நெய்தல்

சென்னையிலிருந்து 60 கிமி தொலைவில்,  பழவேற்காடு எரியை ஸ்ரீஹரிக்கோட்டா தீவு வங்களாவிரிகுடாவிலிருந்து பிரிக்கிறது.  இங்கு பழவேற்காடு ஏரி மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளது.   கடலும் கடல் சார்ந்த நிலமும் எப்படியிருக்கும் என்பது தெளிவாகத்தெரிந்தது. பொதுவாக இப்படியான சுற்றுளா தளங்களில்,  சுற்றுளா பயணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சுற்றிப்பார்க்கும் இடங்களும், கடலிலிருந்து கிடைக்கும் பொருட்களைக்கொண்டு செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் விற்பனைப்போன்றவை அதிகமாக இருக்கும். ஆனால் இங்கே அந்த ஊர் மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தவிர வேறொன்றுமில்லை. வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்லறைகள்'  மூடிக்கிடந்தன.  தமிழ்நாடு அரசின் படகு குழாம் செயலற்று மூடப்பட்டிருந்தது.  தனியாக நாமே படகு ஏற்பாடு செய்து சுற்றிப்பார்த்து வரலாம். அவர்கள் என்ன வாடகை சொல்கிறார்களோ அதுதான்...பேரம் பேசி குறைக்க முடிந்தால் அது நம் சாமர்த்தியம்.


கடற்கரைக்கு செல்ல மீனவக்குப்பத்தை கடந்து சென்றதால் அம்மக்களையும் பார்க்க முடிந்தது.  செல்லும் வழியெங்கிலும், விதவிதமான, அழகழகான சோழிகள் சிதறிக்கிடந்தன, குப்பையோடு குப்பையாக குவிக்கப்பட்டிருந்தன. கால் வைக்குமிடமெல்லாம் கருவாடு காயவைக்கப்பட்டிருந்தது. அதாவது, மனிதர்கள் புழங்கும் இடங்களிலும் நடைப்பாதைகளிலும் கூட ஆங்காங்கே கருவாடு காயவைக்கப்பட்டிருந்தது.
கொக்கு, நாரை, ஃபெலமிங்கோ பறவைகள் மீன் கொத்திச்செல்ல அங்குமிங்கும் பறந்தபடி இருந்தன. கூகுள் ஆண்டவர் சொன்னபடி, பறவைகள் சரணாலயம் என்ற ஒன்றே கண்ணில் படவில்லை, பிப்ரவரி கழிந்தே சீசன் என படகுக்காரர் சொல்லி, ஏதோ தூரத்தில் ஒரு இடத்தை கைக்காட்டினார்.   வெளிநாட்டுப்பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து தங்கி, மீன்களை கொத்தித்தின்று இளைப்பாறுமாம். இது ஸ்ரீஹரிக்கோட்டா தீவை ஒட்டிய தீவுப்பகுதிகளில் தான் அதிகம் இருக்குமாம், இவற்றைப் பார்க்க படகில் மட்டுமே செல்லமுடியும்.
பழவேற்காடு ஏரி என்று சொன்னாலும், அங்கிருக்கும் மக்கள் இது ஏரி இல்லை, ஆறு என்றனர். ஆறு கடலில் சென்று கலக்கும் இடம் என்பதால், ஆற்று நீரும் உப்பாகவே இருக்குமென்றனர். மீன், இறால், நண்டு இவையே இவர்களின் வாழ்வியல் ஆதாரம். பெண்கள் ஆற்றில் இறங்கி இறாலை கையாளேயே துழவிப்பிடிக்கின்றனர். இந்த நாட்டு இறால், கரும் பச்சையும்  அடர் சாம்பல் நிறமும் கலந்ததாக இருக்கிறது. மற்றொரு வகை, சாம்பல் நிறத்தில் இருந்தது.  ஆக, இங்கு கிடைக்கும் மீன் இறால் நண்டு எதுவுமே கடலிலிருந்து கிடைப்பதல்ல என்பதை அவற்றைப்பார்த்தாலே தெரிகிறது. மீன் வகைகள் எதையும் இதுவரை பார்த்ததேயில்லை. அநேகமாக எல்லா மீன்களிலும் கருமை நிறம் அதிகம் கலந்தவையாக இருந்தன. 
கண்ணுக்கெட்டும் தூரத்தில், படகைக்கொண்டு சென்று பெரிய வலையைப்போட்டு மீன் பிடித்து வருகின்றனர். அதிக ஆழமும் இல்லை, படகிலிருந்து இறங்கி, தண்ணீரில் நின்று வலைவீசி மீனைப்பிடிக்கின்றனர். படகில் பயணம் செய்யும் போது, அந்த ஆற்றில் மீன்கள் ஏராளமாக இருக்கின்றன என்பது தெரிந்தது. "Life of Pi" படத்தில் வருவதைப்போல மீன்கள் தொடர்ந்து தண்ணீரிலிருந்து எழும்பி பறந்து குதித்தன. இது கண் சிமிட்டும் நேரத்தில் படப்படவென நிகழ்கிறது.. பொடி மீன்களும், பெரிய மீன்களும் படுவேகமாக துள்ளிப்பறந்தன. மீனவர்கள், சூரியன் மறையும் நேரம், படகில் தேவையான பொருட்களை வைத்து கட்டிக்கொண்டு மீன் பிடிக்க புறப்பட்டனர். நாங்கள் படகில் சென்ற போது, சில மீனவர்கள் குழு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 
பழவேற்காடு போகும் வழியில் பொன்னேரி- பழவேற்காடு சாலையில் திருப்பாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மிக பழமை வாய்ந்த இக்கோயில் திருக்கடையூர் கோயிலின் சிறப்பைப்பெற்றுள்ளதால், அங்கு செல்லமுடியாதவர்கள் இங்கு தங்களில் 60,70,80 திருமணங்களை செய்துக்கொள்ளலாம். அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் கோயில் இருந்தாலும், வேளால முதலியார்கள் சங்கம் தான் முதன்மையாக நின்று இக்கோயிலை தங்களின் நேரடி கண்காணிப்பில் நடத்திவருகின்றன. சங்க அலுவலங்களை கோயில் பிரகாரத்தில் பார்க்கமுடிந்தது. மிகப்பெரிய பிரகாரம் கொண்ட இக்கோயிலின் நேர் எதிரில் தாமரைப்பூக்கள் பூத்துக்குலுங்கும் பெரியக்குளம் ஒன்றும் இருக்கிறது.  மிக அமைதியான சூழலில் அமைந்துள்ள இக்கோயில் என்னை மிகவும் கவர்ந்தது.  

