நிசப்த நிமிடங்கள்..

அன்று நாகமணிக்கு முதல் தேர்வு, அறையை கண்டுபிடித்து, செளகரியமாக ஒரு இடத்தைப்பார்த்து அமர்ந்து கொண்டாள். விடைத்தாள் கொடுக்கப்பட்டதும் பூர்த்திசெய்து, கேள்வித்தாளுக்காக காத்திருந்தாள். அப்போது தான் அந்த பெரியவரும் பெண்ணும் உள்ளே நுழைந்தனர்.

பெரியவர் அந்தப்பெண்ணை, நாகமணிக்கு முன் இருந்த காலி இருக்கையை காட்டி அங்கே அமரசொன்னார்.  உட்காரும் முன் பெண் தன் தோளில் மாட்டியிருந்த கைப்பையை பெரியவரிடம் கொடுத்தாள், அவரிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு பேசாமல் நின்றாள். பெரியவர் அவளை உட்காரசொல்லிவிட்டு, அறையில் இருந்த சூப்பர்வைசரிடம் அந்த பெண்ணைக்காட்டி ஏதோ சொல்லிவிட்டு நகர்ந்தார்.

"இவ்ளோ பெரிய பெண்ணிற்கு தனியாக வந்து அமர்ந்து பரிட்சை எழுதத்தெரியாதா? அதுவும் இது மூணாவது மாடி, அந்த வயதானவரை இங்கு வரை அழைத்து வர வேண்டுமா?" நாகமணியின் மனதுக்குள் எழுந்த தேவையற்ற எரிச்சலின் நடுவே கேள்வித்தாள் வந்தது. அத்தோடு அந்த பெண்ணை மறந்து தேர்வெழுத ஆரம்பித்தாள்.

நாகமணியின் பக்கத்தில் வந்த சூப்பர்வைசர்களில்  ஒருவர் மற்றவரிடம்,  "அந்த பெண்ணிற்கு காது கேட்காது, பேசவும் வராது அதனால் என்ன கேள்வி தாள் வேண்டுமென ஹால் டிக்கட்டைப்பார்த்து கொடு" என்று சொன்னது நாகமணியின் காதில் விழு. "அடடா... இது தெரியாமல் அந்தப் பெண்ணின் மேல் எரிச்சல் பட்டோமே, அந்த பெரியவர் பெண்ணின் அப்பாவாக இருக்கும்... " தனக்குள் உச் கொட்டிக்கொண்டாள்.

தேர்வு முடிந்து வந்து, இரண்டு சக்கர வண்டியை எடுக்கும் போது, அந்த பெண்ணின் நினைவு வர சுற்றி பார்த்தாள், அவள் கண்ணில் தென்படவில்லை. அவளின் நினைவூடே வண்டியை ஓட்டிச்சென்றாள். போரூர் பூந்தமல்லி சாலை, மாலைவேளை போக்குவரத்து அதிகமாகவே இருந்தது. பெரிய வாகனங்கள், ஷேர் ஆட்டோ டுபுடுபு சத்தங்களுக்கு நடுவே நாகமணியின் நினைவு மட்டும் அந்தப் பெண்ணைத் துரத்தியது.

ஒரு வேளை அந்த பெண்ணைப்போல தானும் இருந்தால்???? வினாடித்துளிகளில் போரூர் பூந்தமல்லி சாலையில் வாகனம் செல்ல, இவளின் நினைவுகள் படு வேகமாய் அதே சாலையின் வழியே பின்னோக்கி ஓடியது..... பேரூந்துகள், ஷேர் ஆட்டோக்கள், டூவிலர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போக,  இவள் மட்டும் வேக வேகமாய் பின்னோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தாள்......

"நிச்சயம் அப்பா கூட வந்திருக்க வாய்ப்பில்லை. திருமணம் கூட ஆகியிருக்காது, அதனால் கணவரோ அவர் சார்ந்தவர்களோ வந்திருக்க வாய்ப்பேயில்லை. தேர்வெழுத நிச்சயம் நான் தனியாக தான் வந்திருப்பேன், பேசவும் கேட்கவும் முடியாததால், ஒரு காகிதத்தில் நானே என்னைப்பற்றிய குறிப்புகளை எழுதி சூப்பர்வைசருக்கு சைகைக்காட்டி, அதைப்படிக்க செய்திருப்பேன்.......நிச்சயம் நன்றி சொல்ல புன்னகைத்திருப்பேன். வாழ்க்கை இன்னமும் போராட்டம் நிறைந்ததாக இருந்திருக்கலாம்.. எல்லாரிடமும் சைகை செய்தே பேசியிருப்பேன், என்னைக்கிண்டல் செய்து பார்த்து சிரிப்பவர்களை பார்த்து விசயமறியாது மரியாதைக்கருதி நானும் சிரித்திருப்பேன். ... இந்தளவு யாரையும் கவனித்திருக்க முடியாது..இப்படி யோசித்திருக்கக்கூட முடியாது...

எல்லாமே நிசப்தம்....ஆமாம்.. நான் நிசப்தம்..என்னை சுற்றிலும் நிசப்தம்...அந்த நிசப்தத்தை சற்றே கண்ணைமூடி ரசிக்க .........."  பின்னோக்கி வேக வேகமாய் ஓடிய நினைவுகளின் வேகம் இரத்த அழுத்தம் சோதிக்கும் போது குறையும் நாடித்துடிப்பை போல குறைந்துக்கொண்டே வந்தது...

வெகு நெருக்கத்தில் "ப்ப்பாம் ப்பாம்ம்ம் "  ..சட்டென்று சாலையில் வந்து குதித்தவளாய்.... அதிர்ச்சியோடு வலதுப்பக்கம் பார்த்தாள்..பெரிய லாரி ஒன்று இவளை ஒட்டி வந்து சத்தமாக ஹாரன் அடித்துக்கொண்டே இருந்தது..  சன்னலோரம் அமர்ந்திருந்தவன் எட்டிப்பார்த்து கெட்ட வார்த்தைகளில் எக்கச்சக்கத்து திட்டினான்.....

நாகமணியின் முகம் சுருங்கி, உதடுகள் சத்தமில்லாமல் அசைந்தன... "நிஜமாகவே காதுக்கேட்காமல் பிறந்திருக்கலாமோ.... ?! "



*படங்கள்: நன்றி கூகுள்!

நடுவுல & முன்ன பின்னவும் கொஞ்சம் பக்கத்த காணோம்..!

நவீன் சந்தர் எங்க?

அம்மா நவீன்' மா.. உங்கக்கிட்ட வந்து சொல்லிட்டு தானம்மா போனான். படிக்கப்போயிருக்கான் ம்மா..

ஆங்...ஆமா நீ சொன்னியே.. மறந்துட்டேன்..

நவீன் சந்தர் எப்ப வருவான்?

அம்மா நவீன்'மா.. நவீன்னு சொல்லுங்க..

அவன் பொறந்தப்ப நவீன் சந்தர்னு தானே பேர் வச்சீங்க.. (இதெல்லாம் மட்டும் தெளிவு)

ஆமாம்மா... அப்புறம் நவீன்'னு மாத்திட்டோமே...

ஆங்க்...ஆமாம்மா மறந்துட்டேன்...நவீன் சந்தர் எப்ப வருவான்..?!

அவன் படிக்கனுமா இல்லையா..படிப்பை முடிக்க 2 வருசம் ஆகும்....ஃபோட்டோ பார்க்கறீங்களா?. (மொபைலிலிருந்த அவன் ஃபோட்டோவை எடுத்து காட்டினேன்.. உடனே ஃபோனை வாங்கி..)

ஹல்லோஒ....நவீன் சந்தர்.....எப்ப வருவ???

அம்மா, ஃபோட்டோ பாக்க கொடுத்தேன்...அவன் லைன்ல இல்ல..

நான் சொல்லுவதை துளியும் காதில் வாங்காமல், "ஹல்லோ, நவீன் சந்தர்..அம்மும்மாவை பாக்க எப்படா வர?

ஞே..!!

***************

கவிதா... இவ்ளோ லேட்டா வரியே இப்பதான் அப்பா இங்க வந்துட்டு...அதோ அந்த பக்கமா போனாரு...பாரு......

ஓ..(நானும் அவங்க சொன்ன திசையில் பார்த்துவிட்டு), சரிம்மா அப்புறமா நான் போயி பாக்கறேன் ....

பக்கத்து பெட்டில் துணையிருந்த பெண் : ஏங்க, அப்படி யாரும் இங்க வரலங்க...

தெரியுங்க....அப்பா இறந்து பல வருஷம் ஆச்சிங்க............

ப.பெ.து.பெ: ஞே! 

********************

கவிதா...இங்க வா.... என் பக்கத்தில் உக்காரு... நவீன் சந்தர் ஐ கூட்டிட்டு வர சொன்னேனே...கூட்டிட்டு வரல?

(ஸ்ஸ்ஸ்ஸ்.... ) முதல் பத்திய திரும்ப படித்துக்கொள்ளவும்..

*********************

கையில் போட்டிருந்த வளையல் எங்கம்மா? (திக்க்...)

என் கையில வளையலே போடலியே...

அம்மா..... நாந்தானமா போட்டுவிட்டேன்... எங்கம்ம்ம்ம்மா?

இங்க பாருடி கழுத........என் கையில் வளையலே இல்ல...

இப்ப இல்லம்மா..இதுக்கு முன்ன வளையல் இருந்துச்சே எங்க??

சிஸ்டர் : கவிதா.. கழட்டி வச்சிட்டாங்க.. எடுத்து வச்சி இருக்கேன். இனிமே போட்டுவிடாதே...

தாங்ஸ் சிஸ்டர்..

********************

கவிதா உன் வீட்டுக்கார் எப்ப மும்பை போறாரு... ?

அம்மா, அவர் சென்னை வந்து இரண்டு வருசம் ஆச்சே...மறந்துட்டீங்களா? நவீனோட உங்களை வந்து பார்த்தாரே...

ஆமாம்ம்மா..வந்தாரே...டிரஸ் வாங்கி கொடுத்தாரே..பீச் போனோமே.... (இதெல்லாம் மட்டும் தெளிவு)

அட... பீச் போனது ஞாபக இருக்கா..?

ஏன் இல்ல...(ஒரே சிரிப்பு)...ஐஸ்க்ரீம் வாங்கி தந்தியே... (நெற்றிய சுருக்கிக்கொண்டு) ஆமா அவரு மும்பாய்க்கு எப்ப திரும்ப போறாரு...??

(ஆத்தா முடியல ஆத்தா என்னைவுட்ரூ.)

*************************

லைட்டா ஃபீவர் இருக்கும்மா..

ஆமா...இருக்கு..எனக்கு அப்பவே தெரியுமே....  (சரிங்க டாக்டர்)

சிஸ்டர்கிட்ட மாத்திரை வாங்கி தரவா?

உனக்கேன் இந்த வேல? அவங்க இப்ப வந்து செக் பண்ணிட்டு, அவங்களே மாத்திரை கொடுப்பாங்க. நீ அமைதியா உக்காரு...

சரி..(ங்க டாக்டர்) .:(.

*********************

அம்மா... அம்மா இங்க பாருங்களேன்..நான் சொல்றதை கொஞ்சம் கவனிக்கறீங்களா..?

கவனிச்சிட்டு தான் இருக்கேன் கவிதா..என்ன சொல்லு? (ம்க்கும் கேக்கும் போது தெளிவு தான்)

பாத்ரூம் போனா மறக்காம தண்ணீ ஃப்ளஷ் பண்ணிவிடனும். தண்ணீ  ஊத்தாம வந்தீங்கன்னா..நாத்தம் அடிக்கும்..க்ளீன் பண்றவங்க பாவம் இல்லையா?

நான் என்ன சின்னக்குழந்தையா கவிதா.. உபதேசம் பண்ற...(ஆவ்வ்வ்வ்.......)

சிஸ்டருங்க தினம் கம்ப்ளைட் பண்றாங்கம்மா...உங்க வேலைய நீங்கதான்ம்மா செய்யனும்.. நம்ம வீடு இல்லமா இது ஹாஸ்பிட்டல்....

சரி.... .நானு போயி பாத்ரூம் கழுவி விட்டுட்டு வரட்டா....?!

அய்யோஒ... பாத்ரூம் கழுவ சொல்லல்லமா..நீங்க தண்ணி மட்டும் ஃபள்ஷ் பண்ண மறந்துட்டு வந்துடறீங்க..

இல்லையே........சரியாத்தானே செய்யறேன்...நீ வேணா போயிப்பாரு...

(ஸ்ஸ்ஸ்........இதை இத்தோட முடிச்சிப்போம். அடுத்து சிஸ்டரை சமாளிக்கனும்)  

*************************

பக்கத்து பெட் பாட்டி : கஸ்தூரி, இது யாரூஊ?

அம்மா : என் மக

ப.பெ.பா : பேர் என்ன?

அம்மா : க்க்கவிதாஆஆ

ப.பெ.பா: கவிதா என் பொண்ணாச்சே... நானும் கவிதாவும் இப்ப வெளியில் போகப்போறோம்...

அம்மா : இல்லல்ல கவிதா என் மக.. (என்னை இறுக்கி கட்டிக்கொள்கிறார்)

ப.பெ.பா: என்ன படிக்குது?

அம்மா : அவ எம்.பி.ஏ படிச்சி இருக்கா..


