திரைப்படங்களில்   "கதை, திரைக்கதை, இயக்கம்" இப்படி போடுவார்கள். இதில் திரைக்கதை என்பது என்ன?. திரைக்கதை என்ற வார்த்தையை சாமானியர்கள் கூட மிக சாதாரணமாக பயன்படுத்துவதை பார்த்து இருக்கலாம். திரைக்கதை என்பதின் அர்த்தம் புரிந்து தான் பயன்படுத்துகிறார்களா? ம்ம் தெரியவில்லை பார்ப்போம். !

கதை என்பதைவிடவும்,திரைக்கதை என்பது ஒரு படத்திற்கு மிகவும் முக்கியமானது. திரைக்கதை சரியாக அமைக்கப்படாத படங்கள், கதை எத்தனை சுவாரசியமாக எழுதப்பட்டு இருந்தாலும் வெற்றி பெறுவது என்பது கடினம். கதையை ஒரே வரியில் கூட சொல்லிவிட முடியும், ஆனால் அந்த கதையை காட்சிப்படுத்துவது திரைக்கதையே. திரைக்கதை போன்றே "எடிட்டிங்" ங்கும் ஒரு படத்தின் வெற்றிக்கு உதவக்கூடியது. எந்த காட்சி எந்த இடத்தில் வரவேண்டும், எத்தனை நீளமாக இருக்கவேண்டும், எது தேவை, தேவையில்லை என்பதை மிக சரியாக ஊகித்து படத்தை "எடிட்" செய்வதின் மூலம், திரைப்படத்தின் தேவையில்லாத காட்சிகளை எடுத்தும், தேவையான காட்சிகள் மிக சரியான இடத்தில் புகுத்தியும் பார்வையாளர்களை நெளியாமல் உட்காரவைக்கமுடியும். 

திரைக்கதை என்றால் என்ன ?. கதாப்பாத்திரம் எங்கிருந்து பேசுகிறான், எதில் அமர்ந்து, நின்று, நடந்து பேசுகிறான், அமரும் போது எந்த கோணத்தில் அமருகிறான், அவனின் உடை, அலங்காரம், அவனை சுற்றியுள்ள கதாப்பாத்திரங்கள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள் போன்றவற்றை திரைக்கதையே நிர்ணயம் செய்கிறது. சில மாதங்களுக்கு முன் பார்த்தப்படங்களில் "நான் மகான் அல்ல" படத்தின் திரைக்கதை மிகவும் என்னை கவர்ந்தது. ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்கவேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து, திட்டமிட்டு, அதன்படியே காட்சியை அமைத்தலே திரைக்கதை என்பதாகும்.  அதாவது, ஒரு காட்சி தொடங்கியது முதல், அந்த காட்சி முடியும் வரை, காட்சியில் வரும் கதாப்பாத்திரங்கள், அவர்கள் இருக்கும் இடம், இடத்தை சுற்றி பின்னால் நடப்பவை, காட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களின் நடை உடை பாவனைகள், ஒரு வீடாக இருக்குமாயின் அது கதையில் சொல்லப்பட்ட கதாப்பாத்திரங்களுக்கு  தகுந்த மாதிரி அமைப்பது வரை எல்லாமே திரைக்கதையில் அடக்கமாகும்.

நான் மகான் அல்ல படத்தில் மிக யதார்த்தமாக காட்டப்பட்ட "ஒரு லோயர் மிடில் க்ளாஸ் வீடு", அங்கங்கே கிடக்கும் பொருட்கள், அந்த வீட்டு சமையல் கட்டு, திரைப்படத்திற்காக ஒரு செயற்கைத்தனம் இல்லாமல், எப்படி ஒரு வீட்டின் சமையல் அறை இருக்குமோ அப்படியே இருக்கும். பல படங்களில் இவையெல்லாம் செட்'போடப்படும் அல்லது மிகவும் அழகாக யதார்த்திற்கு அப்பாற்பட்டு காட்டப்படும். அப்படி இல்லாமல் மிக யதார்த்தமாக, அல்லது மிக சரியாக கவனமாக அமைக்கப்படும் காட்சிகளில் திரைக்கதை சரியாக அமைக்கப்பட்டு இருக்கிறது எனலாம்.

