அப்பா, தாத்தா இருவருக்கும் சாப்பாடு கேரியர் உண்டு. அப்பாவை விட தாத்தாவின் சாப்பாடு கேரியர் பெரியதாக இருக்கும், ஒரு கிண்ணம் அதிகம். அப்பாவின் கேரியரில் நான்கு அடுக்கு தான். கீழ் அடுக்கில் சாதம், தொட்டுக்கொள்ளும் காய் அதிலேயே வைத்துவிடுவார்கள்,  அடுத்தடுத்த அடுக்குகளில் சாம்பார், ரசம், தயிர் இருக்கும். ஒரு நுனி வாழையிலை சுருட்டி கேரியரின் பிடியில் கிழியாமல் மடங்காமல் செருகிவைத்து தயாராக இருக்கும்.

மதியம் சாப்பாடு நேரம், ஷெட்டிலிருந்து ஆள் வந்து எடுத்துச்செல்வார்கள், ஆள் வராத நாட்களில் வீட்டிலிருந்து யாரேனும் ஷெட்டிற்கு சாப்பாட்டை எடுத்துச் செல்வார்கள். அநேகமாக ஷெட்டிலிருந்து எப்படியும் ஆள் வந்துவிடுவார். ஒரு வேளை,  வெளியூர் வேலையாக சென்றாலும், அந்த ஊருக்கு செல்லும் ரயில், விழுப்புரம் வரும் நேரம் பார்த்து, சாப்பாடு ஸ்டேஷனுக்கு சென்றுவிடும். ட்ரைவரிடம் கொடுத்துவிட்டால், அப்பாவிடம் சேர்த்துவிடுவாங்க. இது அப்பாவை விட தாத்தாவிற்கு தான் அதிகம் நடந்திருக்கிறது. அதற்காகவே சில நேரங்களில் காலை 10 மணிக்குள்ளாக சாப்பாடு தயாராக இருக்கும்.

இருவருமே, முன்கூட்டியே எந்த வண்டி, யாரிடம் சாப்பாடு கொடுக்கனும்னு சொல்லிட்டு போயிருப்பாங்க. அப்போதெல்லாம், ரயில்களுக்கு பெயரில்லை. நம்பர் மட்டுமே. வீட்டில் எல்லோருக்குமே தாத்தாவும் அப்பாவும் செல்லும் ரயில்களின் எண்கள் தெரிந்திருக்கும். நான் குழந்தையாக இருக்கும் போதே தாத்தா ரிடையர் ஆகி இருந்தார். ஆனால் அவர் வேலை செய்த புராணம் எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும். ரிடையர் ஆகும் போது  "ஏ" கிரேட் டிரைவராக ரிடையர் ஆனார், பெயர் பலகை, கடிதங்கள் போன்றவற்றில் அவரின் பெயர்க்கு கீழே "ஏ'கிரேட் டிரைவர் என்று எழுதி இருக்கும். அந்த காலத்தில் "ஏ'கிரேட் டிரைவர் என்றால் மிகப்பெரிய வேலை, மத்திய அரசின் வேலை வேறு, 8 ஆம் வகுப்பு வரை படித்திருந்த தாத்தாவிற்கு இந்த வேலைப் பெரிய வேலைதானே. 8 ஆம் வகுப்பே என்றாலும் அவரைப்போல தமிழும், ஆங்கிலும் எங்களுக்கு படிக்கும் காலத்தில் இல்லை.

எனக்கு நினைவு தெரிந்து பெயர் வைத்து வந்த புத்தம் புதிய அதிவேக ரயில் வைகை. அப்பா அப்போது திருச்சியில் வேலையில் இருந்தார். வண்டி இயக்க ஆரம்பித்த சில நாட்களுக்குள் என்னையும், சின்ன அண்ணாவையும், ட்ரைவர் இருக்கும் பெட்டியில் (திருச்சி-விழுப்புரம்) அழைத்துவந்தார். இயக்குவதையும் சொல்லிக்கொடுத்தார், சின்ன அண்ணனுக்கு நினைவிருக்குமா தெரியல, எனக்கில்லை. வைகை ரயில் வருவதற்கு முன், திருச்சி-விழுப்புரம் ராக்ஃபோர்ட் எக்ஸ்ப்ரஸ்ஸில் வருவோம். அப்பாவிற்கு முதல் வகுப்பு பாஸ் இருந்ததால், எப்போதும் ரயிலுக்கு டிக்கெட் எடுத்ததில்லை.  ரயில்வேயில் வேலை செய்யபவர்களுக்கு இது மிகப்பெரிய வசதிதான். திருமணம் ஆனவுடன் ரயிலில் செல்ல டிக்கெட் எடுக்க செல்வது என்னவோ புதுப்பழக்கமாக, தேவையில்லாத வேலையாக தெரிந்தது..  :)

