விளம்பரம் என்ற ஒன்று இல்லையேல், பல விஷயங்களை மிக எளிதாக, விரைவாக நம் வரவேற்பு அறையிலே அறிந்துக்கொள்ள முடியாமல் போயிருக்கும். தொலைக்காட்சி என்று இல்லை, செய்தித்தாள், அவற்றின் உள்ளே வைக்கப்படும் குட்டி பிரசுரங்கள், சென்ற மாதத்தில் டைம் ஆஃப் இந்தியா பேப்பரில், ஒரு கம்பெனி ஆடியோவின் மூலம் விளம்பரம் செய்திருந்தது. பேப்பரை திறந்தால் விளம்பரம் பேசும் :). ரவுண்டுக்குட்டி வந்து திட்டும் வரை அதை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தேன். விளம்பரங்கள் நமக்கு பொருட்கள் சம்பந்தமான தகவலை கொடுக்கிறது என்பது உண்மை. பொருட்களை தயாரிக்கும் நிறுவனம், தன் விற்பனையின் அளவை அதிகரிக்க பயன்படுத்தும் பல வழிகளில் விளம்பரமும் ஒன்று. அது எப்படி வாடிக்கையாளர்களை கவர்கிறது என்பதை பொறுத்தே ஓவ்வொரு விளம்பரத்தின் வெற்றியும் அமையும்.

இப்போது, விளம்பரத்திற்கென தனிப்பட்ட டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகள் எல்லா பல்கலைகழகத்திலும் இருக்கின்றன. விளம்பரத்தில் நடிக்கவே "மாடல்" கள் இருக்கின்றனர்.  முன்பெல்லாம்,விளம்பர மாடல்களை வைத்து தான் விளம்பரங்கள் வந்தன. அவர்கள் அதற்காகவே படித்து, அது சம்பந்தமாகவே வேலையும் செய்து வருபவர்கள். ஆனால் ஒரு காலக்கட்டத்திற்கு மேல், நடிகர்கள் விளம்பரங்களை ஆக்கரமிக்க ஆரம்பித்து விட்டனர். இதற்கு ஒரே காரணம் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் தவிர்த்து வேறொன்றுமில்லை.

இந்தியாவை பொருத்தவரை நடிகர் என்பவரை கடவுளை போன்று துதிக்கும் மக்களே அதிகம். அவர்களை போன்று உடைகளை உடுத்துவது, தலை அலங்காரம் செய்துக்கொள்வது, அவர்கள் என்ன சொன்னாலும் அதை கண்மூடித்தனமான பின் தொடர்வது என்பது எந்த காலக்கட்டதிலும் மாறாமல் நடந்து வருகிறது. அப்படிப்பட்ட மக்களின் மூளையை மயக்க, அவர்கள் கடவுளாக நினைக்கும் நடிகர்களை கொண்டு வியாபாரத்தை செய்கிறார்கள் பொருளை தயாரிப்பவர்கள்.  இதில் நமக்கு என்ன பிரச்சனை என்பது தான் கேள்வி.

பணத்திற்காக, பொருள், அதன் தரம், அது பயன்படுத்த தகுந்ததா? இல்லையா? போன்ற எதையும் பொருட்படுத்தாமல், கண் இருந்தும் குருடர்களாக நடிகர்கள் பல விளம்பரங்களில் வருகிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், உடல் நலத்திற்கு கேடான கோக்,பெப்ஸி வகையறாக்கள்.  உடல் நலத்திற்கு தீங்கு என்று பலதடவை நிரூபிக்கப்பட்ட ஒரு குளிர்பானம். ஆனால் அதற்கு நம் நடிகர்/நடிகைகள் கொடுக்கும் விளம்பரம் இருக்கிறதே.. அதை பார்க்கும் நம்ம ஆள், ஆஹா..நம் தலைவர் சொல்லிட்டார், தலைவி சொல்லிட்டாங்க இனிமே இது தான் என் கையில் இருக்க வேண்டும் என்று இறங்கிவிடுகிறார்கள்.

