சென்னையிலிருந்து 60 கிமி தொலைவில்,  பழவேற்காடு எரியை ஸ்ரீஹரிக்கோட்டா தீவு வங்களாவிரிகுடாவிலிருந்து பிரிக்கிறது.  இங்கு பழவேற்காடு ஏரி மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளது.   கடலும் கடல் சார்ந்த நிலமும் எப்படியிருக்கும் என்பது தெளிவாகத்தெரிந்தது. பொதுவாக இப்படியான சுற்றுளா தளங்களில்,  சுற்றுளா பயணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சுற்றிப்பார்க்கும் இடங்களும், கடலிலிருந்து கிடைக்கும் பொருட்களைக்கொண்டு செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் விற்பனைப்போன்றவை அதிகமாக இருக்கும். ஆனால் இங்கே அந்த ஊர் மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தவிர வேறொன்றுமில்லை. வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்லறைகள்'  மூடிக்கிடந்தன.  தமிழ்நாடு அரசின் படகு குழாம் செயலற்று மூடப்பட்டிருந்தது.  தனியாக நாமே படகு ஏற்பாடு செய்து சுற்றிப்பார்த்து வரலாம். அவர்கள் என்ன வாடகை சொல்கிறார்களோ அதுதான்...பேரம் பேசி குறைக்க முடிந்தால் அது நம் சாமர்த்தியம்.


கடற்கரைக்கு செல்ல மீனவக்குப்பத்தை கடந்து சென்றதால் அம்மக்களையும் பார்க்க முடிந்தது.  செல்லும் வழியெங்கிலும், விதவிதமான, அழகழகான சோழிகள் சிதறிக்கிடந்தன, குப்பையோடு குப்பையாக குவிக்கப்பட்டிருந்தன. கால் வைக்குமிடமெல்லாம் கருவாடு காயவைக்கப்பட்டிருந்தது. அதாவது, மனிதர்கள் புழங்கும் இடங்களிலும் நடைப்பாதைகளிலும் கூட ஆங்காங்கே கருவாடு காயவைக்கப்பட்டிருந்தது.
கொக்கு, நாரை, ஃபெலமிங்கோ பறவைகள் மீன் கொத்திச்செல்ல அங்குமிங்கும் பறந்தபடி இருந்தன. கூகுள் ஆண்டவர் சொன்னபடி, பறவைகள் சரணாலயம் என்ற ஒன்றே கண்ணில் படவில்லை, பிப்ரவரி கழிந்தே சீசன் என படகுக்காரர் சொல்லி, ஏதோ தூரத்தில் ஒரு இடத்தை கைக்காட்டினார்.   வெளிநாட்டுப்பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து தங்கி, மீன்களை கொத்தித்தின்று இளைப்பாறுமாம். இது ஸ்ரீஹரிக்கோட்டா தீவை ஒட்டிய தீவுப்பகுதிகளில் தான் அதிகம் இருக்குமாம், இவற்றைப் பார்க்க படகில் மட்டுமே செல்லமுடியும்.
பழவேற்காடு ஏரி என்று சொன்னாலும், அங்கிருக்கும் மக்கள் இது ஏரி இல்லை, ஆறு என்றனர். ஆறு கடலில் சென்று கலக்கும் இடம் என்பதால், ஆற்று நீரும் உப்பாகவே இருக்குமென்றனர். மீன், இறால், நண்டு இவையே இவர்களின் வாழ்வியல் ஆதாரம். பெண்கள் ஆற்றில் இறங்கி இறாலை கையாளேயே துழவிப்பிடிக்கின்றனர். இந்த நாட்டு இறால், கரும் பச்சையும்  அடர் சாம்பல் நிறமும் கலந்ததாக இருக்கிறது. மற்றொரு வகை, சாம்பல் நிறத்தில் இருந்தது.  ஆக, இங்கு கிடைக்கும் மீன் இறால் நண்டு எதுவுமே கடலிலிருந்து கிடைப்பதல்ல என்பதை அவற்றைப்பார்த்தாலே தெரிகிறது. மீன் வகைகள் எதையும் இதுவரை பார்த்ததேயில்லை. அநேகமாக எல்லா மீன்களிலும் கருமை நிறம் அதிகம் கலந்தவையாக இருந்தன. 
கண்ணுக்கெட்டும் தூரத்தில், படகைக்கொண்டு சென்று பெரிய வலையைப்போட்டு மீன் பிடித்து வருகின்றனர். அதிக ஆழமும் இல்லை, படகிலிருந்து இறங்கி, தண்ணீரில் நின்று வலைவீசி மீனைப்பிடிக்கின்றனர். படகில் பயணம் செய்யும் போது, அந்த ஆற்றில் மீன்கள் ஏராளமாக இருக்கின்றன என்பது தெரிந்தது. "Life of Pi" படத்தில் வருவதைப்போல மீன்கள் தொடர்ந்து தண்ணீரிலிருந்து எழும்பி பறந்து குதித்தன. இது கண் சிமிட்டும் நேரத்தில் படப்படவென நிகழ்கிறது.. பொடி மீன்களும், பெரிய மீன்களும் படுவேகமாக துள்ளிப்பறந்தன. மீனவர்கள், சூரியன் மறையும் நேரம், படகில் தேவையான பொருட்களை வைத்து கட்டிக்கொண்டு மீன் பிடிக்க புறப்பட்டனர். நாங்கள் படகில் சென்ற போது, சில மீனவர்கள் குழு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 
பழவேற்காடு போகும் வழியில் பொன்னேரி- பழவேற்காடு சாலையில் திருப்பாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மிக பழமை வாய்ந்த இக்கோயில் திருக்கடையூர் கோயிலின் சிறப்பைப்பெற்றுள்ளதால், அங்கு செல்லமுடியாதவர்கள் இங்கு தங்களில் 60,70,80 திருமணங்களை செய்துக்கொள்ளலாம். அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் கோயில் இருந்தாலும், வேளால முதலியார்கள் சங்கம் தான் முதன்மையாக நின்று இக்கோயிலை தங்களின் நேரடி கண்காணிப்பில் நடத்திவருகின்றன. சங்க அலுவலங்களை கோயில் பிரகாரத்தில் பார்க்கமுடிந்தது. மிகப்பெரிய பிரகாரம் கொண்ட இக்கோயிலின் நேர் எதிரில் தாமரைப்பூக்கள் பூத்துக்குலுங்கும் பெரியக்குளம் ஒன்றும் இருக்கிறது.  மிக அமைதியான சூழலில் அமைந்துள்ள இக்கோயில் என்னை மிகவும் கவர்ந்தது.  

அணில் குட்டி : "ஊர்சுத்தி உண்ணாமலை "

பீட்டர் தாத்ஸ் : “The ocean stirs the heart, inspires the imagination and brings eternal joy to the soul.” – Wyland