நான் காணும் கனவுகளை, அவரிடம் சொல்லும் போது, அதை ரெக்கார்ட் செய்ய சொல்லுவார். நேற்றைய கனவை சொல்ல ஆர்ம்பித்த கொஞ்ச நேரத்தில்..

 "ரெக்கார்ட் பண்ண சொன்னேனே செய்யறியா? "

"அட கேளுங்கப்பா முதல்ல.. எல்லாம் எழுதி வைக்கிறேன்ப்பா"

 "எங்க எழுதி வைக்கிற? " . "

 என் ப்ளாகில் எழுதி வைக்கிறேன்பா.. நடுவில் பேசாம கேளுங்க..அப்புறம் மறந்துப்போவேனில்ல" ன்னு விடாம கனவை முழுக்க சொல்லிட்டு தான் மறுவேலை.

ஆனா பாருங்க, சில பல மாதங்களாகவே என் வூட்டுக்காரே கனவிலும் வந்து தொலைக்கறாரு... தூங்கி எழுந்தவுடன் கனவு நினைவில் வரும் போது என்னை நானே..எகொக இது?! ன்னு கேட்டுக்க வேண்டியிருக்கு.... ஒரு மனுசனோட குடும்பம் நடத்தறதே பெரிய விசயம்..இதுல கனவிலும் விடாம துரத்தினா.. ?!

 விடாது கருப்பு ....இதோ...

*******************
எங்கோ பெரிய மலை பகுதிக்கு அழைச்சிக்கிட்டு போயிருக்கார். மலையில் ஏறுகிறோம்.

இரவில் மழை பெய்து ஓய்ந்த ஒரு காலை பொழுது, வைக்கின்ற ஒவ்வொரு காலடியும் ஈர மண்ணில் நிற்காமல் வழுக்குது..களிமண்ணாக இருக்குமோன்னு யோசனையோடு ஒவ்வொரு காலாய் எடுத்து வைக்கிறேன்.. முடியல.. கையையும் துணைக்கு வச்சிக்கிட்டு மேலே ஊன்றி ஏற முயற்சி செய்கிறேன். கை, கால்னு ஒரே சேறு பூசிக்குது.. இவர் வருகிறாரான்னு பின்னால் திரும்பிப்பார்க்க, பேலன்ஸ் போயி சொய்ன்னு வழுக்கிடுது... வழுக்கிக்கிட்டே கத்தறேன்..

"எங்கப்பா போனீங்க..இங்க தனியா நான் ஏற முடியாம கஷ்டப்படறேனே..வந்து தொலைக்கக்கூடாதா?"

ஒன்னும் பதில் வராம..நானே தவ்வி தவ்வி மேலே எப்படியோ பேலன்ஸ் செய்து ஏறுகிறேன். ..

 எங்க வெளியில் போனாலும் என்னை இப்படி தனியா விட்டுட்டு அவர் வேலைய தனியா பார்க்கறது வழக்கம் தான்..எனக்கும் இப்படி கத்தி அவரை கூப்பிடறது வழக்கம் என்பதால்..நிஜத்தில் வரும் தலைவலி கனவிலும்....

ஒருவழியாக உச்சிக்கு வந்துடுறேன்.. வந்துவிட்டோம்..இனி, "மேல நின்னு, இயற்கையை ரசிக்கனும்னு" நினைத்துக்கொண்டே அடுத்த அடி வைத்து கையையும் மலை உச்சியில் வளைத்து பிடிக்கிறேன்...சில்லென்ற தண்ணீர் கையில் பட , வைத்த வேகத்தில் கையை எடுத்து ..ஏது தண்ணீன்னு எட்டிப்பார்க்கிறேன்...
அலைவந்து அடிக்க... கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிரம்பி தளும்பும் கங்கை...அது அங்கே ஏதோ ஒரு பக்கத்தில் அருவியாக கொட்டுகிறது ... "ஓஓஓவென...." பேய் சத்தம்..... எதிர்ப்பார்க்காத தண்ணீர்... அலை.. தண்ணீரின் ஆழம்....அதன் சத்தம்.. பயந்துப்போய்..