டாக்டர் விஜய், சூர்யா, மாதவன், அஸின், திரிஷா ன்னு கோக் மற்றும் பெப்சி விளம்பரங்களில் இன்னமும் பலர் தொடர்ந்து நடித்துக்கொண்டு தான் வருகிறார்கள். இவர்கள் இந்த குளிர் பானங்களை குடித்து, அதன் விளைவுகளை அல்லது பலன் அறிந்து தான் செய்கிறார்களா?. பணம் முக்கியம் தான், அதற்காக வெளிச்சத்தில் இருப்பவர்கள், அவர்களை பார்த்து அவர்களின் விசிறிகளும் தொடருவார்கள் என்று தெரிந்தும், இந்த மாதிரி விஷயங்களுக்கு துணை போகலாமா என்பதை உணர்வார்களா என்பது தெரியவில்லை. இதில் திரிஷா, அர்விந்த்சாமி போன்றோர் முதலில் மாடல் ஆக இருந்து பின்னே நடிக்க வந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

அனைவரையும் முட்டாள்கள் ஆக்கும் அழகை அதிகப்படுத்தும் சாதனங்கள். அந்த விளம்பரங்களில் நடிகைகள் தான் அதிகம், குறிப்பிட்ட நடிகை அந்த அழுகு சாதனத்தை பயன்படுத்துவதால் தான் அழகாக இருக்கிறார் என்பதை பார்வையாளர்களை நம்ப வைக்கவே இப்படி ப்பட்ட விளம்பரங்கள் வருகின்றன.  ஆனால் உண்மை என்னவோ அதுக்கு நேர்மாறானது, சில நடிகைகளை நேரில் பார்க்க அடையாளம் தெரியாத அளவு மிக சுமாரான அழகை உடையவர்களாகவே இருப்பர், பல லட்சங்கள் செலவு செய்து நடிகைகளில் அழகு கூட்டப்படுகிறது என்பதை சாமானியர்கள் நம்புவார்களா? இல்லை தெரியத்தான் செய்யுமா?  இதில் மயங்கி,  பெண்கள் அழகு சாதனங்களை விதவிதமாக வாங்கி காசைத்தான் கரியாக்குகிறார்கள்.

சிநேகா ஒரு ஊறுகாய் விளம்பரத்துக்கு வந்து, குழந்தைகளுக்கு சப்பாத்தியில் ஊறுகாய் தடவி சாப்பிட அறிவுரை செய்வார். கடவுளே.. ஊறுகாய் என்பது உப்பு அதிகம் சேர்த்த ஒரு உணவு ப்பொருள்,  அதை துளி வைத்து சாப்பிடுவார்கள்,  அதை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சொல்லும் விளம்பரம், அதுவும் குழந்தைகளுக்கு.... ?!

விஜய் ஜோஸ் ஆலுக்காஸ் - ஒரு கருப்பு பூனை படைச்சூழ??? அவர் போக, கொசுவத்தியில், பள்ளியின் தலைவர், ப்யூனை காலால் எட்டு உதைப்பது போன்ற காட்சி.. :(, குழந்தைகள் எதிரில் ஒரு மனிதனை பள்ளியின் முதல்வர் இப்படி நடத்துவாரா? குழந்தைகள் அதை தானும் செய்யலாம் என்றல்லவா பழகிவிடும்.?!

குர்குரே.. இதில் ப்ளாஸ்டிக் கன்டன்ட் இருக்கிறது, எரிய வைத்தால் எரிகிறது என்ற குற்றச்சாட்டு வந்து, அதை யாரும் சாப்பிட வேண்டாம் என்று சொல்லப்பட்டது. சிம்ரன் அதில் நடித்தார், ஜூஹி தொடர்ந்து அதில் தான் நடித்து வருகிறார். கோனாலாக இருந்தாலும் அது என்னோடதுன்னு.. :( ... "ஆமா கேடானாலும் அதை சாப்பிட்டே ஆகனும்னு" சொல்வது போன்று இருக்கும்.

நகை அடகு வைக்கும் விளம்பரத்தில் விக்ரம். :( இதில் என்ன தவறு இருக்கிறது எனலாம், குடும்பங்களில் நகையை வைத்து பணம் வாங்கும் பழக்கத்தை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். அதிக பணம், குறைந்த வட்டி, உடனுக்கு உடன் சேவை போன்றவை வாடிக்கையாளரை இழுக்கும் யுத்தியே. அதுவும் கேட்டவுடன் பணம் என்பது பலரின் கவனத்தை கவரும்.

