விழுப்புரம், பிரேம்ஜி பள்ளியில் 3 ஆம் வகுப்பு, மதியம் வீட்டுக்கு சாப்பிட வரும் போது, தலைவலிக்குதுன்னு அழுவேன். வெயிலில் வருவதால் இருக்கலாம் என நினைத்து, படுக்க வச்சிடுவாங்க. மதியம் பள்ளிக்கு போகாமல் மட்டம், இப்படி பல நாட்கள் மட்டம் போட்டு இருக்கேன்.  இது 5 ஆம் வகுப்பு வரை தொடர்ந்தது. ஆனால் மட்டம் போடுவது குறைந்திருந்தது, தலைவலி குறையவில்லை. 5 ஆம் வகுப்பு, மகாத்மாகாந்தி உயர்நிலை பள்ளி, அங்கிருந்து தான் போர்டில் எழுதும் எழுத்துக்கள் தெரியவில்லை என சொல்ல ஆரம்பித்தேன்.

ஒரு நல்ல நாளில், ஆயா,  பாண்டிச்சேரியில் உள்ள ஆருதர் கண் மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போனாங்க. பாவம் வயசானவங்க, என்னை இழுத்துக்கொண்டு வந்திருக்க, எனக்கு அத்தனை பொறுப்பில்லை. கண்ணில் மருந்துவிட்டு, "கண்ணைத் திறக்கக்கூடாது பாப்பா " ன்னு நர்ஸ் சொல்லிட்டு போக, 18 தரம் திறந்து என்னத்தான் ஆகுதுன்னு பார்ப்பேன். அதனால், சரியாக பரிசோதனை செய்ய முடியலன்னு, திரும்ப திரும்ப மருந்து ஊற்றி உக்கார வைப்பார்கள், ஆயா தான் பாவம், எனக்காக  காத்திருக்கனும். அப்பவும் அடங்க மாட்டேன், ஆயாவிற்கு தெரியாமல் ரகசியமாக கண்ணைத் திறந்து பார்ப்பேன். எப்படியோ, மருத்துவரும் கண்ணை ஒரு வழியாக பரிசோதனை செய்து  "ப்ளஸ்" பவர் இருப்பதாக சொல்லி, கண்ணாடிக்கு எழுதிக்கொடுத்துவிட்டார்.

ஆயாவிற்கு பிடித்த ???!!!  கோழிமுட்டை ஃப்ரேமில் எனக்கு கண்ணாடி வாங்கப்பட்டது. குடும்பத்தில், இத்தனூண்டு வயதில் கண்ணாடிப்போட்ட ஒரே குழந்தை நானாக இருந்ததால், அதிகமாக துக்கம் விசாரிக்கப்பட்டேன். "என் பொண்ணு இந்த வயசிலேயே கண்ணாடி போட்டுட்டாளே" ன்னு அப்பா கண் கலங்கி கவலைப்பட்டார்.  அதனால் கேரட் சமைக்கும் போதெல்லாம், அதை சாப்பிட சொல்லி தலையில் "நறுக் நறுக்" கென கொட்ட ஆரம்பித்திருந்தார். கேரட் பிடிக்காத பிடிவாதத்தில், அதை சாப்பிடாமல் கொட்டு வாங்கி அழுவதும், நாம அடிவாங்கி அழுவதை பார்ப்பதில் அண்ணன்களின் பொழுது களிப்போடும் கழிந்தது. 

கண்ணாடியோடு பள்ளிக்கு போக ஆரம்பித்தது, 6 ஆம் வகுப்பு, மகளிர் மேல்நிலை பள்ளி, மகளிர் மட்டுமே என்றாலும் இங்கு தான் பிரச்சனை ஆரம்பித்தது. அடையாளத்திற்கு கண்ணாடி போட்டிருக்கும் மாணவி என்று குறிப்பிட்டது போக, "கண்ணாடி, புட்டி" என்றே அக்காக்கள் அழைக்க, என்னுடன் படிப்பவர்களும் அதையே தொடர, எனக்கு ரொம்ப அவமானமாக இருந்தது. கண் நொள்ளையாக இருப்பதில் இல்லாத அவமானம், கண்ணாடி போடுவதில் இருந்தது. அவமானம் தாங்க முடியாமல், வீட்டில் இருந்து கிளம்பும் போது கண்ணாடி என் மூக்கின் மேலும், பள்ளிக்கு வரும் போது , அது அதன் பெட்டியிலும் தூங்கியது. 


