அப்பா என்றால் கம்பீரம். அவரின் தோற்றம், நடை, பேச்சு, உடல் மொழி எல்லாவற்றிலும் ஒரு கம்பீரம் இருக்கும். அப்பாவின் உயரமே (6 அடிக்கு சற்றே குறைவு) அந்த கம்பீரத்திற்கு முதல் காரணம்.

அப்பாவைப்பற்றி சொல்ல ஏராளம் இருந்தாலும், அப்பாவிடமிருந்து நான் பெற்றவற்றை விட, பெறாமல் விட்டுப்போனதைப்பற்றி எழுதி வைக்க விரும்பிகிறேன். அதில் முக்கியமானது பொறுமை.  அடுத்து தேவையில்லாமல் பேசவே மாட்டார். ஏன் தேவைக்குமே அப்பாவின் புன்னகையும், மெளனமுமே பல சமயங்களில் பதில்களாக இருக்கும்.  அதிகமாக பேசுவதாக வீட்டில் யாரும் திட்டும் போதுக்கூட, பெரியவன்/ர் அமைதிக்கு இப்படி ஒரு வாயாடி பொண்ணா? என சொல்லியே என்னை திட்டுவார்கள்.

என் படிப்புப்பற்றிய கனவு அப்பாவிடம் நிறையவே இருந்தது. ஆண் குழந்தைகளுக்காக அப்படி ஒன்றும் அவர் திட்டம் வைத்திருக்கவில்லை. எப்போதும் புத்தகமும் கையுமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.  என்னை டாக்டர் ஆக்கவேண்டும் என்பதே அப்பாவின் கனவு. மெடிக்கல் இன்ஸ்ட்ருமென்ட் பாக்ஸ் ஒன்றை, நான் 7 ஆம் வகுப்பு படிக்கும் போது வாங்கி, மர அலமாரியில் வைத்திருந்தார். அடிக்கடி அவரே அதை எடுத்து பிரித்துப்பார்த்து கொள்வார். என்னிடம் நீ டாக்டர் ஆகவேண்டும் என சொன்னதுமில்லை, கட்டாயப்படுத்தியதுமில்லை. சின்ன அண்ணன் அந்தப்பெட்டியை ப்பற்றி கேட்கையில், "பாப்பாக்கு வாங்கி வச்சி இருக்கேன். நல்லா படிக்குது, நிச்சயம் டாக்டருக்கு படிக்கும், அப்ப தேவைப்படும்" என்று சொன்னார்.

ஆனால் நமக்கு அறிவியலில் வேதியியல் மட்டும் எட்டிக்காயாக இருந்தது அப்பாவிற்கு தெரியாது.  (+1 படிக்கும் போது அப்பா இல்லை), அவருக்கு தெரிய வாய்ப்பே இல்லாமல் போனது. :(. வேதியியலை மனப்பாடம் செய்து எழுதும் நிலையில் தான் என் அறிவு இருந்தது.

என்னை டாக்டராக்க ஆசைபட்டு இருந்தாலும், நடுநடுவில், ஏர் ஹோஸ்டர்ஸ்'க்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வமும் அப்பாவிடம் இருந்தது. இதை நேரடியாக என்னிடம் சொல்லி இருக்கிறார். அப்போதைய காலக்கட்டத்தில் நல்ல உயரம், கலர் இருக்கும் பெண்கள் தான் தேர்வு செய்யப்படுவார்கள். நான் அதிக உயரம் வளரமாட்டேன் என அப்பா கணித்தும் இருந்தார். அதைச்சொல்லியே, நீ ஆவது கஷ்டம் என்றும் அவரே கவலைப்பட்டு க்கொள்வார்.

என் திருமணம் குறித்த பேச்சு வரும் போது, தென்பெண்ணை ஆற்றில் தான் பாப்பாவின் திருமணம் என்று சொல்லியிருந்தார். அப்பா அதற்கு சொன்னக்காரணங்கள், மிக யதார்த்தமானவை, அவரின் குணத்தின் பிரதிபலிப்பாகவே அவை வந்திருந்தன. ஆற்றில் எவ்வளவு கூட்டம் வந்தாலும், நெருக்கிக்கொண்டு இல்லாமல் தாராளமாக புழங்க முடியும். வருபவர்கள் திருமணம் முடிந்து உடனே கிளம்பிவிடாமல், ஆற்றில் குளித்து,விளையாடி , நாம் அங்கேயே சமைத்து தரும் உணவை சுடச்சுட சாப்பிட்டு சுற்றுலா சென்று வருவதைப்போல இருக்கலாம். திருமணம் என்ற சடங்கு இப்படித்தான் செய்யவேண்டும் என்பதை மீறி, சுதந்திரமாக, நம் செளகரியத்திற்கு, சந்தோஷத்திற்கு ஏற்றவாறு செய்ய வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருந்தது. சாப்பாடு வெரைட்டி ரைஸ் ஆக நிறைய செய்து வைத்துவிடவேண்டும் என்றும் சொல்லி இருந்தார். ப்ஃவே டைப். எல்லாமே அவரின் கனவுகளாக மட்டுமே நின்றுவிட்டன !