ப.பெ.பா: இதுல எல்லாம் தெளிவாத்தான் இருக்க..ஆனா செத்துப்போன உன் புருஷன் வந்தாரு வந்தாருன்னு சொல்லி எங்க எல்லாத்தையும் ராத்திரியும் பகலுமா ஆட்டி வைக்கறியே தாயீ.....

அம்மா : (ரொம்ப கேஷுவலாக) ஆமா, கெஜானனன் இங்க தான் எப்பவும் இருக்காரு...

ப.பெ.பா: ஞே...!! (பீதியோடு சுத்திப்பார்க்கிறார்)

********************

சிரிக்கவும் முடியாம அழவும் முடியாம ந.கொ.ப.கா நண்பர்கள் போல, பேஎஎஎ...ன்னு...உக்காந்து,  அம்மா பேசறதை வேடிக்கை பார்ப்பது தான் எனக்கு வேலையாப்போச்சி.

அம்மாவிற்கு கொஞ்சம் மாதங்களாக நினைவாற்றலில் அதிக தடுமாற்றம். இப்போது அடிக்கடி அப்பாவை பார்த்ததாக சொல்லுகிறார். மறக்காத எப்போது கேட்டாலும் தடுமாற்றம் இல்லாமல் நினைவில் இருக்கும் ஒரே விசயம், 3 பிள்ளைகள் அதில் 2 ஆண், 1 பெண், பேரக்குழந்தைகளில் நவீன். நவீனை தவிர, அண்ணனின் பிள்ளைகளும் இருக்காங்க. ஏனோ அவங்களைப்பற்றிய நினைவே அம்மாக்கு இல்லை. :(


வீடு, மருத்துவமனை என அம்மாவின் காலம் ஓடுது. நினைவாற்றல் தவிர்த்து வேறு எந்த பெரிய உடல் பிரச்சனையும் இப்போதைக்கு அவங்களுக்கு இல்லாமல் இருப்பது நிம்மதியை தருகிறது. எனினும் குழந்தையாகவே மாறிவிட்டார். சாப்பாடெல்லாம் அப்படித்தான்.  ஏதோ ஒரு சில நேரங்களில் மிகத்தெளிவாகவே ஞாபகசக்தியோடு பேசுகிறார்.  மற்ற நேரத்தில் எல்லாம்..............ம்ம்ம்..தலைப்பை படிங்க...

அணில்குட்டி : அவங்களாச்சும் இந்த வயசுக்கு மேல இப்படி இருக்காங்க.. அம்மணி இப்பவே அப்படித்தான் இருக்காங்க... எப்படியோ ஹாஸ்பிட்டல் போகாமல் வீட்டிலேயே நாங்க சமாளிச்சிக்கறோம்..

பீட்டர் தாத்ஸ் :  At a stage, parents become our children.

சாவு வீடு

அபிராமி நுழையும் போதே கவனித்தாள், ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தளவு நடித்துக்கொண்டிருந்தனர். நெருங்கிய உறவினர் சிலருக்கு நிஜமான துக்கம் இருக்கத்தான் செய்தது, அது அவர்களின் முகத்திலும் தெரிந்தது, இருந்தாலும் சுயநலங்களும் இருந்தன. இறந்தவர் விட்டுச்சென்றவையில் தனக்கு என்ன கிட்டும், கிட்டசெய்ய வேண்டுமென்ற யோசனை உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது அவர்களின் கண்களில் தெரிந்தது.

அபிராமிக்கும் இறந்தவர் நெருங்கிய சொந்தம் தான், அப்பாவின் சொந்த தங்கை. ஆனால் ஏதேதோ பிரச்சனைகளை கடந்து, ஒதுங்கி வந்து பல வருடங்களாக யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்தாள். யார் மூலமாகவோ இறந்த விசயத்தை அபிராமி காதில் போட சொல்லியிருந்தனர் உறவினர். நல்லதுக்கு போகாட்டியும் கெட்டதுக்கு தலைக்காட்டனும்னு வந்திருந்தாள்.

அழுகை வரவில்லை. இறந்தவர் உடலுக்கு பக்கத்தில் சென்றாள், பல வருடம் கழித்து உறவினர்கள் சூழ இருந்த ஒரு இடத்தில் இவள் உள்ளே நுழைவதால், அனைவரும் இவளையே கவனித்தனர். இவள் வயதை ஒத்த பெண்களுக்கு அவளின் தலைமுடி, உடல்வாகு, காது, கை, கழுத்து நகைகள் சார்ந்து கவனம் சென்றது. சிலர் அணிந்திருந்த புடவையைக்கூட விட்டுவைக்கவில்லை. பார்வைகள் இவளைத்தொடர்ந்தாலும், இவள் யாரையும் பொருட்படுத்தாமல் இறந்தவரின் காலைத்தொட்டு கும்பிட்டாள். கண்ணை மூடி, அத்தையின் நினைவுகளில் மூழ்கினாள். அப்பாவிற்கு மிகவும் பிடித்த தங்கைகளில் ஒருத்தி, ஆனால் அவளே அதிக வில்லத்தனம் பிற்காலத்தில் செய்தாள் என்பதை நினைத்தபோது கண்கள் பட்டென்று திறந்துக்கொண்டன. ஒருத்துளிக்கூட கண்ணீர் வரவில்லை. சாவு வீடு அழவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாக அவளுக்குத்தெரியவில்லை. அழுகைதான் வரவில்லையே. பார்த்தவர்கள் அனைவருக்கும் "கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லையே? சொந்த அண்ணன் பொண்ணு.."  என்ற ஆச்சரியம் இருக்கத்தான் செய்தது.

வருடங்கள் பல ஓடிவிட்டதாலோ என்னவோ யாரும் இவள் பக்கத்தில் வரவில்லை. இவளும் உறவினர்கள் யாரிடமும் செல்லாமல், முகமறியாத சிலர் இருக்கும் திசை நோக்கிச்சென்று அமர்ந்துக்கொண்டாள்.

அப்போதும் விட்டேனே பார் என, அறிமுகம் இல்லாதவர்களும் இவளை விசாரிக்க ஆரம்பித்தனர். எந்தக்கேள்விக்கும் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள். கேட்டவர்கள் மனதுக்குள் சபித்தபடி கேள்விகளை நிறுத்திக்கொண்டனர். சற்றே அசுவாசப்படுத்திக்கொண்டு, கண்களால் சுற்றி வட்டமிட ஆரம்பித்தாள்.

அப்போது தான் கவனித்தாள். பேரூந்தில் இவளுடன் பயணம் செய்த இரண்டு பெண்கள் அங்கு தென்பட்டனர். பேரூந்தில் அவர்கள் பேசி வந்தது நினைவுக்கு வந்தது.

"அக்கா, சாவு வீட்டுக்கு போறோம்..எதுக்குக்கா நெக்லஸ்..உள்ள வச்சிடேன்..திரும்ப வரும்போது போட்டுக்கறேன்.".

"ஒன்னுமில்லாதவன்னு நினைச்சுக்குவாளுங்க.. போட்டுக்க..".

"இல்லக்கா, ரொம்ப பளப்பளன்னு இருக்கு..உள்ளவே வய்... (வேகமாக கழட்டிக்கொடுத்தாள்)"

"அதுவுஞ்சரிதான்..ஒப்பாரி வெக்கற வீட்டுக்கு எதுக்கு நெக்லஸ்.. அதான் கைல நன்னாலு வளையல் போட்டு இருக்கியே..அது போதாது..?"

"போதும் போதும்..இதுங்க கெட்ட கேட்டுக்கு..."

அத்தை மாமாவிற்கு சொந்தமாக இருக்குமோ..? இவர்களும் இங்குதான் வருகிறார்கள் என அப்போது அபிராமி அறியவில்லை. வருவோர் போவோரை பார்க்கும்போதேல்லாம்...முகத்தை சுருக்கி அழுதனர்.. சிலரை கட்டிக்கொண்டு சத்தம் போட்டு அழுதனர், அழுது அவர்கள் விலகும்முன், தன் நகைகளை அவர்கள் பார்த்து விசாரிக்கும் படி கை, கழுத்து, காதுகளில் கவனம் செல்லும் படி பேசினர். அபிராமிக்கு அவர்கள் பேசிவந்தது முன்னமே தெரிந்ததால், பேச்சிலும், அழுகையிலும் இருந்த போலித்தனம் அப்பட்டமாக தெரிந்தது.

அழுகை வராமலேயே திடீரென்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழும் அந்த பெண்களை பார்க்க பார்க்க அபிராமிக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. தன்னை மறந்து குபுக்"கென சிரித்தும் விட்டாள்.

சாவு வீட்டில் இருந்தோர் அபிராமியை ஒரு மாதிரியாக திரும்பி பார்த்தனர்......

என்றோ ஒருநாள் அபி நண்பனுடன் சண்டையிட்ட போது அவன் ரொம்பவும் கடுப்பாகி,  "யதார்த்தம் என்றால் என்னவென்றே தெரியாத உன்னுடன் எனக்கு சரிப்பட்டு வராது ....." என்றான்.  ஆமாம் அவன் சொன்னது எத்தனை உண்மை?!!  சாவு வீட்டில் யாராவது சிரிப்பார்களா?! அழத்தானே வேணும். அழுகை வராவிட்டால் என்ன? சிரிக்காமலாவது இருக்கலாமே?.  மற்றொரு நாள் இன்னொரு தோழியோ "யதார்த்தம் என்றால் என்னவென்றே அறியாதவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்" என்றாள். உடனேயே சந்தோஷப்பட்டுக்கொண்டாள், நண்பன் சொன்னதில் இருந்த வருத்தம் அபிக்கு காணாமல் போனது. 

அவளின் பெரியப்பா இறந்தபோது அக்காக்களில் ஒருத்தி சொன்னாள், "அபி,  அப்பா இறந்துடுவார்னு தெரியும், அப்பா இறந்துபோறது தான் அவருக்கு நல்லது, கோமாக்கு போயிட்டாரு...ஆனா மருந்து, ஊசி, ஆக்ஸிஜன், ட்ரிப்ஸ்'ன்னு அவரை உயிர்வாழ வச்சி என்ன பயன்?. கடைசி நேரம் இங்க வந்து பார்த்தப்ப, அப்பா இவ்ளோ கஷ்டப்படாம இறந்து போயிடலாம்னு தான் நினைச்சேன். இப்பக்கூடப்பாரு,  எனக்கு அழுகை வரல. ஆனா, என்னோட சிஸ்டர்ஸ் எல்லாரும் அழறாங்க..நான் மட்டும் அழாமல் இருந்தா அவங்களே என்னை எதாச்சும் சொல்லுவாங்க.. அதுக்காக சும்மாவாவது அழவேண்டி இருக்கு..."


இது தான் வாழ்க்கை. இது தான் சொந்தம். இந்த நடிப்பு தான் நிஜம். இந்த நிஜத்தைத்தான் நம்மைச் சுற்றியுள்ளோர் நம்மிடம் எதிர்பார்க்கின்றனர். இந்த நிஜம் தான் சொந்தங்களையும் நட்புகளையும் பிடித்து வைக்கிறது. உள்ளத்தில் என்னவிருந்தாலும் சபை மரியாதை கருதி உதட்டோரம் சிரிப்பதோ, பல்காட்டி சிரிப்பதோ தான் இயல்பு, யதார்த்தம், நடைமுறை. இதோ அழுகை வராவிட்டாலும் அழுது நடிக்கனும் அல்லது ஒரு டன் சோகத்தை முகத்தில் தேக்கி வைக்கனும். அப்போது தான் உன்னையும் சக மனுஷியாக ஏற்றுக்கொள்ளும் இந்த கூட்டம்....

அபிராமியும் நடிக்க தயாரானாள்...



*படங்கள் நன்றி கூகுள்

க்ளிக்..க்ளிக்..க்ளிக்....

 தெரியாமல் எடுத்தது, யாரென்றும் தெரியாது. சட்டையின் பின்னால் அவரவர் பெயரும் எழுதியிருந்தது.

 ஊன்றுகோல் 2 in 1
 பட்டுப்போன மரங்கள் தான் இருந்தாலும் அழகு... :)

 தென்னைமரத்தை முன்னமே இதுப்போன்று எடுத்திருக்கிறேன். பனை மரத்தை ஆகாயம் நோக்கி எடுத்துப்பார்க்க ஆசைப்பட்டு... :)
 கொஞ்சல்ஸ்... 
(இவங்க இரண்டு பேரும் பொறுப்பாக நிறைய ஃபோட்டோக்கு போஸ் கொடுத்தாங்க.)
எவ்ளாம் பெரிய குச்சி...

தேடல்...

எங்கேயோ எதையோ
தொலைத்து
அதை
எதனிடலித்தோ
தேடி...
........
..........
............
.................

தேடி...தேடி
தெளிந்து 
வளர்கிறது புத்தி
இனி தேடல் வெளியில்லை-



Image : Thx Google.

அது....

துணிகளை காயவைக்க, மாடிக்கு செல்லும் போது தான் கவனித்தேன், பக்கத்து ஃப்ளாட்டில் யாரோ புதிதாக குடி வந்திருந்தனர்.

