விஸ்வரூபம் பார்த்துவிட்டு உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவேன் என்று நினைத்தேன். ஆனால், விஸ்வரூபம் வெளியீட்டில் நடந்த சம்பவங்களால், முன்னதாகவே எழுதுகிறேன். 

சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் பெரிதுபடுத்தி சொல்லும் வசனம் "சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் போடுகிறேன்". பொதுவாக எந்த தொழில் செய்பவரும் அப்படிதானே செய்கிறார்கள். இதில் சினிமாத்துறையில் இருப்பவர்கள் மட்டும் இதை பிரத்யேகமாக அழுத்தி சொல்லி பெரிதுபடுத்த காரணமென்ன?

விஸ்வரூபம்'  பிரச்சனைகளின் கடந்த நாட்களில் உங்களால் முன்னிருத்தப்பட்ட ஒரு விசயம், "என் மொத்த சொத்தையும் முடக்கியுள்ளேன், அது என் கையை விட்டு போய்விடும்" என்பதே. 'விஸ்வரூபம்' தமிழ்நாட்டை தவிர, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் & இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் எந்த பிரச்சனையுமின்றி வெளியிடப்பட்டு, நல்ல வசூலோடு ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. அங்கு வரும் லாபத்தைக்கொண்டு, ஒரு திறமையான வியாபாரியான உங்களால் தமிழகத்தில் உள்ள இக்காட்டான சூழ்நிலையை தற்காலிகமாக சமாளிக்கமுடியும் அல்லது தள்ளிவைக்க முடியும். நீங்கள் மனிதனுக்கு "எதுவும் சாத்தியம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறியாதவர் இல்லை

95 கோடிகள் செலவில், இப்படி ஒரு கதைக் கருவைக்கொண்டு (நடுவில் நீங்கள் மருதநாயகம் படம் எடுக்க முயற்சி செய்ததும், முதலீடு உட்பட பலப்பிரச்சனைகள் கருதி முடக்கியதும் அறிவோம்) இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் சொந்தமாக ஒரு சினிமாவை இயக்கி, வெளியிட காரணம் என்ன? "சினிமாவினுள், வெகு ஆண்டுகளாக உங்களின் உள்ளார்ந்த தேடலின் முடிவு அல்லது மிச்சம்" என்று சொல்லலாமா? இந்த தேடலும் மிச்சமும் யார் சம்பந்தப்பட்டது.?! கமல்ஹாசன் என்ற தனிமனிதன் சம்பந்தப்பட்டது. இதில் கிடைக்கும் லாபம், நஷ்டம், அனுபவம், கல்வி, தொழிநுட்பம், வெற்றி, தோல்வி, பெருமை, பதக்கங்கள் எல்லாமே அந்த தனிமனிதனையும், அந்த மனிதனின் தேடலின் நிறைவை பூர்த்தி செய்வதுமாகவே தானே இருக்கும்?

இப்படியிருக்க, இதில் எங்கிருந்து சமுதாயமும், நாடும், மொழியும், மக்களும் வருவர்?. எங்கிருந்தாலும் சரி நீங்கள் "விழுந்தால் விதையாக விழுவேன் மரமாக வளர்வேன் அதில் பல சுதந்திர பறவைகள் வந்து அமரும் மரமாக நானிருப்பேன்" என்றீர். ஆனால் இத்தனை வருடங்களாக உங்களின் படங்களுக்கு காசுக்கொடுத்து பார்த்து ரசித்த, உங்களின் திறமையை கைத்தட்டி இன்று வரை ஊக்குவித்த, நீங்கள் இந்தளவு வளர்ந்து ஒரு பிரமாண்டமான திரைப்படத்தை தயாரிக்கும் அளவு பணத்தளவில் உங்களை உயர்த்திய உங்களின் "பேக்கு" ரசிகர்களுக்கு உங்களின் கைமாறு தான் என்ன?. நாட்டை விட்டு ஓடிவிடுவதா?