ஹேமமாலினி, ஸ்ரீதேவி நடித்த லக்ஸ் விளம்பரம் அந்த காலத்தில் மிகவும் பிரசத்திப்பெற்றது.. ரேவதி யும் அதில் நடித்தார். பின்பு விளம்பரங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்து அறிவித்தார். அதன் பின் அவரின் விளம்பரங்கள் வந்ததே இல்லை. இப்போது ஊறுகாய் விளம்பரத்தில் பார்க்க முடிகிறது. பணம் தான் காரணமோ என்ற எண்ணம் வராமல் இல்லை. அஜித் தும் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்று அறிவித்த ஒரு நடிகர்.

விவேக், ஷ்ரேயா, சிம்ரன், குஷ்பூ, பிரபு, சீதா, மம்மூட்டி, மோகன்லால், பிரியாமணி, ஸ்நேகா, ஸ்ரீதேவி  இன்னும் அநேக நட்சத்திரங்கள் வரும் நகைக்கடை விளம்பரங்கள்.

துணிக்கடை விளம்பரங்கள் கேட்கவே வேண்டாம், சிநேகா, அனுஷ்கா, திரிஷா,ஷ்ரேயா, பத்மபிரியா, பிரியாமணி, ஜோதிகா, மீரா ஜாஸ்மின்,ஹேமமாலினி..இன்னும் நிறைய.. எழுதும் போது நினைவில் வந்தவர்கள் இவர்களே. 

சூர்யாவின் சமீபத்திய சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் படு அபத்தம். சரவணா ஸ்டோர்ஸ் ஸின் தரம், விலை, விலையில் நடக்கும் தவறுகள் போன்றவை அவருக்கு தெரிந்திருக்குமா? பாட்டா கடையில் வாங்கும் பாட்டா செருப்பு, சரவணாவில் விலைக்குறைவு. எப்படி சாத்தியம்? எப்படி ஒரே பிராண்ட் பொருள் அதன் சொந்த இடத்தில் அதிகமாகவும், சரவணாவில் குறைவாகவும் இருக்கிறது என்று விசாரித்ததில், தரம் குறைத்து சரவணா கடைக்காக தனியாக உற்பத்தி செய்யப்படுகிறது என்று சொல்லப்பட்டது.  இதற்கு எல்லாம் அத்தாட்சி இல்லை, வாய்வழி சொல்லி கேட்பதும், தரத்தை பயன்படுத்துவதின் மூலம் உணர்ந்துக்கொள்ளவும் தான் முடியும். எந்தெந்த பொருளின் தரம் அங்கு உண்மையானதாக இருக்கிறது என்பதை தெரிந்து தான் சூர்யா  நடித்துக் கொடுத்திருக்கிறாரா.. ஒரு முறையாவது சரவணாவின் பொருட்களை வாங்கி இருப்பாரா..? என்பது அவருக்கு தான் தெரியும்.


மாடல்கள் நடிக்கும் விளம்பரங்களை விடவும்,  நடிகை & நடிகர்கள் நடிக்கும் போது தான் நம் கவனம் அதிகம் ஈர்க்கப்படுகிறது. நம்முடைய நாடி தெரிந்த விளம்பர கம்பெனிகள், அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களும் பணத்திற்காகவும், புகழுக்காகவும் அவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள். நடிகர்கள் இல்லாமல் பல விளம்பரங்கள் நம்மை கவர்கின்றன. அந்த விளம்பரத்தில் வரும் பொருளை ஒரு முறையாவது வாங்கிப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் வருகிறது. காரணம் விளம்பரம் எடுக்கப்பட்ட விதம். சொல்லப்பட்ட செய்தி போன்றவை நம்மை வெகுவாக கவர்ந்து விடுகின்றன. தரம் என்பதை வாங்கிப்பார்த்த பிறகு தான் தெரிந்து க்கொள்கிறோம் என்றாலும், பொருளை வாங்க உந்துவது இந்த விளம்பரங்களே. 