"அப்பாஆஆ..இங்கப்பாருங்க ...இங்க.கங்கை.இருக்கு . இன்னும் ஒரு அடி எடுத்துவச்சா.. பிடிக்க எனக்கு ஏதுமில்ல..இதுக்குள்ள விழுந்துடுவேன்..ன்னு திரும்பி, அவரை. பார்த்து சொல்லும் போதே பேலன்ஸ் போய் கால் தடுமாறி...வந்த வழியே வேகமாக வழுக்கி கல்லிலும் மண்ணிலும் புரண்டு கீழே வந்து விழுகிறேன்.. .

தொலைவிலிருந்து இதெல்லாத்தையும் நிதானமாக பார்க்கிறாரே ஒழிய..பொண்டாட்டி மேலிருந்து வந்து விழறாளே..வந்து தூக்குவோம்னு சின்ன பதட்டம் கூட அவரிடம் இல்ல.. தூக்கக்கூடாதான்னு கேட்டா.. "எப்பதான் நீ இதெல்லாம் கத்துக்கறதுன்னு டயலாக் டெலிவரி செய்வாரு.. சரி..நான் இருக்கட்டும்.. ஒருவேள அவர் வழுக்கி விழறாருன்னு வச்சிக்குவோம்.. ஓடிப்போய் தூக்கப்போனா, "ஏன் விழுந்த எனக்கு எழுந்துக்க தெரியாதான்னு" டயலாக் டெலிவரி செய்வாரு...

எதுக்கு இவர்கிட்ட ?!! எதையுமே கேக்காம இருக்கலாம்னு முடிவு செய்யறேனே ஒழிய...வாய் சும்மா இருக்கா? இல்லயே.."ஏன் இப்படி என்னை தனியா விட்டுட்டு விட்டுட்டு போறீங்க..." ம்க்கும்.. எப்பவும் போல எந்த பதிலும் இல்லை..அலட்சியமாக ஒரு பார்வையோடு வேற எங்கேயோ போறார்... அவரை பின் தொடர்ந்து நானும் போறேன்...

அது ஒரு பெரிய கோயில்..மிகப்பழமை வாய்ந்த பெரிய கோயிலாக தெரிகிறது. பெரிய பெரிய சிற்பங்கள்..சிலைகள்னு அன்னாந்து பார்த்தபடி ஒவ்வொன்றாய் நின்று ரசிக்கிறேன்.. நின்றுவிட்டு நகரும் போது பார்த்தால்..எப்பவும் போல நம்மாளை காணல.. ஓடி ஓடி எந்தப்பக்கம் போகிறார்னு தேடி தொடர்கிறேன்.நடு நடுவில் சிற்பங்கள்...

அப்பதான் அந்த பெர்ர்ர்ர்ர்ரிய யானை சிலைகள் இருக்குமிடத்தைப்பார்க்கிறேன்.. நிஜ யானைகள் போலவே சிற்பங்கள். சிலது நிற்கின்றன.. சிலது உட்கார்ந்து, இரண்டு முன்னங்கால்களை தூக்கிக்கொண்டு சிலதுன்னு வெவ்வேறு வடிவங்களில் விதவிதமான சிலைகள்...

 அட...எத்தனை அழகா இருக்கு..இவ்ளாம் பெரிய யானை.. ஒன்னு செய்யறதே கஷ்டம் இந்த இடம் முழுக்க யானையாவே செய்து வச்சியிருக்காங்களேன்னு..ஒரு யானை சிலையின் அருகில் செல்கிறேன்... .டக்கென்று அது தன் தும்பிக்கையை தூக்கி பலத்த சப்தத்தோடு பிளறுகிறது.... அவ்வ்வ்... திடீர் சத்தத்தில் பயந்து நடுங்கி கத்தி அலறிக்கொண்டு ஓடுகிறேன்... ஓடி நின்ற இடம் இன்னொரு யானையின் கால்.

