ஆண்களின் பிடியில் சிக்கி தவிக்கின்ற என்னை போன்ற பெண்களுக்கு, வலையுலக நண்பர்கள் தவிர (ஓசியில் மங்களம்) யார் உதவி செய்வார்கள்? யார் நீதி கொடுப்பார்கள்? அதனால் உங்களிடம் என் பிரச்சனையை மனம் விட்டு சொல்லி, என் வாழ்க்கையை எத்தனை மன உளைச்சளோடு நான் வாழ்ந்து கொண்டு வருகிறேன் என்பதை உங்களுக்கு புரிய வைக்கிறேன். ஒரு பாவப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்!!

வலையுலக பிரச்சனைகள் தவிர்த்து குடும்ப பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு கிடைக்குமா என்று தெரியாவிட்டாலும் , கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக என் சார்ந்த முக்கிய தகுதிகள் :

தகுதி 1 : நான் ஒரு பெண் பதிவர்
தகுதி 2 : பிரச்சனை கொடுப்பவர் என்னுடைய ஆண் குழந்தை

பிரச்சனைகள் :

1. நல்லபடியாக பிறக்க எல்லாவிதமான சாத்தியக்கூறுகள் இருந்த போதிலும், (அதற்காக மாதமாக இருந்த போது காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடுவே படுத்து ஓய்வு எடுக்காமல் வேலை செய்து இருக்கிறேன்), 9 மாதங்கங்களில் பிறக்காமல், 11 மாதம் வரை வயிற்றின் உள்ளே உட்கார்ந்து கொண்டு, வெளியில் வராமல் இருந்ததால், என் வயிற்றை கத்தி க்கொண்டு வெட்டி/கிழித்து அவனை வெளி கொண்டு வர வேண்டியாகிவிட்டது. இதனால் நான் பட்ட கஷ்டத்திற்கு அளவில்லை, இவன் பிறக்க வேண்டி முதுகு தண்டில் போட்ட ஊசியால், வெகு நேரம் தொடர்ந்து நிற்க முடியாமல், வலியில் இன்று வரை அவதிப்பட்டு வருகிறேன்.

2. சாப்பாடு ஒழுங்காக சாப்பிடாமல் , மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் ஒவ்வொரு முறை உணவு ஊட்டும் போதும் நான் செலவிட வேண்டியதாகி இருந்தது. என் நேரமும், அவனை தூக்கி வைத்துக்கொண்டு ஊட்டியதால், என் உடல் வலியை அவனால் சரிக்கட்ட முடியுமா?

3. எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு வளர்ந்தாலும், வேலைக்கு சென்ற போது, ஆண் பிள்ளையாக அவனின் சேட்டை மிக அதிகமாக இருந்த காரணத்தால், எந்த நேரத்தில் வீட்டில் என்ன செய்து வைப்பானோ, அவனுக்கு என்ன ஆகிவிடுமோ என்று வேலை நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாமல், எந்த நேரமும் இவனை பற்றிய கவலையிலேயே இருந்தேனே! என்னை நிம்மதியில்லாமல், பல வருடங்கள் வைத்துக்கொண்டது இல்லாமல், இப்போதும் அதை தொடர்கிறானே? என் வாழ்க்கையில் ஏன் நான் இவனால் நிம்மதி இல்லாமல் இருக்க வேண்டும்?

4. எவ்வளவு நன்றாக சமைத்தாலும், ஏதோ பரவாயில்லை என்று சொல்வதோடு இல்லாமல், இத்தனை வருடம் சமைக்கிறாயே, எனக்கு பிடித்த சிக்கன் ரோல், பர்கர், கேக், சிக்கன் பஃப், நாந், இவையெல்லாம் செய்ய தெரியவில்லை என்று என்னை மட்டமாக பேசுவது மட்டும் இல்லாமல், அவற்றை எல்லாம் கற்றுக்கொண்டு, விடியற் காலையில் நான் எழுந்து அவனுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று கட்டாய ப்படுத்துகிறானே.. நான் என்ன இவனுக்கு சமையல்க்காரியா? இவனுக்காக என் தூக்கத்தை நான் தியாகம் செய்ய வேண்டுமா?

5. என்னை முடி வெட்ட கூடாது என்றும், அப்படியே மீறி வெட்டினால் வீட்டினுள் சேர்க்க மாட்டேன் என்று மிரட்டுவதும், ஜாக்கெட் பின்புறம் நெக், ரொம்ப டீப் நெக் போடக்கூடாது, அப்படியே போட்டால் தைத்துக்கொடுத்த டெயிலரை (அவங்களும் பெண்) வந்து திட்டுவேன் என்றும், ஜீன்ஸ் பேன்ட் போடக்கூடாது, அப்படி போடவேண்டும் என்றால், 50 கிலோ ஐஸ்வர்யா ராய் மாதிரி ஆனப்பிறகு போடு என்று பீப்பா மாதிரி இருக்கும் என்னை குட்டி பாப்பாவாக மாற சொல்லி என்னால் செய்யவே முடியாத விஷயத்தை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் இந்த கொடுமைக்காரனிடமிருந்து எனக்கு விடுதலை கிடைக்காதா?

