என் சொந்த வேலைகள் போக நேரம் கிடைப்பின், குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுடன் கொஞ்சம் நேரம் செலவிட  பிடித்தமானதாக இருந்தது. ஆனால், இரண்டு முறை குழந்தைகள் இல்லங்களுக்கு சென்று வந்ததில், அந்த குழந்தைகளின் முகத்தில் இருக்கும் ஏக்கம், அவர்களின் வயதுக்கும், வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லா ஆடைகள், அவர்களின் படிப்பு, பேச்சு என என்னால் மனதளவில் ஏற்றுக்கொள்ளமுடியாத  சில விஷயங்களால் மனபாரம் அதிகமானதால் போவதை நிறுத்திக்கொண்டேன். தள்ளியிருந்து உதவி செய்வது மட்டுமே என்னால் முடிந்தது என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். பல வருடங்களுக்கு பிறகு, போகும் வழியில் இந்த இல்லத்தின் பெயர் பலகை பார்த்து, ஒரு முறை சென்று பார்க்கலாமே என ஆவலில் சென்றேன்.. ஒரு மணி நேரம், அவர்களுக்கு என்னால் நிச்சயம் சந்தோஷம் தான்... நம்மை பார்க்க ஒருவர் வந்திருப்பதாக நினைத்து முகத்தில் அத்தனை சந்தோஷம். எல்லோருமே வயதானவர்கள். ஆண், பெண் என கலந்து தான் இருந்தார்கள். 

சரஸ்வதி பாட்டி 90 வயது, திரும்பவும் என்னை அதே மனநிலைக்கு  எடுத்துவந்துவிட்டார். :(. பார்வையில்லை, ”குட் ஈவினிங்” என்று சொல்லி என்னை இழுத்து மிகவும் இறுக்கமாக அணைத்துக்கொண்டார். சில நிமிடங்கள் என்னை விடவில்லை. பிறகு பேச ஆரம்பித்தார், அப்போதும் என் கையை இறுகப்பிடித்தவாரே பேசினார். நடு நடுவே ஆங்கிலம் :). சாப்பிட்டு விட்டு போகச்சொல்லி தொந்தரவும் செய்தார்.:) இரண்டு மனநிலை சரியில்லாத ஆண்கள், இவர்களில் பலருக்கும் சொந்தங்கள் இருந்தும் ஆதரவற்று இருப்பது, வேதனை. 

வந்தப்பிறகு அதை நடத்தும் திரு.சூரியக்குமாரிடம் விபரங்களை கேட்டு மெயில் அனுப்பினேன்.  நீங்களும் அவற்றை படித்து, அவர்களின் இணையத்தளத்தை பார்வையிட்டு, உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் பட்சத்தில், தயவு கூர்ந்து உங்களால் ஆன உதவியை செய்யவும்.

அவரிடம் கேட்டறிந்தவை :

1.  எத்தனை ப்பேர் இங்கே வசிக்கிறார்கள்?
11 பாட்டிகளும் 2 தாத்தாக்களும் 2 மாற்றுதிறனாளிகளுமாய் மொத்தம் 15 நபர்கள் இல்லத்தில் வசிக்கின்றனர். இரு பாட்டிகள்  (80 வயது & 65 வயது) விரைவில் சேர இருக்கிறார்கள். மொத்தம் 17 நபர்கள் மட்டுமே இங்கு தங்க இயலும்.

2. எந்த வயதினர் ?
பெரும்பாலான பாட்டிகளுக்கு வயது 80க்கும் அதிகம். அனைவரையும் சேர்த்த சராசரி வயது 74 ஆகும்.

3. மனநிலை பாதிக்கப்பட்டவர் நிலைப்பற்றி.
எங்கள் இல்லத்தில் சஞ்ஜீவிக்கு 48 வயது ஆகிறது. பிறவியிலேயே உடல்வளர்ச்சி குன்றி படுக்கையிலேயே காலம் கழிக்கும் இவருக்கு இவரையும், இவரது இடத்தையும் சுத்தமாக பராமரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பாலகுமார் (26) மனப்பிறழ்ச்சி நோயால் அவதிப்படுபவர். அடுத்தவருக்கு தீமை விளைவிக்கும் செயல்களை தவிர்க்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ருத்ரன் அவர்களின் மருத்துவ ஆலோசனையுடன் பாலகுமார் விரைவில் குணமடையும் வாய்ப்புகள்  தென்படுகின்றன.

கமலம்மாள் (95) ஆதரவில்லாமல் வந்து சேர்ந்திருக்கும் இவரது தள்ளாமை பிரச்சினைகளுடன், கத்துவது, துணியை அவிழ்த்துக்கொள்வது போன்ற குணம் மாறி நடந்து கொள்பவர். இவ்வில்லம் இவர்களையும், சாதாரணமானவர்களுடன் இணைத்து போதுமான அளவில் கவனித்துக்கொள்ள உதவியாளர்களுக்கும் சொல்லித்தரப்பட்டுள்ளது.

