அபிராமி நுழையும் போதே கவனித்தாள், ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தளவு நடித்துக்கொண்டிருந்தனர். நெருங்கிய உறவினர் சிலருக்கு நிஜமான துக்கம் இருக்கத்தான் செய்தது, அது அவர்களின் முகத்திலும் தெரிந்தது, இருந்தாலும் சுயநலங்களும் இருந்தன. இறந்தவர் விட்டுச்சென்றவையில் தனக்கு என்ன கிட்டும், கிட்டசெய்ய வேண்டுமென்ற யோசனை உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது அவர்களின் கண்களில் தெரிந்தது.

அபிராமிக்கும் இறந்தவர் நெருங்கிய சொந்தம் தான், அப்பாவின் சொந்த தங்கை. ஆனால் ஏதேதோ பிரச்சனைகளை கடந்து, ஒதுங்கி வந்து பல வருடங்களாக யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்தாள். யார் மூலமாகவோ இறந்த விசயத்தை அபிராமி காதில் போட சொல்லியிருந்தனர் உறவினர். நல்லதுக்கு போகாட்டியும் கெட்டதுக்கு தலைக்காட்டனும்னு வந்திருந்தாள்.

அழுகை வரவில்லை. இறந்தவர் உடலுக்கு பக்கத்தில் சென்றாள், பல வருடம் கழித்து உறவினர்கள் சூழ இருந்த ஒரு இடத்தில் இவள் உள்ளே நுழைவதால், அனைவரும் இவளையே கவனித்தனர். இவள் வயதை ஒத்த பெண்களுக்கு அவளின் தலைமுடி, உடல்வாகு, காது, கை, கழுத்து நகைகள் சார்ந்து கவனம் சென்றது. சிலர் அணிந்திருந்த புடவையைக்கூட விட்டுவைக்கவில்லை. பார்வைகள் இவளைத்தொடர்ந்தாலும், இவள் யாரையும் பொருட்படுத்தாமல் இறந்தவரின் காலைத்தொட்டு கும்பிட்டாள். கண்ணை மூடி, அத்தையின் நினைவுகளில் மூழ்கினாள். அப்பாவிற்கு மிகவும் பிடித்த தங்கைகளில் ஒருத்தி, ஆனால் அவளே அதிக வில்லத்தனம் பிற்காலத்தில் செய்தாள் என்பதை நினைத்தபோது கண்கள் பட்டென்று திறந்துக்கொண்டன. ஒருத்துளிக்கூட கண்ணீர் வரவில்லை. சாவு வீடு அழவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாக அவளுக்குத்தெரியவில்லை. அழுகைதான் வரவில்லையே. பார்த்தவர்கள் அனைவருக்கும் "கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லையே? சொந்த அண்ணன் பொண்ணு.."  என்ற ஆச்சரியம் இருக்கத்தான் செய்தது.

வருடங்கள் பல ஓடிவிட்டதாலோ என்னவோ யாரும் இவள் பக்கத்தில் வரவில்லை. இவளும் உறவினர்கள் யாரிடமும் செல்லாமல், முகமறியாத சிலர் இருக்கும் திசை நோக்கிச்சென்று அமர்ந்துக்கொண்டாள்.

அப்போதும் விட்டேனே பார் என, அறிமுகம் இல்லாதவர்களும் இவளை விசாரிக்க ஆரம்பித்தனர். எந்தக்கேள்விக்கும் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள். கேட்டவர்கள் மனதுக்குள் சபித்தபடி கேள்விகளை நிறுத்திக்கொண்டனர். சற்றே அசுவாசப்படுத்திக்கொண்டு, கண்களால் சுற்றி வட்டமிட ஆரம்பித்தாள்.

அப்போது தான் கவனித்தாள். பேரூந்தில் இவளுடன் பயணம் செய்த இரண்டு பெண்கள் அங்கு தென்பட்டனர். பேரூந்தில் அவர்கள் பேசி வந்தது நினைவுக்கு வந்தது.

"அக்கா, சாவு வீட்டுக்கு போறோம்..எதுக்குக்கா நெக்லஸ்..உள்ள வச்சிடேன்..திரும்ப வரும்போது போட்டுக்கறேன்.".

"ஒன்னுமில்லாதவன்னு நினைச்சுக்குவாளுங்க.. போட்டுக்க..".

"இல்லக்கா, ரொம்ப பளப்பளன்னு இருக்கு..உள்ளவே வய்... (வேகமாக கழட்டிக்கொடுத்தாள்)"

"அதுவுஞ்சரிதான்..ஒப்பாரி வெக்கற வீட்டுக்கு எதுக்கு நெக்லஸ்.. அதான் கைல நன்னாலு வளையல் போட்டு இருக்கியே..அது போதாது..?"

