எங்கள் மூவரின் பிறந்தநாள், நவீனின் / எங்களின் தேர்வு முடிவுகள்,  திருமணநாள், இன்னும் எந்த நல்ல நிகழ்வுகளாக இருந்தாலும் அவரின் சட்டைப்பை தான் காலியாகும். என்னுடைய சம்பாதித்தியம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இப்படியான விசயங்களுக்கு ஒரு பைசா இங்கிருந்து நகராது.

அவரின் பிறந்தநாளுக்கு முன் தினம், நானும் நவீனும் ஒன்றாகவே கடைக்கு செல்வோம். அவன் அவருக்காக என்ன வாங்கினாலும் அது என் செலவு.  பரிசுப்பொருட்களோடு, "அம்மா உன் புருஷன் சந்தோஷப்படுவார்னு சொல்லிட்டு"  கேக், சாக்லெட் தவறாமல் வாங்குவான், அதுவும் என் செலவே. அதிகபட்சமாக என் செலவு இத்தோடு முடியும்.

ஆனால் பிறந்தநாளன்று வெளியில் உணவருந்தச் செல்லும் போதெல்லாம், அவரின் மாறாத ஒரே டயலாக் : "உங்களுக்கும் நான் தான் செலவு செய்ய வேண்டியிருக்கு, எனக்கும் நானே செலவு செய்துக்க வேண்டியிருக்கு".

இதற்கு, இந்தப்பக்கம் எங்கக்கிட்டயிருந்து பெருசா எதும் ரியாக்ஷன் வராது. அவர் எவ்ளோ ஃப்லீங்ஸ்ஸோட இந்த டயலாக்கை டெலிவரி செய்தாலும் எங்களின் ஸ்டேம்ப் பேட் ரியாக்ஷன். "நக்கல் சிரிப்புதான்". இதையெல்லாம் முன்னேற்பாடாக பேசி வைத்துக்கொண்டு செய்வதல்ல... அவர் இப்படி பேச ஆரம்பித்தாவே, எனக்கும் நவீனுக்கும் அடிவயிற்றிலிருந்து சிரிப்பு தானாவே பொங்கி பொங்கி பெருக்கெடுக்கும். இந்த கொடுமையைப் பார்த்து அவர் இன்னும் நொந்து நூடல்ஸ் ஆவார்னு தெரிஞ்சாலுமே கூட, தானாவே வருவதை எப்படி கன்ட்ரோல் செய்யமுடியும் சொல்லுங்க?.

இதைக்கூட  தொலையட்டும்னு விடுவார், ஆனா அவர் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும், நவீனும் நானும் வீட்டில் என்ன இல்லையோ அல்லது வீட்டிற்கு தேவைப்படும் பொருளை பரிசுப்பொருளாக அவருக்கு கொடுத்து, அப்படியே வாங்கி, வீட்டிற்கு பயன்படுத்துவோம். (என்னா வில்லத்தனம்?)  கடைக்கு செல்லும் போது, நவீன் அவருக்கு என்ன வாங்கலாம்னு தேடிக்கிட்டு இருக்கும் போது, வீட்டில் இல்லாத பொருளை எதையாது சொல்லி, அவனுக்கு ஐடியா கொடுப்பேன். அவனும் எதுக்கு என்னன்னு விசாரிச்சிட்டு, சரி."எப்படியும் உன் புருஷனுக்கு வேற என்ன வாங்கிக்கொடுத்தாலும் ஆயிரத்து எட்டு கேள்வி கேட்டு கொடச்சல் கொடுப்பாரு, அதனால..இப்படி எதையாச்சும் வாங்கிக்கொடுத்தா..வாயத்தொறக்காம பேசாம இருப்பார்னு" முடிவெடுத்து வாங்கிடுவான்.