எங்கள் வீட்டு கதவை மட்டும் விட்டுவிட்டு வெளியில் எல்லா இடத்திலும் பொருட்களைப் பரப்பி இருந்தனர். அந்த வீட்டிலிருந்த பெண் காதுகளில் பெரிய லோலாக்குகள் பளீச்சென தெரிந்தன, பின்னலிடாத தலைமுடி, நெற்றியில் பெரிய பொட்டு, ஏதோ பாட்டுப்பாடிக் கொண்டே அங்குமிங்குமாக வேலைகளை செய்துக்கொண்டிருந்தார்.  நான் கண்டும் காணாமல் மாடிக்கு சென்று துணிகளை காயவைத்து திரும்பும் போது, படிகளுக்கு கீழே ஒரு பெண் குழந்தை நின்று என்னைப்பார்த்து சிரித்தது. நானும் சிரித்தேன்.....

வெளியிலிருந்த பொருட்களை கவனித்தவாறு, வீட்டினுள் நுழைந்து கதவை சாத்தும் முன், அந்த குழந்தை என் எதிரில் வந்து நின்றது. உள்ளே வருமா??...சற்று நின்றேன்... அதுவும் வந்தது, வந்தவுடன் கதவை சாத்திக்கொண்டேன். அது விளையாட ஆரம்பித்தது. கதவுக்கு பக்கத்திலிருந்த ஆள் உயர பெரிய ஜன்னலில் போடப்பட்டிருந்த ஸ்கீரின் மேலும் கீழும் ஆட, குழந்தை அங்கு சென்று விளையாட ஆரம்பித்தது.

நான், எதோ வேலை செய்துக்கொண்டிருந்தாலும், என் பார்வை குழந்தையை விட்டு விலகவில்லை. நான் எதிர்பார்த்து காத்திருந்தது நடக்க ஆரம்பித்தது...



கீழே உட்கார்ந்து, ஓரத்தில் ஒளிந்து என எல்லாப்பக்கங்களிலிருந்தும் ஸ்கிரீனை சுற்றி வந்து கவனித்தது. ஸ்கிரீன் காற்றில் ஆடவில்லை, ஜன்னல் கதவுகள் அத்தனையும் மூடப்பட்டிருந்தது. யாரோ உள்ளிருப்பதாக குழந்தை உணர ஆரம்பித்து..... அந்த சந்தேக கேள்வியோடு என்னைத் திரும்பி பார்த்தது..

நானும் ஆமாம் என்ற பதிலை பார்வையாக்கினேன். அதிர்ந்து பின்வாங்கி பின்னோக்கி நடந்து சுவற்றில் மோதி நின்று, ஸ்கிரீனையே வெறித்தது.

மனித உருவத்தை போன்ற ஏதோ ஒன்று அந்த ஸ்கீரினுக்கு பின்னால் இருப்பதை நான் பலமுறை பார்த்து பயந்திருக்கிறேன். ஆனால் என் கண்ணுக்கு யாரும் தெரிந்ததில்லை.. இன்று இந்த குழந்தையும் பார்த்துவிட்டது.. என் பயத்தை பகிர ஆள் கிடைத்துவிட்ட சந்தோஷம் என் முகத்தில். ஆனால், குழந்தையின் கண்களில் இன்னும் அதிர்ச்சி விலகவில்லை.....

குழந்தைக்கும் "அது" பழகிவிடும் என மனம் சொல்ல...குழந்தையின் முகத்தை கவனித்தபடியே படுக்கை அறையில் நுழைந்தேன்.

அந்த அறை ஜன்னலிலும் காற்றில்லாமல் ஸ்கிரீன் ஆடிக்கொண்டு இருந்தது......







(இன்று விடியலில் வந்த கனவு,  அந்த குழந்தையும் நானும் கடைசிவரை பேசிக்கொள்ளவே இல்லை,)

அணில் குட்டி : பிசாசுக்கு யார் வீட்டில இருக்கனும்னு தெரிஞ்சி இருக்கு பாருங்க....

பீட்டர் தாத்ஸ் : Deep into that darkness peering, long I stood there, wondering, fearing, doubting, dreaming dreams no mortal ever dared to dream before.

உனக்கு 20 எனக்கு 18

நவீன்:  எங்க ஊர் சுத்த போன... ஆன்லைன்ல காணல...எவ்ளோ நேரமா வெயிட் பண்றேன்..

கவி : இங்க பவர் இல்லடா...

நவீன் : ஹோ..... அங்க பவர் கட் 'டெல்லாம் ஆகுதா?

கவி : டே டே டே டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்....... போதுன்டா.. ... இப்படி கேக்கறது உனக்கே ஓவரா இல்ல?

நவீன் : :))))))


**********

கவி : குட்டி, மாற்றான் பாத்துடாத ...செம கடி.. முடியல... ..

நவீன் : தமிழ் படம் நான் பாக்கறதில்ல..

கவி : ஹும் அப்புறம்.??!  இப்படி சொல்லிக்கிட்டே ஊர்ல இருக்க எல்லா மொக்கைப் படத்தையும், ராத்திரிப்பூரா டவுன்லோடி பாக்கற  நல்லவன் நீனுன்னு எனக்கு தெரியும்...

நவீன் : அம்மா.. இங்க டவுன்லோட் 10 நிமிஷம் தான்...


கவி : ஹோஓஓஒஓஓ...... நீங்க ஃப்ரான்ஸூ.. நாங்க ஸ்டில் ப்ளடி இண்டியன்ஸ்...

நவீன் : :))))))

***********

கவி : மிச்சம் இருந்த சிக்கனுக்கு சிக்கன் 65 செய்தியா.. ?

நவீன் : போம்மா.. .இங்க எல்லாத்தையும் க்ளீனா வச்சி இருக்கனும், எண்ணெய் ஊத்தி செய்தா வெளியில தெறிக்கும், அப்புறம் அதை க்ளீன் பண்ணனும், என்னால முடியாது..


கவி : அட மந்த புத்தி பாலக்...  சாமி அறிவு கொடுக்கல?. .அதை யூஸ் பண்ணி.....

நவீன் : போதும் நிறுத்து, அம்மாக்கு அறிவிருந்தாத்தான் புள்ளைக்கும் இருக்குங்கற பேசிக் ஜெனரல் நாலெஜ் கூட உனக்கு இல்ல?..


கவி : ஆவ்வ்.....

**************

கவி : ஃபிஸிகல் ஆக்டிவிடீஸ் எதும் பண்றியா. .இல்ல நல்லா திண்ணுட்டு திண்ணுட்டு தூங்கறியா?

நவீன் : ஜிம் இருக்கு போகனும்.. போறேன் , உயிரை வாங்காத...


கவி : நாளைக்குப்போயிட்டு வந்து சொல்றியா?


நவீன் : யம்மா .... பொண்ணுங்க எப்ப வராங்கன்னு நோட் பண்ணிட்டு போகனும்ம்மா.. அது பெரிய ப்ராசஸ்..

கவி : ஹோஓஓஓ.. சைட்டிங்.???. ..

நவீன் : இல்லம்மா.... இங்க இருக்கவங்களுக்கு ஸ்டாமினா ரொம்ப அதிகம்.. ..அவங்க செய்யறதைப்பார்த்து, பொறாமையில் பொங்கி, நானும் வெறித்தனமா செய்யனுமில்ல.. அதுக்கு தான்...

கவி :  ஹோ நீ அப்படி வரியா... .. சரி சரி..


***********************

நவீன் : ஆமா ரெசிப்பி எல்லாம் ஒரே பீட்டரா இருக்கு? நிஜம்மாவே உனக்கு இங்லீஷ் தெரியுமா இல்லை கூகுளில் இருந்து காப்பி பேஸ்ட் பண்றியா..?

கவி : நானே தான் எழுதறேண்டா... பேரு தெரியாட்டி, இதுக்கு இங்லீஷில் என்னான்னு கூகுளை கேப்பேன் அது சொல்லிடும்..  .

நவீன் : உனக்கு இங்லீஷ்ல தெரிஞ்சா போதுமா எனக்கு தெரிய வேணாமா?


கவி : ஹைஐஐஐஐ..... வாடி வாடி...வாடி... இத இத தான் எதிர்பார்த்தேன்!   என்னை எத்தனை தரம் இங்லீஷ் தெரியலன்னு நக்கல் பண்ணி இருப்ப..... இப்ப யாருக்கு இங்லீஷ் தெரியுதுன்னு ஒழுங்கு மரியாதையா சொல்லு... ....

நவீன் : சரி.. சரி ரொம்ப குதிக்காத. .தயவு செய்து இனிமே... பெருங்காயம்னா.. perungayam னு தமிழ்ல எழுது ..எனக்கு அப்பத்தான் புரியும்..இங்லீஷ் புரியல..


கவி : ஹே ஹே ஹேஹேஹ்ஹே.... :)))) அது.!!!!!
 

நவீன் : கிர்ர்ர்ர்ர்..

*******

கவி: ஈஃபில் டவர் கீழயா நிக்கற?

நவீன் : ஆமா?

கவி : ஏன் உனக்கு ஒரு ஃபோட்டோ ஒழுங்கா எடுக்கத்தெரியாதா?

நவீன் : நிறுத்து, உன்னை மாதிரி எனக்கு ஒன்னும் கலைக்கண் கிடையாது,  முடிஞ்சளவு, தெரிஞ்சஅளவு தான் எடுக்க முடியும்.. ச்சும்மா இப்படி எடு அப்படி எடுன்னு க்ளாஸ் எடுத்து டார்ச்சர் பண்ணாத....

கவி : ஒழுங்கா ஒரு ஃபோட்டோ எடுக்கத்தெரியாட்டும் என்னா வாயி...?!

நவீன் : அம்மா மாதிரிதான் புள்ள இருக்கும்.. எதுவுமே தெரியாம ஒலகமே தெரிஞ்ச மாதிரி சீன் போடற இல்ல. .அப்படித்தான்..

கவி : ஆவ்வ்... !! :

*********


அணில் குட்டி : ஆக, வெளியில போனப்பிறகும் புள்ளக்கிட்ட பல்பு வாங்கறதை  நிறுத்தலன்னு சொல்லாம சொல்றாங்க அம்மணி....

பீட்டர் தாத்ஸ் : Mothers are fonder than fathers of their children because they are more certain they are their own." - Aristotle

கண்ணாடி

 விழுப்புரம், பிரேம்ஜி பள்ளியில் 3 ஆம் வகுப்பு, மதியம் வீட்டுக்கு சாப்பிட வரும் போது, தலைவலிக்குதுன்னு அழுவேன். வெயிலில் வருவதால் இருக்கலாம் என நினைத்து, படுக்க வச்சிடுவாங்க. மதியம் பள்ளிக்கு போகாமல் மட்டம், இப்படி பல நாட்கள் மட்டம் போட்டு இருக்கேன்.  இது 5 ஆம் வகுப்பு வரை தொடர்ந்தது. ஆனால் மட்டம் போடுவது குறைந்திருந்தது, தலைவலி குறையவில்லை. 5 ஆம் வகுப்பு, மகாத்மாகாந்தி உயர்நிலை பள்ளி, அங்கிருந்து தான் போர்டில் எழுதும் எழுத்துக்கள் தெரியவில்லை என சொல்ல ஆரம்பித்தேன்.

ஒரு நல்ல நாளில், ஆயா,  பாண்டிச்சேரியில் உள்ள ஆருதர் கண் மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போனாங்க. பாவம் வயசானவங்க, என்னை இழுத்துக்கொண்டு வந்திருக்க, எனக்கு அத்தனை பொறுப்பில்லை. கண்ணில் மருந்துவிட்டு, "கண்ணைத் திறக்கக்கூடாது பாப்பா " ன்னு நர்ஸ் சொல்லிட்டு போக, 18 தரம் திறந்து என்னத்தான் ஆகுதுன்னு பார்ப்பேன். அதனால், சரியாக பரிசோதனை செய்ய முடியலன்னு, திரும்ப திரும்ப மருந்து ஊற்றி உக்கார வைப்பார்கள், ஆயா தான் பாவம், எனக்காக  காத்திருக்கனும். அப்பவும் அடங்க மாட்டேன், ஆயாவிற்கு தெரியாமல் ரகசியமாக கண்ணைத் திறந்து பார்ப்பேன். எப்படியோ, மருத்துவரும் கண்ணை ஒரு வழியாக பரிசோதனை செய்து  "ப்ளஸ்" பவர் இருப்பதாக சொல்லி, கண்ணாடிக்கு எழுதிக்கொடுத்துவிட்டார்.

ஆயாவிற்கு பிடித்த ???!!!  கோழிமுட்டை ஃப்ரேமில் எனக்கு கண்ணாடி வாங்கப்பட்டது. குடும்பத்தில், இத்தனூண்டு வயதில் கண்ணாடிப்போட்ட ஒரே குழந்தை நானாக இருந்ததால், அதிகமாக துக்கம் விசாரிக்கப்பட்டேன். "என் பொண்ணு இந்த வயசிலேயே கண்ணாடி போட்டுட்டாளே" ன்னு அப்பா கண் கலங்கி கவலைப்பட்டார்.  அதனால் கேரட் சமைக்கும் போதெல்லாம், அதை சாப்பிட சொல்லி தலையில் "நறுக் நறுக்" கென கொட்ட ஆரம்பித்திருந்தார். கேரட் பிடிக்காத பிடிவாதத்தில், அதை சாப்பிடாமல் கொட்டு வாங்கி அழுவதும், நாம அடிவாங்கி அழுவதை பார்ப்பதில் அண்ணன்களின் பொழுது களிப்போடும் கழிந்தது. 