அணில் குட்டி : "ஊர்சுத்தி உண்ணாமலை "

பீட்டர் தாத்ஸ் : “The ocean stirs the heart, inspires the imagination and brings eternal joy to the soul.” – Wyland

மிதிவண்டி :)

எனக்கு வயது 6, திருச்சி பொன்மலையில் இருந்தோம்.

அம்மா ஊரில் இல்லாத நாட்களில், நானும் சின்ன அண்ணாவும் சாப்பிட, ஒரு ஹோட்டலில் அப்பா ஏற்பாடு செய்திருந்தார். அப்பா உடன்வர வேண்டிய அவசியமில்லை, அண்ணன் கையை பிடிச்சிட்டு போவேன், காஃபியில் ஆரம்பித்து, என்ன பிடிக்கிறதோ சாப்பிட்டு விட்டு, அப்பா பெயரில் கணக்கு எழுதி வச்சிட்டு வந்துடுவோம். விலை சலுகைகள் ஏதுமில்லை என்றாலும், குழந்தைகள் என்ன கேட்டாலும் தரனும், நன்றாக கவனிக்க வேண்டுமென்பது அப்பாவின் வேண்டுகோள்.

பிரதி உபகாரமாக ஹோட்டலுக்கு குடி தண்ணீர் சப்ளை எங்கள் வீட்டிலிருந்து செல்லும். நாங்கள் அப்போது இருந்தது ஃபோர்மேன் குவாட்டர்ஸ் பங்களா. அதன் பின் பக்கம் இரண்டு அவுட் ஹவஸ் வீடுகளில் வேலையாட்கள் தங்கியிருப்பாங்க, அவங்க பயன்படுத்த வெளியில் ஒரு குடிதண்ணீர் குழாய் இருக்கும், அதிலிருந்து, ஹோட்டலிருந்து ஒரு அண்ணன் வந்து இரண்டு குடங்களில் தண்ணீர் நிரப்பி சைக்கிளில் கட்டி எடுத்துட்டு போவார். அந்த அண்ணனுக்கு ஒரு கண் இருக்காது, இமை மூடி தைத்தே இருக்கும், என்ன காரணமென்று எனக்கு நினைவில்லை, அந்த அண்ணனின் முகம் இன்னமும் நினைவில் இருக்கு..

பங்களா என்று சொன்னேன் அல்லவா? தெருவில் இருந்து எங்கள் வீட்டை அடையவே 500 மீட்டருக்கு மேல் நடக்கவேண்டியிருக்கும், வீட்டை கடந்து தோட்டத்து வழியாக பின்னால் சென்று தண்ணீர் பிடித்துவர எப்படியும் 15-20 நிமிடங்கள் பிடிக்கும். ஒற்றைக்கண் அண்ணன், தெருவில் சைக்கிளை விட்டுட்டு, குடத்தோடு குழாயடிக்குச் சென்று வருவதற்குள் சின்ன அண்ணன் (7 1/2 வயசு), அந்த சைக்கிளை எடுத்து குரங்குப்பெடல் அடித்து ஓட்ட முயற்சி செய்வார். ஒரு வாரம், 10 நாட்களுக்குள் சைக்கிள் நன்றாகவே ஓட்டக்கற்றுக்கொண்டார்.

