : ரொட்டி, பீஸா, பர்கர் வகையறாக்களே. அவற்றோடு மாடு, பன்றி, கோழி போன்ற மாமிசங்களே இவர்களின் முதன்மை உணவுகள். ரொட்டி, சீஸ், வெண்ணெய், அவித்த மாமிசம், பச்சை அல்லது லேசாக அவித்த காய்கறிகள் சேர்த்து, மசாலா எதும் இல்லாமல் மிளகுத்தூள் உப்பு தூவி சாப்பிடுகிறார்கள். நாமறிந்த ஃப்ரென்ச் ஃப்ரை பிரசித்திப்பெற்றது. உருளை, கொடமிளகாய் போன்றவை அதிகளவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இவர்களின் பாரம்பரிய உணவு வகைகள் எதையும் ருசிப்பார்க்கவேயில்லை. முதல் காரணமாக எந்தவகை மாமிசம் என அறியமுடியவில்லை, ருசி எப்படியிருக்குமோ?, மற்றொன்று அதிகவிலை. விலை குறைந்த, மாமிசம் ஏதும் கலக்காத ரொட்டி வகைகள் எங்களுக்கு போதுமானதாக இருந்தது.. அவற்றில் சிக்கனில் செய்த சிக்கன் பனினி ரொம்பவே பிடித்தது. ரொட்டிக்குள் சிக்கன் வைத்து கிரில் செய்தால் அதுவே சிக்கன் பனினி (படம்) .தவிர, சாக்லெட் ஐஸ்க்ரீம் வகைகள் கண்களுக்குள் கொள்ளாமல் கொட்டிக்கிடக்கின்றன.

ஆடைகள்: பெண்கள் கழுத்தில் ஒரு மஃப்ளரை கட்டிக்கொள்கின்றனர். இவை கம்பளி நூலால் செய்தவை அல்ல. சாதாரண நைலான், ஜார்ஜட், காட்டன் துணிகளே. கழுத்தில் கட்டும் டையைப்போல, எந்தவித ஆடையோடும் மஃப்ளரை சுற்றிக்கொள்கின்றனர். கடைத்தெருக்களில் இந்த மஃப்ளர்கள் அதிகளவில் விற்கப்படுகின்றன. இதன் பலன் அநேகமாக குளிருக்கு அடக்கமாக இருக்கலாம். உடல் நிறத்திற்கு நேர் எதிரான, ஸ்கின் லெக்கிங்ஸ்அணிந்துக்கொள்கின்றனர். எத்திராஜ் கல்லூரியில் படித்தவள் என்பதால், மேல் சொன்ன இரண்டைத்தவிர, பாரிஸ்ஸில் பெண்கள் அணியும் ஆடைகள் எதும் புதிதாக தெரியவில்லை.


கவனத்தில் கொண்டவை: கறுப்பினதவர்கள், உள்நாட்டவர்களை போல அல்லாமல், பொது இடங்களில் சத்தமாக பேசுவது, பாடுவது, ஆடுவதுமாக கவனத்தை  ஈர்த்தனர். உடைகள், தலையலங்காரங்கள் என எல்லாமே இவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது.
நாம் குழந்தைகளை தோள்களில், கைகளில், இடுப்பில் தூக்கிக்கொள்வது போல யாருமே தூக்கவில்லை. தனியாக குழந்தைக்கான வண்டியில் வைத்தே ரயில், பேரூந்துகளில் அழைத்துவந்தனர். இதில் கைக்குழந்தைகளும் அடக்கம். தாய், தகப்பனின் அணைப்பே இக்குழந்தைகளுக்கு கிடைக்காதோ...என எண்ணத்தோன்றியது. கைக்குழந்தைகள் முதற்கொண்டு ஆண்கள் தனியாகவே குழந்தைகளை அழைத்துவந்தனர். பொதுவாக நம்மூரில் ஆண்களை நம்பி கைக்குழந்தைகளை கொடுக்கமாட்டோம்.
சென்ற இடங்கள் அத்தனையிலுமே, சாலைகளில் சைக்கிளுக்குக்கென்று தனிப்பாதை. சாலையை கடக்கும் போது, நடந்து செல்பவர்களுக்கே முன்னுரிமை. வாகனங்கள் எந்த வேகத்தில் வந்தாலும், பொறுமையாக நின்று, நடந்துசெல்பவர் கடந்தவுடனே தான் செல்கின்றன.
முதல் 2 பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டிருந்ததை நினைவுக்கொள்கிறேன். பாரிஸ்ஸில் இருந்த அத்தனை நாட்களும் மிகுந்த மன அழுத்தத்தோடு இருந்தேன், வெளியில் சென்று சுற்றிப்பார்க்கும் மனநிலையே எனக்கு இல்லை.24 மணி நேரமும், என் குழந்தைக்கு வேண்டுவன செய்து, அவனோடு இருக்கவே விரும்பினேன். ஆனால், அவருக்காக வெளியில் சென்று வந்தேன். அதனால் எழுதிய அனைத்துமே ஓரளவு கவனித்து எழுதியதே
10-11 டிகிரி குளிரில் ஸ்வெட்டர் இல்லாமல் வெளியில் செல்வது, குளிரை உணரும் போது, இருவருக்கும் நடுவில் நடந்து, நவீன் ஜெர்க்கின் பாக்கெட்டில் ஒரு கையும், அவரின் ஜெர்க்கின் பாக்கெட்டில் ஒரு கையும் விட்டுக்கொள்வது, வீட்டிலும் சன்னலை பப்பரப்பான்னு திறந்துவைத்துக்கொண்டு குளிரில் நின்றுக்கொள்வதுஅதே சமயம், பனி உள்ளே வந்து குளிரில் இருவரும் நடுங்குவதை பார்த்து, ஏன் இவங்களுக்கு குளிருதுன்னு வியப்பது, எப்பவும் அவர்களிடம் திட்டுவாங்கிவிட்டு சன்னலை மூடுவது என என் மன அழுத்தம் காரணமாக உயர் இரத்த அழுத்தம் அதிகமாகி என் உடல்நிலை இயல்பு நிலையில் இல்லை.
பாரிஸ் சுற்றுப்பயணத்தை எழுதத்தொடங்கி நடுவில் தொடரமுடியாமல் நிறுத்தி, திரும்ப ஓராண்டுக்குப் பிறகு, பயணத்தை முடிந்தளவு நினைவில் கொண்டுவந்து, எழுதிவிட்டேன். நிச்சயம் எதிர்காலத்தில் எனக்கு படிக்க உதவும் ! .
இத்தோடு பாரிஸ் பயணக்குறிப்புகள் நிறைவடைந்தன. ! என்  பயணக்குறிப்புகளில், இவை தான் அதிகளவு மக்களால் படிக்கப்பட்டு வருகிறது.  
பொறுமையோடு படித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி ! __/\__