இன்று..... :


அத்திவெட்டி ஜோதிபாரதி


நட்பு

நகைப்புகிடமில்லாத சிறு குறு பெரு

நகையுடன் கூடிய அணி

எள்ளல் எள்ளளவு கூட இல்லாத இடம்

கொள்ளல் மட்டும் உண்டு நிரம்ப

கொடைகளை எதிர்பாக்காத

நிழற்குடைகள்

குறிப்பறிந்து கொடுக்கும் அன்புக்கொடைகள்

அறிவுரைகள் மட்டுமல்ல - அம்புகள் தவிர்த்து

இருவழிப்பாதையில் ஏற்படும்

இதயப்பகிர்வு - ஒருவழிப்பாதை ஒவ்வாது

இருதரப்புக்கும் நடுவில் இருப்பது முள்

ஒருபக்கம் சாய்ந்தால் குத்திவிடும்

நட்பு என்பது கற்பு இரு தரப்புக்கும்

பொதுவானது!


தாரணிபிரியா

நான் வேற என் ப்ரெண்ட்ஸ் வேற அப்படி எல்லாம் இல்லை. அதனால என்னோட நண்பர் தமிழ் எழுதின கவிதை இது. எங்க நட்பு வட்டாரத்தில் எல்லாருக்கும் பிடிச்ச கவிதை. அதையே இங்க எல்லாருக்கிட்டயும் பகிர்ந்துக்க விரும்பறேன்.

எல்லாருக்கும்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :)
--
தாய்மைக்கும்
காதலுக்குமிடையே
இதயத்தில்
இடம் பிடித்தால்
அதன் பெயர்......
நட்பு......

தொப்புள் கொடிக்குத்
தாய்...
தொட்டில் இட
காதல்...

உதிரம் கலவாது
காமம் படியாது
உயிராய் கலப்பது
உயிரைத் தருவது

நட்பு..!!!

உடலென்றால் பரவத்தான் உதிரம்!
உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்!
துயரென்றால் பகிரத்தான் நட்பு!

கேவிஆர்

ஒரு சில நண்பர்கள் என்னிடம் தனது நண்பரை அறிமுகப்படுத்துறப்போ “இவர் என்னோட நெட் ஃப்ரண்ட்”ன்னு சொல்லுவாங்க. என்னால் அப்படி நண்பர்களை வகைப்படுத்த முடியுமான்னு பார்த்தா, கண்டிப்பா முடியாது. அதிலேயும் “இணைய நண்பர்கள்”ன்னு ஒரு மாற்றுக்குறைவாக சொல்லவே முடியாது. என்னுடைய பள்ளி, கல்லூரி, வேலைப்பார்த்த இடங்களில் கிடைத்த நண்பர்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதவர்களாக தான் இணைய நட்புகளும் இருக்கின்றன. இந்தியா வருகிறேன் என்று சொன்னதுமே ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்பவா என்று கேட்டது ஓர் இணைய நண்பர் தான். அவரும் நானும் அதுவரை நேருக்கு நேர் சந்தித்தது கூட இல்லை. சென்னையில் இருந்த ஒரு நண்பருக்கு பிறந்தநாள் பரிசாக புத்தகம் வாங்கி அனுப்ப நினைத்தபோது, பெயரை மட்டும் சொல், நான் அனுப்புகிறேன் என்று முன்நின்று அனுப்பியதும் ஓர் இணைய நட்பு தான். என் திருமண வரவேற்பில் கல்லூரி நட்புகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் கூட்டம் கூடி வந்திருந்ததும் அதே இணைய நட்பு தான். முகமற்ற பெருவெளியில் ஒருவனுக்கு உதவி என்றதும் தன் வீட்டுச் சகோதரனுக்கு உதவுவது போல உதவியதும் அதே இணைய நட்பு தான்.

நட்பைப் பற்றி வள்ளுவரின் வாக்கை விடவா நான் சிறப்பாகச் சொல்லிவிடப் போகிறேன்

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

இன்று வரையில் என் நட்புகள் வள்ளுவன் சொல்படித் தான் நடந்துகொண்டு இருக்கின்றன.

நண்பர்கள் தினத்தில் எல்லா நட்புகளுக்கும் வாழ்த்துகள்.

