பூம்பூம்மாடு : எப்பவோ பார்த்தது. இப்போது எல்லாம் கண்ணில் படுவதேயில்லை. முதுகின் மேல் வேலைப்பாடுகளுடன் கூடிய துணி அல்லது பல நிறங்களில் புடவைகள் போத்திவிட்டு, அழகாக அலங்காரம் செய்யப்பட்டு, கழுத்தில், உடம்பில், கொம்புகளில் சலங்கைக்கட்டி, பலூன் கட்டி பூ மாலை மற்றும் இன்னும் பிற மாலைகள் எல்லாம் போட்டு, "ஜில் ஜில் ஜில்" சத்தத்துடன் மாட்டை ஓட்டிவருவார்கள், ஓட்டிவருபவரும் முண்டாசு கட்டி, காலில் சலங்கை க்கட்டி, கையில் ஒரு பீப்பியுடனும் வருவார். பீப்பியால் ஊதுவார், நடுநடுவே மாடிடம் என்னென்னவோ பேசுவார், கேள்விக்கேட்பார். அதற்கு மாடும் "பூம் பூம்" என தலையாட்டும். இந்த சத்தம் தெருவில் கேட்டால் போதும், ஓடி போயி நின்று மாடு தலையாட்டுவதை வேடிக்கப்பார்ப்பது தான் வேலை. இவருக்கு பணமோ, அரசியோ  தருவார்கள். முக்கால்வாசி அரிசி தான், தோளில் மாட்டியிருக்கும் ஒரு ஜோல்னா பையை திறந்துக்காட்டி வாங்கிக்கொள்வார். அதில் விதவிதமான அரிசி வகைகள் போடப்பட்டு இருக்கும்.

குடுகுடுப்பைக்காரர் : இவர் வந்தாவே வீட்டிலிருந்து யாரும் வெளியில் செல்லாமல் அவர் சொல்லுவதை சத்தமின்றி கவனிக்க சொல்லுவார்கள். அவர் எப்போதும், வீட்டில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே சொல்லுவார். அது நல்லதா கெட்டதா என தெரிந்துக்கொள்ளவே கவனிப்பார்கள். நல்ல விஷயம் சொன்னால், மகிழ்ச்சியோடு காசு போடுவார்கள், இல்லையென்றால், சீக்கிரம் சென்று காசுப்போட்டுவிட்டு, கிளம்புப்பா என்று விரட்டிவிடுவார்கள். பொதுவாக இவர்  "நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது, இந்த வீட்டு மகாலட்சுமிக்கு ஒரு நல்ல செய்தி இருக்கு, ஜக்கம்மா சொல்றா.. இந்த வீட்டு மகாலட்சுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கு.. ஜக்கமா சொல்றா ன்னு ஆரம்பித்து,, குடுகுடுப்பை படப்படவென அடிப்பாரு.. :) இதுக்கு மேல நினைவில்லை. இவரை பிள்ளைப்பிடிப்பவர், பூச்சிக்காரன் வரான் என்றும் சொல்லுவார்கள். இவரை க்காட்டி பயமுறுத்தி குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவார்கள் :)

நவீன்  பூம்பூம்மாடு, குடுகுடுப்பைக்காரர்  இருவரையுமே பார்த்தது இல்லை. பிறந்ததிலிருந்து சென்னையில் தான் இருக்கிறான், விடுமுறைக்கு கூட அவனை வேறு இடங்களுக்கு அழைத்து போனதில்லை. இவை எல்லாம் ஏதோ சில நேரங்களில் நினைவுக்கு வரும், எழுதி வைப்போம் என எழுத ஆரம்பித்ததும் நினைவுக்கு வந்த மற்றும் சில..


தண்டோரா : நகராட்சியில் பொதுமக்களுக்கு ஏதாவது தகவல் சொல்லவேண்டி இருந்தால், தண்டோரா போட்டு தெருத்தெருவாக சொல்லி வருவார்கள். அதாவது வீட்டு வரி கட்ட கடைசி தேதி, புது வரி செய்திகள் போன்றவை இருக்கும்.  இந்த தண்டோரா க்காரர்களுக்கு பணம் கொடுத்தால், வீட்டில் யாரும் இறந்து போனால், நாம் சொல்லும் பகுதிகளுக்கு தண்டோரா ப்போட்டு, யார் இறந்தார்கள், எத்தனை மணிக்கு இறந்தவர் உடல் தகனத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது என்றும் சொல்லுவார்கள். என் அப்பா & தாத்தா இறந்த போது விழுப்புரத்தில் பல இடங்களுக்கு தண்டோரா போட்டு தெரியப்படுத்தினர். :(.  படத்தில் இருப்பது தான் தண்டோராவா என தெரியவில்லை, ஆனால் இப்படித்தான் இருக்கும்.