6. எல்லாவற்றையும் விட கொடுமை, அவன் சாப்பிடும் அளவிற்கு என்னையும் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்துவதோடு அல்லாமல், என்னால் முடியவில்லை என்று சொன்னால், திட்டி துன்புறுத்தி சாப்பாட்டை திணிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறானே... நான் என்ன அவனுக்கு அடிமையா?

7. உலக நடப்புகளை பார்த்து, இப்போதிலிருந்தே புரட்சி பெண்களிடம் தள்ளி இரு, உனக்கு நம்ம ஊர் பக்கமாக படிக்காத இரட்டை சடை போட்ட அருக்காணியாக பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன், அப்போது தான் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்று சொன்னால் கேட்காமல், சட்டை செய்யாமல், வூட்டுக்காரோடு போய் செட்டில் ஆகிற வழியை பார், என் விருப்படிப்படி தான் திருமணம் செய்து க்கொள்வேன், ஃபியூச்சரில், என் பொண்டாட்டி சமைத்து போடாவிட்டால், உன்னை அழைத்துக்கொண்டு போய் என்னுடன் வைத்துக்கொள்வேன், மரியாதையாக சமைத்து போடு என்கிறான். இவனுக்கு சமைத்து போடுவதே தண்டம் என்று நினைக்கும் வேலையில், எதிர்காலத்தில் இவன் மனைவிக்கும் சேர்த்து என்னை வேலை வாங்க இப்போதே திட்டம் தீட்டி வருகிறான் என்பதை இந்த சபையினருக்கு தெரிவித்து கொள்கிறேன். காலம் பூராவும் இவனுக்கும் இவன் குடும்பத்திற்கும் சமைத்துப்போட நான் என்ன இவன் வீட்டு வேலைக்காரியா? இல்லை எனக்கு ஆயுள் தண்டைனையா?

8. இத்தோடு நிற்காமல், என்னுடைய ப்ரசனல் விஷயத்திலும் அத்து மீறுகிறான், என் கணவருடன் நான் தனியாக சினிமா,பீச், ஷாப்பிங் என்று எங்கேயும் போகக்கூடாது என்று தடைவிதிக்கிறான். கேரளாவிற்கு டூர் சென்ற போது ஃபோன் செய்து "அவரோட(என் சொந்த வூட்டுக்காரோட) நீ தனியாக ஊர் சுத்தின என்று தெரிந்தது, உன்னை என்ன செய்வேன் என்றே எனக்கு தெரியாது" என்று மிரட்டுகிறான். என் தனிப்பட்ட சுதந்திரத்தில் இவன் எப்படி தலையிடலாம்.? எப்படி மிரட்டலாம்?

9. இதை எல்லாவற்றையும் விட நான் சொல்கின்ற பேச்சை கேட்காமல், உடை அணிந்து என் மானத்தை வாங்குகிறான். அதாவது, உள் ஆடைக்கு (ஜட்டி) கீழ் பேன்ட் போடுகிறான், ஏண்டா இப்படி? அசிங்கமா இருக்குடா ? ன்னு சொன்னால், "இது நியூ ஸ்டைல், நீ ஒரு கன்ட்ரி உனக்கு தெரியாது, வாயை மூடு" என்கிறான், இப்படி அவன் உடுத்தினால், எத்தனை இளம் பெண்களின் கவனம் சிதறும்?! ஒரு பெண்ணாக என்னால் இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. தினம் இதனால் இவனோடு பெரிய சண்டையாக இருக்கிறது. சண்டை போட்டு கத்தும் போது, தொண்டை மிகவும் வலிக்கிறது என்பது கூடுதல் தகவல். !