நிற்க, தாத்தாவை தொடர்ந்து அப்பாவும் ரயில்வேயில் வேலை, இருவருக்கேமே நேரங்காலம் இல்லாத வேலை நேரங்கள். என்ன.. தாத்தா ட்ரைவர் வேலைப்பார்த்ததால், முழுநேரமும் நின்றுக்கொண்டே இருக்கவேண்டும். அது புகைவண்டி, ஒரு பக்கம் நெருப்பு எரிஞ்சிக்கிட்டே இருக்கும், வேலைநேரம் முழுக்க அந்த அனலிலேயே நிற்கனும். அதனாலேயே தாத்தாவிற்கு முட்டி வலி நிரந்தர வலியாகிவிட்டதாக சொல்லிக்கொண்டு இருப்பார். அப்பாவிற்கு அப்படியில்லை, ஃபோர்மென், ஷெட்டில் வேலை இருக்கும். தனி அறை, மெதுமெது நாற்காலி, மின்விசிறி,  2-3 தொலைப்பேசி வசதிகள் என கொஞ்சம் வசதியான வேலைதான். இருந்தாலும், இஞ்சின் பழுது, பிரச்சனைகள் வந்தால், உட்கார நேரமில்லாமல் அப்பாவிற்கு முழுநாளும் வேலை இருக்கும். 


இதில் இருவருக்கும், இந்த சாப்பாடு கேரியர்கள் தான் எப்போதும் உதவின. சமீபத்தில் சொந்தக்காரர் ஒருவர் சென்னையில் மருத்துவமனையில் சேர்ந்தபோது, இந்த கேரியரை கொடுத்து அனுப்பினேன். இப்போது எந்த வேலையில் இருந்தாலும், யாரும் இப்படி பெரிய கேரியரில் சாப்பாடு கொண்டுசெல்வதில்லை.  ஏன் என் சாப்பாடு டப்பாவை பார்த்தால், நல்லா சாப்பிடறவங்க தள்ளிப்போய் உட்கார்ந்துக்குவாங்க. அவ்ளோ பெரிசா இருக்கும். அப்பாவிற்கும் தாத்தாவிற்கும் இலையோடு அலுவலகத்திற்கு சாப்பாடு சென்றது இப்போது நினைத்தாலும் அதிசயமான, மிகப்பெரிய வேலையாக தெரிகிறது. 'பரிட்சைக்கு நேரமாச்சி'ன்னு ஒரு சினிமா பார்த்தேன். அதிலும் சிவாஜிசாருக்கு, ஒய்.ஜி.மகேந்திரா இப்படி ஒரு பெரிய கேரியரில் இலையோடு அலுவலகத்திற்கு சாப்பாடு கொண்டு வருவார்.

ஆக, அந்த காலத்தில், வீட்டுப்பெண்களுக்கு வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு, மதிய நேரத்தில் சாப்பாடு கேரியரில் சாப்பாடு அனுப்பி வைப்பது ஒரு வேலையாகவே இருந்தது. இப்போது அதே வேலை காலையோடு முடிந்துவிடுகிறது. அதுவும் அவரவர் கையிலேயே எடுத்துச்சென்று விடுகின்றனர். இப்படியான பெரிய சாப்பாடுக்கேரியர் இப்போது இல்லவும் இல்லை.

அப்பாவின் கேரியர் எப்படி என்னிடம் ?. அப்பாவின் பொருட்கள் மட்டுமல்ல, அம்மா, ஆயா பயன்படுத்திய பொருட்கள் சிலவற்றை, எனக்கு திருமண சீதனங்களோடு சேர்த்து கொடுத்து அனுப்பியிருக்கிறார் ஆயா. இத்தனைக்கும் வீட்டில் ஆண் வாரிசுகள் என் அண்ணன்கள், சித்தப்பா, சித்தப்பா பிள்ளைகள் என நிறையபேர் இருக்க, பெண் வாரிசான எனக்கு இவைக்கிடைத்திருப்பது அதிர்ஷ்டமே. ஆயா மட்டுமல்ல, இப்போது என் கணவரும், எதையும் பத்திரமாக வைத்துக்கொள்வேன் என்பதால், எது வாங்கிவந்தாலும், நவீனுக்கு கொடுப்பதைக்காட்டிலும் எனக்கே முன்னுரிமை கொடுத்து, என்னிடம் கொடுத்துவிடுவார்.  

அணில் குட்டி : ம்க்கும்.. பார்ரா  பெருமைய.... அவரே கொடுக்காட்டியும் இந்த அம்மணி, பெத்தப்புள்ளயாச்சேன்னு கூட விட்டுக்கொடுக்காம,  எப்படியாச்சும் அழுது அடம் பிடிச்சாச்சும் ஆட்டையப்போட்ருவாங்கில்ல....

பீட்டர் தாத்ஸ் : “Our Ancestors things are a treasure. More precious than Gold, it is priceless and never grows old”