தயிர்க்காரம்மா : இவங்க தினம் தலையில் கூடையில் வைத்த பானையை சுமந்து, படி ஏறி எங்கவீட்டுக்கு வருவாங்க. ஒரு பானையில் தயிர் இருக்கும், அந்த பானை மேலே உட்காரும் அளவு சின்ன பானை இருக்கும் அதில் வெண்ணெய் இருக்கும்.  அதில் தினமும் வெண்ணெய் இருக்காது. மாதத்தில் 2, 3 நாள் வெண்ணெய் வரும், மற்ற நாட்களில் கெட்டி தயிர். அது யாருக்கோ ஸ்பெஷல் என்று கொண்டு வரும் அந்த தயிர்க்காரம்மா.  பாலை கருப்பஞ்செத்தை  (கரும்பின் காய்ந்த சோலை) எரியவைத்து காயவைத்தால் ஒரு ருசியும், எருமுட்டை எரியவைத்து காயவைத்தால் ஒரு சுவையும், கருவேல மரத்து விறகு எரியவைத்து வைத்து காய்த்தால் ஒரு ருசியும் வரும் என சொல்லுவார்கள்.  எரிக்கும் விறகை பொறுத்துக்கூட செய்யும் உணவின் ருசி மாறும் என்பது அந்த தயிர்க்காரம்மா சொல்லித்தான் தெரியும். அது வந்தால் போது, ஓடி போயி ஓசி தயிர் க்கு பக்கத்தில் நின்று க்கொள்வேன். வீட்டுக்கு கொடுத்துவிட்டு எனக்காக மேலோட்டமாக டம்ளரில் கொஞ்சம் எடுத்து வாயில் ஊற்றும், இல்லைன்னா கரண்டியாலேயே உட்காருன்னு சொல்லி வாயில ஊத்தும் :)))) யம்மி யம்மி.. சூப்பரா இருக்கும்.. :)) அன்னாந்து வாயை திறந்து, சைட்ல எல்லாம் வழிய குடிப்பேன் :)))

கழனித்தண்ணீர் கலெக்ட் செய்பவர்கள் : அரிசி கழுவிய தண்ணீரை தோட்டத்தில் அதற்காக கட்டியிருக்கும் சின்ன ரவுண்டு த்தொட்டியில் ஊற்றிவைப்போம். இதில் இந்த தண்ணீர் தவிர, பழைய சாதம், புளித்து ப்போன இட்லிமாவு, கழுவி எடுத்த கருப்பு உளுந்து தோல் போன்றவையும்  சாக்கடையில் கொட்டாமல், இந்த தொட்டியில் தான் ஊற்றிவைப்போம்.  மாடு வைத்திருப்பவர் வீட்டு ஆயா, சந்து வழியே வந்து தினமும் இந்த தண்ணீரை எடுத்து செல்லும். ஆயா வரும் போது, போய் நின்று கவனிப்பேன், தொட்டியில் கையால் ஒரு கலக்கு கலக்கி, கொண்டு வந்த பானையை உள்ளே விட்டு தண்ணீரை மொண்டு நிரப்பிக்கொள்ளும். ஒரே நாற்றம் அடிக்கும், ஆனால் அது தான் மாட்டுக்கு டிலீஷியஸ் ஃபுட். :)) .

கோவிந்தா : மஞ்சள் நிற உடை அணிந்து, நெற்றியில் பெரிய நாமம் போட்டு, பெருமாள் க்கு வேண்டுதல் என்று கையில் ஒரு தட்டில் பெருமாள் படம் வைத்து அதற்கு பூமாலை எல்லாம் போட்டு வந்து "கோவிந்தா... கோவிந்தா" என்று குரல் கொடுப்பார்கள். இவர்களுக்கும் அரிசி போடுவது தான் வழக்கம். :) பிச்சாந்தேகி என்றும் கேட்பார்கள்.  அரிசி போடவில்லை என்றால் பணமும் போடலாம். இவர்கள் அதிகமாக வருவது புரட்டாசி மாதத்தில் தான். இவங்க இப்பவும் எப்போதோ ஒரு தரம் கண்ணில் படுகிறார்கள், ஆனால் நான் கராராக இவர்களுக்கு பணம் , அரிசி எதுவும் போடுவதே இல்லை. :)

அணில் குட்டி அனிதா : எனக்கு அந்த பூம்பூம்மாடு ரொம்ப பிடிச்சி இருக்கு.. :) ஏன் இப்பவெல்லாம் அது வரமாட்டேங்குது..???, அம்மணி நீங்க  வெட்டியா தானே இருக்கீங்க.. மாடு ஒன்னு பிடிக்கறது?? காசுக்கு காசுமாச்சி, எனக்கும் பொழுது போகுமில்ல.... உங்கள பாத்தா மத்தவங்களுக்கும் பொழுது போகுமில்ல... ??!! .. :))

பீட்டர் தாத்ஸ் : When we're young we have faith in what is seen, but when we're old we know that what is seen is traced in air and built on water.
.
படங்க: : நன்றி கூகுல்.

நண்பர்களின் பின்னூட்டங்களில் இருந்து எடுத்து சேர்த்தது : :)  

1. ஐஸ்வண்டி  -
2. சவ் சவ் ரோஸ் மிட்டாய்க்காரர்
3. விறகு வெட்டுபவர்
4. மரம் ஏறி
5. பால்வண்டி க்காரர், நெய் க்காரர்
6. பொரிக்காரப்பாட்டி
7. அவல்காரர்
8. சாணைப்பிடிக்கறவர்
9. அம்மி, உரல் கொத்துபவர்
10. நாவிதர்
11. பஞ்சுமிட்டாய் தாத்தா
.