ஒரு சமயம் "அஷ்ட விநாயகர் படம்" பூஜை அறைக்கு வேண்டுமென்று வாங்க நினைத்ததை அவரின் பிறந்தநாள் பரிசாக கொடுக்க, "ஞே" என்ற முழுத்தவாறே வாங்கி எதும் சொல்லாமல் என்னிடமே திருப்பிக்கொடுத்துவிட்டார்.

அப்புறம் ஒரு முறை ஒரு மாதிரி கன்னாப்பின்னான்னு கிஃப்ட் பாக்கெட் இருப்பதைப்பார்த்து ரொம்பவே ஆர்வத்தோடு பிரித்தார். பிரித்தவர் கையில் கிடைத்தது என்னவோ டார்ச் லைட். என்னைப்பார்த்து "இது எதுக்குடி எனக்கு?" ...ஹிஹி..அது உங்களுக்கு இல்லப்பா... வீட்டில் பெரிய டார்ச் லைட் இல்ல..அதான் வாங்கினோம். " வேற என்ன பதிலை எதிர்பார்க்கறீங்க..எப்பவும் போல  "ஞே" தான்..

வீட்டில் உள்ள பலப் பொருட்களை, ஃபாஸ்ட் ஃபார்வேர்டில் ஒரு சுற்றுச் சுற்றிவந்தால், அநேகமாக ஞாபகமறதியில் விட்டுப்போன அனைத்துப்பொருட்களும் அவரின் பிறந்தநாளுக்கு வாங்கியதாகவே இருக்கும்.

இதில் மாத மளிகைப் பட்டியலில் வரும் சில பொருட்கள் கூட அவரின் பிறந்தநாள் பரிசாக மாறியிருக்கும். அதில் ரூம் ஃப்ரஷ்னர், அவருக்கு டியூடரன்ட், அலுமினிய ஹேங்கர்ஸ் போன்றவைகளும் அடங்கும். (ஏய்ய்.ஏய்...யாரது துப்பறது..? )

இப்படியாக வந்த ஒருநாள் தான் காதலர் தினம்!  காலையிலேயே கேட்டேன். .  "...ப்பா ரொம்ப நாளா செருப்பு????? வாங்கனும்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே... காதலர் தினத்துக்கு உங்களுக்கு செருப்பு வாங்கித்தரட்டாப்பா? "  (சீனை சரியா கிரகிக்கனும்.. அப்பாவியாக முகத்தை வச்சிக்கிட்டு, கண்ணைச்  சிமிட்டி சிமிட்டி.... கேட்டேன், போங்க ...போயி திரும்ப ஒருதரம் நான் சொன்னமாதிரி சீனை ப்படிச்சிட்டு வாங்க)

ஒன்னும் பதில் இல்ல...அப்படியே என்னையே சலனமின்றி பாத்துக்கிட்டே இருந்தாரு....அந்தப்பார்வையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் புதைந்துக்கிடந்தன. "நான் என்னடி பாவம் பண்ணேன்? உன்னை கல்யாணம் செய்துக்கிட்டு இவ்ளோ நாளா உன்னோட குடும்பம் நடத்தறேனே அது தப்பா? ல ஆரம்பிச்சி ..................................... .............. ......... ......... ........... எல்லாம் என் தலையெழுத்துன்னு" முடிக்கிறவரை ஒரு 2 மணிநேர புலம்பல் அவர் பார்வையில் நீண்டது.

நீங்களே சொல்லுங்க ? ஒரு சமயம் இல்லன்னாலும் ஒரு சமயம் யாரா இருந்தாலுமே பார்க்கப் பாவமாத்தானே இருக்கும். எனக்கும் அப்படிதான், அவரைப்பார்த்தாவே ரொம்ப பாவமா இருந்தது. :( அதே மனைநிலையோடு, "இவருக்கு நம்மோட காதலை எப்படியும் வெளிப்படுத்தியே ஆகனும்னு" ஆவேசத்தோட கடைக்குப்போனேன். 

