இந்த மாதத்தில் எப்படியாவது இதை எழுதிடனும்னு இருந்தேன்.

1. கொழுக்கட்டை

பச்சரிசி மாவு : 3 கப் (நைஸ் ஸாக அரைத்து இருக்கனும், வெண்ணெய் போல் இருக்கனும்)
உப்பு : கால் டீஸ்பூன்

தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து, மாவில் உப்பை கலந்து, கொதித்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி உருண்டை பிடிக்கும் பதத்திற்கு கலந்துக்கொள்ள வேண்டும்.

எள் பூரணம் :

வெள்ளை எள் - 150 கிராம்
வெல்லம் - ஒரு கப்
தேங்காய் - அரை மூடி
ஏலக்காய் - 1

எள் ஐ சுத்தம் செய்து, வெறும் வாணலியில் வெடிக்கும் வரை (அப்போது தான் வாசனை வரும்) வதக்கி , தேங்காய், ஏலக்காய் சேர்ந்து மிக்ஸியில் அடித்துக்கொள்ள வேண்டும். வெல்லப்பாகு எடுத்து மண் இல்லாமல் வடிக்கட்டி அத்துடன் எள், தேங்காய் கலவையை போட்டு நன்கு கிளறி கெட்டியானவுடன் இறக்கிவிடவும்.

இப்போது பச்சரசி மாவில் சொப்பு செய்யவேண்டும். சப்பாத்தி மாவு உருண்டை போல் மாவை செய்து க்கொண்டு, விரல்களில் எண்ணெய் தொட்டு சிறிய பூரிகளாக செய்து உள்ளே பூரணம் வைத்து ஒட்டி, இட்லி பாத்திரத்தில் 5-8 நிமிடங்கள் வைத்து, விண்டு விடாமல் எடுக்கவேண்டும்.

பூரணம் வைக்க ஸ்பூன் பயன்படுத்தவேண்டும். கையால் எடுத்து வைக்கக்கூடாது, கையில் பூரணம் ஒட்டினால், அது சொப்பு செய்யும் போது பச்சரசி மாவிலும் ஒட்டி வெள்ளை கலர் பழுப்பு கலராக ஆகிவிடும். பார்க்க கொழுக்கட்டை நன்றாக இருக்காது.

2. மெது வடை :

உளுந்து - 300 கிராம்
வெங்காயம் - இரண்டு
பச்சைமிளகாய் - 2-3
இஞ்சி - சிறிது
சோம்பு- 1/2 ஸ்பூன்
லவங்கம் -2
கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, தேவைக்கேற்ப எண்ணெய்

செய்முறை:

உளுந்து குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் லேசாக தண்ணீர் தெளித்து (1 அல்லது 2 முறை) நைஸ்ஸாக அரைத்துக்கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயம் , அரைத்த இஞ்சி, பச்சைமிளகாய், சோம்பு, லவங்கம், உப்பு சேர்த்தும் கருவேப்பிலை கிள்ளி போட்டு, கொத்துமல்லியை பொடியாக நறுக்கி போட்டு, எண்ணெய் காயவைத்து, வடைகளாக தட்டி போட்டு எடுக்க வேண்டும்.

அம்மாவீட்டில் சாமிக்கு படைக்க வெங்காயம் இல்லாமல் செய்வார்கள் (சுத்த சைவர்கள், சமையல் எல்லாமே பிராமணர்கள் போன்றே இருக்கும்), அப்பாவீட்டில் வெங்காயம் சேர்த்து செய்வார்கள்.

3. சுண்டல் :

வெள்ளை, கருப்பு கடலையை கலந்து இரவே ஊறவைக்க வேண்டும்
தேங்காய் துருவியது - 4 ஸ்பூன்
தாளிக்க கடுகு, உளத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்தமிளகாய், கருவேப்பிலை,எண்ணெய், உப்பு

செய்முறை

ஊறவைத்த கடலையை குக்கரில் உப்பு சேர்த்து ஒரு ஸ்டீம் வைத்து வேகவைத்து, எடுத்து வடிக்கட்டி, தாளிக்க சொல்லியுள்ளவற்றை தாளித்து, தேங்காய் துருவலையும் சுண்டலில் கொட்டி கிளரி வைக்கவேண்டும். கொத்தமல்லி பொடியாக நறுக்கி போடலாம்.


ஆயா சொல்லிக்கொடுத்த விநாயகருக்கான பாடல்கள்:-


ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்ப்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்நோப சாந்தயே

மூஷிக வாஹன மோதக ஹஸ்த
ஸாமர கர்ண விலம்பித ஸூத்ர
வாமந ரூப மகேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா..