திருமணத்திற்கு பின், சென்னைக்கு வீடு தேடி வந்த போது, என் கணவர் காண்பித்த இடங்கள் ஐ.ஐ.டி' சுற்றியுள்ள கோட்டூர்புரம், கோட்டூர், தரமணி, மத்தியகைலாஷ்'க்கும் ஐஐடிக்கும் இடைப்பட்ட இடம்,  கடைசியாக வேளச்சேரி. ஈ-காக்கைக்கூட இல்லாமல், மிக அமைதியாக, ஏரித்தண்ணீர் அங்கங்கே தேங்கியிருக்க, வேளச்சேரி என் கண்களுக்கு மிகவும் குளர்ச்சியாகவும் அமைதியாகவும் தெரிந்ததால், இங்கு வந்துவிடலாமென வந்(தேன்)தோம்.

அமைதி ஏரி'யாக இருந்த வேளச்சேரி, 2002 லிருந்து தொடர்ந்து அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை கண்டுவருகிறது. அதில் ஒரு பக்கம் பெருமையும், மறுப்பக்கம் எல்லாவித செளகரியங்களும் கிடைக்கப்பெற்ற ஒரு இடத்தில் இருப்பதின் சந்தோஷமும் எனக்கு எப்போதும் உண்டு. குறிப்பாக பறக்கும் ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எந்த தாமதமுமின்றி 40 நிமிடங்களுக்குள் சென்றுவிட முடிகிறது. சைதாப்பேட்டை, கிண்டி, அடையார், திருவான்மயூர், மீனம்பாக்கம், தாம்பரம் என வேளச்சேரியிலிருந்து மிக விரைவாக சென்றடையக்கூடிய சென்னையின் முக்கிய இடங்கள் உள்ளன. சமீப காலங்களில் போத்தீஸ், தங்கமாளிகை தவிர, வேளச்சேரியில் அனைத்து முக்கிய, பிரபலமான கடைகள், உணவுவிடுதிகள் வந்துவிட்டன.

இங்கு, இரண்டு மில்லியன் சதுர அடி இடத்தில் மிக பெரிய வணிக வளாகம் வரப்போவது தெரிந்ததிலிருந்து எனக்கு பெருமையை விட, போக்குவரத்தை நினைத்து அதிக பயமே இருந்தது. காரணம், பல வருடங்களாகவே அலுவலக நேரங்களில் குருநானக் கல்லூரியிலிருந்து, செக்போஸ்ட் வரையில் போக்குவரத்து நெரிசலில் மண்டை காய்ந்து போயிருக்கிறேன். அந்த சாலை மிகவும் குறுகிய சாலை என்பது இன்னுமொரு மைனஸ். இரண்டு சக்கர வாகனம் கூட எப்படி வேண்டுமானலும் வளைந்து நெளிந்து புகுந்து சென்றுவிட முடியாது. அப்படியொரு சாலையில் இந்த வணிக வளாகம் வருவது எனக்கு அத்தனை எதிர்பார்ப்பை தரவில்லை. அது கட்ட ஆரம்பித்த நாளிலிருந்தே இதே புலம்பல் தான். 

சில ஆண்டுகளுக்கு முன், கனடாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வேலைப்பார்த்தேன், அவர்கள் விமானங்களுக்குள் குளிரூட்ட பயன்படுத்தப்படும் மென்பொருளைத் தயாரிக்கும் வேலை செய்து வந்தனர். கனடாவிலிருந்து வரும் நிறுவனத்தின் முதல்வர் "A380 Aircraft " பற்றி விளக்கமளித்தார். இது பயணிகளுக்கான மிகப்பெரிய விமானம். 400 லிருந்து 800 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய வசதிக்கொண்டது. இதை இந்தியா தனக்காக வாங்க வெளிநாட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருந்தது. எத்தனை விமானங்கள் என்ற தகவல் எனக்கு அறியவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தம் குறித்தே அந்த முதல்வர் அன்று எங்களிடம் பேசினார். அதாவது எந்த வித முன்யோசனையும் திட்டமுமின்றி, இந்தியா இப்படியான ஒப்பந்தங்களை செய்கிறது. இத்தனை பெரிய விமானங்களை வாங்கி நிறுத்தவும், பயன்படுத்தவும் (Runway) போதிய வசதி வாய்ந்த விமான நிலையங்கள் இந்தியாவில் இல்லை. அதில் பயணம் செய்யும் நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு சென்று/வர ஓய்வெடுக்க தேவையான வசதிகளும் இங்கில்லை. ஆனால், எந்த அடிப்படைத் திட்டங்களின்றி, இந்தியா முதலில் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துவிட்டது என்று முடித்தார்.