திரு.கமல்ஹாசன் படங்களில் இந்த யதார்த்தங்களை நிறைய காணமுடியும். காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக, தனிப்பட்ட முறையில் அவர் எல்லாவித முயற்சிகளையும், உழைப்பையும் கொட்டி இருப்பார். "அன்பே சிவம்" மிக சிறந்த உதாரணம். இருப்பினும்,சில காட்சிகளில் நாடகத்தன்மை, சினிமாத்தனம் தெரியும் தான். "உன்னை போல் ஒருவன்" திரைப்படத்தில், கமல்ஜி, அந்த கட்டிடத்தில் ஏறும் முதல் காட்சியில் தக்காளி சிலது கூடையில் இருந்து கீழே விழும். அதை திரும்ப எடுத்து தன் கூடையில் போட்டுக்கொண்டு மேலே செல்வார். அந்த காட்சி வரும் போதே, அந்த தக்காளி கூடை கண்டிப்பாக வேறொரு காட்சியில் வருமென்று ஊகிக்கமுடிந்தது. அதே கூடை கடைசி காட்சியில், அவர் திரு.மோகன்லால் அவர்களோடு பேசும் போதும் வரும். தக்காளி கீழே விழும். இவை எல்லாம் திரைக்கதையில் தொடர்புடைய காட்சிகள். இதில் கவனித்தது, முதல் காட்சியை விடவும், கடைசி காட்சியில் கூடையில் தக்காளி அதிகமாக இருக்கும்,   தக்காளி கூடையிலிருந்து விழவேண்டும் என்பதற்காக கொஞ்சம் அதிகமாக வைக்கப்பட்டு இருக்கலாம். பார்வையாளர்கள் இதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று எண்ணியிருக்கலாம்.. இருப்பினும், இதை ஒரே அளவாக  வைத்திருக்கலாம் என்பதே பார்வையாளனாக நான் எதிர்ப்பார்த்தது. அப்படி இருந்தால் தான் அது யதார்த்தம் இல்லையேல் சினிமாத்தனம்/கவனமின்மை ஆகிவிடுகிறது.

சில காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக யதார்தத்தை மீறுதல் மிகைப்படுத்திக்காட்டுதல், அப்படிக்காட்டும் போது பல நேரங்களில் அந்த காட்சிகள் மனதில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பார்வையாளனை சேர்ந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.  இதைத்தாண்டி நாம் அத்தனை உன்னிப்பாக காட்சிகளை கவனிக்கமாட்டோம் என்றும் இயக்குனர், மற்றும் திரைக்கதை வடிவமைப்பாளர் நினைத்திருக்கலாம். 

இன்னுமொரு உதாரணம், மைனா படத்தில், அனைவரும் பேரூந்தில் பயணம்  செய்யும் போது ஒரு பாடல் வரும், அந்த பாடலின் நடுவே சம்பந்தமே இல்லாமல் ஒரு "எவர்சில்வர் தூக்கை" காட்டுவார்கள். அது, விபத்து நடந்து, இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரம் கண்ணாடியில் விழுந்து கிடக்கும் போது, நமக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். அந்த தூக்கு விழுவதற்கும், கதாநாயகன், இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தை தூக்கி, மயிரிழையில் காப்பாற்றுவது போன்று காட்டப்படும். அந்த தூக்கிற்கு பதிலாக எதை வேண்டுமானாலும் அங்கே காட்டியிருக்கலாம். ஆனால் ஒரு சின்ன தூக்கை பயனபடுத்தி இருப்பது திரைக்கதையின் புதிய உத்தி அல்லது சாமர்த்தியம். 

எப்படியோ திரைக்கதை என்பது - ஒரு காட்சியினை, அதனை அழகுப்படுத்த, மெருகேற்ற படம் முழுக்க  பெருந்துணையாக தொடர்ந்து வரக்கூடிய காட்சி அமைப்புகள் எனலாம். சில திரைக்கதை அமைப்புகள் நம்மை வெகுவாக கவர்ந்து இழுத்துவிடும்.

நான் மகான் அல்ல" திரைப்படத்தின் திரைக்கதையும், எடிட்டிங்கும் மிக நன்றாக இருந்ததாக எனக்கு தெரிந்தது.  உதாரணமாக ஒரு பெண்ணின் கொலை, அது எந்த சந்தர்பத்தில் நடந்தது என எளிதில் நாம் கணித்து விடாதபடி அமைந்த திரைக்கதை நிச்சயமாக"சபாஷ்" போட வைத்தது.  ஏனென்றால், கடற்கறையில் ஒரு காதல் ஜோடியினை பிரித்து, அந்த பெண்ணை மாணவர்கள் தூக்கிசெல்லவதாக ஒரு காட்சி இடம்பெறும். நடுவே ஒரே ஒரு முறை, மாணவர்களின் வீட்டில் கட்டிலுக்கு அடியில் மறைத்துவைக்கப்பட்ட பெண்ணின் உடல் வெளியில் இழுக்கப்பட்டு, தலைத்துண்டாக நறுக்கப்படுவது காட்டப்படும். ஆனால் முன்னர் தூக்கிச்சென்ற பெண்ணும், இந்த பெண்ணும் வேறுபட்டவர்கள் என்பது, கதையில் நாம் எதிர்ப்பார்க்காத ஒரு சந்தர்ப்பத்தில் காட்டப்படும். படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்ட விதம் தான், நமக்கு கொலைசெய்யப்பட்ட பெண்ணும், கடற்கரையில் தூக்கிச்சென்ற பெண்ணும் வேறு என்பதை உணர்த்தும். நல்ல திரைக்கதைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. விஜய் நடித்த "கில்லி" திரைக்கதை யில் ஒரு வேகம் இருக்கும், அடுத்து என்ன அடுத்து என்ன? என்ற ஆர்வத்தை உண்டாக்கும்.