கண்ணாடியோடு பள்ளிக்கு போக ஆரம்பித்தது, 6 ஆம் வகுப்பு, மகளிர் மேல்நிலை பள்ளி, மகளிர் மட்டுமே என்றாலும் இங்கு தான் பிரச்சனை ஆரம்பித்தது. அடையாளத்திற்கு கண்ணாடி போட்டிருக்கும் மாணவி என்று குறிப்பிட்டது போக, "கண்ணாடி, புட்டி" என்றே அக்காக்கள் அழைக்க, என்னுடன் படிப்பவர்களும் அதையே தொடர, எனக்கு ரொம்ப அவமானமாக இருந்தது. கண் நொள்ளையாக இருப்பதில் இல்லாத அவமானம், கண்ணாடி போடுவதில் இருந்தது. அவமானம் தாங்க முடியாமல், வீட்டில் இருந்து கிளம்பும் போது கண்ணாடி என் மூக்கின் மேலும், பள்ளிக்கு வரும் போது , அது அதன் பெட்டியிலும் தூங்கியது. 


இப்படியாக வருடங்கள் ஓட, ஒன்பதாம் வகுப்பு வரும் போது, கண் பரிசோதனைக்கு திரும்பவும் பாண்டி சென்றோம்.  ப்ளஸ் ' ஆக இருந்த பவர் இப்போது "மைனஸ் " ஆக மாறியிருந்தது. என்னடா இது சோதனை என்று நினைத்து போது மருத்தவர் சொன்னார், "இனிமே எப்பவும் கண்ணாடிய கழட்டக்கூடாது, கழட்டினா, பவர் அதிகமாகி, கண்ணு தெரியாமையே போயிடும்". ரைட்டு.. நல்லது... என்னைக்கு நாம நல்லதை கேட்டு இருக்கோம். கண்ணாடி அணிந்தே ஆகவேண்டும் என்றாலும் படிக்கும் போது, டிவி, சினிமா பார்க்கும் போது  மட்டும் அணிந்தேன். மற்ற நேரங்களில் அதன் பெட்டியில் இருக்கும். மனதின் ஒரு ஓரத்தில், நாம் கண்ணாடி அணிந்திருக்கும் பெண் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்தது. 

அந்த காலக்கட்டத்தில் தான் , நம் மனசை குளு குளுவாக்க, இயக்குனர் பாக்கியராஜின் படங்கள் வந்தன. பல படங்களில் இவரின் கதாநாயகிகள் கண்ணாடி அணிந்து வந்தனர். "கதாநாயகிகளே கண்ணாடி அணியும் போது நமக்கென்ன" என்ற எண்ணம் என்னுள் தோன்றியது என்னமோ, சாமி சத்தியமாக உண்மையோ உண்மை. மனசுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்து, உதடுகள் "நாதிர்தின்னா திரனனா "வை உச்சரித்தன. தோழிகள் என்னை ஷோபனா மாதிரி இருக்கேன்னு சொல்லியிருக்க,  (அட, இருங்க ...... நான் நம்பவே இல்லைங்க..  இந்த மாதிரி பல நாயகிகளை நண்பிகளும் நண்பர்களும் உவமைப்படுத்தி இருக்கின்றனர். அது பெரிய லிஸ்ட், அதையெல்லாம் வெளியில் சொன்னால் நாடு தாங்காதுன்னு சொல்லிக்கறதில்லை..அதனால் நீங்களும் ஒன்னும் பெருசா எடுத்துக்கிட்டு வாயப்பிளக்காமல்..படிக்கறதை தொடருங்க..) ஒரு படத்தில் ஷோபனாவே கண்ணாடி அணிந்து வர..ஆஹாஹகாகா... ஒரே உற்சாகம் தான் போங்க.. அடுத்து, குஷ்பூவை சாமியாக சிலைவைத்து கும்பிட்ட இந்த தமிழ்நாட்டில், அந்த சாமிக்கே கண்ணாடிய மாட்டிவிட்டாரு பாக்கியராஜ். ஏதோ அவர் புண்ணியத்தில், கண்ணாடி அணிபவர்களும் கதாநாயகிகள் தான் என உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி. போகப்போக, அறிவு?? கொஞ்சம் வளர ஆரம்பித்ததால், கண்ணாடி ஒரு பிரச்சனையாக இல்லை. ஆனாலும் படிக்கும் போது மட்டுமே அணிந்தேன் என்பது குறிப்பிட வேண்டியது. 

இதற்கு நடுவில், பொண்ணுக்கு கண்ணு நொள்ளைங்கறதை சொல்லாமல், கல்யாணமும் பேசி முடிச்சிட்டாங்க. கல்யாணம் முடிஞ்சி,  மாமியார் வீட்டில் இருக்கும் போது, ஒரு நாள் நியூஸ் பேப்பர் படிக்க, எப்பவும் போல, பெட்டியிலிருந்து கண்ணாடியை எடுத்து அணிந்து படிக்க, எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தால்...... மொத்த குடும்பமும், ஒருவித அதிர்ச்சியோடு என்னையே கவனிப்பது தெரிந்தது. அதில் அட்டண்டன்ஸ் இல்லாமலேயே ஒரு கிழவி ஆஜாராகி, "பொண்ணுக்கு கண்ணுத்தெரியாது போலருக்கு...கல்யாணத்தில கண்ணாடி போடலியேஏஏஏ...." ன்னு இழுக்க... கண்ணாடிப்போட்டாவே கண் தெரியாதுன்னு நினைக்கிற வீட்டில் என்னை கல்யாணம் செய்து கொடுத்த நல்லவர்களை மனசாஆஆர....... .வாழ்த்திட்டு..லேசாக புன்னகை (வழிச்சல்னும் சொல்லலாம்) செய்தபடி கண்ணாடியை கழட்டி, "ஹி ஹி....ச்ச்ச்சும்மா... பவரில்ல.... .தலைவலிக்குன்னு போட்டது" ன்னு சொல்லி டகால்னு மின்னல் வேகத்தில் கண்ணாடியை பெட்டிக்குள் வைத்துவிட்டு, திரும்பவும் பேப்பரை கண்ணாடி இல்லாமல் சத்தம் போட்டு அவங்க எல்லாருக்கும் கேட்கும் படி படிச்சி, நொள்ள கண்ணு இல்ல, அவங்க புள்ள வாழ்க்கை வீணாப்போகலைன்னு நிரூபிக்க வேண்டியதாக போச்சி.  

நல்ல வேள, நொள்ளக்கண்ணா இருந்தாலும் கண்ணாடி இல்லாமல் படிக்க முடியற நொள்ளக்கண்ணாக இருந்ததில், மாமியார் வீட்டு  மக்களை ஏமாற்ற முடிந்தது.  இருப்பினும் கூடவே இருப்பவருக்கு நம்ம நிலைமை தெரியாமையா போகும்.?! தெரியட்டுமே, என்ன இப்ப? தாலிக்கட்டியாச்சி, இனிமே தெரிஞ்சா என்ன தெரியாட்டி என்ன?! 

ஒரு வேள ஒழுங்காக தொடர்ந்து இந்த கண்ணாடியை அணிந்திருந்தால், பவர் குறைந்து கண்கள் பளிச்சின்னு ஆகி, இரவிலும் எருமைமாடு நல்லாத் தெரிஞ்சி இருக்கும்னு நினைக்கறீங்களா..?! அப்படியெல்லாம் ஆக வாய்ப்பே இல்லைன்னு,  தொடர்ந்து கண்ணாடி அணிபவர்களின் கண்களின் வரலாறு கத்தி கதறி சொல்லுது. என்னா ஒன்னு, பவர் அதிகமாகாமல் இருந்திருக்கும். எனக்கு அதிகபட்சமாக -2 வரை வந்தது. அப்புறம், அதுக்கே பொறுக்காமல் யூ டர்ன் அடிச்சி,  -1 க்கே வந்து நின்னுடுச்சி. அதிலும் ஒரு கண்ணு தான் இந்த பவர், இன்னொரு கண் இதையும் விட கம்மி. எப்ப கண் டெஸ்ட்க்கு போனாலும், நய் நய்'ன்னு டாக்டரை கேட்கும் ஒரே கேள்வி "ஏன் ஒரு கண் பவர் மட்டும் அதிகமா இருக்கு" ன்னு தான். எப்பவும் போல அவங்களும் பதிலை மாற்றாமல் "ஒரு கண்ணுக்கு ரொம்ப ஸ்ட்ரைன் கொடுக்கறீங்க" ன்னு  சொல்லுவாங்க. இப்படி கேள்வி கேட்டு பதில் பெறுவதிலும், எனக்கு எந்த பிரயோசனமும் இல்லை.. ஏன்னா..ஸ்ட்ரைன் பண்ற அந்த கண்ணு.. அதே நிலையில் தான் எப்பவும் இருக்கு... 

இப்படியாக என் கண்ணாடி கதை இருக்க, இப்ப நிறைய குழந்தைகள் கண்ணாடியோடு இருக்காங்க. அது ஒரு ஃபேஷனாகவே ஆகிடுத்து. ஜிம்மில் சில பெண்கள் கண்ணாடியோடு உடற்பயிற்சி செய்வாங்க. ஏன் மும்பாயில் நீச்சல் குளத்தில் ஒரு அம்மா, கண்ணாடியோடு நீச்சல் அடிச்சாங்க. கஷ்டமாயில்லையான்னு கேட்டேன், பழகிப்போச்சி, கண்ணாடி இல்லைன்னா கண்ணுத்தெரியாதேன்னு பதில் சொன்னாங்க. ஆக, இப்பவெல்லாம் கண்ணாடி போடுவதற்காக யாரும் அசிங்கப்படுவதே இல்லை. நான் தான் ரொம்ப அசிங்கப்பட்டேனோன்னு தீடீர்னு இப்ப ஃபீல் ஆனாதில் எழுதிய பதிவு தான் இது. இப்பவும், என் கண்ணாடி தேவையானபோது மூக்கிலும், இல்லைன்னா டப்பா'விலும் தான் காலத்தை ஓட்டுது. 

அணில் குட்டி
: ம்ம்ம்... என்னா டீசண்ட்டா எழுத கத்துக்கிட்டாங்க அம்மணி.. ?!  அம்மணிக்கு எப்பவுமே கண்ணு செம நொள்ளை, ஒரு நாள் ராத்திரி, புள்ளையோட வண்டியில் வேளச்சேரி பை பாஸ் ரோடில் வந்துக்கிட்டு இருக்கும் போது, பசு மாடுங்க... அதுவும் வெள்ளைக்கலர், இவங்க நொள்ள கண்ணுக்கு அது எதிர்ல வரது தெரியாம... நேரா  அதுமேல மோதப்போயி, அது தப்பிச்சா போதும்னு வெகுண்டு குதிச்சி ஓட ஆரம்பிக்க, இவங்க சடன் பிரேக்கை போட்டு நிறுத்தி, மாட்டையும், பின்னால் உக்காந்திருந்த புள்ளையையும் காப்பாத்திட்டாங்க. ஆனா, புள்ளைக்கு தான் அகிலமே ஆடிப்போச்சி..... "யம்மாஆ இனிமே ராத்திரியில் உன் கூட வண்டியில் வரவே மாட்டேன்... உனக்கு கண்ணு இவ்வ்வ்வ்வ்வ்ளோ நொள்ளன்னு எனக்குத் தெரியாமப்போச்சி, இவ்ளாம் பெரிய மாடு இருக்கறது கூடத் தெரியாம மோதப்போறியே...உன்னை நம்பி எப்படி வரது? இனிமே நீ ராத்திரியில் வண்டியே ஓட்டக்கூடாதுன்னு " சொல்லி.. ஸ்ட்ராங் ரூலை இம்ப்ளிமென்ட் செய்துட்டார்னா.. .அம்மணியோட கண்ணு எம்புட்டு நொள்ளைன்னு புரியும்!  இதுல இந்த நொள்ளைக்கண்ணை தானம் வேற பண்ணனுமாம்.. .ம்க்கும்... அதான் உங்க இடது கைப்பக்கம் மேல பாருங்க.. கண் தானம் விளம்பரத்தை......  

பீட்டர் தாத்ஸ்:  One Eye Donation can make two blind people see. Let’s make Eye Donation a family tradition.  Let your eyes change someone’s life… Let’s donate eyes…

தகவலுக்கு : இந்தியாவில் சுமார் 46 லட்சம் பார்வையற்றோர், கண்மாற்று அறுவை சிகிச்சை மூலம் குணமடையக்கூடியவர்கள்... அதில் பெரும்பாலானோர் 12 வயதுக்குட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.  எந்த வயதுக்காரர்களும் கண் தானம் செய்யலாம். தானத்தில் சிறந்தது கண் தானம்.

தகவல் & படங்கள் : நன்றி கூகுல்.

சவுக்காரம்


1980 களில் ரொம்ப பிரசித்திப்பெற்ற சோப்பு விளம்பரம் "லிரில்" தான். டிவி எல்லோர் வீடுகளிலும் இருக்காது, எல்லாத் திரையரங்களிலும்  திரையிடப்படும் இந்த விளம்பரத்தையும், அந்த பெண்ணையும் விரும்பாதோர் இல்லை. 



