25 வருடங்களாக  ராஜநாகத்தை’ (King Cobra) ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டவர் ஒருவர், இந்தியாவின் மேற்குப்பகுதியில், கர்நாடக காடுகளில் தன் ஆராய்ச்சியை தொடர வருகிறார். இந்திய மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் உடன் பணி செய்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் முதற்கட்ட வேலையாக, ஆண், பெண் என இரண்டு ராஜ நாகங்களை, காடுகளில் மிகுந்த சிரமங்கங்களுக்கிடையில் தேடி பிடிக்கின்றனர். பிடிக்கப்பட்ட நாகங்கள் இரண்டிற்கும் மயக்கம் செலுத்தப்பட்டு, அவற்றின் உடலில் பாம்புகள் இருக்குமிடத்தை காட்டக்கூடிய இண்டிக்கேட்டர் பொறுத்தப்படுகிறது. 

மயக்கம் தெளிந்து, உடல்நிலை சீரான இரண்டு ராஜநாகங்களும்,  பிடிக்கப்பட்ட இடத்தை விடுத்து, வெகுதூரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, காட்டில் வெவ்வேறு இடங்களில் விடப்படுகின்றன. இரண்டையும்
ஆராய்ச்சியாளர்கள், இண்டிகேட்டரின் உதவியோடு பின் தொடர்கின்றனர். இரண்டு ராஜநாகங்களும் தன் இறையைத்தேடுவதோடு, தன் துணையையும் தேடுகின்றன.  ஒரு கட்டத்தில் காதலன் காதலி இரண்டும் சந்திக்கின்றன. இரண்டும் கூடி சந்தோஷமாக இருக்கின்றன. பெண் ராஜநாகம் கருவுகிறது. 
இந்நிலையில், வேறொரு இடத்திலிருந்து வரும், ஒரு ஆண் ராஜநாகம்(2) இவ்விடத்தில் குடியேற முனைக்கிறது. அப்படி புது இடத்தில் குடியேற நினைக்கும் ராஜநாகம்(2), அங்கு ஏற்கெனவே இருக்கும் ஆண் ராஜநாகத்தோடு(1) சண்டையிட்டு, அதனை வெற்றிப்பெற்றால் தான் குடியேற முடியும். அதனால், இந்த புதிய ஆண் ராஜநாகமும்(2), அங்கு முன்னமே இருக்கும் ஆண் ராஜநாகமும்(1) –(இண்டிகேட்டர் பொறுத்தப்பட்ட) சண்டையிட தொடங்குகின்றன. 2-3 மணி நேரம் நடைபெறும் இந்த பெரிய ஆக்ரோஷமான யுத்தத்தின் முடிவில், புதிய ராஜநாகம்(2) வெற்றிப்பெற்று அந்த இடத்தில் வெற்றிக்களிப்போடு குடியேறுகிறது.

இந்த புதிய ராஜநாகம்(2), அங்கிருக்கும் பெண் ராஜ நாகத்தை சந்திக்கிறது. அதன் மேல் மையல் கொண்டு தன் இச்சையை வெளிப்படுத்துகிறது. ஆனால்,  அதற்கு அடிபணிய மறுக்கும் பெண் ராஜநாகம், அதனை விட்டு விலகிசெல்கிறது. ஆனால் விடாமல் துரத்தும் புதிய ஆண் ராஜநாகம், கெஞ்சியும் கொஞ்சியும் மிகவும் நாகரீகமான முறையில் தன் ஆசைக்கு
இணங்க வைக்க எல்லாவிதமான முயற்சியும் செய்கிறது.

பெண் ராஜநாகமோ, தன் காதலனின் கருமுட்டைகளை சுமந்துக் கொண்டிருப்பதால் புதிய ஆண் ராஜநாகத்தை அறவே வெறுத்து ஒதுக்குகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், பொறுமை இழக்கும் ஆண் ராஜநாகம், கோபம் கொண்டு வெறித்தனமாக அந்த பெண் ராஜநாகத்தை மிகச்சரியாக அதன் கழுத்தில் கடித்து, கொஞ்சம் கொஞ்சமாக துடிதுடிக்க சாகடிக்கிறது. சிறிது நேரப்போராட்டத்திற்கு பிறகு பெண் ராஜநாகம் இறந்தேப்போகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த பெண் ராஜநாகத்தின் வயிற்றை அறுத்துப்பார்க்கையில் அதனுள் 17 முட்டைகள் இருந்தன. இந்த இறந்த நாகத்தை நெருப்பு மூட்டி  எரித்துவிடுகின்றனர்.

