திருமணம் ஆகாதப்பெண்களும் அணியக்கூடியது தான் கட்டைவிரல் மெட்டி. எத்தனைப்பேர் இதனை  பார்த்திருக்கிறார்கள் / பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சிறு வயதில் பல வருடங்கள் வீட்டில் இருக்கும் போது மட்டும் அணிந்து இருக்கிறேன். ஆண்டு விடுமுறைகளில் முழுநாளும், விஷேஷ நாட்கள், திருமணங்கள் என இந்த மெட்டியை அணிந்துக்கொள்ள பல காரணங்கள் இருந்தன.
(படத்தை பெரிதாக்கி பார்க்கவும் )

ஆயா,  இரண்டு டிசைனில் என் கால் கட்டைவிரல் அளவிற்கு மெட்டி செய்து வைத்திருந்தார்கள். படத்தில் உள்ளது போலவே இருக்கும். தீ விபத்தில் அழிந்துவிட்டதால், வரைந்திருக்கிறேன். மேல் புறம் நடுவில் 5-6 முத்துக்கள் கொண்ட சலங்கை ஒன்று இருக்கும். கீழ்பகுதி தட்டையாக செப்பு தகட்டில் செய்து இருப்பார்கள்.  நடக்கும் போது தேய்மானம் இருக்கும் என்று சொல்லப்பட்டது. மற்ற பகுதியெல்லாம் வெள்ளியால் செய்யப்பட்டு இருக்கும். நாம் சாதாரணமாக அணியும் மெட்டியைப்போல இல்லாது, பெரியதாக கட்டைவிரல் உள்ளே போகக்கூடியதாக இருக்கும். திருமணத்தன்றும், மெட்டிவிரலில் மெட்டி வருவதற்கு முன் அதற்கு முன் விரலில் இந்த மெட்டியை அணிந்திருந்தேன். :).

இதனை எங்கள் வீட்டைத்தவிர வேறு எங்கும் பார்த்தது இல்லை. என் காலில் இருப்பதை பார்த்து அத்தை மகள் கேட்பாள், அவளுக்கு டிசைன் கம்மியாக இருப்பதை மட்டும் கொடுக்க சம்மதித்து இருக்கிறேன். வீட்டிற்கு போவதற்கு முன், கவனமாக  அதை திருப்பி வாங்காமல் அனுப்ப மாட்டேன். சில சமயம் அதற்காக அழுதும் கூட இருக்கிறாள். அவளுக்கு மேல் அடம் பிடிப்பதில் நான் 'மன்னி' என்பதால், என்னிடம் வம்பு வேண்டாம் என்று, அவளை சமாதானம் செய்து, ஆயா, மெட்டியை வாங்கிவிட்டுத்தான் அனுப்புவார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த அல்லது என்னை கவர்ந்த வேறு சில நகைகள் நத்து'ம், புல்லாக்கு'ம். எப்போதுமே நகைகள் அணிந்துக்கொள்வதில் விருப்பம் இருந்ததில்லை. எனக்கு ஆர்வம் இல்லையென்றாலும் ஆயா அத்தனை சுலபமாக என்னை விட்டுவிடவில்லை. எனக்கு பிடிக்கிறதோ இல்லை, எந்நேரமும் ஏதோ ஒரு அலங்காரம் செய்துக்கொண்டே இருப்பார்கள். அதில் ரொம்பவே எங்க வீட்டில் கஷ்டப்படறவங்க "ஆண்டாள்" தான்.. :).  எத்தனை முறை இந்த ஆண்டாள் வேஷம் போட்டாகிவிட்டது. வீட்டில் ரெடிமேடாக ஆண்டாள் அலங்காரத்திற்கான 'பின் தலை கொண்டையும், சைட் கொண்டையும் ' இருக்கும். ஒரு பச்சக்கிளி பொம்மை வேறு!  என் திருமணத்திற்கு, முதல் நலங்கின் போதும் ஆண்டாளாக நிற்கவைத்தார்கள். பல்வேறு வயதுகளில் ஆண்டாள் வேஷம் போட்டு இருந்தாலும், திருமணத்திற்கு முன் போட்ட வேஷத்தில் ஆண்டாள் அழகாகவே இருந்தாள்.

திருமணம் வரும் வரையில், நத்து, புல்லாக்கின் மேல் எனக்கு ஆசை இருக்குமென ஆயாவிற்கே தெரியவில்லை. திருமணத்தன்று, மணப்பெண் அலங்கார நகைகளை நானே தேர்தெடுத்தேன். எதையும் இது வேண்டுமென கேட்காத நான், இந்த நகைகள் தான் வேண்டும். வேறு அணியமாட்டேன் என்று சொன்னது, ஆயாவிற்கு வியப்பளித்தது. ஆயா சொல்லிய எதையும் அணிந்துக் கொள்ளவில்லை.

சிகப்புக்கலர் கல் நகைகள் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன். எல்லாமே வெள்ளைக்கல் வைத்த நகைகள்.

நத்து, புல்லாக்கு  ஏன் எனக்கு பிடிக்கும் என்ற காரணம் தெரியவில்லை. எங்க வீட்டு பெண் குழந்தைகளில் நான் மட்டுமே நத்து, புல்லாக்கு வேண்டுமென கேட்டு வாங்கி ப்போட்டுக்கொண்டு மற்றவர்களை எரிச்சல் படுத்தினேன். . புல்லாக்கு சரியாக மேல் உதட்டில் மேல் வந்து விழும். பேசவும், சாப்பிடவும் நிச்சயம் கஷ்டமாக இருக்கும். குறிப்பாக திருமணத்தன்று பால் பழம் கொடுக்கும் போது, யாராவது ஒருவர். புல்லாக்கை மேல் தூக்கி பிடித்து, குடிக்க வைத்தார்கள். நகைகளை அவிழ்க்கக்கூடாது என்பதால், அது சற்று சங்கடமாகவே இருந்தது.  ஆனால் அதை அணியும் போது தனி அழகு பெண்ணின் முகத்திற்கு வருகிறதென்பதை மறுக்கமுடியாது.

இரண்டுமே திருகு அல்லாது பிரஸ்ஸிங் டைப் நகைகள். மூக்கிலிருந்து நழுவி விடாமல் இருக்க மிகவும் அழுத்திவிடுவார்கள், நிச்சயம் வலி இருக்கும். அவற்றையெல்லாம் தாண்டி அணிந்துக்கொள்ள நினைப்பது, அந்த ஒரு நாள் தவிர்த்து, அந்த நகைகள் அணிய சந்தர்ப்பம் கிடைக்காது என்பதே. !.  அதற்கு பிறகு , நத்து, புல்லாக்கு எப்பவுமே அணியவில்லை.  கட்டைவிரல் மெட்டியும் கூட....

அணில் குட்டி : இப்ப நத்து, புல்லாக்கு, வங்கி, ஒட்டியானம்னு போட்டு ப்பார்த்தேன்... ஹய்யோ... ஹய்யோஓஓஓஒ..... :))))))))))...

பீட்டர் தாத்ஸ் : One men's memory is like a box where a man should mingle his jewels with his old shoes.
பொன்ஸ் : உங்களுக்காக !! :)


  

படங்கள் : நன்றி கூகுல்.