அடிக்கடி தொலைக்காட்சியில் இந்த விளம்பரத்தை இப்போது ப்பார்க்க முடிகிறது. "கூரை வீடுகளே இல்லாமல் தமிழகத்தை ஆக்கவேண்டும் என்பதே குறிக்கோள்" என்பதாக.  இதைப்பார்க்கும் போது எல்லாம், கூரையே இல்லாதவர்கள் பற்றிய நினைவுகள் வருவதை தடுப்பதற்கு இல்லை.  கூரையை காங்க்கிரீட் வீடுகள் ஆக்கலாம். கூரைக்கூட இல்லாமல் நடுத்தெருவில் குடித்தனம் நடத்துபவர்களுக்கு.. ? அவர்களின் வாழ்வியல்பு மாறவே மாறாதா.. ??  அதற்காக அரசு எதுவும் செய்யமுடியாதா?  இல்லை அவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லையா?

தெருவோரத்தில் இருக்கும் இவர்களுக்கு எதுவும் திட்டங்கள் வந்தால், நிம்மதியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விஜய நகரில் 100 அடி ரோடில் செல்லும் போது,  அங்கே 21 பஸ் நிறுத்தத்தின் அருகில் தெருவோரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை கண்டுக்கொள்ளாமல் செல்ல முடிவதில்லை.

எத்தனை குடும்பங்கள் மழை வெயில் என பாராமல் அங்கே வசிக்கிறார்கள். இவர்களின் வீடு என்பது, 3 கற்கள் வைக்கப்பட்ட ஒரு அடுப்பு, ஒரு பெட்டி அல்லது ப்ளாஸ்டிக் கவர்களில் திணிக்கப்பட்ட பொருட்கள், துணிகள், அவற்றை மூட ஒரு ப்ளாஸ்டிக் கவர், அல்லது பெரிய பெரிய பேனர்கள் அவற்றை மூட இருக்கும்.  மேற்கூரை என்று பேச்சுக்கு கூட ஒன்றும் இல்லை. வெட்டவெளி. இரவு நேரங்களில் "அழகி" படத்தில் காண்பித்தது போன்று மூடிய கடை வாசல்களில் சென்று தங்கிக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். அல்லது விஜயநகர் பஸ் நிறுத்தம் பெரியதாக உள்ளது, அங்கும் வந்து படுத்துறங்க வாய்ப்பு உள்ளது. இரவு நேரத்தில் சென்று பார்க்கவில்லை.

இவர்களின் வாழ்க்கை முறை எனக்கு வியப்பளிக்காமல் இல்லை,  வீட்டை கூட்டி பெருக்கி, கழுவி, பூஜை அறை, படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை என்று எதுவும் இல்லை. ஒரே லைன் கட்டிய குடும்பங்கள்,  இவர்களுக்கு சாலையோர பணி என்பது என்னுடைய யூகம், வேறு என்ன வேலை செய்தால் தான் என்ன.. வீடு என்பது அவர்களுக்கு வானமே கூரை, தெருவே பஞ்சு மெத்தை, எத்தனை மனிதர்கள் சுற்றி இருந்தாலும், எல்லோர்க்கும் இடையில் வெட்ட வெளியில் குடித்தனம் நடத்துக்கிறார்கள். "ப்ரைவசி ப்ரைவசி" என்று சொல்கிறோமே அப்படி எதுவுமே இல்லை, அதை ப்பற்றி கூட இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. இவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து அன்னாந்து பார்த்தால் "ஆஆ" வென வாய்பிளக்க செய்யும் பலமாடி குடியிருப்புகள்.!

இதே போன்று இன்னும் சில இடங்கள், திருவான்மயூர் சிக்னல் அருகில், ஜெமினி மேம்பாலம் கீழ் பகுதியில்,  வேளச்சேரி காமாட்சி ஆஸ்பித்திரி மேம்பாலம் அடியில், காமாட்சி ஆஸ்பித்திரி துரைப்பாக்கம் ரோடில், இடது புறமாக பார்த்துவந்தால், இப்படி கூட்டமாக ஒரு இடத்தில் மக்கள், அதுவும் மழை நேரத்தில், அவர்களை பார்க்க கண்களில் ரத்தம் வராதது மட்டுமே குறை, ஏனென்றால் அங்கே ஒதுங்க கூட இடம் இல்லை, பொட்டல் காடு அது.. :( , அடுத்து விஜிபி கோல்டன் பீச் பார்க்கிங் இடத்தை கடந்தால், அவர்களின் பராமரிப்பின்றி அழிந்துக்கொண்டு இருக்கும் இடத்தில் உள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ள சில குடும்பங்கள், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் சாலையின் ஓரத்தில் வேற்று மாநிலத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள்... இவை எல்லாமே பஸ்ஸில் போகும் போது கண்டவை.  சென்னையில் மக்கள் வாழ இப்படி பல இடங்கள் உள்ளன என்று மட்டும் தெரிகிறது..