எனக்கும் இந்த விளம்பரம் பிடிக்கும், அந்த சோப்பும் பிடிக்கும். ஆனால் வீட்டில் அதை வாங்கவே மாட்டாங்க. விலை அதிகமான சோப்புகள் என ஒரு பட்டியல் இருக்கும் அவற்றில் முதலில் வருவது "லக்ஸ்" அடுத்து "லிரில்". லக்ஸ் சோப்பிற்கு ஸ்ரீதேவி & ஜெயப்பிரதா விளம்பரப்படத்தில் வருவாங்க. லக்ஸ் சோப்பு பயன்படுத்தினால் ஸ்ரீதேவி போல இருப்போம்னு அநேகப் பெண்கள் நம்பியக்காலம்.

விலை காரணமாக, லக்ஸ்'ஐ அக்கம் பக்கத்தில் இருப்போர், உறவினர்கள் யாரும் உபயோகித்து பார்த்ததில்லை. ஆனால், நடு அத்தை வீட்டில் லிரில் சோப்பு வாங்குவாங்க. அங்கப்போகும் போது முகம் கழுவிட்டு வீட்டுக்குப் போடின்னு அத்தை சொன்னால், சோப்பை எடுத்து கலரை ரசிப்பேன், பின்னர் முகர்ந்துப்பார்ப்பேன், எலுமிச்சை வாசம் அடிக்கும். லிரில் சோப்பின் வடிவம், மேலுள்ள மஞ்சள், அடற்பச்சை கோடுகள் என்னமோ என்னை  மிகவும் கவரும்.

எங்க வீட்டில் எப்பவும் 'ரெக்ஸோனா' சோப்பு தான். ரெக்ஸோனா கிடைக்காத நேரத்தில், எப்போதாவது ஹமாம். இதில் ஆயாவிற்கு மட்டும் மைசூர் சாண்டில். அவங்க ரொம்ப சுத்தம், நாங்க பயன்படுத்திய சோப்பு அவங்களுக்கு பிடிக்காது. இந்த சாண்டில் சோப்பின் வாசமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். "தண்ணி சுடச்சுட இருக்கு, முகம் கழுவிக்கிட்டு போ பாப்பா" ன்னு அவங்க குளிக்கும் போது கூப்பிடுவாங்க. இதான் சாக்குன்னு சோப்பை ஆசைத்தீர முகர்ந்து, முகத்தில் பூசி கழுவுவேன். ஆயாவுடன் தூங்கும் போது, இந்த சந்தன வாசனை ஆயாவிடமிருந்து வீசும்,  இறுக்கி கட்டிக்கிட்டு தூங்குவேன்.


வீட்டில் தாத்தா கதை எப்பவும் தனிக்கதை. தாத்தாவிற்கு தனி ரூம். எல்லாமே தனி. ஆயாவே பணத்தை பார்த்து பார்த்து சிக்கனமாக செலவு செய்வாங்க. தாத்தா அதைவிட ரொம்ப மோசம், கஞ்சம் என்றே சொல்லனும். அநாவசியமாக ஃபேன் ஓடக்கூடாது, லைட் எரியக்கூடாது. ரேடியோ போடக்கூடாது.
தாத்தாவிற்கு பணம் செலவு செய்ய மனசே வராது, அதனால் அவரின் சோப்பு "லைஃப்பாய்". ஒரே ஒரு சோப்பு வாங்கினால், கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு வரும். ஒரு சோப்பு வாங்கி அதை ரொம்ம்ம்ம்பவே கஷ்டப்பட்டு இரண்டாக நறுக்கி, பாதி பாதியாகவே பயன்படுத்துவார். எனக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு 'ஒவ்வேக்' சோப்பு அது.

தாத்தா முதுகு தேய்க்க கூப்பிட்டாலே, வாயடிச்சிக்கிட்டே தேய்ப்பேன். "ஏன் தாத்தா இந்த சோப்புல நுரை வரல, வாசனையும் இல்ல, கரையவே மாட்டேங்குது, இதுக்கு பதிலா ஒரு செங்கல்லை தாங்க தேய்ச்சு விடறேன்"  னு சொல்லுவேன். உடனே தாத்தா புராணத்தை ஆரம்பிச்சிடுவாரு. நான் ஒரு ஏழை விவசாயிக்கு பிறந்த பரம ஏழை.. நீ பொறக்கும் போதே உங்கப்பன் ஃபோர்மேன், எனக்கப்படியா, மேல் சட்டைக்கூட இல்லாமல், வெத்து ஒடம்போட, இடுப்புல  சின்னதா ஒரு துண்டைக்கட்டிக்கிட்டு, உங்க ஆயா வீட்டு வாசலில், சொந்த மாமங்காரன் கிட்ட, "ஐயா..சாமி, எனக்கொரு வேல வாங்கித்தாங்கன்னு கைக்கட்டி நின்ன ஆளு"  உங்களாட்டும் செலவு செய்ய எனக்கு வசதி இல்ல" ன்னு சொல்லுவாரு.

இந்த கதையை 12814 ஆவது தடவையாக  காதில் ரத்தம் சொட்ட சொட்டக் கேட்டு, முதுகை ஏனோ தானோவென்று  தேய்ச்சிட்டு வருவேன். கதையும் மாறாது தாத்தாவின் பாதி " லைஃபாய்"  சோப்பும் மாறாது. இந்த சோப்பையும் விரும்பி எங்கவீட்டில் இன்னொரு ஜீவன் தாத்தாவிற்கு தெரியாமல் திருடி குளிக்கும். அது என் சின்ன அண்ணன். அதை தாத்தாவிடம் போட்டுக்கொடுத்ததில், என்னமோ ஒரு தரம் குளிச்சதில், சொத்தே கரைஞ்சுப் போன மாதிரி, அவர் அண்ணனை ஏகத்துக்கும் திட்ட, அந்த கடுப்பில் அண்ணன்,  என்னை எவ்ளோ முடியுமோ அவ்ளோ கும்மி கும்மி எடுத்த கதை வேற இருக்கு.  (யப்பா என்னா அடி.??!!! அண்ணன்களா அதுங்க.. பிசாசுங்க!! எப்பவாச்சும் அதுங்க அடிவாங்கியிருந்தா தெரியும்.. அடி எவ்ளோ வலிக்கும்னு...:((, நம்ளத்தானே வீட்டில ஒருத்தர் விடாம பின்னி பெடல் எடுத்தாங்க...)

இப்ப ஒரு டிவிஸ்டு. பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு நுழையுது சோப்பு. திருமணம் ஆன நாளிலிருந்து இன்று வரை பழனி ஆண்டவர் பயன்படுத்தும் ஒரே சோப்பு, "சின்தால்" அவரும் மாறமாட்டார்,  நாங்கள் மாறினாலும், அவருக்கென சின்தால்' தான் வாங்கனும். எனக்கும் சின்தால் சோப்பே பழகியும் போனது. இருப்பதிலேயே, சருமத்திற்கு மிகவும் தரமான சோப்பு சின்தால்' என்பதால், அதுவே தொடர்கிறது. சோப்பு கிடைக்காத நேரத்தில் நீயூ' விலிருந்து ஓல்ட் க்கு வருவோம். ஓல்டிலிருந்து நீயூவிற்கு மாறுவோம். (Cinthol had been rated first with high TFM. http://en.wikipedia.org/wiki/Total_fatty_matter )

நடுவில் நவீன், அவனுக்காக தனியாக விருப்பப்பட்டு வாங்க ஆரம்பித்த சோப்பு, "பியர்ல்ஸ்". ஆனால் ஒன்றிரண்டோடு அதன் கதை முடிந்தது. அவரும் சின்தாலே பயன்படுத்தினார். முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் வரவே, மெடிமிக்ஸ்; க்கு மாறினார்.

சிறுவயதில், நிறம், வாசனை, விளம்பர மோகத்தில், பொருட்களை வாங்க வேண்டும் என்பது போய், இது தான் நல்லது என எவ்வளவு விலை ஏறினாலும் அல்லது குறைவான விலையில் தரமான பொருளாக கிடைத்தாலும், சில தயாரிப்புகளை , தரம் மற்றும் உடல் நலம் கருதி தொடர்ந்து வாங்குவதென்னவோ உண்மை. 

அணில் குட்டி : ம்ம்... அம்மணி அடுத்து என்ன டூத் பேஸ்ட்டா?  கோபால் பல்பொடியிலிருந்து ஆரம்பிச்சி எழுதுவீங்களே...............ஹய்யோ கடவுளே.....

பீட்டர் தாத்ஸ் : Let advertisers spend the same amount of money improving their product that they do on advertising and they wouldn't have to advertise it.

Thx : Google -> Images & Video

எங்க வீட்டு சமையல் :கோதுமை தோசை & அடை

 கோதுமை தோசை :

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு : 2 கப்
பெரிய வெங்காயம் : 1
பச்சைமிளகாய் : 3
கடுகு : 1/4 ஸ்பூன்
உளத்தம் பருப்பு : 3/4 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை :

மாவை தோசை மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லை வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு , உளுத்தம் பருப்பு தாளித்து பொன் நிறமானதும், நறுக்கிய வெங்காயத்தையும், நீட்டு வாட்டில் நறுக்கிய பச்சை மிளகாவையும் போட்டு வதக்கவும், பாதி வதங்கும் போது கருவேப்பிலைப்போட்டு  வதக்கி, இதை கரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி நன்கு கலக்கவும்.

தோசைக்கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, மாவை வெளிப் புறத்திலிருந்து சுற்றி ஊற்றி, உட்புறத்தை நிரப்ப வேண்டும். நடுவில் ஊற்றி சுற்றக்கூடாது.  சாதா தோசை மாவைவிட சற்று தளர இருக்க வேண்டும். ரொம்பவும் கெட்டியாகவோ, ரொம்பவும் தண்ணியாகவும் இருக்கக்கூடாது. 

தோசை வெந்ததும் திருப்பிப்போட்டு எடுக்கவும். இது மாவின் பதத்தை பொறுத்து மொறு மொறுவென சுட்டு எடுக்க முடியும்.  இந்த தோசைக்கு எந்த காய்கறி சாம்பாராக இருந்தாலும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். சாம்பார் தவிர, தேங்காய் சட்னி, இட்லி தூளும் நன்றாக இருக்கும்.

                                                                   =======&=======
அடை :

தேவையான பொருட்கள் :
1.
இட்லி அரிசி : 1.5 கப்
துவரம் பருப்பு : 1 கப்
காய்ந்த மிளகாய் : 7-8 

2 :
பாசி பருப்பு : 1 பிடி
கடலை பருப்பு : 1 பிடி
கொண்டகடலை : 1 பிடி

3.
சோயா ச்சங்க்ஸ் : 1 பிடி

தேங்காய் : பொடியாக நறுக்கியது 3 ஸ்பூன் அளவு
வெங்காயம் - 2 
கருவேப்பிலை - சிறிது
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணெய் : தேவைக்கேற்ப

செய்முறை :

அரிசி , பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். அரிசியில் காய்ந்த மிளகாயை போட்டுவிடவும்.

2 இல் சொல்லியிருப்பது தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றை சேர்க்கும் போது துவரம் பருப்பின் அளவை 1/2  கப்பாக குறைத்துக்கொள்ள வேண்டும். கொண்டக்கடலையை 4-5 மணி நேரம் முன்னமே ஊறவைக்கனும்.

சோயா ச்சங்க்ஸ் 1, 2 - இரண்டிலும் சேர்க்கலாம். இதனால் ருசி எதுவும் மாறாது. சோயா ச்சங்க்ஸை ஊறவைத்து பிழித்து வைத்துக்கொள்ளவும்.

ஊறிய அரிசி +மிளகாயை நைசாக முதலில் அரைத்து வைத்துக்கொள்ளவும். பருப்பு வகைகளை ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளவும். கொஞ்சம் பருப்பை நிறுத்தி, அதனுடன் சோயா ச்சங்ஸை சேர்த்து நைசாக அரைத்து எல்லாவற்றையும் தோசை ஊற்றும் பதத்திற்கு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.

அத்துடன் பொடியாக நறுக்கி வதக்கிய வெங்காயம், கருவேப்பிலை, உப்பு, தேங்காய் துண்டுகள் சேர்த்து (கொத்தமல்லி இலை இருந்தால், பொடியாக நறுக்கி அதையும் சேர்க்கலாம்)  நன்கு கலக்கி, இதையும் தோசைக்கல்லில் முதலில் எண்ணெய் விட்டு, வெளிப் புறத்திலிருந்து சுற்றி ஊற்றி உள்பக்கத்தை நிரப்ப வேண்டும்.  நடுவில் ஊற்றி சுற்றக்கூடாது, அப்படி செய்தால் அடை மெல்லியதாக இல்லாமல் , குண்டாக வந்துவிடும்.

இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன், எடுத்து பரிமாறவும். இதற்கு எண்ணெய் சற்று தாராளமாக விட வேண்டும். இல்லையேல் ருசிக்காது. அடைக்கு அவியல் தொட்டுக்கொள்வார்கள். ஆனால் தேங்காய் கார சட்னி நன்றாக இருக்கும். அடை இரவு நேரத்தில் சாப்பிட நன்றாக இருக்கும்.

