Intuition - உள்ளுணர்வு - நடக்க போவதை அல்லது நடந்த விஷயத்தை பற்றிய ஊகம், இப்படி, இங்கே இது நடந்து இருக்கலாம்/நடக்கலாம் என்று நம் மனதும் அறிவும் ஒன்று சேர்ந்து நமக்கு அறிவுருத்துவது. எளிதான உதாரணம் வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஜி "ராகவன்'ஸ் இன்ஸ்டின்ங்ட் " சொல்கிறது என்பார். அது படி நடந்துவிட்டால் நம்முடைய இன்ட்டியூஷன் சரி என்று நினைக்கலாம். அல்லது தவறாக நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது, எனக்கு இரண்டுமே நடந்து இருக்கிறது. ஆனால் பல சமயங்களில் சரியாக நடந்து இருப்பது எனக்கு என்னுடைய இன்ட்டியூஷன் மேல் ஒரு நம்பிக்கையும் உண்டு.

நேற்று இரவு என் கணவருடன் விஜயநகர் வரை வண்டியில் சென்ற போது மிக மோசமான அவரின் டிரைவிங் எனக்கு எரிச்சலையும் கோபத்தையும் வரவைத்தது. ஆனால் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டாலும், இன்றைக்கு காலை ரவுண்டு குட்டியுடன் அவர் கிளம்பி போன சிறிது நேரத்திற்கு எல்லாம் என் மனதினுள் இருவருக்கும் விபத்து நடக்க போகிறது,அதற்கு இவரின் மோசமான டிரைவிங் ஒரு காரணமாக இருக்கும் என்று ஏனோ தோன்றிக்கொண்டே இருந்தது. அப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் ஒரு பக்கம், யாரை பார்ப்பது, எப்படி இவர்களை கவனிப்பது போன்ற எண்ணங்கள் எழ அதற்கான விடைகளை தேடிக்கொண்டு இருந்தேன். எந்த நிலையில் வீடு வருவார்களோ..என்ற ஒரு வித பதட்டமும் பயமும் இருந்தது.

அவர்கள் சென்று 25 நிமிடங்களில் காலிங் பெல்.....சத்தம் கேட்டவுடன், நான் நினைத்தது நடந்துவிட்டதாகவே நினைத்து கதவை திறந்தேன். ஆமாம்...ரவுண்டுகுட்டி தான் ... வேளச்சேரி தாம்பரம் ரோடில், மடிப்பாக்கம் கூட்டு ரோடு தாண்டி சென்று கொண்டிருக்கும் போது ஒரு இரண்டு சக்கர வாகனம் இடையூறு செய்ய இருவரும் விழுந்து விபத்து ஏற்பட்டும் விட்டது. நல்ல அடி ரோடில் தேய்த்துக்கொண்டு விழுந்து இருக்கிறார்கள். சட்டை பேன்ட் இருவருக்குமே கிழிந்து, முட்டி கை, கால்களில் ரத்தக்காயத்தோடு தப்பித்து வந்து சேர்ந்து இருக்கிறார்கள். (மருத்தவமனைக்கு சென்று வந்தாகிவிட்டது, இருவரும் நலமே)

சில மாதங்களுக்கு முன் வெளி ஊரில் உள்ள நண்பர் ஒருவருக்காக பல மாதங்களாக வைத்திருந்த பரிசு பொருளை ஒரு நாள் தீடிரென்று எடுத்து கடையில் பேக் செய்ய கொடுத்தேன். அன்று காலையிலிருந்து எனக்கு என்னவோ அவர் சென்னையில் தான் இருப்பதாக என் மனது சொல்லிக்கொண்டே இருந்தது. அவர் ஒருவேளை வந்து நின்றால், அப்போது அவசரமாக போய் அதை செய்து க்கொண்டு இருக்க முடியாது என்று நினைத்து கடையில் கொடுத்தேன். அன்று மாலை ஒரு 7 மணிக்கு மேல் தொலைபேசி அழைப்பு வரும் போதே அது அவர் தான் என்று எடுத்தேன், அவரே தான், சென்னையில் இருப்பதாக தகவல் சொன்னார்.

இப்படி பல சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. எண்ண ஓட்டங்களை தொடர்ந்து கவனித்து வரும் போது இப்படி ப்பட்ட இன்ட்டியூஷன் களுக்கு முக்கியவத்துவம் கொடுத்து, யோசிப்பது வழக்கமாகிவிட்டது. இது சிலமுறை நெகட்டிவாகவும் நடந்து இருக்கிறது. அதாவது எனக்கு ஒன்று தோன்ற ..நடந்தது வேறு விதமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நான் அதற்காக செய்ததை சரி செய்ய முயற்சி செய்ததும் உண்டு.

இதை pre defined assumption, perception என்று கூட சொல்லலாமா? அப்படித்தான் என்னை சுற்றி உள்ளவர்கள் சொல்லுவார்கள். முன் முடிவுகளோடு ஒரு காரியத்தை நெருங்குவது. அது தவறு என்று எனக்கு நெருங்கியவர்களால் பலமுறை அறிவுறுத்தப்பட்டு இருக்கிறேன். பலருக்கு பிடிப்பதில்லை அல்லது புரிவதில்லை. என்னை நன்கு புரிந்தவர்கள் நான் இப்படி செய்வதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.. இது லூசு இப்படித்தான் என்று ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

முன் முடிவுகளோடு நெருங்குகிறேன் என்பதை விடவும், நினைப்பவை நடப்பதால் ஏற்படும் ஒரு வித கலக்கம், நடந்த பிறகு யோசிக்கும் அளவு எனக்கு பொறுமையின்மை, என்னுடைய உடன் பிறந்த வேகம் எல்லாம் ஒன்று சேர்ந்து முன் யோசனை, திட்டமிடல் செய்ய ஆரம்பித்து விடுகிறது. அதை கட்டுப்படுத்தி அமைதியாக்க நான் கற்ற பாடம் தியானம். ஆனால் தொடர்ந்து இதை செய்ய முடிவதில்லை.

ம்ஹூம் அதனால் இப்படி இன்ட்டியூஷன் இம்சைகள் தொடரத்தான் செய்கின்றன...

அணில் குட்டி அனிதா :... ம்ம்ம்....... இந்த அம்மணிக்கிட்ட வேல செய்ய முடியாது..விட்டுட்டு போனத்தான் சரிவரும்..!! அட .சொல்ல மறந்துட்டேனே... வூட்டுல ரவுண்டும், ரவுண்டோட அப்பா வும் இன்னைக்கு செம சில்லறை...பொறுக்கிட்டு வந்தாங்க.. பாக்கனுமே..!! ஹி ஹி... .. :)) காலையில ரெம்பத்தான் டிப்பு டாப் ஆ போனாங்க... வரும் போது.. ஹி ஹி..... பேன்டு சட்டை எல்லாம் கிழிஞ்சி.... அவ்வ்வ்வ்வ் !! அதே ஏன் கேக்கறீங்க...பாத்து ரசிக்கனும்... இப்படி படிச்சிட்டு ரசிக்கக்கூடாது .. :))), இன்னுன்னு சொல்லிக்கிறேன்.. இனி ரவுண்டு அப்பாவிற்கு ரவுண்டு தான் ட்ரைவர்... நோ செல்ஃப் டிரைவிங் ன்ன உத்தரவு போட்டாச்சூ....... !! :))))))

பீட்டர் தாத்ஸ் : - Intuition comes very close to clairvoyance; it appears to be the extrasensory perception of reality

.