காலை எழுந்ததிலிருந்து தீபாவளி வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன, முறுக்கை பிழிந்துவிட்டு நடுவே நடுவே கணினியில் கொஞ்சம் வேலைப்பார்த்துகொண்டே இருந்தேன். முறுக்கு முடிந்து, தட்டை, நடுவே பாதுஷா, ஜாமுன்..என்று நடந்து முடிந்தது.

தீபாவளி நோன்பு , மாமியார் எப்படி செய்தார்கள் என்பதை அச்சு பிசுகாமல் காப்பி அடிக்கமுடியவில்லை, எனக்கு பிடித்தமாதிரி அவர்களுக்கும் கஷ்டம் இல்லாமல் செய்ய பழகி வருடங்கள் ஆகிவிட்டன. தீபாவளி நோன்பு க்கு ஒன்றும் அதிக வேலை இல்லையென்றாலும், நாளை முழுதும், இட்லி, தோசை தான். அதனால் இட்லி மாவு ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

நடுவே வந்த போது அய்யனார் கதையை படித்தேன்... ஏதேதோ சிந்தனைகள், நீ ஆண், நான் பெண் என்ற எண்ணங்களோடே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. யாரிடமும் இந்த வித்தியாசம் இல்லாமல், நீ மனிதன் நானும் மனிதன் என்று எளிதாக பேசிவிட முடிவதில்லை. ரொம்ப தெளிவான மனிதர்கள் என்னை சுற்றியில்லை என்று தோன்றியது. எல்லோருக்கும் என்னையும் சேர்ந்து நிறைய வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நமக்காக இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காக.

நண்பர் ஒருவரிடத்தில் இந்த வித்தியாசம் இல்லாமல் பேசுவேன் தான், இருவருக்கும் அந்த பிரஞ்ஞை பலநேரம் இருப்பதில்லை, இதற்கு  காரணம் தெளிவு என்று சொல்லிவிட முடியாது, அதே சமயம் ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருப்பதால், எளிதாக பலவற்றை பேசிவிட முடியும். அவை பிறகு மண்டையில் இருப்பதே இல்லை, மறைந்துவிடும். என்னுடன் பேசி அவரும் அப்படி ஆகிவிட்டாரா இல்லை அவருடன் பேசி நான் அப்படி ஆகிவிட்டேனா தெரியவில்லை.

தட்டை வெந்துக்கொண்டு இருக்கிறது, கிரைண்டர் ஓடும் சத்தம், ஷகிராவின் "வக்கா வக்கா" பாட்டை நினைவுப்படுத்துகிறது. நடுவே "கபடி கபடி" என்ற விளையாட்டில் சொல்லும் பாட்டும் நினைவில் வந்து செல்கிறது. தட்டையை பதமாக எடுக்க வேண்டும், கிரைண்டரில் மாவை தள்ளிவிடவேண்டும்,. நடுவே மீண்டும் ஆண் ஏன் தன்னை எப்போதும் தான் ஆண் என்று ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறான் என்ற கேள்வி விழுந்தது.

அதிகம் யோசிக்கல, வீட்டுக்காரருக்கு ஃபோன் செய்து சீக்கிரம் வர சொல்லனும், கடைக்கு போகனும், இன்னமும் டைலரிடம் கொடுத்த துணி வாங்கவில்லை. நவீன் பட்டாசு வேண்டும் என கேட்கவில்லை, ஆனால் போனவருடம் மிச்சமானதை கொண்டு போய் காயவைத்துவிட்டு வந்தான். செய்த எதையும் நன்றாக இருக்கிறது என்று சொல்லவில்லை. ஆனால் சாப்பிட்டான். முறுக்கில் கொஞ்சம் உப்பு "ஏத்து" என்றான். :) என்ன மொழியோ இவையெல்லாம் தெரியல. நாங்கள் வீட்டில் பேசாத ஒரு மொழி. :)

நேற்று இரவில் இருந்து காதில் கம்மல் போடாமல் இருக்கிறேன். பெரிய விஷயமா? என்னமோ என் கணவர் அது ரொம்பவும் பழசாக இருக்கிறது என்று சொன்னார், உடனே அவரெதிரில் கழட்டியது, வேறு எடுத்து போட த்தோன்றாத மனநிலை, இல்லை, காலையில் எழுந்ததிலிருந்து என் முகத்தை நான் கண்ணாடியில் பார்க்கவில்லை.

இப்போது அவர் வருவதற்குள் போட்டுவிட வேண்டும் இல்லையேல் அதற்காக ஒரு சண்டை வர வாய்பிருக்கிறது..

தீபாவளி ஒரு நாளாக ஆகிவிட்டது. மற்றுமொரு நாள். :)) பல வேலைகள் கூடுதலாக செய்ய வேண்டிய ஒரு நாள்.. .. இன்னும் தொடரும் வேலைகளோடு, இந்த சிந்தனைகளையும் ..தொடர...போகனும்... :
.
அணில் குட்டி அனிதா : வெயில் ல தான் பலருக்கு பிரச்சனை.. அம்மணிக்கு பலகாரம் செய்தா க்கூட பிரச்சனை போலவே... :( ம்ம்ம்..

பீட்டர் தாத்ஸ் : Many Deepavali festivals have come and gone. Yet the hearts of the vast majority are as dark as the night of the new moon. The house is lit with lamps, but the heart is full of the darkness of ignorance. O man! wake up from the slumber of ignorance. Realize the constant and eternal light of the Soul which neither rises nor sets, through meditation and deep enquiry.