இப்படியாக வருடங்கள் ஓட, ஒன்பதாம் வகுப்பு வரும் போது, கண் பரிசோதனைக்கு திரும்பவும் பாண்டி சென்றோம்.  ப்ளஸ் ' ஆக இருந்த பவர் இப்போது "மைனஸ் " ஆக மாறியிருந்தது. என்னடா இது சோதனை என்று நினைத்து போது மருத்தவர் சொன்னார், "இனிமே எப்பவும் கண்ணாடிய கழட்டக்கூடாது, கழட்டினா, பவர் அதிகமாகி, கண்ணு தெரியாமையே போயிடும்". ரைட்டு.. நல்லது... என்னைக்கு நாம நல்லதை கேட்டு இருக்கோம். கண்ணாடி அணிந்தே ஆகவேண்டும் என்றாலும் படிக்கும் போது, டிவி, சினிமா பார்க்கும் போது  மட்டும் அணிந்தேன். மற்ற நேரங்களில் அதன் பெட்டியில் இருக்கும். மனதின் ஒரு ஓரத்தில், நாம் கண்ணாடி அணிந்திருக்கும் பெண் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்தது. 

அந்த காலக்கட்டத்தில் தான் , நம் மனசை குளு குளுவாக்க, இயக்குனர் பாக்கியராஜின் படங்கள் வந்தன. பல படங்களில் இவரின் கதாநாயகிகள் கண்ணாடி அணிந்து வந்தனர். "கதாநாயகிகளே கண்ணாடி அணியும் போது நமக்கென்ன" என்ற எண்ணம் என்னுள் தோன்றியது என்னமோ, சாமி சத்தியமாக உண்மையோ உண்மை. மனசுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்து, உதடுகள் "நாதிர்தின்னா திரனனா "வை உச்சரித்தன. தோழிகள் என்னை ஷோபனா மாதிரி இருக்கேன்னு சொல்லியிருக்க,  (அட, இருங்க ...... நான் நம்பவே இல்லைங்க..  இந்த மாதிரி பல நாயகிகளை நண்பிகளும் நண்பர்களும் உவமைப்படுத்தி இருக்கின்றனர். அது பெரிய லிஸ்ட், அதையெல்லாம் வெளியில் சொன்னால் நாடு தாங்காதுன்னு சொல்லிக்கறதில்லை..அதனால் நீங்களும் ஒன்னும் பெருசா எடுத்துக்கிட்டு வாயப்பிளக்காமல்..படிக்கறதை தொடருங்க..) ஒரு படத்தில் ஷோபனாவே கண்ணாடி அணிந்து வர..ஆஹாஹகாகா... ஒரே உற்சாகம் தான் போங்க.. அடுத்து, குஷ்பூவை சாமியாக சிலைவைத்து கும்பிட்ட இந்த தமிழ்நாட்டில், அந்த சாமிக்கே கண்ணாடிய மாட்டிவிட்டாரு பாக்கியராஜ். ஏதோ அவர் புண்ணியத்தில், கண்ணாடி அணிபவர்களும் கதாநாயகிகள் தான் என உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி. போகப்போக, அறிவு?? கொஞ்சம் வளர ஆரம்பித்ததால், கண்ணாடி ஒரு பிரச்சனையாக இல்லை. ஆனாலும் படிக்கும் போது மட்டுமே அணிந்தேன் என்பது குறிப்பிட வேண்டியது. 