இவர்கள் யாருக்குமே கூரை க்கூட இல்லை... .

 வீடு என்ற தலைப்பில் முன்னரே எழுதி இருக்கிறேன்.  இப்போது இருக்கும் வீட்டைத்தவிர்த்து, இன்னொரு வீடு அல்லது மனை வாங்கி தனி வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லாமே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. அதற்கான தேவை இருப்பதாகவும் தெரியவில்லை.

நிற்க, இப்போது என்னவோ வேறு வீட்டிற்கு போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவரின் உடல்நிலை முதல் காரணமாக போனதில், மாற்று யோசனை எதுவும் இல்லாமல், வேறு வீடு தேடும் படலம்.. புதிய வீடு பிரஞ்ஞை இல்லாமல் பல வருடங்கள் கடந்து விட்ட நிலையில்,  தீடிரென வீடு தேடும் படலம் ஆரம்பித்துள்ளது. வாடகை அல்லது விலை ????? ம்ஹூம்.. இரண்டுமே "எட்டாத கனி",  என்ற நிலைதான் கண் முன் நிற்கிறது.

நீலாங்கரையில் இடது பக்கம் செல்ல வேண்டாம் என சொல்லியும், இல்லை இந்த பகுதியை நான் பார்த்ததில்லை அழைத்து செல்லுங்கள் என அடம் பிடித்து சென்றேன். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று என்னை கவர, வாட்ச்மேனை கேட்டு பார்த்தேன்.

"வாடகைக்கு இருக்குங்க.. "

'எவ்வளவு வாடகை ? "

"1 லட்சத்து 45 ஆயிரம்.. "

"நான் அட்வான்ஸ் கேக்கலைங்க."

"நானும் அட்வான்ஸ் சொல்லலைங்க.. "

".............."  (நிச்சயமாக பேச்சு வரவில்லை, அதிர்ச்சி என் முகத்தில் தெரியாமல் இருக்க ரொம்ப முயற்சி செய்தேன் னு கண்டிப்பாக சொல்லனும் :)  )

"வாடகைதாங்க 1.45 ஆயிரம்.."

"ம்ம்..அப்ப அட்வான்ஸ் ? "

"ஓனரை த்தான் கேக்கனும்"

*********

"அப்பவே சொன்னேன் கேட்டியா?"

"நிஜம்மாவே இவ்வளவு வாடகை கொடுத்து குடும்பங்கள் இருக்குமா? ஆபிஸ், அல்லது ஆபிஸ் கெஸ்ட் ஹவுஸ் இருந்தால் சரி.. குடும்பங்களும் இப்படியா? "

"ம்ம்ம்.. சினிமாக்காரர்கள் இருக்க வாய்ப்பு இருக்கும்மா.. '

"ஹோஒ.... .." (அதற்கு மேல் வாடகையை லட்சங்களில் கொடுத்து வாழ்க்கை நடத்தும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை பற்றிய யோசனையில் ஆழ்ந்தேன், இவர்களுக்கு மாத வருமானம் கோடிகளில் இருக்குமோ?!! )
**********

திரும்பி வரும் போது மீண்டும் விஜய் நகரில் சாலையோரத்து மக்களை நோக்கி என் கண்கள் செல்லாமல் இல்லை...  அவர்களுக்கும் இவர்களுக்கும் எத்தனை வித்தியாசம்.. ???? .......... நடுவில் நாமும்...இப்போது கலைஞரின் காங்க்கிரீட் வீடுகளும்....

அணில் குட்டி அனிதா : மக்கா புரியுதா????? வீடு தேடறாங்க.. கலைஞர் வீடு கொடுக்கறாரு.. .இவங்களுக்கு அதுல ஒன்னு தேத்தலாம்னு  அதைப்பத்தியே பேசிக்கிட்டு இருக்காங்க.. விடுங்க விடுங்க.. .அம்மணிய நேத்திக்கு இன்னைக்கா பாக்கறோம்....?!!

பீட்டர் தாத்ஸ் : A house must be built on solid foundations if it is to last. The same principle applies to man, otherwise he too will sink back into the soft ground and becomes swallowed up by the world of illusion.