"போதும் போதும்..இதுங்க கெட்ட கேட்டுக்கு..."

அத்தை மாமாவிற்கு சொந்தமாக இருக்குமோ..? இவர்களும் இங்குதான் வருகிறார்கள் என அப்போது அபிராமி அறியவில்லை. வருவோர் போவோரை பார்க்கும்போதேல்லாம்...முகத்தை சுருக்கி அழுதனர்.. சிலரை கட்டிக்கொண்டு சத்தம் போட்டு அழுதனர், அழுது அவர்கள் விலகும்முன், தன் நகைகளை அவர்கள் பார்த்து விசாரிக்கும் படி கை, கழுத்து, காதுகளில் கவனம் செல்லும் படி பேசினர். அபிராமிக்கு அவர்கள் பேசிவந்தது முன்னமே தெரிந்ததால், பேச்சிலும், அழுகையிலும் இருந்த போலித்தனம் அப்பட்டமாக தெரிந்தது.

அழுகை வராமலேயே திடீரென்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழும் அந்த பெண்களை பார்க்க பார்க்க அபிராமிக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. தன்னை மறந்து குபுக்"கென சிரித்தும் விட்டாள்.

சாவு வீட்டில் இருந்தோர் அபிராமியை ஒரு மாதிரியாக திரும்பி பார்த்தனர்......

என்றோ ஒருநாள் அபி நண்பனுடன் சண்டையிட்ட போது அவன் ரொம்பவும் கடுப்பாகி,  "யதார்த்தம் என்றால் என்னவென்றே தெரியாத உன்னுடன் எனக்கு சரிப்பட்டு வராது ....." என்றான்.  ஆமாம் அவன் சொன்னது எத்தனை உண்மை?!!  சாவு வீட்டில் யாராவது சிரிப்பார்களா?! அழத்தானே வேணும். அழுகை வராவிட்டால் என்ன? சிரிக்காமலாவது இருக்கலாமே?.  மற்றொரு நாள் இன்னொரு தோழியோ "யதார்த்தம் என்றால் என்னவென்றே அறியாதவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்" என்றாள். உடனேயே சந்தோஷப்பட்டுக்கொண்டாள், நண்பன் சொன்னதில் இருந்த வருத்தம் அபிக்கு காணாமல் போனது. 

அவளின் பெரியப்பா இறந்தபோது அக்காக்களில் ஒருத்தி சொன்னாள், "அபி,  அப்பா இறந்துடுவார்னு தெரியும், அப்பா இறந்துபோறது தான் அவருக்கு நல்லது, கோமாக்கு போயிட்டாரு...ஆனா மருந்து, ஊசி, ஆக்ஸிஜன், ட்ரிப்ஸ்'ன்னு அவரை உயிர்வாழ வச்சி என்ன பயன்?. கடைசி நேரம் இங்க வந்து பார்த்தப்ப, அப்பா இவ்ளோ கஷ்டப்படாம இறந்து போயிடலாம்னு தான் நினைச்சேன். இப்பக்கூடப்பாரு,  எனக்கு அழுகை வரல. ஆனா, என்னோட சிஸ்டர்ஸ் எல்லாரும் அழறாங்க..நான் மட்டும் அழாமல் இருந்தா அவங்களே என்னை எதாச்சும் சொல்லுவாங்க.. அதுக்காக சும்மாவாவது அழவேண்டி இருக்கு..."


இது தான் வாழ்க்கை. இது தான் சொந்தம். இந்த நடிப்பு தான் நிஜம். இந்த நிஜத்தைத்தான் நம்மைச் சுற்றியுள்ளோர் நம்மிடம் எதிர்பார்க்கின்றனர். இந்த நிஜம் தான் சொந்தங்களையும் நட்புகளையும் பிடித்து வைக்கிறது. உள்ளத்தில் என்னவிருந்தாலும் சபை மரியாதை கருதி உதட்டோரம் சிரிப்பதோ, பல்காட்டி சிரிப்பதோ தான் இயல்பு, யதார்த்தம், நடைமுறை. இதோ அழுகை வராவிட்டாலும் அழுது நடிக்கனும் அல்லது ஒரு டன் சோகத்தை முகத்தில் தேக்கி வைக்கனும். அப்போது தான் உன்னையும் சக மனுஷியாக ஏற்றுக்கொள்ளும் இந்த கூட்டம்....

அபிராமியும் நடிக்க தயாரானாள்...



*படங்கள் நன்றி கூகுள்