தண்ணீர் சூழ்ந்த ரம்யமான சுற்றலா இடங்களில், தண்ணி'யில் திளைத்திருக்கும் நல்லவர்களை பற்றி நாலு வார்த்தை..........

நமக்கு பக்கத்திலிருக்கும் புதுச்சேரியிலிருந்து ஆரம்பிப்போம்.  விழுப்புரம் சொந்த ஊர், அதனால் புதுச்சேரியின் "தண்ணி" ப்பற்றி சிறுவயது முதலே ஓரளவு தெரியும். புதுச்சேரி-விழுப்புரம் பேரூந்துங்களில் பயணம் செய்யும் போது அப்படி ஒரு துர்நாற்றம் வீசும்... உளரல்கள், சண்டைகள், கத்தல்கள், வாந்திகளும் பார்த்தது உண்டு.

புதுச்சேரி'ஐ தொடர்ந்து குற்றாளம், கோவா, ஹோக்கேனக்கல் போன்ற இடங்களிலும் இதேக்கதை தான்.  மிக மோசமாக அருவருத்து முகம் சுளிக்கும் விதமாக இருந்தது 'ஹோக்கேனக்கல்'.  திரும்பியப் பக்கமெல்லாம் குடிகாரர்கள், கெட்டவார்த்தை, தள்ளாட்டம், வாந்தி, சண்டை, துர்நாற்றம். பார்க்குமிடங்கள் எல்லாம் காலி பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. ஒரு சில இடங்களில் பாட்டில்களை போட்டிப்போட்டு பாறைகளில் சரமாரியாக அடித்து உடைத்து வைத்திருந்தார்கள். ஓடையிலும் ஆற்றிலும் பாட்டில்கள், ப்ளாஸ்டிக் டம்ளர்கள் மிதந்தன.புதுச்சேரி, குற்றாளம் & கோவா 'விலும் குடிகாரர்களை அதிகம் பார்த்தாலும் 'ஹோக்கேனக்கல்' அளவிற்கு மோசமில்லை.

குறிப்பாக குடிப்பதற்கென்றே இங்கே வருகிறார்கள் போல தெரிகிறது. மீன் வறுவல் ஒரு பெரிய வியாபாராமாக இருப்பதால், குடிகாரர்களுக்கு கேட்கவே வேணாம் கொண்டாட்டம் தான். தண்ணி, சைட் டிஷ் மீன், எண்ணெய் மஸாஜ், அருவி , ஆறு குளியில் என அடித்து ஆட்டம் போடுகிறார்கள். 

இதற்காகவே அங்கீரக்கப்படாத மதுபானக் கடைகள் மலை இடுக்குகளில் ஜெனரேட்டர் வசதியோடு அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ரக மதுபானங்களும் இங்கு கிடைக்கின்றன. இக்கடைகளுக்கு குடிகாரர்களை அழைத்து வரும் பரிசல்காரர்களுக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது. 

நிற்க, குடித்துவிட்டு ஆட்டம் போட நினைப்பவர்கள் கவனிக்க வேண்டியவை. நீங்கள் செல்லுமிடம் -

1. பொது இடம்
2. குழந்தைகள் மற்றும் பெண்களும் ஓய்வையும் சந்தோஷத்தைத்தையும் நிம்மதியையும் தேடிவரும் இடம்
3.  அருவி,ஆறு, கடல், காடு, மலைகள் சார்ந்த இடங்கள் என்பதால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் அதிகம்.
4. குடித்துவிட்டு வீசும் பாட்டில்கள், ப்ளாஸ்டிக் டம்ளர்கள் போன்றவை சுற்றுப்புறத்தை அசுத்துமாக்குவது மட்டுமில்லாமல், ஆறு, அருவி நீரோட்டங்களில் மிதந்து அவற்றின் அழகையும் குலைக்கின்றன.
5. ஆறு, கடல் வாழ் உயிரினங்களுக்கும் இவை தீங்கை விளைவிக்கும். 
6. இவை எல்லாவற்றையும் விட,  குடி போதையில் பேசும் வன்மையான முகம் சுளிக்க வைக்கும் கெட்ட  வார்த்தைகள், பொது இடங்களில், நடக்கும், உட்காரும் இடங்களில் வாந்தி எடுத்தல்,  நிதானம் இழந்து வருவோர் போவோர் மேல் வந்து விழுதல் போன்றவை சகித்துக்கொள்ள முடியாதவை.

