வேளச்சேரி - தாம்பரம் சாலை,  இந்த சாலையில் ஹால்டாவிலிருந்து பள்ளிக்கரணை வரை பிரச்சனை ஒன்றும் இல்லை. பள்ளிக்கரணையை தொட்டு விட்டால், சாலை ஓரங்களில் மட்டுமல்ல நட்ட நடு ரோடில், சாலையை இரண்டாக பிரித்து கட்டியிருக்கும் சின்ன சுவர்களின் பக்கத்திலும், நடுவே திரும்பும் வளைவுகளிலும், ஒன்று இரண்டு இல்லை, கூட்டம் கூட்டமாக மாடுகள் அமர்ந்திருக்கும் அல்லது மேய்ந்துக்கொண்டு இருக்கும்.

இவை 24 மணி நேரமும் சாலைகளிலேயே தான் இருக்கின்றன.  இது பள்ளிக்கரணையிலிருந்து, கிழக்கு தாம்பரம் வரை தொடர்கிறது. மேடவாக்கம் வரை அதிகமாக காணப்படும் இந்த மாடுகள் கூட்டம், கிழக்கு தாம்பரம் நோக்கி செல்ல செல்ல குறையும். ஆங்காங்கே ஒன்றிரண்டு பார்க்கலாம்.. ஆனால் இல்லாமல் இருக்காது.

எப்போது விழுப்புரம் செல்ல வேண்டி இருந்தாலும், தாம்பரம் ஸ்டேஷனில் வண்டியை விட்டுவிட்டு அங்கிருந்து பேரூந்தோ ரயிலோ பிடிப்பது வழக்கம்.  ஒரு நாள் விடியற்காலை 4 மணிக்கு கிளம்பி போகவேண்டி இருந்தது. பள்ளிக்கரணை தாண்டி செல்லும் போது கவனிக்கிறேன், அந்த மாடுகளின் எஜமானர்கள் மாடுகள் எங்கு நின்றிருக்கிறதோ அங்கேயே அவற்றிக்கு வைக்கோலை போட்டு, மடியைக் கழுவி,  பால் கறந்து க்கொண்டு இருக்கிறார்கள். சாலையின் ஓரத்திற்கு அழைத்துச்சென்று கூட இதை செய்யவில்லை. மாடுகள் நிற்கும் இடங்களிலேயே நடந்துக்கொண்டு இருந்தது.

நிஜமாகவே இவர்கள் தான் அந்த மாடுகளுக்கு சொந்த க்காரர்களா என்ற சந்தேகம் கூட வந்தது. 24 மணி நேரமும் தெருவில் இருக்கும் மாடுகளுக்கு யார் வேண்டுமானலும் சொந்தக்காரர்களாக ஆகலாம் அல்லவா? எனக்குமே ஏன் நாமும் விடியற்காலையில் போயி ஒரு படி பால் கறந்து கொண்டுவரக்கூடாது என்று தோன்றாமல் இல்லை. 

மாடுகளை சாலையில் அதுவும் ரொம்பவே போக்கவரத்து அதிகம் உள்ள சாலைகளில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் தொந்தரவு தரும் படி விட்டுவைப்பது குற்றம், இதில், அங்கேயே அவற்றிற்கு சாப்பாடு கொடுத்து, துணிமணி கொடுத்து, தூங்க சொல்லுவதும், பாலை- ஆள் அரவமற்ற விடியற்காலை பொழுதுகளில் வந்து கறந்து சென்றுவிடுவதும் எத்தனை அயோக்கியத்தனம்.

இந்த பகுதி மக்கள் இதற்காக எதுவும் செய்தால் நலமாக இருக்கும். பாவம் வாயில்லாத ஜீவராசிகள் பெரிய வாகனங்களில் மோதி அடிபடவும், இறந்து போகவும் நிறையவே வாய்ப்பிருக்கிறது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்வர்களும், இவற்றின் மோதாமல் போகவேண்டுமென விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடக்கின்றன.

பள்ளிக்கரணை சென்னை மாநகராட்சி க்கு உட்பட்டது இல்லை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் வருகிறது. இணையத்தில் தேடியதில் கிடைத்தது, இந்த இமெயில் அட்ரஸ்- collrkpm@tn.nic.in, இவருக்கு, மாடுகளை அகற்றுமாறு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன். என்னால் முடிந்தது இதுவே. சென்னை மாநகராட்சி சம்பந்தபட்டு இருந்தாலும், புகார் கொடுத்தாலும், அதற்கான சேவையை உடனே அல்லது எப்போதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. அதில் அனுபவமும் உள்ளது. இருப்பினும்,  "கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே" , ஒரு சமயம் இல்லையேல், ஒரு சமயம் யாராவது கண்டுக்கொள்வார்கள் என்ற அல்ப நம்பிக்கையில், இந்த புகாரையும் எப்போதும் போல் கொடுத்துள்ளேன். பார்க்கலாம்.


இதை ப்படிப்பவர்கள், பள்ளிக்கரணை - கிழக்கு தாம்பரம் சாலையில் நடுரோடில் 24 மணி நேரமும் சுற்றிக்கொண்டு இருக்கும் மாடுகளை அகற்ற, ஏதேனும் நடவடிக்கை எடுக்க  உதவி செய்தால் நலம். அல்லது யாரை அணுகவேண்டும் என்று சொன்னால் என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

இதே போன்று வீடு கட்டுபவர்கள், மணல் ,ஜல்லி, செங்கல் போன்றவற்றை நடுரோட்டில் கொட்டி வைத்து, என்னவோ சாலை அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை போல் பயன்படுத்துக்கிறார்கள், இப்படி எல்லாம் செய்யாவிட்டால் நம்மை இந்தியர்கள் என்று யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் போலவே.

 இது நம்ம ஊரு மாடுகளுக்கு...


அணில் குட்டி : கவி க்கு வர வர கைத்தொழில் அதிகமாயிட்டே போகுது... ம்ம்..  இந்த பதிவை பிரண்ட் ஸ்கிரீன் எடுத்து வச்சிக்கோங்க மக்கா.. பள்ளிக்கரணை பக்கம் எந்த மாட்டுக்கிட்டவாச்சும், பால் மிஸ் ஆச்சின்னா.. கவி ய வந்து பிடிங்க....... அம்மணி க்கு அந்த மாடுங்க ரோடுல சுத்தறது மேட்டர் இல்ல... பாலை எப்படி கறந்து விக்கறது ங்கறது தான் இப்ப மேட்டரே.. புரியுதா..?

பீட்டர் தாத்ஸ் : “Some roads aren't meant to be travelled alone”


படங்கள் : நன்றி கூகுல்.