துணிகளை காயவைக்க, மாடிக்கு செல்லும் போது தான் கவனித்தேன், பக்கத்து ஃப்ளாட்டில் யாரோ புதிதாக குடி வந்திருந்தனர்.

எங்கள் வீட்டு கதவை மட்டும் விட்டுவிட்டு வெளியில் எல்லா இடத்திலும் பொருட்களைப் பரப்பி இருந்தனர். அந்த வீட்டிலிருந்த பெண் காதுகளில் பெரிய லோலாக்குகள் பளீச்சென தெரிந்தன, பின்னலிடாத தலைமுடி, நெற்றியில் பெரிய பொட்டு, ஏதோ பாட்டுப்பாடிக் கொண்டே அங்குமிங்குமாக வேலைகளை செய்துக்கொண்டிருந்தார்.  நான் கண்டும் காணாமல் மாடிக்கு சென்று துணிகளை காயவைத்து திரும்பும் போது, படிகளுக்கு கீழே ஒரு பெண் குழந்தை நின்று என்னைப்பார்த்து சிரித்தது. நானும் சிரித்தேன்.....

வெளியிலிருந்த பொருட்களை கவனித்தவாறு, வீட்டினுள் நுழைந்து கதவை சாத்தும் முன், அந்த குழந்தை என் எதிரில் வந்து நின்றது. உள்ளே வருமா??...சற்று நின்றேன்... அதுவும் வந்தது, வந்தவுடன் கதவை சாத்திக்கொண்டேன். அது விளையாட ஆரம்பித்தது. கதவுக்கு பக்கத்திலிருந்த ஆள் உயர பெரிய ஜன்னலில் போடப்பட்டிருந்த ஸ்கீரின் மேலும் கீழும் ஆட, குழந்தை அங்கு சென்று விளையாட ஆரம்பித்தது.

நான், எதோ வேலை செய்துக்கொண்டிருந்தாலும், என் பார்வை குழந்தையை விட்டு விலகவில்லை. நான் எதிர்பார்த்து காத்திருந்தது நடக்க ஆரம்பித்தது...கீழே உட்கார்ந்து, ஓரத்தில் ஒளிந்து என எல்லாப்பக்கங்களிலிருந்தும் ஸ்கிரீனை சுற்றி வந்து கவனித்தது. ஸ்கிரீன் காற்றில் ஆடவில்லை, ஜன்னல் கதவுகள் அத்தனையும் மூடப்பட்டிருந்தது. யாரோ உள்ளிருப்பதாக குழந்தை உணர ஆரம்பித்து..... அந்த சந்தேக கேள்வியோடு என்னைத் திரும்பி பார்த்தது..

நானும் ஆமாம் என்ற பதிலை பார்வையாக்கினேன். அதிர்ந்து பின்வாங்கி பின்னோக்கி நடந்து சுவற்றில் மோதி நின்று, ஸ்கிரீனையே வெறித்தது.

மனித உருவத்தை போன்ற ஏதோ ஒன்று அந்த ஸ்கீரினுக்கு பின்னால் இருப்பதை நான் பலமுறை பார்த்து பயந்திருக்கிறேன். ஆனால் என் கண்ணுக்கு யாரும் தெரிந்ததில்லை.. இன்று இந்த குழந்தையும் பார்த்துவிட்டது.. என் பயத்தை பகிர ஆள் கிடைத்துவிட்ட சந்தோஷம் என் முகத்தில். ஆனால், குழந்தையின் கண்களில் இன்னும் அதிர்ச்சி விலகவில்லை.....

குழந்தைக்கும் "அது" பழகிவிடும் என மனம் சொல்ல...குழந்தையின் முகத்தை கவனித்தபடியே படுக்கை அறையில் நுழைந்தேன்.

அந்த அறை ஜன்னலிலும் காற்றில்லாமல் ஸ்கிரீன் ஆடிக்கொண்டு இருந்தது......(இன்று விடியலில் வந்த கனவு,  அந்த குழந்தையும் நானும் கடைசிவரை பேசிக்கொள்ளவே இல்லை,)

அணில் குட்டி : பிசாசுக்கு யார் வீட்டில இருக்கனும்னு தெரிஞ்சி இருக்கு பாருங்க....

பீட்டர் தாத்ஸ் : Deep into that darkness peering, long I stood there, wondering, fearing, doubting, dreaming dreams no mortal ever dared to dream before.