இதற்கு நடுவில், பொண்ணுக்கு கண்ணு நொள்ளைங்கறதை சொல்லாமல், கல்யாணமும் பேசி முடிச்சிட்டாங்க. கல்யாணம் முடிஞ்சி,  மாமியார் வீட்டில் இருக்கும் போது, ஒரு நாள் நியூஸ் பேப்பர் படிக்க, எப்பவும் போல, பெட்டியிலிருந்து கண்ணாடியை எடுத்து அணிந்து படிக்க, எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தால்...... மொத்த குடும்பமும், ஒருவித அதிர்ச்சியோடு என்னையே கவனிப்பது தெரிந்தது. அதில் அட்டண்டன்ஸ் இல்லாமலேயே ஒரு கிழவி ஆஜாராகி, "பொண்ணுக்கு கண்ணுத்தெரியாது போலருக்கு...கல்யாணத்தில கண்ணாடி போடலியேஏஏஏ...." ன்னு இழுக்க... கண்ணாடிப்போட்டாவே கண் தெரியாதுன்னு நினைக்கிற வீட்டில் என்னை கல்யாணம் செய்து கொடுத்த நல்லவர்களை மனசாஆஆர....... .வாழ்த்திட்டு..லேசாக புன்னகை (வழிச்சல்னும் சொல்லலாம்) செய்தபடி கண்ணாடியை கழட்டி, "ஹி ஹி....ச்ச்ச்சும்மா... பவரில்ல.... .தலைவலிக்குன்னு போட்டது" ன்னு சொல்லி டகால்னு மின்னல் வேகத்தில் கண்ணாடியை பெட்டிக்குள் வைத்துவிட்டு, திரும்பவும் பேப்பரை கண்ணாடி இல்லாமல் சத்தம் போட்டு அவங்க எல்லாருக்கும் கேட்கும் படி படிச்சி, நொள்ள கண்ணு இல்ல, அவங்க புள்ள வாழ்க்கை வீணாப்போகலைன்னு நிரூபிக்க வேண்டியதாக போச்சி.  

நல்ல வேள, நொள்ளக்கண்ணா இருந்தாலும் கண்ணாடி இல்லாமல் படிக்க முடியற நொள்ளக்கண்ணாக இருந்ததில், மாமியார் வீட்டு  மக்களை ஏமாற்ற முடிந்தது.  இருப்பினும் கூடவே இருப்பவருக்கு நம்ம நிலைமை தெரியாமையா போகும்.?! தெரியட்டுமே, என்ன இப்ப? தாலிக்கட்டியாச்சி, இனிமே தெரிஞ்சா என்ன தெரியாட்டி என்ன?! 

ஒரு வேள ஒழுங்காக தொடர்ந்து இந்த கண்ணாடியை அணிந்திருந்தால், பவர் குறைந்து கண்கள் பளிச்சின்னு ஆகி, இரவிலும் எருமைமாடு நல்லாத் தெரிஞ்சி இருக்கும்னு நினைக்கறீங்களா..?! அப்படியெல்லாம் ஆக வாய்ப்பே இல்லைன்னு,  தொடர்ந்து கண்ணாடி அணிபவர்களின் கண்களின் வரலாறு கத்தி கதறி சொல்லுது. என்னா ஒன்னு, பவர் அதிகமாகாமல் இருந்திருக்கும். எனக்கு அதிகபட்சமாக -2 வரை வந்தது. அப்புறம், அதுக்கே பொறுக்காமல் யூ டர்ன் அடிச்சி,  -1 க்கே வந்து நின்னுடுச்சி. அதிலும் ஒரு கண்ணு தான் இந்த பவர், இன்னொரு கண் இதையும் விட கம்மி. எப்ப கண் டெஸ்ட்க்கு போனாலும், நய் நய்'ன்னு டாக்டரை கேட்கும் ஒரே கேள்வி "ஏன் ஒரு கண் பவர் மட்டும் அதிகமா இருக்கு" ன்னு தான். எப்பவும் போல அவங்களும் பதிலை மாற்றாமல் "ஒரு கண்ணுக்கு ரொம்ப ஸ்ட்ரைன் கொடுக்கறீங்க" ன்னு  சொல்லுவாங்க. இப்படி கேள்வி கேட்டு பதில் பெறுவதிலும், எனக்கு எந்த பிரயோசனமும் இல்லை.. ஏன்னா..ஸ்ட்ரைன் பண்ற அந்த கண்ணு.. அதே நிலையில் தான் எப்பவும் இருக்கு... 