அப்பா வீட்டின் முதல் பிள்ளை, அந்த மரியாதையும் மதிப்பும் அவர் இறக்கும் வரை அவர் நடந்துக்கொண்ட முறையில் அவருக்கு கிடைத்தது.  அப்பாவிற்கென தனி நாற்காலி, அதில் வேறு யாரும் அமரமாட்டோம். பெயரே அப்பா சேர். அதேப்போல, அப்பா தட்டு, அப்பா பீரோ, அப்பா ரூம், அப்பா தலையணை, அப்பா போர்வை, அப்பா டிபன் பாக்ஸ், அப்பா சவரடப்பா என தனித்தனியாக இருந்தது. மற்றவர் யாரும் அதை பயன்படுத்தியதில்லை.
 
அப்பாவிற்கு எல்லா இசைக்கருவிகளையும் வாசிக்க தெரிந்திருந்தது.  ஹார்மோனியம் , எலக்ட்ரிக் கிட்டார் + ஆம்லிஃபையர் , மோர்சிங் போன்றவை வைக்க தனி அறையும் அதில் அப்பா மட்டுமே சென்று வரலாம் என்பதும் சொல்லப்படாத ரூல்ஸ். நாங்கள் சென்றால் எதையாவது நோண்டி, வாசிக்கும் போது சுருதி தப்புவது அப்பாவிற்கு கோவத்தை உண்டாக்கும். அதனால் எங்களுக்கு அந்த இடம் தடைசெய்யப்பட்டு இருந்தது. அப்பா இருக்கும் போது சென்று எதைத்தொட்டு என்ன செய்தாலும் ஒன்றும் சொல்லாமல் இருப்பார் என்பது வேறு விசயம். ஒரு காலி வயலின் பெட்டியும் வீட்டில் இருந்தது.   மிருந்தங்கம், தபேலா, வயலின், வீணை போன்றவை அவர் வாசித்து நான் பார்த்தவை. ஆனால் வீட்டில் இல்லை. மோர்சிங் மட்டும் அவரைத்தவிர வேறு யாருக்கும் வீட்டில் வாசிக்க அனுமதி இல்லை.

அற்புதமான குரல்வளம் கொண்டவர்,  கர்நாடக மற்றும் சினிமா பாடல்கள் இரண்டுமே பாடுவார். லதாஜி' யின் குரல் அப்பாவிற்கு மிகவும் பிடித்தக்குரல். அப்பாவின் ஃபேவரேட் &அடிக்கடி பாடும் பாடல்கள்,

1.கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
2. உள்ளம் உருகுதய்யா
3. விநாயகனே விணைத்தீர்ப்பவனே
4. அய்யப்பன் பாடல்கள் அணைத்தும் .
5. "நானொரு முட்டாளுங்க"  - திரு.சந்தரபாபு பாடல்
6. காற்றினிலே வரும் கீதம் -  எம்.எஸ் அம்மாவின் பாடல்

தாத்தாவின் குரலை ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஆனால் அப்பாவின் குரலை செய்யவில்லை..... ........ அப்பா அத்தனை சீக்கிரம் இறந்துவிடுவார் என்று நினைக்கவில்லை. :((.


குறிப்பிட்டு சொல்லவேண்டியது, தம்பி, தங்கைகள் (ஒரிஜினல், ஒன்று, இரண்டுவிட்ட உறவுகள் என சில டசன் இருக்கும்), அவரின் மூன்று பிள்ளைகள் என அத்தனைப்பேரில், பெண் குழந்தையான என்னைமட்டுமே அவரின் வாழ்நாளில் 4-5 முறை அடித்திருக்கிறார். அதுவும் இரண்டு முறை சக்கையாக பிழிந்து, தூக்கிப்போட்டு மிதித்திருக்கிறார் என்பது என்னையும் சேர்த்து நாங்களே எங்களை கிள்ளிக்கொண்டு, இது உண்மைதானா? அப்பாவா அடித்தது? என கேட்டுக்கொள்ளும் நிகழ்வு. ஆம், அப்பாவின் பொறுமைக்கே சவால் விடக்கூடிய குழந்தையாக இருந்திருக்கிறேன்.   [அடிச்சி என்ன பிரயோசனும், நல்லப்புள்ளையாக பெத்து இருக்கனும். :) ]

மேல் சொன்ன எல்லாவற்றிற்கும் மேல் அப்பா, அப்பா மட்டும் இல்லை. தாயுமானவர். !! இன்றைய தினத்தில் அப்பாவைப்பற்றி எழுதி வைப்பதில் மனதிற்கு ஒரு நிறைவு.

இனிய தந்தையர் தின வாழ்த்துகள் !