10. இதை தவிர்த்து தினமும் இவன் பிறந்தது முதல் இவன் துணியை நானே துவைத்து போட வேண்டியுள்ளது. (எப்போதுமெ எங்கள் வீட்டில் வேலையாள் எதற்கும் இல்லை), அவன் சாப்பிட்ட பாத்திரங்கள், அவன் சாப்பிட நான் சமைத்த பாத்திரங்கள் என்று எல்லாவற்றையும் நானே கழுவி வைக்க வேண்டியாக உள்ளது, தன் வேலையை அவனாக செய்ய வேண்டும் என்று பழக்கப்படுத்த அழைத்தால், இது எல்லாம் உன் வேலை, வீட்டில் சும்மாக படுத்து தூங்கிக்கொண்டு தானே இருக்கிறாய்? என்று கேட்டு, என்னை ஒரு டிப்பிக்கல் பெண் ஐ போல் நடத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்படி இன்னும் பல பல கொடுமைகள் அவன் செய்து வருவதால், எனக்கு நீதி கேட்கிறேன். இப்படி ஒருவனிடம் சிக்கி என் வாழ்க்கையில் நான் இழந்த நிம்மதியை மீட்டு தர கேட்கிறேன். முதலில் நார்மலாக பிறக்காமல் சிசேரியன் செய்ய வைத்ததன் உள்நோக்கம் என்ன என்பதை கேட்டு சொல்ல கேட்கிறேன். ஒரு அம்மா என்றால் எல்லாவற்றையும் பொறுத்து போக வேண்டுமா என்ன? நான் என்ன இவனின் அடிமையா? இன்னமும் நான் அடிமையாக த்தான் என் வாழ்க்கையை தொடர வேண்டுமா? எனக்கு நியாயம் வேண்டும். எனக்கு நீதி வேண்டும்.. எனக்கு அது வேண்டும்.... இது வேண்டும்.. ..... எல்லாமே வேண்டும் !! ஏன்னா நான் ஒரு பெண்.. !!

ஆன் ரிக்வுஸ்டில் கொடுக்கப்படும் விபரங்கள் : அவன் பிறந்தது பாண்டிசேரி (தமிழ்நாடு இல்லை என்பதை கவனிக்க, இதை வைத்து அவனின் குணம் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கணித்து அவனை திட்டலாம்), ஜாதி, அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா.. போன்றோரின் வேலை விபரங்கள், என்னுடைய வயது, படிப்பு, அதர் அன்லிமிடட் குவாலிபிகேஷன் போன்றவையும் தரப்படும், அப்போது தான் என்னை எப்படி அவன் கொடுமைப்படுத்தலாம் என்பதை கேட்க உதவும்.

தயவு செய்து எனக்கு நீதி வழங்க யாராச்சும் ஏற்பாடு செய்யுங்கள் ! நான் ஒரு பெண்ணாக இருப்பதால், நான் என்னவெல்லாம் அவனையும், அவன் அப்பாவையும் கொடுமை செய்கிறேன், செய்தேன், செய்வேன் என்பதை மட்டும் நீங்கள் எல்லாம் கேட்க மாட்டீர்கள் என்பது தெரியும் இருந்தாலும் கேட்க க்கூடாது என்பதை மிக அழுத்தமாக சொல்லிக்கொள்கிறேன்.

அணில் குட்டி அனிதா : ஹா ஹா ஹா ஹா......... இந்த அம்மணி சொல்றதை கேட்டு புள்ளக்கிட்ட மட்டும் யாரும் வந்து எதுவும் கேட்டுடாதீங்க.. துப்பறது மட்டும் இல்ல.... அடிச்சி க்கூட விரட்டுவான்.. .அம்புட்டு கடுப்பல இருக்கான் அம்மணி மேல.. .அப்புறம் உங்க இஷ்டம்..

அப்பாளிக்கா இன்னொரு மேட்டர், அம்மணி சொல்றாங்கனு நம்பி வாயத்தொறந்தீங்க. .உங்க வாயி உங்க முகத்துல இருக்காது.. ஏன்னா... புள்ளையோட அம்மா ஒரு ரவுடி.. ங்கோஓஓஓஒ !! புள்ளைய ஒரு தரம் கீழ் வீட்டில இருக்கிறவரு திட்டினாரு ன்னு போலிஸ் கம்பளென்ட் கொடுத்து உள்ள தள்ளுவேன் மிரட்டினாங்க. .அந்த அளவுக்கு புள்ளன்னா தெருவில் இறங்கி போராடுவாங்க. .அடுத்து ஒரு முறை, ஸ்கூல் ல சைன்ஸ் மிஸ் அடிச்சாங்கன்னு ஸ்கூல் ஹெட்மாஸ்டர் க்கிட்ட நேராக போயி கம்பளைட் கொடுத்து மிஸ் க்கு வார்னிங் கொடுத்து வேலை விட்டு தூக்கற அளவு செய்த நல்லவங்க... !! சோ பாத்து நீதி வழங்குங்க... உங்க நன்மைக்கு தான் சொல்றேன்

பீட்டர் தாத்ஸ் : A mother is not a person to lean on, but a person to make leaning unnecessary

Our children are our only hope for the future, but we are their only hope for their present and their future

A family is a little world created by LOVE