ஆனா, கடைக்குள் நுழைஞ்சவுடனே ரொம்ப அவமானமா போச்சி. ....இப்படி ஒரு அவமானம் எனக்கு ஏற்படும்னு நான் கனவில் கூட நினைச்சிப் பார்க்கல. அவ்ளோ பெரிய கடையில், காதலர்தினத்திற்கு கார்ட் வாங்கும் இடத்தில் ஒரு பெண் கூட இல்லை, ஒரே ஆண்கள் கூட்டம்!  அவங்க நடுவில் நுழைந்து, கார்ட்டுகளை எடுக்கும் போது, அத்தனை ஆண்களும் என்னயே ஒரு மாதிரியாக பார்த்ததே என் அவமானத்திற்கு காரணமாப்போச்சி. "..ச்சே... காதலர் தினத்திற்கு அவரு தான் கார்டு கொடுக்கனுமோ..நாம வாங்கக்கூடாதோனு அநியாயத்திற்கு சந்தேகமும் வந்துப்போச்சி." இருந்தாலும் அவமானத்தை எல்லாம் சகச்சிக்கிட்டு, நிதானமாக கார்டுகளை படித்து, ஒன்றைத்தேர்ந்தெடுத்து கவுண்டரில் வந்து நிற்கிறேன்.

நான் வாசித்து வைத்தவிட்டு வந்த கார்டை இன்னொருத்தர் எடுத்துவந்து என் எதிரில் என்னைப்பார்த்தவாரே பில் போட கொடுத்தார். சட்டேன்று பார்வையை வேறு இடத்திற்கு திருப்பிக்கொண்டு கவனிக்கிறேன், பில் போட வந்த அத்தனை ஆண்களும் திரும்ப திரும்ப என்னையே கவனித்துக்கொண்டிருந்தனர்.  "ஏன்யா...உங்களுக்கெல்லாம், புருஷனுக்கு ஒரு லவ் கார்டு வாங்கிக்கொடுக்கறது அவ்ளோப்பெரிய அதிசயநிகழ்வா? எதுக்குய்யா இப்படிப்பார்க்கறீங்க" ன்னு கேக்க நினைச்சேன் ஆனாக்கேட்கல..

இதனால் தாங்கள் சொல்ல வரும் நியதி ??

இருங்க ..நானே ரொம்ப அவமானப்பட்டதில் என்னா செய்யறதுன்னு தெரியாம இருக்கேன்...  ...இப்பதான் யோசிக்கிறேன்

ஆங்...நியதி என்னென்னா? பெண்கள் காதலர் தினத்திற்கு கார்ட் வாங்க போவது நல்ல யோசனையில்லை. ஆர்வகோளாரில் அப்படியேதும் நடந்தால், இப்படியான அவமானத்தைக் கண்டிப்பாக சந்திக்க நேரிடும், தவிர,  நிச்சயம் உங்களை கவனிக்கும் அத்தனை ஆண்களது வீட்டிலும், அவர் மனைவியோடு/ காதலியோடு நடத்தும் சண்டைக்கு நீங்களும் ஒரு காரணமாக இருப்பீர்கள்.

அடுத்த நியதி எனக்கு:-  எப்பவும் போல வீட்டுப்பொருட்களையே பரிசாகக்கொடுத்து, இப்படியான அவமானங்களிலிருந்து தப்பிக்கனும்.. கடைசியா, ஆரம்பிச்ச இடத்திற்கே வந்துட்டேனா?   :)

அணில்குட்டி : கிர்ர்ர்.... இதெல்லாம் ஒரு பொழுப்பு.......?! இவங்க கார்ட் கொடுத்தாங்க..அவரு என்ன வாங்கிக்கொடுத்தாருன்னு சொன்னாங்களா பாத்தீங்களா? அம்மணி உஷாரோ உஷாரு......!!!

பீட்டர் தாத்ஸ் : The greatest gift that you can give to others is the gift of unconditional love and acceptance.