அன்னா ஹசாரே வந்து தான் நமக்கு ஊழலை எதிர்க்க சொல்லித்தரனும். அதற்கு பிறகு நாமெல்லாம் அவர் வழியில் கொடித்தூக்கி , ஆர்பாட்டம் செய்து ஊழலை எதிர்க்க வேண்டும்.  அது வரைக்கும் "ஊழல்" அப்படீன்னா நமக்கு என்னான்னே தெரியாது. பார்த்ததே இல்லை செய்ததே இல்லை. நாமெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்க. !

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது பல பஸ்கர்கள், அன்னா ஹசாரேக்கு சப்போர்ட் செய்து பஸ் விட்டது மட்டுமல்ல,

"ஒரு வேளை சாப்பாட்டை நான் தியாகம் செய்துவிட்டேன் நீங்கள் செய்யவில்லையா? " # அட அட அட.... ?! :))))))))))))))

# ஊரு பக்கமெல்லாம் செவ்வாய், வெள்ளி, சனி மூன்று நாளும் நம் வீட்டு பெண்கள் விரதம் இருப்பாங்க.. . இவரு ஒரு வேள பட்டினியாம், ஊழல் நின்னுப்போச்சாம். ரோடுல நடக்கும் போது ஃபிகருங்களை மட்டும் பார்க்காமல் அங்கிட்டும் இங்கிட்டும் கொஞ்சம் பாருங்க.. உங்களை போன்ற சகமனிதன், பல நாட்கள் பட்டினியில் கிடப்பது தெரியும். இவரு இருக்காராம்மா ஒரு நாள் பட்டினி..... 

"இனி நான் ஊழலுக்கு உடந்தையாக இருக்கமாட்டேன்" # அட அட அட அட  !! :))))))))))))

# அப்ப இதுவரைக்கும் இருந்தீங்களா?

இது மாதிரி இன்னும் எத்தனை எத்தனையோ...... சிலிர்த்து போச்சி சிலிர்த்து................. என் மயிற்கால்கள் !

அப்ப நமக்கு சொந்தமாக எப்பவுமே மூளை வேலைசெய்தது இல்லை. தலைவர் னு ஒருத்தர் எல்லாத்துக்கும் வேணும். இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன், ஒரு வேளை சாப்பிடாமல் இருந்து,ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவிட்டால், ஊழல் போயிடுமாய்யா? தனிமனிதனாக என்ன செய்யறோம்? எப்படி அன்றாட வாழ்க்கையில் இருக்கிறோம்னு வாய் கிழிய பேசுபவர்களும் எழுதுபவர்களும் இருக்கிறார்களா?  ம்ம்..மூக்கை விட்டு தான் அவர்களின் சொந்த வாழ்க்கைக்குள் சென்று பார்க்க வேண்டும் !

எனக்கு நினைவு தெரிந்து, எதற்குமே லஞ்சம் கொடுத்து என் வேலையை நான் செய்ததில்லை என்று சொன்னால் யாரும் இதை நம்புவீர்களா என்று எனக்கு தெரியவில்லை.  இதை நான் நினைவு தெரிந்து செய்ய ஆரம்பித்தது என்னுடைய 13.5 வயதில். சின்ன அண்ணனுக்கு பள்ளியில் டிசி வாங்க சென்ற போது, இரண்டு மூன்று நாட்கள் அலைய வைக்க, ஆயா, என்னை உடன் செல்லுமாறு அனுப்பினார்கள். பள்ளி அலுவலக ப்யூன் , என்னிடம் பணம் கேட்க, அங்கேயே சத்தம் போட்டு கூட்டத்தை கூட்ட, அலுவலகத்தில் அத்தனை ஆசிரியர்களும் ஆஜர். அண்ணன் பயந்து போயி அலுவலகத்தை விட்டு வெளியேற, நான் கேட்பவர்கள் அத்தனைப்பேருக்கும், அண்ணன் எத்தனை முறை பள்ளிக்கு வந்தார், ஒரு டிசி க்கொடுக்க ஏன் இத்தனை தாமதம் நடக்கிறது, மேலும் தேவையில்லாமல் எதற்கு நான் பணம் கொடுக்க வேண்டும்? என்று கேள்வி சாதாரணமாக கேட்காமல் , குரலை உயர்த்தி கேட்டுக்கொண்டு இருந்தேன். பாவடை சட்டை அணிந்த சின்ன பெண், ஆச்சரியத்துடன் ஆசிரியர்கள் என்னை கவனித்துக்கொண்டு இருந்தார்கள்.

