திருமணம் ஆன 15 நாட்களுக்குள் என் மாமியாரிடம் திட்டு வாங்கினேன். என்னவோ அவங்களுக்கு நல்ல நேரம் தப்பிச்சிட்டாங்க'ன்னு நினைச்சுக்கலாமா? அப்படித்தான் நினைத்து போனா போகுது நானும் விட்டுட்டேன்.

நான் திருமணம் முடித்து என் கணவருடைய வீட்டுக்கு சென்ற பிறகு ஒரு நாள் என் மாமியார் மீன் குழம்பு வைத்திருந்தார். எனக்கு எப்பவும் ஆயா மீன் ஆய்ந்து கொடுத்து சாப்பிட்டு தான் பழக்கம், அதனால் இப்பவும் எனக்கு ஆய்ந்து சாப்பிட சோம்பேறி த்தனமும் சரியாக ஆயவும் தெரியாதது என்பது ஒரு கேவலமான விஷயம் தான். என்ன செய்வது மீனுக்கும் எனக்கும் அவ்வளவு ராசி, எப்படி ஆய்ந்து சாப்பிட்டாலும் தொண்டையில் எப்படியும் ஒரு முள் குத்தி, என்னை அழவைக்காமல் விடுவதில்லை. அதனால், மீன் மட்டும் யாராவது ஆய்ந்து கொடுத்தால் மட்டுமே சாப்பிடுவது என்ற கொள்கையை வளர்த்துக்கொண்டேன். ஆய்ந்து கொடுக்க யாரும் இல்லாத பட்சத்தில் " நீ யாரோ நான் யாரோ" ன்னு மீனை பார்த்து சொல்லிவிட்டு மீன் குழம்பு மட்டும் போட்டு சாப்பிடுவேன்.

அன்று என் மாமியார், என் கணவருக்கும் எனக்கும் பரிமாறிவிட்டு உட்கார்ந்து நாங்கள் சாப்பிடுவதை ரசித்துக்கொண்டு இருந்தார், நான் மீன் ஆயத்தெரியாமல் ஆய்வதை பார்த்து "என்ன பொண்ணு மீன்'ஐ ஆய சொன்னா பூச்சி பிடிக்குது?" என்று கிண்டல் அடித்துவிட்டு, நான் ஆய்வதை பார்த்து சிரித்தவாறே இருந்தார்கள். (but no help from anyone!! )

புது மனிதர்கள், யாரிடம் போய் மீன் ஆய்ந்து கொடுன்னு கேட்பது, சரி நாமே முயற்சி செய்வோம் னு ரொம்ப தீவரமாக நான் மீன் ஆய்வதில் கவனமாக இருந்ததில் என் கணவர் சாப்பிடுவதை கவனிக்கவில்லை. என் மாமியார் திருப்பி இரண்டு முன்று முறை அவருக்கு பரிமாறியவுடன், என்னடா இது ஒரு மீனை நாம இன்னும் ஆய்ந்தே முடிக்கல அதுக்குள்ள அவர் 2,3 ரவுண்டு சாப்பிட்டுடாறா? என்று அவர் சாப்பிடுவதை அதற்கு பிறகு தான் தலையை உயர்த்தி பார்க்க ஆரம்பித்தேன்.....ஆனா திரும்பி என் இலைக்கு நான் வரவே இல்லை.


அத்தனை அழகாக மீனை இது வரை யாரும் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை :) ஒரு மீனை வாலை பிடித்து எடுக்கிறார், வாய்க்குள் அப்படியே போட்டு ஒரே இழூ....... வெளியில் வருவது வெறும் முள் தான்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..எப்படி இப்படி..??? உள்ளே மீனா போகுது வெளியில வரும் போது வெறும் முள்ளு மட்டும் தான் வருது?? இது ஒரு கலை போலவே. ? முதல் மரியாதை சினிமாவில் நடிகர் திலகம் சூப்பரா சாப்பிடுவாரு.. அந்த அம்மா ராதாவும் சாப்பிடுவாங்க. .இப்படி சினிமாவில் பார்த்தது ...இப்ப நேரா பார்ர்க்கும் போது வாயில் எச்சில் ஊறாமல் இருக்குமா சொல்லுங்க?

எச்சில் ஊற ஊற அவர் சாப்பிடுவதை நான் கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். என் சாப்பாட்டில் என் கவனம் செல்லவே இல்லை. .. எப்படி முள் வாய்குள்ள குத்தாமல் வெளில வருது ன்னு ஒரே ஆச்சரியம். ! புது பெண்ணாச்சே, புது வீடு , புது மனுஷங்களாச்சேன்னு வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்து இருக்கலாம். நமக்கு தான் அந்த பழக்கம் எந்த காலத்திலியும் இருந்தது இல்லையே..! ரொம்ப ஆர்வத்தில்.....