குடித்து கும்மாளம் அடிக்க விரும்புவோர், யாருக்கும் தொந்தரவு இல்லாத தனிமையான இடங்களைத்தேடி செல்லலாமே. ஒருத்தன் குடிச்சிட்டு இருந்தாலே கஷ்டம், இதில் கூட்டம் கூட்டமாக குடித்துவிட்டு ஒன்றாக  ஆட்டம் போட்டால்..?!! என்ன கொடுமை இது?  குடித்து நிதானம் இழக்க விரும்புவோர், பொது இடங்களை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். அதை நிதானத்தில் இருக்கும் போதே முடிவு செய்யலாமே.. ? 

அவங்க கடமை போல, ஆங்காங்கே "குடித்துவிட்டு அருவியில் குளிக்காதீர்கள்" ன்னு எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கீகரிக்கப்படாத கடைகள் இவர்களுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. என்றோ ஒருநாள் சென்ற எனக்கே மலையை சுற்றி இடுக்குளில் எத்தனை கடைகள் இருக்கின்றன என்பதை தொலைவிலிருந்து பார்த்தே ஊகிக்க முடிந்தது.

நன்றாக குடித்துவிட்டு, எண்ணெய் மஸாஜ் செய்துக்கிட்டு, போதை இறங்காமல் இருக்க கையில் பாட்டில், டம்ளர்களோடு அருவியிலும் ஆற்றிலும் இறங்கி கும்மாளம் அடிக்கும் கூட்டத்தை தொடர்ந்து பார்க்கமுடிந்தது.

என் கணவரோடு சென்றிருந்தாலுமே, எப்ப எவன் வந்து நம்ம மேல விழுவான், வாந்தி எடுப்பான்னு ஒரு பயம் இருந்துட்டே இருந்தது. அவர்கள் நிதானத்தில் இல்லை என்பது தெரிந்த விசயம்... அவர்கள் தவறாக நடக்க முயன்றால் அவர்களை என்ன செய்ய முடியும். யாருமே தனியாளாக இல்லை, எல்லோருமே கூட்டமாக வந்திருக்கின்றனர். பொது இடங்கள் தவிர்த்து,  நல்ல பாதுகாப்பான விடுதியில் தங்கியிருந்தாலும், எந்த நேரத்தில் அக்கம் பக்கத்து அறைகளில் இருக்கும் குடிகாரர்கள் வந்து கதவைத்தட்டி கலாட்டா செய்வார்கள் என்ற பயம் எனக்குள் இருந்தது. "நீங்க தமிழ் சினிமா நிறைய பார்க்கறீங்கன்னு" சொல்ல நினைப்பவர்களுக்கு, நாட்டில் உண்மையில் நடக்கும் விசயங்கள் நிச்சயம் அறிந்திருக்கும்.

ஹோக்கேனக்கல், அருவிகள் பல சூழ்ந்து, சில்லென்று சிலுசிலுவென்ற சத்தத்தோடு வேகமாக ஓடும் ஆறு, பாறைகளுக்கு நடுவில் ஆற்றில் பரிசல் பயணம் என மிக ரம்யமான இடம்.. ரசிக்க முடிந்தது தான்.. ஆனால் ஆற்றிலோ, அருவியிலோ நிம்மதியாக அக்காடான்னு நம்மை மறந்து குளிக்க முடியவில்லை....

குடிகாரர்களே, கண்ணுக்கு குளிர்ச்சியையும், மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரக்கூடிய சுற்றலா இடங்களை எந்தவிதத்திலும் அசுத்தப்படுத்தாமல் அச்சுறுத்தாமல் தயவு செய்து வேறு இடம் தேடுங்கள்......

இந்தப்பதிவு - எல்லா குடிகாரர்களுக்கும் சமர்ப்பணம்.

அணில்குட்டி : ம்க்கும்..... எங்கப்போனாலும் இந்த அம்மணிக்கு மட்டும் இந்த மாதிரி எழுத எதாச்சும் மேட்டர் கிடைச்சிடும்........

பீட்டர் தாத்ஸ் : “First you take a drink, then the drink takes a drink, then the drink takes you.” ― F. Scott Fitzgerald

படங்கள் : நன்றி கூகுள்