அணில்குட்டி : அம்மணி இனிமே சாப்பாடு போஸ்ட் நிறைய எழுத உத்தேசித்து இருக்காங்க. .காரணம் என்னென்னு உங்களுக்கு மட்டும் சொல்றேன் காதைக்கொடுங்க... .. ..... ....... ........ " திடீர்னு ஒரு நாள் ப்ளாகர் ஸ்டேடஸ் செக் பண்ணாங்க..அதுல.. மத்த போஸ்டுகளை விட, இவிங்க எழுதின சாப்பாட்டு போஸ்ட்கள் தான் 1000 கணக்கில் மக்கள் தேடி படிச்சி இருக்கறதை கவனிச்சாங்க.... மக்களுக்கு எது தேவையோ ..அதை சேவையா செய்யனும்னு முடிவு பண்ணி..... .. ...........   ........ஹி ஹிஹி..... இதுக்கு மேல என்னால முடியல.. 

பீட்டர் தாத்ஸ் : The main facts in human life are five: birth, food, sleep, love and death.
.

Skype 'ஓட உறவாடி

முதன் முதலில், அலுவலகத்தில் 2006ல் "Skype" உபயோகிக்க ஆரம்பித்தேன்.  அலுவலகம் சார்ந்த பேச்சுக்காக மட்டுமே Skype பயன்பட்டது.  கான்ஃபரன்ஸ் கால்'களுக்காக அலுவலக நண்பர்களை அதில் சேர்த்திருந்தேன்.

வெளிநாட்டில் உள்ளோரிடம், அலுவலக வேலையாகவும், வெளிநாட்டு நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கும் Skype பயன்பட்டு வந்தது. ஆனால் இதுவரை யாருடன் பேசும் போதும் தோன்றாத ஒரு விசயம் , இப்போது என் குழந்தையோடு பேசும் போது தோன்றுகிறது. அப்படி என்ன தோணிச்சின்னு கேக்கறீங்களா?

"என்ன பேசி என்ன பண்ண, என் புள்ளைக்கு ஒரு வாய் சோறு ஊட்ட முடியல, என்னத்த டெக்னாலஜியோ.......என்னத்த சோ மச்சு இம்ப்ரூவ்டோஒ ????? "

சரி சரி... யாரும் ரென்ஷன் ஆகப்பிடாது. பெத்த மனம் பித்துன்னு சும்மாவா சொன்னாங்க. எனக்கே தெரியும் இப்படி யோசிக்கறதெல்லாம் ரொம்ப ஓவர்னு.. ஆனால்..  இதுவரை ஸ்கைப் பயன்படுத்தும் போது தோன்றாத ஒரு விசயம், என் புள்ளையோடு பேசும் மட்டும் எனக்குத்தோன்றியிருக்கிறது.


இங்கிருந்து கிளம்ப ஒரு நாள் முன்னிலிருந்து, யூரோவை இந்திய ரூபாயில் எவ்வளவு வருகிறது எனக் கணக்கு பார்க்க ஆரம்பித்திருந்தான். சரி இது மனித குணம், எப்படியும் 3-4 மாதங்கள் இப்படித்தான் இருப்பான் என்று நினைத்திருந்தாலும், காசு கணக்குப்பார்த்து வயிற்றை காயப்போடுவானோ என்ற பயம் எனக்கு இருந்தது. அது சென்னை விமானநிலைத்தில், "என்னடா சாப்பிட்ட" ன்னு கேட்பதில் இருந்து ஆரம்பித்தது.

"ரொம்ப விலை அதிகம்மா.. ஒரு சாக்லெட், ஒரு கோல்ட் காஃபி குடித்தேன், என்றான்.

இது நடக்குமென்று தெரிந்ததால், ஒன்றும் சொல்லவில்லை, சொன்னாலும் அவன் மாற்றிக்கொள்ள மாட்டான் எனத்தெரியும். துபாய் சென்றதும், "சாப்பிட்டியாடா?" என்ற கேள்விக்கு அதே பதில் ஆனால், சாக்லெட்டும் குறைந்து இப்போது வெறும் "கோல்ட் காஃபி" யில் நின்றது.

பாரிஸ் சென்றதும், நானே அழைத்து, "ஐயா சாமி, சப்பாத்தி இருக்கு,  2 நாளைக்கு வரும், சூடு பண்ணி, ஜாம் வச்சி இருக்கேன்  தொட்டுக்கிட்டு சாப்பிடு" என்றேன்.

நேற்று தான் ஸ்கைப்பில் வந்தான்.  சாப்பாடு விசயம் பேசிவிட்டு, இருவரும் கொடுத்தனுப்பிய பணத்தைப்பற்றி வரவு செலவு கணக்குப்பார்த்தோம்.

கொஞ்சம் பாரிஸ் நகரம் பற்றி சொன்னான். அதிகம் சொல்லவில்லை. என்னளவு பேசக்கூடிய பையன் இல்லை. என்னைப்போல் இருந்திருந்தால், இன்னேரம் பக்கம் பக்கமாக பேசியிருப்பான். முக்கியமாக எந்த கேமராவும் எடுத்துச்செல்லவில்லை. உன் அளவு எனக்கு ஃபோட்டோகிராபியில் இன்ட்ரஸ்ட் இல்லை என சொல்லிவிட்டான்.

நான் வளர்த்தது சரியில்லையோ என அடிக்கடி நினைக்கும் படி தான் இங்கு நடந்துக்கொள்வான். ஆனால், அங்கு ஒரே நாளில், நான் சொல்லித்தராமலேயே எல்லாவற்றையும் செய்துக்கொண்டான்.  குறிப்பாக "ஏன் மிதியடி வாங்கி அனுப்பல"  என்று கேட்டான்.  ஆஹா?? நான் மறந்துவிட்ட ஒரே பொருள் இது தான் போல, எப்படி எனக்குத்தோன்றாமல் போனது என்று நொந்துக்கொண்டேன்.  சமையல் பிடித்துணிக்காக இரண்டு சின்ன டவல்கள் கொடுத்திருந்தேன், அதில் ஒன்றை மிதியடி ஆக்கியிருந்தான்.  கச்சிதமாக எல்லாவற்றையும் அறையில் அடுக்கி வைத்திருந்தான்.

இனி மிச்சம் இருக்கும் எங்களின் வாழ்க்கை,  இந்த ஸ்கைப்போடு தான் தொடரும் போல..  அவன் என் பக்கத்தில் இருப்பதைப் போல உணர முடிவது என்னவோ உண்மை தான்.    இருந்தாலும் -

"என்ன பேசி என்ன பண்ண, என் புள்ளைக்கு ஒரு வாய் சோறு ஊட்ட முடியல, என்னத்த டெக்னாலஜியோ.......என்னத்த சோ மச்சு இம்ப்ரூவ்டோஒ ????? "  :((((

அணில் குட்டி : அம்மணிக்கு ரொம்பத்தான் ஆசை, நேத்து பேசினமாதிரி இன்னும் ஒரு இரண்டு நாள் பேசட்டும், காசிக்கு போனாலும் கர்மம் தொலையலங்கற கதையா, புள்ள.. என்னடா இது ஸ்கைப் மூலம் நமக்கு வந்த தொல்லைன்னு, இன்னைக்கு பீச் லீவு, கேட் போட்டுட்டாங்கன்னு சொல்றாப்ல, ஸ்கைப் ல கவிதா'ன்றவங்கக்கூட எல்லாம் பேசமுடியாதாம்ம்மா" ன்னு சொல்லிட்டு கடைய கட்டப்போறாரு...  அம்மணி இம்சை.. பெரிய இம்சையாச்சே.....

பீட்டர் தாத்ஸ் : The Internet: transforming society and shaping the future through chat.


உனக்கு 20 எனக்கு 18

கவி: நவீன் இந்த ஃபோட்டோவில் (பாஸ்போர்ட் சைஸ்) அழகா இருக்க
 

நவீன்: அந்த ஸ்டூடியோவில் தனியா மேக்கப் ரூம் இருந்திச்சிம்மா, பவுடர் இருந்திச்சி நிறைய எடுத்து பூசிக்கிட்டேன் :)
 

கவி:  அட... பவுடர் அடிச்சியா அழகா ஆயிட்டேன்னு சொல்ற..
 

நவீன்:  அந்த ஃபோட்டோகிராஃபர் என்னை 'சிரிக்க'  சொல்லி எடுத்தாரும்மா...
 

கவி:  :))))))) ........

************

கவி: டார்க் நைட் ரைஸஸ் போகப்போறேன்
 

நவீன்: அந்த படம் பூரா டயலாக்ஸ் தான்,  உனக்கு புரியாது, சத்யம்ல சப்-டைட்டிலோட போடறான் அங்க புக் பண்ணிக்கோ...
 

கவி: நான் இங்லீஷ் சொல்லிக்கொடுத்த பய நீனு.. ஆன்னா வூன்னா.. எனக்கு இங்லீஷ் தெரியாதுன்னு சொல்ற...
 

நவீன் : உண்மைய சொன்னேன்... :)
 

கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்..
************
 கவி: நவீன் அம்மாவோட வந்து சமைக்க கத்துக்கோ...
 

நவீன் : ஐ... இதான் சாக்குன்னு என்னை வேல வாங்கிட்டு , நீ ரெஸ்ட் எடுக்கலாம்னு பாக்கறியா... நடக்காது...
 

கவி : அட நீ செய்ய வேணாம்டா.. வேடிக்கைப்பாரு ...போதும்...
 

நவீன் : முடியாது.. நீ அப்படியே என்னை வேலைவாங்குவ... சமைக்கவே தெரியாட்டியும் பரவாயில்லை பிரட் அம்லெட், பிரட் ஜாம் சாப்பிட்டு உயிர் வாழ்வேனே தவிர, உன்கிட்ட சமையல் கத்துக்க வரமாட்டேன்....
 

கவி : கிர்ர்ர்ர்ர்ர்
****************
 (மொபைல் வாங்கவேண்டி, வேளச்சேரியில், நவீனும் நானும் பல கடைகளுக்கு ஒரு ரவுண்டு போயிட்டு வந்தோம்.. இரண்டு மூன்று கடைகள் பார்க்கவேண்டி இருந்த நிலையில், ஒரு கடை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது.... )
 

நவீன் : அம்மா, அவசரமா எனக்கு ஆய் வருது...
 

கவி : :))) என்னடா இந்த நேரத்தில்... இந்த கடையை முடிச்சிட்டு வீட்டுக்கு போயிடலாம் , தாங்குமா?
 

நவீன் : ம்ம்ம் ட்ரை பண்றேன் ..வேகமா வா....

(கடையில் 10 நிமிஷமாவது செலவிட்டு இருப்போம்.. வண்டியிடம் வந்தவுடன்..)
 

கவி : டேய் அவசரமா ஆய் வருதுன்னு சொன்னீயே, திரும்பு.. பேன்ட்லியே போயிட்டியா சைலன்ட்டா வர..
 

நவீன் : இல்லல்ல,  ஆய் நின்னுப்போச்சிம்மா ..
 

கவி:  :))))))))))))) அது எப்படி நிக்கும்?

நவீன் : வண்டியில உக்காந்து ஓட்டும் போது ஆய் வருதும்மா.. ஏன்சி நடந்தா ஆய் வரலம்மா... 

கவி : ஹா ஹா.... :)))))))))) 
***************
கவி : நவீன் அப்பாக்கு ஒரு மிஸ் கால் கொடு..

நவீன் : ஏன் நீ கொடு சும்மாத்தானே இருக்க..
 

கவி : உன் ஃபோன்ல எனக்குத்தெரியாதுடா...
 

நவீன் : உன் ஃபோன் மாதிரி தான் எடுத்துக்கொடு...
 

கவி : Appa, Dad, Palani, CC என்று எனக்கு தெரிந்ததை எல்லாம் தேடுகிறேன், கிடைக்கல... "டேய்.. என்ன பேர்ல அப்பாவை ஸ்டோர் செய்து வச்சி இருக்க... அப்பா நம்பரையே காணல... "
 

நவீன் : Director " ன்னு இருக்கும் பாரு அதான் உன் புருஷன்..
 

கவி : ஞே.. !
*********************

கவி : ஏன்டா லேட்டா வர?

நவீன் :மெமரிக்கார்ட் இன்னும் கொடுக்கல, அதான் அந்த மொபைல் ஸ்டோர் போயி 'நின்னு'  பேசிட்டுவரேன்
 

கவி : எல்லாருமே நின்னு' தான் பேசுவாங்க.. எனக்குத்தெரிஞ்சி யாரும் கடையில படுத்துக்கிட்டு பேசமாட்டாங்களே...
 

நவீன் : ஞே... & கிர்ர்ர்ர்ர்ர்ர்...

****************
 
கவி : எத்தனைப்பேர் வேலைக்கு போயிருக்கீங்க

வெங்கடேஷ்: 3 பேர் ஆன்ட்டி

கவி : அவ்ளோதானா? மிச்சம் ? எத்தனப்பேர்  மேல படிக்கறீங்க..

வெங்கடேஷ் : யாருமில்ல ஆன்ட்டி... நவீன் மட்டும் தான்..

கவி : ஓ..??

வெங்கடேஷ்: ஆமா ஆன்ட்டி, எங்க செட்டிலேயே அவனுக்கு தான் செம "மண்டை" அவன் கூட ...மேல படிக்காட்டி எப்படி ஆன்ட்டி... ?