வித்யா

வாழ்க்கையில் எவ்வளவோ விலை மதிப்பில்லாத உறவுகள், விஷயங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானது நட்பு. நட்பு எனப்படுவது யாதெனில் என ஆரம்பித்து, ஆயிரத்தெட்டு விளக்கங்கள் குடுக்கலாம் தான். ஆனால் உண்மையான நட்பு என்பது விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது. ஆண்/பெண், சாதி, பொருளாதார வித்யாசங்கள், காலம், நேரம், தூரம் என அனைத்திற்கும் அப்பாற்பட்டது. நட்பிற்கும், நண்பர்களுக்குமான அர்த்தம் விளக்கப்படவேண்டியதல்ல. உணரப்படவேண்டியது. காலத்திற்கும் கொண்டாடப்படவேண்டியது. நட்பில்லாத வாழ்க்கை என்பது உயிர்ப்பில்லாத, துடிப்பில்லாத இயந்திர வாழ்க்கையாகவே இருக்கும்.

The best way to destroy an enemy is to make him a friend.-- Abraham Lincoln

நட்புகளுக்கு நண்பர்கள் தின வாழ்த்துகள் !!



அன்று .... 4-August-2006

கைப்புள்ள

நட்பைப் பற்றி எனை எழுதத் தூண்டினீர்! நான் கவிஞனும் அல்லன் எழுத்தாளனும் அல்லன். ஆயின் இரு கைகள் இல்லாத ஒருவன் தான் இடுப்பில் அணிந்துள்ள உடை விலகி கீழே விழ இருக்கும் அக்கண நேரம், அவனுடைய மானத்தினைக் காக்க தக்க நேரத்தில் (கவனத்தில் கொள்க: தக்க நேரத்தில்) உதவ ஓடோடி வரும் அவ்வுறவே நட்பு என்பதனை குறள் வழி நானறிந்ததைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"


நாகை சிவா

தலைப்பை பார்த்தவுடன் ஏதுவும் எழுத தோன்றவில்லை. நண்பர்களை பற்றி நினைவுகளில் மூழ்க தான் முடிகின்றது. நண்பர்களால் நான் காயப்பட்டது உண்டு. ஆனால் ஒரு போதும் நண்பர்களை நான் காயப்படுத்தியது இல்லை(எனக்கு தெரிந்த வரை) நேற்றயே பொழுது நல்ல நினைவுகளோடு நாளைய பொழுது நல்ல எதிர்பார்ப்புகளோடு இன்றைய பொழுது நல்ல நண்பர்களோடு

நட்பு:
நம்ம நட்பு வட்டாரம் ரொம்ப பெரியது.

"பள்ளியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்

படித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்

சைட் அடித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்

தெருவில்(ஏரியாவில்) பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்

அலுவலகங்களில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்

உறவுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்

NIIT யில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்

நண்பர்களால் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்

வெளிநாடுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்

"
இவை அனைத்தும் நேரில் பார்த்து, பல நாள் பழகி கிடைத்த நட்புகள். ஆனால் இன்றோ தமிழ் என்ற ஒற்ற சொல்லின் மூலம் கிடைத்த ஒரு வட்டம் இருக்கின்றதே........உற்ற தோழர்கள் அளவுக்கு நேரடியாக நெருங்கி விட்ட ஒரு வட்டம். ஒளி பொருந்திய மிகப் பெரிய வட்டம்.

நேரில் பார்த்ததும் இல்லை, பல பேரிடம் தொலைப்பேசியிலும் பேசியது இல்லை இருந்தாலும் இந்த நண்பர்கள் என்னுடைய ஒவ்வொரு நாளையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கவும், முடிக்கவும் செய்கின்றார்கள். ஒருவரா, இருவரா எத்தனை நண்பர்கள், எத்தனை விதமான நண்பர்கள், வயது வித்தாயசமின்றி..... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முத்துக்கள்..... இங்கு யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பவில்லை... காலம் அனுமதித்தால் அனைவரையும் நேரில் சந்திப்பேன். என்னுடைய நண்பரானதுக்கு உள்ளங்கை பற்றி நன்றி சொல்வேன்.


!! அனைவருக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!! :)