மருத்துவரைப்பார்க்க காத்திருந்தேன். இன்னமும் நான்கு பேர் போகவேண்டியிருந்தது. எப்படியும் இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். மற்ற மருத்துவமனைகள் போல அல்லாது குண்டூசி கிழே விழுந்தாலும் கேட்கும் அளவில் அமைதி நிலவும். பல சமயம் அந்த அமைதியில் என் முறை வருவதற்குள் தூங்கியும் இருக்கிறேன். 

இரண்டு  வயது இருக்கும்  குழந்தையும் அவனின் அம்மாவும் வந்தனர்.
அந்த சின்னக்குழந்தை கண்ணாடி அணிந்திருந்தது என் கவனத்தை முழுதும் அவன் பக்கம் திருப்பியது. பிங்க் நிற ப்ளாஸ்டிக் ஃப்ரேம் கண்ணாடிக்கு நடுவில் அவன் முட்டை விழிகளில் மட்டும் அதீத வேகமும், ஆர்வமும், பளப்பளப்பும் துடிப்பும் தெரிந்தது. ஒரு வேளை கண் பெரியதாக இருப்பதால் இப்பவே கண்ணாடி போட்டுட்டாங்களோ? என பல்வேறு விதங்களில் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். விடைதான் தெரியவில்லை.  ஆனால் 2-3 வயது குழந்தைக்கு கண்ணாடி என்பது அதிகமே !!

உள்ளே நுழைந்ததும், அம்மா மடியில் உட்கார்ந்துக்கொண்டு ஃபேன் இருக்கும் பக்கமாக திரும்பி, "அந்த ஃபேன் ரொம்ப மெதுவா சுத்துது" ன்னு சத்தமாக பேச ஆரம்பித்தான். சுரத்தில் இருந்த ஒருவர் அவன் வருவதற்கு முன் தான் வேகத்தை குறைத்திருந்தார். "அடடே.. பையன் செம உசாரா இருக்கானே" ன்னு நினைச்சேன், அவங்க அம்மாவை பாத்து சிரிச்சேன்.

அடுத்து, "வெளியில ஏதோ பூச்சி வருது, பாரும்மா' ன்னு சொன்னான். அவங்க அம்மாவும் பாத்துட்டு, "ஒன்னுமில்லையே" னாங்க. அடுத்து உள் அறையில்
மருந்து நிரப்பிக்கொண்டிருந்த சத்தம் கேட்டு "உள்ள ஏம்மா டொங்கு டொங்குன்னு சத்தம் கேட்டுட்டே இருக்குன்னு" கேட்டான். அம்மா அவனுக்கு பொறுமையாக விளக்கம் கொடுத்து, நாங்கள் அனைவரும் அவன் கேள்விகளை க்கண்டு சிரிப்பதை பார்த்து ஒவ்வொரு முறையும் அவங்களும் எங்களைப்பார்த்து சிரிச்சாங்க. ஆனா எப்பவும் அவனை கோவிச்சிக்கல.

என்னமோ ஒரு வித்தியாசம் அந்த குழந்தையிடம் தெரிந்தாலும், என்னவென்று என்னால் ஊகிக்க முடியல.. ஆனால் அவன் கண்ணில் ஏதோ பிரச்சனைன்னு மட்டும் புரிந்தது. பக்கத்தில் இருந்த என் கணவரிடம் ரகசியமாக " அந்த குழந்தையை கவனிச்சீங்களா? கண்ணு தெரியலன்னு நினைக்கிறேன்.. பாவமா இருக்கு" ன்னு சொல்லி முடிப்பதற்குள். அவன் "அம்மா நான் மருந்து ஆண்ட்டி ரூமுக்கு போறேன்" ன்னு அம்மா மடியில் இருந்து இறங்கி நேராக நடந்தவன், கொஞ்சம் முன்னே சென்றதும் கொஞ்சம் தட்டு தடுமாறி அந்த அறை வாசலில் அவனுக்கு இடது கைப்பக்கம் இருந்த நாற்காலியை தொட்டு ஏறி உட்கார்ந்து அறைப்பக்கம் திரும்பி "ஆண்ட்டி எனக்கு மாத்திரை தாங்க" என்றான்.  சர்க்கரை உருண்டைகள் சிலவற்றை ஒரு கவரில் போட்டு அவனுக்கு எதிராக நீட்டுகிறார் அந்த மருந்தக அம்மா....