இன்று ஃபீனிக்ஸ் மால் சென்றபோது, இதையே தான் உணர்ந்தேன். மும்பையை சேர்ந்த Phoenix Mills என்ற நிறுவனமே இந்த வணிக வளாகத்தை இங்கே கட்டியிருக்கிறது. உள்ளே நுழையும் போதே தலையை குனிந்தபடி வண்டியோட்டி செல்லவேண்டியிருந்தது. வாகனங்கள் நிறுத்துமிடத்தின் மேல் கூரை அந்தளவு கீழிறங்கி இருந்தது. மேற்கூரை என்னவோ உயரத்தில் தான் இருக்கிறது. அதற்கு கீழே ஏகப்பட்ட தண்ணீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் செல்லக்கூடிய குழாய்கள் என மேற்கூரை நிறைக்கப்பட்டு கீழே இறங்கி வந்துவிட்டது. கண்டிப்பாக இதில் தலையிடித்து மண்டை உடையக்கூடிய அபாயம் அதிகமாகவே உள்ளது. அது யாருக்கு எப்போது நடக்குமென்பதே இப்போதைய கேள்வி.

இத்தனைப்பெரிய வளாகத்தை கட்டியவர்கள், எப்படி இவற்றை திட்டமிடாமல் செய்தனர் என்பது எனக்கு புரியவில்லை. சாதாரணமாக உயரம் 5.10- 6 அடி இருக்கும் ஒரு மனிதர் தலை நிமிர்ந்து நிச்சயம் நடக்க இயலாது. வண்டியில் நிமிர்ந்து உட்கார்ந்தும் வண்டி ஓட்டமுடியாது. இதில் நடந்து செல்லும் போதும் "Mind your head" என்ற பலகையை கண்டு உட்சபட்ச கடுப்பிற்கு ஆளானேன். ஏனென்றால் அது குழாய்கள் இணைப்புகள் ஏதுமில்லாத வெறும் கட்டிடத்தின் மேற்கூரையே. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஒர் இடத்தில் இப்படி ஒரு மோசமான ஆபாயகரமான கட்டிட அமைப்பு, இதற்கு அரசு எப்படி அனுமதி அளித்தது எனத்தெரியவில்லை.

அடுத்து போக்குவரத்திற்கு வருவோம். 40% முடிக்கப்பட்டிருக்கும் வணிகவளாகம் திறக்கப்பட்டு, எந்தவித போக்குவரத்து வசதியும் செய்யப்படாமல், அதே குறுகலான பாதையில் எல்லா வண்டிகளும் செல்ல அனுமதிப்பட்டு இருக்கின்றன. இது மொத்த வேளச்சேரியின் மிக முக்கிய சாலைகளில் ஒன்று. இவ்விடத்தை கடந்தால் மட்டுமே வேளச்சேரியை விட்டு வெளியேற முடியும் அல்லது உள்ளேயும் வரமுடியும். இச்சாலையில் காலையிலிருந்து நல்லிரவு வரை போக்குவரத்து நெரிசல் இப்போதே தாங்கமுடியவில்லை. இத்தனைப்பெரிய வளாகத்தை கட்டுபவர்கள் போக்குவரத்திற்கு என்னமாதிரியான திட்டமிட்டனர் என்பதும் புரியாத புதிரே. எதிர்காலத்தில், விஜயநகரில் கூட போக்குவரத்து வசதிக்காக மேம்பாலம் அமைக்க போதுமான இடவசதிகள் உள்ளன. இங்கு அதுவும் முடியாதக்காரியம்.

இப்பொழுதே இந்த நிலையென்றால், இன்னமும் சத்யம் சினிமாவின் திரையரங்குகள் திறக்கப்பட்டால்..?!! 
பல வருடங்களாக வசித்துவந்த, பழகிவிட்ட ஓரிடம்  தீடீரென மாசுப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன். இந்த வளாகத்தினால் ஏற்படும் போக்குவரத்தில் வேளச்சேரி ஸ்தம்பிக்க போவதென்னவோ உறுதி.  

எது எப்படியோ, வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் ஒரு மிகப்பெரிய மால்..... வெயில் கொளுத்தும் நாட்களில், சில்லென்று நேரத்தைக் கழிக்க இங்கே சென்றுவிடத் திட்டமிட்டிருக்கேன்.

மிக சாதாரண கட்டிட அமைப்பு என்பதாலோ என்னவோ, மும்பை மால்'களை போன்று ஃபீனிக்ஸ் என்னை கவரவில்லை.

அணில் குட்டி : போனமா...வந்தமான்னு இல்லாம என்னா நோண்டு வேல..?! அய்யோ பாவம் ...வேற யாரு ?!!  அம்மணியின் வூட்டுக்கார் தான்.. :(((((. 

பீட்டர் தாத்ஸ் : Study lends a kind of enchantment to all our surroundings