இத்தனைக்கும் எனக்கும் அந்த பள்ளிக்கும் சம்பந்தமில்லை. என்னை யாரும் அறிந்திருக்கவில்லை. அண்ணன் தான் அங்கே படித்தார். அண்ணனுடைய வாத்தியாரிடம் நான் ஆங்கிலம் , கணிதம் ட்யூஷன் சென்றதால், என்னை அவருக்கு மட்டும்  தெரிந்திருந்தது. பஞ்சாயத்திற்கு வந்ததும் அவரே தான். அவருடைய மாணவியாக  ஓரளவு என்னைப்பற்றி தெரிந்து வைத்திருந்ததால், "இங்கவாம்மா, சத்தம் போடக்கூடாது, பணம் நீ கொடுக்க வேண்டாம், டிசி கொடுக்க நான் ஏற்பாடு செய்யறேன், வா என, க்ளர்க் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று , எழுதி கையெழுத்து இட்டு இருந்த டிசி யை கிழித்து க்கொடுத்து அனுப்பிவைத்தார். ப்யூன் அன்று கேட்ட பணம் ரூ. 2/-  ( :) )

பிற்பாடு, எங்கள் அனைவரது சான்றிதழ்களும் தீ விபத்தில் எரிந்து போனபோது, சென்னை டிபிஐ அலுவலகத்திற்கு தினம்  காலையில் சென்று, அதிகாரியின் அறை வாசலில் நிற்பேன். மாலை தான் திரும்பி வருவேன். அங்கேயும் பணம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்தேன், அதனால் சரியான நேரத்திற்கு சான்றிதழ்களை கொடுக்க முடியாமல், என் மேற்படிப்பு ஒரு வருடம் நடுவில் தடைப்பட்டது, இருந்தாலும், ஒரு மாதம் காத்திருந்து , நடையாக நடந்து வாங்கினே ஒழிய, பணம் கொடுக்கவில்லை.

அரசு அலுவலகங்களில் பணம் கொடுக்காமல் ஒரு வேலையை செய்ய சிரமம் தான், ஆனால் தன் வேலை முடியவேண்டும் என நாமாகத்தான் அவர்களுக்கு பணம் கொடுத்து கொடுத்து பழக்கி, அதையே இன்று அவர்கள் தங்களின் அன்றாட கட்டாயப்பழக்கமாகி வைத்து இருக்கிறார்கள்.

கடந்த 20 நாட்களாக,  நவீன் போலிஸ் வெரிஃபிகேஷனுக்கு அலைகிறான். பணம், அது சம்பந்தமாக எந்த காவல் நிலையம் சென்றாலும் பணம்.  ப்ளாகர் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டபோது ரூ 500/- கொடுத்தால் வேலை நடக்குமே என்று சொன்னார். வீட்டில் இதனால் பிரச்சனை என்பதை விடவும், என்னை உடன் அழைத்து செல்ல இருவருமே விரும்பவில்லை,  நிச்சயம் நான் பணம் தரமாட்டேன், பணம் கேட்பவர்களை சும்மாவும் விடமாட்டேன். தேவையில்லாமல் பிரச்சனை என்னால் அதிகமாகும், இது எனக்குமே தெரிந்திருந்தாலும், பணம் கொடுக்காமல் என்னால் அந்த வேலையை செய்ய முடியும், தேவையில்லாமல் அலைந்துக்கொண்டு இருக்கிறான், வருகிறேன் என நானும் கேட்டு கேட்டு பார்த்து ஓய்ந்துவிட்டேன்.