4.  என்னுடைய தோழியாகிவிட்ட சரஸ்வதி பாட்டி  :) பற்றி 
சரஸ்வதி (90) முழுவதுமாக பார்வையின்றி சிரமப்படுபவர். அனைத்து உறவினர்கள் இருந்தும் ஒதுக்கப்பட்டுள்ள இவர் இல்லத்திற்கு வந்து சேர்ந்த முதல் சிலபேர்களுடன் மூத்தவர். சிறிது சிறிதாக (20-25 வருடங்களில்) பார்வை போனதற்கு தாம் சிந்திய கண்ணீர்கள் காரணமாகும் என்கிறார். பார்வையற்ற இவரை வெளியே தள்ளி விரட்டிவிட்டார் இவரது மருமகள்.

5. இந்த இல்லம் தொடங்கிய திரு. சாரதி பற்றிய விபரங்கள் .
இல்லத்தின் அமைப்பாளர் ஸ்ரீ.பார்த்தசாரதி அவர்கள் ஆச்சரியப்படத்தக்க ஒரு சமூக சேவகர். சென்னை கிண்டி-யில் பிறந்து வளர்ந்த இவர் பள்ளிபருவத்திலேயே சிவானந்த குருகுலத்திற்கு சென்றுவந்தபின் ஏற்பட்ட தூண்டுதலால் தமது சேவைகளை துவங்கிவிட்டவர். பல சேவை நிலையங்களுக்கும் சென்று அவர்களுடன் நாள்முழுதும் தங்கியிருந்து பணிகளை செய்து வாரஇறுதிகளை கழித்தவர். 
புற்றுநோய் மருத்துவமனை - இல்லம், ஆதரவற்ற குழந்தைகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர், பிறவி பிரச்சினைகளுடன் உள்ளவர் என பலதரப்பட்டவர்களுக்கும் அன்புடன் பணிசெய்தவர். அவரது அனைத்து நண்பர்கள் - அவர்களது நண்பர்களும் என சேவைப்படையை உருவாக்கிக்கொண்டு இருந்தவர். குடிசைபகுதிகளுக்கு சென்று சுத்தம் செய்து உதவியும், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு முகாம்கள் என அமைத்து எளியோரின் அன்பை பெற்றவர். எக்ஸ்னோரா, காவல்துறையின் நண்பர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் பல மக்கள் பங்களிப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்.

பார்த்தசாரதி அவரது 26 வயதில் நம்மையும் அவரது குடும்பத்தினரையும் விட்டு மறைந்து ஒரு பெரிய இழப்பை உணர்த்தியுள்ளார். தன்னார்வ தொண்டுகளை அவர்தம் செயல்களிலிருந்தே கற்றவர்கள் நாங்கள். அவர் காட்டிய வழியிலேயே அவருக்காகவும், அவர்மீது கொண்டிருந்த நட்பிற்க்காகவும், கைவிடப்பட/உதவிகிடைக்காத இளைஞர் - நலிந்த - முதிர்ந்த மக்களுக்காகவும் பலவிதமான சேவைகளையும் தொடருகிறோம். மனித சேவை மகத்தானது, பங்குகொண்டு பெரும்பேறடையுங்கள்.


6. உங்களின் வங்கி முகவரி, வங்கி கணக்கு விபரம் :
Bank Particulars:
C R Suriyakumar,
Indian Overseas Bank, (Br Code: 001296)
SB A/c: 1296 010000 18606,
Velachery, Chennai 600042
IFSC Code: IOBA0001296

7. Tax exception details.
Donation to this Trust is exempted U/S 80G of the Income Tax Act 1961 vide notification No. DIT(E). NO.2(1035)/08-09 dt. 29-07-2009.

இல்லத்திற்கு (ஆரதி அறக்கட்டளைக்கு) அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரித்துறையின் அறிக்கை எண். DIT(E). NO.2(1035)/08-09 தேதி. 29-07-2009. படி வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

8. Contact Person:
Dr. C.R.Suriyakumar, Ph.D.,D.Ag.,
Secretary - Aarathy Trust

முனைவர். சௌ.ரா. சூரியக்குமார்
செயலாளர் - ஆரதி அறக்கட்டளை

கைபேசி எண்: 94449 04947, 8122002261
தொலைபேசி எண்: 2245 6596
மின்னஞ்சல்: info@aarathy.org, suryakmr@gmail.com
இணையத்தளம்: www.aarathy.org

முகவரி:
இதயவாசல் முதியோர் இல்லம்,
ஆரதி அறக்கட்டளை,
1-C, வேளச்சேரி மெயின் ரோடு,
நாகேந்திரா நகர்
வேளச்சேரி செக்போஸ்ட்
சென்னை 600042

அணில் குட்டி : இவ்ளோ சொல்லி இருக்காங்க, ஹோம் ல பாட்டிங்க தீபாவளிக்காக செய்துக்கிட்டு இருந்த கை முறுக்கை நல்லா அமுக்கிட்டு வந்தாங்க சொன்னாங்களா ???? நல்லா சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டுட்டு...  ஒரு வார்த்தை க்கூட முறுக்கை பத்தி சொல்லல... நன்றியில்லா கவிதா...

நான் சொல்றேன்.... பாட்டிங்க செய்த கை முறுக்கு ஜூப்பரோ ஜூப்பர். கவி  தீபாவளிக்கு முன்ன ப்ளான் பண்ணி இதுக்காகவே போயி இருப்பாங்களோ ?!  கை முறுக்கு அம்புட்டு ருசி.. :) ஹி ஹிஹி... :)

பீட்டர் தாத்ஸ் : The tragedy of old age is not that one is old, but that one is young.