ஒரு காலத்தில் சினிமா தியேட்டர்களில் "லிரில்" சோப்பின் விளம்பரம் வரும். அதில் நடிகர்கள் யாரும் இல்லை. ஒரு பெண் எலுமிச்சை & பச்சை நிற நீச்சல் உடையில் வருவார்.  பாட்டு, இசை, படம் எடுத்த விதம் மக்களை வெகுவாக கவர்ந்தது. அந்த விளம்பர பெண் இறந்துவிட்டதாக செய்தி வந்தது, . அந்த காலக்கட்டத்தில் பச்சை, மஞ்சள் கோடுப்போட்ட லிரில் சோப்பை என் சொந்தங்கள் வீட்டில் பார்த்து இருக்கிறேன். அந்த விளம்பரத்தை பற்றிய மயக்கம் பலருக்கு (ஆண் பெண் வித்தியாசமின்றி) இருந்ததை விஷேஷ நாட்களில் எல்லோரும் கூடி பேசும் போது கவனித்து இருக்கிறேன்.
 
சின்ன வயதில் பார்த்தது. ரஜினிஜி, போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கும் விளம்பரத்தில் வருவார். இன்னும் நினைவில் இருக்கும் விளம்பரம் அது. சமுதாயம் சார்ந்த, நல்ல நோக்கத்தில் எடுக்கப்பட்டது,  எல்லோரையும் சென்றடைந்த விளம்பரம்.

கமல்ஜி நடித்து, சமீபத்தில் வந்த எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட விளம்பரம்.

ஏன் மற்ற நடிகர்களும் பணத்திற்காக மட்டும் தங்களை விற்றுவிடாமல், எதில் நடிக்கிறோம், இவை மக்களுக்கு பயன்படும்மா, அவை தன் மூலம் மக்களை போய் சேரலாமா போன்றவற்றை யோசிக்க கூடாது.. 


இவற்றை எல்லாம் தாண்டி, நடிகர்களை மட்டுமே குறை சொல்லாமல், அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பொருட்களை வாங்காமல், எது சிறந்தது, தரம் வாய்ந்தது என்பதை ஆராய்ந்து, தேர்ந்தெடுத்து வாங்கி பயன்படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது.

நடிகர்கள் அல்லாது என்னை கவர்ந்த விளம்பரங்கள்.
=> லியோ காஃபி -  http://www.youtube.com/watch?v=V9qmJ79YuCs
=> அணில் வரும் - கிட்கேட் -http://www.youtube.com/watch?v=puineN1UMto&feature=related
=>சர்ஃப் எக்செல் - டீச்சர் வீட்டு நாய் இறந்து போக, மாணவன் நாயை போல நடிப்பது  - http://www.youtube.com/watch?v=dVBP86788Q0&p=658E60CDC3B9D48C&playnext=1&index=5
=> ப்ரூ காஃபி இரண்டாவது டிக்காஷன் - உங்களுக்கு எப்பவாவது தெரிஞ்சுதா? இது என்னை ரொம்பவே கேட்ச் செய்த விளம்பரம், அந்த பெண்ணின் மிகையில்லாத நடிப்பும்.  http://www.youtube.com/watch?v=u4VOWAZw27M&feature=related
=> ஹட்ச் - நாய் குட்டிய மறக்கவே முடியாது

நடிகர்கள் வந்து பிடிக்காத விளம்பரங்கள்

சூர்யா - இவர் வரும் எந்த விளம்பரமும் பிடிக்கவில்லை :( 
விஜய் - ஜோஸ் ஆலுக்காஸ்.

நடிகர்கள் வந்து பிடித்த விளம்பரங்கள்

ஜோதிகா - நல்லண்ணெய் விளம்பரம்
மீரா ஜாஸ்மின் - சக்ரா கோல்ட் டீ விளம்பரம்

அணில் குட்டி அனிதா : சரிங்க ஆபிசர், நடிகர் சங்கத்துக்கு இந்த போஸ்ட்'ஐ ஃபார்வேர்ட் செய்யலாம் ஆபிசர்,  நீங்க சொன்ன பிறகும் உங்க பேச்சை கேட்காமல், மீறி நடிச்சால், எப்பவும் போல சேனலை மாத்திடுங்க ஆபிசர்...

பீட்டர் தாத்ஸ் :- The more facts you tell, the more you sell. An advertisement's chance for success invariably increases as the number of pertinent merchandise facts included in the advertisement increases.