பிரச்சனை வருகிறது, உடனே நான் நாட்டைவிட்டு போவேன், இங்கிருக்க எனக்கு வழியில்லை என்று சொல்லும் நீங்கள், என் உடலையும் உயிரையும் இப்பூமிக்கே அற்பணித்திருக்கிறேன் என்ற மாறுபட்ட இரண்டு கருத்தக்களை ஒரே நேரத்தில் சொல்லியிருக்கிறீர். செய்வதறியாத குழப்பமான, மன அழுத்தமான நேரத்தில் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு கோவப்பட்டு பேசியவை என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை, அச்சூழ்நிலையிலும் பல விசயங்களை மிக அழுத்தம் திருத்தமாக நிதானம் தவறாமல் பேசியிருக்கின்றீர். குறிப்பாக உங்களின் இஸ்லாமிய சகோதரர்கள் பாதிக்கப்படாதவாறு பேசியிருக்கிறீர். இதே இடத்தில் திரு.ரஜினியோ வேறு யாரோ இருந்தால், எப்படி பேசியிருப்பார் என்று அனைவரும் அறிந்ததே.

ஆனால், உங்களின் பேச்சும், மிகச்சிரமப்பட்டு வரவழைத்த அந்நேரத்து நிதானமும், உங்களின் முதிர்ச்சியையும், வாழ்க்கையில், சினிமாவில், சமுதாயத்தில் உங்களின் அனுபவத்தை நிச்சயம் வெளிக்காட்டியது.

இப்படியிருக்க, உங்களின் சுயதொழிலான சினிமாவினால், அதில் ஏற்படும் பிரச்சனைகளினால், உங்களின் ரசிகர்களும், அவர்களை சார்ந்தவர்களும் இத்தனை மன அழுத்தத்திற்கும், வருத்தத்திற்கும் ஆளாக்கும் படியாக உங்களின் பேச்சு அமைந்தது மிகுந்த வருத்தத்தையும் கலக்கத்தையும் எனக்கும் ஏற்படுத்தியது என்பதை இங்கு சொல்லிக்கொள்கிறேன்.

வேறு எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் இதுப்போன்ற பிரச்சனைகள் வரும், சிலர் பிச்சைக்காரர்களாக கூட ஆகியிருக்கின்றனர். உங்கள் சினிமாத்துறையை சார்ந்த சிலரும் மிக மோசமான நிலைமைக்கு சென்றிருக்கின்றனர், அவர்கள் சினிமாத்துறையினாராலேயே கைவிடப்பட்டும் இருக்கின்றனர். அதில் நீங்களே சொல்லி வருத்தப்பட்ட ஒரு மாபெரும் நடிகை, நடிகையர் திலகம் சாவித்திரி அம்மா. நீங்கள் வாழும் இக்காலத்திலேயே எத்தனையோ தயாரிப்பாளர்கள் இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கின்றனர். இப்படியாக பாதிக்கப்பட்ட யாருமே பிழைப்பைத்தேடியோ, அசிங்கப்பட்டோ, அவமானப்பட்டோ தப்பித்து நாட்டைவிட்டு ஓடுகிறேன் என்று சொல்லிவிட்டு ஓடிவிடவில்லையே ?

"விழுந்தால் இம்மண்ணில் விதையாக விழுவேன் மரமாக வளர்வேன்" என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் இன்னமும் பெருமைப்பட்டிருப்போம். ஏனென்றால் உங்களின் ஒவ்வொரு காசும், தமிழ் மக்களின் காசு. உங்களின் ஒவ்வொரு வளர்ச்சியும் உங்களின் உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்ததாக இருந்தாலும் அதை ஊக்கப்படுத்தியது தமிழ்மக்கள். நீங்கள் கற்றவை பெற்றவை எல்லாமும் இந்த மண் கொடுத்ததே.  நீங்கள் வீழும் போது பார்க்க பொறுக்காத இம்மக்கள் உங்களுக்கு பணம் அனுப்ப ஆரம்பித்துவிட்டனர்  இது தான் நாங்கள்....அந்த நாங்களில் நீங்களும் இருந்தீர்கள் என்றால், இனி ....வேறு இடம் தேடுவேன் என்று சொல்லமாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு இக்கடிதத்தை முடிக்கிறேன்.

இவள் -
உங்களின் படங்களை ரசித்துப்பார்க்கும் ஒரு ரசிகை

இதற்கு முன்னர்  உங்களின் திரைப்படம் பார்த்து எழுதிய இரண்டு கடிதம், லெட்டர் இல்ல கடுதாசின்னு கூட சொல்லலாம்.

http://kavithavinpaarvaiyil.blogspot.in/2009/09/blog-post_22.html
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2008/09/blog-post_28.html

அணில் குட்டி : ஸ்ஸப்பாஆஆஆ.....

பீட்டர் தாத்ஸ் : There are some things he can do that others can but there are many things Kamal can do that no other actor can - Maniratnam