கவி: (ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்) :))

****************

கவி: 8 ஆவது வரைக்கும் கூடவே படிக்க உக்காருவேன். அடி பின்னி எடுப்பேன். அதுவும் கணக்குப்போடும் போது வாங்குவான் பாருங்க...... ஒரு வேள ரொம்ப மக்கா இருந்தானோ.. ? டவுட்டிங்...

நவீன் தோழி : ஆன்ட்டி, நவீன் ஈஸ் தி பெஸ்ட்,  ப்ராஜக்ட் ல அவங்க சொல்றது (மொத்தம் 3 பேர்) எதுமே எங்க இரண்டுப்பேருக்கு புரியாது, அவன் தான் முதல்ல புரிஞ்சிக்கிட்டு, கட கடன்னு பதில் சொல்லுவான். அவன்கிட்ட இருந்து அப்புறமா நாங்க கேட்டுத்தெரிஞ்சிக்குவோம்..

கவி : ஹோ. .ரியலி..

நவீன் தோழி : ஆமா ஆன்ட்டி, பிலீவ் மீ, .. ஹி ஈஸ் வெரி இன்டெலிஜன்ட்....

கவி : :) (ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்)

*****************

நவீன் ஃப்ரண்ட்ஸ் : ஆன்ட்டி, போட்டோவ பாருங்க. நீங்க பாக்காமையா?

கவி : (போட்டோவை பார்த்துவிட்டு) , இதை கொடுத்து அனுப்புறதுல எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை, செக்கியூரிட்டி செக்கப்ல ஸ்கேனிங் மிஷின் ஒர்க் ஆகாம நின்னு, பிர்ச்சனை ஆகிடும்.!! :((((. அப்புறம் நவீனுக்கு தான் பிரச்சனை... :((((( (முகத்தில் வண்டி வண்டியா சோகம்)

நவீன் ஃப்ரண்ட்ஸ் : ஹோ.. போட்டோஸ் நாட் அல்லவுடா ஆன்ட்டி....

கவி :.. ஹி ஹி... ஃபோட்டோவில் இருக்கற எல்லா மூஞ்சியுமே நவீன் மூஞ்சியாச்சே..... :)))))

நவீன் ஃப்ரண்ட்ஸ் : ஞே.........கலாய்க்கறாங்கன்னு தெரியாம..கொஞ்ச நேரத்தில் சீரியஸா ஆயிட்டோமேடா....ச்சே..

நவீன் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

****************

நவீன் ஃபிரண்ட்ஸ் : ஆன்ட்டி, கவலைப்படாதீங்க. உங்க புள்ளையா நாங்க இருக்கோம். நீங்க எப்ப வேணாக்கூப்பிடலாம். குறிப்பா, பண விசயத்திலும், நீங்க எங்களை உங்க புள்ளையாவே நினைக்கலாம்...

கவி :..ஹோ..தாங்ஸ்.... பணவிசயத்தை மட்டும் நவீன் கிட்ட க்ளையர் பண்ணிக்கோங்கப்பா.....

நவீன் : (அவங்க அப்பா பக்கம் திரும்பி) அங்கயாச்சும் எதாது தேறும்.. இங்க... ம்ஹூம்ம்ம்ம்..... (கை உதறிக்காட்டுகிறான்..)

நவீன் ஃபிரண்ட்ஸ் :... ஹான்.....

கவி : எச்சூச்சுமி, ஆல் டோர் க்ளோஸ்... யார் கிட்ட.. ?! :)))

*****************

கவி: 2009 ல் என் புள்ள  சோயா மில்க் வாங்கிகொடுத்து, உனக்கு ரொம்பநல்லதும்மா, மாசா'க்கு பதிலா இத சாப்பிடுன்னு சொன்னான். ஆனா என் டாக்டர் இப்பத்தான் என்னை சோயா மில்க் சாப்பிடச்சொல்லி இருக்காங்க... ரொம்ம்ம்ம்ப லேட்...

பழம்நீ:  உனக்கு தேவையானது எல்லாத்தையும் (என்னென்னு தெரிஞ்சி) எங்களால வாங்கித்தர முடியும்...நீ கேக்காமயே வாங்கித்தந்துட்டு தான் இருக்கோம்... ஆனா ஒன்னே ஒன்னு தான் எங்களால முடியாது.... :((  (ரொம்ப கவலையுடன்)


கவி:   ஓஓஓஓ......... அது என்ன.. ? (மிகுந்த எதிர்பார்ப்போடு)


பழம்நீ: அறிவு அறிவு .......... (சத்யராஜ் குரலில்)


நவீன் : :))))))))) 


கவி:  கிர்ர்ர்ர்ர்ர்... 

*********************
அணில் குட்டி : அம்மணியோட புள்ளப்புராணம் இனி எவ்ளோ நாள் தொடருமோ தெரியாது..எப்படியோ.. ஆஸ்பித்திரியில் சேக்கற நிலைமை வராம  இருந்தா சரி...

பீட்டர் தாத்ஸ் : To a mother, a son is never a fully grown man; and a son is never a fully grown man until he understands and accepts this about his mother."

க்ளிக்..க்ளிக்..க்ளிக்..

 கட்டாக் முட்டாக்னு ஒரே சத்தம், என்னானு திரும்பி பார்த்தால், இரண்டு எருமைமாடுகள் கொம்புகள் உரச சண்டைப்போட்டுக்கிட்டு இருந்துச்சி ..

 என் கணவரின் அலுவலகத்தில் முன் அறையில் வைக்கப்பட்டிருந்தது.
 சாக்லெட் பேப்பர் பொம்மை.

 ரயிலில் வேற்கடலை விற்று வந்த சிறுவன் வைத்திருந்தது.  இது 5 ரூ.
 இது 2 ரூ.
 பூச்சிமருந்து தெளித்திருக்கும் கத்திரிக்காய் செடி , பின்னால் இருப்பது மரவள்ளிக்கிழங்கு.
 கிராமத்து சச்சின் 'கள்.
 'பாட் குல்ஃபி' வாங்கி, குல்ஃபியை முழுங்கிட்டு, சட்டியில் டிசைன் செய்தது.
 ரயில் சக்கரத்திற்கு இப்படி முட்டுக்கொடுப்பதை முதல் முறையாக பார்க்கிறேன். இதன் பெயர் தெரியல. ரயிலுக்கு இதன் தேவை அவசியம் தானா என்றும் புரியல. படத்தை க்ளிக்கி பார்க்கவும்..

அணில்குட்டி : கையில ஒரு ஆதி காலத்து மொக்க மொபைல்  ஃபோனும், ஒரு டிஜி கேமும் வச்சிக்கிட்டு அம்மணி போடற சீன் இருக்கே.. ஸ்ஸ்ஸ்ஸ்... முடியல..

பீட்டர் தாத்ஸ் : When you photograph people in colour you photograph their clothes.  But when you photograph people in B&W, you photograph their souls!  ~Ted Grant

வெளிநாடுகளில் நம் குழந்தைகளின் வளர்ப்பு- ஒரு விவாதம் #2

முந்தைய பதிவு => வெளிநாடுகளில் நம் குழந்தைகளின் வளர்ப்பு- ஒரு விவாதம் #1 சென்ற பதிவின் தொடர்ச்சி :

கவிதா :    +Dyno Buoy  அமெரிக்க பெற்றோர், அமெரிக்க கலாசாரத்திற்கு சற்று லேட்டாத்தான் வராங்கங்கறதுக்கு என்ன காரணம் ?

Dyno Buoy  :  நான் ஒரு மாதத்திற்கு முன் கனடா சென்றிருந்தபோது என் கனேடிய நண்பர்களுடன் அதிக நேரம் இதைப்பற்றி விவாதித்தோம். பல விசயங்களை அலசினாலும் நாங்கள் பெரிய காரணம் என்று நினைத்து இதுதான்.

அமெரிக்கா வரும் இந்தியர்கள் இங்கே அசிமிலேட் ஆக அதிக நாள் ஆவதற்கு காரணம் இங்கே உள்ள விசா முறைதான். 90களுக்கு முன்னால் அமெரிக்கா வந்தவர்கள் சீக்கிரமே அசிமிலேட் ஆகிவிட்டிருப்பர், ஏனெனில் அவர்களுக்கு க்ரீன் கார்ட் வெகு விரைவில் கிட்டி இருக்கும். நாம் இங்கேதான் குப்பைக்கொட்டப்போகிறோம் என்று முடிவை சீக்கிரம் எடுத்துவிடுகிறார்கள். அதற்க்கான தயாரிப்புகளை விரைவில் செய்யத்துவங்கிவிடுகிறார்கள். ஆனால் ஹெச்1 விசாவில் வரும் ஒருவர் க்ரீன் கார்ட் என்று யோசிக்கவே 5 வருடம் ஓடி விடுக்கிறது. அதன் பின் 5 வருடம் சிட்டிசன்சிப்பிற்கு. ஹெச்1 பி விசாவில் இந்தியர்கள் மிகவும் அன்-செக்யூர்டாக உணர்கிறார்கள். ஒரு பர்னிச்சர், ஏன் படுக்கை வாங்கக்கூட மாசக்கணக்கில் யோசிப்பார்கள் (even if they could afford a $1000 bed), தரை விரிப்புகளில் தூங்கும் நிலையில் இருப்பார்கள். லான் பர்னிச்சர் (நம்மூர் மடக்கு பெஞ்ச்.சேர்)தான் வாங்குவார்கள். எப்போது வீடு காலி பண்ணிடணும்னே இருப்பாங்க. அந்த இன்-செக்யூரிட்டியில் அசிமிலேஷன் நடப்பதே இல்லை.

எங்களுக்கு தெரிந்த ஒரு நண்பர் எப்போதும் "உங்களுக்கென்ன எல்லாம் செட்டில்டு, நாங்க அப்படியா ஹெச் 1 சிங்கி அடிக்கிறோம்"னு ஒவ்வொரு தடவை மீட் செய்யும் போதும் சொல்வாய்ங்க. Its a matter of mindset னு சொன்னாலும் அவங்க ஆதங்கத்தை புரிஞ்சிக்கிடமுடியுது. ;)))

இன்னொரு கொடுமை (என் அளவில் மிக பெரும் கொடுமை) குழந்தை பெத்துக்கிடக்கூட விசா பாத்து முடிவு செய்யலாம் பாஸ்னு சொல்வாய்ங்க. அடப்பாவிகளே ஊர்ல என்ன பிச்சையா எடுக்கறீங்க... குழந்தை பிறந்தா சமாளிக்க முடியாத அளவா வறுமை. என்ன அதிக பட்சம் 2-3 லட்சம் அதிகமாகும், அதுக்காக குழந்த பெத்துக்கறதே தள்ளி வைக்கறதெல்லாம் எனக்கு டூ மச்சாகப்படும்! வீடு வாங்கறதும் அப்படிதான். சிட்டிசன்சிப் வாங்கீட்டு (குறைந்தபட்சம் க்ரீன் கார்ட்)தான் வீடே பார்க்கத்துவங்குவாய்ங்க. இப்படி ஒரு இன் செக்யூர்ட் லைஃப்.

ஆனா அதே பக்கத்து நாடான கனடாவில் பெரும்பான்மையோர் க்ரீன் கார்ட்டுடன்தான் போகிறார்கள். சட்டென்று அந்த நாட்டு குடிமகன்களைப்போல வாழ்கிறார்கள். நானும் நீயும் ஒன்னு என்று கனேடிய குடிமகனுடன் தோள்கொடுக்க முடிகிறது. இங்கே இந்த ஜாப் பேஸ்டு விசாவினால் கொஞ்சம் அடிமையைப்போல உணருகிறார்கள்!

கவிதா : ம்ம்ம்.. சம்மரியாக - அமெரிக்க பெற்றோருக்கு=> இன்செக்கியூரிட்டி மத்த நாட்டில் இருக்கவங்கள விட அதிகமா இருக்கு...
********
Sriram Narayanan :  பெண் குழந்தை வளர்ப்பு : 13-18 வயசு பொண்ணுங்க, ஜட்டியை விட ஒரு இன்ச் மட்டுமே அதிகமுள்ள சார்ட்ஸ் போட்டுக்கிட்டு போவதை பாக்கும் போது பயம் வரத்தான் செய்யும் - நாளை நம் பெண்ணும் இப்படித்தான் இருக்குமோன்னு...  ஆண் தொடர்பு, pre marital sex இவை இந்தியாவிலும் சகஜமாகிப் போன நிலையில் இப்பயம் எங்கிருந்தாலும் வரத்தான் செய்யும். அட்லீஸ்ட் அமெரிக்காவில் - பஸ்ஸில் தடவுவது, பீச்சில் வைத்து அசிங்கம் பண்ணுவது மிக மிகக் குறைவு

வெண்பூ வெங்கட் : இங்ககுழந்தை பொறந்து ஒரு ருசம் இருந்தோம், யாரும் க்கத்துலஇல்ல‌. ரொம்பநல்லாவே ர்க்கமுடிஞ்சது, இந்தியாவுலபெரியங்கஇல்லாமஷ்டமா இருந்திருக்கும்.