:))) அய்ய்ய்..!! எப்படிங்க நீங்க மட்டும் இப்படி சாப்படறீங்க? " எங்க வீட்டுல எல்லாம் இப்படி நாங்க சாப்பிட மாட்டோம் னு.." ன்னு சொல்ல ொல்ல...

என் மாமியாருக்கு வந்ததே பாருங்க கோவம்...... "இந்தா..! உனக்கு வேணும்னா இன்னும் நாலு எடுத்து வச்சி சாப்பிடு..! ஏன் அவனை இப்படி வாய் வெறிக்க பார்க்கற...உன்னைமாதிரி என்ன பூச்சி பிடிக்க சொல்றியா?. யாரும் சாப்பிடாததைய என் புள்ள சாப்பிட்டுடான். ஒரு மீன் ஆய' க்கூட தெரியாம பொண்ணை வளத்து வச்சி இருக்காங்க பாரு.. அவன் சாப்பிடறதை எப்படி பாக்குது பாரு.. ? " ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க...

அவ்வ்வ்வ்வ்வ்.......கல்யாணம் ஆகி ஒரு 15 நாள் கூடவும் ஆகி இருக்காது. ... எனக்கு நிஜமா ஏன் அவங்க என்னை அப்படி திட்டினாங்கன்னு தெரியல. .எனக்கு கோவமும் வரலை, பயமும் வரலை... என் நினைவு எல்லாம் என் வீட்டுக்காரர் வாயில் முழுசாக சென்ற மீனும், வெளியில் வந்த முள்ளும்.... தான்...

ஆனால் திருப்பி அவரை பார்க்கவில்லை தான். என் மாமியார் என்னை அப்படி திட்டியதற்கு என் வீட்டிக்காராரிடம் இருந்தும் எந்த ரியாக்ஷனும் இல்லை. நான் வெறிப்பதை மட்டும் ஒரு தரம் திரும்பி பார்த்துவிட்டு, அவர் பாட்டில் அவருடைய வேலையில் மும்மரமாக இருந்தார். அதாங்க மீன் சாப்பிடுவதில். :)

"சரி நோ சப்போர்ட்டு....சோ.. ஐ அம் த ஹெல்ப்லெஸ்ஸு" ன்னு நினைச்சுக்கிட்டு என் மீனை ஆய திரும்ப சென்றுவிட்டேன்.

**************

ஆனா எங்க வீட்டுக்கு வந்து, ஆயாவிடம்.."ஆயா ஏன் நம்ம வீட்டில் மீனை அப்படி யாரும் சாப்பிடல..நீ ஏன் எனக்கு சொல்லித்தரல.."ன்னு கேட்டுவிட்டு மாமியார் திட்டியதையும் சொன்னேன். ஆயாவும் சிரித்துவிட்டு "இனிமே பாக்காத....அவங்க புள்ளைக்கு கண்ணு படும்னு நினைச்சு இருப்பாங்க.." ன்னு சொல்லிட்டு "எல்லா மீனையும் அப்படி சாப்பிட முடியாது பாப்பா . நாம அந்த மீன் எல்லாம் நம்ம வீட்டுல வாங்கறது இல்ல .". என்றார். "அது அயில மீனா இருக்கும்.. நாம் எப்பவுமே அது வாங்கறது இல்லையே? "என்றார்.

என்னவோ.. என் கணவர் , இப்பவும் அவங்க வீட்டுக்கு (இப்பவும் இங்கே நாங்கள் அயில மீன் வாங்குவதில்லை) அப்படித்தான் சாப்பிடுகிறார். நானும் இன்னும் அப்படித்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். :) திட்டத்தான் யாரும் இல்லை.... :))))))))).

அணில் குட்டி அனிதா : திட்ட யாரும் இல்லையா ?வூட்டுக்காரு திட்டறது எல்லாம் கணக்கே இல்லையா? இன்னும் மீன் சாப்பிட தெரியலன்னு மீன் குழம்பு வைக்கும் போது எல்லாம் அம்மணி க்கு பெரைடு நடக்கும் ..அம்மணி யும் ஹி ஹி.. ன்னு சிரிச்சிட்டு வெறும் குழம்போட கதைய முடிச்சிடுவாங்க...

பீட்டர்தாத்ஸ் : Give me a fish and I eat for a day. Teach me to fish and I eat for a lifetime