இப்படியாக என் கண்ணாடி கதை இருக்க, இப்ப நிறைய குழந்தைகள் கண்ணாடியோடு இருக்காங்க. அது ஒரு ஃபேஷனாகவே ஆகிடுத்து. ஜிம்மில் சில பெண்கள் கண்ணாடியோடு உடற்பயிற்சி செய்வாங்க. ஏன் மும்பாயில் நீச்சல் குளத்தில் ஒரு அம்மா, கண்ணாடியோடு நீச்சல் அடிச்சாங்க. கஷ்டமாயில்லையான்னு கேட்டேன், பழகிப்போச்சி, கண்ணாடி இல்லைன்னா கண்ணுத்தெரியாதேன்னு பதில் சொன்னாங்க. ஆக, இப்பவெல்லாம் கண்ணாடி போடுவதற்காக யாரும் அசிங்கப்படுவதே இல்லை. நான் தான் ரொம்ப அசிங்கப்பட்டேனோன்னு தீடீர்னு இப்ப ஃபீல் ஆனாதில் எழுதிய பதிவு தான் இது. இப்பவும், என் கண்ணாடி தேவையானபோது மூக்கிலும், இல்லைன்னா டப்பா'விலும் தான் காலத்தை ஓட்டுது. 

அணில் குட்டி
: ம்ம்ம்... என்னா டீசண்ட்டா எழுத கத்துக்கிட்டாங்க அம்மணி.. ?!  அம்மணிக்கு எப்பவுமே கண்ணு செம நொள்ளை, ஒரு நாள் ராத்திரி, புள்ளையோட வண்டியில் வேளச்சேரி பை பாஸ் ரோடில் வந்துக்கிட்டு இருக்கும் போது, பசு மாடுங்க... அதுவும் வெள்ளைக்கலர், இவங்க நொள்ள கண்ணுக்கு அது எதிர்ல வரது தெரியாம... நேரா  அதுமேல மோதப்போயி, அது தப்பிச்சா போதும்னு வெகுண்டு குதிச்சி ஓட ஆரம்பிக்க, இவங்க சடன் பிரேக்கை போட்டு நிறுத்தி, மாட்டையும், பின்னால் உக்காந்திருந்த புள்ளையையும் காப்பாத்திட்டாங்க. ஆனா, புள்ளைக்கு தான் அகிலமே ஆடிப்போச்சி..... "யம்மாஆ இனிமே ராத்திரியில் உன் கூட வண்டியில் வரவே மாட்டேன்... உனக்கு கண்ணு இவ்வ்வ்வ்வ்வ்ளோ நொள்ளன்னு எனக்குத் தெரியாமப்போச்சி, இவ்ளாம் பெரிய மாடு இருக்கறது கூடத் தெரியாம மோதப்போறியே...உன்னை நம்பி எப்படி வரது? இனிமே நீ ராத்திரியில் வண்டியே ஓட்டக்கூடாதுன்னு " சொல்லி.. ஸ்ட்ராங் ரூலை இம்ப்ளிமென்ட் செய்துட்டார்னா.. .அம்மணியோட கண்ணு எம்புட்டு நொள்ளைன்னு புரியும்!  இதுல இந்த நொள்ளைக்கண்ணை தானம் வேற பண்ணனுமாம்.. .ம்க்கும்... அதான் உங்க இடது கைப்பக்கம் மேல பாருங்க.. கண் தானம் விளம்பரத்தை......  

பீட்டர் தாத்ஸ்:  One Eye Donation can make two blind people see. Let’s make Eye Donation a family tradition.  Let your eyes change someone’s life… Let’s donate eyes…

தகவலுக்கு : இந்தியாவில் சுமார் 46 லட்சம் பார்வையற்றோர், கண்மாற்று அறுவை சிகிச்சை மூலம் குணமடையக்கூடியவர்கள்... அதில் பெரும்பாலானோர் 12 வயதுக்குட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.  எந்த வயதுக்காரர்களும் கண் தானம் செய்யலாம். தானத்தில் சிறந்தது கண் தானம்.

தகவல் & படங்கள் : நன்றி கூகுல்.