Sriram Narayanan : ஒரே ஒரு நிகழ்வில் வெறுப்பு வரும் - குழந்தைக்கு ஜுரம் அடிக்குதுன்னு டாக்டருக்கு போன் பண்ணா, மூணு நாளைக்க்கு மேல தொடர்ந்து 100டிகிரிக்கு மேல இருந்தா கூட்டிக் கிட்டு வாங்க, அதுவரை பொருத்திருங்கன்னு பதில் வரும். இதுதான் சரின்னு மூளைக்கு புரிந்தாலும், தொட்டதுக்கெல்லாம் Anti Biotic சாப்பிட்ட மனசு கேக்காது

கவிதா : //ஆண் தொடர்பு, pre marital sex இவை இந்தியாவிலும் சகஜமாகிப் போன நிலையில்// ஸ்ரீ... சகஜமா?? ஏங்க ஏன்ன்... செய்திகளை படிச்சிட்டு, சகஜம்னு சொல்லலாமா?

Sriram Narayanan : கவிதா : சென்னை, டில்லி போன்ற பெரு நகரங்களில் சகஜம்தான். உலா வரும் MMS கள் அப்படித்தான் சொல்லுகின்றன.. இது பத்தி உங்க கிட்ட இனியும் பேச முடியாது (pre marital sex) மத்த விசயங்களில் கவனம் செலுத்துகிறேன்.

சாப்பாடு ஒரு மேட்டரே இல்லை - நம்ம புள்ளைங்க இந்திய ஸ்நாக்ஸுக்கு ஈஸியா அடிமையாகிடுதுங்க, வீட்டில் பெரும்பாலும் தென்னிந்திய சமையல்தான், அதைத்தான் சாப்பிட்டு வளருதுங்க

*******
சுசி குணா:   1. இல்லாம போகும்னு நினைச்சதில்ல. ஏன்னா நாங்க இதையெல்லாம் பாதுகாக்கணும் வளர்க்கணும்னு வெளிநாட்டில இருந்திட்டு நினைக்கற அளவுக்கு தாய்நாட்ல இருக்கவங்க நினைக்கலையோன்ற ஒரு எண்ணம் எனக்கு இருக்கு. அதோட இந்த நாட்டவர்கள் எங்களோட கலாச்சாரம், பண்பாடுகளுக்கு மதிப்பும் மரியாதையும் குடுக்கறதோட அவங்க கலாச்சாரம், பண்பாட்டில இருக்கற நல்ல விஷயங்களை நாங்க பின்பற்றுறத விரும்பறாங்க, வரவேற்கிறாங்க.

2.
திட்டம், நடவடிக்கைன்னு எதும் இல்லை.. ஆனா பிள்ளைகள் இப்டித்தான் நான் வளர்ந்தேன் அப்டின்னு அறிந்துகொள்ளும்படியா சொல்லி இருக்கேன். கடைப்பிடிக்கணும்னு கட்டாயப்படுத்தல.

3.
என்னைப் பொறுத்தவரைக்கும் பிள்ளையின் மன நிறைவான வாழ்க்கைக்கு பின்னர்தான் மீதி எல்லாம். எங்கள் தலைமுறையை விட இப்ப இருக்கற, இனி வரப் போற தலைமுறை நோர்வேஜியருக்கு எம்மவர் கலாச்சாரம், பண்பாடு பற்றிய தெளிவு அதிகம் இருக்கறதால எங்க பசங்களுக்கு குழப்பங்கள், பிரச்னைகள் கம்மியா இருக்கும்னு தோணுது.

4.
என் பிள்ளைகளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். நல்லா பேசுவாங்க. இந்த ஒரு விஷயத்துக்குத்தான் அவங்கள கட்டாயப்படுத்த வேண்டி இருக்கு. மத்தபடி பல விஷயங்களை அவங்க எங்களைப் பாத்து கத்துக்கறாங்க. உதாரணத்துக்கு சாமி கும்பிடுறது குழந்தைப்பருவத்தில சொல்லிக்குடுத்தேன். அப்பறம் விட்டிட்டாங்க. இப்ப கொஞ்ச நாளா அவங்களா ஒரு சக்தி இருக்குன்னு நினைச்சு கும்பிடறாங்க. சங்கீதம் நடனம்னு கத்துக்க வச்சேன். முடியாதுன்னாங்க. விட்டாச்சு. இதே போலத்தான் எல்லாமும். இப்படி ஒண்ணு இருக்குன்னு தெரிய வைத்தால் அது அவங்க மனசில பதிஞ்சிடும். மீதி அவங்க இஷ்டம். பிடிக்குதா தொடரட்டும். இல்லையா விட்டிடட்டும்.

5.
என்னைப் பொறுத்த வரைக்கும் வெளிநாட்டில பெண்குழந்தை ஆண்குழந்தைன்ற வேறுபாடு இல்லை. என் ஃப்ரெண்டோட அம்மா சொன்னது தான் எப்போதும் நினைவு வரும். 2 பொண்ணுங்கள எப்டி வளர்த்து கரை சேர்க்கன்னு நினைச்சாங்களாம். ஆனா 4 பசங்க இருந்தும் யாரும் அவங்க நினைச்சது போல இல்லையாம். தாய்நாட்ல இல்லையா தெருவுல சுத்தற பசங்க?? தாய்நாட்ல இல்லையா பழக்கம் சரி இல்லாத பொண்ணுங்க?? என்ன வெளிநாடுன்னதுமே ஒட்டு மொத்தமாவோ இல்லை அதிகளவிலயோ ஒழுக்கம் பண்பாடுன்னு எதிர்பார்க்கறாங்க. இந்த வகையில பாத்தா தாய்நாட்ல இருக்கற பிள்ளைகள் போல எந்த வகையிலவும் குறைவில்லாம தான் எங்க பிள்ளைகள் வளர்ராங்க. என்னதான் இந்த நாட்டு கலாச்சாரம் கலந்து வளர்ந்தாலும் அவங்களுக்குள்ள தெளிவான கட்டுப்பாடுகள் இருக்கு. கல்யாணம்னு வந்ததும்தான் குறிப்பா பெண் பிள்ளைகள தனியா பாக்கறாங்க. இதனாலயே எனக்குத் தெரிஞ்ச வரை பலர் தாய்நாட்ல இருக்கற பசங்கள கல்யாணம் செய்ய பயப்படறாங்க. எங்களைப் பொறுத்த வரைக்கும் எங்க பிள்ளைகள் நோர்வேஜியரை கல்யாணம் பண்ணினா கூட பறவால்ல. ஏன்னா இவங்க தாய்நாட்டுக்கு போய் இருக்கப் போறதில்ல. யாரா இருந்தாலும் அவங்க வாழ்க்கைய நல்லபடியா கொண்டு போகக்கூடிய ஒரு துணை கிடைத்தால் போதும்.

                                                                                   **********
முகிலன் தினேஷ்:  // பிள்ளைகள் இந்தியா பக்கம் வருவதையே விரும்புவதில்லை. இந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லமுடியாத அளவிற்கு அவர்களின் உடல் வளர்ச்சியும் வித்தியாசமாகவே உள்ளது. அதிக உயரம், அகன்ற உடல்வாகு. (Girl or a Boy heavy built),  அதே குடும்பத்தில் இங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகள் அப்படியில்லை.//

80
களின் இங்கு வந்தவர்களுக்கு அந்தக் காலகட்டத்தில் உடல்நலம் பற்றிய பெரிய பயம் என்பது இல்லை. அதனால் ஜங்க் ஃபுட் என்றழைக்கப்படும் துரித உணவுகள் அதிக உண்டதால் அந்த கூடுதல் எடை. இப்போது அந்த பயம் வந்துவிட்டது. எனக்குத் தெரிந்து பெரும்பாலான பெற்றோர் ஜங்க் ஃபுட் கொடுப்பதைத் தவிர்க்கிறார்கள்.

ஆனால், அதே சமயம் இந்தியாவில் ஜங்க் ஃபுட் சாப்பிடும் - கே.எஃப்.சி, மெக்டொனால்ட்ஸ் - பழக்கம் வந்திருக்கிறது. அதனால் இனி இந்தியாவில் வளரும் குழந்தைகள் ஹெவி பில்ட்டாகவும், அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் லைட் வெயிட்டாகவும் தெரியும் வாய்ப்புகள் அதிகம்.

சுசி குணா உடற்பருமன் அதிகம் என்ற பிரச்சனை பொதுவாவே இருக்குதுதான். எம்மவர் மட்டும்னு இல்லை. ஆனால் டீனேஜ் பருவம் வந்ததுமே 90% பிள்ளைகள் உடற்பருமனில் கவனம் எடுத்துடறாங்க. அதனால அடையாளம் அழியாதுன்னு நினைக்கறேன்.. 
  
Dyno Buoy  : அதாவது நாமாக, இந்தியர்களாக/தமிழர்களாக  பார்வைக்கு கூட நம் வருங்கால சந்ததியினர் இருப்பார்களா?

டிபென்ட்ஸ் ஆன் 2 திங்க்ஸ்!

1. வருங்காலம் என்பது எத்தனை நாள்
2. எத்தனை க்ராஸ் போலினேஷன்ஸுக்கு பிறகு.

இதற்கு பதிலாக இப்போதைய சென்வ்விந்தியர்களை உதாரணமா எடுத்துக்கலாம். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் சிலருக்கு அந்த ஃபீச்சர்ஸ் இருக்கு. ஜெனிட்டிக்கலி 1/16, 1/32 ன்ட் நேடிவ் அமேரிக்கன்ஸ்னு கூட இருக்கு. (அதை வச்சி அவர்களுக்கு நில உரிமை உட்பட்ட சில சலுகளும் அமெரிக்காவில் இருக்கு).  இந்தியர்களிலேயே ரெண்டு தலைமுறைக்கி மும்பய்ல செட்டிலானவிங்க முகத்தோற்றம் வெகுவாய் மாறியதை பார்த்திருக்கேன்.
 *******
O.R.B Rajaகவிதா, இந்த ப்ளஸ்ஸுக்கு நான் இன்னும் 10-15 வருடங்கள் சென்று வரேனே? :))
இப்போதைக்கு:
1.
கண்களை விற்றும் நிறைய அருமையான சித்திரங்கள் வாங்கலாம்.
2.
ஒரு கண்ணை விற்றும் சில அருமையான சித்திரங்கள் வாங்கலாம்.
3.
எனக்கு கண்கள்தான் முக்கியம்.
4.
எனக்குச் சித்திரங்கள்தான் முக்கியம்.

அவங்கவங்களுக்குப் பிடித்ததை, முக்கியத்துவம் கொடுப்பதை ஃபாலோ செய்யலாம். மேலே இருப்பதில், சித்திரங்கள் எவை என்பதில் இரண்டு அல்லது மேற்பட்ட மாறுபட்ட கருத்துகள் உண்டு :))
                                                   ===========================
விவாதத்தைப்பற்றிய என் கருத்து : பொதுவாக, நம் (இந்திய) கலாசாரம் என்பது => சங்கீதம், நடனம் கற்றுக்கொடுப்பது என்ற ஒரேமாதிரியான தகவலை நண்பர்கள் பகிர்ந்தது..... கொஞ்சம் ஆயாசத்தை தருகிறது.  இந்தியாவிலேயே வடமாநிலங்களில் இருந்துவிட்டு, பிடிக்கவில்லை என்று சென்னைக்கு ஓடிவந்துவிட்ட நண்பர்கள் சிலரை எனக்கு தெரியும். கேரளாவை, மலையாள திரைபடங்களின் மூலம் பார்த்து, லயித்து, அந்த பச்சை பசேலுக்கு ஆசைப்பட்டு அங்கு சென்றப்பிறகு தான் தெரிந்தது, சினிமா பச்சை வேறு, நேரில் காணும் பச்சை வேறென. எனக்கு மட்டுமல்ல என் பிள்ளைக்கும் அங்கு பிடிக்காமல் போக சென்னைக்கு ஓடிவந்தோம். இந்தியாவிற்குள்ளேயே இப்படி என்றால், வெளிநாடுகளில் சொல்லவே வேண்டியதில்லை. ஓ.ஆர்.பி.ராஜா சொன்னதைப்போன்று, இது தனிநபர் சம்பந்தப்பட்ட விசயமாகவே பார்க்கவேண்டியுள்ளது. அவரவரின் தேவை, எதிர்பார்ப்புகள், சூழ்நிலைகளுமே வெளிநாட்டில் நாம் வாழ்வதும் நம் குழந்தைகளை வளர்க்க முடிவு செய்வதும் நிர்ணயிக்கப்படுகின்றன.  
                                                                                                                                                                                                    .............. 2/2
                                                                      ==================================

அணில் குட்டி : அம்மணி பேச ஆரம்பிச்சாவே, அடிச்சி வாயமுட வைக்கனும். அவங்க பிரண்டுங்க எல்லாமும் அப்படித்தான் போல. .யப்பா எம்புட்டு பேசி இருக்காங்க. .படிக்கறதுக்குள்ள. .கண்ணக்கட்டுதே....  ஒரு ஜோடா ப்ளீஸ்...

பீட்டர் தாத்ஸ்: “Having a good discussion is like having riches”

பின் குறிப்பு: இந்த விவாதத்தை என்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்ததில், எனக்கு கிடைக்கவிருக்கும் பணம், பதவி, விரைவில் எதிர்பார்க்கப்படும் வலைத்தளத்தில் மிகச்சிறந்த எழுத்தாளர் என்ற  'பட்டம்',  பாராட்டுகள், அதற்கான விழாக்கள் இன்னும் இத்தியாதி இத்தியாதிகள் அனைத்தையும் முழுமையாக   "இளா" விற்கு சமர்பிக்கிறேன்.