பின்னர், அதே காட்டில் புதிய ராஜநாகத்தின் மூலமாக கருவுற்ற வேறொரு பெண் ராஜநாகம் 21 முட்டைகளை இட்டு, அதை அடைக்காக்க காய்ந்த மூங்கில் தழைகளையும், இலைகளையும் ஒரு அடி உயரத்திற்கு குவித்து, முட்டைகளுக்கு தேவையான சீதோஷனநிலையை உருவாக்கி அவற்றிற்கு பாதுக்காப்பாக அங்கேயே இருக்கிறது.

இப்படியாக முடிவுபெறும் இந்த ராஜநாகத்தின் ஆராய்ச்சி கதையை "நேட் ஜியோ" வில் பார்த்த போது, காதலன் பாம்பு காதலியை தேடும் போதும், அவற்றின் தவிப்புகளும், தேடிக் கிடைத்தப்பின் அவற்றின் காதல் லீலைகளும், இரு ஆண் ராஜநாகங்களுக்கு இடையே நடக்கும் சில மணி நேர நிஜமான யுத்தமும், பின்பு பெண் ராஜநாகத்தை கொல்லும் போது ஆண் ராஜநாகத்தின் வெறித்தனத்தையும் பார்க்கையில் ஒரு வித பதட்டமும் ஆச்சரியமும் ஏற்படாமல் இல்லை.

சிறந்த திரைக்கதையில் அமைந்த ஒரு தமிழ் புராணக்கதை பார்த்தது போன்றே இருந்தது.  இது இப்பவும் நடக்கும் உண்மை சம்பவம் என்பதை அறிவுஏற்றுக்கொள்ள நேரம் பிடித்தது. 

ஆண்’ என்பவன், இந்த உலகத்தில் எந்த ஜீவராசி வடிவில் பிறந்திருந்தாலும் அதீத வீரத்தோடும், பெண்ணை அடக்கி ஆள்பவனாகவும், அடிமைப்படுத்துபவனாகவும், அதே சமயம் அவனே பெண்ணிற்கு சிறந்த பாதுகாப்பாளனாகவும் இருக்கிறான். இதை இயற்கையின் படைப்பில் ஒன்றாகவே பார்க்கவேண்டுமே ஒழிய.... பெண்ணீய பிதற்றல்களோடு பார்த்து..... .....அடடே  சப்ஜெக்ட் மாறுதே....?!!... ராஜநாகத்திற்கு வருவோம். 

ராஜநாகங்களைப் பற்றிய சில தகவல்கள் : 

ராஜநாகங்கள், 300 அடி தொலைவுக்குள் தன் இறையை பார்க்கும் வலிமைப்பெற்றது.  இவற்றிற்கு மிகவும் பிடித்த உணவு மற்ற பாம்பினங்களே. 

இவை, நேரடியாக நரம்பு மண்டலத்தை தாக்கி, மயக்கத்தை உண்டாக்கி, தூக்க நிலைக்கு செல்லவைத்து பிறகு இறக்கவைக்கும் விஷத்தன்மை கொண்டவை. 

ராஜநாகங்கள், மிக அறிதாகவே மனிதர்களை தாக்குக்கிறது. அதேசமயம்,  யானையை ஒரே கடியில் சாய்க்குமளவுக்கு தன்னுள் கடுமையான விஷத்தைப்பெற்றவை. அவ்விஷமானது ஒரே நேரத்தில் 20 மனிதர்களை சாகடிக்க வல்லவை. 

தன் உடலின் நீளத்தில், மூன்றில் ஒரு பங்கு உடலை தூக்கி நிற்ககூடியது. 

மேற்கிந்தியாவில் அதிகமாக ராஜநாகங்கள் காணப்படுகின்றன. 

காய்ந்த இலைகள், காய்ந்த மூங்கில் தழைகளைக்கொண்டு தன் முட்டைகளை மூடி அதற்கு தேவையான சீதோஷன நிலையை உருவாக்குகின்றது.  இதனை ஒரு மலைப்போல ஒரு அடி உயரத்திற்கு முட்டைகளின் மேல் கூட்டிவைத்து தன் முட்டைகளை காக்கிறது. 

அதிகபட்சமாக 24 முட்டைவரை இடக்கூடியவை, ஆனால் எத்தனை முட்டைகள் இட்டாலும், அவற்றில் பிழைத்து வருவது என்னவோ 1-2 ராஜநாகங்கள் மட்டுமே.

நன்றி : நேட் ஜியோ & கூகுள்.

அணில் குட்டி : ம்ம்ம்...இனி இப்படியெல்லாம் வேற பதிவு வருமோ ?! டிவி கேபிள் ஒயரை முதல்ல புடுங்கிவுடனும்... 

பீட்டர் தாத்ஸ் : Owing to ignorance of the rope the rope appears to be a snake; owing to ignorance of the Self the transient state arises of the individualized, limited, phenomenal aspect of the Self.- Guru Nanak