கை நீட்டி வாங்காமல் அறைப்பக்கமே பார்க்கிறான். இவனின் அம்மா "ஆண்ட்டி தராங்க பாரு.. வாங்கிக்கோ" ன்னு அடுத்த செகண்ட், கை நீட்டி தடவி வாங்கிக்கொண்டு அதே வேகத்தில் அம்மாவை நோக்கி வந்த வந்துவிடுகிறான்.

இதைப்பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு, கண் தெரியவில்லை என்பது உறுதியானாலும், எந்த தயக்கமும் பயமும் இல்லாமல் டக்குனு இறங்கி நடக்கும் அவன் இயல்பு எனக்கு விசித்திரமாக இருந்தது. அதாது கண் தெரியுதா தெரியலையா? குழப்பமாக இருந்தது. அம்மாவிடம் சரியாக வந்து சேர்ந்துவிட்டான், அந்த அறைக்கும் ரொம்ப சிரமம் இல்லாமல் போனான். நடுவே ஒரு குழந்தையின் சத்தம் கேட்டு கை நீட்டி தேடி செல்லாமல் மெதுவாக அக்குழந்தையிடம் சென்று கொஞ்சிவிட்டும் வந்தான்..

அவன் அம்மாவிடம் குழந்தைக்கு வயசென்ன என்று விசாரித்தேன். 4 முடிஞ்சிடுத்துனாங்க. நம்பமுடியல. வளர்ச்சி கம்மியாக தான் இருந்தது. ஆனால் ரொம்பவே சுட்டியாக, எந்த சத்தம் கேட்டாலும் அது என்ன? என்ற கேள்வியால் அம்மாவை துளைத்துக்கொண்டிருந்தான்.

அப்படி இப்படியென... சிறிது நேரத்தில் நானும் அவனும் ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம். அவன் கொண்டு வந்திருந்த லைட் வைத்த பந்தை தூக்கிப்போட்டு பிடிக்கும் விளையாட்டு விளையாட ஆரம்பித்தோம்.

அவனைக்கூர்ந்து கவனித்துவாரே விளையாடினேன். யாருடைய உதவியும் இல்லாமல் பந்தைப்பி்டித்தான். அதாது, பந்தை கீழே அடித்தால் அது  ஒளியை எழுப்பும், அந்த ஒளியை வைத்து அவனருகில் அது செல்லும் போது பிடித்து விடுகிறான். ஒருவேளை ஒளி எழாவிட்டால் அவன் மேல் விழுந்தால் தடவி எடுக்கிறான்.

ஆக, சுத்தமான இருட்டாக இல்லாமல் நிழலாக அவனுக்கு வெளிச்சங்கள் தெரிகிறது.  அதை வைத்து அனுமானித்து பேசுகிறான் நடந்துக்கொள்கிறான். அவனின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் மிக துள்ளியமாக, அதி வேகமாக அவன் மூளை வேலை செய்கிறது. அது நிச்சயம் அசாதாரணம். சாதாரண குழந்தைகள் இப்படி இருக்காது

பெற்றோர் அவனின் குறையை பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளாமல், அவன் ஆற்றலை புரிந்து, பெரிய அளவில் கொண்டு வர முடியும்.

என் கண்ணுக்குள் நின்றுவிட்ட அந்த குழந்தைக்கு பார்வை என்பது நிழலான சில வெளிச்சங்களே....

அணில்குட்டி : எல்லாரும் அமைதியா இருக்க, அந்த குழந்தையோட இவிங்களும் ஆய் ஊய்னு கத்தி சத்தம் போட்டு பந்து விளையாடி வூட்டுக்கார் கிட்ட எப்படி திட்டு வாங்கினாங்கன்னு எழுதினாங்களா ? அதான.. அம்மணி கமுக்கமா அதையெல்லாம் தொடச்சி விட்டுக்குவாங்களே...

பீட்டர் தாத்ஸ் : His dark world was bright because of his sparkling attitude!”
― Archana Chaurasia Kapoor