சொதப்பல் திரைக்கதைக்கு நிறையவே எடுத்துக்காட்டுகள் உண்டு.  ஒரு படத்தை நல்ல திரைக்கதை அமைத்து எடுப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். இரண்டரை மணி நேரம் அமர்ந்து பார்த்துவிட்டு விமர்சனம் என்ற பெயரில் குத்தம் குறைகளை பார்த்த காசு செரிக்க எழுதிவிட முடியும். ஆனால் சினிமா எடுப்பது என்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை.  நம் விஜி ஒரு லைவ் டாக் ஷோ விற்கு சென்று அது எடுக்கும் விதத்திலும், இயக்குனர் சார்ந்து எல்லா விஷயங்களும் நடப்பதையும் பார்த்து பொறுமையின்றி வந்துவிட்டார். அதனை ஒரு பதிவாக எழுதி இருந்தார்.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லை, தொடர்கள், படங்கள் என்று எல்லாமே இப்படி மிகவும் சிரமப்பட்டு, நேரம் காலமின்றி, பல மனிதர்களை ஒருங்கிணைத்து, சரிக்கட்டி, சின்ன சின்னதாக, பல கெடுபிடிகளை சந்தித்து, பல மணி நேரம் இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி,  பிறகு அதனை கோர்வையாக்கி வெட்டி, ஒட்டி நாம் பார்த்து மகிழ ஒரு நிகழ்ச்சியாக, தொடராக, திரைப்படமாக கொடுக்கிறார்கள்.

எந்திரன் திரைப்படத்தில் ஆசியாவில் இரண்டாவதாக அதிக சம்பளம் வாங்கிய திரு.ரஜனிகாந்த் அவர்களின் உழைப்பு?? தேவையா என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை. அவர் இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்துதான் அந்த சம்பளத்தை பெற முடியும் என்பதில்லை. ஆனாலும் உழைப்பை கொட்டி எடுக்கப்பட்ட ஒரு படம். நாம் நான்கு வரிகளில் படத்தைப்பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களை வைத்துவிடமுடியும்.

ஆரம்பத்திலிருந்தே  பார்வைகளில் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை என்று முடிவு செய்து எழுதுவதில்லை. நந்தலாலா முதலும் கடைசியுமாக இருக்கும். காரணம் மிகவும் கஷ்டப்பட்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு நாம் மிக எளிதாக ஒரு பதிவின் மூலம் "நன்றாக இல்லை" என்று விமர்சனம் செய்துவிட முடியும், ஆனால் மாதக்கணக்கில் உழைப்பை கொட்டி, எதிர்காலத்தை எதிர்ப்பார்த்து பிழைக்கும் பலரை அப்படி எழுதும் போது மறந்துவிட முடிவதில்லை. மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளில்,  நிறைய எதிர்ப்பார்ப்புகளை, அளவே இல்லாத கனவுகளை தேக்கிய வேலை இது. அது தான் வாழ்க்கை என இருப்பவர்கள், தங்களது உழைப்பை சரிவர பயன்படுத்தி வெற்றிப்பெற வாழ்த்துவதை தவிர்த்து, வேற என்ன செய்துவிட முடியும் நம்மால். :)

நன்றி : கேபிள்ஜி (நேரம் ஒதுக்கி, பதிவை வாசித்து, திரைக்கதை என்பதை பற்றிய என் புரிதலில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினார். திருத்திக்கொண்டேன்)

அணில் குட்டி : வூட்டுல படம் பாக்கும் போது வாய மூடாம அடிக்கிற கமெண்டு பத்தாதுன்னு.. இது வேறையா...  ???

பீட்டர் தாத்ஸ்: You convince yourself you can fix the screenplay, because there`s a lot of money involved. But you can never make it work. If the script has a hole in it, it will always have that hole.Nick Nolte