இதோ நேற்று வேளச்சேரி காவல் நிலையத்தில் பணம் கொடுத்துவிட்டு வந்து இருக்கிறான். ஆனாலும் சான்றிதழ் கைக்கு வரவில்லை, பணம் வாங்கியப்பிறகும், நாளை வாவென அனுப்பிவிட்டனர்.  இன்று அவனருகில் அமர்ந்து, எதற்கு அன்னா ஹசாரே க்கு ஆதரவு தெரிவித்து, வண்டியில் கல்லூரி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து ஊர்கோலம் சென்றீர்கள்?. டைம் பாஸா  நவீன்?  பணம் கொடுக்காமல் அந்த வேலை செய்ய உன்னை நீ பழக்கி க்கொள்ள வேண்டும், பணம் வாங்காமல் செய்ய வேண்டியது தான் அவனுடைய வேலை. அதை நம்மைப்போல் ஒருவர், இருவர் கூட புரியவைக்காவிட்டால் எப்படி? பணம் கொடுப்பது சரியான்னு யோசித்து பார்த்தியா? என்னால் இதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றேன். (ரகசிய குரல், பழம்நீ காதில் நான் பேசியது விழுந்தால், இந்த உலகத்தில் வாழவே தகுதியில்லாத பெண் என்று ஒரு மணி நேரம் காதில் ரத்தம் வரும் அளவு லக்சர் கேட்க வேண்டி கிடைக்கும்)

நிஜமான வருத்தத்தோடு, மனம் முகம் சோர்ந்து,  செய்வதறியாது அவன் சொன்ன பதில். "அம்மா, பணம் கொடுக்கும் போதே ரொம்ப மோசமாக பேசறானுங்க, போலிஸ் ஸ்டேசனுக்கு எல்லாம் நீ வரவேணாம்னு தான் உன்னை கூட்டிட்டு போகல.. அந்த அட்மாஸ்ஃபியர் சரி இல்லமா.. நீ எல்லாம் அதை சகிச்சிக்கமாட்ட ....நீ பெண், சட்டென்று உன்னிடம் பணம் கேட்க மாட்டார்கள், ஆனால் ஆண்களிடம் அப்படியில்லை.... நீ அதை புரிஞ்சிக்கனும்..அப்பா சொல்ற மாதிரி நீ இதை எல்லாம் கண்டுக்காத . விட்ரு "

முடிந்தது. குழந்தையும் பழகிவிட்டான். :(( . இனி அவனுக்கும் காசு கொடுத்தால் வேலை நடக்கும் என்பது புரிந்து போனது அல்லது புரியவைத்துவிட்டார்கள். . " நான் ஆண், நீ பெண் போன்ற உதாரணங்கள் சொல்லி என்னை சமாளிக்க கற்றுக்கொண்டான். 

அணில் குட்டி : புள்ளயும் உங்கள மாதிரி ஒரு வருசம் படிக்காம வூட்டுல இருக்கட்டுமா? ...  இவிங்க ரொம்ப நல்லவங்களாமா....... ம்க்கும் ! காசை கொடுத்து இருந்தா ஒரு வருசம் வெட்டியா படிக்காம வீணடிச்சி இருக்க வேணாம்.... போற இடத்தில் எல்லாம் எல்லாத்துக்கும் பொங்கிட்டு, ஒன்னுக்கு பத்து தரம் அலைஞ்சிட்டு.............. அம்மணி.. போயி வேல எதாது இருந்தா பாருங்க...

பீட்டர் தாத்ஸ் : “Though the bribe be small, yet the fault is great”
.