அந்த யானை கத்தாமல்...தும்பிக்கையால் எங்கிருந்தோ தண்ணீரை வாரி இறைக்கிறது.... மீண்டும் கத்திக்கொண்டே.. ".இந்த யானைக்கெல்லாம் உயிர் இருக்கு போல......இது என்னை பயமுறுத்துது.. சீக்கிரம் இங்க வாங்கன்னு கத்தறேன்" .. அந்தப்பக்கத்திலிருந்து ஒரு சத்தமும் வரல...

 அங்கிருக்கும் ஒவ்வொரு யானைக்கும் ஏதோ ஒரு செய்கையை செய்யும் படி..செயற்கை முறையில் செட்டப் செய்திருக்கிறார்கள் போலவே.. இதை மூன்றாவது யானை காலைத்தூக்கி இங்கும் அங்குமாக அசைக்கும் போது புரிந்துக்கொண்டு.. இதுங்க கிட்டக்க போகக்கூடாது , போனால் சென்சார் மூலம் தெரிந்து..ஆடுதுங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு தள்ளி வந்துடறேன்...


அதற்குள்ளாக இவர் வந்து, என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வேறு பக்கமாக சந்துபொந்துன்னு எங்கோ வளைந்து வளைந்து ஒரு குகை மண்டபத்திற்குள் போறாரு...கும்மிருட்டு...கருப்பு நிறத்தில் வழு வழுவென்ற பாறைகள், கருங்கள் தூண்கள்.. குகை மண்டபத்தை கடக்கும் போது ....லேசான வெளிச்சம் உள்ளே வர, அதைப்பார்க்கிறேன்...

அட.. ?!! மலை உச்சியில் சென்று பார்த்த கங்கை... நீலநிறத்தில்.... , சூரியனின் வெளிச்சத்தில் மின்னுகிறது.. இழுத்து செல்லும் கையை நிறுத்தி, அந்த காட்சியை அவருக்கு காட்டி... இதைத்தான் நான் அந்தப்பக்கம் போய் பார்த்தேன்னு, வியப்பு மேலோங்க சொல்றேன்.. கவனிக்கிறார்... அதான் தெரியுமேங்கற கணக்கா... வாயத்தொறக்காம திரும்பவும் இழுத்துக்கிட்டு நடக்கிறார்.. இவர் இழுத்த இழுப்புக்கு நடக்க முடியாமல், கால் வலி அதிகமாக ....

முழுச்சிக்கிட்டேன்....

*******************

பொதுவாக எனக்கு சோர்வாக இருக்கு, முடியலைன்னா, (இன்ஸ்டன்ட் எனர்ஜிக்கு) Candy ஸ்டாக் வச்சி கொடுப்பாரு, (சாக்லெட் எனக்கு பிடிக்காது அதனால் கேண்டி) தண்ணிக்கொடுத்து உக்காந்து ரெஸ்ட் எடுக்க சொல்லுவாரு...கண்டிப்பா எதாச்சும் சாப்பிட உடனே கொடுப்பாரு.... ஆனா நானு மதிக்கமாட்டேன்..வாங்கி எல்லாத்தையும் திண்ணுட்டு.. முடியாட்டியும் அதே வேகத்தோடு நடக்க ஆராம்பிச்சிடுவேன்.... உட்கார்ந்து ஓய்வெடுக்கும் பழக்கமே எனக்கில்லை.. எங்க போய் சேரனுமோ அந்த இடம் வந்தாத்தான் நிப்பேன். எப்படி உல்டாவா அவர் என்னை விடாமல் இழுத்துக்கிட்டு போறாப்ல கனவு வந்துச்சின்னு தான் தெரியல...

 **********************


அணில் குட்டி : அடுத்து சினிமா தான் எடுப்பாங்க போல...?!

பீட்டர் தாத்ஸ் : “I think we dream so we don’t have to be apart for so long. If we’re in each other’s dreams, we can be together all the time.” ― A.A. Milne, Winnie-the-Pooh 

படங்கள் : நன்றி கூகுள் !