நான் இதை வேடிக்கைப்பார்க்கவும், ஒற்றைக்கண் அண்ணன் தண்ணீர் குடத்தோடு வந்தால், "கார்த்தீஈஈஈஈ...... அண்ணா வந்துட்டாங்க...வா"ன்னு குரல் கொடுக்கவும் மெயின் கேட்டில் நிற்பேன்.

சின்ன அண்ணன் ஓசியில் சைக்கிள் ஒட்டக்கற்றுக்கொண்டு, எனக்கு லேடிஸ் சைக்கிள் வாடகைக்கு எடுத்து, (ஒரு மணி நேரம் 50பைசா) கிரவுண்டுக்கு அழைத்துச் சென்று கற்றுக்கொடுத்தது.  அண்ணனின் விடா முயற்சியில் 1-2 நாட்களில் கற்றுக்கொண்டேன்..

இருவருக்கும் நன்றாக சைக்கிள் ஓட்டத்தெரிந்தாலும், அண்ணன் சம்பாதிக்க ஆரம்பித்தப்பிறகு அவருக்கென ஒரு சைக்கிள் வாங்கினார். எனக்கு,  நவீனுக்கு 2 வயதாகும் போது தான் சைக்கிள் சொந்தமாக கிடைத்தது. அதுவரையில் நமக்கென்று சொந்தமாக ஒரு சைக்கிள் இல்லை என்ற ஏக்கம் இருக்கதான் செய்தது. என் வயதை ஒற்ற, என் அத்தை மகளுக்கு சைக்கிள் பள்ளிப்பருவத்திலேயே வாங்கிக்கொடுத்தார்கள். அதைப்பார்த்து வீட்டில் எவ்வளவு கேட்டும் சைக்கிள் வாங்கித்தரல...எப்பவும் நடராஜா சர்வீஸ் தான்.. 

இப்படியாகவே என் சின்ன வயசு சொந்த சைக்கிள் கனவு, ஏக்கத்தோடு கரைந்தது. இன்று அனைவரும் வித விதமான கார் கனவுகளோடு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்க எனக்கென்னவோ சைக்கிள் வாங்கதான் ஆவல். பல வருடங்கள் கழித்து, 1992-94க்கு பிறகு, திரும்பவும் சைக்கிள் வாங்கி ஓட்டி வருகிறேன்.

புது சைக்கிள் தான் வாங்கனும்னு வீட்டில் ஒரே கெடுபிடி. மாதக்கணக்கில் அடம்புடிச்சி...உபயோகப்படுத்திய சைக்கிள் தான் வேண்டுமென ஒருவழியாக வாங்கிட்டேன்.. :)

என்ன... இன்னும் ஓட்டுவதற்கு பேலன்ஸ் சரியா வரல..நம்ம சாலைகள் வேற சூப்பரா இருக்கறதால.. கொஞ்சம் திணறதான் செய்கிறேன். அதேப்போல இரவு நேரங்களில் விளக்கு இல்லாத தெருவில் ஓட்ட மேடுபள்ளம் சுத்தமா கண்ணுத்தெரியல.. :)  மொத்தத்தில் எனக்கு முன்னால், பின்னால் வரும் வண்டிக்காரர்கள் நான் ஓட்டுவதைப்பார்த்து பயப்படுவது அப்பட்டமாக தெரிகிறது. 

கொஞ்ச நாள் ஆனா சரியாகிடும்னு நம்பறேன்.  இல்லையா எங்கையாச்சும் விழுந்து வாரி சில்லறை பொறுக்கி சைக்கிள் ஓட்டறதை நிறுத்தவும் சொல்லிடுவாங்களோன்னு லேசாக உள்ளுக்குள் பயம் இருக்கதான் செய்து... பார்க்கலாம்...

என்னோட Black Bird ஐ விட, சைக்கிள் ரொம்பவே பிடிச்சியிருக்கு..
பெட்ரோல் செலவு மிச்சம், உடற்பயிற்சியும் ஆச்சி...

அணில் குட்டி  : அந்த சைக்கிள் என்ன பாவம் பண்ணுச்சோ... .படாதபாடுப்படுது .... :((((

பீட்டர் தாத்ஸ் : Life is a Cycle.. :)

மிதிவண்டி வரலாறு : நன்றி விக்கி 

பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac) என்பவர் பொழுது போக்காக வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டார். ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி. 1791-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். இந்த சைக்கிளை ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி உருளச்செய்ய வேண்டும். ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்ட இந்தவகைமிதிவண்டியில் திசைமாற்றி, மிதிஇயக்கி, தடை, என எதுவும் கிடையாது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி ஷிவ்ராக் விளக்கிக்காட்டினார். [2]இந்த நிகழ்வு மிதிவண்டி உருவாவதற்கு காரணமாக இருந்தது. தொடர்ந்து படிக்க